text
stringlengths
1.4k
2.05k
chunk_id
int64
1
2.29k
author
stringclasses
1 value
genre
stringclasses
1 value
token_count
int64
510
512
பொன்னியின் செல்வன்பொன்னியின் செல்வன்சங்ககால அளவுகள்முதல் பாகம் - புது வெள்ளம்புது வெள்ளம் - அத்தியாயம் 1புது வெள்ளம் - அத்தியாயம் 2புது வெள்ளம் - அத்தியாயம் 3புது வெள்ளம் - அத்தியாயம் 4புது வெள்ளம் - அத்தியாயம் 5புது வெள்ளம் - அத்தியாயம் 6புது வெள்ளம் - அத்தியாயம் 7புது வெள்ளம் - அத்தியாயம் 8புது வெள்ளம் - அத்தியாயம் 9...
1
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
அத்தியாயம் 56புது வெள்ளம் - அத்தியாயம் 57இரண்டாம் பாகம் - சுழற்காற்றுசுழற்காற்று - அத்தியாயம் 1சுழற்காற்று - அத்தியாயம் 2சுழற்காற்று - அத்தியாயம் 3சுழற்காற்று - அத்தியாயம் 4சுழற்காற்று - அத்தியாயம் 5சுழற்காற்று - அத்தியாயம் 6சுழற்காற்று - அத்தியாயம் 7சுழற்காற்று - அத்தியாயம் 8சுழற்காற்று - அத்தியாயம் 9சுழற்காற்று - அத்...
2
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
அத்தியாயம் 9கொலை வாள் - அத்தியாயம் 10கொலை வாள் - அத்தியாயம் 11கொலை வாள் - அத்தியாயம் 12கொலை வாள் - அத்தியாயம் 13கொலை வாள் - அத்தியாயம் 14கொலை வாள் - அத்தியாயம் 15கொலை வாள் - அத்தியாயம் 16கொலை வாள் - அத்தியாயம் 17கொலை வாள் - அத்தியாயம் 18கொலை வாள் - அத்தியாயம் 19கொலை வாள் - அத்தியாயம் 20கொலை வாள் - அத்தியாயம் 21கொலை வாள...
3
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
20மணிமகுடம் - அத்தியாயம் 21மணிமகுடம் - அத்தியாயம் 22மணிமகுடம் - அத்தியாயம் 23மணிமகுடம் - அத்தியாயம் 24மணிமகுடம் - அத்தியாயம் 25மணிமகுடம் - அத்தியாயம் 26மணிமகுடம் - அத்தியாயம் 27மணிமகுடம் - அத்தியாயம் 28மணிமகுடம் - அத்தியாயம் 29மணிமகுடம் - அத்தியாயம் 30மணிமகுடம் - அத்தியாயம் 31மணிமகுடம் - அத்தியாயம் 32மணிமகுடம் - அத்தி...
4
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
அத்தியாயம் 28தியாக சிகரம் - அத்தியாயம் 29தியாக சிகரம் - அத்தியாயம் 30தியாக சிகரம் - அத்தியாயம் 31தியாக சிகரம் - அத்தியாயம் 32தியாக சிகரம் - அத்தியாயம் 33தியாக சிகரம் - அத்தியாயம் 34தியாக சிகரம் - அத்தியாயம் 35தியாக சிகரம் - அத்தியாயம் 36தியாக சிகரம் - அத்தியாயம் 37தியாக சிகரம் - அத்தியாயம் 38தியாக சிகரம் - அத்தியாயம் ...
5
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
79தியாக சிகரம் - அத்தியாயம் 80தியாக சிகரம் - அத்தியாயம் 81தியாக சிகரம் - அத்தியாயம் 82தியாக சிகரம் - அத்தியாயம் 83தியாக சிகரம் - அத்தியாயம் 84தியாக சிகரம் - அத்தியாயம் 85தியாக சிகரம் - அத்தியாயம் 86தியாக சிகரம் - அத்தியாயம் 87தியாக சிகரம் - அத்தியாயம் 88தியாக சிகரம் - அத்தியாயம் 89தியாக சிகரம் - அத்தியாயம் 90தியாக சிக...
6
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation This Book was produced using LaTeX + Pandoc சங்ககால அளவுகள் 1 காதம் = சுமார் 16 கிலோமீட்டர் (10 மைல்) 1 நாழிகை = 24 நிமிடம் (2½ நாழிகை = 1 மணிநேரம்) 1 முகூர்த்தம் = 3¾ நாழிகை = 90 நிமிடம் 1 ஜாமம் (சாமம்) = 2 முகூர்த்தம் = 7½ நாழிகை = 180 நிமிடம் 1 நாள் (பகல் ...
7
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
காலத்தில் சாதித்த அரும்பெரும் காரியங்களைக் குறித்துப் பெருமிதமும் பெரு வியப்பும் கொள்ளாமலிருக்க முடியாது. நம் மூதாதையர்கள் தங்களுடைய நலனுக்கும் தங்கள் காலத்திய மக்களின் நலனுக்கும் உரிய காரியங்களை மட்டுமா செய்தார்கள்? தாய்த் திருநாட்டில் தங்களுக்குப் பிற்காலத்தில் வாழையடி வாழையாக வரப்போகும் ஆயிரங்கால சந்ததிகளுக்கும் நன்...
8
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
மாக அங்கங்கே பாடிக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் கேட்டுக் கொண்டு வந்தியத்தேவன் களைத்திருந்த குதிரையை விரட்டாமல் மெதுவாகவே போய்க் கொண்டிருந்தான். ஏரிக்கரை மீது ஏறியதிலிருந்து அந்த ஏரிக்கு எழுபத்துநாலு கணவாய்கள் உண்டு என்று சொல்லப்படுவது உண்மைதானா என்று அறிந்து கொள்ளும் நோக்கத்துடன் அவன் கணவாய்களை எண்ணிக் கொண்டே வந்தான...
9
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
கொண்டு வீர நாராயண ஏரிக் கரையின் தென்கோடிக்கு வந்தியத்தேவன் வந்து சேர்ந்தான். அங்கே வட காவேரியிலிருந்து பிரிந்து வந்த வடவாறு, ஏரியில் வந்து சேரும் காட்சியைக் கண்டான். ஏரிக்கரையிலிருந்து சிறிது தூரம் வரையில் ஏரியின் உட்புறம் படுகையாக அமைந்திருந்தது. வெள்ளம் வந்து மோதும்போது கரைக்குச் சேதம் உண்டாகாமலிருக்கும் பொருட்டு அந்...
10
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
கண்டு கைகொட்டிச் சிரித்தார்கள். ஆடவர்களில் சில வம்புக்காரர்கள் தங்கள் காதலிகளின் கூந்தல்களில் சூடியிருந்த மலர்களை அவர்கள் அறியாமல் எடுத்துக் கணவாய் ஓரத்தில் விட்டு ஏரிக்கரைக்கு மறு பக்கத்தில் அவை ஓடி வருவதைக் கண்டு மகிழ்ந்தார்கள். இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சிறிது நேரம் வல்லவரையன் அங்கேயே நின்று கொண்டிருந்தான். அங்க...
11
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
மீதிருந்து இறங்கி வந்து கொஞ்சம் கூட்டாஞ்சோறு சாப்பிடு!” என்றாள். உடனே, பல இள நங்கைகள் நம் வாலிபப் பிரயாணியைப் பார்த்தார்கள். அவனுடைய தோற்றத்தைக் குறித்துத் தங்களுக்குள் இரகசியமாய்ப் பேசிக் கொண்டு கலகலவென்று சிரித்தார்கள். வந்தியத்தேவனை ஒரு பக்கம் வெட்கமும் இன்னொருபுறம் குதூகலமும் பிடுங்கித் தின்றன. அந்த மூதாட்டி சொற்பட...
