diff --git "a/pmuni0548_02.txt" "b/pmuni0548_02.txt" new file mode 100644--- /dev/null +++ "b/pmuni0548_02.txt" @@ -0,0 +1,7779 @@ + + + + + + + + + + + + + + + + +en caritiram of U.vE. cAminAta aiyar , part 4 (chapters 76-100) (in tamil script, unicode format) + + + + + + + + + + + + + + + + +என் சரித்திரம் - பாகம் 4 + (அத்தியாயம் 76-100) + +உ.வே.சாமிநாதையரவர்கள் + + +en caritiram (autobiography)- + + part 4 (chapters 76-100) + +of U.vE. cAminAta aiyar + +In tamil script, unicode/utf-8 format + + + + + + + + + +Acknowledgements: + +We thank the Tamil Virtual Academy for providing an electronic version of this work. + +Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland. + + + +© Project Madurai, 1998-2016. + +Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation + +of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. + +Details of Project Madurai are available at the website + + +http://www.projectmadurai.org/ + + +You are welcome to freely distribute this file, provided this header page is kept intact. + + + + + + + + + என் சரித்திரம் - பாகம் 4 (அத்தியாயம் 76-100) + +மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி + +டாக்டர் உ.வே.சாமிநாதையரவர்கள் + + + + + +Source: + + +என் சரித்திரம் + +உ.வே. சாமிநாதையரவர்கள் + +1ம் பதிப்பு வெளியீடு எஸ். கல்யாணசுந்தர அய்யர், 1950 + +மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம், + +சென்னை, 2ம் பதிப்பு, 1982 + +---------- + + + உள்ளுறை "என் சரித்திரம் பாகம் -4" + + + + + + + + 76. ஸ்தல தரிசனம் +89. ஜைன நண்பர்கள் + + + 77. சமயோசிதப் பாடல்கள் +90. அன்பர் பழக்கமும் ஆராய்ச்சியும் + + + 78. குறை நிவர்த்தி +91. எனது இரண்டாவது வெளியீடு + + +79. பாடும் பணி +92. சிந்தாமணி ஆராய்ச்சி + + +80. புதிய வாழ்வு +93. மூன்று லாபங்கள் + + +81. பிரியா விடை +94. இடையே வந்த கலக்கம் + + +82. சோதனையில் வெற்றி +95. சிந்தாமணிப் பதிப்பு ஆரம்பம் + + +83. காலேஜில் முதல் நாள் அனுபவம் +96. சிந்தாமணிப் பதிப்பு நிகழ்ச்சிகள் + + +84. எனக்கு உண்டான ஊக்கம் +97. பலவகைக் கவலைகள் + + +85. கோபால ராவின் கருணை +98. புதிய ஊக்கம் + + +86. விடுமுறை நிகழ்ச்சிகள் +99. மகிழ்ச்சியும் வருத்தமும் + + +87. கவலையற்ற வாழ்க்கை +100. சிந்தாமணி வெளியானது + + + 88. “என்ன பிரயோசனம்?” + + + + + +------------- + + + +76. ஸ்தல தரிசனம் + + + +திருக்குற்றாலத்தில் சில தினங்கள் தங்கிப் பிறகு ஆ தீனத்திற்குரிய +கிராமங்களை ஒவ்வொன்றாகப் பார்த்தபடியே சுப்பிரமணிய தேசிகர் யாத்திரை +செய்யலானார். வேணுவன லிங்கத் தம்பிரான் ஆட்சியின் கீழிருந்த அந்தக் +கிராமங்கள் திருவாவடுதுறை மடத்தின் ஜீவாதாரமாக உள்ளவை. அவற்றில் +கம்பனேரி புதுக்குடி என்பது ஒரு கிராமம். அதை விலைக்கு வாங்கிய +சுப்பிரமணிய தேசிகர் தம் குருவின் ஞாபகார்த்தமாக அம்பலவாண தேசிகபுரமென்ற புதிய +பெயரை வைத்தார். அங்கே தேசிகர் ஒரு நாள் தங்கினார். + + + +‘வெள்ளி வில்லை தங்க வில்லை’ + + + +அக்காலத்தில் திருப்பனந்தாட் காசிமடத்தில் தலைவராக விளங்கிய ஸ்ரீ +ராமலிங்கத் தம்பிரானென்பவர் சுப்பிரமணிய தேசிகரிடம் பேரன்பு பூண்டவர். +தேசிகர் யாத்திரை செய்வதை அறிந்து தாமும் அவரோடு சேர்ந்து சில +நாட்கள் பிரயாணம் செய்ய விரும்பித் தனிப் புகைவண்டி யொன்றை ஏற்பாடு +செய்து கொண்டு திருநெல்வேலி மார்க்கமாகச் செவந்திபுரம் வந்து தேசிகரைத் +தரிசித்து உடனிருப்பாராயினர். அத்தம்பிரான் கம்பனேரி புதுக்குடியைக் கண்டு +மிகவும் மெச்சினார். அந்தக்கிராமம் மிகவும் விசாலமாக இருந்தது. சுப்பிரமணிய +தேசிகர் பரிவாரங்களுடன் தங்கினமையால் அப்போது அது ஒரு பெரிய +நகரம்போல விளங்கிற்று. + + + +மகாவைத்தியநாதையரும் அவர் தமையனாராகிய இராமசாமி ஐயரும +அணிந்திருந்த ருத்திராட்ச கண்டிகளை வாங்கி அவற்றிற்குத் தேசிகர் தங்க +வில்லை போடச்செய்து அளித்தனர். எனக்கு திருவிடைமருதூரில் அளித்த +கண்டியில் தங்க முலாம் பூசிய வெள்ளி வில்லைகளே இருந்தன. அந்தக் +கண்டிக்கும் தங்க வில்லைகளை அமைக்கச் செய்து எனக்கு அளித்தார். +அப்போது இராமசாமி ஐயர் சிலேடையாக, “வெள்ளி வில்லை தங்க வில்லை” +என்றார். யாவரும் கேட்டு மகிழ்ந்தனர். + + + +சங்கர நயினார் கோயில் + + + +தேசிகர் முன்னரே செய்திருந்த ஏற்பாட்டின்படி சங்கர நயினார் +கோயிலில் நடைபெறும் ஆடித் தவசு உத்ஸவத்திற்குச் சென்றனர். சோழ +நாட்டில் வைத்தீசுவரன் கோயிலுக்கு எவ்வளவு சிறப்புண்டோ அவ்வளவு +சிறப்பு சங்கர நயினார் கோயிலுக்கும் உண்டு. சிவபெருமானும் திருமாலும் +பேதமின்றி இயைந்து நிற்கும் சங்கர நாராயண மூர்த்தியைத் தரிசித்து +ஆனந்தமடைந்தேன். அவ்வாலயத்திலுள்ள புற்று மண்ணை மருந்தாக உண்டு +நோய்கள் தீர்ந்த பக்தர்கள் பலரைப் பார்த்தேன். அங்கே எழுந்தருளியிருக்கும் +ஸ்ரீ கோமதியம்மையைத் தரிசித்துப் புளகாங்கிதம் அடைந்தேன். இறைவனைக் +குறித்து அத்தேவி தவஞ்செய்த சிறப்பை நினைவுறுத்த ஒவ்வொரு வருஷமும் +ஆடி மாதத்தில் திருவிழா நடைபெறும். அத்திருவிழாவைத்தான் ‘ஆடித் தவசு’ +உத்ஸவமென்று வழங்குகிறார்கள். + + + +கரிவலம் வந்த நல்லூர் + + + +சங்கரநயினார் கோயிலில் ஒரு வாரம் இருந்து விட்டுத் திருச்செந்தூர் +ஆவணி உத்ஸவ தரிசனத்துக்காகப் புறப்பட்டோம். இடையே ஒரு நாள் +கரிவலம் வந்த நல்லூரில் தங்கினோம். தமிழ்ப் பயிற்சியைத் தொடங்கும் +மாணாக்கர்களுக்கு அந்த ஸ்தலத்தைப் பற்றித் தெரியாமலிர��து. வரதுங்கராம +பாண்டியர் இயற்றிய கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி, கருவைக் கலித்துறை +யந்தாதி, வெண்பா அந்தாதி என்ற மூன்று பிரபந்தங்களும் அத்தலத்தைப் +பற்றியனவே யாகும். கரிவலம் வந்த நல்லூர் என்பதன் மரூஉவே கருவை +என்பது. + + + +அந்த ஸ்தலத்தை அணுகியவுடன் நான் முன்னே கேட்டிருந்த +அந்தாதிச் செய்யுட்களெல்லாம் ஞாபகத்துக்கு வந்தன. என் ஆசிரியரிடம் +அவ்வந்தாதி நூல்களைப் படித்த காலத்தில் அவர் கூறிய அர்த்தத்தைக் காதாற் +கேட்டிருந்தேன். ஸ்தல சம்பந்தமாக அவர் சொன்ன விஷயங்களைக் கொண்டு +அப்போது நான் மனத்திலே ஒரு கோயிலைக் கற்பனை செய்திருந்தேன். கண் +முன்னே பின்பு அவ்வாலயத்தைக் கண்டபோது அதுவரையில் விளங்காத +விஷயங்கள் விளங்கின. பாடல்களின் அர்த்தத்தைக் காதாற் கேட்டபோது +அப்பொருள் குறைவாகவே இருந்தது; பால்வண்ண நாதரைக் கண்ணால் +தரிசித்த போதுதான் அப்பொருள் நிறைவெய்தியது. ஸ்வாமிக்கு நிழல் அளித்து +நிற்கும் பழைய களாச் செடியையும் பார்த்து விம்மித மடைந்தேன். + + + +சிறந்த தமிழ்ப் புலவரும் அரசரும் அடியாருமாகிய வரதுங்க ராம +பாண்டியர் வாழ்ந்த நகரமாதலின் அதனைச் சுற்றிப் பார்க்கலாமென்று சில +நண்பர்களுடன் புறப்பட்டேன். அவ்வரசர் வசித்த இடத்தைப் பார்த்து +இன்புற்றேன். இப்படி ஊரைப் பார்த்துக் கொண்டு சென்ற போது நடு வீதியில் +என் எதிரே ஒருவர் வந்தார். அவருடன் சில குட்டித் தம்பிரான்களும் +வந்தார்கள். வந்தவர் என்னைக் கண்டு அஞ்சலி செய்தார். எனக்கு அவர் +இன்னாரென்று அடையாளம் தெரியவில்லை. + + + +அவர் தலையில் ஓர் அழகிய உருமாலை கட்டியிருந்தார். காதிற் +கடுக்கனும் கையில் மோதிரமும் அணிந்திருந்தார். இடுப்பில் சரிகை வஸ்திரம் +உடுத்திருந்தார். இவற்றையெல்லாம் பார்த்து, “இந்தப் பிரபுவை நாம் +பார்த்ததாகக் தெரியவில்லையே” என்று யோசிக்கலானேன். பிறகு, +“தங்களைத் தெரியவில்லையே” என்று +கேட்டேன். அவர், “அடியேன் அவ்விடத்துச் சிஷ்யன்தான்” என்றார். +அப்பொழுதும் எனக்கு விளங்கவில்லை. “பெயர் என்ன” என்று கேட்டேன். +“நான்தான் சொக்கலிங்கம்; திருவாவடுதுறையில் தங்களிடம் பாடம் +கேட்கவில்லையா?” என்றார். + + + +“சொக்கலிங்கத் தம்பிரானா? அடையாளமே தெரியவில்லையே!” என்ற +ஆச்சரியமடைந்து நின்றேன். + + + +“இப்போது வேஷம் மாறி விட்டது; நான் சொக்கலிங்கம் பிள்ளைய���கி +விட்டேன்.” + + + +சௌக்கியமாக இருக்கிறீரா? உமக்கு இரண்டு சாண் நீளம் +சடையிருந்ததே! ஏன் இப்படி மாற வேண்டும்?” என்று கேட்டேன். + + + +“நான் திருவாவடுதுறையில் இருந்த போது துறவிகளின் சகவாசம் +இருந்தது. படிப்பில் ஆசை தீவிரமாக இருந்தது. தாங்களும் பாடம் சொல்லித் +தந்தீர்கள். ஸந்நிதானம் கருணையுடன் பாதுகாத்து வந்தது. என்னவோ +நினைத்து இங்கே வந்தேன். பழைய பாசம் சுற்றிக் கொண்டது. உறவினர்கள் +கிருகஸ்தாசிரமத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று வற்புறுத்தினார்கள். +எனக்கும் அந்த இச்சை உண்டாயிற்று. நான் மனிதன்தானே? காவி உடை +தரித்த மாத்திரத்தில் பெரிய ஞானியாகி விடுவேனா? கலியாணம் செய்து +கொண்டேன். இங்கே பள்ளிக்கூடம் வைத்து நடத்தி வருகிறேன். +ஊரிலுள்ளவர்கள் குறைவில்லாமல் ஆதரித்து வருகிறார்கள். எல்லாம் +அவ்விடத்து அனுக்கிரகம்” என்றார். + + + +பிறகு அவர் விடை பெற்றுச் சென்றார். நாங்கள் தேசிகரிடம் சென்று +சொக்கலிங்கம் பிள்ளையைப் பற்றிச் சொன்னோம். அவர், “துறவுக் கோலம் +பூண்டு அந்நிலைக்குத் தகாத காரியங்களைச் செய்வதை விட இம்மாதிரி +செய்வது எவ்வளவோ உத்தமம்” என்று சொல்லிப் புன்முறுவல் பூத்தார். + + + +திருச்செந்தூர் + + + +கரிவலம் வந்த நல்லூரிலிருந்து புறப்பட்டு ஆழ்வார் திருநகரி முதலிய +ஊர்களின் வழியாகத் திருச்செந்தூரை அடைந்தோம். செந்திலாண்டவனுக்குத் +திருவாவடுதுறை யாதீனத்தின் மூலம் நடைபெறும் பணிகள் பல உண்டு. +அவற்றிற்குரிய மடங்களும் பல உள்ளன. அங்கே ஆவணி மாதத்தில் +நடைபெறும் உற்சவ தரிசனம் ஆயிற்று. தேசிகர், பிராமண போஜனம், +மகேசுவர பூஜையாகியவற்றை நடப்பித்தார். + + + +சமுத்திரக் கரையில் அமைந்துள்ள செந்திற்பெருமான் திருக்கோயில் +கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஆண்டவனுக்குப் பிரார்த்தனை +செலுத்துவோர்களுடைய கூட்டம் மிக அதிகம். உலகத்தில் +தெய்வபக்தியென்னும் சுடரை அவியாமலே காப்பாற்றி வரும் ஸ்தலங்களுள் +திருச்செந்தூர் ஒன்று. கலியுக வரதனாகிய முருகக் கடவுளின் திருவருளைப் +பலவிதமான அதிசயச் செயல்களால் காணுவதற்கு இடமாயிருப்பது அந்தத் +திவ்ய ஸ்தலம். + + + +கந்தர் கலிவெண்பா + + + +எங்களுடன் வந்திருந்த இராமலிங்கத் தம்பிரானுடைய ஆட்சியிலுள்ள +திருப்பனந்தாள் மடத்தில் ஆதி புருஷராக வணங்கப்படுபவர் குமரகுருபர +ஸ்வாமிகள். அப்பெரியா���் இளமையில் ஐந்து வருஷம் வரையில் ஊமையாக +இருந்து பிறகு செந்திற் பெருமான் திருவருளால் வாக்குப் பெற்றனர். அப்போது +அவர் முதல் முதலில் செந்திலாண்டவன் விஷயமாக, ‘கந்தர்கலி வெண்பா’ +என்ற பிரபந்தத்தைப் பாடினார். திருவருளால் அமைந்த வாக்கென்ற +கருத்தினால் தமிழ் நாட்டில் அந்நூலைப் பயபக்தியோடு பலர் பாராயணம் +செய்து வருவார்கள். நான் அதை அடிக்கடி படித்து மகிழ்வதுண்டு. +திருச்செந்தூரில் தங்கிய காலத்தில் அதனைப் பல முறை பாராயணம் +செய்தேன். இராமலிங்கத் தம்பிரான் தம் ஆதீன முதல்வரால் இயற்றப் பெற்ற +தென்ற பெருமையுள்ளத்தோடு படித்தும் கேட்டும் வந்தார். கந்தர் +கலிவெண்பாவின் இறுதியில் குமர குருபரர் தமக்கு ஆசு முதல் நாற்கவியும் +பாடும் வன்மை வேண்டுமென்று பிரார்த்திக்கின்றார். நான் அந்தப் பகுதியை +மீட்டும் மீட்டும் படித்துச் செந்திலாண்டவனைத் துதித்தேன். எனக்கும் நல்ல +கவித்துவம் வேண்டுமென்ற ஆசை உள்ளிருந்து தூண்டியது. + + + +எனது தீர்மானம் + + + +திருச்செந்தூரில் இருந்தபோது சுப்பிரமணிய தேசிகர் என்னையும் +மகாவைத்தியநாதையரையும் அழைத்து, ஊருக்குப் போய்ச் சில தினங்கள் +இருந்து விட்டுத் திருப்பெருந்துறைக்கு வந்து விடும் படியும், அதற்குள் தாமும் +திருப்பெருந்துறைக்கு வந்துவிடக் கூடுமென்றும் கட்டளையிட்டனுப்பினார். +நாங்கள் புறப்பட்டோம். இராமலிங்கத் தம்பிரானும் விடை பெற்றுத் +திருப்பனந்தாளுக்குச் சென்றார். செந்திலாண்டவன் திருவருளால் இனிச் +செய்யுட்களை மிகுதியாக இயற்றிப் பழக வேண்டுமென்ற தீர்மானத்துடன் நான் +திருவாவடுதுறைக்கு வந்து சேர்ந்தேன். + +------------- + + + + + +77. சமயோசிதப் பாடல்கள் + + + +திருவாவடுதுறையில் குமாரசாமித் தம்பிரான் சின்னக் காறுபாறாக +இருந்து வந்தார். சுப்பிரமணிய தேசிகருடைய யாத்திரைக்காலத்தில் அவர் +திருவாவடுதுறையில் சில சில சீர் திருத்தங்களைச் செய்தார். கோயில், மடம், +நந்தவனங்கள் முதலியவற்றை மிகவும் நன்றாக விளங்கும்படி கவனித்து +வந்தார். + + + +திருநெல்வேலியிலிருந்து நான் திருவாவடுதுறைக்கு வந்து சில வாரங்கள் +தங்கியிருந்தேன். அக்காலத்தில் குமாரசாமித் தம்பிரானோடு தமிழ் விஷயமாகப் +பேசி இன்புற்றேன். யாத்திரைக் காலத்திற் சந்தித்த புலவர்களைப்பற்றியும் +நிகழ்ந்த நிகழ்ச்சிகளைப் பற்றியும் அவரிடம் சொன்னேன். + + + +திருச்செந்தூரில் செய்து கொண்ட சங்கற்பத்தின்படியே தினந்தோறும் +ஸ்ரீ கோமுத்தீசுவரர் விஷயமாக ஒவ்வொரு செய்யுள் இயற்றி வந்தேன். +அவற்றைக் குமாரசாமித் தம்பிரான் கேட்டு மகிழ்வார். மற்றத் தம்பிரான்களும் +கேட்டு மகிழ்வார்கள். சனி ஞாயிறுகளில் கும்பகோணத்திலிருந்து தியாகராச +செட்டியார் வருவார். அவர் தங்கியிருக்கும் இரண்டு தினங்களும் தமிழைப் +பற்றிய பேச்சாகவே இருக்கும். + + + +வினாச்செய்யுள் + + + +குமாரசாமித் தம்பிரான் தெற்கு வீதியிலுள்ள குளக்கரையில் ஒரு +கட்டிடம் கட்டுவிக்க எண்ணி வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தார். ஆழ்ந்த +அஸ்திவாரம் போட்டு வேலைக்காரர்கள் வேலை செய்தார்கள். அதனைக் +கவனிக்கும் பொருட்டு அங்கே தம்பிரான் சென்றபோது நானும் உடன் +சென்றேன். அவ்விடத்தில் ஒரு கிழவன் நடைபெறும் வேலைகளை +மேற்பார்வை யிட்டுக் கொண்டு நின்றான். அவன் எலும்புந்தோலுமாய், +நிற்பதற்கே சக்தியில்லாமல் இருந்தான். அவனைப் பார்த்தால் அவன் உடம்பில் +உயிர் உள்ளதோ இல்லையோ என்ற சந்தேகம் எழும். அவன் எப்படி அங்கே +வேலை வாங்குவானென்று ஆச்சரியமடைந்தேன். திடீரென்று ஓர் அதட்டல் +குரல் கேட்டது. அந்த உடம்பிலிருந்து அத்தொனி எழுந்ததென்பதை +உணர்ந்தபோது எனக்குப் பிரமிப்பு உண்டாகி விட்டது. “இவனா +அதட்டினான்!” என்ற சந்தேகத்தோடு மீட்டும் அவனைக் கவனித்தேன். முன் +கேட்டதைவிட மிகவும் பலமான அதட்டல் தொனி அவனிடமிருந்து எழுந்தது. +தம்பிரானைப் பார்த்தேன். +ஆச்சரியக் குறிப்போடு, “இவ்வுடலினின்று மொலி இங்கெழுவதென்னே!” என்று +சொன்னேன். என் உள்ளம் செய்யுள் இயற்றுவதில் ஈடுபட்டிருந்தமையால் +அந்தக் கேள்வியை ஒரு செய்யுளடியைப் போலவே அமைத்துக் கேட்டேன். +அவர் சிரித்துக் கொண்டே “உருவுகண் டெள்ளாமை வேண்டும்” என்று பதில் +சொன்னார். பிறகு, “உங்கள் கேள்வியை நான்காவது அடியாக வைத்து முன்னே +மூன்றடிகளை அமைத்து ஒரு செய்யுளாகப் பூர்த்தி செய்து விடுங்கள்” என்றார். +அப்படியே இயற்றிச் சொல்ல அவர் கேட்டு மகிழ்ந்தார். + + + +‘நின்றால் நடக்கும்’ + + + +அப்போது மணி பதினொன்று ஆகிவிட்டது. நானும் அவரும் காவிரி +ஸ்நானத்திற்குப் புறப்பட்டோம். போகும்பொழுது, “குளத்திலேயே ஸ்நானம் +செய்திருக்கலாம். காவிரிக்குப் போனால் நேரமாகும். நான் நின்றுவிட்டால் +வேலை நின்றுவிடுமே” என்று சொன்னார். “நீங்கள் நடந்தால் அது +நின்றுவிடும்; அங்கே நின்றால் நடக்கும் போலிருக்கிறது” என்று சொல்லி, +உடனே + + + +“கன்றால்முன்விளவெறிந்தகண்ணன்மிகவஞ்சவரும்கடுவயின்று + +மன்றாட லுவந்ததிருக் கோமுத்தி வாணர்பணி வழுவா தாற்றும் + +குன்றாத புகழ்க்குமர சாமிமுனி வரன்மாடம் குயிற்ற வன்னான் + +நின்றாலவ் வேலைநடந் திடுமனையா னடப்பினது நிற்குந் தானே” + + + +என்ற செய்யுளையும் சொன்னேன். “இன்று என்ன கவி ஆவேசம் வந்து +விட்டது போலிருக்கிறதே” என்று சொல்லித் தம்பிரான் அச் செய்யுளை மீட்டும் +மீட்டும் சொல்லக் கேட்டு இன்புற்றார். + + + +ஊற்றுப் பாட்டு + + + +அப்பால் காவிரிப் படித்துறையை அடைந்தோம். அங்கே தென்கரையில் +மிக உயரமாக வளர்ந்து ஆற்றின் பக்கமாகச் சாய்ந்து நிழல் அளிக்கும் ஒரு +மருத மரம் இருந்தது. அம்மரத்தடியில் மணற்பரப்பிலே அமர்ந்தோம் +மத்தியான்ன வெயிலில் அம்மரத்து நிழல் இனிமையாக இருந்தது. + + + +காவேரியில் நீரோட்டம் இல்லாமையால் ஸ்நானம் செய்யும் பொருட்டுத் +தனித் தனியே ஊற்றுக்கள் போடப்பட்டிருந்தன. ஆதீனத் தலைவர் அமிழ்ந்து +ஸ்நானம் செய்வதற்கு ஏற்றபடி ஓர் ஓடுகால் வெட்டப்பட்டு நாற்புறமும் +வேலிகட்டி யிருந்தது. அதன் மேல்பால் தம்பிரான்களெல்லாம் ஸ்நானம் +செய்வதற்காக விசாலமான ஊற்றொன்று வெட்டி அதற்கும் வேலி கட்டப்பட்டிருந்தது. +அதற்குக் கிழக்கே தவசிப் பிள்ளைகளும் சைவர்களும் பிறரும் நீராடுவதற்குப் +பெரிய ஊற்று ஒன்று இருந்தது. அந்த ஊற்றுக்களைப் பாதுகாத்து வரும் +பொருட்டு ஒருவன் நியமிக்கப்பட்டிருந்தான். பொன்னுப்பிள்ளை யென்பது +அவன் பெயர். + + + +ஊற்றுக்களை நன்றாக இறைத்துச் சுத்தமாக வைத்திருப்பதும், யார் யார் +எந்த எந்த ஊற்றில் ஸ்நானம் செய்யலாமோ அவர்களையன்றி மற்றவர்கள் +அவற்றை உபயோகிக்காமல் காவல் புரிவதும் ஆகிய வேலைகளை அவன் +பார்த்து வந்தான். அவனுக்கு உதவியாகச் சிலர் இருந்தனர். + + + +நாங்கள் மருத மரத்து நிழலில் உட்கார்ந்திருப்பதைக் கண்டு அவன் +வந்து குமாரசாமித் தம்பிரானை வந்தனம் செய்து நின்றான். “எல்லாம் சரியாக +இருக்கிறதா?” என்று தம்பிரான் விசாரித்தார். “சரியாக இருக்கிறது ஊற்றில் +ஜலம் நிறைய ஊறியிருக்கிறது. ஸ்நானம் செய்ய எழுந்தருளலாம்” என்று +அவன் சொன்னான். + + + +அந்தக் காவலாளன் மிகவும் கடுமையானவன். உரியவர்களல்லாத வேறு +யாரேனும் ஊற்றுக்கருகில் வந்தால் அவர் காலில் அடிப்பான். பித்தளைப் +பாத்திரங்களைக் கொண்டு வந்து ஊற்றை அணுகினால் அவற்றைப் பிடுங்கித் +தூர எறிவான். மண் பாத்திரங்களாயிருந்தால் உடைத்தெறிவான். பெண்களுக்கு +அவனிடம் அதிக பயம். அவன் முகம் எப்போதும் கோபக் குறிப்போடே +இருக்கும். வார்த்தையும் கடுமையானது. அப்படியிருந்தால்தான் தன் வேலை +ஒழுங்காக நடைபெறும் என்பது அவனது திடமான அபிப்பிராயம். நிழலும் +ஊற்றும் இனிய காட்சிகளை அளித்த அந்த இடத்தில் அவனுடைய முகம் +வெயிலின் கடுமைக்குத் துணையாக விளங்கியது. + + + +தம்பிரான் என்னைப் பார்த்து, “இவனைத் தெரியுமா?” என்று கேட்டார். +“நன்றாகத் தெரியுமே” என்று நான் சொன்னேன். அவன் தன் வேலையைக் +கவனிக்கப் போய்விட்டான். “இவன் எப்பொழுதும் கடுமையாகவே +இருக்கிறானே. இவன் முகத்தில் சந்தோஷ அறிகுறியை ஒருநாளேனும் +பார்த்ததில்லை. இவனைச் சிரிக்கும்படி செய்யமுடியுமோ?” என்று தம்பிரான் +என்னைக் கேட்டார். “பார்க்கலாம்” என்று சொல்லி நான் அந்தப் பேர் +வழியின் விஷயமாக ஒரு பாடல் செய்ய யோசித்தேன். அவனது கடுமையான +தோற்றத்தின் சார்பினாலோ, எதனாலோ, என் செய்யுளிலும் சிறித கடுமை +புகுந்து கொண்டது. நான் இயற்றிய செய்யுள் திரிபாக அமைந்தது. நான் அதை +முடித்துத் தம்பிரானிடம் சொல்லிக் காட்டினேன். + + + +“மருத மரத்து நிழலூடு வெள்ளை மணலிருப்பும் + +பொருத மரப்பொன்னுப் பிள்ளைவெங் காவல் புரிந்துஞற்றும் + +விருதம ரற்புத வூற்று டலும்நிதம் மேவப்பெற்றால் + +கருத மரக்க னரமாத ரோடிருக் கையினையே.” + + + +மருதமரத்தின் நிழலுக்கிடையில் உள்ள வெள்ளை மணலாகிய இடமும் +யாருடனும் போராடி முழங்கும் முழக்கத்தையுடைய பொன்னுப் பிள்ளை +வலியக் காவல் புரிந்து அமைக்கும் சிறப்புப் பொருந்திய அற்புதமான ஊற்றில் +நீராடுதலும் தினந்தோறும் பெறுவதாயிருந்தால் அரம் போன்ற கண்ணையுடைய +தேவ மகளிரோடு வாழ்வதையும் பெரிதாக நினைக்க மாட்டோம். +[பொரு தமரம் - போர் செய்யும் முழக்கம். விருது - சிறப்பு. கருதம் - +கருதோம். அரமாதர் - தேவ மகளிர்.] + + + +“பாட்டுடைத் தலைவனது இயல்பில் கொஞ்சம் பாட்டுக்கும் +வந்துவிட்டது போலும்!” என்று சொல்லிக் கொண்டே தம்பிரான் சிரித்தார். +பிறகு, பொன்னுப் பிள்ளையை அழைத்து, “உன்னுடைய வேலையையும் +உன���னையும் புகழ்ந்து இவர்கள் பாடியிருக்கிறார்களே? கேட்டாயா?” என்றார். +நான் அந்தப் பாட்டைச் சொன்னேன். ‘பொன்னுப் பிள்ளை’ என்பதை +மாத்திரம் அழுத்தமாகச் சொன்னேன். அவனுக்கு அந்தப் பாட்டில் வேறு +என்ன தெரியப் போகிறது? அந்தப் பெயர் காதில் விழுந்த போது அவனை +அறியாமலே ஒரு புன்னகை அவன் முகத்தில் உண்டாயிற்று. “பேஷ்; +அருமையாக இருக்கிறது” என்று தம்பிரான் சொல்லிச் சிரித்தார். “என் பாட்டு +அருமையா? அவன் சிரிப்பு அருமையா?” என்ற விஷயத்தில் எனக்குச் சிறிதும் +சந்தேகமே இல்லை. + + + +“ஐயா அந்த ஊற்றில் ஸ்நானம் செய்யலாம்; சுத்தமாக இருக்கிறது” +என்று என்னைச்சுட்டி அந்தக் காவற்காரன் சொன்னான். + + + +“பாட்டுடைத் தலைவன் அளிக்கும் பரிசு அது தான்” என்றார் +தம்பிரான். + + + +ரெயில் பாட்டு + + + +குமாரசாமித் தம்பிரான் தெற்குக் குளப்புரையின் நாற்புறத்துமுள்ள +பூந்தோட்டத்தில் பலவகையான புஷ்பச் செடிகள் வைத்துப் பாத்திகட்டி மரு, +மருக்கொழுந்து முதலியவற்றை மிகுதியாகப் பயிர்செய்து அருகிலுள்ள +ஸ்தலங்களுக்கும் அனுப்புவார்; என் தந்தையாரது பூஜைக்கும் நாள்தோறும் +அனுப்புவார். + + + +சிதம்பரம் ஸ்ரீ நடராஜமூர்த்திக்கு அவைகளை எடுத்துச் சென்று சாத்தச் +செய்ய வேண்டுமென்று தம்பிரான் எண்ணினார். ஒரு நாள் பெரிய குடலை +கட்டி மருவையும் மருக்கொழுந்தையும் எடுக்கச் செய்து அதில் வைத்துச் சில +தம்பிரான்களையும் என்னையும் உடனழைத்துக் கொண்டு சிதம்பரத்தை +நோக்கிப் புறப்பட்டார். பகல் பன்னிரண்டு மணிக்கு ரெயில் வண்டியிலேறிச் +சென்றோம். ரெயில் வண்டி புதிதாக வந்த காலமாதலின் அதில் ஏறிச்செல்வது +விநோதமாக இருந்தது. அதிகக் கூட்டமே இராது. வண்டிக்கு இரண்டு +பேர்களுக்குமேல் இருப்பது அருமை. நாங்கள் சிறிதுநேரம் எங்கள் +இஷ்டம்போல் தனித்தனி வண்டிகளில் ஏறிச் சிரமபரிகாரம் செய்து +கொண்டோம். பிறகு ஒன்றாகக் கூடி ஓரிடத்தில் அமர்ந்து பேசிக் +கொண்டிருந்தோம். யாவரும் ஒன்றாகப் படித்தவர்களாதலால் வேடிக்கையாகப் +பல விஷயங்களைப் பற்றிப் பேசினோம். ரெயில் வண்டியில் பிரயாணம் +செய்வதைப் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாடல் செய்ய வேண்டுமென்று +செய்யத் தொடங்கினோம். எல்லோரும் செய்யுள் இயற்றத் தெரிந்தவர்கள். +ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் அபிப்பிராயத்தை வைத்துப் பாடல் இயற்றிச�� +சொன்னார்கள் ஒரே பொருளைப் பற்றிய பல வகையான கருத்துக்களமைந்த +பாடல்களாதலின் அவை ரஸமாக இருந்தன. நான் இரண்டு மூன்று +செய்யுட்களை இயற்றிச் சொன்னேன். அவற்றில் ஒரு வெண்பாவின் முற்பகுதி +மாத்திரம் இப்போது ஞாபகத்தில் இருக்கிறது. + + + +“உன்னலாம் தூசும் உடுக்கலாம் நித்திரையும் + +பண்ணலாம் நூல்கள் படிக்கலாம்,,,,” + + + +ஒரு கற்பனை + + + +பிற்பகலில் சிதம்பரத்தை அடைந்து மாலைக் காலத்தில் ஆலயத்துக்குச் +சென்று ஸ்ரீ நடராச மூர்த்தியைத் தரிசித்தோம். குமார சாமித் தம்பிரான் தாம் +கொண்டு வந்திருந்த மருவையும், மருக் கொழுந்தையும் ஒரு தீக்ஷிதரிடம் +அளித்து அலங்காரம் செய்யச் சொன்னார். அவர் நடராஜமூர்த்தியின் +திருமேனி முழுவதும் அவற்றைக் கொண்டு அலங்கரித்துத் தீபாராதனை +செய்தார். “இறைவன் திருமேனி முழுவதும் உமா தேவியார் கொண்டதுபோல் +பச்சையாக இருக்கிறது” என்று சொல்லிக் குமாரசாமித் தம்பிரான் மகிழ்ந்தார். +நான் அது சம்பந்தமாக ஒரு செய்யுளை இயற்றிக் கூறினேன். அலங்காரம் +செய்த பத்திரத்தின் பெயராகிய மருவென்பதற்கு வாஸனை என்றும் ஒரு +பொருள் உண்டு. அந்தச் சொல்லுக்குரிய இரு பொருளை வைத்து ஒரு +கற்பனை செய்தேன். “சிதம்பர ஸ்தலத்தில் எழுந்தருளிய இறைவன் ஆகாசமே +திருமேனியாகவுடையவன். ஆகாசத்திற்கு ஒலி உரியதே ஒழிய மரு (மணம்) +இல்லையென்று ஆன்றோர் கூறுவர். அவர்கள் நாணமுற ஸ்ரீ குமார சாமித் +தம்பிரான் ஆகாச வடிவினராகிய சிவபெருமானுக்கு மருவை அளித்தார்” என்ற +கருத்தை உடைய அச்செய்யுள் வருமாறு: + + + +“திருவென்றும் நின்றொளிரும் துறைசையிற்சுப் + +         பிரமணிய தேவற் கன்பிற் + +பொருவென்று மின்றியொளி ருங்குமர + +         சாமிமுனி புங்க வன்றான் + +மருவென்றும் வெளிக்கிலையென் பார்நாணத் + +         தில்லைவெளி மன்றில் மேனி + +அருவென்று முருவென்றுஞ் சொலநடிப்பார்க் + +         கின்றுமரு அளித்தான் மன்னோ” + +[ பொரு - ஒப்பு. மரு - மணம். வெளிக்கு - ஆகாசத்திற்கு. இலை +என்பார் - இல்லை என்கிற பூமியானது.] + + + +இச்செய்யுளைக் கேட்ட தம்பிரான்களும் பிறரும், “கற்பனை +நன்றாயிருக்கிறது” என்று சொன்னார்கள். + + + +“நீங்கள் நினையாமலே வேறு நயம் ஒன்று இந்தப் பாட்டில் +அமைந்திருக்கிறது” என்று குமாரசாமித் தம்பிரான் சொல்லவே, “என்ன அது?” +என்றேன். + + + +“மரு என்றும் வெளிக்கிலை என்பார் நாண என்பதற்கு, வாசனை +எப்பொழுதும் ஆகாசத்துக்கு இல்லை என்று சொல்லுபவர்கள் நாணும்படி +என்பதுதானே நீங்கள் நினைத்து அமைத்த பொருள்?” + + + +“ஆம்.” + + + +“வாஸனை ஆகாயத்திற்கு இல்லை, எனக்கே உண்டு என்று சொல்லிச் +செருக்கடையும் பூமி நாணும்படி என்று வேறு பொருள் ஒன்றும் கொள்ளும்படி +உங்கள் வாக்கு அமைந்திருக்கிறது. பிருதிவியின் குணம் கந்தமென்பது +சாஸ்திரக் கருத்தல்லவா?” என்றார் அவர். அவர் கூறியதைக் கேட்டு யாவரும் +மகிழ்ந்தோம். + +------------ + + + + + + 78. குறை நிவர்த்தி + + + +திருவாவடுதுறையில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்தேன். சுப்பிரமணிய +தேசிகர் தாம் உத்தேசித்தபடியே திருப்பெருந்துறைக்கு வந்து சேர்ந்தார். +சில தினங்களுக்குப் பிறகு தேசிகரிடமிருந்து +தந்தையார் முதலியவர்களோடு திருப்பெருந்துறைக்கு வந்து சில காலம் இருக்க +வேண்டுமென்று எனக்கு ஓர் உத்தரவு வந்தது. எங்களுக்கு வேண்டிய +சௌகரியங்களைப் பண்ணுவித்து அனுப்ப வேண்டுமென்று காறுபாறு +கண்ணப்பத் தம்பிரானுக்கும் திருமுகம் வந்தது. நான் என் தாய் தந்தையரை +அழைத்துக்கொண்டு திருப்பெருந்துறையை நோக்கிப் புறப்பட்டேன். காறுபாறு +தம்பிரான் சௌகரியங்கள் செய்து அனுப்பும்போது, “காட்டு மார்க்கமாக +இருக்கும்; ஆனாலும் அங்கங்கே இருக்கும் மடபதிகள் கவனித்துக் +கொள்வார்கள்” என்று என் தந்தையாரை நோக்கிக் கூறினார். நான், “நாட்டுச் +சாலைவழியே போவதனால் அஸௌகரியம் நேராது” என்று சிலேடையாகச் +சொன்னேன். நாட்டுச் சாலை யென்பது நாங்கள் போகவேண்டிய வழியில் +பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள மடத்துக்குரிய பெரிய கிராமம். + + + +நாங்கள் திருப்பெருந்துறையை அடைந்தோம். எங்களுக்காகத் தனி +விடுதி ஒன்று அமைக்கப் பெற்றிருந்தது. சுப்பிரமணிய தேசிகரது +தரிசனத்தையும் சல்லாபத்தையும் பெற எண்ணிப் பல பிரபுக்களும் +வித்துவான்களும் வந்து வந்து சென்றார்கள். சிங்கவனம் சுப்பு பாரதியார், +வேம்பத்தூர்ப் பிச்சுவையர், மணமேற்குடி கிருஷ்ணையர், மேலகரம் திரிகூட +ராசப்பக் கவிராயர் முதலிய வித்துவான்களுடன் பழகி இன்புற்றேன். + + + +பிச்சுவையர் + + + +பிச்சுவையர் சிறந்த ஆசுகவி. அவர் சுப்பிரமணிய தேசிகரைப் புகழ்ந்து +தாம் நூதனமாக இயற்றிய பாடல்களையும் வேறு சமயோசிதப் பாடல்களையும் +சொல்லிக் காட்டினார். நான் வினோதார்த்தமாகச் சில ���ில ஆக்ஷேபங்களைச் +செய்தேன். அவர் சில சில இடங்களில் சிலேடையை உத்தேசித்து +வார்த்தைகளின் உருவத்தை மாற்றியிருந்தார். இயல்பான இலக்கண வரம்புக்கு +உட்படாமல் புறநடையின் சார்பை ஆராயவேண்டிய சில பிரயோகங்களைச் +செய்திருந்தார். நான் ஆக்ஷேபித்தபோது சுப்பிரமணிய தேசிகர் +அவ்வாக்ஷேபங்கள் உசிதமானவை என்பதைத் தம் புன்னகையால் தெரிவித்தார். +பிச்சுவையர், “அவசரத்திற் பாடும் செய்யுட்களில் இவ்வளவு இலக்கணம் +பார்த்தால் முடியுமா?” என்று சொல்லிவிட்டு உடனே பின்வரும் பாடலைச் +சொன்னார்: + + + +“விஞ்சுதலை யார்சேட வித்தகனென் றாலுநின்முன் + +அஞ்சு தலையுடைய னாவனால்-விஞ்சுபுகழ்க் + +கோமுத்தி வாழ்சுப் பிரமணியக் கொண்டலே + +மாமுத் தியைவழங்கு வாய்.” + + + +[மிக்க தலையையுடைய ஆதிசேஷனாக இருப்பினும் உன் முன்னால் +ஐந்து தலையுடையவனாகிக் குறைவடைவான் என்றும், மேன்மையை உடைய +ஆதிசேஷனும் நின் முன்னால் பயத்தை யுடையவனாவான் என்றும் முன் +இரண்டடிகளுக்கு இரண்டு பொருள்கள் தோற்றின. விஞ்சுதல் - மிகுதல்.] + + + +அவ்வளவு விரைவில் சிலேடை நயம் தோற்றும்படி அவர் சொன்ன +பாடல் எங்களைப் பிரமிக்கச் செய்து விட்டது. + + + +ஒரு கனவான் + + + +தேசிகரைப் பார்க்கவரும் கனவான்களிற் பெரும்பாலோர் தமிழ்க் கல்வி +யறிவுடையவர்களாகவே இருப்பார்கள். தேசிகர் முன்னிலையில் எப்போதும் +தமிழ் முழக்கம் விடாமல் இருப்பதை அறிந்த சிலர் அவர் திருவுள்ளக் +குறிப்பை அறிந்து மாணாக்கர்களைப் பாடல்கள் சொல்லும்படி கேட்பதும் +அவர்களை வினாவிப் பரீட்சை செய்வதும் உண்டு. கோட்டூரிலிருந்த பெருஞ் +செல்வராகிய ரங்கசாமி முதலியாரென்னும் கனவான் தம் குடும்பத்தோடும், +உறவினர்களோடும் ஸேதுஸ்நானத்திற்குச் சென்று திரும்புகையில் திருப் +பெருந்துறைக்கு வந்து தேசிகரைத் தரிசித்துக் கொண்டார். அவர் நல்ல தமிழ்ப் +பயிற்சியுடையவர். அவருடன் வந்திருந்த வேறொரு கனவான் பல தமிழ் +நூல்களில் சிறந்த பயிற்சியுடையவராகத் தோன்றினார். கம்பராமாயணத்தில் +நல்ல பழக்கம் அவருக்கு இருந்தது. அவர்கள் தேசிகருடன் +பேசிக்கொண்டிருந்தபோது தேசிகர் மாணாக்கர்களை அழைத்து அவர்களுக்குப் +பழக்கம் செய்வித்தார். அக்கனவான் கம்ப ராமாயணத்தில் எங்களைச் சில +கேள்விகள் கேட்டார். அக்கேள்விகளிலிருந்தே அவருடைய கல்வியறிவு புலப் +பட்டது. பெ��ும்பாலும் என்னையே வினாவினார். நான் திருப்தியாக +விடையளித்தேன். + + + +புராண பாடம் + + + +காஞ்சிப் புராணத்தை ஒருமுறை பாடங் கேட்க வேண்டுமென்ற +விருப்பம் எனக்கு உண்டாயிற்று. பிள்ளையவர்கள் காலத்தில் புஸ்தகம் +கிடைக்காமையால் அதை நான் படிக்க முடியவில்லை. அது குறையாகவே +இருந்தது. அந்நூலின் முதற் காண்டம் ஸ்ரீ சிவஞான முனிவராலும் இரண்டாங் +காண்டம் ஸ்ரீ கச்சியப்ப முனிவராலும் இயற்றப் பெற்றவை. என் விருப்பத்தைச் +சுப்பிரமணிய தேசிகரிடம் தெரிவித்தபோது அவர் ஏட்டுப் புஸ்தகத்தை +வருவித்து அளித்துச் சின்னப்பண்டார ஸந்நிதியாகிய ஸ்ரீ நமசிவாய +தேசிகரிடத்திற் பாடங் கேட்கலாமென்று சொன்னார். அப்படியே கேட்கத் +தொடங்கினேன். + + + +நமசிவாயதேசிகர் பிள்ளையவர்களிடம் படித்தவர். எப்பொழுதும் தமிழ் +நூல்களை ஒழுங்காக ஆராய்ந்து படித்துவருபவர். சைவசாஸ்திர நுட்பங்களை +நன்கு உணர்ந்தவர். மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்வதையே பொழுது +போக்காக உடையவர். அவரிடம் தினந்தோறும் காஞ்சிப் புராணத்தைப் பாடம் +கேட்டு வந்தேன். சிவஞான முனிவர் வாக்குக்கும் கச்சியப்ப முனிவர் +வாக்குக்கும் மிக்க வேற்றுமை உண்டு. சிவஞான முனிவர் வாக்கில் கருத்தும், +கவியும் ஒன்றோடு ஒன்று பின்னிச் செல்கின்றன. இயல்பாகச் செல்லும் கவியின் +கதியில் கருத்துக்கள் தாமே வந்து பொருந்திச் சுவைபட இசைந்து நிற்கின்றன. +இரண்டாங் காண்டத்தில் கச்சியப்ப முனிவர் தம் அறிவாற்றலை +வெளிப்படுத்தியிருக்கிறார். சங்க நூல்களிலுள்ள கருத்துக்களையும் +சொற்களையும் எடுத்து ஆளுகின்றார். இலக்கண மேற்கோளாகக் காட்டப் +பெறும் அரிய சொற்றொடர்ப் பிரயோகங்களை அவர் வாக்கிலே மிகவும் +காணலாம். சிவஞான முனிவர் வாக்கில் நம்மை மறந்த இன்பம் உண்டாகிறது. +கச்சியப்ப முனிவர் வாக்கில் அவரது உன்னதமான அறிவாற்றலை நினைந்து +வியப்படைகிறோம். + + + +காஞ்சிப்புராணம் பாடம் கேட்டு முற்றுப்பெற்றவுடன் கச்சியப்ப முனிவர் +வாக்காகிய பேரூர்ப் புராணத்தைக் கேட்டேன். அது முடிந்தவுடன் மீட்டும் ஒரு +முறை அவ்விரண்டு நூல்களையும் பாடம் கேட்டேன். + + + +மாணிக்கவாசகர் ஆலய கும்பாபிஷேகம் + + + +அக்காலத்தில் திருப்பெருந்துறைக் கட்டளை விசாரணை செய்து வந்த +ஸ்ரீ சுப்பிரமணியத் தம்பிரான், கோயில் முகற்பிராகாரத்தின் மேல்புறமாக ஓர் +ஆலயம் க��்டுவித்து அதில் மாணிக்கவாசகர் திருவுருவத்தைப் பிரதிஷ்டை +செய்து கும்பாபிஷேகம் நடத்தினார். மகா வைத்தியநாதையர் தமையனாராகிய +இராமசாமி ஐயர் முன்பே பெரிய புராணக் கீர்த்தனம் இயற்றியிருந்தார். அதில் +சைவ சமயாசாரியர்களாகிய மூவர் சரித்திரமும் அடங்கியுள்ளன நான்கு +சைவசமயாசாரியர்களில் மாணிக்கவாசகர் சரித்திரம் தமிழ்க் கீர்த்தனையாக +இராமையால் அதனை அவர் தனியே கீர்த்தனை உருவத்தில் இயற்றி அங்கே +அரங்கேற்றினார். அப்போது கும்பாபிஷேகச் சிறப்பைப் பற்றியும் +மாணிக்கவாசகர் சரித்திரத்தைப் பற்றியும் நாங்கள் தனித்தனியே பல பாடல்கள் +இயற்றிப் படித்துக் காட்டினோம். + + + +திருப்பனந்தாள் + + + +பிறகு திருவாவடுதுறைக்குப் புறப்படவேண்டும் என்று தீர்மானித்த +தேசிகர் அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யலாயினர். என் தாய் +தந்தையரைத் திருவாவடுதுறைக்கு முன்னதாக +அனுப்பிவிட்டு நான் மாத்திரம் தேசிகருடன் இருந்தேன். திரும்புகையில் +திருப்பனந்தாளுக்கு எழுந்தருள வேண்டும் என்று இராமலிங்கத் தம்பிரான் +விண்ணப்பித்துக் கொண்டமையால் தேசிகர் அவர் விருப்பத்துக்கிணங்கித் +திருப் பெருந்துறையிலிருந்து