12
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
் தொடங்கினார்கள். வந்தியதேவனுக்கு இது ஒன்றும் விளங்கவில்லை, இந்த வீரர்கள் யார்? பின்னால் வரும் பாய் விரித்த படகுகளில் யார் வருகிறார்கள்? எங்கிருந்து வருகிறார்கள்? ஒருவேளை அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களாயிருப்பார்களோ? ஏரிக்கரையில் கையிலே கோல் பிடித்து நின்ற பெரியவர் ஒருவரை வல்லவரையன் அணுகினான். “ஐயா! இந்த வீரர்கள் யாரைச...
13
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
உரிமையும் அக்குலத்துக்கு உண்டு. இப்போதுள்ள பழுவேட்டரையர் இருவரில் மூத்தவர் இருபத்து நான்கு போர்களில் ஈடுபட்டவர். அவருடைய காலத்தில் அவருக்கு இணையான வீரர் சோழ நாட்டில் யாருமில்லையென்று புகழ்பெற்றவர். இப்போது பிராயம் ஐம்பதுக்கு மேல் ஆகிவிட்டபடியால் அவர் போர்க்களங்களுக்கு நேரில் செல்வதில்லை. ஆனால் சோழ நாட்டு அரசாங்கத்தில்...
14
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
போகாமலிருந்தால் மட்டும் போதாது. மற்றவர்கள் வலுச் சண்டைக்கு இழுத்தாலும் நீ அகப்பட்டுக் கொள்ளக் கூடாது. உன்னுடைய வீரத்தை நான் நன்கறிவேன். எத்தனையோ தடவை நிரூபித்திருக்கிறாய், ஆகையால் வலிய வரும் சண்டையிலிருந்து விலகிக் கொண்டாலும் கௌரவக் குறைவு ஒன்றும் உனக்கு ஏற்பட்டு விடாது. முக்கியமாக, பழுவேட்டரையர்களிடமும் என் சிறிய தந்த...
15
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
? அந்நாட்டில் வாழும் மக்களும் மங்கையரும் எப்படியிருப்பார்கள்? எத்தனை நதிகள்? எத்தனை குளங்கள்? எத்தனை தௌிநீர் ஓடைகள்? கவிகளிலும் காவியங்களிலும் பாடப்பெற்ற பொன்னி நதியின் காட்சி எப்படியிருக்கும்? அதன் கரைகளிலே பூத்துக் குலுங்கும் புன்னை மரங்களும் கொன்னை மரங்களும் கடம்ப மரங்களும் எத்தகைய மனோகரமான காட்சியாயிருக்கும்? நீரோட...
16
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
இளவரசர் ஆதித்தர், ஒரு பெரிய முட்டுக்கட்டை போட்டிருக்கிறார்; ஒப்புவித்த காரியத்தை நிறைவேற்றுவதற்கு முன்பு யாரிடமும் சண்டை பிடிக்கக் கூடாதென்று. அந்தக் கட்டளையை நிறைவேற்றுவதுதான் மிகவும் கடினமாயிருந்தது. ஏதோ இவ்வளவு தூரமும் பிரயாணம் செய்தபோது நிறைவேற்றியாகி விட்டது. இன்னும் இரண்டு நாளையப் பிரயாணம்தானே மிச்சமிருக்கிறது? அ...
17
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
அங்கே விவாதத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மூன்றே பேர்தான் என்பதைப் பார்க்க அவனுக்கு வியப்பு ஏற்பட்டது. ஆனால் விவாதத்தில் ஈடுபட்டவர்கள் மூன்றே பேர்தான் என்றாலும், கூட்டத்திலிருந்தவர்கள் பலர் அவ்வப்போது அவரவர்களுக்கு உகந்த வாதக்காரரின் கட்சியை ஆதரித்துக் கோஷங்களைக் கிளப்பினார்கள். அதனாலேதான் அவ்வளவு சத்தம் எழுந்தது என்பதை வ...
18
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
அத்வைத சந்நியாசி தலையிட்டுக் கூறியதாவது: “நீங்கள் இருவரும் எதற்காக வீணில் வாதம் இடுகிறீர்கள்? சிவன் பெரிய தெய்வமா, விஷ்ணு பெரிய தெய்வமா என்று எத்தனை நேரம் நீங்கள் வாதித்தாலும் விவகாரம் தீராது. இந்தக் கேள்விக்குப் பதில் வேதாந்தம் சொல்கிறது. நீங்கள் கீழான பக்தி மார்க்கத்தில் இருக்கிற வரையில்தான் சிவன் - விஷ்ணு என்று சண்...
19
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
!’ என்று ஆர்ப்பரித்தனர். அப்போது அத்வைத சுவாமிகள், “அப்பனே! நிறுத்திக் கொள்! தடி உன்னுடைய கையிலேயே இருக்கட்டும். அப்படியே நீ உன் கைத்தடியால் என்னை அடித்தாலும் அதற்காக நான் கோபங்கொள்ள மாட்டேன். உன்னுடன் சண்டைக்கு வரவும் மாட்டேன். அடிப்பதும் பிரம்மம்; அடிபடுவதும் பிரம்மம். என்னை நீ அடித்தால் உன்னையே அடித்துக் கொள்கிறவனாவ...
20
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
இருவரையும் விவாதத்தில் உற்சாகப்படுத்தி வந்தவர்கள் தாங்களும் கைகலக்க ஆயத்தமாகி ஆரவாரம் செய்தார்கள். இந்த மூடச் சண்டையைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் வல்லவரையன் மனதில் உண்டாயிற்று. அவன் நின்ற இடத்திலிருந்து சற்றும் முன்னால் வந்து, “எதற்காக ஐயா நீங்கள் சண்டை போடுகிறீர்கள்? வேறு வேலை ஒன்றும் உங்களுக்கு இல்லையா? சண்டைக்குத...
21
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
ார்கள்.அவர்களுடைய உயரம் ஒன்றாகவே இருந்தது. ஆயினும் ஐயத்துக்கு இடமின்றி என் கையினால் முழம் போட்டு இருவர் உயரத்தையும் அளந்து பார்த்தேன்…” “அட பிள்ளாய்! பரிகாசமா செய்கிறாய்?” என்று ஆழ்வார்க்கடியான் கர்ஜனை செய்தான். கூட்டத்தினர், “சொல்லு, தம்பி! சொல்லு!” என்று ஆர்ப்பரித்தார்கள். “அளந்து பார்த்ததில் இருவரும் சமமான உயரமே இரு...
22
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
! வழி விடுங்கள்!” என்று இடிமுழக்கக் குரலில் கட்டியம் கூறுதல் கேட்டது. இவ்வாறு கட்டியம் கூறியவர்கள் முதலில் வந்தார்கள். பிறகு முரசு அடிப்பவர்கள் வந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் பனைமரக் கொடி தாங்குவோர் வந்தார்கள். பின்னர், கையில் வேல் பிடித்த வீரர்கள் சிலர் கம்பீரமாக நடந்து வந்தார்கள். இவர்களுக்குப் பின்னால் வந்த அலங்...
23
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
அருகில் எதையோ யாரையோ பார்த்துவிட்டுத்தான் அந்த மாது ’கிறீச்’சிட்டு விட்டுச் சிவிகைத் திரையை மூடிக் கொண்டாள் என்று அவன் உள்ளுணர்ச்சி சொல்லிற்று. எனவே, சுற்றுமுற்றும் பார்த்தான். ஆழ்வார்க்கடியான் தனக்குச் சற்றுப் பின்னால் ஒரு புளிய மரத்தில் சாய்ந்து கொண்டு நிற்பதைக் கண்டான். அந்த வீர வைஷ்ணவ நம்பியினுடைய முகம் சொல்ல முடிய...
24
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
தான் இதன் மேல் ஏறவேண்டும்!” என்று அவன் சமத்காரமாய்ப் பேசியதைக் கேட்டு மற்ற வீரர்கள் நகைத்தார்கள். ஏனென்றால், தஞ்சாவூர் முத்தரையர் குலம் நசித்துப் போய் நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது சோழர்களின் புலிக்கொடி தஞ்சாவூரில் பறந்து கொண்டிருந்தது. “குதிரையின் எண்ணம் அவ்விதம் இருக்கலாம். ஆனால், என்னைக் கேட்டால், செத்துப் போன தஞ...
25
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
. பழுவூர் வீரர்கள் பெருங்கூட்டமாயிருந்தனர். அவ்வளவு பேருடன் ஒரே சமயத்தில் சண்டைக்குப் போவதில் பொருள் இல்லை. அவர்கள் இவனுடன் சண்டை போடுவதற்காகக் காத்திருக்கவும் இல்லை. குதிரை ஓடியதைப் பார்த்துச் சிரித்து விட்டு, அவர்களும் விரைந்து மேலே நடந்தார்கள். குதிரை போன திசையை நோக்கி வந்தியத்தேவன் சென்றான். அது கொஞ்ச தூரம் ஓடிவிட்...
26
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
தென் மேற்குப் பக்கம் போவேன்!” என்றான் வந்தியத்தேவன். “அதையெல்லாம் நான் கேட்கவில்லை இன்று ராத்திரி எங்கே தங்குவாய் என்று கேட்டேன்.” “நீ எதற்காக அதைக் கேட்கிறாய்?” “ஒருவேளை கடம்பூர்ச் சம்புவரையர் அரண்மனையில் நீ தங்குவதாயிருந்தால், எனக்கு அங்கே ஒரு வேலை இருக்கிறது..” “உனக்கு மந்திரதந்திரம் தெரியுமா, என்ன? நான் கடம்பூர் அ...
27
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
பெரிய விருந்து நடைபெறும். விருந்துக்கு பிறகு களியாட்டம், சாமியாட்டம், குரவைக் கூத்து எல்லாம் நடைபெறும். குரவைக் கூத்துப் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசை! “அப்படியிருந்தாலும் நான் உன்னை எப்படி அழைத்துப் போக முடியும்?” “என்னை உன் பணியாள் என்று சொன்னால் போகிறது.” வந்தியத்தேவனுக்கு முன்னால் ஏற்பட்ட சந்தேகம் வலுப்பட்டது....
28
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
மகான்.” “நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் ஓரே கூட்டமாயிருக்கிறதே! கோயிலில் ஏதாவது விசேஷ உற்சவம் உண்டோ?” “ஆம்; இன்று ஆண்டாள் திருநட்சத்திரம்.ஆடிப் பதினெட்டாம் பெருக்கோடு ஆண்டாளின் திருநட்சத்திரமும் சேர்ந்து கொண்டது; அதனால்தான் இவ்வளவு கோலாகலம். தம்பி! ஆண்டாள் பாசுரம் ஏதாவது நீ கேட்டிருக்கிறாயா?” “கேட்டதில்லை.” “கேட்காதே! ...
29
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
இருக்க நேர்ந்த காலத்தில் இராஜாதித்தன் ஒரு யோசனை செய்தான். குடிமக்களுக்கு உபயோகமான ஒரு பெரும் பணியை அவர்களைக் கொண்டு செய்விக்க எண்ணினான். வட காவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று மற்றவர்களாலும் அழைக்கப்பட்ட பெருநதியின் வழியாக அளவில்லாத வெள்ள நீர் ஓடி வீணே கடலில் கலந்து கொண்டிருந்தது. அதில் ஒரு பகுதியைப் பயன்படுத்த...
30
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
 பரந்து திரிகின்றனவே!” இவ்விதம் பாடி வந்தபோது ஆழ்வார்க்கடியானுடைய கண்களிலிருந்து கண்ணீர் பெருகித் தாரை தாரையாய் அவன் கன்னத்தின் வழியாக வழிந்தோடியது. வந்தியத்தேவன் அப்பாடல்களைக் கவனமாகவே கேட்டு வந்தான்.அவனுக்குக் கண்ணீர் வராவிட்டாலும் உள்ளம் கசிந்துருகியது. ஆழ்வார்க்கடியானைப் பற்றி அவன் முன்னர் கொண்டிருந்த கருத்தும் ம...
31
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
தேடிச் சேகரித்து வரப்போகிறார். அப்பாசுரங்களை அவருடைய சீடர்கள் இசையுடன் பாடி நாடெங்கும் பரப்பப் போகிறார்கள். நாதமுனிகளின் பேரராக அவதரிக்கப்போகும் ஆளவந்தார் பல அற்புதங்களைச் செய்தருளப் போகிறார். இந்த இருவரும் அவதரித்த க்ஷேத்திரத்தைத் தரிசிக்க, உடையவராகிய ஸரீ ராமானுஜரே ஒரு நாள் வரபோகிறார். வரும்போது வீரநாராயண ஏரியையும் அத...
32
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
வேறு யாராவது இத்தகைய வார்த்தையை என்னிடம் சொல்லியிருந்தால்…” “தம்பி! படபடப்பு வேண்டாம்! உன்னால் முடியாது என்றால் மகாராஜனாய்ப் போய் வா! ஆனால் எனக்கு மட்டும் இந்த உதவி நீ செய்திருந்தால், ஏதாவது ஒரு சமயத்தில் உனக்கும் என் உதவி பயன்பட்டிருக்கும் பாதகமில்லை; போய் வா!” வந்தியத்தேவன் பிறகு அங்கே ஒரு கணம்கூட நிற்கவில்லை. குதிர...
33
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
போவதுதான் உசிதம் என்றும் அந்த வீர வாலிபன் எண்ணினான். அந்த எண்ணத்தை உடனே காரியத்தில் நிறைவேற்றினான். ஆனால் என்ன ஏமாற்றம்? குதிரை கோட்டை வாசலை அணுகியதும் வேல் பிடித்த வீரர்கள் இருவர் தங்கள் வேல்களைக் குறுக்கே நிறுத்தி வழிமறித்தார்கள். இன்னும் நாலு பேர் வந்து குதிரையின் தலைக்கயிற்றைப் பிடித்துக் கொண்டார்கள். அவர்களில் ஒரு...
34
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
த்திற்கு வீண் வம்பு? திரும்பிப் போய் விடலாமா? அல்லது, இளவரசர் ஆதித்த கரிகாலரின் முத்திரை பதித்த இலச்சினையை இவர்களிடம் காட்டிவிட்டு உள்ளே போகலாமா?” என்ற யோசனை தோன்றி இருந்தது. வடதிசைப் படையின் மாதண்ட நாயகராகிய இளவரசரின் இலச்சினையைப் பார்த்துவிட்டுத் தன்னைத் தடுக்கக்கூடியவர்கள் வடபெண்ணையிலிருந்து குமரிமுனை வரையில் யாரும்...
35
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
கையிலிருந்த வாளைச் சுழற்றிக் கொண்டே, “கந்தமாறா! கந்தமாறா! உன் ஆட்கள் என்னைக் கொல்லுகிறார்கள்!” என்று கத்தினான். இதைக் கேட்டதும் அவனைச் சூழ்ந்திருந்த வீரர்கள் திடுக்கிட்டுச் சிறிது தயங்கி விலகி நின்றார்கள். அச்சமயம் மாளிகையின் மேல்மாட முகப்பிலிருந்து, “அங்கே என்ன கூச்சல்? நிறுத்துங்கள்!” என்ற ஒரு இடி முழக்கக் குரல் கேட்...
36
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
உலக்கைக் கொழுந்துதான்!” என்றான் கந்தமாறன். கந்தமாறன் வந்தியத்தேவனின் கையைப் பிடித்துப் பரபரவென்று இழுத்துக் கொண்டு போனான். அவனுடைய கால்கள் தரையில் நில்லாமல் குதித்துக் கொண்டேயிருந்தன. அவனுடைய உள்ளமும் துள்ளிக் குதித்தது. யௌவனப் பிராயத்தில் உண்மையாக உள்ளம் ஒன்றுபட்ட ஒரு நண்பன் கிடைத்தால் அதைக்காட்டிலும் ஒருவனைப் பரவசப்...
37
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
அமர்த்தியிருக்கும் மூடர்கள்!” என்றான் கந்தமாறவேள். “இருந்தாலும் இன்றைய தினம் பார்த்து, அதுவும் இருட்டி அரை ஜாமத்திற்குப் பிறகு, இவன் இவ்வளவு ஆர்ப்பாட்டத்துடன் வந்திருக்க வேண்டியதில்லை!” என்றார் சம்புவரையர். கந்தமாறவேளின் முகம் சுருங்கிற்று; மேலும் தந்தையுடன் வாதமிட அவன் விரும்பவில்லை. வந்தியத்தேவனை அப்பால் அழைத்துச் செ...