பரிவாரங்களுடன் புறப்பட்டு வழியே உள்ள பல +ஊர்களிலும் அடியார்கள் செய்யும் உபசாரத்தைப் பெற்றுக் கும்பகோணத்தின் +வழியாகத் திருப்பனந்தாளை அடைந்தார். + + + +சுப்பிரமணிய தேசிகர் வரவையறிந்து சாலையின் இருபுறங்களிலும் பல +மைல் தூரத்திற்கு வாழை மரங்களும் தோரணங்களும் கட்டி இராமலிங்கத் +தம்பிரான் அலங்காரம் செய்திருந்தார். திருப்பனந்தாள் மடத்திற்குள் ஒரு +பெரிய பங்களாவை மூங்கிலால் அமைத்தார். அதைப் பார்த்தபோது கற் +கட்டிடம் போலவே தோற்றியது. + + + +சுப்பிரமணிய தேசிகர் அங்கே தங்கினார். ஸ்ரீ இராமலிங்கத் தம்பிரான் +செய்த உபசாரம் இன்னபடியிருந்தது என்று சொல்வதற்கரியது. பாட்டுக் +கச்சேரிகள் நடைபெற்றன. பல தமிழ் வடமொழி வித்துவான்கள் வந்து +சுப்பிரமணிய தேசிகர் அங்கே எழுந்தருளிய சிறப்பைப் பாராட்டிப் +பாடினார்கள். நானும் வேறு மாணாக்கர்களும் தேசிகரையும் இராமலிங்கத் +தம்பிரானையும் புகழ்ந்து பல பாடல்கள் இயற்றினோம். எல்லாம் ‘பல புலவர் +செய்யுட் டிரட்டு’ என்ற பெயரோடு சேர்க்கப் பெற்று ஒரு புஸ்தக வடிவமாக +அக்காலத்தில் அச்சிடப்பெற்றன + + + +திருவாவடுதுறை திரும்பியது + + + +திருவாவடுதுறை ஆலய உத்ஸவமும் குருபூஜையும் சமீபித்தமையால் +தேசிகர் பல நாட்கள் திருப்பனந்தாளில் தங்க முடியவில்லை. சில நாளிருந்து +பிறகு புறப்பட்டுத் துறைசையை அடைந்தார். குரு பூஜை முதலியன சிறப்பாக +நடைபெற்றன. தேசிகர் யாத்திரையினால் நேர்ந்த சிரமத்தை ஆற்றிக் +கொண்டும் வழக்கமாக நடை பெறுவனவற்றைக் கவனித்தும் வந்தார். +யாத்திரையினிடையே அங்கங்கே சந்தித்துப் பழகிய பல கனவான்களுக்குக் +கடிதங்கள் எழுதச் செய்தார். இடையிடையே மாணாக்கர்களுக்குப் பாடம் +சொல்வதும் உண்டு. + + + +பாடம் கேட்டல் + + + +ஒய்ந்த நேரங்களில் நமசிவாய தேசிகரிடம் நான் தமிழ்நூல்களைப் +பாடம் கேட்டு வரலானேன். மாணாக்கர்கள் பலருக்குப்பாடமும் சொல்லி +வந்தேன். நமசிவாய தேசிகர் சிறிதும் ஓய்வின்றிப் பாடம் சொல்லுவார். +அதில் அவருக்குச் சலிப்பே இராது. +மற்றவர்களுக்கு அவர் பாடம் சொல்லும்போதும் நான் உடனிருந்து கேட்டு +வருவேன். அவர் விருப்பப்படி நானும் அவர் முன்னிலையில் சிலருக்குப் +பாடம் சொல்வேன். எந்த விஷயத்திலும் கண்டிப்பாக இருக்கும் அவர் பாடம் +சொல்லும் போது நான் இராவிட்டால் உடனே அழைத்து வரச் செய்வார். + + + +ஊசி மிளகாய் + + + +ஒரு நாள் பகற்போசனத்திற்கு மேல் தெற்குக் குளப்புரைத் +தோட்டத்தில் நமசிவாய தேசிகர் சில மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லி +வந்தார். உண்ட இளைப்பால் நான் ஓரிடத்தில் படுத்து உறங்கி விட்டேன். +பாடம் நடைபெறும்போது நான் அருகில் இராமையைக் கண்ட நமசிவாய +தேசிகர் உடனே என்னை அழைத்து வரும்படி ஒருவரை அனுப்பினார். +அவருடைய ஆஞ்ஞையை மறுத்துப் பேச யாருக்கும் தைரியம் இராது. என்னை +அழைக்க வந்தவர்கள் நான் தூங்கின இடத்தை அடைந்தார். அயர்ந்து தூங்கிய +என்னைக் கூப்பிட்டுப் பார்த்தார்; நான் எழவில்லை பிறகு தட்டி எழுப்பினார். +விழித்துக் கொண்டேன். ஆயினும் எனக்கிருந்த சிரமம் நீங்கவில்லை; பாதித் +தூக்கத்தில் எழுந்தமையால் சிரமம் அதிகமாயிற்று. + + + +“பிறருடைய கஷ்டம் தெரியவில்லையே; இப்படி நிர்ப்பந்திக்கிறார்களே!” +என்ற எண்ணம் எனக்கு உண்டாயிற்று. என் வருத்தத்தை நான் வெளிப்படுத்த +முடியுமா? அல்லது அப்போது போகாமல் தான் இருக்க முடியுமா? + + + +நான் நடந்து சென்றேனே ஒழிய என் கால்கள் தள்ளாடின. கண் +இமைகளைத் தூக்கத்தின் கனம் ��ீழே இழுத்தது. போகும் வழியில் ஊசி +மிளகாய்ச்செடி ஒன்றிருந்தது. அதிலிருந்து ஒரு பழத்தைப் பறித்துக் கசக்கி என் +கண்களில் தடவிக் கொண்டேன். எனக்கிருந்த வருத்தம் மேல் விளைவை +எண்ணாத நிலையில் என்னை வைத்தது. + + + +மிளகாயைத் தடவிக்கொண்டதுதான் தாமதம்; கண்கள் முழுவதும் ஒரே +எரிச்சலாக எரிய ஆரம்பித்து விட்டன. தேளுக்கு அஞ்சிப் பாம்பின் வாயிலே +புகுந்த கதையாயிற்று என் நிலை. என்னால் மேலே நடக்க முடியவில்லை. கீழே +உட்கார்ந்து விட்டேன். + + + +என்னுடைய செய்கையை அறிந்து யாவரும் வருந்தினார்கள். என் +நண்பர்கள் மாத்திரம் எனக்கு அப்போது எவ்வளவு சிரமம் இருந்திருக்க +வேண்டுமென்பதை ஊகித்துக் கொண்டனர். + + + +சைவ சாஸ்திரம் கேட்டல் + + + +நடசிவாய தேசிகர் பாடம் சொல்லும்போது சைவ சாஸ்திர விஷயங்கள் +வந்தால் அவர் மேற்போக்காகச் சொல்லிவிட்டு விடுவார். சைவ சித்தாந்த +நூல்களைத் தனியே படிக்க வேண்டுமென்பது அவர் கருத்து. +பிள்ளையவர்களிடம் நான் பாடம் கேட்ட காலத்தில் அங்கங்கே வரும் +சாஸ்திரக் கருத்துக்களை நன்றாகத் தெரிந்து கொண்டேன். சுப்பிரமணிய +தேசிகர் யாருக்கேனும் சிவஞான போத பாஷ்யத்தைச் சொல்ல நேரும்போது +என்னையே படித்துக்காட்டச் சொல்வார். இருப்பினும் சிவஞான போதச் +சிற்றுரை முதலிய சித்தாந்த சாஸ்திரங்களை முறையாகக் கேட்டால் நலமாக +இருக்குமென்பது என் எண்ணம். + + + +நமசிவாய தேசிகருக்கு ஓய்வு இல்லை. என் கருத்தை ஸ்ரீ சுப்பிரமணிய +தேசிகர் எப்படியோ உணர்ந்தனர். என்னை ஒரு நாள் அழைத்து, “நாமே +உமக்குச் சிற்றுரை முதலியவற்றைப் பாடம் சொல்வோம். படிக்க வேண்டுமென்ற +ஆவலுள்ள உம்மை விடத் தக்க பாத்திரம் வேறு யார் இருக்கிறார்கள்?” என்று +சொல்லிச் சித்தாந்த நூல்களை முறையாகக் கற்பிக்கக் ஆரம்பித்தார். சிவஞான +போதச் சிற்றுரை, சிவஞான சித்தியார் பொழிப்புரை முதலிய பல நூல்களையும், +வேறு சில கருவி நூல்களையும் கேட்டு எனக்குள்ள குறையை நிவர்த்தி செய்து +கொண்டேன். + +--------------- + + + + + 79. பாடும் பணி + + + +திருவாவடுதுறையில் என் பொழுதுபோக்கு மிக்க இன்பமுடையதாக +இருந்தது. பாடம் சொல்வதும், படிப்பதும், படித்தவர்களோடு பழகுவதும் +நாள்தோறும் நடைபெற்றன. சுப்பிரமணிய தேசிகருடைய சல்லாபம் +எல்லாவற்றிற்கும் மேலான இன்பத்தை அளித்தது. + + + +தேசிகர் தினந்தோறும் அன்பர்களுக்குக் கடிதம��� எழுதுவார். ஒவ்வொரு +நாளும் ஐம்பதுக்குக் குறையாமல் கடிதங்கள் எழுதப் பெறும். ஒவ்வொன்றுக்கும் +உரிய விஷயத்தை ராயசக்காரர்களிடம் நிதானமாகச் சொல்லுவார்; தாமும் +எழுதுவார். ராயசக்காரர்கள் தேசிகர் கருத்தின்படியே எழுதக்கூடிய +திறமையுள்ளவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் தலைவராக +இருந்தவர் ஸ்ரீ சிவசுப்பிரமணிய பிள்ளை என்பவர். இடையிடையே +வந்தவர்களுடன் பேசுவது, அவர்கள் குறையைக் கேட்டு நீக்குவது +முதலியவற்றிலும் தேசிகர் கவனம் செலுத்துவார். இவற்றால் ஒரு குறிப்பிட்ட +காலத்தில் போசனம் செய்வது என்ற வரையறை அவருக்கு இல்லாமற் +போயிற்று. தேக நலத்தைக் கவனியாமல் இப்படியிருந்தமையால் அஜீரணமும் +இருமலும் அவருக்கு உண்டாயின. கண்களில் ஒளிக்குறைவு ஏற்பட்டது. +ஒன்றையும் பாராட்டாமல் அவர் வழக்கம்போல எல்லா வேலைகளையும் +கவனித்து வந்தார். + + + +வித்துவான் யாரேனும் வந்தால் கல்வி சம்பந்தமான பேச்சிலேயே +பொழுது போகும். திராவிட மகாபாஷ்யம் முதலிய நூல்களிலிருந்து தேசிகர் +செய்திகளை எடுத்துச் சொல்லுவார். அப்போது என்னை அந்நூற்பகுதிகளைப் +படித்துக் காட்டச் சொல்லுவார். ஏட்டில் இன்ன பக்கத்தில் இன்ன விஷயம் +உள்ளது என்று குறிப்பிடுவார். அப்போது எனக்கு மிக்க வியப்பு உண்டாகும். +படித்துப் படித்து அவர் பழகியிருந்தமையால் பக்கம் முதற்கொண்டு தெளிவாக +அவர் ஞாபகத்தில் இருந்தது. இத்தகைய நிலையில் நான் அதிக நேரம் +தேசிகரோடு இருக்க நேர்ந்தது; அதனால் மிக்க திருப்தியடைந்தேன். + + + +மொழி பெயர்ப்பு + + + +சில சமயங்களில் தேசிகர் சில கருத்துக்களைக் கூறி அவற்றை +அமைத்துப் பாடல்கள் இயற்றும்படி எனக்குக் கட்டளையிடுவார். செய்யுட்களை +நான் உடனே இயற்றிச் சொல்லிக் காட்டுவேன். வடமொழி வித்துவான் +யாரேனும் வந்து பழைய சுலோகம் ஏதாவது சொல்வார். அது நல்ல +சுவையுடையதாக இருந்தால் சுப்பிரமணிய தேசிகர் என்னைப் பார்ப்பார். அவர் +குறிப்பையறிந்து நான் உடனே அதனைத் தமிழ்ச் செய்யுளாக மொழி +பெயர்த்துக் கூறுவேன். வடமொழி வித்துவான் அதைக் கேட்டு மகிழ்வதோடு +மடத்தின் பெருமையைப் பாராட்டிப் பேசுவார். சில நாட்களில் இரவு நான் +வீட்டுக்குப் போகும்போது தேசிகர் சில சுலோகங்களையோ, புதிய +விஷயங்களையோ சொல்லுவார். அவற்றை இரவில் தமிழ்ச் செய்யுளாக இயற்றி +மறுநாட��காலையில் தேசிகரிடம் சொல்லி அவரை இன்புறுத்துவேன். + + + +போஜ சரித்திரம் + + + +ஒரு நாள் வடமொழி வித்துவானொருவர் மடத்திற்கு வந்திருந்தார். +அவர் போஜ சரித்திரத்திலிருந்து சில சுலோகங்களைச் +சொல்லிப் பொருள் கூறினார். எல்லாம் மிக்க சுவையுள்ளனவாக +இருந்தன. ஒரு சுலோகத்தைச் சொல்லிவிட்டு, “போஜ மகாராஜ, உன்னை +எல்லோரும் கொடையிற் சிறந்தவனென்று கூறுவதற்கு என்ன காரணம்? பர +நாரியர்களுக்கு உன் மார்பையும் பகைவர்களுக்கு உன் முதுகையும் ஈய +மாட்டாய்” என்று அதன் கருத்தையும் சொன்னார். உடனே நான் அக் +கருத்தை ஒரு கட்டளைக் கலித்துறையில் அமைத்துச் சொன்னேன். அது +வருமாறு:- + + + +“கொடையிற் சிறந்தனை யென்றுனை யாவருங் கூறலென்னே + +நடையிற் சிறந்த பரநா ரியரொடு நண்ணலர்க + +ளிடையிற் சிறந்தமை முன்னொடு பின்னின்று மீந்திலைநீ + +தொடையிற் சிறந்த புயபோஜ ராஜ சுகோதயனே.” + + + +[பரநாரியர் - வேறு மகளிர். நண்ணலர்களிடையில் - பகைவர் +கூட்டத்தினிடையே. சிறந்து அமை முன்னொடு - சிறந்து அமைந்த மார்போடு. +பின் - முதுகு. தொடை - மாலை. பரநாரியருக்கு முன்னும், நண்ணலர்களுக்குப் +பின்னும் ஈந்திலையென்று நிரனிறையாக நின்றது.] + + + +இந்தப் பாட்டில் ‘முன்னொடு பின் இன்றும் ஈந்திலையென்ற பகுதிக்கு, +மார்போடு முதுகை இன்றும் ஈயவில்லையென்ற பொருளோடு, முன்னும் +பின்னும் இன்றும் ஈயவில்லை என முக்காலப் பெயரும் தோற்றும்படி வேறொரு +பொருளும் அமைந்துள்ளது. அதை யறிந்து சுப்பிரமணிய தேசிகர், +“நன்றாயிருக்கிறது. முன்னொடு பின் என்பவற்றோடு இன்றும் என்பதைச் +சேர்த்ததுதான் ரஸம்” என்று சொல்லி மகிழ்ந்தார். + + + +மற்றொரு நாள் வேறு வித்துவானொருவர் வந்தபோது அவர் சில +சுலோகங்களைச் சொன்னார். போஜ மகாராஜன் ஒரு நாள் வீதி வழியே +செல்லும் போது எதிரே ஒரு பிராமணன் தோற்பையொன்றில் ஜலம் எடுத்து +வந்தானாம். அதைக் கண்டு, “இவன் தோற்பையில் ஜலம் எடுப்பதற்குக் +காரணமென்ன? அனாசாரமல்லவோ?” என்றெண்ணிய அரசன் உடன் வந்த +மந்திரியைக் கண்டு விஷயத்தை விசாரிக்கச் செய்தான். போஜராஜனுடைய +பார்வையினால் கவித்துவ சக்தியைப் பெற்ற அப்பிராமணன் உடனே அரசனை +நோக்கி விடையாக ஒரு சுலோகத்தைச் சொன்னானாம். “போஜ ராஜனே! நீ +உன் பகைவரைச் சிறைப்படுத்தி அவர் காலில் விலங்கிடுவதால் இந்நாட்டில் +உள்ள இரும்பெல்லாம் செலவாயின. உன்பால் வந்த வித்துவான்கள் +முதலியவர்களுக்குத் தானங்கள் வழங்கி அவற்றைக் குறிக்கும் +தானசாஸனங்களைத் தாமிரப் பட்டயத்தில் பொறித்துக் கொடுக்கவே தாமிரமும் +இலதாயிற்று. நான் வேறு எந்தப் பாத்திரத்தில் ஜலம் எடுப்பேன்?” என்ற கருத்தமைந்தது அந்தச் +சுலோகம். ஸம்ஸ்கிருத வித்துவான் சுலோகத்தைச் சொல்லிவிட்டு மிகவும் +ரஸமாகப் பொருளை எடுத்துரைத்தார். சுப்பிரமணிய தேசிகர் கேட்டு +மகிழ்ந்ததோடு என்னைப் பார்த்து, “எப்படியிருக்கிறது?” என்று வினவினார். +நான் அவர் குறிப்பையறிந்து, “மிகவும் நன்றாக இருக்கிறது” என்று +சொல்லிவிட்டு உடனே அக்கருத்தை அமைத்துப் பின் வரும் செய்யுளை +இயற்றிச் சொன்னேன்:- + + + +“நேரார் பதத்துப் புனைவிலங் காலயம் நீங்கினநிற் + +சேரா துலர்க்கருள் சாஸனத் தாற்செம்பு தீர்ந்தவென்றால் + +ஏரார்நின் னாட்டிடைப் போஜவித் தோலன்றி யானிதமும் + +நீரா தரத்தோ டெடுப்பமற் றியாது நிகழ்த்துவையே.” + + + +(நேரார்-பகைவர். அயம் - இரும்பு. ஆதுலர் - இரப்பவர்கள், ஆதரம் +- அன்பு. நிகழ்த்துவை-சொல்வாயாக.) + + + +காற்றுக்கு விண்ணப்பம் + + + +பின்பு ஒரு நாள் வித்துவானொருவர் தேசிகருடைய உதவியை நாடி +வந்தார். அவர் பழைய சுலோகங்கள் பலவற்றைச் சொன்னார். எந்த வகையான +ஆதரவுமற்ற ஒரு வித்துவான் ஒரு பிரபுவை நோக்கித் தம்மைப் பாதுகாக்க +வேண்டுமென்பதைத் தெரிவிக்க எண்ணி அக்கருத்தை வெளிப்படையாகச் +சொல்லாமல் குறிப்பாகப் புலப்படுத்தியதாக அமைந்த சுலோகங்கள் அவை. +அவற்றுள் புயற்காற்றினால் கடலில் அலைப்புண்ட ஒரு கப்பலில் +தத்தளிப்பவன் காற்றைப் பார்த்துச் சொல்வது போல அமைந்தது ஒரு +சுலோகம். நான் அதனை மொழிபெயர்த்துச் சொன்னேன். அச் செய்யுள் +வருமாறு:- + + + +“மீகாமன் செயல்முறையும் பிறழ்ந்தது வீழ்ந் + +        தனதுடுப்பு மீன்றோன் றாமல் + +ஆகாய மறைத்தபுயல் அம்புதியோ + +         கடக்கரிதால் அந்தோ மார்க்கம் + +ஏகாத விதமலைக ளுடையதுநௌ + +         விதைக்கரைப்பால் ஏகச் செய்து + +நீகாவ லதுகவிழிவ் விரண்டுமுன்றன் + +         கையனவாம் நிகழ்த்துங் காலே.” + +(மீகாமன்-மாலுமி. மீன்-நக்ஷத்திரம். அம்புதி-கடல். நௌ-ஒருவகைத் +தோணி. காலே-காற்றே.) + + + +இவ்வாறு அந்த அந்தச் சந்தர்ப்பங்களில் நான் மொழி பெயர்த்து +இயற்றிய பாடல்கள் பல. இந்த உத்ஸாகத்தில் தினந்தோறும் கற்பனைகளை +அமைத்துச் சொந்தமாகப் பல பாடல்கள��யும் இயற்றி வந்தேன். ஒரு சமயம் +தேக அசௌக்கியத்தால் சில நாள் மடத்துக்கு நான் போக இயலவில்லை; +படுத்த படுக்கையிலேயே இருந்தேன். அக்காலத்தில் முருகக் கடவுள் +படைவீடுகள் ஆறில் ஒவ்வொன்றின் விஷயமாகவும் ஒவ்வோர் இரட்டை +மணிமாலை இயற்றினேன். + + + +அவதானம் + + + +மடத்திற்குச் சில சமயங்களில் அவதானம் செய்யும் வித்துவான்கள் +வந்து தங்கள் திறமையைப் புலப்படுத்துவார்கள். அஷ்டாவதானம், +ஷோடசாவதானம், முப்பத்திரண்டவதானம், சதாவதானம் என்னும் +அவதானங்களைச் செய்பவர் வருவார்கள். அவர்கள் திறமையைக் கண்டு +நானும் பிறரும் வியப்போம். “நாமும் இவ்வாறு அவதானம் செய்யவேண்டும்” +என்று ஆசை எனக்கும் பிறருக்கும் எழுந்தது. அப்பியாசமும் செய்து +வந்தோம். அப்பால் ஒரு நாள் நான் என்னுடன் படிப்பவர்களையும் என்னிடம் +படித்த மாணாக்கர்களையும் வைத்துக் கொண்டு அவதானம் செய்யலானேன். +சிலர் பாடல்களுக்கு ஸமஸ்யை கொடுத்தனர். சிலர் நூல்களிற் சந்தேகம் +கேட்டனர். சிலர் பழைய பாடலைக் கூறித் திரும்பச் சொல்லச் செய்தனர். சிலர் +கணக்குப் போட்டனர். அவற்றிற்கெல்லாம் நான் தக்கபடி விடை அளித்தேன். +அவதானத்துக்கு இன்றியமையாதது ஞாபக சக்தி. எனக்கு ஸமஸ்யை +கொடுத்தவர்களுள் என்னிடம் படித்து வந்த வைஷ்ணவ மாணாக்கராகிய +ராமகிருஷ்ண பிள்ளை யென்பவர் ஒருவர். அவர், “புண்டரீக வல்லிதாள் +புகழ்ந்து பாடியுய்வனே” என்று ஈற்றடி கொடுத்தது மாத்திரம் இப்போது +ஞாபகத்தில் இருக்கிறது. மடாலயம் முழுவதும் தமிழ் மணம் நிரம்பி +யிருந்தமையால் தமிழ் சம்பந்தமான எந்த முயற்சியையும் தைரியமாக +மேற்கொள்ளும் இயல்பு எனக்கு உண்டாயிற்று. + + + +மற்ற மாணாக்கர்களும் இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டதுண்டு. + + + +கடிதப் பாடல் + + + +ஒரு சமயம் மாயூரம் வேதநாயகம் பிள்ளை சுப்பிரமணிய தேசிகர் +விஷயமாகச் சில வெண்பாக்களைப் பாடி அவற்றைத் தேசிகரிடம் +சொல்லிக்காட்ட வேண்டுமென்று எனக்கு ஒரு செய்யுளால் அறிவித்து +அவற்றையும் அனுப்பியிருந்தார். தேசிகரிடம் நான் அச்செய்யுட்களை +அறிவித்ததோடு அச் செய்தியைப் பின்வரும் பாடலால் வேதநாயகம் +பிள்ளைக்கும் தெரிவித்தேன்:- + + + +“தாயக மெனநன் னாவலர் பலர்க்குந் + +         தனமுதல் அளித்தியல் வேத + +நாயக மகிபா நீயக மகிழ்ந்து + +         நன்கனுப் பியமுதற் பாவை + +ஆயக மதில்வாழ் சுப்பிர ��ணிய + +         ஆரியன் பாலுட னுரைத்தேன் + +நோயக லெவர்க்கு நின்பெருஞ் சீரை + +         நுவன்றன னுவலரும் புகழோய்.” + +(முதற்பா - வெண்பா. ஆய் அகமதில் வாழ் - நூலை ஆராய்கின்ற +நெஞ்சத்தில் வாழும்.) + + + +இவ்விதம் பல வகையிலும் பாடும் பணியில் ஈடுபட்ட என் செய்யுள் +முயற்சி விருத்தியாகி வந்தது. அதனால் மற்றவர்களுக்கு ஸந்தோஷமும் எனக்கு +மேன்மேலும் ஊக்கமும் விளைந்தன. சுப்பிரமணிய தேசிகர், +“பிள்ளையவர்களுடைய போக்கை நன்றாகக் கற்றுக் கொண்டிருக்கிறீர். +உம்முடைய செய்யுட்கள் அவர்களுடைய ஞாபகத்தை உண்டாக்குகின்றன” +என்று அடிக்கடி சொல்வார். பிள்ளையவர்கள் இட்ட பிச்சையே எனது +தமிழறிவு என்ற நினைவிலேயே வாழ்ந்து வந்த எனது உள்ளத்தை +அவ்வார்த்தைகள் மிகவும் குளிர்விக்கும். + +-------------- + + + + + +80. புதிய வாழ்வு + + + +1880-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் 12 உ வியாழக்கிழமை பொழுது +விடிந்தது. அன்று காலையில் நான் வழக்கம்போலவே உத்ஸாகத்தோடு +இருந்தேன். திருவாவடுதுறை ஆதீனத்தின் சார்பு என்னை நல்ல நிலைமையில் +வைத்து வளர்த்து வரும் என்ற எண்ணம் எனக்கும் என்னைச் +சார்ந்தவர்களுக்கும் இருந்தது. என் வாழ்வில் ஒரு விதமான அமைதி ஏற்பட்டு +விட்டதாகவே நான் கருதினேன். பிள்ளையவர்களுடைய பதவியை வகிக்கும் +தகுதி என்னிடம் இராவிட்டாலும் அவரது மாணாக்க பரம்பரையை விருத்தி +செய்யும் தொண்டே எனது வாழ்க்கைப் பணியாக இருக்குமென்று எதிர் +பார்த்தேன். + + + + ஆனால் கடவுளுடைய எண்ணம் வேறு விதமாக இருந்தது. மடத்தின் +தொடர்பு ஒன்றோடு நில்லாமல் என் ஆசிரியத் தொழிலும், ஆராய்ச்சியும், +தமிழ்த் தொண்டும் மேன்மேலும் விரிவடைய வேண்டிய நல்லூழ் எனக்கு +இருந்தது போலும். அது தன் வேலையைச் செய்ய ஆரம்பித்தது. +கும்பகோணத்திலிருந்து தியாகராச செட்டியாரைக் குருவாரமாகிய அன்று +பிற்பகல் திருவாவடுதுறையிற் கொணர்ந்து சேர்த்தது. என் புதிய வாழ்வு +தொடங்கிற்று. + + + +செட்டியார் வரவு + + + +தியாகராச செட்டியார் மடத்துக்கு வந்தபோது சின்னச் பண்டார +ஸந்நிதியாகிய ஸ்ரீ நமசிவாய தேசிகர் பகற் போசனம் செய்து விட்டுச் +சிரமபரிகாரம் செய்திருந்தார். அப்போது இரண்டு மணி இருக்கும். தேசிகர் +விரும்பியபடி அச்சமயம் சில மாணாக்கர்களுக்கு நான் காஞ்சிப்புராணம் +பாடஞ்சொல்லி வந்தேன். நேரே நாங்கள் இருந்த இடத்திற்குச் செட்டியார் +வ��்தார். தம் வரவை அறிந்துவந்த நமசிவாய தேசிகரை வணங்கிவிட்டு அவர் +உட்கார்ந்து பேசினார். ஒரு மணி நேரம் வரையில் பேசி இருந்து விட்டு, “மகா +சந்நிதானத்தைத் தரிசிக்கலாமென்று வந்தேன். உத்தரவு கொடுக்க வேண்டும்” +என்று சொல்லிப் புறப்பட்டார். அவர் சொல்லியபடி நானும் உடன் சென்றேன். + + + +ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரிடம் நாங்கள் போன சமயம் அவர் +ஒருவருக்குக் கம்ப ராமாயணத்திலுள்ள ஐயங்களை நீக்கிக் கொண்டிருந்தார். +செட்டியாரும் நானும் அதைக் கவனித்தோம். சந்தேகம் கேட்டவர் தம் +வேலையை முடித்துக் கொண்டு போன பிறகு செட்டியாரும் சுப்பிரமணிய +தேசிகரும் கம்ப ராமாயணத்தின் சிறப்பைப்பற்றிச் சம்பாஷித்தார்கள். + + + +செட்டியாரின் விண்ணப்பம் + +இப்படி ஒரு மணி நேரம் சம்பாஷணையான பிறகு செட்டியார், “ஒரு +விண்ணப்பம்” என்றார். + + + +சுப்பிரமணிய தேசிகர் : என்ன! சொல்லலாமே. + + + +செட்டியார்: சாமிநாதையருக்கு என் வேலையைச் செய்விக்க +எண்ணியிருக்கிறேன். கிருபை செய்து சந்நிதானம் அதற்கு உத்தரவளிக்க +வேண்டும். + + + + தேசிகர் : அதற்கென்ன? பார்த்துக் கொள்ளலாம். நீங்கள் வேலையை +விடும்போது யோசித்துக் கொள்ளலாமே. + + + +செட்டியார் : வேலையிலிருந்து நான் விலகிக் கொண்டேன். +டாக்டருடைய ஸர்டிபிகேட்டும் கொடுத்தாயிற்று. இப்போது என் வேலையில் +ஒருவரும் இல்லை. + + + +எதிர்பாராத இந்தச் செய்தியைக் கேட்டுத் தேசிகர் திகைத்தார். நானும் +பிரமித்தேன். + + + +தேசிகர் : இந்த விஷயத்தை நீங்கள் முன்பு தெரிவிக்கவில்லையே. +நீங்கள் இன்னும் சில வருஷங்கள் வேலை பார்க்கக் கூடுமென்றல்லவோ +எண்ணியிருந்தோம்? + + + +செட்டியார் : வேலையிலிருந்து விலகிக்கொள்வதாக நான் ஒரு +வாரத்துக்கு முன்பே எழுதிக் கொடுத்து விட்டேன். சாமிநாதையரை என் +ஸ்தானத்தில் நியமிக்க வேண்டிய ஏற்பாடுகளையும் செய்திருக்கிறேன். இவரை +அனுப்பி வேலை பார்க்கும்படி உத்தரவு கொடுக்க வேண்டும். + + + +தேசிகர் இரண்டு நிமிஷம் யோசித்தார். பிறகு, “இவர் இவ்விடம் +இருப்பது மிகவும் உபயோகமாக இருக்கிறது. ஆதலால் இப்போது இவரை +அனுப்ப முடியாது” என்றார். + + + +செட்டியார் மிக்க வருத்தத்தோடு, “ஸந்நிதானத்தில் அப்படி +உத்தரவாகக் கூடாது. காலேஜ் பிரின்ஸிபால் கோபாலராவ் அவர்களிடம் நான் +வாக்குக் கொடுத்து விட்டேன். வேறு சிலர் இந்த வேலைக்கு மிகவும் முயன்று +வரு��ிறார்கள். இவருக்கே செய்விக்க வேண்டுமென்று சொல்லி +ராயரவர்களுடைய வாக்குறுதியையும் பெற்று வந்திருக்கிறேன். இவரிடம் +ஸந்நிதானத்துக்குள்ள பேரன்பை அறிந்து இது நல்ல வேலை என்ற +ஞாபகத்தால் இந்த முயற்சியைச் செய்யலானேன். இதனால் எல்லோருக்கும் +நன்மையும் புகழும் உண்டாகும்” என்றார். + + + +தேசிகர் இணங்கவில்லை. செட்டியார் மீட்டும் சில காரணங்களை +எடுத்துச் சொல்லி என்னை அனுப்ப வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். +இரவு மணி ஏழுக்கு மேலாகிவிட்டதால் தேசிகர், “இருக்கட்டும்; +அனுஷ்டானத்தை முடித்துக் கொண்டு நமசிவாய மூர்த்தியின் தீபாராதனை +தரிசனத்துக்கு வாருங்கள்” என்று சொல்லிவிட்டு அனுஷ்டானம் செய்யப் +போனார். + + + + செட்டியார் கலக்கம் + + + +செட்டியாரும் நானும் எழுந்து புறத்தே வந்தோம் வழியில் எதிர்ப்பட்ட +குமாரசாமித் தம்பிரானைக் கண்டு செட்டியார் தாம் வந்த காரியத்தைத் +தெரிவித்தார். அவர், “நீங்கள் சொல்வது சாத்தியமில்லாத விஷயம் மடத்துக்கு +மிக்க உதவியாக இருக்கும் இவர்களைப் பிரிவதற்கு ஸந்நிதானம் சம்மதிக்குமா? +எனக்கும் உசிதமாகத் தோற்றவில்லை; மற்றவர்களும் அப்படியே கருதுவார்கள்” +என்றார். + + + +“இந்தச் சங்கடத்துக்கு நான் என்ன செய்வேன்!” என்று முணு +முணுத்துக் கொண்டே செட்டியார் அவரை விட்டு நடந்தார். பிறகு என்னைப் +பார்த்து, “இவர்கள் வார்த்தைகளையெல்லாம் கவனிக்க வேண்டாம். பேசாமல் +‘போகிறேன்’ என்று சொல்லி விட்டு என்னுடன் வந்துவிடுங்கள். இந்த மடத்தில் +ஆயுள் முழுவதும் உழைத்தாலும் உங்களுக்கு இந்த நிலையிலிருந்து சிறிதும் +உயர்வு ஏற்படாது. இங்கே ஒரு வருஷத்திற் கிடைக்கும் ஐம்பது ரூபாயை +அங்கே மாதந்தோறும் பெறலாமே? பொழுது விடிந்ததுமுதல் ராத்திரி பத்து +மணி வரையில் இங்கே கத்திப் பாடம் சொல்ல வேண்டும். பிற +வேலைகளையும் கவனிக்க வேண்டும். அங்கே தினந்தோறும் 4 மணி +நேரத்துக்குமேல் வேலை இராது. வாரந்தோறும் இரண்டு நாள் விடுமுறை +உண்டு” என்றார். அவர் பின்னும் பலவாறு இரண்டு இடங்களுக்குமுள்ள +வித்தியாசத்தை எடுத்துச் சொன்னார். அவ்வளவையும் நான் காதில் +வாங்கிக்கொள்ளாமல், “கும்பகோணத்தில் உள்ள சௌகரியங்களைப் பற்றித் +தாங்கள் சொன்னதை நான் கவனித்தேன். இதைக் காட்டிலும் மேலான +இடமொன்று இருப்பதாக இதுவரையில் எனக்குத் தோற்றவில்���ை. ஒரு +விதத்திலும் இங்கே குறைவில்லை. சம்பளம் சொற்பமென்று சொல்லக்கூடாது. +எங்களுக்கு ஒருவிதத்திலும் கவலையில்லாமல் சந்நிதானம் +பார்த்துக்கொள்ளுகிறது” என்று பதில் சொன்னேன். திருவாவடுதுறை மடத்தின் +அன்னம் என் உடம்பில் எவ்வளவு ஊறியுள்ளதென்பதைச் செட்டியார் +நன்றாகத் தெரிந்துகொள்ளவில்லை. + + + +எனது நிலை + + + +என் மனம் ஊசலாடிக் கொண்டிருந்தது. காலேஜ் உத்தியோகம் என் +உள்ளத்தைக் கவர்ந்தது. ஆனால் திருவாவடுதுறை மடத்தில் உள்ளோரது +அன்பு என்உயிரோடு இணைந்து நின்றது. சுப்பிரமணிய தேசிகர் என்னை +அனுப்ப இணங்கவில்லையென்பதை அறிந்த போது என்பால் அவர் +வைத்துள்ள அன்பை ஒருவாறு எண்ணிப் பார்த்தேன். “ ஒரு மனிதனுக்குப் +பணந்தானா பெரிது? மடத்துக்கு +இல்லாத பெருமை காலேஜு க்கு வரப்போகிறதா? இதன் கௌரவ மென்ன? +பெருமை என்ன? இதன் சம்பந்தம் ஏற்படுவது சுலபமான காரியமா?” +என்றெல்லாம் நான் விரிவாக எண்ணினேன். இடையிடையே தியாகராச +செட்டியார் சொன்ன ஆசை வார்த்தைகள் என்னை மயக்கின. + + + +செட்டியார் சொன்னவற்றையெல்லாம் விடாமல் கேட்டுக் கொண்டிருந்த +நான் ஒருவிதமான முடிவுக்கு வந்து, “ஸந்நிதானம் உத்தரவு கொடுத்தால்தான் +நான் வருவேன். இல்லாவிட்டால் வரமாட்டேன்” என்று முடிவாக அவரிடம் +சொல்லி விட்டேன். + + + +“நான் சொல்வதன் நியாயம் உங்களுக்கு இப்போது தெரியாது. பிறகு +தெரியவரும். ஸந்நிதானத்தின் திருவுள்ளத்தை மறுபடியும் கரைக்கப் +பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு அவர் தாம் தங்கியிருந்த ஜாகைக்குச் +சென்றார். + + + +ஒன்றும் தெளிவுபடாத எண்ணங்களுடன் நான் வீடு சேர்ந்தேன். என் +தாய் தந்தையரிடம் விஷயத்தை வெளியிட்டேன். தந்தையார், “இங்கே +எவ்வளவு சௌகரியங்கள் இருக்கின்றன! ஜனங்கள் எவ்வளவு அன்பாக +இருக்கிறார்கள்! இப்படிப்பட்ட இடம் வேறு எங்கேயிருக்கும்?” என்றார். +தாயாருக்கும் திருவாவடுதுறையை விடுவதற்கு மனமில்லை. + + + +காலை நிகழ்ச்சிகள் + + + +மறு நாள் வெள்ளிக்கிழமை காலையில் எழுந்தேன். மனம் +சஞ்சலத்தோடே இருந்தது. செட்டியார் என்னை அழைத்துக்கொண்டு +சுப்பிரமணிய தேசிகரிடம் சென்றார். போகும்போது அவர் என்னிடம், “நீங்கள் +சும்மா இருங்கள். உங்கள் அபிப்பிராயமாக ஒன்றும் சொல்ல வேண்டாம். +ஸந்நிதானத்தின் சம்மதத்தை நான் எப்படியாவது பெற்று விடுகிறேன்” என்று +சொன்னா���். + + + +தேசிகரைத் தரிசித்து வந்தனம் செய்து செட்டியார் அருகில் +உட்கார்ந்தார். நானும் அமர்ந்தேன். செட்டியார் என்னைப் பற்றிய பேச்சை +எடுப்பாரென்று எதிர் பார்த்தேன். அவர் வேறு விஷயத்தைப் பற்றிப் பேச +ஆரம்பித்தார். “பிள்ளையவர்கள் திருச்சிராப்பள்ளியில் இருந்த போது +தியாகராச லீலையை இயற்றினார்கள். அது பூர்த்தியாகவில்லை. அவர்கள் +அதை இயற்றி வருகையில் நான்தான் ஏட்டில் எழுதினேன். அப்பிரதி இங்கே +இருக்கிறது. நூலின் மேற்பகுதியை நான் பாடிப் பூர்த்தி செய்து விடலாமென்று +எண்ணுகிறேன். அந்தப் பிரதியை எடுத்துக் கொடுக்கும்படி உத்தரவாக வேண்டும்” +என்று அவர் கேட்டுக் கொண்டார். தேசிகர் பிரதியை எடுத்து வரும்படி +என்னை அனுப்பினார். நான் சென்று புஸ்தகசாலையில் கால் மணி நேரம் தேடி +அந்த ஏட்டுச் சுவடியை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தேன். நான் புஸ்தக +சாலைக்குச் சென்றிருந்தபோது தேசிகரும் செட்டியாரும் என்னைப் பற்றியே +பேசிக்கொண்டிருந்தார்களென்று தெரிய வந்தது. + + + +தேசிகரிடமிருந்து செட்டியார் தியாகராச லீலை ஏட்டுப் பிரதியைப் +பெற்றுக் கொண்டார்; பிறகு, “நான் வந்த காரியத்தை அனுகூலமாக முடித்துச் +சந்தோஷப் படுத்தி அனுப்ப வேண்டும்” என்று வற்புறுத்திக் கேட்டுக் +கொண்டார். + + + +தேசிகர்:- இவர் இப்போது இங்கே இருக்க வேண்டியது அவசியம். +பிறகு சந்தர்ப்பம் கிடைத்தாற் பார்த்துக் கொள்ளலாம். + + + +தியாக:- பிறகு சந்தர்ப்பம் கிடைப்பது அருமை. அந்த ஸ்தானம் மிகவும் +உயர்ந்தது. சம்பளம் குறைவாக இருந்தாலும் அதனால் ஏற்படும் கௌரவம் +அதிகம். அங்கே படிக்கும் பிள்ளைகளெல்லாம் பிற்காலத்திலே சிறந்த +உத்தியோகஸ்தர்களாக வருவார்கள். இந்த மடத்தின் சம்பந்த முடையவர் +அங்கேஇக்கிறாரென்பது இவ்விடத்திற்கே ஒரு கௌரவம் அல்லவா? இது +வரையில் நான் மடத்துப் பிரஸ்தாவத்தை அடிக்கடி செய்து வந்தேன். எனக்குப் +பிறகு தெரியாத வேறு யாராவது வந்தால் மடத்தின் சம்பந்தம் விட்டுப் போய் +விடும். இவர் இருந்தால் அது விடாமல் இருக்கும். அதனால் பலவிதமான +அனுகூலமுண்டென்பது ஸந்நிதானத்துக்கே தெரிந்தது தானே? இவ்விடத்துச் +சம்பந்தமுள்ளவராகவும் ஐயா அவர்களிடம் படித்தவராகவும் +இருக்கவேண்டுமென்பது தான் என் கருத்து. இவர் அங்கே வந்து விட்டாலும் +வாரந்தோறும் இங்கே வரலாம். ல��வு காலங்களில் இங்கே வந்து +தங்கியிருக்கலாம். நான் இவ்வளவு விஷயங்களையும் ஆலோசித்தே இந்த +விண்ணப்பத்தைச் செய்து கொண்டேன். நான் கேட்கும் இந்த வரத்தைத் +தந்தருள வேண்டும். + + + +இவ்வாறு சொல்லிச் செட்டியார் எழுந்து கைகூப்பி வந்தனம் செய்தார். +அவர் படிப்படியாக விஷயங்களை எடுத்துச் சொல்லும் போது தேசிகர் மிகவும் +கவனமாக அவற்றைக் கேட்டு வந்தார். செட்டியார் சொன்ன வார்த்தைகளோடு +அவரது முகபாவங்களும் அஞ்சலியும் சேர்ந்து அவருக்கு அவ்விஷயத்தில் +எவ்வளவு ஆவல் உண்டென்பதைப் புலப்படுத்தின. என்னுடைய நிலையும் +மடத்தினுடைய புகழும் இந்தக் காரியத்தால் அபிவிருத்தியாகுமென்பதைத் +தேசிகர் உணர்ந்து கொண்டதாகவே தோற்றியது. அவர் மனம் +இளகியது. சிறிது மௌனமாகவே இருந்தார். “சரி; என்ன செய்ய வேண்டும்?” +என்று கேட்டார். + + + +தெய்வ சங்கற்பம் + + + +அந்தக் கேள்வியிலே அனுகூலமான தொனி இருப்பதைச் செட்டியார் +தெரிந்து கொண்டார். உடனே “இவருக்கு வேலை செய்விக்க வேண்டுமென்று +கோபால ராவ் அவர்களுக்கு ஒரு கடிதமும், அவருக்கு ஒரு யோக்கியதா +பத்திரமும் ஸந்நிதானத்தின் திருக்கரத்தால் அளிக்க வேண்டும்” என்று +கேட்டுக் கொண்டார். தேசிகர் ராயசக்காரராகிய பொன்னுசாமிசெட்டியாரை +வருவித்து இரண்டையும் சொல்லி எழுதுவித்தார். யோக்கியதா பத்திரம் +வருமாறு. + + + +இந்தப் பத்திரிகையிலெழுதப்பட்டிருக்கிற சாமிநாதையர் நமது ஆதீன +வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடத்தில் ஆறு வருஷகாலம் +இலக்கண இலக்கியங்கள் நன்றாய் வாசித்ததுமன்றி நம்மிடத்திலும் நான்கு +வருஷகாலமாக வாசித்துக் கொண்டிருக்கிறார். இலக்கண இலக்கியங்களைத் +தெளிவாய்ப் போதிக்கிற விஷயத்தில் சமர்த்தர். நல்ல நடையுள்ளவர். + + + +பிரமாதி வருஷம் கும்பரவி சுப்ரமணிய + +3Œ திருவாவடுதுறை பண்டாரச் சன்னதி. யாதீனம் + + + +இரண்டையும் எழுதுவித்த பிறகு கோபாலராவுக்குரிய கடிதத்தில் +கையெழுத்திட்டு யோக்கியதா பத்திரிகையில் கையெழுத்துப் போடும் சமயத்தில் +சபாபதி பூஜையின் மணி கண கணவென்று அடித்தது. அப்பொழுது செட்டியார், +‘இவருக்கு வேலையாகிவிட்டது” என்று சந்தோஷத்துடன் எழுந்து கை +கொட்டிக் கூத்தாடினார். என்னை அனுப்பும் விஷயத்தில் மன அமைதி +பெறாமல் இருந்த தேசிகருக்கும் பூர்ண சம்மதம் உண்டாகிவிட்டது. “நாம் +இவரை ��னுப்புவதற்குச் சம்மதம் இல்லாமலிருந்தாலும், தெய்வம் +கட்டளையிடுகிறது. தெய்வ சங்கற்பத்தைத் தடுக்க இயலுமா? சரி, நல்ல வேளை +பார்த்து இவரை அனுப்புகிறோம். கவலைப்பட வேண்டாம்” என்று அவர் +சொன்னார். செட்டியார் மிக்க குதூகலத்தை அடைந்தார். + +-------------- + + + + + 81. பிரியா விடை + + + +கும்பகோணம் காலேஜில் வேலை பார்க்கும்படி என்னை +அனுப்புவதற்குச் சுப்பிரமணிய தேசிகர் சம்மதித்தனரென்ற செய்தி மிக +விரைவில் எங்கும் பரவியது. மடத்தின் தொடர்புடையவர்களெல்லோரும் இது +கேட்டு வருந்தினார்கள். தியாகராச செட்டியார் பகற்போசனத்திற்குக் கூட +இராமல், “வீட்டில் ஒரு திதி நடக்க வேண்டும்” என்று சுப்பிரமணிய +தேசிகரிடம் சொல்லி விரைவில் விடைபெற்றுக் கும்பகோணம் போய்விட்டார். + + + +நான் வீட்டுக்குச் சென்று என் தாய் தந்தையரிடம் விஷயத்தைச் +சொன்னபோது அவர்கள் சந்தோஷமென்றும் துக்கமென்றும் தெரியாத ஒரு +நிலையில் இருந்தார்கள், எனக்கோ ஒரே மயக்கமாக இருந்தது. பழகிய +இடத்தின்பாலுள்ள பற்றும் புதிய இடத்தின் கௌரவமும் ஒன்றனோடு ஒன்று +போராடி என்மனத்தை அலைத்தன. + + + +தேசிகர் கருத்து + + + +சுப்பிரமணிய தேசிகர் தீபாரதனை செய்து விட்டுப் பெரிய +பூஜையிலிருந்து அடியார்களுக்கு விபூதி கொடுப்பதற்கு ஒடுக்கம் செல்வது +வழக்கம். தம்பிரான்கள் பலரும் அடியார்கள் பலரும் பின் தொடர்ந்து +செல்வார்கள். அப்போது சின்னப்பண்டார ஸந்நிதிகள் சுப்பிரமணிய +தேசிகருக்குக் கை கொடுத்து அழைத்து வருவார். + + + +அன்றைத் தினம் பூஜை நடந்த பிறகு தேசிகர் ஒடுக்கத்துக்கு வந்தனர். +என்னைக் கும்பகோணத்திற்கு அனுப்பும் விஷயத்தைப் பற்றியே அவர் +மனமும் சிந்தித்திருக்க வேண்டும். அப்போது அவர் சின்னப் பண்டார +சந்நிதியைப் பார்த்து, “சின்னப் பண்டாரம், சாமிநாதையரைத் தியாகராச +செட்டியார் வேலைக்குப் போகும்படி சிபார்சு செய்து விட்டோம். செட்டியார் +நேற்று வந்து சென்றது அவரை அழைத்துப் போவதற்காகத்தான். நாமும் +சம்மதித்து யோக்கியதா பத்திரிகையும் சிபார்சுக் கடிதமும் எழுதிக் +கொடுத்திருக்கிறோம்” என்றார். + + + +நமசிவாய தேசிகர் வியப்புற்று, “அப்படிச் செய்யலாமா? இடத்தின் +வழக்கங்களெல்லாம் அவர் நன்றாகத் தெரிந்தவர். வருகிற வித்துவான்களுக்கும் +பிரபுக்களுக்கும் பிரியமாக நடந்துகொள்பவர். மாணக்கர்களுக்க��� நன்றாகப் +பாடம் சொல்லிவருகிறார். அவர் இருப்பது இவ்விடத்திற்கு உபயோகமாகவே இருக்கிறது. அவரை +அனுப்புவதில் அடியேனுக்குச் சம்மதம் இல்லை” என்றார். + + + +மடத்தைச் சேர்ந்த எல்லோருக்கும் இத்தகைய எண்ணமே இருந்தது. +எல்லோரும் சுப்பிரமணிய தேசிகர் இதற்கு எவ்வாறு சம்மதித்தாரென்றே +எண்ணி வியந்தனர். மற்றவர்கள் வற்புறுத்தினாலும் என்னை மடத்தை விட்டு +வெளியே அனுப்ப அவர் உடன்படாரென்றே அவர்கள் நினைத்திருந்தனர். + + + +நமசிவாய தேசிகர் கூறியதைக் கேட்ட ஆதீனத் தலைவர் தம் +கருத்தைத் தெளிவாக்கலானார். “நீர் சொல்வது சரியே; அவரால் மடத்துக்கு +எவ்வளவு உபயோகம் உண்டென்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனாலும் +அவருடைய நிரந்தரமான நன்மையைக் கருதியே இதற்கு நாம் சம்மதித்தோம். +இங்கே நாம் உள்ள வரைக்கும் அவருக்கு