38
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
ச் சீக்கிரம் உணவு அளித்து எங்கேயாவது ஒரு தனி இடத்தில் படுக்கச் சொல்லு! நீண்ட பிரயாணம் செய்து களைத்துப் போயிருக்கிறான்” என்றார். மாறவேள் கோபத்துடன் தலையை அசைத்து விட்டுப் போனான். பிறகு மாறவேள் வந்தியத்தேவனை அந்தப்புரத்துக்கு அழைத்து சென்றான். அங்கே பெண்கள் பலர் இருந்தார்கள். மாறவேளின் அன்னைக்கு வந்தியத்தேவன் நமஸ்காரம் ச...
39
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
கோபுரங்கள், ஸ்தூபி கலசங்கள், குதிரை லாயங்கள் ஆகியவற்றை வந்தியத்தேவனுக்குக் கந்தமாறன் காட்டிக் கொண்டு சென்றான். இடையில் வந்தியத்தேவன், “கந்தமாறா! என்னை அந்தப்புர வாசலில் நிறுத்தி நீ மறுபடியும் உள்ளே போன போது, அந்தப்புரத்தில் ஒரே சிரிப்பும் குதூகலமுமாயிருந்ததே, என்ன விசேஷம்? உன்னுடைய சிநேகிதனைப் பார்த்ததில் அவர்களுக்கு அ...
40
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
அது ஒன்றுமில்லை உண்மைக் காரணத்தை நான் சொல்லட்டுமா, கந்தமாறா? பெண்கள் எப்போதும் சற்று பொறாமை பிடித்தவர்கள். உன் வீட்டுப் பெண்களைப் பற்றிக் குறைவாகச் சொல்லுகிறேன் என்று நினைக்காதே! பெண் உலகமே இப்படித்தான்! உன் குடும்பத்துப் பெண்கள் கருநிறத்து அழகிகள். பழுவேட்டரையரின் ஆசை நாயகியோ செக்கச் செவேலென்று பொன்னிறமாயிருக்கிறாள்....
41
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
உனக்குத் தெரிந்தது?” என்றான். "கடம்பூர் மாளிகையின் கரிய பெரிய மத்தகஜத்தின் மீது பழுவேட்டரையர், எருமைக்கடா மீது யமதர்மன் வருவது போல் வந்து கொண்டிருந்தார்! என்னுடைய ஞாபகமெல்லாம் அவர் மேலேதானிருந்தது. ஒரு காலத்தில் அவரைப் போல் நானும் ஆகவேண்டும் என்று மனோராஜ்யம் செய்து கொண்டிருந்தபோது, அடுத்தாற்போல், ஒரு மூடுபல்லக்கு வந்த...
42
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
இது! நீ குரவைக் கூத்து பார்க்க விரும்புகிறாயா? அல்லது சீக்கிரம் உணவு அருந்திவிட்டு நிம்மதியாகப் படுத்துத் தூங்குகிறாயா?” ஆழ்வார்க்கடியான் குரவைக் கூத்தைப் பற்றிக் குறிப்பிட்டது அச்சமயம் வந்தியத்தேவனுக்கு நினைவு வந்தது. “குரவைக் கூத்து நான் பார்த்ததேயில்லை; கட்டாயம் பார்க்க வேண்டும்” என்றான். அந்த நண்பர்கள் இன்னும் சில...
43
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
நீண்ட மலர் மாலையினால் ஒருவரையொருவர் பிணைத்துக் கொண்டவாறு, அவர்கள் மேடையில் வந்து நின்றார்கள். சிலர் கைகளில் சந்தன மரத்தினால் செய்து வர்ணம் கொடுத்த அழகிய பச்சைக் கிளிகளை லாவகமாக ஏந்திக் கொண்டிருந்தார்கள். சபையோருக்கு வணக்கம் செய்துவிட்டுப் பாடவும் ஆடவும் தொடங்கினார்கள். முருகனுடைய புகழைக் கூறும் பாடல்களைப் பாடினார்கள்....
44
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
ாளன் அதை அவள் கையிலிருந்து பிடுங்க முயன்றான்; தேவராட்டி தடை செய்தாள். இறுதியில் தேவராளன் மேடை அதிரும்படியாக ஒரு பெரிய குதிகுதித்து, ஒரு பெரிய தாண்டல் தாண்டி தேவராட்டி கையிலிருந்த வேலைப் பிடுங்கிக் கொண்டான். தேவராட்டி அந்த வேலைக் கண்டு அஞ்சிய பாவனையுடனே மேடையிலிருந்து இறங்கிவிட்டாள். பிறகு, தேவராளன் தனியே மேடை மீது நின்...
45
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
சந்நதக்காரன் ஆவேசத்துடன் ஆடிக் கொண்டே அலறினான். “என்ன பலி வேண்டும்?” என்று பூசாரி கேட்டான். “கேட்டால் கொடுப்பீர்களா?” என்றான் வெறியாடியவன். "கொடுப்போம்; கட்டாயம் கொடுப்போம்! என்றான் பூசாரி. “மன்னர் குலத்து இரத்தம் கேட்கிறாள்; ஆயிரங்கால அரசர் குலத்து இரத்தம் கேட்கிறாள்!” என்று வெறியாடியவன் கோர பயங்கரக் குரலில் கூவினான்....
46
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
விருந்து ருசிக்கவில்லை. அவன் உடம்பு களைத்திருந்தது; உள்ளம் கலங்கியிருந்தது. ஆயினும் அவன் பக்கத்திலிருந்த அவனுடைய நண்பன் கந்தமாறன் அங்கிருந்த மற்ற விருந்தாளிகள் யார் யார் என்பதைப் பெருமிதத்துடன் எடுத்துக் கூறினான். பழுவேட்டரையரையும், சம்புவரையரையும் தவிர அங்கே மழபாடித் தென்னவன் மழவரையர் வந்திருந்தார்; குன்றத்தூர்ப் பெர...
47
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
ப் பிரமுகர்கள் எல்லாரையும் ஓரிடத்தில் பார்த்தது பற்றி வல்லவரையன் நியாயமாக உவகை கொண்டிருக்க வேண்டும். ஆயினும் அவனுடைய உள்ளத்தில் உவகை ஏற்படவில்லை. “இவ்வளவு பேரும் எதற்காக இங்கே கூடியிருக்கிறார்கள்?” என்ற எண்ணம் அவனுக்கு அடிக்கடி தோன்றியது. ஏதேதோ தௌிவில்லாத ஐயங்கள் அவன் உள்ளத்தில் தோன்றி அலைத்தன. மனத்தில் இத்தகைய குழப்பத...
48
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
குரைத்துக் கொண்டு பாய்ந்து ஓடி வந்தன. அந்த வேட்டை நாய்களின் கண்கள் அனல் பொறிகளைப் போல் ஜொலித்தன. நரிகளுக்கும் வேட்டை நாய்களுக்கும் நடுவில் அகப்பட்டுக் கொண்டால் தன்னுடைய கதி என்னவாகும் என்று எண்ணி வந்தியத்தேவன் நடுநடுங்கினான். நல்ல வேளை, எதிரே ஒரு கோயில் தெரிந்தது. ஓட்டமாக ஓடித் திறந்திருந்த கோயிலுக்குள் புகுந்து வாசற்...
49
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
ஒன்றாய்ப் பிணைத்த ஒரு காட்சியை அவன் காண நேர்ந்தது. அவன் படுத்திருந்த இடத்துக்கு நேர் எதிர்ப்புறத்தில் கடம்பூர் மாளிகைச் சுற்று மதிலின் மேலே ஒரு தலை தெரிந்தது. அது, அந்த ஆழ்வார்க்கடியான் நம்பியின் தலை தான். இந்தத் தடவை அது கனவல்ல, வெறும் பிரமையும் அல்லவென்பது நிச்சயம். ஏனெனில், எத்தனை நேரம் பார்த்தாலும் அந்தத் தலை அங்க...
50
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
. அங்கிருந்த ஒரு தூணைப் பிடித்துக் கொண்டு, தூணின் மறைவில் நின்றபடி எட்டிப் பார்த்தான். கீழே குறுகலான முற்றம் ஒன்றில், மூன்று பக்கமும் நெடுஞ் சுவர்கள் சூழ்ந்திருந்த இடத்தில் பத்துப் பன்னிரண்டு பேர் உட்கார்ந்திருந்தார்கள். பாதி மதியின் வெளிச்சத்தை நெடுஞ் சுவர்கள் மறைத்தன. ஆனால் ஒரு சுவரில் பதித்திருந்த இரும்பு அகல் விளக்...
51
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
அவர்களுக்கு விருப்பமில்லையென்பது தௌிவு. அப்படியிருக்கும்போது தன்னைத் திடீரென்று அவர்கள் பார்த்தால், தன் பேரில் சந்தேகப்பட்டு விடலாம் அல்லவா? ஆழ்வார்க்கடியானைப் பற்றி அவர்களுக்குத் தான் சொல்வதற்குள் அவன் மதில் சுவரிலிருந்து வெளிப்புறம் குதித்து ஓடிவிடுவான். ஆகையால் தன் பேரில் சந்தேகம் ஏற்படுவது தான் மிச்சமாகும். “படுத்த...
52
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
ிருப்பதினாலேதான் அவனும் சுவர் மேல் காத்திருக்கிறான் போலும்! ஆனால் அவனுக்கும் அவளுக்கும் என்ன உறவோ என்னமோ, நமக்கு என்ன தெரியும்? அவள் ஒருவேளை அவனுடைய சகோதரியாயிருக்கலாம் அல்லது காதலியாகவும் இருக்கலாம். பழுவேட்டரையர் பலவந்தமாக அவளைக் கவர்ந்து கொண்டு போயிருக்கலாம்! அவ்வாறு அவர் செய்யக்கூடியவர் தான். அதனால் அவளைப் பார்த்து...
53
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
படுத்து நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறான். இந்தக் கூட்டத்தின் பேச்சு அவன் காதில் விழப் போவதில்லை. தனக்குச் சம்பந்தமில்லாத காரியத்தில் அவன் தலையிடுகிறவனும் அல்ல. அப்படியே அவன் ஏதாவது தெரிந்து கொண்டாலும், அதனால் உங்கள் யோசனைக்குப் பாதகம் ஒன்றும் நேராது; அதற்கு நான் பொறுப்பு!” என்றான் கந்தமாறன். “உனக்கு அவனிடம் அவ்வ...
54
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
. தன்னைத் தூங்க வைத்துவிட்டு, இந்த ரகசிய நள்ளிரவுக் கூட்டத்துக்கு வந்திருக்கிறான். அவனை நாளைக்கு ஒரு கை பார்க்க வேண்டியதுதான். இதற்குள் கீழே பழுவேட்டரையர் பேசத் தொடங்கி விட்டார். வந்தியத்தேவன் காது கொடுத்துக் கவனமாகக் கேட்கலானான். “உங்களுக்கெல்லாம் மிக முக்கியமான ஒரு செய்தியை அறிவிக்கவே நான் வந்திருக்கிறேன். அதற்காகவே ...
55
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
மூதாதையரும் இந்தச் சோழ நாட்டின் மேன்மையை நிலைநாட்டுவதற்காக உயிரைக் கொடுத்திருக்கிறார்கள். நம் ஒவ்வொருவருடைய குடும்பத்திலும் இளம் பிள்ளைகள் யுத்தகளத்தில் செத்திருக்கிறார்கள். இன்றைக்கும் ஈழ நாட்டில் நம்முடைய குலத்தையும் குடும்பத்தையும் சேர்ந்த பிள்ளைகள் போர் செய்து வருகிறார்கள். ஆனால் அடுத்தபடியாகப் பட்டத்துக்கு வரவேண்ட...
56
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
நிறுத்தினார். சற்று நேரம் மௌனம் குடிகொண்டிருந்தது. மேற்குத் திசைக் காற்று ‘விர்’ என்று அடிக்கும் சப்தமும், அந்தக் காற்றில் கோட்டைச் சுவருக்கு வெளியேயுள்ள மரங்கள் ஆடி அலையும் ‘மர்மர’ சப்தமும் கேட்டன. “ஏதோ தெரியாத்தனமாகப் பேசிவிட்ட பரிகாசப் பேச்சையும், அதனால் விளைந்த சிரிப்பையும் பழுவூர் மன்னர் பொறுத்தருள வேண்டும். தாங்க...
57
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
பணியாததற்குக் காரணங்களை நான் சொல்ல வேண்டியதில்லை; அவைகள் எல்லாம் உங்களுக்குத் தெரிந்ததுதான்!…” “ஆம்; எல்லோருக்கும் தெரியும்; ஈழமும் இரட்டைப்பாடியும் வேங்கியும் கலிங்கமும் பணியாததற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒரு காரணம் வடதிசை மாதண்ட நாயகராகிய இளவரசர் ஆதித்த கரிகாலர்; இன்னொரு காரணம் தென் திசைப் படைத் தலைவரான அவருடைய தம்ப...
58
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
முடிந்து விட்டதா?” “ஆம், முடிந்து விட்டது என்று என்னுடைய அந்தரங்க ஒற்றர்கள் மூலம் அறிந்தேன். அத்துடன் சுந்தர சோழ மகாராஜாவுக்கு அவருடைய அருமை மூத்த புதல்வரிடமிருந்து கடிதங்களும் வந்தன. புதிதாக நிர்மாணித்திருக்கும் பொன் மாளிகையில் வந்து சுந்தர சோழ மகாராஜா சில காலம் தங்கியிருக்க வேண்டும் என்று.” “மகாராஜா காஞ்சிக்குப் போகப...
59
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
” “விந்தை! விந்தை!”, “இந்த அநியாயத்தைப் பொறுக்க முடியாது!”, “இப்படிக் கேட்டதே இல்லை!” என்ற குரல்கள் எழுந்தன. “இந்த அதிசயமான காரியத்துக்கு இளவரசர் அருள்மொழிவர்மர் கூறும் காரணத்தையும் கேட்டு வையுங்கள். படையெடுத்துச் சென்ற நாட்டில் நம் வீரர்களுக்கு வேண்டிய உணவுப் பொருளைச் சம்பாதிப்பது என்றால், அங்குள்ள குடிமக்களின் அதிருப...
60
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
இல்லை. அவருடைய பெரியன்னை செம்பியன் மாதேவியின் வாக்குத்தான் அவருக்கு வேதவாக்கு; அடுத்தபடியாக, அவருடைய செல்வக் குமாரி குந்தவைப்பிராட்டியிடம் யோசனை கேட்கச் சொல்கிறார். இராஜ்ய சேவையில் தலை நரைத்துப் போன நானும் மற்ற அமைச்சர்களும் அந்தச் சின்னஞ்சிறு பெண்ணிடம் கொள்ளிடத்துக்கு வடக்கேயும் குடமுருட்டிக்குத் தெற்கேயும் சென்றறியாத...
61
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
என்னைப் போல் இன்னும் சிலருடைய மனத்திலும் அது இருக்கலாம். பழுவூர்த்தேவர் கோபித்துக் கொள்வதில்லையென்றால், அதைப் பற்றிக் கேட்க விரும்புகிறேன்!” என்று முன்னால் ஒரு தடவை பேசிய கம்மல் குரல் சொல்லிற்று. “இப்போது பேசுகிறது வணங்காமுடியார் தானே? எழுந்து நன்றாக வெளிச்சத்திற்கு வரட்டும்!” என்றார் பழுவேட்டரையர். "ஆமாம்; நான் தான் ...