ஒரு குறைவும் நேராது. காலம் ஒரே +மாதிரி இராது. நம் காலத்திற்குப் பிறகு அவரிடம் நம்மைப்போலவே அன்பு +செலுத்திப் பாதுகாப்பார்களென்று நிச்சயமாகச் சொல்லமுடியாது. யாரேனும் +ஒருவர் இங்கே திடீரென்று தோன்றி, ‘இவர் சொல்லுகிற பாடத்தை நானே +சொல்கிறேன். இவருக்குச் சம்பளம் கொடுப்பது அனாவசியம்’ என்று +சொல்லக்கூடும். பிறகு அவர் என்ன செய்வார்! இந்தமாதிரி இடங்களில் பல +பேருடைய தயை இருந்தால் தான் நிலைத்து நிற்க முடியும். தலைவர் முதல் +உக்கிராணக்காரன் வரையில் எல்லோருடைய பிரியத்தையும் ஒருவர் பெற்று +இருப்பதென்பது அருமையிலும் அருமை. நம்மால் ஆதரிக்கப்பட்டவர்கள் +எப்பொழுதும் சௌக்கியமாக இருக்க வேண்டுமென்பது நம் கருத்து. அதனால் +சாமிநாதையர் அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்து விட்டால் பிறகு +அவருடைய விருத்திக்கு ஒரு குறைவும் நேராதென்று எண்ணியே அவரை +அனுப்பலானோம். அவர் சௌக்கியமான நிலையில் இருப்பதை நாம் +இருக்கும்பொழுதே கண்ணாற் பார்த்து விட வேண்டும்” என்றார். + + + +தேசிகர் உள்ளக் கருத்தை யாவரும் அறிந்து அவருடைய தீர்க்க +தரிசனத்தை வியந்தனர். அப்போது உடன் சென்ற மதுரை இராமசாமி பிள்ளை +இச்சம்பாஷணையை அப்பால் எனக்குத் தெரிவித்தார். + + + +பிற்பகலில் தேசிகர் என் தந்தையாரையும் சிறிய தாயார் கணவரையும் +அழைத்து வரச் செய்து தம்முடைய தீர்மானத்தைச் சொன்னார். அவர்கள் +கலங்கினார்கள். தேசிகர் தக்க சமாதானங்களை எடுத்துச் சொன்னார். + + + + நல்ல வேளை + + + +���ப்பால் மூன்று மணிக்கு ஜோஸ்யரை வருவித்து நாள் பார்க்கச் +சொன்னதில் அவர், “இன்று ராத்திரி எட்டு மணிக்கே நல்ல வேளையாக +இருக்கிறது; அப்பொழுது அனுப்பலாம்” என்று சொன்னார். உடனே தேசிகர் +எனக்குச் சொல்லியனுப்பி வருவித்து, “இன்று ராத்திரி உம்மை அனுப்புவதாக +இருக்கிறோம். ஸித்தமாக இருக்க வேண்டும்” என்று கூறினார். எனக்கு மனம் +மிகவும் கலங்கியது. அவ்வளவு சீக்கிரத்தில் பிரிய வேண்டியிருக்குமென்று நான் +நினைக்கவே இல்லை. வியாழக்கிழமையன்று இந்தப் பிரஸ்தாவம் +ஆரம்பமானதிலிருந்து இதன் சம்பந்தமாக நடந்து வந்த ஏற்பாடுகள் தெய்வ +சங்கற்பம் எதை நடத்துகிறதோ அது மிக வேகமாக நடைபெறுமென்பதையும் +மற்ற நிகழ்ச்சிகளெல்லாம் அதனைச் சார்ந்து அனுகூலம் +விளைவிக்குமென்பதையும் உணர்த்தின. + + + +“இன்றைக்கு ராத்திரியேயா புறப்பட வேண்டும்?” என்று நான் மெல்லத் +தழுதழுத்த குரலுடன் கேட்டேன். + + + +“ஆமாம், ஜோஸ்யரைக் கொண்டு நாள் பார்த்ததில் ராத்திரி எட்டு +மணிக்கு மேல் புறப்படுவது மிகவும் நல்லதென்று சொன்னார். நல்ல காரியத்தை +விரைவிலே நிறைவேற்றுவதுதான் சிறந்தது” என்றார் தேசிகர். + + + +எனக்குப் பேச நா எழவில்லை. வீட்டுக்குப் போய்ப் பிரயாணத்திற்கு +ஏற்பாடு செய்யத் தொடங்கினேன். ஏற்பாடு என்ன செய்யப் போகிறேன்! +எதைக் கொண்டு போவது, எதை விட்டுப் போவது என்று விளங்கவில்லை. +ஏதோ கைக்கு அகப்பட்ட ஆடைகளையும் புஸ்தகங்களையும் +எடுத்துகொண்டேன். + + + +தேசிகர் விடை தருதல் + + + +மாலையில் சுப்பிரமணிய தேசிகர் கோயிலுக்குப் போய்த் தரிசனம் +செய்துவிட்டு மடத்துக்கு வந்து என்னை வரும்படி சொல்லியனுப்பினார். +போனேன். “சரியான காலத்தில் நீர் புறப்பட வேண்டும்” என்று அவர் +சொல்லி ஒரு மகமல் சட்டை, ஒரு தலைக்குட்டை, ஒரு சின்னச் சட்டை, +சரிகை போட்ட பெரிய வெள்ளைத் துப்பட்டா, உயர்ந்த சால்வை ஒன்று +ஆகியவற்றை அளித்து, “எல்லாவற்றையும் உபயோகித்துக் கொள்ளும்” என்று +அன்பு ததும்பச் சொன்னார். பிறகு, கருங்காலிப் பெரிய கைப்பெட்டி ஒன்று, +கை மேஜை ஒன்று, ஒரு சிறிய கைப் பெட்டி, கொழும்பிலிருந்த அடியார் +ஒருவர் கொண்டு வந்து கொடுத் திருந்ததும் நாற்பது ரூபா விலையுள்ளதுமாகிய தந்தப் பிடியமைந்த +பட்டுக் குடை ஒன்று ஆகியவற்றையும் கொணரச் செய்து ஒவ்வொரு +பெட்டியிலும் ஒவ்வோர் அரைக்கால் ர���பாய் போட்டு எனக்கு வழக்கினார். +மெய்க்காட்டு உத்தியோகத்தில் இருந்த ஷண்முகம் பிள்ளை என்பவரை +அழைத்து, “நாளைத்தினம் நீர் கும்பகோணத்துக்குப் போய் இவர் காலுக்குப் +பாப்பாஸ் ஜோடு வாங்கிக் கொடுத்து இந்தக் குடைக்கு உறையும் போட்டு +இன்னும் இவருக்கு என்ன என்ன ஆக வேண்டுமோ அவற்றைச் செய்து விட்டு +வாரும்” என்றார். + + + +என்னைப் பார்த்து, “சாமிநாதையர், நாம் மதுரை கும்பாபிஷேகத்திற்குப் +போயிருந்த போது ஒரு மகா சபையில் மணி ஐயரவர்களுக்கு முன்பு +வேதநாயம் பிள்ளை பாடலைச் சொல்லி விட்டு ‘இறுமாப்புடைய நடையும் +குடையும் என்னிடம் இல்லை’ என்று சொன்னது நினைவில் இருக்கிறதா? +அந்தக் குறை இரண்டும் இப்போது தீர்ந்து விட்டன” என்று சொன்னர். நான் +வெகு நாளைக்கு முன் சொன்னதை ஞாபகம் வைத்திருந்து தேசிகர் அப்போது +செய்ததையும் அவர் அன்பையும் நினைந்து உருகினேன். “இறுமாப்புடைய +நடை என்றும் வராது” என்று சொன்னேன். + + + +“நீர் தியாகராச செட்டியார் ஸ்தானத்தை வகித்து நல்ல புகழ் +பெறுவதன்றிச் சென்னைக்கும் சென்று தாண்டவராய முதலியாரும் +மகாலிங்கையரும் விசாகப் பெருமாளையரும் இருந்து விளங்கிய ஸ்தானத்தைப் +பெற்று நல்ல கீர்த்தியடைந்து விளங்க வேண்டும்” என்று கூறித் தாம்பூலம் +கொடுத்தார். + + + +ஒரு தாய் தன் பிள்ளைக்கு உயர்ந்த பதவிகளெல்லாம் கிடைக்க +வேண்டுமென்று மனமார நினைந்து வாழ்த்துவதைப் போல இருந்தன அவர் +வார்த்தைகள். அந்தப் பேரன்பிலே ஊறியிருந்த போது அதன் முழு +அருமையும் எனக்குத் தெரியவில்லை. பிரியப் போகின்றோமென்ற நினைவு +வந்ததுந்தான் அதன் அருமை பன்மடங்கு அதிகமாகத் தோற்றியது. + + + +என் மனநிலை + + + +நல்ல வேளை வந்து விட்டது. நான் விடை பெற்றுக் கொண்டேன். என் +கால்கள் மெல்ல நடந்தன. உடம்பு நகர்ந்ததேயன்றி என் மனம் அங்கேயே +கிடந்தது. வரும் போது உக்கிராண வாசலில் என்னை அறியாமலே நின்றேன். +நான் எந்தச் சமயத்தில் எந்தப் பண்டம் வேண்டுமானாலும் பெற்றுக் +கொள்ளும் இடமாகிய அதைப் பிரிய மனம் வரவில்லை. வேறு எங்கே அத்தகைய இடம் +கிடைக்கப் போகிறது! மேலே நடந்தேன். அங்கங்கே உள்ள +தீபஸ்தம்பங்களைப் பார்த்தேன். அவற்றின் அடியில் அமைதியாக அமர்ந்து +எவ்வளவு தினங்கள் படித்திருக்கிறேன்! கவலை ஒன்றும் இல்லாமல் +புஸ்தகத்திலே கண்ணும் கருத்துமாக ஒன்றிப்போய் வாசி��்க உதவிய அவற்றை +விட்டுச் செல்லப் போகிறேனென்ற நினைப்போடு துக்கமும் கலந்து வந்தது. +கொலு மண்டபத்துக்கு வந்தேன். அங்கே சகபாடிகளுடன் படித்த இடங்களைப் +பார்த்து மனங் குழம்பி நின்றேன். பல இரவுகள் அந்த இடத்தில் கணக்குச் +சுருணைகளைத் தலைக்கு அணையாக வைத்துக் கொண்டு மெய்ம்மறந்து +தூங்கியிருக்கிறேன். அந்தச் சுருணைகளைப் பார்த்தேன். அங்கே உள்ள +ஒவ்வொரு பொருளும் உயிர்கொண்டு என்னிடம் பேசுவது போல் இருந்தது. +அவற்றினிடம் நான் விடை பெற்றேன். + + + +“அவை ஜடப் பொருள்களல்லவா? அவற்றின் மேல் அவ்வளவு +பற்றிருப்பது பைத்தியகாரத் தனமல்லவா?” என்று பிறருக்குத் தோற்றும். +எனக்கு உலகமெல்லாம் திருவாவடுதுறை மடத்திலே இருந்தது. அங்குள்ள +பொருள்களைப் பிரியும்போது உலகத்தையே பிரிவது போன்ற உணர்ச்சிதான் +எனக்கு ஏற்பட்டது. + + + +புறப்பாடு + + + +வழியில் கண்ட அன்பர்களிடமெல்லாம் சொல்லிக் கொண்டு வீட்டுக்கு +வந்தேன். ஆகாரம் செய்து கொண்டு மடத்திலிருந்து வந்த வண்டியிலேறி +நரசிங்கம் பேட்டை ரெயில் நிலயத்துக்கு வந்தேன். எனக்குத் துணையாக என் +அம்மான் பிள்ளை கணபதி ஐயரென்பவரை என் தந்தையார் அனுப்பினார். +என்னை வழியனுப்பத் தம்பிரான்களும் நண்பர்களும் மாணாக்கர்களும் +வந்தார்கள். அவர்கள் பிரிவாற்றாமையால் வருந்தினார்கள், நான் கண்ணீர் +துளும்ப எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டேன். + + + +புகைவண்டி வந்தது. ஏறிக்கொண்டு கும்பகோணம் சேர்ந்தேன். + +-------------- + + + + + +82. சோதனையில் வெற்றி + + + +கும்பகோணம் ஸ்டேஷனில் இறங்கி இரவு பத்துமணிக்கு நான் நேரே +தியாகராச செட்டியார் வீட்டை அடைந்தேன். மாணாக்கர்களிடம் +பேசிக்கொண்டிருந்த செட்டியார் அப்போதுதான் அவர்களுக்கு +விடையளித்து விட்டு ஆகாரத்துக்குச் செல்ல எழுந்தார். அவ்வளவு +சீக்கிரத்தில் அவர் என்னை எதிர்பார்க்கவில்லை. ஆதலால் என்னைக் +கண்டவுடன் ஆச்சரியமடைந்து, “ஏது? இதற்குள் உங்களை அனுப்ப +ஸந்நிதானத்துக்கு மனம் வந்ததா?” என்றார். + + + +“ஆம், இன்று நல்ல நாளாக இருந்தமையால் என்னை அனுப்பினார்கள். +திதியென்று சொல்லி நீங்கள் அவசரமாக வந்தீர்களே. சரியான காலத்தில் அது +நடந்ததா?” என்று கேட்டேன். + + + +செட்டியார் செய்த தந்திரம் + + + +அவர் சிரித்துக் கொண்டே, “திதியும் இல்லை; ஒன்றுமில்லை +ஸந்நிதானத்துக்கு உங்களிடமுள்ள பிரியத்தை நன்கு அறிவேன். நான் அங்கே +தங்கியிருந்தால் திடீரென்று வேறு எதையாவது நினைத்து உங்களை அனுப்ப +முடியாதென்று சொன்னாலும் சொல்லக் கூடும். அந்தப் பயத்தால், அவர்கள் +வாக்களித்தவுடன் புறப்பட்டு விட்டேன், திடீரென்று புறப்படுவதற்குக் +காரணமாகத் திதியென்று ஒரு பொய்யைச் சொன்னேன். நல்ல காரியம் +செய்வதில் பொய் சொன்னால் தோஷமில்லை. ‘பொய்ம்மையும் வாய்மையிடத்த +புரை தீர்ந்த நன்மை பயக்குமெனின்’ என்னும் குறள் அதைத்தானே +சொல்லுகின்றது” என்றார். + + + +பிறகு அவர் ஆகாரம் உட்கொண்டு சிறிது நேரத்தில் வந்தார். அப்பால் +நானும் அவரும் நெடுநேரம் பேசினோம். சுப்பிரமணிய தேசிகர் எனக்கு +அளித்த சால்வை முதலியவற்றை எடுத்துக் காட்டினேன். மிக்க மகிழ்ச்சி +அடைந்தார். தாம் வேலைக்கு வந்த வரலாற்றையும், தம் வேலையை எனக்குச் +செய்விக்க நினைந்து இரண்டு வருஷங்களாக முயன்று வந்ததையும் அவர் +எடுத்துச் சொன்னார். காலேஜின் பெருமை, அங்குள்ள ஆசிரியர்களின் இயல்பு, +பாடம் சொல்லவேண்டிய முறை முதலிய பல உபயோகமான விஷயங்களையும் +கூறினார். அன்றிரவு அவர் வீட்டிலேயே தங்கினேன். + + + +புஸ்தகக் கட்டுகள் + + + +மறுநாள் சனிக்கிழமை காலையில் எழுந்து காலைக் கடன்களை +முடித்துக்கொண்ட பிறகு செட்டியார் தம் பீரோவிலிருந்து ஏறக் குறைய நூறு +புஸ்தகங்களை எடுத்து மூன்று சவுக்கங்களில் பிரித்து மூன்று கட்டாகக் +கட்டினார். அவரிடமிருந்த ஒற்றை மாட்டு வண்டியில் அவர் அவற்றை வைத்து +அதில் என்னை ஏறச் செய்து தாமும் ஏறிக்கொண்டார். வண்டி புறப்பட்டது. + + + +“உங்கள் திறமையை இந்தக் காலேஜ் ஆசிரியர்களுக்குத் தெரிவிக்க +வேண்டாமா? அதற்காகத்தான் உங்களை அழைத்துப் போகிறேன்” என்றார் +செட்டியார். + + + +“கோபால ராவ் அவர்களைப் பார்க்கவா?” என்று கேட்டேன். + + + +“அவர் மூலமூர்த்தி. அவரைப் பார்ப்பதற்கு முன் பரிவார +தெய்வங்களைப் பார்க்கவேண்டும்” என்றார் அவர். + + + +காலேஜில் பிரின்ஸிபாலுக்கு அடுத்த பதவியை வகித்த ஸாது சேஷையர் +வீட்டுக்குச் சென்று இறங்கினோம். புஸ்தகங்களை அவர் வீட்டு மெத்தையில் +அவர் உள்ள இடத்திலிருந்த ஒரு பெரிய வட்ட மேஜையின் மேல் வைக்கச் +செய்தார். சேஷையர் எங்கோ வெளியில் சென்றிருந்தார். செட்டியார் ஒரு +துண்டுக் காகிதத்தை எடுத்து “என் வேலைக்கு நான் குறிப்பிட்டவரை இங்கே +அழைத்து வந்திருக்கிறேன். நீங்கள் இவ்விடம் வந்து நேரில் பரீக்ஷை செய்து +நான் அவரைப் பற்றிச் சொன்னது உண்மை தானா வென்பதைத் தெரிந்து +கொள்ளலாம்” என்று எழுதி ஓர் உறையிலே போட்டுக் காலேஜ் +ஆசிரியர்களாகிய ஆர். வி. ஸ்ரீநிவாஸையர் முதலியவர்களிடம் காட்டி +வரும்படி ஒருவரை அனுப்பினார். அவற்றையெல்லாம் கவனித்த எனக்குச் +செட்டியார் ஏதோ ஒரு பெரிய சபைகூட்ட ஏற்பாடு செய்வதாகத் தோற்றியது. + + + +சிறிது நேரத்தில் ஆர் . வி. ஸ்ரீநிவாஸையர் வேறு ஆசிரியர்கள் +சிலருடன் அங்கு வந்து சேர்ந்தார். புறத்தே சென்றிருந்த சேஷையரும் வந்து +விட்டார். வந்தவுடன் தமது மேஜையின்மேல் உள்ள மூட்டைகளைக் கவனித்து, +“இவை என்ன?” என்று கேட்டார். + + + +“எல்லாம் தமிழ்ப் புஸ்தகங்கள்” என்றார் செட்டியார். பிறகு என்னையும் +அறிமுகம் செய்வித்தார். + + + +வந்த ஆசிரியர்களுள் ஒருவர் “தமிழ்ப் புஸ்தகங்கள் இவ்வளவு +உள்ளனவா?” என்று கேட்டார். + + + +செட்டியார், “இன்னும் எவ்வளவோ உண்டு. அச்சில் வாராத ஏட்டுப் +புஸ்தகங்கள் ஆயிரக்கணக்காக இருக்கின்றன” என்று கூறி அவருடைய +வியப்பைப் பின்னும் அதிகமாக்கினார். + + + +வேறொருவர், “இவை என்ன என்ன புஸ்தகங்கள்? எதற்காக +இவ்வளவு?” என்று கேட்டார். + + + +“கந்தபுராணம், கம்பராமாயணம், பாரதம், நைடதம் முதலிய +காவியங்களும், பல பிரபந்தங்களும், ஸ்தலபுராணங்களும், நன்னூல் முதலிய +இலக்கணங்களும் உள்ளன. இப்புஸ்தகங்களில் யார் யாருக்கு எது எது +இஷ்டமோ அதைப் பிரித்து எடுத்து இவரிடம் கொடுத்து விஷயத்தையும் +சந்தர்ப்பத்தையும், பொருளையும் கேட்டால் இவர் திருத்தமாக விடையளிப்பார். +அதிலிருந்து நான் முன்பு சொல்லியது +உண்மை யென்பது விளங்கும்” என்று செட்டியார் சொன்னார். + + +ஆதீன வித்துவான் + + + +உடனே செட்டியார் என்னை நோக்கி, எனக்குப் பண்டார சந்நிதிகள் +அளித்த யோக்கியதா பத்திரத்தைக் காட்டும்படி சொன்னார். நான் எடுத்துக் +கொடுத்தேன். அதை அவர் வாங்கி B. ஹனுமந்தராவ் என்னும் ஆசிரியரிடம் +கொடுத்துப் படிக்கச் சொன்னார். அவர் அவ்வாறே வாசிக்கத் தொடங்கி, ‘இப் +பத்திரிகையில் எழுதப்பட்டிருக்கிற சாமிநாதையர் நமது ஆதீன வித்துவான்” +என்று வாசித்து நிறுத்தி மற்றவர்களுடைய முகங்களைப் பார்த்தார் +முற்றுப்புள்ளியே இல்லாமல் எழுதியிருந்த அந்தப் பத்திரிகையில் +வாக்கியங்களை எங்கு வேண்���ுமானாலும் நிறுத்தலாம். சுப்பிரமணிய தேசிகர், +“நமது ஆதீன வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் ஆறு வருஷ +காலம் இலக்கண இலக்கியங்கள் நன்றாய் வாசித்ததுமன்றி” என்று +அச்சிறப்பைப் பிள்ளையவர்களைச் சார்த்தி எழுதுவித்திருந்தார். ஹனுமந்தராவ் +வாசித்தபோது, “சாமி நாதையர் நமது ஆதீன வித்துவான்” என்று நிறுத்தியது +எனக்குப் பெரிய அனுகூலத்தை உண்டாக்கியது. என்னையே ஆதீன +வித்துவானாக எல்லோரும் எண்ணி வியப்புற்றார்கள். இதைக் கவனித்த நான், +“ஊழ்வினையின் பலம் இது” என்று எண்ணி மிகவும் மகிழ்ந்தேன். + + + +பரீக்ஷை + + + +அப்பால் அங்கிருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு புஸ்தகத்தைக் +கையில் எடுத்து வைத்துக் கொண்டனர். முதலில் ஒருவர் பிரபுலிங்கலீலையை +என்னிடம் பிரித்துக் கொடுத்து நடுவில் ஒரு செய்யுளைக் காட்டிப் பொருள் +கூறும்படி சொன்னார். நான் அதை ராகத்தோடு வாசித்துச் சந்தர்ப்பத்தை +விளக்கிப் பொருளையும் விரிவாகச் சொன்னேன். அப்போது சிவராமையரென்ற +ஆசிரியர், “நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இவரைப் பரீக்ஷை செய்து +கொள்ளுங்கள்; என் மட்டில் திருப்தியே. சங்கீத ஞானம் இவருக்கு இருக்கிறது. +பாட்டைக் காதுக்கு இனிமையாகப் படிக்கிறார்” என்றார். + + + +“படிக்கும்போதே நிதானமாக நிறுத்தி அர்த்தம் விளங்கும்படி +படிக்கிறார்” என்றார் மற்றொருவர். + + + +பிறகு சாது சேஷையர் திருவிளையாடற் புராணத்தில் சில பாடல்களை +எடுத்துக் கொடுத்தார். அவற்றைத் தக்கபடி படித்துக் காட்டிப் பொருளும் +சொன்னேன். + + + +நன்னூலில் மிக நுட்பமான கேள்விகள் சிலவற்றை ஆர். வி. +ஸ்ரீநிவாஸையர் கேட்டார். எல்லாவற்றிற்கும் திருப்தியாக விடையளித்தேன். +இவ்வாறு ஆசிரியர் ஒவ்வொருவரும் தத்தமக்குத் தோற்றியபடி கேள்வி +கேட்டுத் திருப்தியுற்றனர். + + + +செய்யுள் இயற்றல் + + + +அப்பால் செட்டியார், “நூதனமாகப் பாடல்களை இயற்றும் பழக்கமும் +இவருக்கு உண்டு” என்று சொல்லி நான் இயற்றிய பாடல்களில் சிலவற்றைச் +சொல்லும்படி கூறவே, நான் சொன்னேன். ஸ்ரீநிவாஸ ஐயர், “பாடம் சொல்லும் +சக்தி இருக்கிறதாவென்று நாம் கவனிக்க வேண்டுமே ஓழியச் செய்யுளியற்றும் +வன்மையைப் பற்றிக் கவனிக்க வேண்டுவதில்லை” என்றார். + + + +“அந்தச் சக்தி இருந்தால் வேண்டாமென்பீர்கள் போல் இருக்கிறதே?” +என்று செட்டியார் சொல்ல எல்லோ���ும் சிரித்தார்கள். + + + +ஓர் ஆசிரியர், “இப்போது அப்படிப் பாடுவாரா?” என்று கேட்டார். + + + +செட்டியார், “ஏதோனும் ஒரு விஷயத்தை எடுத்துக் கொடுத்தால் +விரைவில் அதை அமைத்துப் பாடுவார்” என்றார். + + + +எந்த விஷயத்தைப் பற்றிப் பாடச் சொல்லலாமென்று எல்லோரும் +யோசிக்கையில், செட்டியார் சேஷையர் விஷயமாகச் செய்யலாமென்றார். +சேஷையரோ ஆராவமுதன் விஷயமாக இருக்கட்டுமென்றார். மற்றொருவர் +“ஆராவமுதன் விஷயமாக ஒரு பழைய பாடலைச் சொன்னாலும் +சொல்லிவிடலாம்” என்று சொல்லிவிட்டு, ஸ்ரீநிவாசையர் விஷயமாகச் +செய்யலாமென்றார். ஸ்ரீநிவாசையர், “இங்கே இருப்பவர்களுக்கெல்லாம் +தமிழாசிரியர் செட்டியாரவர்கள் அவர்கள் விஷயமாகச் செய்வது தான் +பொருத்தமாக இருக்கும்” என்றார். சேஷையருள்பட எல்லாரும் அதற்குச் +சம்மதித்தார்கள். + + + +“கடைசியில் என்னிடமே தள்ளிவிட்டீர்களா? சரி. என்ன விஷயத்தை +அமைக்க வேண்டுமோ அதையும் சொல்லி விடுங்கள்” என்றார் செட்டியார். + + + +அப்போது ஸ்ரீநிவாசையர், “மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் +நீங்கள் முதலிற் படித்தவர்கள். நான் பின்பு படித்தவன். + + + + இதனால் ஜேஷ்ட கனிஷ்ட முறை நம் இருவருக்கும் உண்டு. இந்த +முறையால் நீங்கள் இதுவரை பார்த்து வந்த வேலையை எனக்குச் செய்விக்க +வேண்டும். இந்தக் கருத்தை வைத்து ஐந்து நிமிஷங்களில் அறுசீர்க்கழி +நெடிலாசிரிய விருத்தமொன்று இயற்றிச் சொல்ல வேண்டும்” என்று சொன்னார். + + + +நான் சொன்ன பாடல் + + + +எல்லோரும் மௌனமாக இருந்தார்கள். செட்டியார் என் முகத்தையே +பார்த்துக் கொண்டிருந்தார். அவர் முகத்தில் கவலைக் குறி படர்ந்தது. நான் +விஷயத்தை வாங்கிக் கொண்டு மனத்துக்குள் பாடலை அமைத்து வந்தேன். +செட்டியார் என்மேல் வைத்த கண் வாங்கவில்லை. நான் பாடுவேனோ +மாட்டேனோ என்ற சந்தேகம் அவருக்கு இருந்தது போலும் நான்கு +நிமிஷங்கள் ஆயின. ஐந்தாவது நிமிஷத்தில், + + + +“வாய்ந்தபுகழ் படைத்திலங்கு மீனாட்சி + +         சுந்தரநா வலவன் பாலே + +ஏய்ந்ததமிழ் ஆய்ந்தமுறைக் கியைவுறநீ + +         இதுகாறும் இனிதின் வேய + +ஆய்ந்தவள நகர்க்குடந்தைக் காலேஜில் + +         நின்னிடமெற் களித்தல் நன்றே + +வேய்ந்ததமிழ் முதற்புலமைத் தியாகரா + +         சம்பெயர்கொள் மேன்மை யோனே” + + + +என்று கூறி முடித்ததுதான் தாமதம். செட்டியார் குதித்து எழுந்து, “என��� +வயிற்றில் பாலை வார்த்தீரையா!” என்று சொல்லிக் குதூகலம் அடைந்தார். +மற்றவர்களும், “சபாஷ்” என்றனர். + + + +நான் பாட்டுக்குப் பொருள் சொன்னேன். செட்டியார், “அந்த ‘வாய்ந்த’ +என்ற வார்த்தையைக் கண்டு சந்தோஷப்பட வேண்டும். இந்த அவசரத்தில் +அந்தமாதிரி சொல்லுவதற்கு ஐயா அவர்களிடம் படித்துப் பழகினவர்களுக் +குத்தான் தெரியும். தானே வந்து வாய்ந்த புகழைப் படைத்து விளங்குமென்று +அர்த்தம்” என்று மற்றவர்களைப் பார்த்துச் சொன்னார். + + + +பொருள் கூறி முடிக்கையில் ‘தியாகராசப் பெயர் கொள் மேன் +மையோனே’ என்பதற்கு உரை கூறிவிட்டு, “அந்தப் பெயருக்கு ஏற்றபடி +எனக்கு வேலையை அளித்தால்தான் உங்கள் பெயர் நிலைக்கும்; +இல்லாவிட்டால் நிலைக்காது” என்றேன். + + + +“இவ்வளவு விஷயங்களையும் பொருத்திச் சீக்கிரத்தில் அமைத்தது +ஆச்சரியந்தான். நான் சொன்ன கருத்தை ‘ஏய்ந்த தமிழாய்ந்த +முறைக்கு இயைவுற’ என்று சுருங்கச் சொல்லி விளங்க +வைத்திருக்கிறார்” என்று ஸ்ரீநிவாசையர் சந்தோஷமுற்றார். + + + +யாவரும் தங்கள் தங்கள் திருப்தியைத் தெரிவித்துக் கொண்டனர். +“சாயங்காலம் கோபாலராவ் அவர்களைப் பார்க்கவேண்டும். இங்கேயே +தங்கியிருங்கள். நான் வந்து அழைத்துப் போகிறேன்” என்று சொல்லிவிட்டுச் +செட்டியார் தம் வீடு சென்றார். மற்றவர்களும் தங்கள் இருப்பிடங்களுக்குச் +சென்றனர். + + + +அன்று சேஷையர் வீட்டிலேயே போஜனம் செய்து கொண்டேன். +பிற்பகல் ஐந்து மணிக்குச் செட்டியார் என்னைக் கோபாலராவ் வீட்டிற்கு +அழைத்துச் சென்றார். புஸ்தகக் கட்டுகளும் எங்களுடன் வந்தன. அங்கே +சேஷையர், ஹனுமந்த ராவ், ஸ்ரீநிவாசையர் முதலிய ஆசிரியர்களும் +வந்தார்கள். + + + +கோபால ராவின் காட்சி + + + +கோபால ராவ் அப்போது மெத்தையில் இருந்தார். எப்போதும் +புஸ்தகங்களுடன் உறவாடும் அப்பெரியார் தனியே இருந்து படித்து +இன்புற்றுக்கொண்டே இருப்பவர். அவரை அணுகுவதற்கு யாவரும் +அஞ்சுவார்கள். + + + +நாங்கள் கீழே உள்ள ஹாலில் இருந்தோம். எல்லோரும் வந்த +விஷயத்தை எப்படித் தெரிவிப்பது என்று யோசித்திருக்கும்போது ஹனுமந்த +ராவ் துணிவுடன் மேலே சென்று விஷயத்தைத் தெரிவித்து வந்தார். + + + +கோபால ராவ் வருகையை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்தோம். சிறிது +நேரத்திற்குப் பின் இவர் மெல்லப் படிகளில் இறங்கி வந்தார். பரிசுத்தமான +உடையு���், விசாலமான பார்வையும், நெற்றியிலுள்ள திலகமும் அவருடைய +கம்பீரமான தோற்றத்துக்கு அங்கங்களாக இருந்தன. தூய்மையே அவர் வடிவம் +என்னும்படி இருந்தது அக்காட்சி. அவரைக் கண்டவுடன் அஞ்சலி +செய்துவிட்டுச் செட்டியார், “நான் முன்னமே இவ்விடத்தில் விஞ்ஞாபனம் +செய்து கொண்டபடி என் ஸ்தானத்திற்குக் குறிப்பிட்டவரை அழைத்து +வந்திருக்கிறேன். இங்கே அவரைப் பரீக்ஷித்துப் பார்க்கவேண்டும்” என்றார். +அப்போது அவர், “நீங்கள் சொல்வதே போதும்; நான் பரீக்ஷை +செய்யவேண்டியது அவசியமில்லை. உங்கள் வாக்கே எனக்குப் பிரமாணம்” +என்றார். அப்போது நான் பண்டார சந்நிதிகள் கொடுத்திருந்த கடிதத்தைக் +கொடுத்தேன். அதை அவர் படித்துப் பார்த்தார். அப்பால் சேஷையர் +ஆங்கிலத்தில் அவரோடு பேசத் தொடங்கினார். மடத்தின் பெருமையையும், பிள்ளையவர்கள் +பெருமையையும், நான் அங்கே படித்தவனென்பதையும், நான் அங்கே பாடம் +சொல்லி வந்ததையும், காலையில் நிகழ்ந்த எல்லாவற்றையும் அவர் விரிவாக +எடுத்துச் சொன்னார். கோபாலராவ் என்னை ஒரு முறை எற இறங்கப் +பார்த்தார். + + + +அப்போது ஸ்ரீநிவாசையர் என்னைப் பார்த்து, “காலையில் நீங்கள் +செய்த பாடலை இங்கே சொல்லிக் காட்டுங்கள்” என்றார். எனக்கு அது +ஞாபகமில்லாமையால் எந்த எந்த வார்த்தைகள் இருந்தனவென்று +யோசித்தேன். அதைச் சொல்லக் கால் மணிக்கு மேலாயிற்று. ஸ்ரீநிவாசையர், +“காலையில் ஐந்து நிமிஷத்தில் சொல்லி விட்டீர்களே! இப்போது ஏன் தாமதம் +ஆகிறது?” என்றார். “வேறு புதிய செய்யுள் செய்யச் சொன்னால் உடனே +சொல்லி விடுவேன். அதே பாடலைச் சொல்லச் சொன்னதால் பதங்களை +ஞாபகப் படுத்திக் கொண்டிருந்தேன்” என்று சமாதானம் சொன்னேன். + + + +“செய்யுள் எளிய நடையில் இருக்கிறது. இங்கிலீஷில் அப்படி +யிருப்பதுதான் உயர்வு என்று சொல்வார்கள்” என்று கோபாலராவ் சொன்னார். +அப்போது ஆயிரம் பேர்கள் சேர்ந்து என்னைப் பாராட்டியதைப் போன்ற +சந்தோஷத்தை அடைந்தேன். + + + +எழுதாக் கிளவி + + + +அப்பால் செட்டியார் தாம் கொண்டுவந்த புஸ்தகங்களைக் காட்டி, +“எந்தப் புஸ்தகத்தையேனும் எடுத்துக் கொடுத்து இவரைப் பரீக்ஷை +செய்யலாம்” என்றார். கோபாலராவ் “அவசியமில்லை” என்று சொல்லச் +செட்டியார் பின்னும் வற்புறுத்தவே அவர் ஒரு புஸ்தகத்தை எடுத்துப் பிரித்து +என் கையில் அளித்தார். அது கம்�� ராமாயணம் அயோத்தியா காண்டத்தில் +மந்தரை சூழ்ச்சிப் படலத்தின் ஆரம்பமாக இருந்தது. + + + +அப் பகுதியை முதலிலிருந்தே படித்துப் பொருள் சொன்னேன். கேட்ட +கோபால ராவ் திருப்தியுற்றுச் செட்டியாரைப் பார்த்து, “நீங்கள் சொன்னது சரி. +நான் ஆக்ஷேபிக்க இடமில்லை; நீங்களும் மற்ற ஆசிரியர்களும் ஏகோபித்துச் +சொல்லுவதைக் காட்டிலும் வேறு சாட்சி என்ன வேண்டும்? தங்களுடைய +‘டயம்டேபிளை’ இவரிடம் கொடுத்துவிடுங்கள். வருகிற திங்கட்கிழமை முதல் +இவர் காலேஜில் வேலை பார்க்கட்டும்” என்று சொன்னார். நேரில் சொன்ன +அந்த வார்த்தைகளே எனக்குக் கிடைத்த உத்தரவு. நான் விண்ணப்பமெழுதிப் +போடாமலே கிடைத்த உத்தரவு அது. எழுதாக் கிளவியாகிய அது பல +வருஷங்கள் சென்றும் என் காதில் இன்னும் ஒலிக்கிறது. + +------------ + + + + + +83. காலேஜில் முதல் நாள் அனுபவம் + + + +கோபாலராவ் என்னை ஏற்றுக் கொண்டு கூறிய வார்த்தைகள் தியாகராச +செட்டியாரைப் பேருவகையில் ஆழ்த்தின. பல காலமாக யோசித்து வைத்து மிக +முயன்று பக்குவமாக என்னைத் திருவாவடுதுறை மடத்திலிருந்து அழைத்து +வந்தவராதலின் தம் முயற்சி பலிக்க வேண்டுமே என்பதில் அவருக்கு மிக்க +கவலை இருந்து வந்தது, எப்படியாவது தாம் நினைத்த காரியத்தை நிறைவேற்ற +வேண்டுமென்ற மனத்திண்மையுடன் அவர் முயன்று எண்ணியபடியே +நிறைவேற்றினார். + + + +என் வேண்டுகோள் + + + +கோபாலராவ் எனக்கு உத்தரவு செய்ததை ஏற்றுக்கொண்ட நான் +மிகவும் பணிவாக அவரை நோக்கி, “நான் இந்த வேலைக்குப் புதியவன். +காலேஜ் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் முறையைச் சில +நாட்கள் என்னுடனிருந்து கற்பிக்க வேண்டுமென்று செட்டியாரவர்களுக்கு +அனுமதி அளிக்க வேண்டும்” என்ற கேட்டுக்கொண்டேன். + + + +செட்டியார், “இவர் சும்மா சொல்கிறார். மடத்திலிருந்து பெரிய +நூல்களைப் பாடம் சொன்ன இவருக்கு இங்கே பாடம் சொல்லுவது +லட்சியமன்று. என்னைக் காட்டிலும் பல விஷயங்களில் இவர் சமர்த்தர். ‘லக்ஷம் +பாடல்கள் வரையில் படித்திருக்கிறார்” என்று புன்முறுவலுடன் கூறினார். + + + +அப்பால் எல்லோரும் பிரின்ஸிபாலிடம் விடை பெற்றுச் சென்றோம். +நான் குடும்பத்தை அழைத்து வரும் வரையில் தம்முடைய இல்லத்திலேயே +போஜனம் வைத்துக் கொள்ளலாம் என்று சாது சேஷையர் கூறியபடி +அங்கேயே தங்கி வந்தேன். அதுவரையில் அன்று நிகழ்ந்தவற்ற��யெல்லாம் +என் பெற்றோர்களிடமும் பண்டாரசந்நிதிகளிடமும் உசிதமாகத் தெரிவிக்கும்படி +என்னுடன் இருந்த கணபதி ஐயரைத் திருவாவடுதுறைக்கு அனுப்பினேன். + + + +பிள்ளையவர்கள் நினைவு + + + +மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (15-2-1880) காலையில் செட்டியாருடைய +வீட்டுக்குப் போய் அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். + + + + எனக்கு வேலை கிடைத்ததைப் பற்றிய சந்தோஷத்தை அவர் +பலவாறாகத் தெரிவித்ததோடு அவ்வேலைக்கு வேறு பலர் முயற்சி +செய்ததையும் சொன்னார். “என்னிடம் படிக்கிறவர்களில் தக்கவர்கள் சிலர் +இருக்கிறார்கள். முத்திச் சிதம்பரம் பிள்ளை எனக்கு மிக்க பிரியமானவர். +அவருக்கு இந்த வேலையைச் செய்விக்கலாம் என்று கூட ஒரு சமயம் நான் +நினைத்ததுண்டு. என்னருகில் இருக்கும் சதாசிவ செட்டியாரென்னும் என் +மாணாக்கர் தமக்குத் தெரிந்த ஒருவரை நியமிக்க வேண்டுமென்று சொன்னார். +அன்றியும் நேரே பிரின்ஸிபாலுக்குச் சிலர் விண்ணப்பம் செய்திருப்பதாகவும் +தெரிகிறது. இவ்வளவு பேர்களுக்கிடையே உங்களை இங்கே அழைத்து +வந்துவிட வேண்டுமென்ற ஞாபகமே எனக்குப் பலமாக இருந்தது. அதை +எல்லோரிடமும் நான் வெளிப்படுத்தவில்லை. ராயரவர்களிடமும் வேறு சில +ஆசிரியர்களிடமுமே தெரிவித்திருந்தேன். ஐயா அவர்கள் காலத்திலேயே +உங்களுக்கு ஒரு வேலை கிடைக்க வேண்டுமென்பது என் விருப்பம். அதற்கு +நீங்கள் சம்மதிக்கவில்லை. ஐயாவுக்கும் உங்களைப் பிரிவதில் திருப்தியில்லை. +அப்பொழுது வேலைக்குப் போகாமல் இருந்ததும் ஒரு விதத்தில் நல்லதாயிற்று. +இப்போது ஐயா அவர்கள் இருந்தால் எல்லோரைக் காட்டிலும் மிக்க +சந்தோஷத்தை அடைவார்கள். அவர்கள் இல்லாவிட்டாலும் ஸந்நிதானமாவது +கண்டு திருப்தி அடையும்படி இருக்கிறதேயென்று ஆறுதலடைகிறேன். இந்த +ஸ்தானம் மிகவும் மதிப்புள்ளது. வர வர இதன் மதிப்பு அதிகமாகுமே யொழிய +ஒரு நாளும் குறையாது. ஐயாவிடம் படித்து ஐயாவுடைய அன்புக்குப் +பாத்திரமாக இருந்த நீங்கள் யாதொரு தடையும் இன்றி இந்த நிலைக்கு +வருவதற்கு அவர்களுடைய உள்ளன்பே காரணமாகுமென்று நான் உறுதியாகச் +சொல்லுவேன்” என்று செட்டியார் சொல்லி வந்தார். + + + +எனக்கு உடனே பிள்ளையவர்கள் ஞாபகம் வந்துவிட்டது. தியாகராச +செட்டியார் கூறியவையெல்லாம் உண்மை என்பதை என் உள்ளம் உணர்ந்தது. +“ஆம்; பிள்ளையவர்கள் இருந்தால் அவர்கள் அடைய���ம் சந்தோஷத்துக்கு +எல்லை காண முடியாதுதான்” என்று எண்ணினேன். என் அகக் கண்ணில் +தாயனைய அப்புலவர் பெருமானுடைய சாந்தம் ததும்பிய முகத்தைக் கண்டேன். + + + +அந்த நினைவிலே லயித்திருந்த என்னைச் செட்டியார் தொடர்ந்து +பேசிய பேச்சு சுய நினைவுக்குக் கொணர்ந்தது. “உலகம் மிகப் பொல்லாதது; +ஜாக்கிரதையாக இருந்து நல்ல பெயர் வாங்க வேண்டும். நமக்குக் கௌரவம் +உண்டாவது படிப்பினாலேதான். அந்தப் படிப்பைக் கைவிடாமல் மேன் மேலும் +ஆராய்ந்து விருத்தி செய்து கெள்ள வேண்டும். காலேஜ் பிள்ளைகளிடம் நாம் +நடந்து கொள்ளும் முறை சரியானபடி இருந்தால் அவர்களுடைய அன்பைப் +பெறலாம். பாடங்களைத் தெளிவாகச் சொல்ல வேண்டும், அடிக்கடி நடந்த +பாடங்களில் கேள்வி கேட்க வேண்டும்; மற்ற ஆசிரியர்களிடமும் +ஜாக்கிரதையாகப் பழகவேண்டும்” என்று அவர் பின்னும் பல போதனைகளை +எனக்குச் செய்தார். + + + +பிறகு திங்கட்கிழமை நல்ல வேளையில் காலேஜுக்குப் போக +வேண்டுமென்று எண்ணி ஜோஸியரைக் கண்டு பார்த்த போது 12 மணிக்குமேல் +நல்லவேளை யென்று தெரிந்தது. + + + +“நாளைக்குப் பதினொன்றரை மணிக்கு ஸித்தமாக இருந்தால் நான் +காலேஜுக்குப் போய்ச் சொல்லியனுப்புகிறேன். அப்போது வரலாம்” என்று +செட்டியார் சொல்லி எனக்கு விடை கொடுத்தனுப்பினார். + + + +அன்று மாலையில் முக்கியமான ஆலயங்களுக்குச் சென்று ஸ்வாமி +தரிசனம் செய்து வந்தேன். + + + +காலேஜ் பிரவேசம் + + + +திங்கட்கிழமை பகற்போஜனம் செய்து விட்டுச் சேஷையர் வீட்டில் +காத்திருந்தேன். பதினொன்றரை மணிக்குச் செட்டியார் உத்தரவுப்படி +காலேஜிலிருந்து இரண்டு மாணாக்கர்கள் என்னை அழைக்க வந்தார்கள். நான் +சுப்பிரமணிய தேசிகர் அளித்த உடைகளில் சட்டையை அணிந்து அதன் மேல் +துப்பட்டாவைப் போர்த்துத் தலையில் சால்வையைக் கட்டிக் கொண்டு +சென்றேன். அந்தக் கோலத்தை இப்போது நினைத்துப் பார்க்கையில் எனக்கே +சிரிப்பு வருகிறது. + + + +காலேஜின் தாழ்வாரத்தில் மேலைக் கோடியிலுள்ள ஒரு தூணருகில் +தியாகராச செட்டியாரும், ஆர். வி. ஸ்ரீநிவாசையரும் என்னை எதிர்பார்த்து +நின்று வரவேற்று அழைத்துச் சென்றார்கள். நல்ல வேளையென்று +குறிப்பிட்டிருந்தகாலம் தமிழ்ப்பாடம் இல்லாதவேளை. அவ்விருவரும் எப். ஏ. +இரண்டாம் வகுப்புக்கு என்னை அழைத்துச் சென்றனர். அங்கே பாடம் +நடத்திய ஹனுமந்தராவிடம் ம���ன்பே, “இவர் நல்ல வேளையில் பாடம் சொல்ல +வேண்டியிருப்பதால் உங்கள் மணியை இவருக்குக் கொடுக்க வேண்டும்” என்று +தெரிவித்திருந்ததனால் நாங்கள் வகுப்புக்குள் புகுந்தவுடன் ஹனுமந்தராவ் தம் +ஆசனத்தை விட்டு எழுந்து எங்களை வரவேற்றார். + + + +“இப்படி உட்காருங்கள்” என்று மேடையின் மீதிருந்த நாற்காலியை +எனக்குச் சுட்டிக்காட்டினார் ஹனுமந்தராவ். எனக்கு அவ்வளவு பேர்களுக்கு +முன்னால் அங்கே இருப்பதற்குத் துணிவு உண்டாகவில்லை. + + + +என் கருத்தை அறிந்த செட்டியார், “இது திருவாவடுதுறை மடமன்று; +இந்த இடத்தில் உட்கார வேண்டியது உங்கள் கடமை” என்று சொல்லவே +நான் போய் நாற்காலியில் அமர்ந்தேன். எதிரே இருந்த பெஞ்சில் +ஹனுமந்தராவ், ஸ்ரீநிவாசையர், தியாகராச செட்டியாரென்பவர்களும் ஓய்வுள்ள +வேறு சில ஆசிரியர்களும் இருந்தனர். அந்த வகுப்பில் எழுபது +பிள்ளைகளுக்கு மேல் இருந்தனர். முன் வரிசையில் கவர்ன்மெண்டு +ஸ்காலர்ஷிப் பெற்ற இருபது பிள்ளைகள் உட்கார்ந்திருந்தனர். வகுப்பிலிருந்த +பிள்ளைகளிற் பலர் என்னைக் காட்டிலும் பிராயத்தில் முதிர்ந்தவர்களாகத் +தோற்றினர். + + + +பாடம் ஆரம்பம் + + + +விநாயகக் கடவுளையும் வேறு தெய்வங்களையும் மனத்தில் தியானித்துக் +கொண்டு பாடம் சொல்லத் தொடங்கினேன். நாலடியாரில், “இரவச்சம்” +என்னும் அதிகாரத்தை முதலிலிருந்து சொன்னேன். + + + +மடத்தில் பாடம் சொன்ன பழக்கத்தால் எனக்கு அங்கே சொல்வதில் +அச்சமோ சோர்வோ உண்டாகவில்லை. முதற் செய்யுளை சங்கராபரண +ராகத்தில் நிறுத்திப் படித்தேன். பள்ளிகூடப் பிள்ளைகளை ஓரளவு +சங்கீதத்தால் வசப்படுத்தலாமென்பதை அனுபவத்தால் தெரிந்து கொண்டேன். + + + +நான் பாடம் சொல்லத் தொடங்கிய செய்யுள் வருமாறு: + + + +“நம்மாலே யாவரிந் நல்கூர்ந்தார் எஞ்ஞான்றும் + +தம்மாலாம் ஆக்கம் இலரென்று-தம்மை + +மருண்ட மனத்தார்பின் செல்பவோ தாமும் + +தெருண்ட அறிவி னவர்.” + + + +[இதன் பொருள்: ‘இந்த ஏழைகள் நம்மாலே முன்னுக்கு வருபவர்கள்: +இவரால் தமக்கோ, நமக்கோ உண்டாகும் லாபம் ஒன்றுமில்லை’ என்று தம் +செல்வத்தைப் பெரிதாக எண்ணி மயங்கிய மனத்தையுடையவர்களைப் பின் +தொடர்ந்து தெளிந்த அறிவுடையவர்கள் செல்வார்களோ? நல்கூர்ந்தார்- +றியவர். ஆக்கம்-விருத்தி. மருண்ட- மயங்கிய, செல்பவோ-செல்வார்களோ? +தெருண்ட-தெளிந்த.] + + + + பொருள் சொல்லும் போது, உலகத்திலே பணக்காரர்கள் இறுமாப்பினால் +ஏழைகளை அவமதிப்பதையும் ஓர் உதவி செய்துவிட்டால் அதைத் தாங்களே +பெரிதாகச் சொல்லி அவ்வுதவி பெற்றவர்களை இழிவாகப் பேசி, ‘இந்த +உதவியை இவரிடம் பெறும்படி நம்மைத் தெய்வம் ஏன் வைத்தது!’ என்று +அவ்வேழைகள் தம்மைத் தாமே நொந்து கொள்ளும்படி செய்வது +முதலியவற்றையும் எடுத்துரைத்தேன். ஒரு பாடலைப் பாடம் சொல்லும்போது, +வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் மாத்திரம் சொல்லி நிறுத்தினால் +கேட்பவர்களுடைய மனம் அதில் பொருந்தாது. அதனால், உபமானங்களையும், +உலக அனுபவச் செய்திகளையும் எடுத்துச் சொல்லி மாணாக்கர்களுடைய +மனத்தைப் பாட்டின் பொருளுக்கு இழுத்தேன். + + + +ஐந்து பாடல்கள் அந்த மணியில் முடிந்தன. இடையே, யாசகம் +செய்வதனால் உண்டாகும் இழிவைப் பற்றி நான் மேற்கோள்கள் சொன்னபோது +செட்டியார் குசேலோபாக்கியானத்திலிருந்து, “பல்லெலாந் தெரியக் காட்டி” +என்னும் செய்யுளை எடுத்துச் சொல்லி அவ்விஷயத்தைப் பின்னும் +விளக்கினார். + + + +இரண்டாவது பாடம் + + + +மணி அடித்தவுடன் நான் முன்னே வேறு வகுப்பிற்குச் சென்றேன். +செட்டியார் பிள்ளைகளைத் தனியே அழைத்து, நான் பாடம் சொன்னதைப் +பற்றி அவர்களுடைய அபிப்பிராயத்தைக் கேட்டார். பிள்ளைகள் தங்களுக்கு +மிக்க திருப்தியாக உள்ளது என்று தெரிவித்தார்கள். + + + +“நான் மிகவும் கஷ்டப்பட்டு இவரை அழைத்து வந்திருக்கிறேன். +இவரிடத்தில் மரியாதையாக இருங்கள். என்னிடம் இருப்பது போலவே +இவரிடமும் இருக்க வேண்டும்” என்று செட்டியார் அவர்களை நோக்கிச் +சொல்லி விட்டுச் சிலரை இன்னார் இன்னாரென்று எனக்குப் பின்பு +தெரிவித்தார். + + + +அடுத்த மணியில் பி. ஏ. முதல் வகுப்புக்குப் பாடம் சொல்லப் +போனேன். செட்டியாரும் வேறு சில ஆசிரியர்களும் உடன் வந்தார்கள். +சேஷையர் விருப்பத்தின்படி ஸம்ஸ்கிருத பண்டிதராகிய பெருகவாழ்ந்தான் +ரங்காசாரியரும் வந்தார். அங்கே இராமாயணத்தில் அகலிகைப் படலம் பாடம் +சொல்லத் தொடங்கினேன். முதற் பாட்டைச் சகானா ராகத்தில் படித்துவிட்டுப் +பொருள் சொல்லலானேன். + + + +நான் பாடம் சொல்லும் போதெல்லாம் பிள்ளைகள் என்னையே +பார்த்துக் கவனித்து வந்தார்கள். செட்டியாரோ அவர்களில் +ஒவ்வொருவர் முகத்தையும் பார்த்து வந்தார். எல்லோருடைய +முகத்திலும் திருப்தியின் அடையாளம் இருந்ததை அவர��� உணர்ந்து தாமும் +திருப்தியுற்றார். இவ்வாறு இருந்த சமயத்தில் நான் சொன்ன ஒரு விஷயத்தை +ரங்காசாரியார் எழுந்து ஆட்சேபித்தார். நான் சமாதானம் சொல்லத் +தொடங்குகையில் செட்டியார் எழுந்து மிக விரைந்து அவரிடம் சென்று +அஞ்சலி செய்து, “ஸ்வாமிகள் இந்த ஸமயம் ஒன்றும் திருவாய் மலர்ந்தருளக் +கூடாது. இவர் பிள்ளைகளுக்குப் பொருள் விளங்கச் சொல்லுகிறாரா என்பதை +மட்டும் கவனித்தாற் போதும். ஆட்சேபம் பண்ணக்கூடிய சமயம் அல்ல இது. +இவரோ சிறு பிள்ளை. நீங்களோ பிராயம் முதிர்ந்தவர்கள். ஸம்ஸ்கிருத +பாரங்கதர். ஏதேனும் தவறிவிட்டால் என்னுடைய இஷ்டம் பூர்த்தியாகாது. +க்ஷமித்தருளவேண்டும்” என்று சொல்லி மீண்டும் தம் இடத்தில் போய் +அமர்ந்தார். மற்ற இடங்களில் செட்டியார் தைரியமாகப் பேசிப்பிறரை +அடக்குவதைக் கண்டிருந்த நான் அப்போது காலேஜிலும் அப்படிச் செய்வதில் +அவர் பின் வாங்கார் என்பதை உணர்ந்தேன். + + + +மேலே பாடம் நடந்தது. “வைகுந்தத்திற்குச் சென்ற வித்தியாதரப் +பெண்மணி ஒருத்தி திருமகளைத் தோத்திரம் செய்து பாட அத்தேவி மகிழ்ந்து +ஒரு மாலையைக் கொடுக்க அதனை வாங்கி அந்தப் பெண்மணி தன் யாழிற்குச் +சூட்டினாள்” என்ற செய்தி அகலிகைப் படலத்தில் வருகிறது. + + + +“அன்ன மாலையை யாழிடைப் பிணித்து” + + + +என்று ஒரு பாடல் தொடங்குகிறது. அதற்கு நான் அர்த்தம் +சொல்லும்போது இடையே செட்டியார், “இந்தக் காலத்துப் பிள்ளைகளானால் +பக்கத்திலுள்ள தங்கள் நாயின் கழுத்தில் அதை மாட்டுவார்கள்” என்றார். +யாவரும் கொல்லென்று சிரித்தனர். + + + +பிற்பகல் நிகழ்ச்சிகள் | + + + +அந்த மணி முடிந்தது. இடை நேரத்திலே ஆகாரம் செய்து விட்டு +வந்தேன். பிற்பகலில், எப். ஏ. முதல் வகுப்புக்குச் சென்றோம். அங்கே 80 +பிள்ளைகளுக்கு மேல் இருந்தார்கள். நன்னூல் எழுத்தியல் ஆரம்பமாயிற்று. +முதல் சூத்திரத்தை நான் சொல்லிவிட்டு, “மேலே சில சூத்திரங்களை நீங்களே +சொல்லி அந்த முறையை எனக்குக் கற்பிக்க வேண்டும்” என்று செட்டியாரை +வேண்டிக் கொண்டேன். அவர் அப்படியே சொல்லிக் கேள்விகளும் கேட்டார். +எனக்குப் பல விஷயங்கள் அப்போது தெரிந்தன. + + + +பிறகு, பி. ஏ. இரண்டாவது வகுப்புக்குச் சென்றோம். அந்த வகுப்பில் +இருந்தவர்கள் செட்டியாரிடம் மூன்று வருஷங்கள் பாடம் கேட்டவர்கள். அந்த +வருஷம் பரீக்ஷைக்குப் போக வேண்டியவர���கள். புதுக்கோட்டையில் +பிரின்ஸிபாலாக இருந்த எஸ். ராதா கிருஷ்ணையர். கோயம்புத்தூரில் சிறந்த +வக்கீலாக விளங்கிய பால கிருஷ்ணையர், திருநெல்வேலி ஹிந்து காலேஜில் +ஆசிரியராக இருந்த சீதாராமையர் முதலிய பன்னிரண்டு பேர்கள் +அவ்வகுப்பில் இருந்தார்கள். + + + + கம்ப ராமாயணத்தில் நாட்டுப் படலம் பாடமாக இருந்தது. “வாங்கரும் +பாத நான்கும் வகுத்தவான் மீகியென்பான்” என்ற பாடலைச் சொல்லிப் +பொருள் கூறிவிட்டு இலக்கணக் கேள்விகள் கேட்கலானேன். + + + + ஒரு மாணாக்கரை, “வாங்கரும் பாதமென்பதிலுள்ள அரும்பாதம் +என்பது என்ன சந்தி?” என்று கேட்டேன். அவர், “பெயரெச்சம்” என்றார். +பண்புத் தொகையாகிய அதைப் பெயரெச்சமென்று பிழையாகச் சொல்லவே, +அங்கிருந்த செட்டியார் உடனே தலையில் அடித்துக்கொண்டு, “என்ன +சொல்லிக் கொடுத் தாலும் சில பேருக்கு வருகிறதில்லை. மூன்று வருஷம் +என்னிடம் பாடம் கேட்டவன் இப்படிச்சொன்னால் எனக்கல்லவா அவமானம்?” +என்று அந்த மாணாக்கரை நோக்கிச் சொல்லிவிட்டு என்னைப் பார்த்து, +“தள்ளாத வயசில் நான் எவ்வளவு சொல்ல வேண்டுமோ அவ்வளவு +சொல்லாமல் இருந்திருப்பேன். அதனால் தான் வேலையை விட்டு நீங்குகிறேன். +நீங்கள் நன்றாகச் சொல்லிக் கொடுங்கள்” என்றார். + + + + மேலே நான் பாடம் சொன்னேன். மணி அடித்தது. உடனே நாங்கள் +காலேஜை விட்டுப் புறப்பட்டோம். + + + + முதல் நாளாகிய அன்றே எனக்கு, ‘நம் வேலையை நன்றாகச் +செய்யலாம்’ என்ற தைரியம் பிறந்தது. பிள்ளைகளுக்கும், மற்ற +ஆசிரியர்களுக்கும், எல்லோருக்கும் மேலாகத் தியாகராச செட்டியாருக்கும் +நான் அந்தப் பதவிக்கு ஏற்றவனென்ற திருப்தி உண்டாயிற்று. + +--------------- + + + + + +84. எனக்கு உண்டான ஊக்கம் + + + + இரண்டாம் நாள் (17-2-1880) நான் வழக்கப்படி காலேஜு க்குச் சென்று +பாடங்களை நடத்தினேன். தியாகராச செட்டியார் அன்று மூன்று மணிக்கு +மேல் வந்து நான் பாடம் +சொல்லுவதைக் கவனித்துக் கொண்டிருந்தார். மூன்றே முக்கால் மணிக்கு மேல், +ஸ்ரீநிவாசையர் செட்டியாரிடம் வந்து, “இன்று நான்கு மணிக்கு மேல் தமிழ்ப் +பாடம் எந்த வகுப்பிற்கு என்று ராயர் கேட்டார். அந்த வகுப்பிற்கு அவர் ஒரு +வேளை வரலாம். ஜாக்கிரதையாகப் பாடம் சொல்லச் சொல்லுங்கள்” என்று +கூறிச் சென்றார். வகுப்பு விட்டவுடன் செட்டியார் என்னிடம் இதைச் +சென்னதன்றி “ராயரைக் கண்டு பயந்த�� ஏதாவது உளறி விடாமல் +ஜாக்கிரதையாகச் சொல்லுங்கள். நாங்களெல்லாம் திருப்தி அடைவது +முக்கியமன்று. அவருடைய திருப்திதான் முக்கியம். அவருக்கு நல்ல +அபிப்பிராயத்தை உண்டாக்க வேண்டும்” என்று எச்சரிக்கை செய்தார். + + + +கோபால ராவ் வரவு + + + +பி. ஏ. இரண்டாவது வகுப்புக்குள் நான் சென்றேன். செட்டியாரும் +உடன் வந்தார். அங்கே நன்னூல் பாடம் நடத்தத் தொடங்கினேன். +பெயரியலில், “ஒன்றே யிருதியிணைத் தன்பாலேற்கும்” என்னும் சூத்திரத்தைச் +சொல்லி வந்தேன். அப்பொழுது ஒரு சேவகன் நாற்காலி ஒன்றை எடுத்து +வந்து என் பக்கத்தில் போட்டான். அடுத்த நிமிஷம் கோபால ராவ் வந்தார். +உடனே எழுந்து அஞ்சலி செய்தேன். “நீங்கள் சும்மா இருந்து பாடத்தை +நடத்துங்கள்” என்று சொல்லி விட்டு அவர் அந்த நாற்காலியில் அமர்ந்தார். +நான் சூத்திரத்திற்கு உரையும் உதாரணங்களும் சொல்லி விட்டுக் கேள்விகள் +கேட்டேன். ராயர் ஒரு மாணாக்கரிடமிருந்து ஒரு நன்னூல் புஸ்தகத்தை +வாங்கிக் கையில் வைத்துக் கொண்டு கவனித்து வந்தார். + + + +அவர் அங்கே இருந்ததில் எனக்குச் சிறிதும் அதைரியம் +ஏற்படவில்லை. ஊக்கத்துடனே சொல்லி வந்தேன். அவர் நன்னூலை நன்றாகக் +கற்றவரென்பதைத் தியாகராச செட்டியார் என்னிடம் முன்பே சொல்லியிருந்தார். +அதனால் எனக்குப் பின்னும் தைரியமே பிறந்தது. நன்னூலை இளமை +தொடங்கியே நான் படித்துப் பல வகையாக ஆராய்ந்து சிந்தித்து ஒழுங்கு +படுத்தி ஞாபகத்தில் வைத்திருந்ததால் அதனைப் பாடம் சொல்லுவது எனக்கு +மிகவும் சாதாரணமாக இருந்தது. நான் முன்னும் பின்னுமுள்ள செய்திகளோடு +இயைத்து விஷயங்களை விளக்கினேன். நூல் முற்றும் படித்த ராயர் +அவற்றிலிருந்து என் பயிற்சியை உணர்ந்து திருப்தியடையக் கூடும் என்ற +நம்பிக்கையோடு நான் பாடம் சொன்னேன். + + + +மற்றச் சமயங்களில் இடையே ஏதாவது சொல்லியும் கேள்வி கேட்டும் +வந்த செட்டியார் அப்பொழுது ஒன்றும் பேசாமல் எல்லாவற்றையும் கவனித்து +வந்தார். ராயர் முகத்தில் ஏற்படும் விருப்பு +வெறுப்புக்குறிப்புக்களினால் அவரது அபிப்பிராயத்தை அறிய முயன்றார். + + + +ஆனால், கோபால ராவ் முகத்தில் புதிய குறிப்பு ஒன்றையும் அவர் +காணவில்லை. எப்பொழுதும் உள்ளது போன்ற மலர்ச்சி இருந்தது. தம்முடைய +விருப்பு வெறுப்புக்களை அவ்வப்போது வெளிப்படுத்தும் இயல்புடையர் +அ��்லர் அவர். கம்பீரமான தன்மையினர். அவருடைய அபிப்பிராயத்தை +எளிதில் யாவரும் அறிந்து கொள்ள முடியாது. செட்டியார் ஒரு குறிப்பும் +அறியாத வராகிச் சங்கடப்பட்டுக் கொண்டே இருந்தார். + + + +செட்டியாரின் ஆவல் + + + +மணி ஐந்து அடித்தது. கோபால ராவ், தம் கையில் உள்ள புஸ்தகத்தை +உரிய மாணாக்கரிடம் கொடுத்து விட்டு எழுந்தார். நானும் செட்டியாரும் +எழுந்து நின்றோம். கோபால ராவ் உள்ளத்தில் எவ்வகையான கருத்து +உண்டாயிற்றென்பதை அறிய எனக்கும் ஆவல் அதிகமாகவே இருந்தது. அதை +எவ்வாறு தெரிந்துகொள்வது? + + + +அவ் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த கிருஷ்ணையரென்னும் +மாணாக்கர் அப்போது திடீரென்று எழுந்து ராயரை நோக்கி, “ஒரு +விஞ்ஞாபனம்; மாணாக்கர்களாகிய நாங்களெல்லாரும் ‘செட்டியாரவர்கள் +வேலையை விட்டு விலகிக் கொள்கிறார்களே; இனி என்ன செய்வோம்?’ என்ற +கவலையில் நேற்று வரையில் மூழ்கியிருந்தோம். இப்போது அந்தக் கவலை +நீங்கி விட்டது. செட்டியாரவர்கள் தாம் இருந்த ஸ்தானத்துக்குத் +தக்கவர்களையே அழைத்து வந்து அளித்து எங்கள் பயத்தைப் போக்கி +விட்டார்கள்” என்று சொன்னார். + + + +அவர் அவ்வளவு தைரியமாகப் பேசியது குறித்து வியந்து அவரைப் +பார்த்தேன். செட்டியார் கண்களும் அன்புடன் அவரை நோக்கின. ராயரோ +அவரைத் திரும்பிப் பார்த்துப் புன்முறுவல் செய்து புறப்பட்டார். நாங்களும் +புறப்பட்டோம். + + + +ராயவர்களுக்கு நான் பாடம் சொன்ன விஷயத்தில் என்ன +அபிப்பிராயம் ஏற்பட்டிருக்கலாமென்ற கேள்வியைக் காலேஜ் ஆசிரியர்கள் +எல்லோரிடமும் செட்டியார் கேட்டார். + + + +“நல்ல அபிப்பிராயமாகத்தான் இருக்க வேண்டும்” என்று சிலர் +சொன்னார். ராயரோடு நெருங்கிப் பழகும் சேஷையர் முதலியோர். +“பிள்ளைகளுக்கு விளங்கும்படி சொல்கிறார் என்பதே அவர் அபிப்பிராயம் +என்று தெரிகிறது” என்றார்கள். + + + + செட்டியார் என்னைப் பார்த்து, “ராயர் இப்படியே அடிக்கடி வந்து +கவனிக்கக்கூடும். எப்பொழுது வந்து கவனித்தாலும் அதை என்னிடம் சொல்ல +வேண்டும் என்றார். + + + +மடத்து நிகழ்ச்சிகள் + + + +அந்த வாரம் முழுவதும் உத்ஸாகத்தோடு என் கடமையைச் செய்து +வந்தேன். நாள்தோறும் காலையிலும் மாலையிலும் செட்டியார் வீட்டிற்குச் +சென்று அவரோடு பேசி வருவேன். அன்றன்று நடந்தவற்றை அவரிடம் +தெரிவிப்பேன். + + + +திருவாவடுதுறையிலிருந்து ��வ்வொரு நாளும் யாரேனும் வந்து +என்னைக் கண்டு நிகழ்ந்தவற்றைத் தெரிந்து கொண்டு செல்வார். அங்கே +மடத்தில் என்னிடத்தில் படித்தவராகிய தெய்வசிகாமணி ஐயரென்பவர் சில +நாட்கள் வந்து செய்திகள் தெரிந்து சென்றார். அவர் மூலமாகச் சுப்பிரமணிய +தேசிகர் என்னைப் பற்றி அங்கே வருபவர்களிடம் சந்தோஷத்தோடு பேசி +வருவதாக அறிந்தேன். + + + +கும்பகோணத்திலிருந்து யார் போனாலும் தேசிகர் என்னைப்பற்றி +விசாரிப்பார். காலேஜில் படித்து வந்த பிள்ளைகளின் தந்தையாரோ +உறவினர்களோ மடத்துக்குப் போவார்கள். அவர்கள் தங்கள் வீட்டுப் +பிள்ளைகள் காலேஜில் படிப்பதாகவும் என்னைப் பற்றித் திருப்தியாகச் +சொல்லுவதாகவும் தெரிவிப்பார்கள். கேட்ட தேசிகர் மகிழ்ச்சியடைவார். +தமிழில் அன்பும், என்பால் அபிமானமும் உள்ள பலர் காலேஜில் பாடம் +நடக்கும்போது புறத்தே நின்று நான் பாடம் சொல்லுவதைக் கேட்டிருந்து நான் +வெளியே வந்தவுடன் தங்கள் திருப்தியைத் தெரிவிப்பார்கள். இவ்வளவும் +சேர்ந்து, ‘நாம் ஒரு புதிய வேலையை மேற்கொண்டிருக்கிறோமே; எப்படி +நிர்வகிக்கப் போகிறோம்!’ என்ற கவலை எனக்கு இம்மியளவும் இல்லாதபடி +செய்து விட்டன. + + + +திருவாவடுதுறை மடத்தில் நான் சந்தோஷமாகப் பாடம் சொல்லிக் +கொண்டிருந்தேன். அங்கே நான் அடைந்த இன்பம் ஒரு வகை, கும்பகோணம் +காலேஜில் நான் அடைந்த இன்பம் வேறு வகை. இரண்டிடங்களிலும் கட்டுப் +பாட்டுக்கடங்கி நடக்கும் நிலை இருப்பினும், மடத்தில் பல விஷயங்கள் +ஒன்றோடொன்று இணைந்திருந்தமையால், சம்பிரதாயம், மடத்து நிர்வாகம் +முதலியவற்றினிடையே தமிழ்க் கல்வியின் தொடர்பு மாத்திரம் உடையவனாக +நான் இருந்தேன். சுப்பிரமணிய தேசிகரும் பல துறைகளில் தம் கவனத்தைச் +செலுத்த வேண்டியவராக இருந்தார். காலேஜிலோ கல்வியையன்றி வேறு +விஷயங்களுக்கு இடமில்லை. எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் +கல்விக்கு இடையூறு என்பதை அங்கே காண +முடியாது. ஆகவே மடத்தில் மற்றக்காரியங்களில் ஈடுபட்டவர்களோடு கல்வி +ஒன்றையே எண்ணி வாழ்ந்த எனக்கு எல்லாம் கல்வி மயமாக உள்ள +காலேஜில் வரையறையான காலம், வரையறையான வேலை, வரையறையான +பாடம் இவற்றின் துணையுடன் பாடம் சொல்வது விளையாட்டாகவே இருந்தது. +விளையாட்டில் அதிக இன்பம் உண்டாவது இயல்புதானே? + + + +திருவாவடுதுறைக்குச் சென்றது + + + +இந்த இன்ப வாழ்வைப்பற்றி என் தாய் தந்தையருக்கும் சுப்பிரமணிய +தேசிகருக்கும் சொல்ல வேண்டுமென்று நான் துடித்துக் கொண்டிருந்தேன். +அந்த வாரம் வெள்ளிக்கிழமை காலேஜ் விட்டவுடனே போயிருப்பேன். அந்த +வேளையில் புகை வண்டியில்லை. அதனால் மறுநாள் சனிக்கிழமை பகல் +வண்டியில் புறப்பட்டுத் திருவாவடுதுறையை அடைந்து நேரே வீட்டிற்குச் +சென்றேன். என்னுடைய வரவை எல்லோரும் எதிர்பார்த்திருந்தார்கள். வீட்டு +வாசலில் என் தாயார் ஒரு தாம்பாளத்தில் மஞ்சள் நீரை வைத்துக்கொண்டு +காத்திருந்தார். என்னைக் கண்டவுடன் ஆரத்தி சுற்றி, “உள்ளே வா, அப்பா” +என்று அன்புடன் அழைத்தார். + + + +என் தாய் தந்தையார் என்னை ஆயிரம் கேள்விகள் கேட்டனர். நான் +பதில் சொன்னவாறே ஸ்நானத்தையும் போஜனத்தையும் முடித்துக் கொண்டேன். +வேலையைப்பற்றி அவர்களுக்கு ஒருவாறு சொல்லிவிட்டு மடத்திற்கு விரைந்து +சென்றேன். அப்பொழுது மிகுந்த முகமலர்ச்சியோடு சில அன்பர்களுடன் +ஒடுக்கத்தில் ஆதீனத் தலைவர் வீற்றிருந்தார். நான் போய்க் கண்டேன். +இருவருக்கும் உண்டான ஆனந்தம் இப்படியென்று எடுத்துச் சொல்வது அரிது. + + + +தேசிகரது திருப்தி + + + +“உம்மைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம். எப்படியும் நீர் ஒரு +தடையுமின்றி வேலையைப் பெற்றுக்கொள்வீரென்றும், உபாத்தியாயர்களும் +பிள்ளைகளும் நீர் பாடம் சொல்வதில் சந்தோஷப்படுவார்களென்றும் நாம் +எதிர்பார்த்ததுண்டு. அந்தப் படியே ஜயமடைந்து நல்ல பெயர் வாங்கி +வந்ததைப்பற்றி மிக்க சந்தோஷம்” என்று அவர் சொல்லிய வார்த்தைகள் என் +காதில் அமுதம்போல் விழுந்தன. ஒரு வார காலமாக அவரது இன்மொழி +களைக் கேளாமல் பசித்திருந்த என் செவிகள் திருப்தியடைந்தன. + + + + அந்த வார்த்தைகளினூடே ததும்பிய அன்பை மாந்தி நிறைந்த +உள்ளத்தோடு இருந்த எனக்கு உடனே விடை சொல்ல இயலவில்லை. சில +நிமிஷங்கள் கழித்து, “எல்லாம் ஸந்நிதானத்தின் பேரன்பே” என்று +சொல்லிவிட்டு நான் இயற்றி வைத்திருந்த பின்வரும் செய்யுளைச் +சொன்னேன்:- + + + +“அற்றார்க்குத் தாயனைய துறைசையிற்சுப் பிரமணிய + +         அமலன் றன்பால் + +கற்றார்க்குக் குறையுளதோ மற்றவன்றன் திருமுகத்தைக் + +         கண்ணிற் காணப் + +பெற்றார்க்குத் துயருளதோ வுரைப்பமிக வினிக்குமவன் + +         பெயரை வாயால் + +சொற்றார்க்குத் துயருளதோ யிரும்புவியி னாவலர்காள் + +         சொல்லுவீரே” + +[சொற்றார்க்கு-சொல்லுபவர்களுக்கு.] + + + +இச்செய்யுள் என் உள்ள மகிழ்ச்சியிலிருந்து எழுந்ததென்பதைத் தேசிகர் +உணர்ந்து கொண்டார். பிறகு ஒவ்வொரு விஷயமாக விசாரித்து வந்தார். நான் +சொல்லச் சொல்ல அவர் புதுமைகளைக் கேட்பவர்போல மகிழ்ச்சியடைந்தார். + + + +அன்பர்களது வியப்பு + + + +சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் அங்கே தங்கித் தேசிகருடைய +சல்லாபத்தில் ஒன்றியிருந்தேன். சின்னப் பண்டார ஸந்நிதியாகிய நமசிவாய +தேசிகரிடமும் விஷயங்களைத் தெரிவித்தேன். மடத்தில் உள்ள அன்பர்கள் +யாவரும் என்னைச் சுற்றிச் சூழ்ந்து ஆவலுடன் காலேஜ் விஷயங்களை +விசாரித்தார்கள். காலேஜின் பெருமையையும், புறத் தோற்றத்தையும் அறிந்த +அவர்கள் கோபாலராவின் பெருந்தன்மை, ஆசிரியர்களின் தகுதி, +மாணாக்கர்களின் இயல்பு, வகுப்புக்களின் ஒழுங்கு, அங்குள்ள சௌகரியமான +ஏற்பாடுகள் இவற்றையெல்லாம் கேட்டுக் கேட்டு ஆச்சரியத்தில் மூழ்கினர். +ஏதோ ஒரு புதிய தேசத்துக்குப் போய் வந்தவனிடம் புதுமைகளைத் தெரிந்து +கொள்ளுவதில் ஜனங்கள் எவ்வளவு வேகமாக இருப்பார்களோ அப்படியே +இருந்தார்கள் அவர்கள். + + + +இரண்டு தினங்கள் போனதே தெரியவில்லை. திங்கட்கிழமை +விடிந்தவுடன் முதல் வண்டியில் ஏறிக் கும்பகோணம் போய்ச் சேர்ந்தேன். + +------------ + + + + + +85. கோபால ராவின் கருணை + + + +திங்கட்கிழமை பாடம் சொன்னேன். செவ்வாய்க்கிழமை காலையில் +இரண்டாவது மணி எப். ஏ. இரண்டாவது வகுப்பில் நாலடியார் பாடம் நடத்தத் +தொடங்கினேன். அப்போது காலேஜைப் பார்க்க வந்த ஓர் +உத்தியோகஸ்தருக்கு அங்கங்கே உள்ள வகுப்புக்களைக் காட்டிக் கொண்டு +வந்த கோபால ராவ் நான் இருந்த அறைக்குள் அவருடன் வந்தார். +அவர்களைக் கண்டவுடன் எழுந்த என்னைக் கோபாலராவ் கையமர்த்தி விட்டு +இரண்டு நாற்காலிகளைக் கொணர்ந்து போடச் செய்து ஒன்றில் அவரை +இருக்கச் சொல்லி மற்றொன்றில் தாம் அமர்ந்தார். அதைப் பார்த்தபோது +அவர் நெடு நேரம் அவ்வகுப்பில் இருந்து பாடத்தைக் கவனிக்கக் கூடுமென்று +தோற்றியது. + + + +நான் பாடம் சொல்லத் தொடங்கினேன். கோபாலராவும் அவர் +நண்பரும் கவனித்து வந்தனர். + + + +நான் அப்போது பாடம் சொல்லத் தொடங்கிய பாடல் மிகவும் +ரஸமானது. “நமக்குச் சக்தி இருக்கும் பொழுதே தர்மத்தைப் பண்ண +வேண்டும். பிறகு செய்யலாமெ���்று நினைத்தால் அதற்குக் காலம் வராமலே +போய்விடும்” என்ற கருத்தையுடையது அது. அதன் உட்பொருளை +விளக்குவதற்காக ஒரு கதையைச் சொன்னேன். + + + +நான் சொன்ன கதை + + + +“ஒரு மனிதன் தன் வாழ்நாளில் நன்றாகச் சம்பாதித்தான். தனக்கு +வேண்டிய சௌகரியங்களைச் செய்து கொண்டான். தர்மசிந்தனை மாத்திரம் +அவனுக்கு உண்டாகவில்லை. + + + +அவனுக்கு வயசு முதிர்ந்து வந்தது. அவனுடைய குமாரர்களெல்லாம் +தலையெடுத்தார்கள். ஏதாவது கிடைத்த பொருளைப் பத்திரமாகச் சேமித்து +வைக்க அந்தக் காலத்தில் தக்க வழி இல்லை. அதனால் அவன் தனக்குக் +கிடைத்ததை ஒரு துணியில் முடிந்து எங்கேயாவது புதைத்து வைப்பான். சில +காலத்துக்குப் பிறகு அந்தக் கிழவனுக்கு நோயுண்டாகி மரணாவஸ்தை +ஏற்பட்டது. அப்பொழுது அவனால் பேச முடியவில்லை. அருகில் அவனுடைய +பிள்ளைகளும் உறவினர்களும் கூடியிருந்தனர். ஒவ்வொருவரும் அவனுடைய +கடைசி விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென்ற எண்ணத்தினால், + “என்ன வேண்டும்? என்ன வேண்டும்?” என்று +கேட்கலாயினர். + + + +“கிழவன் யமனுடன் போராடிக் கொண்டிருந்த அந்தச் சமயத்தில் +அவனுடைய நண்பனொருவன், கிழவன் பணத்தைத் தர்மத்தில் +செலவிடாமலிருந்ததைக் கண்டித்துத் தர்மம் செய்ய வேண்டுமென்று +இடித்துரைத்து வந்தான். அவன் வார்த்தைகளால் கிழவனுக்குத் தர்மம் செய்ய +வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது, தான் எங்கேயோ சுவரில் ஓரிடத்தில் +புதைத்து வைத்திருந்த சிறு பொன் முடிப்பின் ஞாபகம் அவனுக்கு வந்தது. +அதை எடுத்துத் தக்கபடி தருமம் செய்ய வேண்டுமென்ற கருத்திருந்தும், +அப்படிச் செய்யும் நிலையில் அவன் அப்போது இல்லை. தனது எண்ணத்தை +வெளிப்படையாகச் சொல்லவும் முடியாமல் அவன் வாய் அடைத்து விட்டது. +அந்தச் சமயத்தில் வேறு என்ன செய்ய முடியும்? எப்படியாவது தன் கருத்தை +மற்றவர்களுக்குத் தெரிவித்துவிட வேண்டுமென்ற ஆவல் அவனுக்கு +அதிகரித்து வந்தது. மிகவும் கஷ்டப்பட்டு ‘இவ்வளவு பெரிய பொன் முடிச்சு’ +என்பதைத் தெரிவிப்பதற்காக தன் கையினால் சுவரைக்குறிப்பிட்டு ஜாடை +காட்டினான். ஆனாலும் பக்கத்தில் இருந்தவர்களுக்கு அவன் கருத்து +விளங்கவே இல்லை. ‘ஐயோ! எதையோ கேட்கிறாரே! இந்தச் சமயத்தில் +இன்னது கேட்கிறாரென்று தெரிந்துகொள்ள முடியவில்லையே!’ என்று சிலர் +இரங்கி அழுதனர். அப்போது அவனுடைய குமாரன் ஒரு��ன், ‘தெரிந்து +விட்டது; இவருக்குப் புளிப்பு விளாங்காயின்மேல் மிக்க பிரியம் உண்டு; +அதைக் கேட்கிறார். ஐயோ, இப்போது அது கிடைக்கும் காலமல்லவே. +ஆனாலும் பார்க்கிறேன்” என்று வேகமாக ஓடினான். அவன் போய் +வருவதற்குள் கிழவன் உயிர் போய்விட்டது. + + + +“பிள்ளை, ‘ஐயோ; அவருக்குப் பிரியமான விளாங்காய் வேண்டுமென்று +ஜாடையாகச் சொன்னாரே நான் தெரிந்து கொண்டும் அதைக் கொண்டு வந்து +கொடுக்கும் பாக்கியம் இல்லாத பாவியானேனே!’ என்று வாயிலும் வயிற்றிலும் +அடித்துக்கொண்டு அழுதான். + + + +“அந்தக் கிழவன் நினைத்ததற்கும் அவன் பிள்ளை செய்ததற்கும் +சம்பந்தமே இல்லை. அவன் பொன்னைக் குறிக்கப்போய் அது புளி +விளாங்காயாய் முடிந்தது.” + + + +ராயர் சிரிப்பு + + + +இந்தக் கதையை வேடிக்கையாக விரித்துச் சொல்லி நிறுத்தினவுடன் +கோபால ராவ் பக்கென்று வாய்விட்டுச் சிரித்து விட்டார். +அவ்வளவு வெளிப்படையாக அவர் சிரித்ததை யாரும் கண்டதில்லை. +நான் சொன்ன கதையின் சுவைதான் அவரைச் சிரிக்க வைத்ததென்று அறிந்து +திருப்தியடைந்தேன். + + + +மேலே பாடம் சொல்லத் தொடங்கினேன். “இப்படிக் கடைசிக் +காலத்தில் தர்மம் செய்ய எண்ணியவர்கள் எண்ணம் அப்பொழுதுகூட +நிறைவேறுவதில்லை. ஆகையால் நாம் போகும் மார்க்கத்திற்குப் பயன்படும் +தர்மத்தை முன்பே செய்ய வேண்டும். பெரிய பிரயாணம் செய்யப் போகிறவன் +சோற்று மூட்டை கொண்டு போவதுபோல இந்தத் தர்ம மூட்டையை நாம் +மறுமைக்குச் சேகரிக்க வேண்டும். இதைத்தான் இந்தச் செய்யுள் சொல்லுகிறது” +என்று சொல்லி மீண்டும் அப்பாட்டைச் சொன்னேன்:- + + + +“சிறுகாலை யேதமக்குச் செல்வுழி வல்சி இறுகிறுகத் தோட்கோப்புக் +கொள்ளார்-இறுகிறுகிப் பின்னறிவா மென்றிருக்கும் பேதையார் கைகாட்டும் +பொன்னும் புளிவிளாங்காயாம்.” + + + +[சிறு காலை - இளம் பருவத்திலே. செல்வுழி - செல்லுமிடமாகிய மறு +பிறப்பிற்குரிய. வல்சி - ஆகாரம். இறுகிறுக - இறுக இறுக. தோட் கோப்பு - +தோளில் மாட்டிக் கொள்ளப்படும் உணவு மூட்டை. பின் அறிவாம் - பிறகு +பார்த்துக் கொள்வோம்.] + + + +அந்தப் பாட்டுக்கு விரிவாகப் பொருள் சொல்லி முடிந்தவுடன் +மேலுள்ள பாடலைச் சொல்லத் தொடங்கினேன். அந்த வகுப்பில் மூன்றாவது +மணிக்குரிய பாடம் சொல்லும் ஆசிரியர் அன்று வரவில்லை. அதனால் அந்த +மணியிலும் தொடர்ந்து நானே தமிழ்ப் பாடம் சொல்லத் தொடங்க���னேன். +இரண்டு மணியிலும் கோபால ராவும் அவர் நண்பரும் அவ்வகுப்பில் இருந்து +கேட்டனர். + + + +மணி முடிந்தது. அவர்கள் எழுந்தனர். கோபால ராவ் என்னை ஒரு +முறை பார்த்துப் புன் முறுவல் பூத்தார். அவர் பார்வையில் கருணை +ததும்பியது; முறுவலில் உவகை வெளிப்பட்டது. + + + +நான் விடைபெற்றுக் கொண்டு இடைவேளை உணவு கொள்ளப் +புறப்பட்டேன். + + + +செட்டியாரின் ஆவல் + + + +அன்றுமாலை வழக்கம்போல் தியாகராசசெட்டியாரிடம் போய்க் கோபால +ராவ் என் வகுப்புக்கு வந்ததையும் அங்கே நிகழ்ந்தவற்றையும் எடுத்துச் +சொன்னேன். + + + + செட்டியார், “அவருக்கு என்ன அபிப்பிராயம் உண்டாயிற்று என்று +தெரியுமா? மேலதிகாரிகளுக்கு உங்களைப்பற்றி எழுத வேண்டுமே; என்ன +எழுதப் போகிறாரோ!” என்று கேட்டார். + + + +“நான் எப்படி அறிவேன்?” என்று கூறினேன். செட்டியாருக்கு அன்று +இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. என்னைப் பற்றிக் கோபால ராவ் +மேலதிகாரிகளுக்கு எழுதி நியமன உத்தரவு பெற வேண்டும் என்ற கவலையால் +ராயரவர்களுடைய மனத்தில் ஏற்பட்ட அபிப்பிராயத்தைத்தெரிந்து +கொள்ளுதற்கு மிக்கஆவலுடையவராக இருந்தார். எல்லாம் நல்லதாகவே +இருக்குமென்று எதிர்பார்த்த எனக்கு அவருடைய ஆவல் ஆச்சரியத்தை +உண்டாக்கியது. + + + +மறுநாள் காலேஜ் திறந்தவுடன் செட்டியார் அங்கே சென்று ரைட்டரைப் +பார்த்து, “சாமிநாதையரைப் பற்றி ராயரவர்களுக்கு என்ன அபிப்பிராயம்?” +என்று கேட்டார். + + + +நல்ல செய்தி + + + +அவர் நல்ல செய்தியைச் சொன்னார். “ராயரவர்கள் இவரைப் பற்றி +டைரக்டருக்கு நன்றாக எழுதியிருக்கிறார்கள். இதோ தபால் அனுப்பப் +போகிறேன்” என்று ரைட்டர் சொன்னதைக் கேட்ட பிறகுதான் தியாகராச +செட்டியாருக்கு நல்லுணர்வு வந்தது. அவர் ரைட்டரை அதோடு விடவில்லை. +என்ன எழுதினாரோ வென்று தூண்டித் தூண்டி விசாரித்தார். நான் +மடத்திலிருந்து கல்வி கற்றுத் தேர்ச்சி பெற்றவனென்பதையும், அங்கே +பலருக்குப் பாடம் சொல்லிப் பழக்கமானவனென்பதையும் எழுதிவிட்டு. “நானே +இரண்டு முறை அவர் பாடம் சொன்ன வகுப்புக்குப் போய்க் கவனித்தேன். +அவர் கற்பிக்கும் முறை மிகவும் திருப்தியாக இருக்கிறது, ஆகையால் இது +வரையில் தியாகராச செட்டியாருக்குக் கொடுத்த ஐம்பது ரூபாயையே +அவருக்கும் கொடுத்து இரண்டு வருஷத்துக்கு ஸப்ரோட்டமாக நியமிக்கலாம்” +என்றும் குறித்திருந்தத���க ரைட்டர் சொன்னார். + + + +இவ்வளவையும் கேட்டுக்கொண்டு வந்த செட்டியார் என்னிடம் “கவலை +நீங்கியது. கடவுள் கிருபையால் நான் செய்த முயற்சி பலித்தது. இனி உங்கள் +பாடு, உங்கள் மாணாக்கர்கள் பாடு” என்று சந்தோஷத்தோடு சொன்னார். + + + +“எல்லாம் உங்களுடைய பேரன்பினால் உண்டானவை” என்று என் +நன்றியறிவைத் தெரிவித்துக் கொண்டேன். + + + + இந்த முக்கியமான நிகழ்ச்சிக்குப் பிறகு கோபாலராவ் என்பால் மிக்க +கருணை காட்டலானார். என்னைக் காணும் போதெல்லாம், “ஒழுங்காகப் பாடம் +நடந்து வருகிறதா? யாராவது தவறு செய்தால் உடனே சொல்லுங்கள். +உங்களுக்கு ஏதாவது ஆகவேண்டுமானாலும் கூச்சமில்லாமல் தெரிவிக்கலாம்” +என்று அன்பொழுகக் கூறுவார். தம்முடைய பாதுகாப்பின் கீழ் வந்த என்னை +அங்கீகரித்துக்கொண்டதற்கு அறிகுறியாக இருந்தன அந்த வார்த்தைகள். + + + +அந்த வாரம் சனிக்கிழமை காலையில் தியாகராச செட்டியாரையும் +அழைத்துக் கொண்டு திருவாவடுதுறை சென்று அங்கே இரண்டு நாள் +சந்தோஷமாக இருந்து விட்டு வந்தேன். வரும்போது சுப்பிரமணிய தேசிகர், +“செட்டியாருக்குக் கொடுத்த ஐம்பது ரூபாய் கொடுத்தால் அங்கே இரும்; +இல்லாவிட்டால் வேலையை விட்டு விட்டு இங்கே வந்து விடலாம்” என்று +சொல்லி அனுப்பினார். + + + +கோபால ராவ் அறிவித்தது + + + +திங்கட்கிழமையன்று காலையில் பன்னிரண்டு மணிக்கு மேல் பி. ஏ. +இரண்டாவது வகுப்புக்குப் பாடம் சொல்லிக் கொண்டிருந்தேன். ஒரு மணியான +பிறகும் சிறிது நேரம் சொன்னேன். அப்போது திடீரென்று பிள்ளைகளெல்லாம் +எழுந்து நின்றார்கள். நான் காரணம் அறியாமல், “ஏன் நிற்கிறீர்கள்?” என்று +கேட்கவே அவர்கள், “ராயரவர்கள் வந்து தாழ்வாரத்தில் உங்களை +நோக்கிக்கொண்டு நிற்கிறார்கள்” என்றார்கள். நான் உடனே அவர்பாற் +சென்றேன். அவர், “உங்களை இரண்டு வருஷத்துக்குச் செட்டியாரவர்களுக்குக் +கொடுத்த ஐம்பது ரூபாயையே சம்பளமாகக் கொடுத்து ஸப்ரோட்டமாக +நியமித்திருப்பதாக டைரக்டர் துரையவர்கள் உத்தரவு அனுப்பியிருக்கிறார்கள்” +என்றார். நான் என் சந்தோஷத்தை முகக் குறிப்பால் தெரிவித்தேன். + + + +இந்தச் செய்தி தெரிந்த ஆசிரியர்களெல்லாம் மகிழ்ச்சியடைந்தனர். +தியாகராச செட்டியாரோ கரைகடந்த ஆனந்தத்தில் மூழ்கினார். என் +மனநிலையைச் சொல்லுவதற்கு வார்த்தை ஏது? + + + +முதற் சம்பளம் + + + +அந்த வாரம் நான் இந்தச் சந்தோஷத்துடனும் கையிற் பெற்ற அரை +மாதச் சம்பளத்துடனும் திருவாவடுதுறை சென்றேன். “நீங்கள் வாங்கும் முதற் +சம்பளத்தை உங்கள் தாய் தகப்பனாரிடம் கொடுத்துப் பெற்றுக் கொள்ளுங்கள்” +என்று செட்டியார் சொல்லியிருந்தார். அப்படியே அந்த இருபத்தைந்து +ரூபாயை முதலில் என் தாயார் கையிற் கொடுத்தேன். அவர் வாங்கிக் கண்களில் ஒற்றிக் +கொண்டார். வேறு யாரேனும் லக்ஷ ரூபாய் கொடுத்திருந்தாலும் அவருக்கு +அவ்வளவு சந்தோஷம் உண்டாகியிராது. பிறகு என் தந்தையாரிடமும் +சுப்பிரமணிய தேசிகரிடமும் கொடுத்து வாங்கிக் கொண்டேன். “பரம +சாம்பவருடைய பிள்ளையாகிய உமக்கு இன்னும் அதிகச் சம்பளமும் உயர்ந்த +பதவியும் கிடைக்க வேண்டும்” என்று தேசிகர் வாழ்த்தினார். + + + +அதுவரையில் கும்பகோணத்தில் நான் ஸ்ரீசாது சேஷையரவர்கள் +வீட்டிலேயே இருந்து போஜனம் செய்து வந்தேன். அந்த வாரம் என் தாய் +தந்தையரை அழைத்துக் கொண்டு கும்பகோணம் சென்றேன். அங்கே சில மாத +காலத்துக்குப் பக்தபுரியக்கிரகாரத்தில் ஒரு சிறிய வீடுபேசிக்கொண்டு அதில் +குடியிருந்தோம் + + + +பரீக்ஷையும் விடுமுறையும் + + + +மார்ச்சு மாத இறுதியில் காலேஜ் பரீக்ஷை நடைபெற்றது. அக் காலத்தில் +ஸர்வ கலாசாலைப் பரீக்ஷை டிசம்பர் மாதத்தில்தான் நடைபெற்று வந்தது. +மார்ச்சு மாதப் பரீக்ஷைக்குத் தியாகராச செட்டியாருடைய உதவியால் +வினாப்பத்திரம் சித்தம் செய்தேன். பரீக்ஷை முடிந்தபிறகு அவர் முன்னிலையில் +விடைக் கடிதங்களைத் திருத்தி ‘மார்க்’குகளை வரிசைப்படுத்தி எழுதிப் +பிரின்ஸிபாலிடம் சேர்ப்பித்தேன். + + + +கோடை விடுமுறை தொடங்கியது. அந்தச் சம்பளத்தையும் பெற்றுத் +தாய் தந்தையரை அழைத்துக்கொண்டு திருவாவடுதுறைக்குச் சென்றேன். +அக்காலத்தில் திருவாவடுதுறையில் எனக்குச் சீமந்தம் நடைபெற்றது. அதற்கு +என் சம்பளப் பணம் உதவியது. சுப்பிரமணிய தேசிகர் செய்த உதவிகளுக்கும் +கணக்கில்லை. + +------------- + + + + + +86. விடுமுறை நிகழ்ச்சிகள் + + + +திருவாவடுதுறையில் நான் இருந்த காலங்களில் அருகிலுள்ள ஊர்களில் +இருந்த செல்வர்கள் வீட்டுக் கலியாணங்களுக்கு மடத்தின் பிரதிநிதியாகச் +சென்று வருவேன். கலியாண தம்பதிகளுக்கு வழங்கும்படி ஆதீன கர்த்தர் +ஆடை முதலியன அளிப்பார். +நான் அவற்றைப் பெற்றுக் கொண்டு போய்ச் சேர்ப்பித்து விட்டு வருவேன். +காலேஜ் கோடை விடுமுறைக் காலத்தில் திருவாவடுதுறையில் நான் +தங்கியிருந்தபோது இத்தகைய சந்தர்ப்பம் ஒன்று நேர்ந்தது. அந்த வருஷம் மே +மாதத்தில் கும்பகோணம் காலேஜ் ஆசிரியர் ஸ்ரீ ஸாது சேஷையருடைய மூத்த +குமாரிக்குக் கலியாணம் நடைபெற்றது. அதை மிக விமரிசையாக அவர் +திருப்பாதிரிப்புலியூரில் நடத்தினார். சேஷையர் மிக்க +செல்வாக்குடையவராதலால் ஜட்ஜுகள், ஜில்லா முன்சீபுகள், தாசில்தார்கள் +முதலிய பிரபல உத்தியோகஸ்தர்களும், பிரபுக்களும், பலவகையான +வித்துவான்களும், பல கலாசாலை ஆசிரியர்களும் வந்து கூடினர். பதினாயிரம் +ரூபாய்க்குமேல் செலவாயிற்று. அக்காலத்தில் அவ்வளவு தொகை செலவாயிற்று +என்றால் கல்யாணம் எவ்வளவு சிறப்பாக நடந்திருக்க வேண்டுமென்பதை +ஊகித்துக் கொள்ளலாம். + + + +சேஷையர் வீட்டுக் கலியாணம் + + + +கும்பகோணம் காலேஜ் ஆசிரியர்கள் யாவரும் கலியாணத்துக்குப் +போயிருந்தனர். நானும் ஆசிரியனென்ற முறையிலும் திருவாவடுதுறை மடத்தின் +சார்பாகவும் போயிருந்தேன். அதற்கு முன் அவ்வளவு கூட்டமுள்ள +விவாகத்தை நான் எங்கும் பார்த்ததே இல்லை. திருப்பாதிரிப்புலியூரில் ஒரு +பெரிய உத்ஸவம் நடப்பது போல ஊர் முழுவதும் கல கலப்பாக இருந்தது. +தக்க மனிதர்களெல்லாம் வந்திருக்கிறார்களென்று கேள்விப்பட்ட பலர் +அவர்களைப் பார்ப்பதற்காகவே வந்து கூடினார்கள். சென்னையில் ஹை +கோர்ட்டு ஜட்ஜாக இருந்த ஸர். டி. முத்துசாமி ஐயர் கலியாணம் விசாரிக்க +வரப் போகிறாரென்ற பேச்சு வேறு இருந்தது. அந்தப் பெரியாருடைய புகழ் +தமிழ்நாடு முழுவதும் பரவியிருந்த காலம் அது. அவரைத் தரிசிக்க +வேண்டுமென்ற ஆவல் அங்கு வந்திருந்த ஒவ்வொருவருக்கும் இருந்தது. +கலியாணத்தின் ஐந்தாம் நாள் அவர் வருவதாகத் தெரிந்தது. அதனால் முன்பே +விடைபெற்றுக் கொண்டு போவதாக உத்தேசித்திருந்த பலர் முத்துசாமி +ஐயரைப் பார்ப்பதற்காகவே தங்கி விட்டனர். + + + +ஒரு கிழவர் + + + +கலியாணத்தில் ஒரு நாள் மாலை நானும் ஆசிரியர்கள் சிலரும் கெடில +நதியை நோக்கிப் புறப்பட்டோம். அப்போது எதிரே ஒரு முதிய பிராமணர் +விபூதி ருத்திராக்ஷதாரியாக வந்து கொண்டிருந்தார். நாங்கள் ஒரு கூட்டமாய்ப் +போய்க்கொண்டிருந்ததைப் பார்த்து அவர் சிறிது நின்று கையைக் கண்ணின் மேல் கவித்து +நிமிர்ந்து எங்களைக் கவனித்தார். எங்களுட���் வந்த ஆசிரியர்களுள் +கும்பகோணம் வாணாதுறையில் இருந்த காளி நாராயணசாமி ஐயரென்பவர் +ஒருவர். அவர் உத்ஸாகமாகவும் வேடிக்கையாகவும் பேசுபவர். அவர் அந்தக் +கிழவரைப் பார்த்து, “என்ன பார்க்கிறீர்கள்?” என்று கேட்டார். + + + +“ஒன்றும் இல்லை. நீங்களெல்லாம் சேஷப்பா