62
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
ஷ்டப்பட்டு மணந்து கொண்டோம் இதில் என்ன தவறு?” “ஒரு தவறும் இல்லை!” என்று பல குரல்கள் எழுந்தன. “மணம் புரிந்து கொண்டது தவறு என்று நானும் சொல்லவில்லை. நம்மில் யார்தான் ஒரு தார விரதம் கொண்டவர்கள்? ஆனால்….ஆனால்…” “ஆனால் என்ன! தயங்காமல் மனத்தைத் திறந்து கேட்டு விடுங்கள்!” “புது மணம் புரிந்து கொண்ட இளைய ராணியின் சொல்லை எல்லா கா...
63
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
உடனே துணிவு ஏற்படவில்லை. சம்புவரையரின் உதடுகள் ஏதோ முணுமுணுத்தன. ஆனால் அவர் வாயிலிருந்தும் வார்த்தை ஒன்றும் கேட்கவில்லை. அந்த நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு பழுவேட்டரையர் கணீர் என்று கூறினார்: “சரியான கேள்வி; மறுமொழி சொல்ல நான் கடமைப்பட்டவன். இந்தக் கூட்டம் கலைவதற்கு முன்னால் உங்கள் சந்தேகத்தைத் தீர்த்து வைக்கிறேன். இன...
64
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
யாரும் எதிர்பாராத வண்ணம் இருபத்து நாலு ஆண்டுகளுக்கு முன்னால் காலமானார். அச்சமயம் அவருடைய புதல்வர் மதுராந்தகத் தேவர் ஒரு வயதுக் குழந்தை. ஆகவே தமது தம்பி அரிஞ்சயதேவர் பட்டத்துக்கு வர வேண்டும் என்று திருவாய் மலர்ந்து விட்டுப் போனார். இதை அவருடைய தர்ம பத்தினியும் பட்ட மகிஷியுமான செம்பியன் மாதேவி தான் நமக்கு அறிவித்தார்கள்...
65
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
ாந்தகர் பட்டத்துக்கு வருவது நியாயமா? அல்லது இளையவரின் பேரர் பட்டத்துக்கு வருவது முறைமையா? நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் கருத்தை மனம் விட்டுச் சொல்ல வேண்டும்…” “மூத்தவராகிய கண்டராதித்ததேவரின் புதல்வர் மதுராந்தகர் தான் பட்டத்துக்கு உரியவர். அதுதான் நியாயம், தர்மம், முறைமை” என்றார் சம்புவரையர். “என் அபிப்பிராயமும் அதுவே”, “...
66
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
கூறத் தொடங்கினார். “செம்பியன் மாதேவி தமது ஏக புதல்வரை இராஜ்யபார ஆசையிலிருந்து திருப்பிச் சிவபக்தி மார்க்கத்தில் செலுத்துவதற்குப் பிரயத்தனப்பட்டு வந்தது நாடு அறிந்த விஷயம். ஆனால் இதன் காரணம் என்னவென்பதை நாடும் அறியாது; மக்களும் அறியார்கள். மதுராந்தகருக்கு இராஜ்யமாளும் விருப்பம் இருப்பதாகத் தெரிந்தால் அவருடைய உயிருக்கே ...
67
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
இந்த வீராதி வீரர்களுக்குத் தங்கள் முக தரிசனத்தைத் தந்தருள வேண்டும்!” என்று மிகவும் பணிவான குரலில் கூறினார். மேல்மாடத்தில் தூண் மறைவில் உட்கார்ந்து ஒரு வார்த்தை விடாமல் அடங்கா ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்த வந்தியத்தேவன் இப்போது ஜாக்கிரதையாகக் கீழே பார்த்தான். பல்லக்கின் திரையை முன்போலவே ஒரு கரம் விலக்கிற்று. அது பொன...
68
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
வடபெண்ணைக் கரையில் எல்லைக் காவல் புரிந்துவந்தபோது, குளிப்பதற்காக ஆற்றில் இறங்கினான். ஒரு பெரிய நீர்ச் சுழலில் அகப்பட்டுக் கொண்டான். அந்தப் பொல்லாத விஷமச் சுழல் அவனைச் சுற்றிச் சுற்றி வரச் செய்து வதைத்தது. அதே சமயத்தில் கீழேயும் இழுத்துக் கொண்டிருந்தது. சீக்கிரத்தில் வந்தியதேவனுடைய பலத்தையெல்லாம் அந்தச் சுழல் உறிஞ்சிவி...
69
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
ும் எப்பேர்ப்பட்டவர்கள்? அவர்களுடைய சக்தி என்ன? செல்வாக்கு என்ன? இங்கே இன்று கூடியிருந்த மற்றவர்கள்தான் எவ்வளவு பெயரும் புகழும் செல்வாக்கும் பராக்கிரமமும் வாய்ந்தவர்கள்? இத்தகைய கூட்டம் இதுதான் முதற் கூட்டமாயிருக்குமா? பழுவேட்டரையர் மூடுபல்லக்கில் மதுராந்தகரை வைத்து இவ்விதம் இன்னும் எத்தனை இடங்களுக்குக் கொண்டு போயிருக்...
70
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
கடைசியாக, இரவு நாலாம் ஜாமத்தில் கிழக்கு வெளுக்கும் நேரத்தில் அவனுக்கு ஒருவாறு தூக்கம் வந்தது. மறுநாள் காலையில் உதய சூரியனுடைய செங்கிரணங்கள் சுளீர் என்று அவன்பேரில் பட்டபோது கூட வந்தியத்தேவன் எழுந்திருக்கவில்லை. கந்தமாறன் வந்து தட்டி எழுப்பியபோதுதான் தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு எழுந்தான். “இராத்திரி நன்றாய்த் தூக்கம் ...
71
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
வந்திருக்கிறார்களே, அவர்களை விட்டுவிட்டு..” “உன்னைவிடப் பெரிய விருந்தாளி எனக்கு யாரும் இல்லை!..” என்று கூறிய கந்தன் மாறவேள் சட்டென்று நிறுத்திக் கொண்டான். “வந்தவர்கள் பெரிய விருந்தாளிகள் தான் ஆனால் அவர்களைக் கவனித்துக்கொள்ள என் தந்தை இருக்கிறார்; அரண்மனை அதிகாரிகளும் இருக்கிறார்கள். உன்னோடு நேற்று ராத்திரிகூட நான் அதிக...
72
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
கொஞ்சம் நீங்கிவிடலாம் அல்லவா? கந்தமாறா! உன் சகோதரியின் பெயர் என்னவென்று சொன்னாய்?” “மணிமேகலை!” “அடடா! என்ன இனிமையான பெயர்! பெயரைப் போலவே அழகும் குணமும் இருந்து விட்டால்..” கந்தமாறன் குறுக்கிட்டு, “நண்பா! உன்னை ஒன்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.என் தங்கையை நீ மறந்து விடு; அவளைப் பற்றி நான் சொன்னதையெல்லாம் மறந்துவிடு; அவ...
73
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
ாதே! நீ சொல்வது ஒன்றும் காரணமில்லை. வேறு மிக முக்கியமான காரணம் இருக்கிறது. அதை அறிந்தால் நீயே ஒப்புக் கொள்வாய். ஆனால் அதை நான் இப்போது வெளிப்படுத்துவதற்கில்லை. சமயம் வரும்போது நீயே தெரிந்து கொள்வாய்!” “கந்தமாறா! இது என்ன ஒரே மர்மமாகவே இன்றைக்கு நீ பேசிக் கொண்டு வருகிறாயே?” “அதற்காக என்னை மன்னித்துவிடு. உன்னிடம்கூட நான்...
74
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
கொள்ளிடமும் தெரிகிறது!” என்றான் வந்தியத்தேவன். உண்மையில் சற்றுத் தூரத்தில் கொள்ளிடப் பெரு நதியின் வெள்ளம் தெரிந்தது. சில நிமிஷ நேரத்தில் நண்பர்கள் நதிக்கரையை அடைந்தார்கள். ஆடிப் புதுப் பிரவாகம் அந்த மாநதியில் கரை புரண்டு சென்றது. மறுகரை வெகு தூரத்தில் இருப்பதாகத் தோன்றியது. மறுகரையிலேயுள்ள மரங்கள் சிறிய செடிகளைப் போலி...
75
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
என்று நீ எண்ணியிருக்கமாட்டாய்!” “ஆமாம்; அவ்விதம் உங்கள் சோழ நாட்டு நதியைப் பற்றி அலட்சியமாய் நினைத்ததற்காக மன்னித்துவிடு! அப்பப்பா இது என்ன ஆறு? இது என்ன வெள்ளம்? சமுத்திரம் போலவல்லவா பொங்கி வருகிறது?” இரு நண்பர்களும் ஒருவரையொருவர் தழுவிக் கொண்டு விடை பெற்றுக் கொண்டார்கள். வந்தியத்தேவன் நதிக்கரையோரமாகச் சென்று படகில் ஏ...
76
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
சென்றாள், காதலனை அணைத்துக் கொள்ளக் கரங்கள் இரண்டு உண்டாயின. இரு கரங்களை விரித்தவாறு தாவிப் பாய்ந்து சென்றாள். ஆனால் உள்ளத்தில் பொங்கிய ஆர்வ மிகுதிக்கு இரு கரங்கள் போதுமென்று தோன்றவில்லை; அவளுடைய ஆசைக் கரங்கள் பத்து, இருபது, நூறு என்று வளர்ந்தன. அவ்வளவு கரங்களையும் ஆவலுடன் நீட்டிக் கொண்டு சமுத்திர ராஜனை அணுகினாள். இவ்வ...
77
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
கிடையாது. நல்லது; அந்தப்புரம் என்னும் எண்ணத்தை மறந்துவிட்டு நேயர்கள் நம்முடன் அரிசிலாற்றை நெருங்கி வருவார்களாக. சோலையாக நெருங்கி வளர்ந்திருந்த மரங்களுக்கிடையே புகுந்து வருவார்களாக! அடடா இது என்ன அருமையான காட்சி? அழகுக்கு அழகு செய்வது போலும் அமுதத்துக்கு இனிப்பு ஊட்டுவது போலும் அல்லவா இருக்கிறது? சித்திர விசித்திரமாகச் ...
78
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
வாழி! காவேரி!  பூவர் சோலை மயிலாடப்  புரிந்து குயில்கள் இசைபாடக்  காமர் மாலை அருகசைய  நடந்தாய் வாழி! காவேரி!  காமர் மாலை அருகசைய  நடந்த வெல்லாம், நின் கணவன்  நாம வேலின் திறங்கண்டே  அறிந்தேன் வாழி! காவேரி! இந்த அமுதத் தமிழ்ப் பாடல்களை எங்கேயோ கேட்டிருக்கிறோமல்லவா? ஆம், சிலப்பதிகாரத்தில் உள்ள வரிப் பாடல்கள் இவை. எனினும்,...
79
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
இவர்கள் இருவரும் யார் என்று சொல்லி விடுகிறோம். கம்பீரத் தோற்றமுடைய கங்கைதான் சுந்தர சோழ மன்னரின் செல்வப் புதல்வி குந்தவை. சரித்திரத்தில் ராஜராஜன் என்று புகழ் பெற்ற அருள்மொழிவர்மனின் சகோதரி. அரசிளங் குமரி என்றும் இளைய பிராட்டி என்றும் மக்களால் போற்றப்பட்ட மாதரசி. சோழ ராஜ்யத்தின் மகோன்னதத்திற்கு அடிகோலிய தமிழ்ப் பெரும் ...
80
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
கேட்பதற்காக?” “வேறு எதற்கு? உன்னைப் பற்றிக் கேட்பதற்காகத்தான். சில மாத காலமாக நீ இப்படிப் பிரமை பிடித்தவள் போலும், உடல் மெலிந்தும் வருகிறாயா? உனக்கு எப்போது பிரமை நீங்கி உடம்பு தேறும் என்று கேட்பதற்காகத்தான்!” “அக்கா! தங்களுக்கு ரொம்பப் புண்ணியமுண்டு; எனக்கு உடம்புக்கு ஒன்றுமில்லை. என்னைப் பற்றிக் கேட்பதற்காகப் போக வே...
81
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
எலியைப் பிடித்து மடியில் வைத்துக் கட்டிக் கொள்வதுபோல் வேறு தேசத்து ராஜகுமாரனை நம் ஊரிலேயே கொண்டு வைத்துக் கொள்ளவா சொல்கிறாய்? அதனால் என்னென்ன தொல்லைகள் எல்லாம் விளையும் தெரியுமா?” “எப்படியும் பெண்ணாய்ப் பிறந்தவர்கள் ஒரு நாள் கலியாணம் செய்து கொண்டுதானே தீர வேண்டும்?” “அப்படி ஒரு சாஸ்திரத்திலும் சொல்லியிருக்கவில்லையடி, வ...
82
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
போயிருக்கிறது? உன் அந்தரங்கம் எனக்குத் தெரியாது எனறா நினைத்தாய்?” “அக்கா! அக்கா! நான் அவ்வளவு மடமதி உடையவளா? சூரியன் எங்கே? காலைப் பனித்துளி எங்கே? சூரியனுடைய நட்புக்குப் பனித்துளி ஆசைப்பட்டால் என்ன பயன்?” “பனித்துளி சிறியது தான்! சூரியன் பெரியது, பிரகாசமானது தான்! ஆனாலும் பனித்துளி அப்படிப்பட்ட சூரியனைச் சிறைப்படுத்த...
83
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
சேர்த்ததைப் பார்த்தால், அவன் அதற்கு முன் பலமுறை அங்கே ரதம் ஓட்டிக் கொண்டு சென்றிருக்க வேணும் என்று தோன்றியது. வீட்டு வாசலில் சோதிடரும் அவருடைய சீடர் ஒருவரும் ஆயத்தமாகக் காத்திருந்தார்கள். சோதிடர் மிக்க பக்தி மரியாதையுடன் வந்தவர்களை வரவேற்று உபசரித்தார். “பெருமாட்டி! கலைமகளும் திருமகளும் ஓருருவாய் வந்த தாயே! வரவேணும்! ...
84
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
என்றாள். பிறகு சோதிடர் வழிகாட்டி முன் செல்ல, குந்தவையும் வானதியும் அவ்வீட்டுக்குள்ளே சென்றார்கள். சோதிடர் தம் சீடனைப் பார்த்து, “அப்பனே! வாசலில் ஜாக்கிரதையாக நின்று கொண்டிரு; தப்பித் தவறி யாராவது வந்தாலும் உள்ளே விடாதே!” என்று எச்சரித்தார். அரசகுமாரியை வரவேற்பதற்கு உகந்ததாகச் சோதிடரின் கூடம் அழகு செய்யப்பட்டிருந்தது. ...
85
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
, என்ன மறுமொழி சொல்வதென்றே தெரியவில்லை…” “தாயே! கொடும்பாளூர் கோமகளின் செல்வப் புதல்வி தானே இவர்? இவருடைய பெயர் வானதி தானே?” என்றார் ஜோதிடர். “ஆமாம்; உமக்கு எல்லாம் தெரிந்திருக்கிறதே!” “இந்த அரசிளங்குமரியின் ஜாதகம் கூட என்னிடம் இருக்கிறது. சேர்த்து வைத்திருக்கிறேன்! சற்றுப் பொறுக்க வேணும்!” என்று சொல்லிவிட்டு, ஜோதிடர் ப...
86
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
சந்தேகப்பட்டு வைத்து விட்டேன். இப்போது இந்தப் பெண்ணின் திருமுகத்தையும் இந்த ஜாதகத்தையும் சேர்த்துப் பார்க்கும்போது, திகைக்க வேண்டியிருக்கிறது!” “திகையும்! திகையும்! போதுமானவரை திகைத்துவிட்டு பிறகு ஏதாவது குறிப்பாகச் சொல்லும்!” “இது மிகவும் அதிர்ஷ்ட ஜாதகம் தாயே! தாங்கள் எதுவும் வித்தியாசமாக நினைத்துக் கொள்ள மாட்டீர்கள்...