வீட்டுக் கல்யாணத்துக்கா +வந்திருக்கிறீர்கள்? இந்த ராஜதானி முழுவதிலிருந்தும் ஜனங்கள் +வந்திருக்கிறார்களே! நீங்களெல்லாம் எந்த ஊர்க்காரர்கள்? என்ன +உத்தியோகம் பார்க்கிறீர்கள்?” என்றார் கிழவர். + + + +“நாங்களெல்லாம் கும்பகோணம் பள்ளிக்கூட உபாத்தியாயர்கள். அந்தக் +கலியாணத்துக்குத்தான் வந்திருக்கிறோம் என்று பதில் உரைத்தார் +நாராயணசாமி ஐயர். + + + +அவர் ஒவ்வொருவராகச் சுட்டி அவரவருடைய ஊர், பேர், சம்பளம் +ஆகியவற்றைப் பற்றி விசாரித்து வந்தார். ஒவ்வொருவரும் நூறு, இருநூறு, +முந்நூறு என்று தங்கள் சம்பளங்களைச் சொன்ன போது அவருக்கு ஒரே +பிரமிப்பாய்ப் போய் விட்டது. “என்ன! பள்ளிக்கூடத்து வாத்தியாருக்கு +இவ்வளவு சம்பளமா? எங்கள் காலத்திலெல்லாம் நாலு ஐந்து வாங்கிக் +கொண்டிருந்தார்கள்; பத்து ரூபாய் கிடைத்தால் அது குபேர சம்பத்துக்கு +ஸமானம்.” + + + +கிழவர் கிராமத்திலுள்ள திண்ணைப் பள்ளிக்கூட உபாத்தியாயர்களையும் +எங்களையும் ஒரு வரிசையில் வைத்து எண்ணினாரென்று தெரிந்தது. +எல்லோரும் பள்ளிக்கூட வாத்தியார்களல்லவா? அவர் பின்னும் தம்முடைய +வியப்பைத் தெரிவிக்கலானார். + + + +“வெள்ளைக்காரர்கள் நூறு இருநூறென்று பணத்தை +அள்ளிவிடுகிறார்கள். உங்களுக்கும் அதிர்ஷ்டம் இருக்கிறது. மாசம் மாசம் கை +நிறையச் சம்பளம் வாங்குவதை இப்போதுதான் பார்க்கிறேன். சம்பளம் +வாங்குகிறார்கள். ஆனால்,,,,” கிழவர் மேலே பேசாமல் நிறுத்தினார். தாம் +சொல்ல வந்ததைச் சொல்லலாமா, வேண்டாமா என்று யோசித்ததாகத் +தெரிந்தது. + + + +“என்னவோ சொல்ல வந்தீர்களே; ஏன் நிறுத்தி விட்டீர்கள்?” என்று +நாராயணசாமி ஐயர் கேட்டார். + + + +அதற்குள் அந்தக் கிழவருக்குப் பேசி வந்த பேச்சின் தொடர்பு +அறுந்துவிட்டது. அந்தக் கூட்டத்தில் இருந்த நான் அவர் கண்ணில் பட்டேன். +பேச்சு என்னைப் பற்றித் திரும்பியது, “இந்தப் பிள்ளை யாண்டான் யார்? + உங்கள் பள்ளிக்கூடத்தில் வாசிக்கிறானா?” என்று கேட்டார். + + + +“இவரும் ஓர் உபாத்தியாயர்.” + + + +அவருக்கு எல்லாவற���றையும் மிஞ்சிய ஆச்சரியம் உண்டாயிற்று. + + + +“என்ன! இந்தச் சிறு பிள்ளையா வாத்தியார்! என்ன சம்பளம்?” + + + +“ஐம்பது ரூபாய்” என்று அழுத்தமான தொனியோடு நாராயணசாமி +ஐயர் சொன்னார். + + + +“அப்படியா? எல்லாம் தெய்வத்தின் கிருபை,,,,,என்னவோ சொல்ல +வந்தேனே” என்று மறுபடியும் விட்ட இடத்தைத் தொட்டுக்கொண்டார் கிழவர். + + + +“இந்தமாதிரி சம்பளம் கிடைக்கிறதே; எல்லாம் ஈசுவரன் கொடுத்தது +என்று தெரிந்துகொண்டு தெய்வ பக்தி பண்ணுகிறார்களா? அதுதான் இல்லை +அனுஷ்டானம் செய்கிறார்களா? அதேது? வெள்ளைக்காரர்களிடம் சம்பளம் +வாங்கினால் இவர்களும் தங்களை வெள்ளைக்காரர்களாக எண்ணிக் +கொள்ளுகிறார்கள்.” + + + +“எங்களைக்கூட அந்த வர்க்கத்தில் சேர்த்து விட்டீர்களோ! நாங்கள் +இப்போது கெடிலத்திற்குத்தான் போகிறோம்” என்று சிரித்துக்கொண்டே +நாராயணசாமி ஐயர் சொன்னார். + + + +“ஓகோ, சந்தியாவந்தனம் பண்ணப் போகிறீர்களா? நல்லதுதான். என்ன +இருந்தாலும் நம் தேசத்துப் பழக்க வழக்கங்களே நமக்கு மேன்மையானவை. +அவைகளைப் பாதுகாக்க வேண்டியது நமது தர்மம்.” + + + +இவ்வாறு உபதேசம் செய்து விட்டு எங்கள் சந்தியாவந்தனந்திற்கு +அகாலமாகி விடுமென்ற பயத்தால் அந்தக் கிழவர் விடை பெற்றுக்கொண்டு +சென்றார். எனக்கு அவர் கூறிய வார்த்தைகள் இனிமையாக இருந்தன. தெய்வ +பக்தியும் மதாசாரங்களைத் தவறாமல் அனுஷ்டிக்கும் இயல்பும் +உடையவர்களோடே பழகி வந்த எனக்கு அந்தக் கிழவருடைய உபதேசம் +மதிப்புடையதாகவே தோற்றியது. + + + +ஜட்ஜ் முத்துசாமி ஐயர் + + + +கலியாணத்தின் ஐந்தாம் நாள் பிற்பகல் இரண்டு மணிக்கு முத்துசாமி +ஐயர் சென்னையிலிருந்து திருப்பாதிரிப்புலியூருக்கு வந்தார். ஸாது சேஷையர் +ரெயில்வே ஸ்டேஷனுக்குச் சென்று அவரை வரவேற்றுத் தம் வீட்டுக்கு அழைத்து வந்தார். முத்துசாமி +ஐயர் வந்து கலியாணத்திற்காகப் போட்டிருந்த பெரிய பந்தலின் நடுவே ஒரு +பெரிய நாற்காலியில் அமர்ந்தார். அவருக்கு அருகில் சேஷையரும் வேறு +இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். + + + +ஊர் முழுவதும் பந்தலிலும் பந்தலைச் சுற்றிலும் கூடி விட்டது. +அவ்வளவு கூட்டம் இருந்தாலும் எல்லோரும் அமைதியாக இருந்தனர். +படாடோபமற்ற முத்துசாமி ஐயர் தோற்றத்தில் ஒருவகையான கவர்ச்சி +இருந்தது. வெள்ளைத் தலைப்பாகை, நெடுஞ்சட்டை, ஐயம்பேட்டைப் +பட்டுருமாலை. தூய வெள்ளை ���ஸ்திரம், காலில் ‘பாபாஸ் ஜோடு’- இவைகளே +அவர் அணிந்திருந்தார். கையில் ஒரு பிரம்பு வைத்திருந்தார். +இந்தியர்களுக்குக் கிடைக்காத உயர்ந்த பதவியிலே இருந்த அவருடைய +ஆங்கிலப் பயிற்சியும், மேதையும், சட்ட ஞானமும் உலகம் அறிந்தவை. அவர் +வெள்ளைக்காரர் சம்பளத்தைப் பெறுவது மட்டுமன்றி வெள்ளைக் காரரோடு +நெருங்கிப் பழகுபவர். ஆனாலும், அவர் தோற்றத்திலும் பேச்சிலும் பழக்க +வழக்கங்களிலும் ஆசாரத்திலும் ஹிந்துவாகவே இருந்தார். அவருடைய +நெற்றியில் விளங்கிய விபூதியும் சந்தனமும் இடையிலிருந்த பஞ்சகச்ச +வேஷ்டியும் அவர் பேச்சில் தொனித்த அடக்கமும் அவருடைய பெருமைக்குப் +பின்னும் பெருமையையே உண்டாக்கின. முதல் நாள் மாலையில் எங்களோடு +பேசிய கிழவர் சொன்ன வார்த்தைகள் எனக்கு ஞாபகத்துக்கு வந்தன. “அவர் +முத்துசாமி ஐயரைக் கண்டால் எவ்வளவு சந்தோஷமடைவார்” என்று +சிந்தித்தேன். + + + +முத்துசாமி ஐயர் பேசிக் கொண்டிருந்தபோது இடையே ஒரு +திருக்குறளைச் சொன்னார். அவர் தமிழில் அன்புடையவரென்பதை அப்போது +அறிந்து கொண்டேன். அவர் சுருக்கமாகப் பேசினார். சுருங்கச் சொல்லி +விளங்க வைக்கும் திருக்குறளை உதாரணமாக எடுத்துச் சொன்னார். +இவையாவும் என் மனத்தில் நன்றாகப் பதிந்தன. அவர் அன்று இரவு அங்கே +விருந்துணவு உண்டு விடை பெற்று மாயூரம் சென்றார். + + + +கலியாணம் நிறைவேறியது. வந்திருந்தவர்கள் யாவரும் விடை பெற்றுச் +சென்றனர். நான் திருவாவடுதுறைக்கு வந்து சேர்ந்து கலியாண +விசேஷங்களையும், ஸர் டி. முத்துசாமி ஐயர் வந்து சென்ற வைபவத்தையும், +அவரைப் பார்த்த சில மணிகளில் அவரைப் பற்றி நான் அறிந்து +கொண்டவற்றையும் சுப்பிரமணிய தேசிகர் முதலியவர்களுக்கு விரிவாக +எடுத்துரைத்தேன். அன்று முழுவதும் முத்துசாமி ஐயருடைய இளமைப் பருவம், +அவர் படித்து முன்னுக்கு வந்த வரலாறு அவருடைய புகழ் முதலியவற்றைப் பற்றிப் +பேசுவதிலேயே பொழுது போயிற்று. + + + +‘இந்திர இழவூ ரெடுத்த காதை’ + + + +அந்தக் காலத்தில் காலேஜ் வகுப்புக்களுக்குத் தமிழ்ப் பாடம் வைக்கும் +முறை மிக விசித்திரமானது. பேர் மாத்திரம் தெரிந்த நூலிலிருந்து ஏதேனும் +ஒரு பகுதியைப் பாடமாக வைத்து விடுவார்கள். ஏட்டுச் சுவடியைத் +தேடியெடுத்து உள்ளது உள்ளபடியே யாரேனும் பதிப்பிப்பார்கள். அதை +வைத்துக் கொண்டு தெரிந்ததோ தெரியாததோ எல்லாவற்றையும் குழப்பித் +தமிழாசிரியர்கள் பாடம் சொல்லுவார்கள். சிலப்பதிகாரம் பழைய நூலென்பது +மாத்திரம் அக்காலத்தில் தெரிந்திருந்தது. நூலைத் தெரிந்து கொள்ளுவதைவிட +நூலின் சிறப்பைத் தெரிந்து கொள்ளுவது சுலபம். ஆதலின் அதன் சிறப்பைத் +தெரிந்தவர்கள் அதிற் சில பகுதிகளைப் பாடம் வைக்கத் தொடங்கினர். +தியாகராச செட்டியார் காலேஜில் இருந்த காலத்தில் சிலப்பதிகாரத்திலுள்ள +இந்திர விழவூரெடுத்த காதை பாடமாக வந்தது. ஏட்டுச் சுவடியை வைத்துக் +கொண்டு அதை அவர் பார்த்தார். அவருக்கு ஒன்றும் விளங்கவில்லை +பிள்ளையவர்களிடம் சென்று இருவரும் சேர்ந்து பார்த்தார்கள். புஸ்தகத்தில் +பல காலமாக ஏறியிருந்த பிழைகளுக்கு நடுவே உண்மையான பாடத்தை +அறிவதே பிரும்மப் பிரயத்தனமாக இருந்தது. அன்றியும் மிகப் பழங் காலத்து +மரபுகளெல்லாம் சொல்லப் பட்டுள்ள அந்நூலிலிருக்கும் விஷயங்களைத் +தெரிந்துகொள்ள வேறு துணைக் கருவிகள் இல்லை. அதனால் அந்தப் பகுதி +தெளிவாக விளங்கவில்லை. செட்டியாருக்குப் புஸ்தகத்தின் மேல் கோபம் +மூண்டது. “என்ன புஸ்தகம் இது? இந்திர விழவூரெடுத்த காதையா? இந்திர +இழவூரெடுத்த காதையா!” என்று கூறி, “இந்தச் சனியனை நான் பாடம் +சொல்லப் போவதில்லை; எனக்கு உடம்பு வேறு அசௌக்கியமாக இருக்கிறது. +நான் ஆறு மாசம் ‘லீவு’ வாங்கிக் கொள்கிறேன்” என்று தீர்மானித்துக் +கொண்டார். அப்படியே ஆறு மாதம் விடுமுறை பெற்றுப் பிறகே காலேஜு க்கு +வந்தார். அக்காலத்தில் சந்திரசேகர கவிராஜ பண்டிதர் தமிழாசிரியராக இருந்து +பாடத்தை நடத்தினார்; கற்பித் தாரென்று சொல்லுவதற்கில்லை. + + + +இப்படித் தியாகராச செட்டியாரே சிரமப்பட்டபோது மற்றப் +பண்டிதர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. எப்போது பாடமாக +வந்து விட்டதோ உடனே புஸ்தகப் பதிப்பும் வந்து விடும். சிலப்பதிகாரத்தின் +முற்பகுதியை ஸ்ரீநிவாசராகவாசாரியரும் சென்னையிலிருந்த +சோடசாவதானம் சுப்பராய செட்டியாரும் +பதிப்பித்திருந்தனர். முதல் வெளியீடு ஸ்ரீநிவாச ராகவாசாரியருடையதே. புகார்க் +காண்டத்தின் முற்பகுதியின் மூலம் மாத்திரம் இருந்தது. “சேரமான் பெருமாள் +நாயனார் இயற்றிய சிலப்பதிகாரம்” என்று அவர் முகப்புப் பக்கத்தில் +பதிப்பித்திருந்தார். + + + +சிலப்பதிகார ஆராய்ச்சி + + + +நான் வேலையை ஏற���றுக் கொண்ட வருஷத்தில் சிலப்பதிகாரத்தில் +கானல்வரி முதல் நான்கு காதைகள் பாடமாக வந்திருந்தன. அதைக் கோடை +விடுமுறை முடிந்தவுடன் பாடம் சொல்ல வேண்டியவனாக இருந்தேன். “இவர் +சிலப்பதிகாரத்தை எப்படிப் பாடம் சொல்லப் போகிறார்?” என்று சிலர் +சொல்லிக் கொண்டிருந்ததாக என் காதில் பட்டது. ஆகவே அதைக் கூடிய +வரையில் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று நிச்சயம் செய்து +கொண்டேன். இருந்த அச்சுப் பிரதியின் உதவி கொண்டு விஷயத்தைத் +தெரிந்துகொள்ளுவது கஷ்டமாகவே இருந்தது. இந்த விஷயங்களை நான் +சுப்பிரமணிய தேசிகரிடம் சொன்னபோது அவர், “மடத்தில் ஏட்டுப் +பிரதியிருக்கிறது. சின்னப் பண்டாரத்தினிடம் படித்துத் தெரிந்து கொள்ளலாம்” +என்றார். பிள்ளையவர்களுக்கே சந்தேகமான புஸ்தகத்தில் நமசிவாய தேசிகர் +தேர்ச்சியடைய நியாயம் இல்லை. ஆனாலும் சிறந்த அறிவாளியாகிய +அவருடன் சேர்ந்து ஆராய்ந்து வரையறை செய்து கொள்வதில் பல லாபம் +உண்டு. அதனால் நான் சிலப்பதிகார ஏட்டுச் சுவடியை எடுத்துக் கொண்டு +நமசிவாய தேசிகரிடம் சென்று படித்தேன். இருவரும் கவனித்து ஆராய்ந்தோம். +ஒரு விதமாகப் படித்து முடித்தோம்; பொருள் வரையறையும் செய்து +கொண்டோம். + + + +இப்படிச் சில நாட்கள் சென்றன. வேறு நூல்களைப் படிப்பதும், பாடஞ் +சொல்வதுமாக மற்ற நாட்கள் போய்க் கொண்டிருந்தன. + + + +புது வீடு + + + +விடுமுறை முடிந்தவுடன் கும்பகோணத்தில் நிரந்தரமாகக் குடித்தனம் +வைத்து விடலாமென்று என் தந்தையார் சொன்னார். அதன் பொருட்டு அங்கே +ஒரு வீடு பார்ப்பதற்காக அவர் கும்பகோணத்திற்கு புறப்பட்டார். +புறப்படும்போது என் தாயார், “காவேரிக்குப் பக்கமாக இருந்தால் நல்லது” +என்றார். “காலேஜு க்கும் பக்கமாக இருந்தால் சௌகரியமாக இருக்கும்” +என்றேன் நான். அவர் கும்பகோணத்திற்கு நடந்தே சென்றார். ரெயில் +வண்டியில் ஏறும் வழக்கம் அவருக்கு இல்லை. + + + + கும்பகோணத்தில் சில தெருக்களைப் பார்த்து விட்டுப் பக்தபுரி +அக்கிரகாரத்துக்குள் செல்லும்போது, “மங்களாம்பா இருக்கிறாள்; பயமில்லை” +என்று யாரோ இருவர் பேசிக் கொண்டிருந்தது அவர் காதில் பட்டது. +கும்பகோணம் கும்பேசுவரராலயத்தில் எழுந்தருளியிருக்கும் அம்பிகையின் +திருநாமம் அது. அந்த வார்த்தைகள் நல்ல சகுனமாகத் தோன்றவே அவர் +அந்தத் தெருவின் மத்தியில�� கீழ் சிறகில் ஒரு வீட்டைப் பார்த்துத் திட்டம் +செய்தார். மாதம் மூன்றரை ரூபாய் வாடகை பேசினார். பதினைந்தடி அகலமும் +நாற்பதடி நீளமும் உள்ளது அது. வீட்டிற்குப் பின் நீண்ட தோட்டமும் +இருந்தது. + + + +வீடு எல்லோரும் இருப்பதற்குப் போதுமானதாக இராவிட்டாலும் +சகுனத்தின் விசேஷத்தால் என் தந்தையாருக்கு அதுவே பெரிய மாளிகையாகத் +தோற்றியது. வாழ்க்கையில் பல வகையான துன்பங்களையும், வறுமையின் +சங்கடங்களையும் அனுபவித்துத் தேர்ந்த அவருக்குப் பணம் கிடைத்தால் +எவ்வளவு செட்டாக வாழமுடியுமோ அவ்வளவு செட்டாக வாழ வேண்டுமென்ற +சங்கற்பம் இருந்தது. அதனால் அவருடைய நோக்கத்துக்கு அந்த வீடு +ஏற்றதாகவே அமைந்தது. + + + +வீட்டைப் பார்த்துத் திட்டம் செய்துவிட்டு நடந்தே திருவாவடுதுறை +வந்து சேர்ந்தார். “காவிரிக்கும் காலேஜு க்கும் பக்கமாக இருக்கிறது; இரண்டாம் +வேளை ஆகாரத்துக்கு வீட்டுக்கு வந்து போகலாம். நல்ல சகுனமாயிற்று” +என்று சொல்லி எங்களுக்குச் சந்தோஷத்தை உண்டாக்கினார். + + + +விடுமுறை முடிந்தது. என் தகப்பனாருக்குத் திருவாவடுதுறையை விட்டுப்பிரிய +மனம் வரவில்லை. ஆனாலும் ஒரு வகையாகச் சமாதானம் செய்து +கொண்டார். யாவரும் சுப்பிரமணிய தேசிகரிடத்திலும் மற்ற +அன்பர்களிடத்திலும் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டுக் கும்பகோணம் +வந்து புது வீட்டில் புகுந்தோம். அதுவரையில் திருவாவடுதுறை வாசியாக +இருந்த நான் அன்று முதல் கும்பகோண நகர வாசியாக என் வாழ்க்கையைத் +தொடங்கினேன். + +--------------- + + + + + +87. கவலையற்ற வாழ்க்கை + + + +நான் வேலையை ஒப்புக்கொண்டபோது கும்பகோணம் காலேஜில் +ஹைஸ்கூல் வகுப்புக்களும் இருந்தன. அவ் வகுப்புக்களுக்கு ஸ்ரீ +தி.கோ.நாராயணசாமி பிள்ளை என்பவர் தமிழ்ப் பாடம் +சொல்லி வந்தார். + + + +காலேஜ் வேலை தானாக என்னைத் தேடி வந்தாலும் அதனைப் +பெறுவதற்குப் பலர் முயற்சி செய்தார்களென்ற செய்தியை நான் அறிந்த +போதுதான் அவ்வேலையின் அருமை எனக்குப் புலப்பட்டது. பங்களூர்க் +காலேஜில் தமிழ்ப் பண்டிதராக இருந்த நாராயணசாமி பிள்ளையும், இராமாயண +வெண்பாவும் பல புராணங்களும் பாடிய தஞ்சைச் சதாவதானம் சுப்பிரமணிய +ஐயரும், சேலம் காலேஜ் தமிழ்ப் பண்டிதர் சரவணப் பிள்ளையும் அவ்விதம் +முயன்றவர்களிற் சிலர். அவர்கள் கல்வியிலாகாத் தலைவருக்கு நேரே +விண்ணப்பம் செய்��ு கொள்ள, அவற்றை அவர் கோபாலராவுக்கு அனுப்பி +விட்டனர். “தக்கவர் கிடைத்து விட்டமையால் இந்த விண்ணப்பங்களைக் +கவனிக்கக்கூட வில்லை” என்று ராயர் பதில் அனுப்பி விட்டதாகத் தெரிந்தது. + + + +கோவிந்த பிள்ளையின் முயற்சி + + + +நான் விடுமுறையில் திருவாவடுதுறைக்குச் சென்றிருந்தபோது +திரிசிரபுரம் வித்துவானும் வித்வஜ்ஜன சேகரருமாகிய கோவிந்தபிள்ளை +கும்பகோணத்திற்கு வந்தார். தியாகராச செட்டியார் வேலையினின்று விலகியதை +மட்டும் அறிந்த அவர் கோபாலராவிடம் சென்று தம் குமாரருக்குக் காலேஜ் +தமிழ்ப் பண்டிதர் வேலையைக் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். +பிரின்ஸிபால், “வேறொருவரை நியமித்து விட்டோம்” என்று சொல்லவே, +கோவிந்த பிள்ளை வேகமாக, “யார் அவர்?” என்று கேட்டார். நான் +வேலைக்கு வந்திருப்பதாக அவர் சொல்லவே பிள்ளை, “அப்படியா மிகவும் +சந்தோஷம். அவரை எனக்குத் தெரியும். நன்றாகப் படித்தவர்” என்று சொல்லி +விடைபெற்றுச் சென்றார். + + + +தியாகராச செட்டியாருக்கு பிரிவுபசாரம் + + + +தியாகராச செட்டியார் வேலையை விட்டு நீங்கினாலும் பென்ஷன் +விஷயமாகச் சில சிக்கல்கள் இருந்தமையால் அவற்றைக் கவனிப்பதற்காக ஆறு +மாத காலம் வரையில் அவர் கும்பகோணத்திலேயே தங்கியிருந்தார். அப்பால் +அவர் தம் ஊருக்குப் போக ஏற்பாடு செய்தார். பல வருஷங்கள் +கும்பகோணத்திலிருந்து புகழ்பெற்ற அவருக்கு நகரத்தில் நண்பர்கள் பலர் +இருந்தனர். காலேஜ் ஆசிரியர்களும் வேறு கமலசாலை ஆசிரியர்களும் +அவரிடம் மிக்க மதிப்பு வைத்திருந்தனர். செட்டியார் கும்பகோணத்தை +விட்டுப் புறப்படப் போகிறாரென்ற செய்தியை +அறிந்து யாவரும் வருத்தமுற்றனர். அவருக்குத் தக்க உபசாரம் செய்து அனுப்ப +வேண்டுமென்றும் ஞாபகார்த்தமாக நல்ல பொருள்களை வழங்க +வேண்டுமென்றும் எண்ணினர். முடிவில் ஏறுமுக ருத்திராக்ஷ +கண்டியொன்றையும், நல்ல சால்வை ஒன்றையும் கொடுப்பதாக அபிமானிகள் +நிச்சயித்தனர். செட்டியார் புறப்படுவதற்கு முதல் நாள் மாலையில் +கலியாணராமையர் தெருவில் உள்ள வக்கீல் டி.சுந்தரமையர் பங்களாவில் +கோபாலராவ் தலைமையில் செட்டியாருக்கு உபசாரம் நடைபெற்றது. அநேகர் +செட்டியாருடைய திறமைகளைப் பற்றிப் பேசினர். நான் அவர் விஷயமாகப் +பத்துப் பாடல்கள் இயற்றிப் படித்து அவரைப் பாராட்டிப் பேசினேன். +அப்���ாடல்களில் ஒன்று வருமாறு:- + + + +”வருந்தியருந் தமிழ்நமக்கு யார்புகல்வா ரென்றேங்கும் + +         மனத்தி னோர்கள் + +திருந்தியசெந் தமிழ்ச்செல்வன் தியாகரா சப்புலவர் + +         திலகன் றன்பாற் + +பொருந்தியவன் விளங்கவெடுத் துரைத்திடுநல் லுரைகளைத்தம் + +         புந்தி வைப்பின் + +மருந்தியலைந் தியலுணர்வார் கலிபுகல்வார் பிரசங்கம் + +         வகுப்பார் மன்னோ.” + +(புந்தி - அறிவில், ஐந்தியல்-ஐந்திலக்கணங்கள்.) + + + +எல்லாம் நிறைவேறிய பிறகு செட்டியார் கோபாலராவை நோக்கி, +“நாளைக் காலையில் நான் ஊருக்குப் புறப்படுகிறேன். விடையளிக்க வேண்டும். +நான் சிபார்சு செய்தவர் திருப்தி உண்டாகும்படி நடந்து கொள்ளுகிறரா?” +என்றார். + + + +ராயர் உடனே, “தாங்கள் சொல்லியபடி அவர் எல்லாவகையிலும் +திருப்தியாகவே நடந்து கொள்ளுகிறார். பிள்ளைகளுக்கும் அவரிடம் மிக்க +திருப்தி இருக்கிறது. இந்தச் சபையிலும் தம் திறமையை வெளிப்படுத்தி +விட்டாரே” என்று சந்தோஷமாகச் சொன்னார். இந்த விஷயத்தைச் செட்டியார் +அடிக்கடி விசாரித்துப் பலவாறாகத் தெரிந்து கொண்டிருந்தாலும் தாம் விடை +பெறும் போது ராயருடைய வாயாலேயே ஒருமுறை கேட்டுவிட வேண்டுமென்று +எண்ணியிருந்தார். ராயருடைய வார்த்தைகளைக் கேட்டவுடன் செட்டியார் முக +மலர்ச்சியோடு என்னைப் பார்த்தார் நாணத்தால் நான் முகங் கவிழ்ந்தேன். + + + +கூட்டங் கலைந்த பின் செட்டியாரோடு அவர் வீடு சென்றேன். அவர் +மறுநாள் ஊருக்குப் புறப்படுவாரென்பதை நினைத்தபோது எனக்கு ஏதோ +ஒரு விதமான துயரம் உண்டாயிற்று. அவரோடு +எப்போதும் இருக்க வேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. வீட்டில் தம்மிடம் +பாடங் கேட்டு வந்த மாணாக்கர்களை எனக்குக் காட்டி ஒவ்வொருவரைப் +பற்றியும் தனித் தனியே எடுத்துக் கூறி, “இவர்கள் என்னிடம் சில சில +நூல்களைப் பாடம் கேட்டு வருபவர்கள். இனிமேல் இவர்களுக்கு நான் பாடம் +சொல்ல இயலாது. ஆதலால் இவர்களை உங்களிடம் ஒப்பிக்கிறேன். நான் +சொல்லி வந்த பாடங்களைத் தொடர்ந்து சொல்லி வரவேண்டும்” என்றார். + + + +“தங்கள் உத்தியோகத்தை ஏற்றுக்கொண்ட எனக்கு இது முக்கியமான +கடமை தானே?” என்று கூறினேன். அவ்வாறு என்னிடம் பாடம் கேட்கத் +தொடங்கியவர்கள் சதாசிவ செட்டியார், குமாரசாமி ஐயர் (வீர சைவர்), +ராமலிங்க பண்டாரம், சாமி பண்டாரம், கிருஷ்ணசாமி உடையார் என்பவர்கள். + + + +பாடம் சொல்லும் பழக்கம் + + + +காலேஜில் பாடம் சொல்லுவது எனக்குச் சிரமமாகத் தோற்றவில்லை. +ஒவ்வொரு நூலையும் முதலிலிருந்து இறுதி வரையில் விரிவாகப் பாடம் +சொல்லப் பழகிய எனக்குக் காலேஜ் வகுப்புக்களுக்குப் பாடமாக வந்துள்ள சில +நூற்பகுதிகளைச் சொல்லுவது ஒரு பெரிய காரியமன்று. தனியே யாருக்கேனும் +மடத்திற் சொல்லியபடி பிரபந்தங்களையும் வேறு இலக்கண இலக்கியங்களையும் +சொல்ல வேண்டுமென்று விரும்பினேன். என் கல்வியறிவு மழுங்காமல் +இருப்பதற்கு அதுதான் வழியென்பதை அறிந்தவன் நான். இந்த நிலையில் +தியாகராச செட்டியார் தம் மாணாக்கர்களை என்னிடம் ஒப்பித்தது எனக்கு +மிக்க திருப்தியைத் தந்தது. அவர்களுக்கு உசிதமான பாடங்களைச் சொல்லத் +தொடங்கினேன். காலேஜ் பிள்ளைகளிற் சிலர் தனியே என் வீட்டிற்கு வந்து +சில நூல்களைப் பாடம் கேட்கலாயினர். கும்பகோணத்திலுள்ள வேறு சிலரும் +தமக்கு வேண்டிய நூற்களை என்னிடம் பாடம் கேட்டனர். + + + +செட்டியார் கடிதங்கள் + + + +உபசாரம் நடந்த மறுநாள் செட்டியார் கும்பகோணத்தை விட்டுப் +புறப்பட்டுத் திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த திருவானைக்காவை அடைந்து +அங்கே வசித்து வரலானார். அவ்விடம் சேர்ந்தபின் கும்பகோணத்திலுள்ள +நண்பர்களுக்குக் கடிதங்கள் எழுதினார் எனக்கனுப்பிய கடிதத்தில் விடுமுறைக் +காலங்களில் வந்து தம்முடன் இருக்கவேண்டுமென்று வற்புறுத்தி எழுதினார். +பின்னும் அடிக்கடி கடிதங்கள் எழுதினார். நானும் அவ்வப்போது பதில் +எழுதினேன். + + + +செய்யுட் பழக்கம் + + + +முதலில் நான் செட்டியாருக்கு வசன நடையிலேயே கடிதங்கள் +எழுதினேன். ஒரு பதிற் கடிதத்தில் அவர், “இப்படி எழுதினால் உங்களுக்குச் +செய்யுள் செய்யும் பழக்கம் நின்றுவிடும். ஐயா அவர்கள் எழுதும் +வழக்கப்படியே முதலில் ஒரு செய்யுளெழுதி அப்பாற் செய்திகளைத் +தெரிவிக்கவேண்டுமென்பது என் கருத்தன்று. உங்களுக்குச் செய்யுட் பழக்கம் +விடாமலிருக்க வேண்டு மென்பதே என் எண்ணம்” என்று குறிப்பித்திருந்தார். +அப்பால் நான் அவ்வாறு செய்யுட்களெழுதி வரலானேன். சில சமயங்களில் +கடிதம் முழுவதையும் செய்யுளாகவே எழுதியதுண்டு. அவரும் தம் கடிதங்களின் +தலைப்பில் என்னைப் பாராட்டிச் செய்யுட்களை எழுதுவார். என் +செய்யுட்களையும் பாராட்டுவார். + + + +செட்டியார் ��ற்புறுத்தியதுமுதல், தோத்திரங்களும் சமயோசிதப் +பாடல்களும் செய்து வந்தேன். ஸ்ரீ கும்பேசுவரர் விஷயமாகத் தனித் +தோத்திரங்களும் ஸ்ரீ நாகேசுவரர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள பெரியநாயகி +விஷயமாக ஓர் இரட்டை மணிமாலையும் ஸ்வாமிமலை முருகக் கடவுள் மீது +பல செய்யுட்களும் இயற்றினேன். + + + +ஆடிக் காற்றும் வெள்ளமும் மிகுந்து அவ்வருஷம் மரங்களெல்லாம் +மிக்க சேதமடைந்தன. அந்த விஷயத்தை வைத்துச் சில செய்யுட்கள் இயற்றி +நண்பர்களுக்குப் படித்துக் காட்டினேன் அவற்றுள் இரண்டு செய்யுட்கள் +வருமாறு: + + + +“கழுத்துயர முறுமுடலொட் டகமாதி பன்மிருகம் + +         கவலப் பல்வீக் + +குழுத்துயரக் கமுகுபனை தெங்காதி மரங்கள்குலை + +         குலைய வேரோ + +டிழுத்துயர வெறிந்துயிர்கள் விழுத்துயர மருவமருத் + +         தியற்றும் நோயாம் + +முழுத்துயர மாயவிதைக் காற்றுயர மெனவெவரும் + +         மொழிவா ரென்னே” + + + +(கழுத்து உயரம் உறும் - உடலையுடைய ஒட்டகம். கவல-கவலையை +அடைய, பல்வீ குழு துயர-பல பறவைக் கூட்டங்கள் துயரத்தை அடைய. +வேரோடு இழுத்து-உயர எறிந்து. விழுத் துயரம்-மிக்க துன்பத்தை. +கால் துயரம்-காற்றினால் உண்டான துயரம்; +காற்பங்காகிய துயரம்.) + + + +“உரம்பயிலும் பலமரமு மரம்பையுமிக் காற்றினால் + +         ஒடிந்து சாய்ந்த + +வரம்பையறு காலுதையா லெவ்வுயிருந் தலைசாய்தல் + +        மரபா மன்றோ + +சிரம்பயிலும் பந்தருறும் பலகாலிவ் வொருகாலிற் + +        சிதைந்து வீழ்ந்த + +தரம்பயிலீ ததிசயங்கொ லொன்றுபல வற்றைவெலல் + +         சகச மன்றோ.” + +(அரம்பை-வாழை. கால் உதையால்-காற்று அடித்தலினால், காலால் +உதைத்தலால். பந்தருறும் பலகால்-பந்தலிலேயுள்ளபலகால்கள். ஒரு காலில்-ஒரு +காற்றால்; ஒற்றைக் காலால்.) + + + +“இப்படியே ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நிகழும் நிகழ்ச்சிகளை +வைத்துக்கொண்டு பாடல் இயற்றுவது மேல் நாட்டார் வழக்கம்” என்று +அவர்கள் சொல்லி மகிழ்ந்தார்கள். அந்தப் பாடல்களில் கருத்தைக் காட்டிலும் +பதங்களின் சமற்காரம் அதிகமாக இருக்கும். அத்தகைய பாடல்களைப் படித்தும் +கேட்டும் அக்காலத்தினர் மிக்க இன்புற்றார்கள். + + + +திருப்பனந்தாள் தலைவர் பாராட்டு + + + +திருப்பனந்தாளில் காசி மடத்துத் தலைவராக இருந்த இராமலிங்கத் +தம்பிரானை ஒரு சமயம் கண்டு எனக்கு வேலையானதைத் தெரிவித்து +வரவேண்டுமென்று சுப்பிரமணிய தேசிகர் சொல்லவே நான் ஒரு சனி ஞாயிறு +விடுமுறையில் சென்று அவரோடு சல்லாபம் செய்து இருந்து வந்தேன். அவர், +“உங்கள் தந்தையார் செய்த பூஜா பலன். பிள்ளையவர்கள் உங்கள் பால் +வைத்த அன்பு வீண்போகவில்லை. தியாகராசசெட்டியார் மூலமாக அது +பயனளித்தது” என்று பாராட்டினார். + + + +சில மாதங்களுக்குப் பிறகு இராமலிங்கத் தம்பிரான் தமக்கு இளவரசாக +என் நண்பரும் திருவாவடுதுறையாதீன வித்துவானாக இருந்தவருமான +குமாரசாமித் தம்பிரானை நியமித்தார்.அந்தச் செய்தி தெரிந்தபோது எனக்கு +உண்டான சந்தோஷம் அளவு கடந்து நின்றது. உடனே திருப்பனந்தாள் +சென்று அவரைப்பார்க்க வேண்டுமென்ற ஆவலுடன் இருந்தேன். சந்தர்ப்பம் +கிடைத்தவுடன் போய்ப் பார்த்து என் சந்தோஷத்தைத் தெரிவித்து வந்தேன். + + + + அவர், “எல்லாம் சந்நிதானத்தின் பரிபூர்ண கிருபையால் உண்டானவை. +உங்களுக்கு ஒரு பதவி கிடைத்தது. உங்கள் நண்பனான எனக்கு இந்தப் பதவி +கிடைத்தது” என்று நன்றியறிவோடு சொல்லிச் சுப்பிரமணிய தேசிகருடைய +குணாதிசயங்களை மிகவும் பாராட்டினார். + + + +குமாரன் ஜனனம் + + + +எனக்குக் காலேஜில் வேலையான சில மாதங்களுக்குப் பிறகு இறைவன் +திருவருளால் நான் குடியிருந்த வீட்டில் எனக்கு ஒரு குமாரன் பிறந்தான். +இந்தச் சந்தோஷச் செய்தியைத்தெரிவிக்க என் பிதா திருவாவடுதுறைக்குச் +சென்றார். கற்கண்டு சர்க்கரையுடன் சுப்பிரமணிய தேசிகரைப் பார்க்க +வேண்டிய இடத்தில் பார்த்துச் சொன்னபோது அவர் பரம சந்தோஷ +மடைந்தார். உடனே வீசைக் கணக்காகக் கற்கண்டு கொண்டு வரச் செய்து +மடத்திலுள்ள யாவருக்கும் அளித்து, “நம்முடைய சாமிநாதையருக்கு ஆண் +குழந்தை பிறந்திருக்கிறது” என்று தாமே சொல்லிச் சொல்லி இன்புற்றார். +அவருடைய மாசு மறுவற்ற அன்பைக் கண்டு என் தந்தையார் விம்மிதமுற்றார். +குழந்தையின் ஜாதகத்தைக் கவனித்தவர்கள், “இக்குடும்பத்திற்கு இனி +மேன்மேலும் நன்மை உண்டாகும்” என்று சொன்னார்கள். என் தந்தையார் +அந்தச் செய்தியைக் கேட்டு ஆறுதலுற்றார். உத்தமதானபுரத்திற்கு +அருகிலிருக்கும் சிறந்த சிவஸ்தலமாகிய திருநல்லூரில் கோயில் +கொண்டெழுந்தருளியுள்ள ஸ்ரீ கலியாண சுந்தரேசுவரருக்குச் செய்து கொண்ட +பிரார்த்தனையின் மேல் பிறந்தமையால் குழந்தைக்கு ‘கலியாண சுந்தரம்’ என்று +நாமகரணம��� செய்தார்கள். மதுரைப் பெருமானுக்கும் உரிய திருநாமமாகிய அது +ஒரு வகையில் என் ஆசிரியருடைய ஞாபகத்தையும் உண்டாக்கியது. + + + +தந்தையார் செய்த உபகாரம் + + + +நான் ஒரு குழந்தைக்குத் தந்தை யென்னும் நிலையை அடைந்தும் +குடும்பப் பாதுகாப்பில் நான் குழந்தையாகவே இருந்தேன். நான் உண்டு, என் +வேலை உண்டு, என் புஸ்தகங்கள் உண்டு. - இவ்வளவோடு நான் நின்றேன். +குடும்பப் பாதுகாப்பைப் பற்றியோ, வரவு செலவைப் பற்றியோ, +விசேஷங்களைப் பற்றியோ நான் கவலை கொள்ளுவதில்லை. அவற்றைக் +கவனிக்கும் பொறுப்பு முழுவதையும் என் தந்தையாரே மேற்கொண்டார். +சம்பளம் வந்தவுடன் அதை அவர் கையில் கொடுத்து விடுவேன். ஒரு பைசா +வேண்டுமானாலும் அவரிடமிருந்து பெற்றே செலவிடுவேன். இந்நிலையில் +எவ்வளவோ சௌகரியம் இருப்பதை நான் அனுபவத்தில் உணர்ந்தேன். உப்பில்லை, +புளியில்லை யென்ற குறை காதில் விழாதிருப்பதைப்போன்ற சுகம் வேறு +இல்லை. குடும்பப் பாதுகாப்பு விஷயத்தில் அவசியமான செலவை முன்பே +யோசித்துச் செட்டாகச் செய்யும் கடமையை என் தந்தையார் ஏற்றுக் +கொண்டார். இல்லையேல், ஒரு நாளில் பாதி நேரம் அதிலேயே எனக்குச்" +சென்றிருக்கும். என்தந்தையார் எனக்கு இளமை முதல் உதவி புரிந்தாலும் +குடும்பச் சுமையை என் தலையில் வைக்காமல் யான் கவலையின்றி வாழும்படி +செய்த உபகாரத்தை யான் என்றும் மறக்க இயலாது. தமிழுக்கும் எனக்கும் +உள்ள தொடர்பு வர வரப் பெருகி வளர்வதற்கு அந்த உதவியே +காரணமாயிற்று. + +------------- + + + + + +88. “என்ன பிரயோசனம்?” + + + +காலேஜ் வேலையைப் பார்த்துக் கொண்டும் வீட்டுக்கு வரும் +மாணாக்கர்களுக்கு ஒழிந்தநேரங்களில் பாடம் சொல்லிக் கொண்டும் பொழுது +போக்கி வந்தேன். அச்சமயம் அரியிலூரிலிருந்து சேலம் இராமசுவாமி +முதலியாரென்பவர் கும்பகோணத்துக்கு முன்சீபாக மாற்றப் பெற்று வந்தார். +அவரிடம் என் நல்லூழ் என்னைக் கொண்டுபோய் விட்டது. அவருடைய +நட்பினால் என் வாழ்க்கையில் ஒரு புதுத் துறை தோன்றியது, +தமிழிலக்கியத்தின் விரிவை அறிய முடிந்தது. அந்தாதி, கலம்பகம், +பிள்ளைத்தமிழ், உலா, கோவை முதலிய பிரபந்தங்களிலும் புராணங்களிலும் +தமிழின்பம் கண்டு மகிழ்வதோடு நில்லாமற் பழமையும் பெருமதிப்புடைய +தண்டமிழ் நூல்களிற் பொதிந்து கிடக்கும் இன்றமிழியற்கையின்பத்தை மாந்தி +நான் மகிழ்வதோடு, பிறரும் அறிந்து இன்புறச் செய்யும் பேறு எனக்கு +வாய்த்தது. + + + +சேலம் இராமசுவாமி முதலியார் + + + +முதலியார் சேலத்தில் ஒரு பெரிய மிட்டா ஜமீன்தார் பரம்பரையினர். +இளமையிலேயே பேரறிவு படைத்து விளங்கினார். தமிழிலும் சங்கீதத்திலும் +வடமொழியிலும் பழக்கமுள்ளவர். கும்பகோணத்தில் வேலை பார்த்து வந்த +காலத்தில் அவருடைய திறமை ஓரளவு வெளிப்பட்டு ஒளிர்ந்தமையால் +அவரைத் தக்க கனவான்கள் சென்று பார்த்துப் பேசிவிட்டு வருவார்கள். +கும்பகோணத்துக்கு நூதனமாக உத்தியோகஸ்தர்கள் வந்தால் அவர்களிடம் மனிதர்களை +அனுப்பிப் பார்த்து வரச் செய்வதும், குரு பூஜை முதலிய விசேஷதினங்களில் +மடத்திற்கு வரவேண்டுமென்று அழைக்கச் செய்வதும் திருவாவடுதுறை மடத்து +வழக்கங்கள். சேலம் இராமசுவாமி முதலியாருடைய கல்வியறிவையும் +பெருந்தன்மையையும் கேள்வியுற்ற ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் அவரைப் பார்த்து +வரும்படி காறுபாறு தம்பிரானையும் அவருடன் வேறு சிலரையும் அனுப்பினார். +தம்பிரான் பரிவாரங்களுடன் சென்று முதலியாரைக் கண்டு பேசிக் +கொண்டிருந்தார். + + + +இராமசுவாமி முதலியார் திருவாவடுதுறை மடத்தின் பழம் பெருமையை +நன்குணர்ந்தவராதலின், தம்பிரானுடன் சம்பாஷணை செய்து வரும் போது +மடத்து நிர்வாகத்தைப் பற்றிப் பேசுவதோடு நில்லாமல், கல்வி சம்பந்தமாகவும் +விசாரிக்க ஆரம்பித்தார். “மடத்தில் தமிழ்க் கல்வியபிவிருத்திக்கு என்ன +செய்கிறார்கள்? வித்துவான்களாக யார் யார் இருக்கிறார்கள்? எத்தனை +பேர்கள் படிக்கிறார்கள்?” என்பவை போன்ற கேள்விகளை அவர் கேட்டார். +தம்பிரான் ஏற்ற விடை அளித்து வந்தார். தமிழ், வடமொழி, சங்கீதம் என்னும் +மூன்றிலும் சிறந்ததேர்ச்சியையுடைய வித்துவான்கள் அடிக்கடி மடத்துக்கு வந்து +சம்மானம் பெற்றுச் செல்வார்களென்றும், ஆதீனத் தலைவரே சிறந்த +கல்விமானென்றும், அவரிடத்திலும் சின்னப்பண்டார ஸந்நிதிகளிடத்திலும் பல +மாணாக்கர்கள் தமிழ்ப் பாடம் கேட்டு வருகிறார்களென்றும் தெரிவித்தார். + + + +இவ்வாறு தெரிவித்துக் கொண்டு வரும்போது அக்காலத்து மடத்துக் +காரியஸ்தராக இருந்தவரும், தம்பிரானுடன் வந்தவருமாகிய +சிவசுப்பிரமணியபிள்ளையென்பவர், “மடத்திலே படித்துக் கொண்டிருந்த +மாணாக்கர்களுள் ஒருவராகிய சாமிநாதையர் என்பவரே இவ்வூர்க் +கவர்ன்மென்ட் காலேஜில் தமிழ்ப் பண்டிதராக இருக்கிறார்” என்று சொன்னார். +கேட்ட முதலியார், “அப்படியா? நான் அவரைப் பார்த்ததில்லை” +என்றார். + + + +பின்னும் சில நேரம் பேசி யிருந்து விட்டுத் தம்பிரான் முதலியோர் +விடை பெற்றுச் சென்று ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரிடம் நிகழ்ந்தவற்றையெல்லாம் +தெரிவித்தனர். உடனே ஆதீனத் தலைவர், “இப்போது அங்கே முன்ஸீபாக +வந்திருக்கும் முதலியார் தமிழில் நல்ல பயிற்சி உடையவரென்று தோற்றுகிறது. +அவரை நீங்கள் போய்ப் பார்த்து வரவேண்டும்” என்று எனக்குச் +சொல்லியனுப்பினார். + + + + முதற் காட்சி + + + +அவரைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் முதலில் என்னிடமில்லை; +சுப்பிரமணிய தேசிகர் சொல்லியனுப்பினமையின் நான் சென்று +பார்க்கலாமென்று ஒருநாள் புறப்பட்டேன். அன்று வியாழக்கிழமை (21-10-1880). +அவர் இருந்த வீட்டை அடைந்து அவரைக் கண்டேன். நான் காலேஜில் +இருப்பதையும் மடத்தில் படித்தவனென்பதையும் சொன்னேன். அவர் யாரோ +அயலாரிடம் பராமுகமாகப் பேசுவது போலவே பேசினார். என்னோடு மிக்க +விருப்பத்துடன் பேசுவதாகப் புலப்படவில்லை. ‘அதிகாரப் பதவியினால் இப்படி +இருக்கிறார்; தமிழ் படித்தவராக இருந்தால் இப்படியா நம்மிடம் பேசுவார்?’ +என்று நான் எண்ணலானேன். + + + +“நீங்கள் யாரிடம் பாடம் கேட்டீர்கள்?” என்று அவர் கேட்டார். + + + +“மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் பாடம் +கேட்டேன் என்றேன். + + + +பிள்ளையவர்கள் பெயரைக கேட்டவுடன் அவரிடம் ஏதாவது கிளர்ச்சி +உண்டாகுமென்று எதிர்பார்த்தேன். என்னுடைய உத்தியோகத்துக்காக என்னை +மதிக்காவிட்டாலும், பிள்ளையவர்கள் மாணாக்கனென்ற முறையிலாவது +என்னிடம் மனம் கலந்து பேசலாமே. அவர் அப்படிப் பேச முன் வரவில்லை. +கணக்காகவே பேசினார். + + + +“பிள்ளையவர்கள் பெயரைக் கேட்டுப் புடை பெயர்ச்சியே இல்லாத +இவராவது, தமிழில் அபிமானம் உடையவராக இருப்பதாவது! எல்லாம் +பொய்யாக இருக்கும்’ என்று நான் தீர்மானம் செய்து கொண்டேன். + + + +அவர் கேள்வி கேட்பதை நிறுத்தவில்லை. “என்ன என்ன பாடம் +கேட்டிருக்கிறீர்கள்?” என்ற கேள்வி அடுத்தபடி அவரிடமிருந்து வந்தது. +‘இதற்கு நாம் பதில் சொல்லும் வகையில் இவரைப் பிரமிக்கும்படி +செய்துவிடலாம்’ என்ற நிச்சய புத்தியோடு நான் படித்த புஸ்தகங்களின் +வரிசையை ஒப்பிக்கலானேன், “குடந்தை யந்தாதி, மறைசையந்தாதி, +புகலூரந்தாதி, திருவரங்கத்தந்தாதி, அழகரந்தாதி, கம்பரந்தாதி, முல்லையந்தாதி, +மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், +அகிலாண்ட நாயகி பிள்ளைத் தமிழ், சேக்கிழார் பிள்ளைத் தமிழ், +திருக்கோவையார், தஞ்சை வாணன் கோவை. . . ” என்று சொல்லிக் +கொண்டே போனேன். அந்தாதிகளில் இருபது, கலம்பகங்களில் இருபது, +கோவைகளில் பதினைந்து, பிள்ளைத் தமிழ்களில் முப்பது, உலாக்களில் +இருபது, தூதுகள் இப்படியே பிரபந்தங்களை அடுக்கினேன். அவர் முகத்தில் +கடுகளவு வியப்புக் கூடத் தோன்றவில்லை. + + + +அசையாத பேர்வழி + + + +“இதெல்லாம் படித்து என்ன பிரயோசனம்?” என்று திடீரென்று அவர் +இடை மறித்துக் கூறினார். நான் மிக்க ஏமாற்றம் அடைந்தேன். ‘இவர் +இங்கிலீஷ் படித்து அதிலே மோகங்கொண்டவராக இருக்கலாம்.