87
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
ுதிப்பென்று கலியாணப் பேச்சை எடுக்கக் கூடாது அல்லவா? எடுத்தால், இந்தக் கிழவனுக்குப் புத்தி கெட்டுவிட்டது” என்று சொல்லி விடுவார்கள்!" “இவளுக்குப் புருஷன் எங்கிருந்து வருவான்? எப்போது வருவான்? அவனுக்கு என்ன அடையாளம்? ஜாதகத்திலிருந்து இதையெல்லாம் சொல்ல முடியுமா, ஜோதிடரே!” “ஆகா! சொல்ல முடியாமல் என்ன? நன்றாய்ச் சொல்ல முடியும...
88
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
!” “அக்கா! இந்த கிழவர் என்னைப் பரிகாசம் செய்கிறார். இதற்காகவா என்னை இங்கே அழைத்து வந்தீர்கள்? எழுந்திருங்கள் போகலாம்!” என்று உண்மையாகவே பொங்கி வந்த போபத்துடன் கூறினாள் வானதி. “நீ என்னத்துக்குப் பதறுகிறாயடி, பெண்ணே! அவர் ஏதாவது சொல்லிக் கொண்டு போகட்டும்…” “நான் ஏதாவது சொல்லி விடவில்லை; எல்லாம் இந்த ஜாதகத்தில் குறிப்பிட்...
89
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
எத்தனையோ அபாயங்களும், கண்டங்களும் ஏற்படும்; பகைவர்கள் பலர் உண்டு…” “ஐயோ!” “ஆனால் அவ்வளவு அபாயங்களும் கண்டங்களும் முடிவில் பறந்து போகும்; பகைவர்கள் படுநாசம் அடைவார்கள். இந்தத் தேவியை அடையும் நாயகன் எல்லாத் தடைகளையும் மீறி மகோன்னத பதவியை அடைவான்…. இதைவிட முக்கியமான செய்தி ஒன்று உண்டு தாயே! நான் வயதானவன் ஆகையால் உள்ளதை ஒ...
90
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
கூறினாள் வானதி; திடீரென்று மயங்கித் தரையில் சாய்ந்தாள். “ஜோசியரே! சீக்கிரம் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வாருங்கள்!” என்று குந்தவை சொல்லிவிட்டு, வானதியைத் தூக்கி மடியில் போட்டுக் கொண்டாள். சோதிடர் தண்ணீர் கொண்டு வந்தார்; குந்தவை தண்ணீரை வாங்கி வானதியின் முகத்தில் தௌித்தாள். “ஒன்றும் நேராது, அம்மா! கவலைப்படாதீர்கள்…” என்றார் ...
91
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
சிறிது ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதுதான்…” “ஜோசியரே! என் தந்தை, சக்கரவர்த்தி… பழையாறையை விட்டுத் தஞ்சாவூருக்குப் போனதிலிருந்து எனக்கு ஒரே கவலையாயிருக்கிறது.” “முன்னமே சொன்னேனே, தாயே! மகாராஜாவுக்குப் பெரிய கண்டம் இருக்கிறது. தங்கள் குடும்பத்துக்கும் பெரிய அபாயங்கள் இருக்கின்றன. துர்க்காதேவியின் அருள் மகிமையினால் எல்லாம...
92
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
தாயே! தேவியின் பிரசாதம் தருகிறேன், வாங்கிக் கொண்டு போங்கள்” என்று ஜோசியர் சொல்லி விட்டு ஓலைச்சுவடியைக் கட்டத் தொடங்கினார். “ஜோசியரே! எனக்கு என்னவெல்லாமோ சொன்னீர்கள்; அக்காவுக்கு ஒன்றுமே சொல்லவில்லையே?” என்று வானதி கூறினாள். “அம்மா! இளையபிராட்டிக்கு எல்லாம் சொல்லியிருக்கிறேன் புதிதாக என்ன சொல்ல வேண்டும்?” “அக்காவை மணந்...
93
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
“ஆமாம்; நீ யார்?” “ஜோசியர் இருக்கிறாரா?” “உள்ளே போகக் கூடாது?” “அப்படித்தான் போவேன்!” “விடமாட்டேன்” “ஜோசியரைப் பார்க்க வேண்டும்” “அப்புறம் வா” “அப்புறம் வர முடியாது; எனக்கு மிக்க அவசரம்!” “அடே! அடே! நில்! நில்!” “சற்று! விலகிப்போ! தடுத்தாயோ கொன்றுவிடுவேன்…” “ஐயா! ஐயா! வேண்டாம்! உள்ளே போக வேண்டாம்!” இத்தகைய குழப்பமான க...
94
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
ால் நான் இப்படி வந்திருப்பேனா?” என்று கேட்டுக் கொண்டே சீடனை மறுபக்கம் தள்ளிக் கொண்டு வாசற்படியை மீண்டும் கடந்தான். ஆயினும் வெளியில் போவதற்குள் இன்னும் ஒரு தடவை குந்தவைதேவியைத் திரும்பிப் பார்த்து விட்டுத்தான் போனான். “அடே அப்பா! புயல் அடித்து ஓய்ந்தது போல் அல்லவா இருக்கிறது?” என்றாள் குந்தவைப் பிராட்டி. “இன்னும் ஓய்ந்த...
95
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
யும் மறுமொழி சொல்லவில்லை. வானதியை ஒரு கையினால் பிடித்து இழுத்துக் கொண்டு ரதம் நின்ற ஆலமரத்தடியை நோக்கிச் சென்றாள். “குடந்தை நகரத்துப் பெண்களுக்கு மரியாதையே தெரியாது போலிருக்கிறது. ஏதடா ஒரு மனிதன் வலிய வந்து பேசுகிறானே என்பதற்காகவாவது திரும்பிப் பார்த்து ஒரு வார்த்தை பதில் சொல்லக் கூடாதோ?” என்று வந்தியத்தேவன் இரைந்து கூ...
96
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்!” என்று ஆழ்வார்க்கடியான் உரத்த குரலில் பாடத் தொடங்கினான். “சிவ சிவ சிவா!” என்று சைவர் இரண்டு காதிலும் கைவிரலை வைத்து அடைத்துக் கொண்டார். ஆழ்வார்க்கடியான் பாட்டை நிறுத்தியதும், சைவர் காதில் வைத்திருந்த விரல்களை எடுத்தார். ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவனைப் பார்த்து,...
97
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
சுரனுக்கு வரங்கொடுத்துவிட்டு அலறிப் புடைத்துக் கொண்டு ஓடியது போல் சிவனுக்கு இன்னொரு சங்கடம் ஏற்பட்டிருக்கலாம்; அந்தச் சங்கடத்திலிருந்து சிவனைக் காப்பார்றுவதற்காகத் திருமால் போயிருக்கலாம்” என்றான் நம்பி. “திரிபுர சம்ஹாரத்தின் போது திருமால் அடைந்த கர்வபங்கம் இந்த வைஷ்ணவனுக்கு ஞாபகம் இல்லை போலிருக்கிறது!” என்றார் சைவப் பெ...
98
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
ன் காலத்திலிருந்து சோழ மன்னர்களும், மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் வெகுவாகச் செய்துவந்தார்கள். அதே சமயத்தில் கேரள நாட்டில் ஒரு விசேஷ சம்பவம் நடந்தது. காலடி என்னுமிடத்தில் ஒரு மகான் அவதரித்தார். இளம் பிராயத்தில் அவர் உலகைத் துறந்து சந்நியாசி ஆனார். வடமொழியிலுள்ள சகல சாஸ்திரங்களையும் படித்துக் கரை கண்டார். வேத உபநி...
99
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
சிவன் கோயிலை நன்றாய் இடித்துத் தள்ளு!” என்றாராம். அந்த நாளில் இத்தகைய சைவ - வைஷ்ணவ வேற்றுமை மனப்பான்மை மிகப் பரவியிருந்தது. இதைத் தெரிந்து கொள்ளுதல், பின்னால் இந்தக் கதையைத் தொடர்ந்து படிப்பதற்கு மிக்க அனுகூலமாயிருக்கும். ஓடம் அக்கரை சென்றதும், சைவப் பெரியார் ஆழ்வார்க்கடியானைப் பார்த்து, “நீ நாசமாய்ப் போவாய்!” என்று கட...
100
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512