அதனால்தான் +இப்படிச் சொல்லுகிறார்’ என்ற எண்ணம் எனக்கு உண்டாயிற்று. ஆனாலும் +நான் விடவில்லை. புராண வரிசையைத் தொடங்கினேன். + + + +“திருவிளையாடற் புராணம், திருநாகைக்காரோணப் புராணம், மாயூரப் +புராணம், கந்த புராணம், பெரிய புராணம், குற்றாலப் புராணம். . . . “ + + + +அவர் பழையபடியே கற்சிலைபோல இருந்தார். + + + +“நைடதம், பிரபுலிங்க லீலை, சிவஞான போதம், சிவஞானசித்தி யார் +உரை. . . . .” என்னும் நூல்களின் பெயர்களைச் சொன்னேன். இலக்கண +நூல்களை எடுத்துக் கூறினேன். அப்பொழுதும் அவருக்குத் திருப்தி +உண்டாகவில்லை. ‘அடடா! முக்கியமானவற்றையல்லவா மறந்து விட்டோம்? +அதை முதலிலேயே சொல்லியிருந்தால் இவரை வழிக்குக் கொண்டு +வந்திருக்கலாமே!’ என்ற உறுதியுடன், “கம்பராமாயணம் முழுவதும் இரண்டு +மூன்று முறை படித்திருக்கிறேன். பிள்ளையவர்களிடமும் சில காண்டங்களைப் +பாடம் கேட்டிருக்கிறேன்” என்றேன். + + + +இராமசுவாமி முதலியார், “சரி, அவ்வளவு தானே?” என்று கேட்டார். +எனக்கு மிகவும் அதிருப்தி ஏற்பட்டுவிட்டது. ‘கம்பராமாயணத்தில் கூடவா +இவ்வளவு பராமுகம்! இவ்வளவு அசட்டை!’ என்ற நினைவே அதற்குக் +காரணம். அதற்கு மேலே சொல்ல என்ன இருக்கிறது? ஆனால் அவர் +என்னை விடுகிறவராக இல்லை. மேலும் கேள்வி கேட்கலானார். + + + +பழைய நூல்கள் + + + +“இந்தப் பிற்காலத்துப் புஸ்தகங்களெல்லாம் படித்தது சரிதான். பழைய +நூல்களில் ஏதாவது படித்ததுண்டா? + + + + எனக்கு அவர் எதைக் கருதிக் கேட்டாரென்று தெரியவில்லை. +‘பிள்ளையவர்கள் இயற்றிய நூ��்களையே நான் படித்திருப்பதாக இவர் +எண்ணிக்கொண்டாரோ? கந்த புராணம், பெரிய புராணம் +முதலியவைகளெல்லாம் பழைய நூல்களல்லவோ? கம்பராமாயணம் பழைய நூல் +தானே? பழைய நூலென்று இவர் வேறு எதைத் கருதுகிறார்?’ என்று +யோசிக்கலானேன். + + + +“நான் சொன்னவற்றில் எவ்வளவோ பழைய நூல்கள் இருக்கின்றனவே!” +என்று நான் கேட்டேன். + + + +“அவைகளுக்கெல்லாம் மூலமான நூல்களைப் படித்திருக்கிறீர்களா?” +என்று அவர் கேட்டபோதுதான் அவரிடம் ஏதோ சரக்கு இருக்கிறதென்ற +எண்ணம் எனக்கு உண்டாயிற்று. + + + +“தாங்கள் எந்த நூல்களைச் சொல்லுகிறீர்களென்று தெரிய வில்லையே?” +என்றேன். + + + +“சீவக சிந்தாமணி படித்திருக்கிறீர்களா? மணிமேகலை படித்திருக் +கிறீர்களா? சிலப்பதிகாரம் படித்திருக்கிறீர்களா?” + + + +அவர் சொன்ன நூல்களை நான் படித்ததில்லை; என்னுடைய +ஆசிரியரே படித்ததில்லை. புஸ்தகத்தைக்கூட நான் கண்ணால் பார்த்ததில்லை. +ஆனாலும், ‘இவ்வளவு புஸ்தகங்களைப் படித்ததாகச் சொன்னதை ஒரு +பொருட்படுத்தாமல் எவையோ இரண்டு மூன்று நூல்களைப் படிக்கவில்லை +என்பதைப் பிரமாதமாகச் சொல்லவந்து விட்டாரே!’ என்ற நினைவோடு +பெருமிதமும் சேர்ந்து கொண்டது. “புஸ்தகம் கிடைக்கவில்லை; கிடைத்தால் +அவைகளையும் படிக்கும் தைரியமுண்டு” என்று கம்பீரமாகச் சொன்னேன். + + + +சாதாரணமாகப் பேசிக்கொண்டு வந்த முதலியார், நிமிர்ந்து என்னை +நன்றாகப் பார்த்தார். “நான் புஸ்தகம் தருகிறேன்; தந்தால் படித்துப் பாடம் +சொல்வீர்களா?” என்று கேட்டார். + + + +“அதிற் சிறிதும் சந்தேகமே இல்லை. நிச்சயமாகச் சொல்கிறேன்” என்று +தைரியமாகச் சொன்னேன். அறிவுப் பலத்தையும் கல்வி கேள்விப் பலத்தையும் +கொண்டு எப்படியாவது படித்து அறிந்து கொள்ளலாம் என்ற துணிவு எனக்கு +உண்டாகிவிட்டது. + + + +“சரி, சிந்தாமணியை நான் எடுத்து வைக்கிறேன். நீங்கள் படித்துப் +பார்க்கலாம். அடிக்கடி இப்படியே வாருங்கள்” என்று அவர் சொன்னார். நான் +விடை பெற்றுக்கொண்டு வந்தேன். பார்க்கச் சென்றபோது அவர் இருந்த +நிலையையும் நான் விடைபெறும் போது அவர் கூறிய வார்த்தைகளையும் எண்ணி, அவர் +சாமான்ய மனிதரல்லரென்றும், ஆழ்ந்த அறிவும் யோசனையும் +உடையவரென்றும் உணர்ந்தேன். + + + +இரண்டாவது சந்திப்பு + + + +அடுத்த ஞாயிற்றுக்கிழமை இராமசாமி முதலியாரிடம் போனேன். அன்று +அவர் மிகவும் அன்போடு என்ன�� வரவேற்றார். அவரைப் பார்ப்பதைவிட +அவர் சொன்ன புஸ்தகத்தைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் +கட்டுக்கடங்காமல் இருந்தது. அவர் தம்மிடம் இருந்த சீவகசிந்தாமணிக் கடிதப் +பிரதியை என்னிடம் கொடுத்தார். “இதைப் படித்துப் பாருங்கள். பிறகு பாடம் +ஆரம்பிக்கலாமா?” என்றார். “அப்படியே செய்யலாம்” என்று உடன்பட்டேன். +பிறகு அவர் அந்தப் பிரதியைத் தாம் பெற்ற வரலாற்றைச் சொல்லத் +தொடங்கினார். + + + +முதலியார் சிந்தாமணி பெற்ற வரலாறு + + + +“எனக்குச் சிந்தாமணி முதலிய பழைய புஸ்தகங்களைப் படிக்க +வேண்டுமென்ற ஆவல் மிகுதியாக இருந்தது. இந்தத் தேசத்தில் நான் சந்தித்த +வித்துவான்களில் ஒருவராவது அவற்றைப் படித்ததாகவே தெரியவில்லை. +ஏட்டுச் சுவடிகளும் கிடைக்கவில்லை. திருநெல்வேலிப் பக்கத்திலுள்ள +கவிராயர்கள் வீட்டில் பிரதிகள் கிடைக்கலாமென்று எண்ணி ஸ்ரீவைகுண்டத்தில் +முன்ஸீபாக இருந்த என் நண்பர் ஏ. இராமசந்திரையர் என்பவரிடம் +விஷயத்தைச் சொல்லி வைத்திருந்தேன். அவர் யார் யாரையோ விசாரித்துப் +பார்த்தார்; ஒன்றும் கிடைக்கவில்லை. + + + +“ஒரு சமயம் ஸ்ரீவைகுண்டத்துக்கு அருகிலுள்ள ஓர் ஊரில் பரம்பரை +வித்துவான்களாக இருந்த கவிராயர் குடும்பமொன்றில் உதித்த ஒருவர் ஒரு +வழக்கில் சாக்ஷியாக வந்தார். அவரை விசாரிக்கும்போது, அவர் கவிராயர் +பரம்பரையைச் சேர்ந்தவரென்றும், அவருடைய முன்னோர்கள் பல நூல்களை +இயற்றியிருக்கிறார்களென்றும் என் நண்பருக்குத் தெரியவந்தது. விசாரணை +யெல்லாம் முடிந்த பிறகு முன்ஸீப் அந்தச் சாட்சியைத் தனியே அழைத்து +அவர் வீட்டில் ஏட்டுச் சுவடிகள் இருக்கின்றனவா என்று விசாரித்தார். அவர், +‘இருக்கின்றன’ என்று சொல்லவே, சிந்தாமணிப் பிரதி இருந்தால் தேடி +எடுத்துத் தரவேண்டுமென்று கூறினார். அதிகாரப் பதவியிலிருந்தமையால் +அவர் முயற்சி பலித்தது. அந்தக் கவிராயர் சீவகசிந்தாமணிப் பிரதியைக் +கொண்டு வந்து கொடுத்தார். அதற்கு முப்பத்தைந்து ரூபாய் கொடுத்து +வாங்கி எனக்கு அனுப்பினார். அதிலிருந்து காகிதத்திற் பிரதி பண்ணிய +புஸ்தகம் இது. + + + +“இவ்வளவு கஷ்டப்பட்டு இதனைப் பெற்றும் படிப்பதற்கு முடியவில்லை. +நான் காலேஜில் படித்தபோது இதன் முதற் பகுதியாகிய நாமகளிலம்பகம் +மாத்திரம் பாடமாக இருந்தது. அதை ஒரு துரை அச்சிட்டிருந்தார். அதில் +தமிழை���்காட்டிலும் இங்கிலீஷ் அதிகமாயிருந்தது. நூல் முற்றும் படித்துப் +பார்க்க வேண்டுமென்ற ஆசையால் நான் போகும் இடங்களில் உள்ள +வித்துவான்களை எல்லாம் விசாரித்துப் பார்க்கிறேன். எல்லோரும் அந்தாதி, +பிள்ளைத்தமிழ், புராணங்கள் இவைகளோடு நிற்கிறார்களே யொழிய மேலே +போகவில்லை. அதனால் நான் மிகவும் அலுத்துப் போய்விட்டேன்.” + + + +“புஸ்தகம் மிகச் சிறந்த புஸ்தகம். கம்ப ராமாயணத்தின் காவ்ய +கதிக்கெல்லாம் இந்தக் காவியமே வழிகாட்டி இதைப் படித்துப் பொருள் செய்து +கொண்டு பாடம் சொல்வீர்களானால் உங்களுக்கும் நல்லது; எனக்கும் இன்பம் +உண்டாகும்.” + + + +முதலியார் கூறியவற்றை மிக்க கவனத்தோடு கேட்டு வந்தேன். தமிழ் +நூற் பரப்பையெல்லாம் உணர்ந்து விளங்கிய பிள்ளையவர்கள் கூடச் +சிந்தாமணியைப் படித்ததில்லையென்பதை நினைத்தபோது, ‘நாம் இந்தப் புதிய +நூலைப் படித்துப் பொருள் செய்வது சுலபமாக இருக்குமா?’ என்ற அச்சம் +சிறிது தோற்றினாலும், “தமிழ் நூல் மரபுக்குப் புறம்பாக இல்லாத நூல் +ஏதாயிருந்தாலென்ன? ஸம்ஸ்கிருதமா, தெலுங்கா நூதனமாகப் பயிற்சி செய்து +கொள்ள வேண்டுமென்பதற்கு? தமிழ் நூலை அறிவு கொண்டு ஆராய்ந்து +படித்துப் பார்த்தால் விளங்காமலா போகிறது? எவ்வளவோ நூல்களைப் +படித்ததாகச் சொல்லியும், ‘என்ன பிரயோசனம்?” என்று ஒரு கேள்வியில் +தூக்கி எறியும்படி அந்தப் புஸ்தகத்தில் என்னதான் இருக்கிறது? +பார்த்துவிடலாம்!” என்ற தைரியமே முன் நின்றது. + + + +“பிற்பாடு வருகிறேன்; இதைப் படித்துப் பார்த்துக்கொண்டே +வருகிறேன்” என்று உத்ஸாகத்தோடு சொல்லி இராமசுவாமி முதலியாரிடம் +விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டேன். + +------------- + + + + + +89. ஜைன நண்பர்கள் + + + +சேலம் இராமசுவாமி முதலியார் கொடுத்த சீவகசிந்தாமணிப் பிரதியைப் +படிக்க ஆரம்பித்தேன். அதில் நச்சினார்க்கினியர் உரையும் இருந்தது. அது +சீவகனைப் பற்றிய காவியம் என்பது மட்டும் எனக்குத் தெரிந்ததேயன்றி இன்ன +கதையை அது சொல்வது, இன்னவகையில் அது சிறப்புடையது என்பவற்றை +அறியேன். தமிழ் நூற்பரப்பை ஒருவாறு அறிந்துவிட்டதாக ஒரு நினைப்பு. +அதற்குமுன் எனக்கு இருந்தது. நான் கண்ட நூற் பரப்புக்குப் புறம்பேயிருந்த +சிந்தாமணி எனக்கு முதலில் பணிவை அறிவுறுத்தியது. + + + +சிந்தாமணி ஆராய்ச்சி + + + +புஸ்தகத்தை எடுத்துக் கொண்டு உட்கார்ந்தேன். + + + +“மூவா முதலா வுலகம்மொரு மூன்று மேத்தத் தாவாத வின்பந் +தலையாயது தன்னி னெய்தி ஓவாது நின்ற குணத்தொண்ணிதிச் செல்வனென்ப +தேவாதி தேவ னவன்சேவடி சேர்து மன்றே” + + + +என்பது சிந்தாமணியிலுள்ள முதற்பாட்டு. இதிலுள்ள சொற்களில் +பொருள் விளங்காதது ஒன்றுமில்லை, ஆனால் ஒரு நூலின் காப்புச் செய்யுளாக +இருக்கும் அதில் எனக்கு ஒரு புதுமை தோற்றியது. நான் படித்த நூல்களில் +உள்ள விநாயக வணக்கமோ, சடகோபர் காப்போ அதில் இல்லை. ஜைன +சமயக் காவியத்தில் அந்த வணக்கங்கள் இருக்க நியாயமில்லை; பொதுவான +கடவுள் வணக்கமாக அது முதலில் எனக்குத் தோற்றியது. ‘மூவா முதலா +வுலகம் என்ற தொடருக்கு மாத்திரம் எனக்குப் பொருள் தெளிவாகவில்லை’ + + + +உரையைப் படிக்கலானேன். நச்சினார்க்கினியர் முதலில் காவிய +இலக்கணத்தை விரிவாக எழுதியிருக்கிறார். பிறகு சொல்லிலக்கணம் முதலியன +வருகின்றன. அக்காலத்தில் தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இளம் பூரணமும் +நச்சினார்க்கினியமும் சொல்லதிகாரம் சேனா வரையமும் அச்சிடப் +பெற்றிருந்தன. அவற்றை நான் படித்திருந்தமையால் சிந்தாமணி உரையிலுள்ள +எழுத்திலக்கணச் சொல்லிலக்கணச் செய்திகள் எனக்கு விளங்கின. உரையில், +‘மூவா முதலா வுலகம்மொரு மூன்றும்’ என்பதற்கு, ‘அந்தமும் ஆதியுமில்லாத +மூவுலகமும்’ என்று எழுதியிருந்தது. உலகம் நிலை +யாமையையுடையதென்ற விஷயத்தையே மிகுதியாகக் கேட்டுப் +பழகியிருந்த எனக்கு இக்கருத்து, புதியதாக இருந்தது. மேலே படித்துக்கொண்டு +போனேன். அந்த ஒரு பிரதியை மாத்திரம் வைத்துப் படிப்பது சிரமமாகவே +தோற்றியது. + + + +ஏட்டுப் பிரதி + + + +அந்த வாரம் சனிக்கிழமை வழக்கம் போலவே திருவாவடுதுறைக்குப் +போய் இராமசாமி முதலியாரைச் சந்தித்தது முதல் நிகழ்ந்தவற்றையெல்லாம் +சுப்பிரமணிய தேசிகரிடம் தெரிவித்தேன். கேட்ட தேசிகர் மிகவும் +மகிழ்ச்சியடைந்து. “தக்க அறிவுடைய கனவான்களது பழக்கம் ஏற்படுவது +மிகவும் நல்லதுதான்; அவருக்கு ஜாக்கிரதையாகப் பாடம் சொல்ல வேண்டும்; +பிள்ளையவர்கள் எழுதி வைத்த சிந்தாமணி ஏட்டுப் பிரதி ஒன்று மடத்தில் +இருக்கிறது” என்று சொல்லி அப்பிரதியை வருவித்து அளித்தார். +“முதலியாருக்குப் பாடம் சொல்லும்படியிருப்பதால் சனிக்கிழமை மட்டும் வந்து +ஞாயிற்றுக்கிழமை திரும்பி விடலாம்” என்று கூறி விடை கொட��த்தார். + + + +கும்பகோணம் வந்து பிள்ளையவர்கள் பிரதியையும் முதலியார் தந்த +பிரதியையும் வைத்துக்கொண்டு சிந்தாமணியைப் படித்தேன். முதலியார் +பிரதியில் மூலமும் பொழிப்புரையுமே இருந்தன. முதலில் சில பாடல்களுக்கு +மாத்திரம் விசேட உரை இருந்தது. பிள்ளையவர்கள் பிரதியிலோ முழுவதற்கும் +விசேட உரை இருந்தது. ‘விசேட உரையை விட்டு விட்டுத் தனியே +பொழிப்புரையை மாத்திரம் எழுதிக் கொள்வதில் என்ன லாபம்? இரண்டும் +வேறு வேறு உரைகளோ’ என்ற சந்தேகம் உண்டாயிற்று. கவனித்துப் +பார்க்கையில் இரண்டும் ஒருவரது உரையே என்று தெரிந்தது. ஆனாலும் +‘இருவேறு வகையாகப் பிரதிகள் இருப்பது ஏன்?’ என்ற ஐயம் விளங்கவில்லை. + + + +தெரியாத விஷயங்கள் + + + +அடுத்த நாள் இராமசுவாமி முதலியாரிடம் சென்று பாடம் சொல்லத் +தொடங்கினேன். நாமகள் இலம்பகம் 1870-ஆம் வருஷம் பி. ஏ, பரீட்சைக்குப் +பாடமாக இருத்நது. அப்போது படித்த முதலியார் தாம் பாடம் கேட்டபோது +அறிந்த விஷயங்களை இடையிடையே சொன்னார். நான் பாடம் சொன்னபோது +இடையில், ‘கட்டியக்காரன்’ பெயர் வந்தது. நான் அதை ஒருவருடைய +பெயரென்று தெரிந்து கொள்ளவில்லை. ‘கட்டியக்காரன்’ என்று படித்தேன். +அப்போது முதலியார், “நாமகள் இலம்பகக் கதை +மாத்திரம் எனக்குத் தெரியும்; கட்டியங்காரன் என்பது தான் அந்தச் +சொல்; சச்சந்தனுடைய மந்திரிகளுள் ஒருவன் பெயர் அது; அவன் தான் +சச்சந்தனைக் கொன்றான்” என்றார். பிறகு, ‘கோவிந்தன்’ (சீவக சிந்தாமணி, +187, உரை) என்று ஒரு பெயர் வந்தது. அது கண்ணபிரானைக் +குறிப்பதென்பதைத் தவிரச் சிந்தாமணியிலே யாரைக் குறிப்பதென்பது +தெரியவில்லை. முதலியாருக்கும் அது விளங்கவில்லை. இப்படியே வேறு சில +விஷயங்களும் விளங்காமலிருந்தன. எனக்கு விளங்காத விஷயங்களை +விளங்கவில்லையென்று சொல்லித் தக்கவர்களைக் கேட்க வேண்டுமென்பேன். +விளங்காததையும் விளங்கியதாகச் சொல்லிக் குழப்பாததை அறிந்த முதலியார் +அதைப் பாராட்டுவார். நாங்கள் சிந்தாமணியைப் படித்து வந்த போது சில +வித்துவான்களும் வந்திருந்து கேட்பதுண்டு. இப்படி ஐந்து மாதங்கள் சென்றன. + + + +சிந்தாமணி ஜைன நூலாதலின் விளங்காத விஷயங்களை ஜைனர்கள் +மூலமாகத் தெரிந்து கொள்ளலாமென்று எண்ணி என்னிடம் வீட்டிற் பாடம் +கேட்டு வந்த ராமலிங்க பண்டாரமென்பவரை நோக்கி, “இந்தப் பக்கத்தில் +ஜைனர்க���் யாரேனும் இருக்கிறார்களா? படித்தவர்களாக யாரையாவது +தெரியுமா?” என்று கேட்டேன். + + + +அவர், “இங்கே இராமசாமி கோவில் மேல் தெருவில் ஜைனர்கள் +வீடுகள் உண்டு. எல்லோரும் செல்வர்களே, அவர்களுள் படித்தவர்களும் +இருக்கிறார்கள்” என்று சொன்னதைக் கேட்டபோது உடனே போய் +அவர்களைப் பார்க்க வேண்டுமென்று விரும்பினேன். + + + +சந்திரநாத செட்டியார் + + + +மறுநாள் என் விருப்பத்தின்படி ராமலிங்க பண்டாரம் என்னை +அழைத்துக் கொண்டு ஜைனர்கள் வசிக்கும் தெருவிற்குச் சென்றார். அங்கே +தமக்குத் தெரிந்த சந்திரநாத செட்டியார் என்பவர் வீட்டினுள் என்னை +அழைத்துப் போனார். அந்த வீட்டின் வாயிலில் மாக்கோலம் +போடப்பட்டிருந்தது. நிலைகளில் மாவிலைத் தோரணம் கட்டி அலங்காரம் +செய்திருந்தார்கள். ‘இன்றைக்கு ஏதோ விசேஷம் போலிருக்கிறது’ என்று +எண்ணி உள்ளே சென்றோம். அங்கே கூடத்தில் பலர் கூடியிருந்தனர். +அக்கூட்டத்திலிருந்த ஒரு கனவானைக் காட்டி, “இவர்களே சந்திரநாத +செட்டியாரவர்கள்” என்று ராமலிங்க பண்டாரம் சொல்லி என்னையும் +அவருக்குப் பழக்கம் பண்ணி வைத்தார். + + + +“வாழை, தோரணம் இவையெல்லாம் கட்டி அலங்காரம் +செய்திருக்கிறதே; ஏதாவது விசேஷ முண்டோ?” என்று கேட்டேன். + + + + “இன்றைக்குச் சிந்தாமணி பூர்த்தியாயிற்று; அந்த விசேஷத்தைக் +கொண்டாடுகிறோம்” என்று அவர் சொன்னார். + + + +எனக்கு மிக்க ஆச்சரியமுண்டாயிற்று. ‘நாம் சிந்தாமணியைப் +பற்றித்தான் கேட்க வந்திருக்கிறோம். சிந்தாமணி பூர்த்தியாயிற்றென்று இவர் +சொல்லுகிறார்; சிந்தாமணியைப் பாராயணம் செய்வது இவர்கள் சம்பிரதாயம் +போலிருக்கிறது’ என்றெண்ணி, “சிந்தாமணியைப் படித்து வந்தீர்களா?” என்று +கேட்டேன். + + + +“ஆமாம். நான் சிரவணம் செய்து வந்தேன். இவர்கள் பாடம் செய்து +வந்தார்கள்” என்று சொல்லி எதிரே அமர்ந்திருந்த ஒருவரைச் சுட்டிக் காட்டி, +“திண்டிவனம் தாலூகாவிலுள்ள வீடூர் என்பது இவர்கள் கிராமம். தமிழிலும், +வட மொழியிலும், பிராகிருதத்திலும் உள்ள ஜைன கிரந்தங்களிலும் +உரைகளிலும் மிகுதியான பழக்கமுள்ளவர்கள். இவர்களைப் போன்றவர்கள் +யாருமில்லை. இவர்கள் திரு நாமம் அப்பாசாமி நயினா ரென்பது” என்று +தெரிவித்தார். எனக்காகவே அவர் அங்கே வந்திருப்பதாகத் தோற்றியது. ‘நாம் +எந்த விஷயத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புகிறோமோ அந்த +விஷயத்தில் தேர்ச்சியுள்ளவர்களை எதிர்பாராமலே பார்க்கிறோம். அதே +விஷய சம்பந்தமான உத்ஸவம் வேறு நடக்கிறது. இது தெய்வச் செயலே’ என்று +எண்ணிப் பூரிப்பை அடைந்தேன். + + + +“எவ்வளவு காலமாக இவர்கள் இங்கே இருக்கிறார்கள்?” என்று +கேட்டேன். + + + +“ஆறு மாதமாக இந்தப் பாடம் நடந்து வருகிறது” + + + +‘இந்த ஆறு மாதங்களை நாம் வீண்போக்கி விட்டோமே!’ என்ற +வருத்தம் எனக்கு உண்டாயிற்று. + + + +அந்தப் பெரியவர் மிக்க அடக்கமுடையவராகவும் மெல்ல வார்த்தை +சொல்பவராகவும் இருந்தார். அவரிடம் நானும் சிந்தாமணியைப் படித்து +வருவதைப் பற்றிச் சொன்னேன். “அதில் கோவிந்தனென்று வருகிறது; அது +யாருடைய பெயர்?” என்று கேட்டேன். + + + +அவர் ஸாதாரணமாக, “விஜயையின் சகோதரன். விஜயை சச்சந்தனுடைய +மனைவி” என்றார். வேறு சில ஐயங்களை வினவினேன். தெளிவாக பதில் +கிடைத்தது. சிந்தாமணியைப் படிப்பதற்கு ஒரு +தக்க துணை அகப்பட்டதென்ற நம்பிக்கை உண்டாயிற்று. சந்திரநாத +செட்டியாரும் சில விஷயங்களை விளக்கினார். கதையையும் எடுத்துச் +சொன்னார். + +-------------------------- + +கும்பகோணம் காலேஜ் பிரின்ஸிபாலாக இருந்து பென்ஷன் பெற்றுக் +கொண்டுள்ள ஸ்ரீமான் ராவ்பகதூர் அ. சக்கரவர்த்தி நயினாரவர்களுடைய +தந்தையார் இவர். + +--------- + + + +விளங்கிய விஷயங்கள் + + + +அன்று முதல் சந்திரநாத செட்டியார் எனக்கு நல்ல நண்பராகி விட்டார். +ஜைனர்கள் சீவகசிந்தாமணியைச் சிறந்த பாராயண நூலாகக் +கருதுகிறார்களென்பதும், நம்மவர்கள் இராமாயண முதலியவற்றைப் பாராயணம் +செய்து பட்டாபிஷேகம் செய்வது போல அவர்களும் அந்த நூல் +நிறைவேறியவுடன் அந்த நிறைவேற்றத்தைக் கொண்டாடுவார்களென்பதும் +எனக்குத் தெரியவந்தன. சம்பிரதாயமாகப் படித்தவர்களிடையே சிந்தாமணிக்கு +ஓர் உரைவாய் மூலமாக வழங்கி வந்தது. அதை அவர்கள் சொல்லுவார்கள். +மணிப்பிரவாள நடையில் மத சம்பந்தமான பரிபாஷைகள் மிகுதியாகக் கலக்கப் +பெற்று விளங்குவது அவ்வுரை. அதன் பகுதிகளை அவ்வப்போது சந்திரநாத +செட்டியார் சொல்ல நான் கேட்டு இன்புற்றேன். + + + +சிந்தாமணி உரையில் அங்கங்கே, நச்சினார்க்கினியர் அந்நூற் +செய்யுட்பகுதிகளை மேற்கோளாகக் காட்டியிருக்கிறார். நூல் முழுவதும் +நன்றாகப் படித்து மனனஞ் செய்தாலன்றி அச்செய்யுட்கள் இன்ன இடத்தில் +இருக்கின்றன வென்பது விளங்காது. அந்தச் செய்யுட் ப���ுதிகளைச் சந்திரநாத +செட்டியாரிடம் சொல்வேன்; அவர் பளிச்சுப் பளிச்சென்று இன்ன +இடத்திலிருக்கின்றனவென்று சொல்லி முழுப் பாட்டையும் சொல்வார். +சிந்தாமணி விஷயத்தில் அவர் ஓர் அகராதியாக இருந்தார். + + + +சிந்தாமணி சம்பூரண உத்ஸவம் முடிந்த பிறகும் அப்பாசாமி நயினார் +சில காலம் கும்பகோணத்தில் தங்கியிருந்தார். பிறகு தம் ஊர் சென்றார். +இடையிடையே கும்பகோணம் வந்து செல்வார். அவர் வந்த +காலங்களிலெல்லாம் ஜைன சம்பிரதாயங்களையும் ஜைன சமயக் +கருத்துக்களையும் விளக்கமாகத் தெரிந்து கொள்வேன். + + + +ஜைன அன்பர்களுடைய பழக்கத்தால் ஏட்டுப் பிரதிகள் இரண்டு +வகையாக இருந்ததற்குக் காரணம் தெரிந்து கொண்டேன். நச்சினார்க்கினியர் +முதலில் சிந்தாமணிக்கு ஓர் உரை எழுதினாராம். பிறகு அதை ஜைனர்களிடம் +படித்துக் காட்டிய போது சம்பிரதாய விரோதமாகச் சில பகுதிகள் +உள்ளனவென்று சொன்னார்களாம். அதனால் அவர் தம்மை ஒரு ஜைனராகச் +சொல்லிக்கொண்டு சிற்றாம்பூர் என்னும் இடத்திலுள்ள ஜைன மடத்திற்கு வந்து +சில காலம் தங்கி ஜைன நூல்களையும் ஜைன சம்பிராதயங்களையும் கற்றுச் +சென்று மீட்டும் புதிய உரையை எழுதினாராம். விசேஷ உரையுடன் இருக்கும் +பிரதியிலுள்ளது பின்பெழுதிய உரையென்று தெரிய வந்தது. + + + +இப்படி நூலாராய்ச்சியால் புலப்படாமல் கர்ண பரம்பரையாகக் கேட்டுத் +தெரிந்த செய்திகளால் பல விஷயங்கள் எனக்கு விளங்கின. சிந்தாமணியின் +நூலாசிரியராகிய திருத்தக்க தேவர் வரலாறு அவ்வாறுதான் எனக்குத் +தெரிந்தது. + + + +இராமசுவாமி முதலியார் பாடம் கேட்டு வந்தார். அங்கங்கே சிந்தாமணி +நூலின் நயத்தையும் உரை நயத்தையும் அறிந்து அவர் பாராட்டுவார். +கோவிந்தையாரிலம்பகத்தின் முதற் செய்யுளுரையில் “வீரன்றாணிழல்” +என்பதற்குச் சமவசரணம் என்று பொருள் எழுதப்பட்டிருந்தது. அந்தத் தொடர் +எதைக் குறிக்கிறதென்று எனக்கு விளங்கவில்லை. விளங்காவிட்டால் +விடுவேனா? சந்திரநாத செட்டியாரிடம் போய்க் கேட்டேன். சமவசரண +மென்பதுபெரிய ஜைனாலயமென்று தெரிய வந்தது. அதற்குப் பல அங்கங்கள் +உண்டென்று சந்திரநாத செட்டியார் சொல்லி, “என் வீட்டிற்கு எதிரே குணபால +செட்டியார் என்பவர் வீடு இருக்கிறது. அவ் வீட்டில் சமவசரணத்தின் படம் +உண்டு. அதைப் பார்த்தால் அதன் விஷயம் நன்றாகத் தெரியும்” என்று +சொன்னார். பவ்ய ஜீவன் அப்படியே அவ்வீடு சென்று குணபால செட்டியாரைக் கண்டு +பேசினேன், அவர் சமவசரணத்தின் படத்தை எனக்குக் காட்டினார். +அதிலிருந்து சமவசரணத்தின் உறுப்புக்கள் எனக்குத் தெளிவாகத் தெரிய +வந்தன. குணபால செட்டியார் ஜைன சம்பிரதாயம் தெரிந்தவர். அவரை விட +அதிகமாக அவர் மனைவியாருக்குத் தெரியும். + + + +நான் அவ்வீட்டுக்குப் போன அன்று சமவசரணப் படத்தைப் +பார்த்ததோடு ஜைன சமய சம்பந்தமான சில விஷயங்களை விசாரித்தேன். +அவர் தமக்குத் தெரிந்தவற்றைச் சொல்லிவிட்டு மற்ற விஷயங்களை +விளக்குவதற்காகத் தம் மனைவியாரை அழைத்து வந்தார். அவர் ஜைன +சமய விஷயங்களில் பெரிய நிபுணரான தரணி +செட்டியார் என்பவருடைய சகோதரியார்.அவர் மூலமாகச் சில விஷயங்களைத் +தெரிந்து கொண்டேன். நான் கேட்கும் கேள்விகளிலிருந்து அப்பெண்மணியார் +நான் ஜைன சமய நூல்களில் பயிற்சியுடையவனென்று எண்ணி, “இவர்கள் +பவ்ய ஜீவன் போல் இருக்கிறதே” என்று தம் கணவரிடம் சொன்னார். பக்குவ +ஆன்மாக்களைப் பவ்ய ஜீவனென்பது ஜைன சம்பிரதாயம். நச்சினார்க்கினியர் +சிந்தாமணிக்கு ஜைனர்களுடைய சம்மதத்தைப் பெற்று உரை எழுதியபோது +எவ்வளவு சந்தோஷத்தை அடைந்திருப்பாரோ அவ்வளவு சந்தோஷத்தை +அப்போது நான் அடைந்தேன். ‘சிந்தாமணி ஆராய்ச்சிக்கு நீ தகுதியுடையவன்’ +என்ற யோக்கியதா பத்திரத்தை அந்த ஜைன விதுஷி அளித்ததாகவே நான் +எண்ணினேன். + +------------------------- + +இவ்விஷய விரிவை நான் எழுதி வெளியிட்டுள்ள நல்லுரைக் கோவை +நாலாம் பாகத்தில் காணலாம். + +-------- + + + +சமுத்திர விஜயம் செட்டியார் + + + +இந்த ஜைன நண்பர்களோடு அதே தெருவில் இருந்தவரும் மிக்க +செல்வரும், தரணி செட்டியாருடைய மருகருமாகிய சமுத்திர விஜயம் +செட்டியாருடைய பழக்கமும் எனக்கு உண்டாயிற்று. அவருடைய துணையினால் +எனக்குச் சில ஜைன நூல்கள் இரவலாகக் கிடைத்தன. + + + +நச்சினார்க்கினியர் உரை + + + +இவ்வாறு ஜைனர்களுடனும் ஜைன நூல்களுடனும் இடைவிடாது +பழகியபோது சிந்தாமணியின் அருமை வர வர எனக்கு நன்கு +புலப்படலாயிற்று. செந்தமிழ்க் காவியங்களுக் கெல்லாம் அதுவே உரையாணி +என்பதை அறிந்து கொண்டேன். அதனுடைய போக்கிலே உள்ள கம்பீரமும் +சொல்லாட்சிச் சிறப்பும் என் மனத்தைக் கவர்ந்தன. + + + +நச்சினார்க்கினியர் உரையினால் புதிய புதிய விஷயங்களை +உணர்ந்தேன். இரண்டு விஷயங்களில் அவரிடம் சிறிது வருத்தம் உண்டாயிற்று. +பல இடங்களில் மாறிக் கூட்டிப் பொருள் விளக்குகிறார். ஓரிடத்திலுள்ள +பாட்டிலிருக்கும் சொல்லைப் பல பாட்டுக்கு முன்னே +மற்றோரிடத்திலுள்ளதோடு இணைத்து மாட்டெறிகின்றார். அத்தகைய +இடங்களில் அவர் உரையில் சிறிது வெறுப்புத் தட்டியது. ஒரு விஷயத்துக்கோ +சொற்பிரயோகத்துக்கோ ஒரு நூற் செய்யுட் பகுதியை மேற்கோள் +காட்டுமிடத்தில் அந்த நூற் பெயரைச் சொல்வதில்லை. ‘என்றார் பிறரும்’ +என்று எழுதி விட்டு விடுகிறார். + + + +சிந்தாமணிப் பாட்டாக இருந்தால் சந்திரநாத செட்டியார் இருக்கிறார். +வேறு நூலாக இருந்தால் என்ன செய்வது! அவர் மேற் கோளாகக் காட்டும் +உதாரணங்களோ நான் படித்த நூல்களிலே இல்லாதன. அவர் உதாரணங்கள் +காட்டு அந்த நூல்களின் தொகுதியே ஒரு தனி உலகமாக இருக்குமோ என்ற +மலைப்பு எனக்குத் தோற்றியது. “நூற்பெயரையாவது இந்த மனிதர் சொல்லித் +தொலைக்கக் கூடாதா?” என்று அடிக்கடி வருத்தம் உண்டாகும். ஆனாலும் +அந்த மகோபகாரியின் அரிய உரைத் திறத்தின் பெருமையை நான் +மறக்கவில்லை. சுருக்கமாக விஷயத்தை விளக்கி விட்டு எது நுணுக்கமான +விஷயமோ அதற்கு அழகாகக் குறிப்பு எழுதுகிறார். அவர் எழுதும் +பதசாரங்கள் மிக்க சுவையுடையன. அவர் அறிந்த நூல்களின் பரப்பு ஒரு +பெருங்கடலென்றே சொல்ல வேண்டும். இவ்வளவு சிறப்புக்களுக்கிடையே முன் +சொன்ன இரண்டு குறைபாடுகளும் மறைந்து விடுகின்றன. + + + +சிந்தாமணி நயம் + + + +இராமசுவாமி முதலியாருக்குப் பாடம் சொல்லுவதாக ஆரம்பித்த +சிந்தாமணி ஆராய்ச்சி வரவர எனக்கு இன்பந் தரும் ஒரு பொழுதுபோக்காகி +விட்டது. காலேஜிலும் வீட்டிலும் பாடம் சொல்லும் நேரம் போகச் +சிந்தாமணியைப் படிப்பதிலே ஆழ்ந்திருந்தேன். அனபாய சோழ மகாராஜா +சீவகசிந்தாமணியைப் படித்து அதன் நயத்திலே ஈடுபட்டிருந்தாரென்றும், +அப்போது சேக்கிழார் ஜைனர்கள் கட்டிய கதை அந்நூல் என்று +சொன்னாரென்றும், நான் வாசித்திருந்தேன். அந்தச் சோழ சக்கரவர்த்தியின் +உள்ளத்தைப் பிணிக்கும் காவியரஸம் அந்த அரிய நூலில் இருப்பது உண்மை +யென்றே நான் உணர்ந்தேன். அது ‘பொய்யே கட்டி நடத்திய சிந்தாமணி’ +யானால் நமக்கென்ன? நாம் வேண்டுவன சொற்சுவையும் பொருட்சுவையும் +தமிழ் நயமுமே; அவை நிரம்பக் கிடைக்கும் காவியமாக இருக்கும்போது +அதைப் படித்து இன்புறுவதில் என்ன தடை? + + + +நான் கொடுத்த வாக்கு + + + +சிந்தாமணிப் பாடத்தில் காந்தருவதத்தையாரிலம்பகத்தில் பாதி +நடந்திருந்தது. அக்காலத்தில் முதலியார் தம் வேலையை ராஜினாமாச் செய்து +விட்டு ஒரு கட்டுப்பாடுமின்றி வாழவேண்டுமென்றும் சென்னைக்குச் சென்று +வக்கீலாக இருக்கலாமென்றும் எண்ணிக் குடும்பத்துடன் புறப்பட்டார். +புறப்படுங்காலத்தில் என் வீட்டுக்கு வந்தார்; “சிந்தாமணியின் பெருமையை +நீங்கள் இப்போது +நன்றாக உணர்ந்திருக்கிறீர்கள். இந்த அருமையான காவியம் படிப்பாரற்று +வீணாகப் போகாமல் நீங்கள் பாதுகாக்க வேண்டும், இன்னும் சில பிரதிகள் +சம்பாதித்து நீங்களே அச்சிட்டு வெளிப்படுத்த வேண்டும். அதைப் போன்ற +உபகாரம் வேறு ஒன்றும் இல்லை” என்று சொன்னார். நான், “என்னால் +இயன்ற அளவு முயன்று அப்படியே செய்கிறேன்” என்று வாக்களித்தேன். +அவர் விடை பெற்றுச் சென்றார். + +------------ + + + + + + 90. அன்பர் பழக்கமும் ஆராய்ச்சியும் + + + +கும்பகோணம் பெரிய நகரமாக இருந்தும், கனவான்கள் மாலை +நேரங்களில் கூடிப் பழகிப் பேசுவதற்குத் தக்க பொதுவிட மொன்று இல்லை +என்ற குறை நகர வாசிகளுக்கு இருந்தது. ஒரு நகர மண்டபம் வேண்டு மென்று +காலேஜ் ஆசிரியர்கள் விரும்பினர். கும்கோணம் காலேஜில் பிரின்ஸிபாலாக +இருந்த போர்ட்டர் துரையின் ஞாபகம் நிலவும்படி அவர் பெயரால் ஒரு நகர +மண்டபம் அமைக்கலாமென்று கோபால ராவ் முதலியவர்கள் கூறினர். இந்த +விஷயத்தில் சாது சேஷையரும், ஆர். வி. ஸ்ரீநிவாசையரும் மிக்க முயற்சி +யுடையவராக இருந்தனர். நகரத்திலுள்ள பொது ஜனங்கள் ஒரு கூட்டம் கூடி, +போர்ட்டர் ஞாபக மண்டப அமைப்புக் குரிய ‘கமிட்டி’ ஒன்றை நியமித்தனர். +அதற்கு ஸ்ரீநிவாசையரே காரிய தரிசியாக இருந்தார். + + + +நிலப் பரிவர்த்தனை + + + +நகர மண்டபத்தை நிருமிக்க ஒரு குறிப்பிட்ட இடத்தைக் ‘கமிட்டி’யினர் +தேர்ந்தெடுத்தனர். அவ்விடம் லக்ஷ்மீ நாராயணபுர மென்ற பெயருள்ளது; +வலையர்கள் குடியிருப்பாக இருந்தது. திருவிடைமருதூர் தேவஸ்தானத்துச் +சொத்தாகிய அது திருவாவடுதுறை ஆதீனத்தின் வசம் இருந்தது. அந்த +மண்டபத்திலிருந்து நிலத்தை வாங்குவதற்கு வழி என்னவென்று ‘கமிட்டி’ +அங்கத்தினர்கள் யோசித்தபோது ஸ்ரீநிவாசையர், “நம்முடைய காலேஜ் தமிழ்ப் +பண்டிதர் திருவாவடுதுறை மடத்திற்கு மிகவும் வேண்டியவர். அவரைக் +கொண்டு காரியத்தை முடித்துக் கொள்ளலாம்” என்று சொல்லி என்னிடமும் +விஷயத்தைத் தெரிவித்தார். + + + + “நிலங்களை விற்கும் உரிமை ஆதீனத் தலைவருக்கு உண்டா?” என்ற +விஷயத்தைப் பற்றிச் சந்தேகம் பிறந்தது. விஷயம் தெரிந்த சிலர், “விற்கக் +கூடாது” என்றனர். வேறு சிலர் அதற்குரிய உபாயத்தைத் தெரிவித்தனர். +“வேறு ஓரிடத்தில் இந்த நிலத்தின் மதிப்புடைய மற்றொரு நிலத்தை +வாங்கியளித்துப் பரிவர்த்தனை செய்து கொண்டால் தடை இராது” என்று +கூறினர். அப்படியே செய்யலாமென்ற தீர்மானத்தின் மேல் ஸ்ரீநிவாசையரும் +வேறு சில கனவான்களும் என்னை உடனழைத்துக் கொண்டு +திருவாவடுதுறைக்குப் போவதாக எண்ணினர். + + + +1881-ஆம் வருஷம் மே மாதம் 3-ஆம் தேதியன்று இரவு ஸ்ரீ +சாதுசேஷையர், சுந்தர ராவ், ஸ்ரீநிவாசையர், எஸ். ஏ. சாமிநாதையர் +என்பவர்களுடன் நானும் திருவாவடுதுறைக்குப் போனேன். மறுநாள் முழுவதும் +தங்கிச் சுப்பிரமணிய தேசிகரிடம் பேசினோம். என்னுடன் வந்திருந்த +அன்பர்களிற் சிலர் அதற்கு முன் மடத்தைப் பாராதவர்கள்; அதனால் அதன் +உண்மையான சிறப்பை அதுவரையில் அவர்கள் அறிந்து கொள்ளாமல் +இருந்தனர். அன்று அங்குள்ள அமைப்புக்களையும், காரியங்களெல்லாம் +நடைபெற்று வரும் ஒழுங்கையும் கண்டு மகிழ்ந்தனர். + + + +சுப்பிரமணிய தேசிகர் யாவருக்கும் தக்க உபசாரங்கள் செய்வித்தார். +அவர் பேசிக்கொண்டு வந்தபோது அப்பேச்சிலிருந்து அவர் நல்ல நூற்பயிற்சி +யுடையவரென்பதை ஆசிரியர்கள் அறிந்து கொண்டனர். சிவஞான போத +பாஷியத்திலும் தொல்காப்பியச் சூத்திர விருத்தியிலும் சில பாகங்களைப் +படிக்கச் சொல்லி விளக்கினார். அவற்றை நானே படித்தேன். இடையிடையே +ஸம்ஸ்கிருத சுலோகங்களையும் வியாகரணச் செய்திகளையும் சுப்பிரமணிய +தேசிகர் எடுத்துரைத்ததைக் கேட்டு யாவரும் மகிழ்ச்சி அடைந்தனர். நான் +அங்கே படித்ததையும் தேசிகருடன் பேசிய முறையையும் கண்ட அவர்கள், +“நம்முடைய பண்டிதர் நன்றாகப் படிக்கிறார். பக்குவமாகப் பேசுகிறார்” என்று +சொல்லிப் பாராட்டினார்கள்; தேசிகர் அவர்கள் விருப்பத்தின்படியே +பரிவர்த்தனையாக வேறு நிலங்களை வாங்கிக் கொண்டு குறிப்பிட்ட இடத்தைப் +போர்ட்டர் நகர மண்டபத்தின் பொருட்டு வழங்க ஏற்பாடு செய்து விட்டார். + + + +இந்தச் செய்கையில் எனக்குத் தனியான பெருமை ஒன்று +இராவிட்டாலும், நகரவாசிகளுக்கு மாத்த���ரம் என்னுடைய முயற்சியால்தான் +அந்த இடம் சுலபமாகக் கிடைத்ததென்ற எண்ணமும், அதனால் என்னிடத்து +ஒரு மதிப்பும் உண்டாயின. நகர மண்டபத்திற்குக் கோபாலராவே +அஸ்திவாரக் கல் நாட்டினார். பொது ஜனங்களிடத்திலிருந்து பணம் வசூல் +செய்து மண்டபம் கட்டத் தொடங்கினார்கள். + + + +கோபாலராவ் பிரிவுபசாரம் + + + +இப்படியிருக்கையில் 1882-ஆம் வருஷம் கோபாலராவை அரசாங்கத்தார் +சென்னைப் பிரஸிடென்ஸி காலேஜு க்கு மாற்றினார்கள். பல வருஷங்களாகக் +கும்பகோணம் காலேஜில் ஆசிரியராக இருந்து எல்லோருடைய நன்மதிப்பையும் +பெற்றவர் அவர். பிள்ளைகள் அவரிடத்தில் பயபக்தியோடு நடந்தாலும், +உள்ளத்துள்ளே அவர் பால் தனியான அன்பைக் கொண்டிருந்தனர். இதற்குக் +காரணம் அவரது திறமைதான். தாமே தனியாகப் படித்துப் பரீட்சைகளில் +தேர்ச்சி பெற்று ஆசிரியர் வேலையை ஒழுங்காகப் பார்த்துவந்த அவருடைய +முயற்சியை அறிஞர்களெல்லாம் பாராட்டுவார்கள். அவர் ஷேக்ஸ்பியர் +நாடகங்களைப் பாடம் சொல்லும்போது மாணாக்கர்கள் அசைவற்ற +பிரதிமைகளைப் போல இருந்து கேட்பார்கள். திருத்தமும் தெளிவுமுள்ள +வார்த்தைகளால், மாணாக்கர்களின் அறிவு நிலையை அறிந்து விஷயங்களை +உணர்த்துவதில் அவர் மிக்க சமர்த்தர். ஆங்கிலத்தில் அவருக்குள்ள மேதை +மிகச் சிறப்பு வாய்ந்தது. அவர் எப்பொழுதும் படித்துக் கொண்டேயிருப்பார். +தமிழ் நூல்கள் சிலவற்றில் அவருக்கு நல்ல பயிற்சி உண்டு. எதைப் படித்தாலும் +அழுத்தமாகப் படித்து நினைவில் இருத்திக் கொள்ளுவதால் அவர் படிப்பு +அவ்வளவும் பயனுள்ளதாயிற்று. அவருக்கு நன்னூலிலும், குறள் முதலிய +நூல்களிலும் எவ்வளவு பழக்கம் உண்டென்பதைத் தியாகராச செட்டியார் +சொல்லக் கேட்டதோடு, நானே நேரில் உணர்ந்தும் இருக்கிறேன். செட்டியார் +கும்பகோணம் காலேஜிற்கு வருவதற்கு முன் சில காலம் கோபால ராவ் +காலேஜ் வகுப்புக்களில் தமிழ்ப் பாடம் நடத்தி வந்தார். செட்டியாருடைய +திறமையை உணர்ந்து வருவித்துக் காலேஜில் வேலை செய்வித்தவரும் அவரே. + + + +தளராத ஊக்கத்துடன், மேற்கொண்ட வேலையை நிறைவேற்ற +வேண்டுமென்பது அவர் கொள்கை. அக்கொள்கைக்கு ஆதாரமாக விளங்கும். + + + +“அருமை யுடைத்தென் றசாவாமை வேண்டும் + +பெருமை முயற்சி தரும்” + + + +என்ற குறளை அவர் தம் புஸ்தகங்களில் எழுதி வைத்துக் கொள்ளுவது +வழக்கம். + + + + இவ்வாறு தமி��ில் அன்புடைய அவர் பிரிவதில் எனக்கு மிக்க வருத்தம் +உண்டாயிற்று. அவருக்கும் நெடுங்காலம் பழகிய கும்பகோணம் காலேஜை +விட்டுப் போகிறோமே என்ற வருத்தம் ஓரளவு இருந்தது. அவர் சென்னைக்குச் +செல்லும் செய்தி கேட்டுக் கும்பகோண நகர வாசிகள் துன்புற்றனர். + + + +அவருக்கு ஒரு பிரிவுபசாரம் நடத்தவேண்டுமென்று ஆசிரியர்களும் +அவருடைய அன்பர்களும் தீர்மானித்தார்கள். 1882-ஆம் வருஷம் செப்டம்பர் +மாதம் பிரிவுபசாரம் நடை பெற்றது. அதில் கோபால ராவ் விஷயமாகப் பத்துச் +செய்யுட்கள் இயற்றி நான் படித்தேன். படிக்கும் போது வருத்தம் தாங்காமல் +கண்ணீர் விட்டேன். + + + +அப்பாடல்களிற் சில வருமாறு:- + + + +“மாறாத வாய்மை தனில் மனச்சான்றுக் கொத்தியலும் + +         மாண்பு தன்னில் + +தேறாத மாணவகர்க் கினிதுவிளங் குறத்தெருட்டும் + +         திண்மை தன்னில் + +சீறாத இயல்புடைய கோபால ராயவண்ணற் + +         சிவணு வோர்யார் + +பேறாய அவன்பெருமை மிகச்சிறியன் நாவொன்றாற் + +        பேசற் பாற்றோ?” + +[மனச்சான்று - மனச்சாட்சி. தெருட்டும் விளக்கும். சிவணுவோர் - +ஒப்பாவார்] + + + +“மன்னியநற் பொருட்கல்வி கற்றலரி ததினரிது மாற ஐயம் +அன்னியர்பால் வினவாமை அதினரிது மாணாக்கர்க் கையந் தீர்த்தல் +பன்னியவா றேநடத்த லதினரிய திவைஇயல்பாப் படைத்தோன் அன்பு +துன்னியவன் னையைநிகர்த்த கோபால ராயப்பேர்த் தூய னம்மான்” +[ஐயம் மாறவென்று கூட்டுக. இவை இயல்பாய் படைத்தோன் - இந்தக் +குணங்களை இயல்பாகவே கொண்டவன்] + + + +“முன்னாடுந் திறமை தனில் மிகவல்ல துரைத்தனத்து + +        முதல்வர் தொண்டை + +நன்னாடு சான்றோரை யுடைத்தென்றல் தனைப்புதுக்க + +        நாடிக் கொல்லோ + +"எந்நாடும் புகழினிய கோபால ராயவண்ணல் + +        இணைமிக் கோங்கும் + +மின்னாடும் மணிமாடச் சென்னைநகர் வரச்செய்த + +        விதந்தான் மன்னோ.” + +[‘தொண்டை நன்னாடு சான்றோ ருடைத்து’ என்பது ஒளவையார் பாடிய +பழைய வெண்பாவின் பகுதி.] + + + +உபசாரமெல்லாம் முடிந்த பிறகு நான் தனியே கோபாலராவ் வீட்டிற்குச் +சென்று அவரிடம், “தங்களுக்குப் பின் வருபவர் எப்படி இருப்பாரோ, +அறியேன். தாங்கள் எனக்கு ஒரு யோக்கியதா பத்திரம் தந்தால் +நலமாயிருக்கும்” என்றேன். அவர், “அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட +வேண்டாம். யார் வந்தாலும் உங்களிடம் பிரீதீயாகவே இருப்பார்கள். நான் +யோக்கியதா பத்திரம் தனியே எழுதித் தரவேண்டுமென்ற அவசியம் இல்லை. +உங்களைப்பற்றி மேலதிகாரிகளுக்குச் சிபாரிசு செய்து எழுதிய கடிதத்தின் பிரதி +ஒன்றைக் காலேஜிலிருந்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதுவே போதும்” +என்றார். அதிலிருந்து என்னைப்பற்றிச் சிறப்பாக மேலதிகாரிகளுக்கு அவர் +எழுதியிருப்பது உறுதியாயிற்று. கோபால ராவுக்குப் பிறகு காலேஜ் +பிரன்ஸிபாலாக ஸ்டூவர்ட்துரை என்பவர் வந்தார். + + + +சிந்தாமணி ஏட்டுப் பிரதிகள் + + + +சேலம் இராமசுவாமி முதலியார் சென்னைக்குச் சென்று எனக்குக் +கடிதங்கள் எழுதினர். சீவகசிந்தாமணி ஆராய்ச்சியைத் தொடர்ந்து நடத்த +வேண்டுமென்று ஒவ்வொரு கடிதத்திலும் வற்புறுத்தினார். நான் அவ்வாறே +படித்து ஆராய்ந்து வருவதைத் தெரிவித்தேன். பவர்துரை பதிப்பித்த +சிந்தாமணி நாமகளிலம்பக அச்சுப்பிரதி ஒன்று எனக்குக் கிடைத்தது. தியாகராச +செட்டியாருக்கு நான் சிந்தாமணி படித்து வருவதைத் தெரிவித்தபோது அவர் +தம்மிடமிருந்த பிரதியை, திரு. பட்டாபிராம பிள்ளை மூலம் அனுப்பினர். +அப்பிரதி பிள்ளையவர்களால் முதலில் எழுதப்பெற்றது. பொழிப்புரையும் +விசேடவுரையும் முற்றும் அதில் இருந்தன. + + + +நான் சிந்தாமணி முழுவதையும் தனியே இரண்டு குறிப்புப் +புஸ்தகங்களில் எழுதி வைத்துக் கொண்டு ஆராய்ந்தேன். ஸ்ரீ சுப்பிரமணிய +தேசிகர் திருநெல்வேலியிலிருந்து சில ஏட்டுப் பிரதிகளை வருவித்துக் +கொடுத்தார். எல்லாவற்றையும் வைத்து ஒப்பிட்டுப் பார்த்துப் பாட +பேதங்களைக் குறித்துக் கொண்டேன். என்னிடம் +வீட்டில் பாடம் கேட்பவர்களை வைத்துக் கொண்டு பிரதிகளை ஒப்பு +நோக்குவேன். காலேஜ் மாணாக்கர்களும் வந்து உதவி செய்வார்கள். ஒரே +சமயத்தில் நாலைந்து மாணாக்கர்கள் ஆளுக்கு ஒரு பிரதி வைத்துக் கொண்டு +பாட பேதம் பார்க்கும்போது வேலை மிகவும் வேகமாக நடைபெறும். அதில் +சிறிதும் சிரமமே தோற்றாது. பகலோ, இரவோ, ஏதாயிருந்தாலும் சலிப்பின்றி +ஆராய்ச்சி செய்து வந்தேன். + + + +தியாகராச செட்டியாரிடமிருந்து எனக்கு அடிக்கடி கடிதங்கள் +வந்துகொண்டே இருந்தன. அவர் பென்ஷன் பெறும் விஷயத்தில் சில +சிக்கல்கள் நேர்ந்தமையால் அதனைக் குறித்துப் பிரின்ஸிபாலிடமும் +மற்றவர்களிடமும் தெரிவித்துக் காரியம் நிறைவேறும்படி செய்ய +வேண்டுமென்று மிக்க கவலையோடு எழுதிவந்தார். நான் அதைப் பற்றிச் +சொல்ல வேண்டியவர்களிடம் சொல்லி முயற்சி செய்தேன். செட்டியார் +வேலையை விட்ட ஒரு வருஷத்துக்குப் பிறகே அவருக்குப் பென்ஷன் +உத்தரவு கிடைத்தது. + + + +திருக்குடந்தைப் புராணம் + + + +பிள்ளையவர்கள் இயற்றிய நூல்களில் அச்சில் வராதவற்றை வெளியிட +வேண்டுமென்பது தியாகராச செட்டியாரது விருப்பம். முதலில் திருக்குடந்தைப் +புராணத்தை வெளியிடும் பொருட்டுக் கும்பகோணத்திலிருந்த சில +கனவான்களிடம் சொல்லி ஏற்பாடு செய்திருந்தார். அவர் திருவானைக்காவுக்குப் +போன பிறகு அதைப் பற்றி அடிக்கடி ஞாபகப்படுத்திக் கடிதம் எழுதினார். +அதற்குப் பொருளுதவி செய்வதாகச் சொன்னவர்களை நான் அணுகிப் பணம் +வாங்கிச் செட்டியாருக்கு அனுப்பி வந்தேன். செட்டியார் முதலில் தஞ்சாவூர் +சதாவதானம் சுப்பிரமணிய ஐயர் சென்னையில் வைத்திருந்த அச்சுக்கூடத்தில் +அச்சிட ஏற்பாடு செய்து சிறிது முன்பணமும் கொடுத்திருந்தார். ஆனால் அது +நிறைவேறவில்லை. பிறகு சென்னையில் இருந்த சூளை சோமசுந்தர நாயகர் +அச்சிட்டு அனுப்புவதாக ஒப்புக் கொண்டமையால் அவருக்கே புராணப் +பிரதியை அனுப்பினார். அவ்வப்போது அவரிடமிருந்து ‘புரூப்’ செட்டியாருக்கு +வரும். அவருக்குக் கண் ஒளி குன்றி வந்தமையால் அதை அவர் பார்த்து +விட்டு எனக்கு அனுப்புவார். நான் அதைப் பார்த்துத் திருத்திச் சென்னைக்கு +அனுப்புவேன். புராணத்தை அச்சுக்கு ஸித்தம் செய்தவனும் நானே. மூலத்தை +மாத்திரம் ஒழுங்கு செய்து அச்சிட்டு வந்தோம். குறிப்புரையுடன் +வெளியிட்டால்தான் படிப்பவர்களுக்கு உபயோகமாக இருக்குமென்ற கருத்து +அப்போது எனக்கு எழவில்லை. + + + + சிந்தாமணி நயம் + + + +சிந்தாமணியிலும் அதன் உரையிலும் மூழ்கியிருந்த எனக்கு மற்ற +வேலைகளில் கவனம் செல்லவே இல்லை. அந்த நூலின் புதுமைச் சுவையை +நுகர்ந்து நுகர்ந்து இன்புற்றேன். அதனைப் படிக்கப் படிக்கப் பிற்காலத்து +நூல்களெல்லாம் எவ்வளவு தூரம் அந்தக் காவியத்திலிருந்து காவிய மரபுகளை +அறிந்து அமைத்துக் கொண்டுள்ளனவென்பது நன்கு விளங்கியது. +வாரந்தோறும் திருவாவடுதுறைக்குப் போகும்போது சிந்தாமணியில் நான் கண்ட +நயங்களையெல்லாம் சுப்பிரமணிய தேசிகரிடம் சொல்வேன். அதில் அங்கங்கே +உள்ள மேற்கோள்களிற் பல இன்ன நூல்களென்று விளங்கவில்லையென்றும் +கூறுவேன். அவர், “மடத்தில் எவ்வளவோ பழைய ந��ற் பிரதிகள் இருக்கின்றன. +அவற்றைப் பார்த்து ஏதாவது உபயோகமாக இருந்தால் எடுத்துக் கொள்ளலாம்” +என்று அனுமதியளித்தார். நான் மிக்க நன்றியறிவுடன் அவ்வாறே செய்வதாகச் +சொன்னேன். + + + +நமசிவாய தேசிகர் + + + +சின்னப் பண்டார சந்நிதியாகிய நமசிவாய தேசிகர் சிந்தாமணி +விஷயத்தைக் கேட்டு வியப்பார். ஆனால் அவருக்குப் பூர்ணமான திருப்தி +அதனால் உண்டாகவில்லை. “ஜைன சமய நூல் அது” என்ற ஞாபகந்தான் +அதற்குக் காரணம். நச்சினார்க்கினியர் உரைத் திறத்தைக் கேட்டு மிகவும் +பாராட்டுவார். + + + +அவர் பழையபடி கல்லிடைக்குறிச்சிக்குச் சென்று வசிக்கலானார். +அங்கிருந்து எனக்குக் கடிதம் எழுதினார். விடுமுறைகளில் அங்கே வந்து சில +நாட்கள் தங்கும்படி சிலமுறை எழுதினார். அவர் விருப்பத்தை நிறைவேற்ற +என்னால் இயலவில்லை. + +------------ + + + + + +91. எனது இரண்டாவது வெளியீடு + + + +திருவானைக்காவில் இருந்த தியாகராச செட்டியாரிடமிருந்து ஒருவர் +என்னிடம் ஒரு நாள் வந்தார். அவர் தமிழ் நூல்களைப் படித்தவரென்றும் +பின்னும் படிக்க வேண்டுமென்ற ஆசையுடன் இருப்பவரென்றும் +திருவாவடுதுறை மடத்தில் சேர்த்து அவரைப் +படிக்கச் செய்யவேண்டுமென்றும் செட்டியார் எழுதியிருந்தார். அவர் +என்னைவிட ஐந்தாறு வருஷங்கள் பிராயத்தில் சிறியவராக இருக்கலாம். + + + +திருமானூர் அ. கிருஷ்ணையர் + + + +அவர் திருமானூரென்னும் ஊரினர்; கிருஷ்ணையரென்பது அவர் பெயர். +தாம் திருச்சிராப்பள்ளியில் இருந்ததாகவும், திருவானைக்காவில் செட்டியார் +இருப்பது தெரிந்து அவரிடம் சென்று படிக்க முயன்றதாகவும் அவர் தளர்ச்சி +மிகுதியினால் பாடஞ் சொல்ல இயலாத நிலையில் இருப்பதாகவும், அதன்மேல் +தம்மை என்னிடம் அனுப்பியதாகவும் சொன்னார். நான் அவரைப் +பரீட்சித்தேன். திருவிளையாடற் புராணத்திலிருந்து பல செய்யுட்களைப் படலம் +படலமாக அவர் பாராமலே சொன்னார். அவர் அவற்றைச் சொல்லும்போதே +அச் செய்யுட்களின் கருத்தில் அவர் மனம் ஈடுபட்டு நிற்பதை உணர்ந்தேன். +சாரீரம் இனிமையாக இருந்தது. அவர் கையெழுத்தும் நன்றாக இருந்தது. நல்ல +சிவபக்தியுடையவரென்பதை அறிந்து கொண்டு, ‘இவரைப் பிற்காலத்தில் நாம் +பயன் படுத்திக்கொள்ளலாம்’ என்று எண்ணினேன். + + + +அவருக்குத் தமிழ்க் கல்வியின்பால் இருந்த ஊக்கத்தை அறிந்து +திருவாவடுதுறைக்கு அழைத்துச் சென்று ஸ்��ீ சுப்பிரமணிய தேசிகரிடம் +ஒப்பித்தேன். அவர் அங்கே தேசிகரிடத்திலும் மடத்து வித்துவானாக +அக்காலத்தில் இருந்து வந்த மதுரை இராமசாமி பிள்ளையிடத்திலும் தமிழ் +நூல்களைப் படித்துக் கொண்டு ஒழுங்காக இருந்து வந்தார். நான் ஒவ்வொரு +வாரத்திலும் அங்கே செல்லும் போது அவரைக் கண்டு பேசுவேன். அவரது +கல்வி வர வர வளர்ச்சி பெறுவதை அறிந்து மகிழ்வேன். + + + +இவ்வாறு இருந்து வருகையில் வேலூரிலுள்ள மஹந்து ஹைஸ்கூலில் +ஒரு தமிழ்ப் பண்டிதரை நியமிக்க வேண்டியிருந்தது. கிருஷ்ணையர் அதற்கு +விண்ணப்பம் செய்தார். நானும் தக்கவர்களிடம் சொன்னதோடு சிலருக்குக் +கடிதமும் எழுதினேன். அவருக்கே அவ்வுத்தியோகம் கிடைத்தது. அவர் +அதனை மேற்கொண்டு நன்றாகப் பாடஞ் சொல்லி வந்தார். அடிக்கடி எனக்குக் +கடிதம் எழுதுவார். அவற்றில். நிர்ப்பந்தமான வேலையில் தாம் இருப்பதை +விரும்பவில்லையென்றும், திருவாவடுதுறைக்கு வந்து படித்துக் +கொண்டிருப்பதையே விரும்புவதாகவும் எழுதுவார். விடுமுறை நாட்களில் +கும்பகோணத்துக்கு வந்து என்னுடன் இருந்து ஏடு பார்த்தல் முதலிய +உபகாரங்களைச் செய்து வருவார். + + + + நமசிவாய தேசிகர் மறைவு + + + +1883-ம் வருஷ ஆரம்பத்தில் கல்லிடைக்குறிச்சியில் சின்னப் பண்டார +சந்நிதியாகிய நமசிவாய தேசிகர் பரிபூரணம் அடைந்தார். அதனால் மடத்தைச் +சார்ந்தவர்கள் மிக்க வருத்தத்தை அடைந்தனர். தமிழிற் சிறந்த பண்டிதராகிய +அவர் திருவாவடுதுறை யாதீனத் தலைமைக்குப் பலவகையாலும் +தகுதியுடையவர். கல்வியறிவு நிரம்பிய சுப்பிரமணிய தேசிகருக்குப் பிறகு அந்த +ஸ்தானத்தை வகித்து ஆதீனத்தின் புகழைப் பாதுகாத்து வருவாரென்று +யாவரும் நம்பியிருந்தனர். நிர்வாகத் திறமை மிக்கவர். +கல்லிடைக்குறிச்சியிலிருந்து கிராமங்களை நன்றாகப் பாதுகாத்து வந்ததோடு பல +புதிய கிராமங்களையும் விலைக்கு வாங்கினார். அவரால் மடத்தில் +பொருட்செல்வமும் கல்விச் செல்வமும் ஒருங்கே சிறந்து விளங்குமென்று +யாவரும் எண்ணி மகிழ்ந்திருந்தனர். நாமொன்று நினைக்கத் தெய்வம் ஒன்று +நினைத்துவிட்டது. என்ன செய்யலாம்! + + + +இந்தச் செய்தியை அறிந்து நான் மடத்திற்குச் சென்று சுப்பிரமணிய +தேசிகரை விசாரித்தேன். சிறந்த துறவியாகிய அவர் அதைப்பற்றி அதிகக் +கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. “படிப்பிலும் சாமர்த்தியத���திலும் +சிறந்தவரென்று எண்ணினோம். ஸ்ரீ நமசிவாய மூர்த்தியின் திருவுள்ளம் +இதுபோலும்” என்று சுருக்கமாகத் தம் கருத்தை வெளியிட்டார். நான் நமசிவாய +தேசிகரிடம் சில நூல்கள் பாடங் கேட்டிருக்கிறேன். அவர் காலமாவதற்கு முன் +எனக்கு எழுதிய கடிதங்களில் என்னைக் கல்லிடைக்குறிச்சிக்கு +வரவேண்டுமென்று வற்புறுத்தி எழுதியிருந்தார். நான் போவதற்கு +இயலவில்லை. இந்த நினைவுகள் வந்து எனக்கு மிக்க துயரத்தை உண்டாக்கின. + + + +தாமோதரம் பிள்ளை + + + +யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராவ்பகதூர் சி. வை. தாமோதரம் பிள்ளை +அக்காலத்தில் சென்னையில் இருந்தார். தொல்காப்பியம் முதலிய பழைய +நூல்களை அச்சிடும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தார். வீர சோழியத்தையும் +அவர் வெளியிட்டார். பிறகு இறையனாரகப் பொருளுரையையும், +திருத்தணிகைப் புராணத்தையும் வெளியிடத் தொடங்கினார். திருவாவடுதுறை +மடத்தில் பழைய ஏட்டுப் பிரதிகள் இருக்கின்றன என்பதை அறிந்து ஆதீனத் +தலைவருக்கு அவற்றை அனுப்ப வேண்டுமென்று விண்ணப்பம் செய்து +கொண்டார். சுப்பிரமணிய தேசிகர் அக்கடிதங்களை +எனக்குக் காட்டி அவர் விரும்பிய நூற் பிரதிகள் இருக்கின்றனவா +என்று தேடிப் பார்க்கச் சொன்னார். தாமோதரம் பிள்ளை இறையனாரகப் +பொருளுரை கேட்டிருந்தார். அதில் 59-ஆவது சூத்திரத்தின் உரையின் +பிற்பகுதி தமக்குக் கிடைக்கவில்லையென்றும் கிடைத்தால் +அனுப்பவேண்டுமென்றும் எழுதினார். மடத்திலே தேடிப்பார்த்தபோது +இறையனாரகப் பொருளுரையின் பழைய பிரதி ஒன்று அகப்பட்டது. அதில் +அந்தச் சூத்திரவுரை முற்றும் இருந்தது. உடனே அந்தப் பிரதியைத் +தாமோதரம் பிள்ளைக்குச் சுப்பிரமணிய தேசிகர் அனுப்பி வைத்தார். + + + +முதற் கடிதம் + + + +தேசிகர் அனுப்புவித்த ஏட்டுப் பிரதி வரும் விஷயத்தைத் தெரிவித்து, +“தணிகைப் புராணத்தைப் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்டபோது மதுரை +இராமசாமி பிள்ளை குறிப்பெடுத்து வைத்திருக்கிறார். அதை உபயோகித்துக் +கொள்ளலாம்” என்று எழுதி அவற்றை அனுப்பச் செய்தேன். அதுவரையில் +தாமோதரம் பிள்ளைக்கு நான் கடிதம் எழுதியதில்லை. என் கடிதத்தைக் கண்ட +வுடன் அவர் மிகவும் மகிழ்ச்சியுற்று எனக்கு ஒரு பதிற்கடிதமெழுதினார். அதிற் +சில பகுதிகள் வருமாறு:- + + + +“,,,,,,,,,,,,அடியேன் இன்னும் சின்னாளிற் கும்பகோணம் வரும்போது +தங்கள் ச��நேகத்தைச் சம்பாதித்தற்கு யாரிடம் ஓர் கடிதம் பெற்று +வருவேனென்று சிந்தித்துக் கொண்டிருக்கத் தேடிய தெய்வம் தானே வந்து +கைப்பற்றியதென்னத் தாங்களே எனக்குக் கடிதமெழுதியதனை நினைக்க +நினைக்கப் பேரானந்தத்தை விளைக்கின்றது. தாங்கள் எழுதி யருளிய கடிதம் +வந்து மூன்றாநாள் ஸ்ரீ பெரிய சந்நிதானம் கட்டளையிட்டருளிய இறையனாரகப் +பொருட் பிரதியும் தபால் மார்க்கமாக வந்து சேர்ந்து 59-வது சூத்திர உரையின் +கடைசிப் பாகமும் கண்டு மகிழ்வுற்றேன். + + + +‘திருத்தணிகைப் புராணத்தின் முதலிலே ஸ்ரீலஸ்ரீ கச்சியப்ப சுவாமிகளது +சரித்திரத்தைச் சுருக்கமாய் அச்சிட விரும்புகின்றேனாதலால் தாங்களாவது +ஸ்ரீமத் இராமசாமி பிள்ளையாவது அச் சரித்திரத்தை விரைவில் எழுதி +யனுப்பினால் அடியேன் மிக்க நன்றியறிவுள்ளவனாயிருப்பேன். யார் அதனை +எழுதி யனுப்பினும் இன்னாரால் எழுதப்பட்ட தென்பதை அதிற் குறித்துக் +காட்ட அடியேனுக்கு உத்தரவும் கொடுக்க வேண்டியது. + + + +‘மேலுள்ளன வெல்லாம் தங்கள் சமூகத்தில் நேரே தெரிவித்துக் +கொள்வேன். + + + +‘பங்குனி மதியிலுற்பத்தியான தங்கள் ‘சினேகம் பற்குனன் போலச் +சீர்பெருகுவதாக + + +சென்னபட்டணம், இங்ஙனம், + + + +சித்திரபானு ’ தங்கள் ஊழியன், + + + +பங்குனிமீ 18Œ + +(25-3-1883) சி. வை. தாமோதரம் பிள்ளை.” + + + +இறையனாரகப் பொருளும் தணிகைப் புராணமும் நிறைவேறியவுடன், +தாமோதரம் பிள்ளை திருவாவடுதுறை மடத்துக்கும் எனக்கும் பிரதிகள் +அனுப்பினார். தணிகைப் புராணக் குறிப்புக்களை இராமசாமி +பிள்ளையிடமிருந்து பெற்றுக்கொண்டும் அவர் என்ன காரணத்தாலோ +பதிப்பிக்கவில்லை. ‘பிள்ளையவர்கள் சொன்ன அருமையான குறிப்புக்களை +இவர் லக்ஷியம் செய்யவில்லையே. நல்ல பொருள் கிடைத்ததென்று மிக்க +மகிழ்ச்சியோடு உபயோகப் படுத்திக் கொள்ளத் தெரியவில்லையே!’ என்று நான் +எண்ணினேன். சுப்பிரமணிய தேசிகரும் அதே கருத்தை உடையவராக +இருந்தார். + + + +தாமோதரம் பிள்ளை கும்பகோணத்திற்கே வந்து வசிக்கப் +போகிறாரென்பது தெரிந்து எனக்கு ஓர் ஆறுதல் உண்டாயிற்று. சேலம் +இராமசுவாமி முதலியார் கூறியபடி, பழைய நூல்களை ஆராய்வாரும் +படிப்பாரும் இல்லாமல் பிற்கால நூல்களையே படிப்பவர்கள் மலிந்த தமிழ் +நாட்டில் எனக்குத் துணை செய்வார் ஒருவரும் இல்லை. நானோ அந்த +ஆராய்ச்சியில் நூதனமாகப் புகுந்தவன். ��னாலும் எப்படியாவது விஷயத்தைத் +தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் மாத்திரம் மட்டுக்கு மிஞ்சி +யிருந்தது. இந்த நிலையில் பழங்காலத்துத் தமிழ் நூல்களை அச்சிடும் +விஷயத்தில் ஊக்கமுள்ள ஒருவர் கும்பகோணத்துக்கு வரப்போகிறாரென்று +அறிந்தவுடன் எனக்கு மகிழ்ச்சி யுண்டாயிற்று. + + + +திருக்குடந்தைப் புராணம் + + + +சிந்தாமணி ஆராய்ச்சியோடு திருக்குடந்தைப் புராணப் பதிப்பும் +நடைபெற்று வந்தது. வடமொழி மூலத்தையும் தமிழ்ச் செய்யுளையும் ஒப்பு +நோக்கியபோது சில இடங்களில் திருத்த வேண்டியிருந்தது. செட்டியாருக்கு +அவ்விஷயத்தைத் தெரிவித்தேன். அவர் பிள்ளையவர்கள் பெயருக்குக் குறைவு +வராதபடி செய்வது நம் கடமையென்று எழுதினார். அதனால் எங்கெங்கே +ஒழுங்கு படுத்த வேண்டுமோ அங்கெல்லாம் அவ்வாறே செய்தேன். +அப்புராணப் பதிப்பில் அச்சுத்தாள்களைத் திருத்தும் முறையை நான் தெரிந்து +கொண்டேன். ஆனாலும் பதிப்பு எப்படியிருந்தால் +அழகாயிருக்குமென்ற செய்திகளை நன்றாகத் தெரிந்து கொள்ளவில்லை. +அச்சில் வந்துவிட்டால் கௌரவமாகக் கருதும் காலம் அது. சுபானு வருஷம் +ஆனி மாதம் (1883 ஜூன் மீ) அப்புராணம் அச்சிட்டு நிறைவேறியது. +சோமசுந்தர நாயகர் அப்பதிப்பிற்குச் சிறப்புப்பாயிரம் அளித்தார். புஸ்தகம், +நானும் தியாகராச செட்டியாரும் சேர்ந்து பதிப்பித்ததாக வெளியாகியது. +சிறப்புப் பாயிரத்தில் இதைச் சோமசுந்தர நாயகர், + + + +“திருவ ருங்கலைச் சாமிநா தப்பெயர் சேர்ந்த + +பொருவ ரும்பெரு மறையவன் கலையுணர் புலமை + +ஒருவ ரும்புகழ்த் தியாகரா சப்பெய ருரவோன் + +இருவ ரும்பதிப் பித்துநல் கினரிலங் குறவே” + + + +என்று குறிப்பித்திருக்கிறார். + + + +இந்தப் புஸ்தகம் நான் பதிப்பித்த இரண்டாவது வெளியீடு. +பிள்ளையவர்கள் நூலைப் பதிப்பிக்கும் புண்ணியம் வாய்த்ததுபற்றி எனக்கு +உண்டான திருப்திக்கு அளவில்லை. அது மட்டும் அன்று. நான் +சீவகசிந்தாமணியைப் பரிசோதித்துப் பதிப்பிக்க வேண்டுமென்ற சங்கற்பம் +செய்து கொண்டிருந்தேன். அந்தப்படி நன்கு நிறைவேற வேண்டுமே என்ற +கவலை என் மனத்தில் இருந்தது. பிள்ளையவர்கள் உயிரோடு இருந்தால் +அவருடைய அறிவும் அன்பும் எனக்குத் துணையாக இருந்திருக்கும். அவர் +இல்லாவிட்டாலும் முதலில் அவருடைய நூலைப் பதிப்பித்த பிறகு +சிந்தாமணியைத் தொடங்குவது நல்ல அறிகுறியென்று நான் நினைத்தேன். +சந்தர்ப்பமும் அப்படி அமைந்தது. பிள்ளையவர்கள் இயற்றிய புராணங்களுள் +மாயூரப் புராணமும் திருநாகைக் காரோணப் புராணமும் அவர்கள் +காலத்திலேயே சென்னையில் அச்சாயின. அந்தப் புராணப் பதிப்புக்களை +ஒட்டியே குடந்தைப் புராணமும் அமைந்திருந்தது. தேவாரப் பதிகங்கள், +சிறப்புப்பாயிரம், நூல் என்னும் அங்கங்களுடன் அது விளங்கியது. +புஸ்தகத்தைப் பார்க்கப் பார்க்கப் பிள்ளையவர்கள் ஞாபகம் வந்தது. +சுப்பிரமணிய தேசிகர் புராணப் பதிப்பைக் கண்டு மிகவும் பாராட்டினார். +“இப்படியே அவர்கள் இயற்றிய நூல்களை ஒவ்வொன்றாக வெளிப்படுத்தினால் +நலமாக இருக்கும்” என்று சொன்னார். ‘அத்தகைய புண்ணியம் கிடைக்கும் படி +இறைவன் திருவருள் செய்ய வேண்டும்’ என்று மனத்துக்குள் வேண்டிக் +கொண்டேன். + +--------- + + + + + +92. சிந்தாமணி ஆராய்ச்சி + + + +நச்சினார்க்கினியர் இடையிடையே மேற்கோளாகக் காட்டும் செய்யுட் +பகுதிகள் இன்ன நூலைச் சார்ந்தவையென்று சீவக சிந்தாமணியை நான் +ஆராய்ந்து வந்தபோது தெரிந்துகொள்ளவே முடியவில்லை. தொல்காப்பியச் +சூத்திரங்களை மாத்திரம் தெரிந்து கொண்டேன். திருக்கோவையாரிலிருந்தும் +திருக்குறளிலிருந்தும் சில செய்யுட் பகுதிகளை அவர் எடுத்துக் காட்டுகிறார். +அவற்றையும் அறிந்து கொண்டேன். மற்ற மேற்கோள்களைப் படித்தபோது +ஏதோ கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதாக இருந்ததே ஒழிய, இன்ன நூலில் +உள்ளது, இன்ன விஷயத்திற்காக மேற்கோள் என்ற செய்திகள் +தெளிவாகவில்லை. + + + +வேறு பழைய தமிழ் நூல்கள் + + + +சிந்தாமணியைப்போலத் தமிழ்நாட்டில் வழங்காத வேறு நூல்கள் என்ன +என்ன உள்ளன என்ற ஆராய்ச்சியிலே என் மனம் சென்றது. இராமசுவாமி +முதலியார் சென்னைக்குப் போகும்போது என்னிடம் சிலப்பதிகாரப் பிரதியைக் +கொடுத்துச் சென்றார். சென்னைக்குச் சென்ற பிறகு நான் கேட்டுக் கொண்டபடி +மணிமேகலைப் பிரதியை அனுப்பினார். + + + +பழைய நூல்களைத் தொகுத்துப் பார்க்கும் விஷயத்தில் கவனம் சென்ற +போது திருவாவடுதுறைப் புஸ்தக சாலையின் நினைவு வந்தது. மடத்தில் என்ன +என்ன பழைய நூல்கள் உள்ளனவென்று தேடிப் பார்க்க எண்ணி ஒரு சனி +ஞாயிறு விடுமுறையில் நான் திருவாவடுதுறை சென்று சுப்பிரமணிய தேசிகரிடம் +என் கருத்தைத் தெரிவித்தேன். அவர், “எல்லாவற்றையும் பார்த்து +வேண்டி��வற்றை எடுத்துக் கொள்ளலாமென்று முன்பே சொல்லியிருக்கிறோமே” +என்றார். + + + +நான் அங்கிருந்த பழஞ் சுவடிக் கட்டுக்களைப் புரட்டிப் +பார்க்கலானேன். ஏடுகளெல்லாம் மிகப் பழமையானவை; எடுத்தால் கையில் +ஒட்டிக் கொள்ளக் கூடியவை. ஒரு கட்டில் ‘ஏட்டுத் தொகை’ என்றும் ‘சங்க +நூல்போல் தோற்றுகிறது’ என்றும் எழுதிக் குமாரசாமித் தம்பிரான் கட்டி +வைத்திருந்தார். அதை எடுத்துப் பார்க்கையில் நற்றிணை முதலிய சங்க +நூல்களின் மூலம் என்று தெரிந்தது. எட்டுத் தொகையென்பது தான் ஏட்டுத் +தொகை ஆயிற்றென்று உணர்ந்தேன். நற்றிணை, குறுந்தொகை, +ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அக நானூறு, புறநானூறு +என்ற எட்டு நூல்களும் எட்டுத் தொகையாகும். ஒரு பழைய பாட்டிலிருந்து +அந்த எட்டின் பெயர்களும் எனக்குத் தெரியவந்தன. எல்லாவற்றின் +மூலத்தையும் சேர்த் தெழுதிய ஏட்டுச் சுவடி ஒன்று அக்கட்டில் அகப்பட்டது. +அதில் கலித்தொகையும், பரிபாடலும் இல்லை. + + + +எட்டுத் தொகையோடு பிள்ளையவர்கள் வைத்துக் கெண்டிருந்த வேறு +ஓர் ஏட்டுச் சுவடி கிடைத்தது. அவர்கள் காலத்தில் அந்தச் சுவடியை +எப்பொழுதாவது வெயிலில் எடுத்துப் போடுவார். முதலில் பொருநராற்றுப் +படை என்று அதில் இருந்தது. “என்ன நூல் இது?” என்று கேட்டபோது, “இது +திருமுருகாற்றுப் படையைப் போன்ற ஓர் ஆற்றுப்படை” என்று மாத்திரம் +ஆசிரியர் சொன்னார். அதற்கு மேலே என்ன என்ன உள்ளனவென்று +பார்க்கும் முயற்சி அக்காலத்தில் உண்டாகவில்லை. அந்தப் பிரதி தான் +மடத்துப் புத்தக சாலையிலிருந்து கிடைத்தது. திருமுருகாற்றுப்படை, +பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, +முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, பட்டினப்பாலை, +மலைபடுகடாம் என்னும் பத்து நூல்கள் சேர்ந்த தொகுதிக்குப் பத்துப் பாட்டு +என்று பெயர். கடைச் சங்க காலத்தைச் சார்ந்த நூல்களுள் எட்டுத் தொகையும் +பத்துப் பாட்டும் முக்கியமானவை. பத்துப் பாட்டு என்ற பெயரோ, அதில் +அடங்கியவை இன்ன பாட்டுக்கள் என்பதோ அக்காலத்தில் தெரிந்து கொள்ள +இயலவில்லை. + + + +பொருநராற்றுப்படை என்று இருந்த சுவடியை நான் அதிகமாகப் +பார்க்கவில்லை. பதினெண் கீழ்க் கணக்கு அடங்கிய அபூர்த்தியான சுவடி +ஒன்றும் கிடைத்தது. சிந்தாமணிப் பிரதி பழையதாக ஒன்று இருந்த���ு. +எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு கும்பகோணம் சென்றேன். + + + +ஒரு தனிப் பிரபஞ்சம் + + + +சீவகசிந்தாமணியை மாத்திரம் படித்து ஆராய்வதனால் அந்த நூலைப் +பதிப்பிக்க இயலாதென்றும் மற்றப் பழைய நூல்களையும் படித்துத் தெரிந்து +கொண்டால்தான் சிந்தாமணியின் பொருள் விளக்கமாகுமென்றும் நான் +உணர்ந்தேன். சிந்தாமணி உரையில் காணப்பட்ட மேற்கோள்களைத் தனியே +எழுதி வைத்துக்கொண்டு திருப்பித் திருப்பிப் பார்த்து வருவேன். அதனால் +அவை மனப் பாடமாகவே இருந்தன. அவற்றிற் சில அந்தப் பழைய ஏடுகளில் +காணப்பட்டன. அவற்றைக் கண்டபோது பெரிய புதையல் கிடைத்தது +போன்ற சந்தோஷம் எனக்கு உண்டாயிற்று. மேலும் படிக்கத் தொடங்கினேன். + + + +படித்தால் எளிதில் விளங்கக்கூடிய நூல்களாக அவை தோற்றவில்லை. +அவற்றில் உள்ளது வேறு ஒரு தனிப்பாஷை போலவே இருந்தது. ஆனாலும் +நான் விடவில்லை. படித்துப் பார்த்தேன். தொல்காப்பிய உரைகளில் வரும் பல +செய்யுட்கள் அவற்றில் இருந்தன. ‘இந்த நூல் தொகுதியே ஒரு தனிப் +பிரபஞ்சம்’ என்ற எண்ணம் எனக்கு வரவர வலிவடைந்தது. + + + +அகநானூற்றைப் படித்து அதில் உள்ள செய்யுட்களுக்கு இலக்கமிட்டு +அவற்றிலுள்ள அரும்பதங்களையும் தொடர்களையும் தொகுத்து அகராதி +வரிசையில் எழுதி வைத்துக் கொண்டேன். நச்சினார்க்கினியர் எங்கெங்கே +‘என்றார் பிறரும்’ என்று எழுதுகின்றாரோ அங்குள்ள மேற்கோட் +பகுதிகளிலுள்ள பதங்களையும் தொடர்களையும் அந்த அகராதியிலே +பார்ப்பேன். ஒன்று இரண்டு கிடைக்கும். அந்தப் பாட்டை எடுத்துப் +பார்ப்பேன். சிந்தாமணியில் நச்சினார்க்கினியர் எழுதியிருக்கும் உரையால் +அந்தச் செய்யுள் ஒருவாறு விளங்கும். அதிலே ஈடுபட்டு ஒரு முறை இரண்டு +முறை மூன்று முறை படித்துப் பார்ப்பேன். சங்க நூல்களாகிய புதிய உலகத்தின் +காட்சிகள் பனிமூடிய மலைபோல என் கண்ணுக்குத் தோற்றலாயின. +பனிப்படலம் படர்ந்திருந்தாலும் மலையினுடைய உயரமும் பருமையும் +கண்ணுக்குப் புலப்படுதல் போலத் தெளிவாக விளங்காவிட்டாலும் அந்தச் சங்க +நூற் செய்யுட்கள் பொருளமைதியால், ‘நிலத்தினும் பெரியனவாகவும், வானிலும் +உயர்ந்தனவாகவும், கடல் நீரினும் ஆழமுடையனவாகவும்’ தோற்றின. +சிந்தாமணி உரையில், ‘என்றார் அகத்திலும்’ என்று முற்பகுதியில் வருகிறது. +அங்கே உள்ள செய்யுட்பகுதி அகநானூற்றில் இருந்தது. + + + +இப்படி ஆராய்ந்த போது எல்லாவற்றையும் ஒரு வகையாகத் தெரிந்து +கொண்ட பிறகே சிந்தாமணியை அச்சிடத் தொடங்க வேண்டுமென்ற எண்ணம் +உண்டாயிற்று. சிந்தாமணியைப் பல முறை திரும்பத் திரும்பப் படித்தேன்; மற்ற +நூல்களை இடையிடையே படித்துக் குறிப்பெடுத்தேன். + + + +தஞ்சைப் பிரதி + +சிந்தாமணி ஏட்டுப் பிரதிகள் வேறு கிடைக்குமாவென்று எனக்குத் +தெரிந்தவர்களையெல்லாம் விசாரித்துக்கொண்டேயிருந்தேன். சந்தேகமான +இடங்கள் பல இருந்தமையால் நல்ல பாட முள்ள பிரதி கிடைத்தால் +பார்த்துப் பயன் பெறலாமேயென்ற +கருத்தோடு பலரிடம் விசாரித்தேன்; பலருக்குக் கடிதம் எழுதினேன். +தஞ்சாவூரில் பெரிய செல்வராக இருந்த விருஷபதாச முதலியாரென்பவர் +வீட்டிற் பல பழைய ஏட்டுச் சுவடிகள் உள்ளனவென்று தெரிய வந்தது. +சுவடிகள் தேடும் யாத்திரையை அப்பொழுது தொடங்கினேன்; இன்னும் +ஓயவில்லை. தஞ்சாவூருக்குச் சென்று எனக்குத் தெரிந்த கனவான்களை +உடனழைத்துக் கொண்டு முதலியார் வீட்டிற்குச் சென்றேன். அவர் ஜைனர். +ஜைனமதக் கிரந்தங்கள் பல அவரிடம் இருந்தன. சீவக சிந்தாமணிப் +பிரதியையும் வைத்துப் பூஜித்து வந்தார். நான் போய்க் கேட்டபோது முதலில் +அதைப் பூஜையிலிருந்து எடுக்கக்கூடாதென்று சொல்லிவிட்டார். நான் மிகவும் +பணிவாக வேண்டிக் கொண்டேன். “ஜைனர்களுக்குத்தான் கொடுப்பேனேயன்றி +மற்றவர்களுக்குத் தரமாட்டேன்; அப்படித் தருவது எங்கள் சம்பிரதாயத்துக்கு +விரோதம்; எவ்வளவோ ரகஸ்யங்கள் பொருந்திய சிந்தாமணியை வெகு +சுலபமாக நீங்கள் படித்துப் பார்க்க முடியாது. ஆசாரியர்கள் மூலமாக +உபதேசம் பெற்று விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். அன்னிய +மதத்தினராகிய உங்களுக்குக் கொடுப்பதனால் எங்களுக்கு பாவம் சம்பவிக்கும்” +என்றார். + + + +அவருக்கு என்ன என்னவோ சமாதானம் சொல்லிப் பார்த்தேன். +தமிழுலக முழுவதும் படித்து இன்புறும் விஷயங்கள் சிந்தாமணியில் இருக்க, +“ஒரு மதத்திற்கே உரியது, மற்றவர்கள் கண்ணிற் படக்கூடாது” என்று எண்ணி +மூடி வைத்திருக்கும் இயல்பை உணர்ந்து நான் வருந்தினேன். “இப்படிச் சமய +வேறு பாட்டால் மறைத்தமையால் உலகத்துக்கு வெளிப்படாத நூல்கள் +எத்தனை இறந்து போயினவோ! தமிழுக்குப் பெருமை உண்டாக்கப் +பெரியவர்கள் நூல்கள் இயற்றி வைத்திருக்க, அவற்றை மறைத்துத் தமக்கும��� +தம்மைச் சார்ந்தவருக்கும் சிறுமை உண்டாக்கிக் கொள்ளும் இயல்பினர் மனம் +திருந்தும் காலம் வருமா?” என்று ஏங்கினேன். + + + +என்னுடன் வந்திருந்த ஒருவர் விருஷபதாச முதலியாரிடம், நான் +கும்பகோணம் காலேஜில் வேலை பார்ப்பவனென்றும், திருவாவடுதுறை +மடத்திற்கு மிகவும் வேண்டியவனென்றும் சொன்னார். என் நிலைமை தெரிந்து +கொண்ட பிறகாவது முதலியார் சுவடியைக் கொடுக்கக் கூடுமென்பது +சொன்னவரது அபிப்பிராயம். ஆனால் அது நேர் விரோதமாக முடிந்தது. +“அப்படியா! சைவ மடத்திற் பழகினவருக்கு ஜைன கிரந்தங்களில் அன்பு +ஏற்படுவதற்கு நியாயமே இல்லை. சைவர் ஜைனர்களைத் துச்சமாக +எண்ணுபவர்கள். நான் கொடுக்கவே மாட்டேன்” என்று அவர் சொன்னபோது, + + + +“ஏதடா விபரீதமாகப் போய் விட்டது!” என்று என் நண்பர் தம்மைத் +தாமே நொந்து கொண்டார். + + + +மறுபடியும் வருவதாகச் சொல்லிவிட்டுத் தஞ்சையில் யாரைக் கொண்டு +முயன்றால் முதலியாரின் பிரதியைப் பெறலாமென்று விசாரித்தேன். கடைசியில் +துக்காராம் ஹோல்கார் என்னும் மகாராஷ்டிர தனவானாகிய என் நண்பரை +அழைத்துக் கொண்டு மீட்டும் விருஷபதாச முதலியாரை அணுகினேன். நல்ல +வேளையாக அவர் மனம் இளகியது. தம்மிடமிருந்த பிரதியை உதவினார். +இவ்வளவு நயந்து வாங்கிய அப்பிரதி சிறந்த பிரதியன்று; விசேஷ +உரையில்லாதது. + + + +மயக்கம் தந்த விஷயங்கள் + + + +இவ்வாறு பல வகையில் முயன்று தேடியதில் சிந்தாமணிப் பிரதிகள் 23 +கிடைத்தன. அவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு பார்க்கலானேன். பார்க்கப் +பார்க்கப் பல விஷயங்கள் தெளிவாயின. ஆனால் பாடபேதக் கடலுக்குக் +கரைகாணவே முடியவில்லை. மனம் போன போக்கிலே எழுதிய +கனவான்களால் விளைந்த விபரீதம் எவ்வளவோ ஏட்டில் உண்டு. + + + +இது கொம்பு, இது சுழி என்று வேறு பிரித்து அறிய முடியாது +மெய்யெழுத்துக்களுக்குப் புள்ளியே யிராது. ரகரத்துக்கும் காலுக்கும் வேற்றுமை +தெரியாது. சரபம் சாபமாகத் தோற்றும், சாபம் சரபமாகத் தோற்றும். ஓரிடத்தில் +சரடு என்று வந்திருந்த வார்த்தையை நான் சாடு என்றே பலகாலம் +எண்ணியிருந்தேன், தரனென்பதைத் தானென்று நினைத்தேன். ‘யானை +நாகத்திற்றோற்றுதலின்’ என்று ஓரிடத்தில் இருந்தது. யோசித்து யோசித்துப் +பார்த்தேன். யானைகளில் வனசரம், நதிசரம் கிரிசரம் என்று மூன்று +வகையுண்டென்று கேட்டிருக்கிறேன். நாகமென்பது மலையாக ��ருக்குமென்றும் +கிரிசரமாகிய யானையைக் குறித்ததாகக் கொள்ளலாமென்றும் தோற்றியது. ஒரு +நண்பர், “ஜைன சம்பிரதாயத்தில் நாகத்தின் வயிற்றில் யானை முதலில் +பிறந்ததென்று இருக்கலாமோ என்னவோ!” என்று ஒரு சந்தேகத்தைக் +கிளப்பினார். “அது நாகத்தில் பிறந்ததோ, அல்லது நரகத்திற் பிறந்ததோ, +ஒன்றும் விளங்கவில்லையே!” என்று சொல்லிச் சிரித்தேன். + + + +“யானை நரகத்தில் தோற்றுதலின் அதற்கு வணங்குதல் இயல்பு” என்று +நச்சினார்க்கினியர் எழுதுகிறார். காந்தருவதத்தையோடு இசை பாடித் +தோல்வியுற்றவர்களை நோக்கி, + + + + “இசையினி லிவட்குத் தோற்றாம் யானையால் + +வேறு மென்னின் இசைவதொன் றன்று கண்டீர்” + + + +என்று ஒருவன் சொன்னதாக வரும் சந்தர்ப்பத்தில், யானையால் +வெல்லுதல் அரிது என்பதை விளக்குவதன் பொருட்டு நச்சினார்க்கினியர் அந்த +வாக்கியத்தை எழுதியிருக்கிறார். ஆகவே அங்கே இசையோடு சம்பந்தமுடைய +விஷயம் இருந்தால்தான் பொருத்தமாக இருக்கும். இவற்றையெல்லாம் +யோசிக்கையில் “யானை நாதத்தில் தோற்றுதலின்” என்று இருக்க +வேண்டுமென நிச்சயித்தேன். பல பிரதிகளில் தெளிவாக “நாகத்தில்” என்றே +இருந்தது. ஒரு பிரதியில் மாத்திரம் “நாதத்தில்” என்ற பாடம் காணப்பட்டது. + + + +இப்படியே குருதி என்பதைக் குந்தியென்றெண்ணித் தடுமாறினேன். +ஓரிடத்திலே, ‘திருத்தங்குமார்பன், புனலாட்டிலே உயிர் போகின்ற ஞமலிக்குத் +தானும் வருந்திப் பஞ்சாட்சரமாகிய மந்திரத்தைக் கொடுத்தபடியும்’ என்று +இருந்தது. ‘இது ஜைன நூலாயிற்றே; பஞ்சாட்சர மந்திரம் இங்கே எப்படிப் +புகுந்துகொண்டது?’ என்ற சந்தேகம் வந்தது. மூலத்தில் “ஞமலிக் கமிர் +தீர்ந்தவாறும்” என்று இருக்கிறது. ‘அமிர்து’ என்பதற்கு, ‘பஞ்சாட்சரமாகிய +மந்திரம்’ என்பது உரையாக இருந்தது. ‘மந்திரத்தை யென்றிருந்திருக்க +வேண்டும்: யாரோ பிரதியைப் பார்த்து எழுதின சைவர் பஞ்சாட்சரம் என்று +சேர்த்தெழுதி விட்டார்’ என்று முதலில் கருதினேன். பின்னாலே வாசித்து +வருகையில் “ஐம்பத வமிர்த முண்டால்” (946) என்று வந்தது. வேறிடங்களில் +உள்ள உரையால் பஞ்ச நமஸ்கார மந்திரமென்று தெரிந்தது. ஜைன +நண்பர்களை விசாரித்தேன். அவர்கள் மிகவும் எளிதில், “அருகர், ஸித்தர், +ஆசாரியர், உபாத்தியாயர், ஸாதுக்களென்னும் பஞ்ச பரமேஷ்டிகளை +வணங்குதற்குரிய ஐந்து மந்திரங்களைப் பஞ்ச நமஸ்காரமென்று சொல்வது +ஸம்பிரதாயம்” என்று தெளிவுறுத்தினார்கள். + + + +இப்படித் தடுமாறித் தடுமாறிச் சிரமப்படுவதில் எனக்கு அலுப்புத் +தோன்றவில்லை, மேலும், மேலும் உத்ஸாகமே உண்டாயிற்று. ஏதேனும் ஒரு +மேற்கோளோ, ஒரு விஷயமோ, ஒரு பாடமோ தெரியாமல் மயங்கித் தவித்து +நின்று பிறகு விளங்கினால் அதற்கு முன்பு பட்ட சிரமங்களெல்லாம் +மறந்துபோகும்; பின்னும் பதின்மடங்கு ஊக்கம் ஏற்படும். + + + +இடையின ரகரத்துக்கும் வல்லின றகரத்துக்கும் பேதந்தெரியாமல் +தடுக்கி நின்ற இடங்கள் பல. உரை இது, மூலம் இது, மேற்கோள் இது என்ற +வேறுபாடு தெரியாமல் முட்டுப்பட்ட +சந்தர்ப்பங்கள் பல. நச்சினார்க்கினியருடைய அன்வயத்திலே வரும் +பாடற் பகுதிகளைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாமல் மயங்கிய சமயங்கள் பல. +ஓர் ஏட்டுக்கும் மற்றோர் ஏட்டுக்கும் இடையே உள்ள பாட பேதங்களால் +அடைந்த கலக்கத்திலிருந்து மீள வழியின்றி மயங்கிய நிகழ்ச்சிகள் பல. +உரைக்கு மூலமும் மூலத்துக்கு உரையும் கிடைக்காமல் பலமுறை +இடர்ப்பட்டேன். மேற்கோள் எதற்காக உரையாசிரியர் காட்டுகிறாரென்பது +விளங்காமல் பல தடவை தயங்கினேன். ஜைன விஷயங்களில் நுணுக்கமான +சில செய்திகள் விளங்காமையால் மேலே வாசிக்க முடியாமல் பலகாலம் +தடுமாறி நின்றேன். இலக்கணச் செய்திகளை அமைத்துக்கொள்ள வகை +தெரியாமல் பலவாறு யோசித்துப் பல சமயங்களில் குழம்பினேன். + + + +இப்படிச் சிந்தாமணி யென்னும் காவியச்சோலையில் நான் சஞ்சாரம் +செய்கையில் நேர்ந்த கலக்கங்களும் இடர்ப்பாடுகளும் தடைகளும் +மயக்கங்களும் நாளடைவில் இறைவனருளால் சிறிது சிறிதாகத் தெளியலாயின. +பதிப்பிக்கலாமென்ற எனது சங்கற்பம் நிறைவேறுமென்னும் நம்பிக்கை +உறுதியாயிற்று. + +----------- + + + + + +93. மூன்று லாபங்கள் + + + +கும்பகோணம் காலேஜில் உள்ள ஆசிரியர்களும் மாணாக்கர்களும் +என்பால் வைத்திருந்த பேரன்பினால் என் வேலையைச் சிரமமின்றி நான் +திருப்தியுடன் பார்த்து வந்தேன். இடையிடையே திருவாவடுதுறைக்குச் +சென்றமையால் அவ்வாதீனச் சம்பந்தமும் எனக்கு ஊக்கத்தை உண்டாக்கிற்று. +அடிக்கடி தியாகராச செட்டியார், சேலம் இராமசுவாமி முதலியார் +முதலிய அன்பர்கள் எனக்குக் கடிதம் எழுதுவார்கள். அவர்களுடைய +கடிதங்கள் நேரில் பழகிப் பேசுவதைப் போன்ற இன்பத்தை உண்டாக்கும். + + + +மீட்ட நிலம் + + + +முன்னமே தெரிவித்தபடி குடும்ப விஷயத்தில் எனக்கு எவ்வகைக் +கவலையுமில்லாமல் என் தந்தையாரே கவனித்து வந்தார். குடும்பப் +பாதுகாப்பில் அவரைப் போன்ற கருத்தும் ஒழுங்கும் உடையவர்கள் மிகச் +சிலரே. அவர் மிகவும் செட்டாகச் +செலவு செய்து பொருளைச் சேமித்துச் சீட்டுப் போட்டார். அவருடைய +முயற்சியின் பயனாக 1884-ஆம் வருஷ ஆரம்பத்தில், எங்கள் பரம்பரைச் +சொத்தாகிய நிலத்தை ஒற்றியிலிருந்து ரூ. 770 செலுத்தி மீட்டோம். பல காலம் +பரம்பரையாகக் குடும்பத்துக்குச் சொந்தமாக வந்த நிலம் பிறர் கையில் +உள்ளதேயென்ற வருத்தம் என் தந்தையாருக்கு இருந்தது. ஆயினும் அதை +மீட்க முடியாத நிலையிலிருந்தார். இறைவன் திருவருளால் எனக்கு +உத்தியோகம் கிடைத்ததும் கண்ணும் கருத்துமாகச் சேமித்த பணத்தைக் +கொண்டு, முதலில் அந்த நிலத்தை மீட்டார் புதிய நிலமொன்று +வாங்கியிருந்தாற்கூட அவருக்கு அவ்வளவு திருப்தி ஏற்பட்டிராது. + + + +சேலம் இராமசுவாமி முதலியார் + + + +இந்த நிலையில் எனது சிந்தாமணி ஆராய்ச்சி நன்றாக நடந்து வந்தது. +இன்ன இன்ன பகுதிகளைப் படித்தேனென்று இராமசுவாமி முதலியாருக்கு +எழுதுவேன். அவர் மிக்க சந்தோஷத்தைத் தெரிவித்து விடை எழுதுவார். +1880-ம் டு அக்டோபர் மாதம் 30-ம்Œ எழுதிய கடிதமொன்றில் “,,,,சிந்தாமணி +முழுவதும் ஒரு விசை தாங்கள் பார்த்ததாகவும் அதில் சில சந்தேகங்கள் +இருப்பதாகவும் தங்கள் கடிதத்தால் தெரிய வருகிறது. மறுபடி ஒரு விசை +பார்க்கும் பக்ஷத்தில் சந்தேகங்கள் ஏறக்குறைய முழுவதும் தீர்ந்து விடுமென்று +எனக்குத் தோற்றுகிறது. தங்களுடன் மறுபடியும் அந்தப் புஸ்தகத்தைப் படிக்க +எனக்கு எப்பொழுது உதவுமோ கடவுளுக்குத் தான் தெரியும். ஆகிலும் +இருவரும் ஒரு விசை படிப்போமென்ற நம்பிக்கை மாத்திரம் இருந்து +கொண்டேயிருக்கிறது” என்று தெரிவித்திருந்தார். அதனால் அவருக்குச் +சிந்தாமணியிலுள்ள விருப்பமும் என்பாலுள்ள அன்பும் புலப்பட்டன. +‘சென்னைக்குச் சென்று முதலியாரோடு சில காலம் இருந்து வர வேண்டும்’ +என்ற ஆவல் எனக்கு உண்டாயிற்று. + + + +இடையில் தியாகராச செட்டியாரை ஒரு முறை போய்ப் பார்த்து +வந்தேன். சிந்தாமணியைப் பற்றி அவரிடம் சொல்லிய போது அவர் மிக்க +குதூகலத்தோடு என்னைப் பாராட்டினார். விளங்காத மேற்கோள்களில் +திருக்கோவையாரிலுள்ள சிலவற்றை அவர் ஞாபகத்திலி���ுந்து சொன்னார். +அவற்றைக் குறித்துக் கொண்டேன். ஒரு சமயம் அவர் பூவாளூர்ப் புராணத்தை +அச்சிட்டார். அவர் விரும்பியபடி நானும் அதைப் பார்வையிட்டுச் சிறப்புப் +பாயிரம் கொடுத்தேன். + + + + மகாமகம் + + + +தாருண வருஷம் மாசி மாதம் (1885 மார்ச்சு) மகாமகம் வந்தது. +அப்போது கும்பகோணத்தில் அளவற்ற ஜனங்கள் கூடினர். தியாகராச +செட்டியாரும் வந்திருந்தார். திருவாவடுதுறையிலிருந்து ஸ்ரீ சுப்பிரமணியதேசிகர் +பரிவாரத்துடன் விஜயம் செய்து கும்பகோணம் பேட்டைத் தெருவிலுள்ள +தங்கள் மடத்தில் தங்கியிருந்தனர். பல கனவான்களும் வித்துவான்களும் வந்து +அவரைக் கண்டு பேசி இன்புற்றுச் சென்றனர். அக்காலத்திலெல்லாம் நான் +தேசிகருடனே இருந்து வந்தேன். அதனால் பல புதிய மனிதர்களை அறிந்து +கொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. + + + +மடத்தின் ஆதரவில் வளர்ந்த எனக்கு என் உத்தியோக +வருவாயிலிருந்து தக்க சமயத்தில் ஏதேனும் ஒரு தர்மம் மடத்தில் நடத்த +வேண்டுமென்று ஓர் எண்ணம் இருந்தது. அதனை மகாமக காலத்தில் +நிறைவேற்றினேன். சுப்பிரமணிய தேசிகரிடம் நூறு ரூபாய் கொடுத்து, +“மடத்தில் மகேசுவர பூஜையில் ஒரு பாகத்துக்கு வைத்துக்கொள்ள வேண்டும்” +என்று சொன்னேன். தேசிகர் மிகவும் மகிழ்ந்து. “மடத்துப் பிள்ளையாகிய +நீங்கள் இப்படிச் செய்ய வேண்டியது அவசியமில்லையே” என்றார். நான் +உசிதமாக விடை அளித்தேன். மகாமக விழா முடிந்தபின் திருவாவடுதுறைக்குத் +திரும்புகையில் என் தந்தையாருக்கும் எனக்கும் பீதாம்பரங்களும், என் +குமாரன் சிரஞ்சீவி கல்யாணசுந்தரத்திற்குச் சந்திரஹாரமென்னும் +பொன்னாபரணமொன்றும் அளித்தார். + + + +மத்தியார்ச்சுன மான்மிய முயற்சி + + + +ஆதீனக்காறுபாறும், திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி ஆலய +விசாரணக் கருத்தருமாகிய சுப்பிரமணியத் தம்பிரானென்பவர் அந்த ஸ்தல +சம்பந்தமாகத் தாம் செய்து வரும் கைங்கரியங்களை ஆதீன கர்த்தரிடம் +விண்ணப்பித்துக்கொள்ளுகையில் சில காலமாக அவ்வாலயத்தில் நின்று +போயிருந்த வஸந்தோத்ஸவத்தை மீட்டும் நடத்த வேண்டுமென்று சொன்னார். +தேசிகர் அப்படியே உத்தரவு கொடுத்தார். அந்த உத்ஸவம் நடப்பதற்குரிய +ஏற்பாடுகள் நடை பெறலாயின தம்பிரான் தேசிகருடைய முன்னிலையில் +என்னை நோக்கி, “திருவிடைமருதூர் ஸ்தலப் பெருமையைப் பெரும்பாலோர் +நன்றாகத் தெரிந்து கொள்ளவில்லை. பழைய புராணங்கள் இருந்தாலும் +அவற்றைப் படித்துப் பொருள் தெரிந்துகொள்பவர் மிகவும் சிலரே. ஆதலின் +தாங்கள் அந்த ஸ்தலமாகாத்மியத்தைச் +சுருக்கமாக வசன நடையில் எழுதினால் அச்சிட்டு யாவருக்கும் +கொடுக்கலாம். அச்சிடும் செலவு முதலியவற்றை நான் ஏற்றுக் கொள்கிறேன்” +என்றார். தேசிகரும் அவ்வாறு செய்வது நலமென்று குறிப்பித்தார். நான் +எழுதுவதாக ஒப்புக்கொண்டேன். + + + +திருவிடைமருதூருக்கு ஞானக்கூத்தரென்பவரியற்றிய தமிழ்ப் புராணம் +ஒன்றும், கொட்டையூர் ஸ்ரீசிவக்கொழுந்து தேசிகர் இயற்றிய புராணம் ஒன்றும் +உண்டு. சிவக்கொழுந்து தேசிகர் இயற்றிய புராணத்தைப் படித்துக் +குறிப்பெடுத்துக் கொண்டு திருவிடை மருதூர் ஸ்தலமகாத்மியத்தை எழுதி +முடித்தேன். அதற்கு “ஸ்ரீமத்தியார்ச்சுன மான்மியம்” என்று பெயரிட்டு, மூர்த்தி, +தலம், தீர்த்தங்களின் சிறப்பும், வழிபட்டோர் வரலாறும் எழுதிச் சுப்பிரமணிய +தேசிகரிடத்தும் சுப்பிரமணியத் தம்பிரானிடத்தும் படித்துக் காட்டினேன். பிறகு +தம்பிரானது விருப்பத்தின்படி திருவிடைமருதூர் உத்ஸவ மூர்த்தியாகிய +ஏகநாயகர் விஷயமாக ஓர் ஊசலும் தாலாட்டும் இயற்றிச் சேர்த்தேன். + + + +எல்லாம் முடிந்தபிறகு தம்பிரான் அதனை எங்கே அச்சிடலாமென்று +யோசனை செய்தார். அதற்கு முன் கும்பகோண புராணமும், பூவாளூர்ப் +புராணமும் சென்னையில் அச்சிடப்பெற்ற விஷயம் அவருக்குத் தெரியும். +ஆதலின் அங்கே அனுப்பி அச்சிட்டு வருவிக்கலாமென்று நான் சொன்னபோது +அவர், “புஸ்தகம் இப்போது பூர்த்தியாகி இருக்கிறது. இந்த வஸந்தோத்ஸவம் +ஸமீபத்தில் வருகிறது; அதற்குள் புஸ்தகம் அச்சாகி வந்தால் மிகவும் +உபயோகமாக இருக்கும். தபால் மூலமாக அச்சுக் காகிதங்கள் வருவதும், +திருத்துவதுமாக இருந்தால் குறித்த காலத்தில் நிறைவேறுமென்று +தோற்றவில்லை. உங்களுக்கு இப்போது லீவு காலமாக இருப்பதால், நீங்களே +சிரமத்தைப் பாராமல் சென்னபட்டணம் சென்று நேரில் இருந்து காரியத்தை +முடித்துக் கொண்டு வரலாம். செலவு சிறிது அதிகமானாலும் காரியம் மிகவும் +உயர்ந்தது” என்றார். அவர் வார்த்தை கரும்பு தின்னக் கூலி தருவதாகச் +சொல்லுவது போல இருந்தது. அதுவரையில் சென்னையையே பார்த்திராத +எனக்கு அந்த நகரத்துக்குப் போய் ஆங்குள்ள அறிவாளிகளோடு பழக +வேண்���ுமென்ற விருப்பம் இருந்தது. அன்றியும் சேலம் இராமசுவாமி +முதலியாரைக் கண்டு சில காலம் உடனிருந்து சிந்தாமணியைப் படித்துக் காட்ட +வேண்டுமென்ற ஆவலும் உண்டு. இவற்றை நிறைவேற்றிக் கொள்ளும் +பொருட்டு இந்தக் காரியம் ஏற்பட்டது நமது நல்லதிருஷ்டமே என்று நான் +எண்ணி, அவ்வாறே சென்று புஸ்தகத்தை அச்சிட்டுக் கொண்டு வருவதாக +ஒப்புக்கொண்டேன். + + + + சென்னைப் பிரயாணம் + + + +ஒரு நல்ல நாளில் புறப்பட்டு நான் என்பால் பாடங் கேட்டுக் +கொண்டிருந்த சிதம்பரம் சாமிநாதையர், சிதம்பரம் சோமசுந்தர முதலியார் +என்பவர்களுடன் சென்னைக்குச் சென்றேன். எனக்கு உதவி செய்வதற்கு வேறு +ஒரு மனிதரைச் சுப்பிரமணியத் தம்பிரான் அனுப்பினார். இராமசுவாமி +முதலியார் பங்களாவில் தங்கினேன். + + + +சென்னையில் ஜீவரக்ஷாமிர்த அச்சுக்கூடத்தில் நான் கொண்டு போன +புஸ்தகத்தை அச்சுக்குக் கொடுத்து அதைக்கவனித்துக் கொள்ளும்படி உடன் +வந்த இருவரிடமும் சொல்லிவிட்டுப் பெரும்பாலும் இராமசுவாமி முதலியாருடன் +இருந்து பொழுதுபோக்கி வந்தேன் சீவக சிந்தாமணியைப் பற்றிய செய்திகளை +நான் எடுத்துச் சொன்னபோது அவர் கேட்டு மிகவும் திருப்தி அடைந்தார். +“எப்படியாவது அதை முடித்து வெளியிடுங்கள். இங்கே வந்திருந்து பதிப்பு +வேலையை நிறைவேற்றலாம். என்னாலான சகாயமெல்லாம் செய்கிறேன்” +என்றார். “அதை ஆரம்பிப்பதற்கு நீங்கள் காரணமாக இருந்தீர்கள்; பூர்த்தி +செய்வதற்கும் நீங்களே உதவி செய்ய வேண்டும்” என்று நான் சொன்னேன். + + + +இராமசுவாமி முதலியார் உதவி + + + +சென்னையில் நான் இரண்டு வாரங்களுக்கு மேல் தங்கியிருந்தேன். +மத்தியார்ச்சுன மான்மியம் பதிப்பிப்பதை ஒரு காரணமாக வைத்துக் கொண்டு +சென்னைக்கு வந்தாலும், என்னுடைய நோக்கம் அந்நகரத்தையும் அங்குள்ள +அறிஞர்களையும் பார்த்துத் தெரிந்து கொள்ளவேண்டு மென்பதே. இராமசுவாமி +முதலியாருடைய பேருதவியால் அந்நோக்கம் மிக எளிதில் கைகூடியது. + + + +ஒவ்வொரு நாளும் முதலியார் பிற்பகலில் தம் கோச்சு வண்டியில் +என்னை அழைத்துக் கொண்டு புறப்படுவார். பிரஸிடென்ஸி காலேஜ், காஸ்மொ +பாலிடன் கிளப் முதலிய இடங்களுக்குப் போய் அங்குள்ளவர்களும் +வருபவர்களுமாகிய கனவான்களில் ஒவ்வொருவரையும் எனக்குப் பழக்கம் +பண்ணி வைப்பார். அவர்கள் கௌரவத்தை எனக்கு எடுத்துரைப்பதோடு +எ��்னைப் பற்றியும் அவர்களிடம் சொல்வார். அவருடைய உதவியினால் நான் +ஜட்ஜ் முத்துசாமி ஐயர், ஸர். வி. பாஷ்யமையங்கார், ஸ்ரீநிவாச ராகவையங்கார், +பம்மல் விஜயரங்க முதலியார், ரகுநாதராயர் முதலிய பல கனவான்களுடைய +பழக்கத்தைப் பெற்றேன். பிரஸிடென்ஸி காலேஜிற்குச் சென்று பூண்டி +அரங்கநாத முதலியாரையும், தொழுவூர் வேலாயுத முதலியாரையும் பார்த்தேன். +அவ்விருவரும் எனக்கு மிகவும் +நெருங்கிய நண்பர்களானார்கள், வர்னாகுலர் சூபரிண்டெண்டெண்டு +சேஷகிரி சாஸ்திரியாரையும் தமிழ்ப் பண்டிதர் கிருஷ்ணமாசாரியரையும் கண்டு +பேசினேன். புரசபாக்கம் அஷ்டாவதானம் சபாபதி முதலியார், சோடசாவதானம் +சுப்பராய செட்டியார், கதிர்வேற்கவிராயர், காஞ்சீபுரம் இராமசுவாமிநாயுடு, +கோமளீசுவரன் பேட்டை இராசகோபாலபிள்ளை, சூளை அப்பன் செட்டியார், +சூளை சோமசுந்தர நாயகர், திருமயிலை சண்முகம் பிள்ளை முதலிய +வித்துவான்களைப் பார்த்துப் பேசி இன்புற்றேன். அஷ்டாவதானம் சபாபதி +முதலியார் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுடைய சகபாடியாதலின் +அவருடைய புலமையைப் பற்றிப் பேசினார். சோடசாவதானம் சுப்பராய +செட்டியார் தாம் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்ட விஷயத்தையும் +அப்புலவர் பிரானுடைய சிறப்புக்களையும் எடுத்துச் சொன்னார். நான் கண்ட +வித்துவான்கள் பல பழைய பாடல்களைச் சொன்னார்கள். அவற்றைக் கேட்டுக் +குறித்துக் கொண்டேன். நானும் எனக்குத் தெரிந்த செய்யுட்களைச் சொன்னேன். + + + +சென்னை நகரத்தில் பார்க்க வேண்டிய பொருட்காட்சிச் சாலை, +கடற்கரை, கோயில்கள், புத்தகசாலைகள், சர்வகலாசாலை முதலியவற்றையும் +பார்த்தேன். வித்துவான்களையும் அறிஞர்களையும் பார்த்துப் பழகியது +கிடைத்தற்கரிய பெரிய லாபமாகத் தோன்றியது. சிறந்த உத்தியோக பதவியை +வகித்த பெரியவர்களெல்லாம் அடக்கமாகவும், அன்பாகவும் இருப்பதைக் கண்டு +நான் வியந்தேன். கும்பகோணத்தில் பதினைந்து அல்லது இருபது ரூபாய் +சம்பளம் பெறும் குமாஸ்தா செய்யும் அட்டகாஸத்தையும் ஆடம்பரத்தையும் +கண்ட எனக்கு அப்பெரியவர்களுடைய நிலை மிக்க ஆச்சரியத்தை +உண்டாக்கியது. + + + +ஆதீனத்தின் புகழ் + + + +ஒரு நாள் தங்கசாலை வீதியிலுள்ள காசிப்பாட்டி ஹோட்டலுக்குள் +சென்றேன். உள்ளே புகுந்ததும் அங்கிருந்த சிலர், “வாருங்கள், வாருங்கள். +எங்கே இவ்வளவு தூரம் வந்தது?” என்று என்னை வரவேற்று உபசரித்தனர். +‘இதென்ன இப்படி வரவேற்கிறார்களே; ஏதேனும் மோசம் இருக்குமோ! என்று +முதலில் நான் சந்தேகமடைந்தேன். அவர்களுடைய சரிகை அங்கவஸ்திரமும் +சவ்வாதுப் பொட்டும், பேச்சும் அவர்கள் சங்கீத வித்வான்களென்பதைப் +புலப்படுத்தின. நான் அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்த போதே ஒருவர், +வந்தீர்கள்? பண்டார ஸந்நிதிகள் சௌக்கியமாக இருக்கிறார்களா?” +என்று கேட்டார். அந்தக் கேள்வியிலிருந்து அவர்கள் என்னைப் பற்றித் +தெரிந்தவர்களேயென்று உணர்ந்தேன். + + + +“உங்களை இன்னாரென்று தெரியவில்லையே” என்றேன் நான். + + + +“எங்களுக்கு உங்களை நன்றாகத் தெரியும்; நீங்கள் சுப்பிரமணிய +தேசிகருக்குப் பக்கத்திலே இருப்பீர்களே! ஆஹா! என்ன சபை என்ன +சங்கீதம்!” + + + +எங்கேயோ இருக்கும் திருவாவடுதுறையின் புகழ் சென்னையில் அந்த +இடத்தில் வீசியதற்குக் காரணம் சுப்பிரமணிய தேசிகருடைய தூய்மையும், +வள்ளன்மையும், கல்விச் சிறப்பும், பெருமையுமே என்பதை உணர்ந்தேன். +அந்த வித்துவான்கள் திருவாவடுதுறையில் நடைபெறும் குருபூஜைச் சிறப்பையும் +சுப்பிரமணிய தேசிகர் வித்துவான்களுடைய தரமறிந்து சம்மானம் செய்யும் +அழகையும் மற்ற விசேடங்களையும் பாராட்டினார்கள். அருகிலிருந்த +மற்றவர்களுக்குத் திருவாவடுதுறை யாதீனத்தின் பெருமைகளையெல்லாம் +விரிவாக எடுத்துச் சொன்னார்கள். “அப்படியா? அப்படியும் ஓர் இடம் +இருக்கிறதா? நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அந்த மடம் ஒரு பெரிய +வித்தியாபீடமாக வல்லவோ இருக்க வேண்டும்?” என்று கேட்டவர்கள் விம்மித +மடைந்தார்கள். + + + +அந்தக் கூட்டத்தினிடையே அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த +போது நான் கரையற்ற இன்பக் கடலில் ஆழ்ந்திருந்தேன். சுப்பிரமணிய +தேசிகர் பெருமையைச் சொல்லுவதில் நானும் கலந்து கொண்டேன். + + + +குட்டித் தம்பிரான் + + + +ஒருநாள் சுப்பிரமணிய தேசிகரிடமிருந்து எனக்கு ஒரு திருமுகம் +வந்தது. ‘சென்னையில் நாட்டுப் பிள்ளையார் கோவில் தெரு மடத்திலுள்ள +வித்துவான் ஆறுமுகத்தம்பிரானிடம் ஒரு குட்டித்தம்பிரான் படித்து வருவதாகத் +தெரிகிறது. நாம் மகாமகத்துக்குக் கும்பகோணம் போயிருந்தபோது அந்தக் +குட்டித் தம்பிரானைக் குன்றக் குடி மடித்துக் காரியஸ்தர் அப்பா பிள்ளையும், +தெய்வ சிகாமணி ஐயரும் அழைத்து வந்து காட்டினார்கள். அவருடைய +தோற்றப் பொலிவு கண்ணைக் கவர்ந்தது ஸம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் நாம் +கேட்ட கேள்விகளுக்கு அவர் கூறிய விடைகள் திருப்தியை அளித்தன. அவர் +கிடைத்தால் இங்கே சின்னப் பட்டத்திற்கு ஏற்படுத்தலாமென்று நினைக்கிறோம். +அவருக்குச் சம்மதமிருந்தால் அவரோடு கலந்து கொண்டு அவரை இவ்விடத்திற்கு +அனுப்ப வேண்டும்” என்று அதில் எழுதியிருந்தார். + + + +நான் சென்னைக்கு வந்த நாள் முதல் அந்தக் குட்டித் தம்பிரான் +அடிக்கடி என்பால் வந்து உபசார வார்த்தைகளைப் பேசிக் செல்வார். +அச்சுக்கூடத்திற்கும் அவர் இருந்த இடத்திற்கும் சமீபமாதலால் அவர் வந்து +என்னைப் பார்ப்பதற்கு அனுகூலமாக இருந்தது. அவரிடம் ஸ்ரீ சுப்பிரமணிய +தேசிகருடைய உள்ளக் குறிப்பைத் தெரிவித்த போது அவர் மகிழ்ச்சியோடு +ஒப்புக் கொண்டார். சுப்பிரமணிய தேசிகருக்கு இவ்விஷயத்தை எழுதித் +தெரிவித்தேன். அவர் உடனே தம்பிரானைத் திருவாவடுதுறைக்கு அனுப்பி +வைக்க வேண்டுமென்று எழுதினார். அதன்படியே என்னுடன் வந்திருந்த +சிதம்பரம் சாமிநாதையரைத் துணையாகச் சேர்த்து அந்தக் குட்டித் +தம்பிரானைத் திருவாவடுதுறைக்கு அழைத்துப் போகும்படி செய்தேன். + + + +மத்தியார்ச்சுன மான்மியம் அச்சாகிக் கொண்டிருந்தது. இடையே +திடீரென்று ஒரு நாள் தியாகராச செட்டியார் கண் வைத்தியம் செய்து +கொள்வதற்காகத் தம் மனுஷ்யர்களுடன் சென்னைக்கு வந்து, நான் இருக்கும் +இராமசுவாமி முதலியார் பங்களாவில் சில நாள் தங்கினார். அப்பால் அவர் +தம்முடைய சகபாடியாகிய சுப்பராய செட்டியார் மூலமாக வேறு ஜாகை +ஏற்படுத்திக் கொண்டு அங்கே சென்று இருந்து வந்தார். நான் அவருடன் +இருந்து பேசியும், பார்க்க வேண்டியவர்களைப் பார்த்தும் அச்சு வேலையைக் +கவனித்தும் வந்தேன். + + + +சென்னையிலிருந்து திரும்பியது + + + +புஸ்தகம் முடிந்தவுடன் புறப்பட்டுத் திருவிடைமருதூருக்குத் +திருக்கல்யாண தினத்தன்று சென்று சுப்பிரமணிய தேசிகரிடம் புஸ்தகப் +பிரதிகளை ஒப்பித்து நிகழ்ந்த விஷயங்களையும் சொன்னேன். எல்லாவற்றையும் +கேட்டு அவர் மிகவும் திருப்தியுற்று, +“சாமிநாதையர் பட்டணம் போய் வந்ததில் மூன்று லாபங்கள் +உண்டாயின. ஒன்று அவரைச் சேர்ந்தது. மற்ற இரண்டும் மடத்துக்கு இலாபம். +பல பேர்களைப் பழக்கம் செய்து கொண்டது அவருக்கு நன்மை. +மத்தியார்ச்சுன மான்மியம் வெளி வந்ததும் குட்டித் தம்பிரானை வரச் +செய்ததும் மடத்துக்கு உபயோகமானவை” என்று பாராட்டினார். + + + +வஸந்தோத்ஸவம் மிகச் சிறப்பாக நடந்தது. மத்தியார்ச்சுன மான்மியம் +அச்சமயத்தில் யாவருக்கும் வழங்கப்பட்டது. + +--------- + + + + + +94. இடையே வந்த கலக்கம் + + + +அடிக்கடி ஆராய்ந்து வந்தமையால், என் நினைவு முழுவதும் +சிந்தாமணி மயமாக இருந்தது. அதில் என் மனம் ஆழ்ந்துவிட்டது. காலையில் +நான் எழுந்தவுடன் சிந்தாமணி முகத்தில்தான் விழிப்பேன். பல் தேய்த்து +அனுஷ்டானம் செய்தவுடன் ஆகாரம் பண்ணுவேனோ இல்லையோ +சிந்தாமணியை ஆராய்வேன். காலேஜிற்குப் போக நேரமாய்விடுமே யென்று +கருதமாட்டேன். காலேஜில் அடிக்கும் முதல் மணி என் காதில் விழுந்து +சிந்தாமணியிலிருந்து என் கருத்தை வலியப் பிடித்து இழுக்கும். அவசர +அவசரமாகச் சாப்பிட்டு விட்டுப் புறப்படுவேன். சில நாட்களில் சாப்பிடாமலே +போய்விடுவேன். காலேஜில் பாடம் சொல்லுகையில் இடையே எத்தனையோ +முறை சிந்தாமணியைப் பற்றிப் பிள்ளைகளுக்குச் சொல்லுவேன். அவர்களின் +பலரை என் வீட்டுக்கு வரச் சொல்லிப் பாட பேதம் பார்க்கச் செய்தும் +குறிப்புக்களை எழுதச் செய்தும் சிந்தாமணித் தொண்டில் ஈடுபடுத்துவேன். +பிற்பகலில் காலேஜிலிருந்து வீட்டுக்கு வந்தவுடன் சிந்தாமணியை +எடுத்துக்கொள்வேன். எங்கள் வீட்டுத் திண்ணையில் சிறிய கை +மேஜையின்மேல் பிரதியை வைத்துக் கொண்டு எத்தனையோ இரவுகள் +சிந்தாமணி ஆராய்ச்சியில் மனமொன்றியிருப்பேன். எனக்குச் சிந்தாமணியும், +சிந்தாமணிக்கு நானும் துணையாகப் பொழுது போவதே தெரியாமல் ஆராய்ச்சி +நடைபெறும். + + + +காலேஜ் ஆசிரியர்களில் ஒருவர் ஓர் இரவு பன்னிரண்டு மணி வரையில் +ஒரு நண்பர் வீட்டில் சீட்டாடி விட்டு எங்கள் தெரு வழியே தம் வீட்டுக்குச் +சென்றார். எங்கும் இருள் சூழ்ந்த இரவில் வெளித் திண்ணையில் நான் +உட்கார்ந்திருந்ததைக் கண்டு வியப்புற்று, “என்னை இது? இன்னும் +உட்கார்ந்திருக்கிறீர்களே? நான் போகும் போதும் இப்படியே இருந்தீர்கள்; +இப்போதும் உட்கார்ந்திருக்கிறீர்களே?” என்றார். சுருக்கமாக விடை சொல்லி +நான் அவரை அனுப்பி விட்டேன். + + + +சிந்தாமணிப் பிரபஞ்சம் + + + +அந்தத் தனிமையிலே திருத்தக்க தேவர் என்னை எங்கெல்லாமோ +அழைத்துச் செல்வார். இராசமாபுரத்துக் காட்சிகளைக் காட்டுவார். சச்சந்தனின் +அந்தப்புரத்துக்கு அழைத்துப் போவார். கட்டியங்காரனுடைய செயல்களை +எடுத்துச் சொல்லுவார். + + + +சீவகன் பேசுவான்; விளையாடுவான்; வீரச் செயல் புரிவான்; இன்ப +விளையாட்டிலே ஈடுபட்டிருப்பான்; காந்தருவதத்தை காட்சி யளிப்பாள்; +குணமாலை தோன்றுவாள். + + + +இவ்வளவு காட்சிகளினிடையே என் உடம்புதான் இரவில் தனியாக +இருக்குமேயன்றி என் மனம் சிந்தாமணிப் பிரபஞ்சத்திலே விரிந்த +இடங்களையும் நீண்ட கால நிகழ்ச்சிகளையும் அளவிட்டு இன்புறும். +இடையிடையே ஆராய்ச்சி நினைவு உண்டாகும், சிக்கல்களும் கலக்கங்களும் +தோன்றும். அப்போது சீவகசிந்தாமணிக் காட்சிகள் மறையும். புஸ்தகமும் +எழுத்துக்களும் முன் நிற்கும். பாட பேதங்கள் வந்து போரிடும். விஷயம் +விளங்காத குழப்பத்தில் தடுமாறுவேன். திடீரென்று புதிய ஒளி உண்டாகும். +விஷயம் தெளிவாகும். மறுபடி புஸ்தகமும் எழுத்தும் இந்த உலகமும் மறைந்து +விடும். + + + +தாமோதரம் பிள்ளையின் பழக்கம் + + + +இப்படியிருக்கையில் சென்னையிலிருந்த சி.வை. தாமோதரம்பிள்ளை +எனக்கு எழுதியபடியே கும்பகோணத்தை அடைந்து அங்கே வக்கீலாக இருந்து +வந்தார். அவர் முன்னமே ஒரு பெரிய உத்தியோகத்திலிருந்து பென்ஷன் +பெற்றவர். அவர் அடிக்கடி என் வீட்டுக்கு வந்து தமிழ் நூல்கள் விஷயமாகச் +சல்லாபம் செய்து பழகலானார். கும்பகோணத்துக்கு அருகேயுள்ள கருப்பூரில் +ஜாகை வைத்துக் கொண்டிருந்தார். அவர் வீட்டுக்கு நானும் அடிக்கடி போய் +வருவதுண்டு தாம் பல தமிழ் நூல்களைப் பதிப்பிக்க எண்ணியிருப்பதாகத் +தெரிவித்ததோடு திருவாவடுதுறை சென்று ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரைத் +தரிசிக்க வேண்டுமென்று விரும்பினார். அங்ஙனமே நான் அவரை அழைத்துச் +சென்று தேசிகருக்குப் பழக்கம் செய்வித்தேன். மடத்தில் பல ஏட்டுச் சுவடிகள் +இருக்குமென்றும் அவற்றைத் தம்முடைய பதிப்புக்கு உபயோகித்துக் +கொள்ளலாமென்றும் அவர் கருதினார். தேசிகருடன் செய்த +சம்பாஷணையிலிருந்து அவருடைய கல்வியறிவையும் பெருந்தன்மையையும் +உணர்ந்து கொண்டார். + + + +கும்பகோணத்திலுள்ள கனவான்களையும் வக்கீல்களையும் தாமோதரம் +பிள்ளைக்கு அவர் விரும்பியபடி பழக்கம் செய்வித்தேன். நாங்கள் இருவரும் +அடிக்கடி தமிழ் சம்பந்தமானவிஷயங்களைப் பேசுவோம். அவர் பல +விஷயங்களைக் கேட்பார்; நான் சொல்லுவேன். யாழ்ப்பாணத்திலுள்ள பல +வித்துவான்களுடைய செய்திகள் அவர் மூலமாகத் தெரிய வந்தன. அவருடன் +ஆராய்ச்சிக்கு உதவியாக, யாழ்ப்பாணத்து நல்லூர் சிற். கைலாச பிள்ளை என்ற +ஒருவர் இருந்தார். அவர் நல்ல அறிவாளியாகத் தோற்றினார்; என்பால் மிக்க +அன்புடன் அவர் பழகினார். + + + +ஒரு நாள் சம்பாஷயையில் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் +கம்பராமாயணத்தில் மிக்க விருப்பமுடையவர்களென்றும் அவர்களிடமிருந்து +பல திருத்தமான பாடங்கள் தெரியவந்தனவென்றும் தாமோதரம் பிள்ளையிடம் +சொன்னேன். அன்றியும் மடத்திலுள்ள பிரதிகளை வைத்துக்கொண்டு +இராமாயணம் முழுவதும் சோதித்து நல்ல பாடங்களைக் கைப் பிரதியில் +குறித்துக்கொண்டே செய்தியையும் தெரிவித்தேன். பின்பு அவர் என்னிடமுள்ள +கம்பராமாயணப் பிரதியை ஒவ்வொரு காண்டமாக வாங்கி நான் செய்திருந்த +திருத்தங்களையெல்லாம் தம் பிரதியில் செய்துகொண்டு என் பிரதியை +என்னிடம் திருப்பிக் கொடுத்து விட்டார். + + + +ஒரு பிற்பகலில் + + + +ஒரு நாள் பிற்பகலில் தாமோரம் பிள்ளை என் வீட்டுக்கு வந்தார். +நெடுநேரம் பேசிக் கொண்டிருந்த பின்பு, “தங்களிடம் சிந்தாமணி விசேஷ +உரையுள்ள பிரதியொன்று இருக்கிறதென்றும், அதனை ஆராய்ந்து +வைத்திருக்கிறீர்களென்றும், அது நல்ல பிரதியென்றும் சென்னையில் நாவலர் +பதிப்பு நூல்களை மீட்டும் பதிப்பித்து வந்த சதாசிவ பிள்ளை சொன்னார். +சிந்தாமணியைப் பதிப்பிக்கலாமென்று நான் எண்ணியிருக்கிறேன். +கொழும்பிலிருக்கும் பெரிய பிரபுவாகிய கனம் ராமநாதனவர்கள் அதன் +பதிப்புக்கு வேண்டிய செலவு முழுவதையும் தாம் கொடுப்பதாக எனக்கு +வாக்களித்திருக்கிறார். தங்கள் பிரதியைக் கொடுத்தால் என்னிடமுள்ள +பிரதியோடு ஒப்பிட்டுக்கொண்டு பதிப்பிப்பேன்” என்றார். + + + +“மிகவும் சிரமப்பட்டுப் பல வருஷங்களாகச் சோதித்து +வைத்திருக்கிறேன். நானே அதனை அச்சிட எண்ணியிருக்கிறேன். ஆதலால் +கொடுக்க மனம் வரவில்லை” என்று சொல்லி நான் மறுத்தேன். + + + +தாமோ:- இந்த விஷயத்தில் நான் மிக்க அனுபவமுள்ளவன். +சீவகசிந்தாமணியைப் பதிப்பிக்க முதலில் அதிகப் பணம் வேண்டும். +சென்னபட்டணத்தில் அச்சிடவேண்டும். நீங்கள் இங்கே இருந்து கொண்டு +சென்னையில் அச்சிடுவதென்றால் எளிதில் முடியாது. நான் +தொடங்கினேனானால் இன்னும் மூன்று நான்க�� மாதங்களுள் புத்தகத்தை +நிறைவேற்றி விடுவேன். உங்கள் கையில் பொங்கலுக்குள் முந்நூறு பிரதிகள் +தருவேன். + + + + நான் :- இதற்கு முன்பு சென்னையில் கும்பகோண புராணம் முதலிய +சில நூல்களை அச்சிட்டதுண்டு. சேலம் இராமசுவாமி முதலியார் வேண்டிய +உபகாரங்களைச் செய்வதாக வாக்களித்திருக்கிறார். + + + +தாமோ:- அவர் என்ன உபகாரம் செய்வார்? பணம் வேண்டுமனால் +சிறிது கொடுப்பார். ‘புரூப்’ பார்ப்பாரா? பதிப்புக்கு வேண்டிய அமைப்புக்களைச் +சொல்லித் தருவாரா? நீங்கள் முன்னமே பதிப்பித்த கும்பகோண புராணம் +போன்றதன்று இந்த நூல். இதைப் பதிப்பிக்க வேண்டிய முறையே வேறு. +சென்னைக்கே போய் அங்கே நேரில் இருந்து காரியத்தை முடிக்க வேண்டும். +அங்குள்ள ஸ்காட்டிஷ் அச்சுக்கூடத் தலைவர் எனக்கு மிக வேண்டியவர். நான் +எது சொன்னாலும் நிறைவேற்றித் தருவார். இந்த விஷயத்தில் காலேஜ் வேலை +வேறு உங்களுக்கு ஒரு தடையாக இருக்கும். + + + +நான்:- காலேஜ் வேலை எனக்கு ஒரு தடையாயிராது. ஒழிந்த +நேரத்தில்தானே நான் இந்த வேலையைக் கவனிப்பேன்? அவசியமானால் லீவு +வாங்கிக் கொள்ளுகிறேன். நான் எழுத்தெழுத்தாக ஆராய்ந்து வைத்திருக்கும் +நூலை உங்களிடம் விடுவதானால் என் உழைப்பு வீணாக அன்றோ போய் +விடும்? + + + +தாமோ:- ஏன் வீணாகும்? அவ்வளவு நன்றாக உபயோகப்படுமே! +நீங்கள் ஆராய்ந்து கண்ட விஷயங்களை என் பதிப்பில் சேர்த்துக் +கொள்ளுகிறேன். உங்கள் பெயரையும் வெளிப்படுத்துகிறேன். நீங்கள் +பதிப்பிப்பதாக இருந்தால் உங்கள் உழைப்பைப் பற்றி நீங்களே பாராட்டிக் +கொள்ள முடியாது. நான் பதிப்பித்தால் உங்களைச் சிறப்பித்து நன்றாக +எழுதுவேன். + + + +புகழ் வேண்டாம் + + + +நான்:- எனக்குப் புகழ் வேண்டு மென்றும் பிறர் என்னைப் பாராட்ட +வேண்டுமென்றும் நான் எதிர் பார்க்கவில்லை. நான் பதிப்பிப்பதாகச் செய்து +கொண்ட சங்கற்பமும், அதன் பொருட்டு மேற்கொண்ட சிரமங்களும் வீணாகி +விடுமேயென்று யோசிக்கிறேன். + + + +தாமோ:- இதுவரையில் நீங்கள் பட்ட சிரமம் பெரிதன்று. இதைப் +பதிப்பிப்பதிலேதான் உண்மையான சிரமம் இருக்கிறது. அந்தச் சிரமம் +உங்களுக்கு ஏற்பட வேண்டாமே யென்றுதான் சொல்லுகிறேன். நான் அந்தத் +துறையில் உழைக்க வேண்டுமென்று தீர்மானித்துச் சில நூல்களை வெளியிட்டிருக்கிறேன். +ஆகையால் என்னைத் தமிழுலகு நன்றாக அறியும். சிந்தாமணி என் பதிப்பாக +வெளிவந்தால் அதற்கு ஏற்படும் கௌரவமே வேறு. அதனோடு உங்கள் +பெயரும் வெளிப்படும். + + + +நான்:- நீங்களும் ஆரம்பத்தில் என்னைப் போலத்தானே +இருந்திருப்பீர்கள்? நான் பதிப்பித்து வெளியிட்ட பிறகுதானே உலகம் அதை +மதிப்பதும் மதியாததும் தெரிய வரும்? + + + +‘இராமாயணம் பதிப்பிக்கலாம்’ + + + +தாமோ:- ஏதாவது நூலைப் பதிப்பிக்க வேண்டுமென்ற விருப்பம் +உங்களுக்கிருந்தால் கம்பராமாயணத்தை வெளியிடலாமே! நீங்கள் பல +வருஷங்களாக ஆராய்ந்து வைத்திருக்கிறீர்கள். அருமையான திருத்தங்களை +உங்கள் பிரதியிற் கண்டேன். இராமாயணத்துக்கு எல்லா நூல்களையும் விட +மதிப்பு அதிகம். பதிப்பித்தால் புண்ணியமும் உண்டு. + + + +நான்:- அதிலும் பொருட் செலவு இல்லையா? + + + +தாமோ:- இருந்தால் என்ன! இராமாயணம் பதிப்பிப்பதாக இருந்தால் +பிரபுக்கள் நான் நானென்று பொருளுதவி செய்ய முன்வருவார்கள். ஒவ்வொரு +காண்டமாகப் பதிப்பியுங்கள். நானே ஒவ்வொரு காண்டத்துக்கும் ஒவ்வொரு +கனவானை உதவி செய்ய ஏற்பாடு செய்கிறேன். சிந்தாமணிப் பதிப்பை எனக்கு +விட்டு விடுங்கள். + + + +என் மன நிலை + + + +அச்சமயம் எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. மனம் சஞ்சலமடைந்தது. +சிந்தாமணியைப் பதிப்பிக்கும் விஷயத்தில் தமிழிலும் ஜைன நூல்களிலும் +இன்னும் தேர்ந்த அறிவு இருந்தால் நன்றாக இருக்குமென்று ஒரு சமயம் நான் +எண்ணியதுண்டு. அப்போது இந்தப் பெரிய காரியத்தை நிறைவேற்ற நமக்குச் +சக்தியுண்டா என்ற அபிப்பிராயம் மனத்தே எழும். ஆனாலும் ஒன்றிலும் +தளராமல் எப்படியாவது பதிப்பைத் தொடங்கிவிடுவது என்ற உறுதியோடு +இருந்தேன். ‘சேலம் இராமசுவாமி முதலியார் இந்நூலைப் பதிப்பிக்கும் +விஷயத்தில் வேண்டிய உதவி செய்வதாக வாக்களித்திருக்கிறார். அதை +ஆராய்ந்து பதிப்பிப்பதாக ஒப்புக்கொண்டு அதற்கு வேண்டியவற்றைச் செய்து +வந்திருக்கிறோம். இப்போது இவரோ இப்படிச் சொல்லி நம் பிரதியை +விரும்புகிறாரே! + + + + நாம் பின் வாங்கலாமா? நம் கைப் புத்தகத்தில் போட்டிருக்கும் +ஒவ்வொரு கோடும் புள்ளியும் ஒவ்வொரு குறிப்பும் எவ்வளவு +உபயோகமானவை! மற்றவர்கள் கண்களுக்கு ஒரு சிறிய கோடாகத் +தோன்றலாம். ஆனால் அந்தக் கோட்டின் சங்கேதத்தால் நமக்குத்தோற்றும் +விஷயங்கள் வேறு. அந்தக் குறிப்புக்களை இவர் எப்படி உணர முடியும்? நாம் +இட்ட ஒவ்வோர் அடையாளமும் எவ்வளவு விஷ��ங்களை உள்ளடக்கியது? +அவற்றை மற்றவர் எப்படித் தெரிந்து கொள்ள முடியும்? எவ்வளவு ஜைன +நூல்கள் படித்து விஷயங்கள் தெரிந்து கொண்டோம்! எவ்வளவு ஜைனர்களிடம் +சென்று சமய மறிந்து நயந்தும் பயந்தும் கெஞ்சியும் சந்தேகங்களைத் தெளிந்து +கொண்டோம்! எல்லாவற்றையும் வீணாக்கி விடுவதா’ என்று இவ்வாறு +சிறிதுநேரம் அவரோடு ஒன்றும் பேசாமல் சிந்தனை செய்தேன். + + + +அவர் மீட்டும் மீட்டும் பல விஷயங்களைச் சொல்லி என் சிந்தாமணிப் +பிரதியை விரும்பினார். அப்போது நான், “என் தந்தையாரவர்கள் வெளியே +போயிருக்கிறார்கள். அவர்கள் வந்த பின்பு கேட்டுக் கொண்டு, நாளைக் +காலையில் தங்களிடம் வந்து பதிப்பு விஷயத்தைப் பற்றி என் கருத்தைத் +தெரிவிக்கிறேன்” என்று சொன்னேன். அவர், “அப்படியே செய்யுங்கள்; +இப்போது புஸ்தகத்தைக் கொடுங்கள்; நான் ஒரு முறை பார்த்து வைக்கிறேன். +பிறகு உங்கள் தீர்மானப்படியே செய்யலாம். பெரும்பாலும் எனக்கு +அனுகூலமாகவே முடியுமென்று எதிர்பார்க்கிறேன்” என்று கேட்டுக் கொண்டார். + + + +பிரதி கொடுத்தேன் + + + +உள்ளே சென்றேன். நான் ஆராய்ந்து திருத்தி இரண்டு பாகங்களாக +எழுதி வைத்திருந்த சிந்தாமணிக் கையெழுத்துப் பிரதியை எடுத்து வந்து அவர் +கையில் கொடுத்தேன். உடனே அவர் முகத்தில் ஒரு பிரகாசம் உண்டாயிற்று. +அவர் செய்த புன்முறுவலிலே சந்தோஷம் பொங்கியது. “சரி. நான் போய் +வருகிறேன். நான் சொன்னவற்றையும் என் வேண்டுகோளையும் தங்கள் +தந்தையாரவர்களிடம் தெரிவித்து நாளைக் காலையில் வந்து தங்கள் +சம்மதத்தைத் தரவேண்டும்” என்று சொல்லி என்னிடம் விடைபெற்றுப் +புஸ்தகத்துடன் தம் வண்டியிலேறித் தம் வீட்டுக்குச் சென்றார். + + + +புதிய உணர்ச்சி + + + +அது வரையில் சாவதானமாகப் பேசிக் கொண்டிருந்த தாமோதரம் +பிள்ளை புஸ்தகம் கைக்கு வந்தவுடன் திடீரென்று +புறப்பட்டது என் மனத்தில் ஒரு புதிய உணர்ச்சியை உண்டாக்கிற்று +பின்னும் சிறிது நேரம் அவர் பேசியிருந்தால் ஒருகால் அந்த உணர்ச்சி +உண்டாயிருக்குமோ இராதோ அறியேன். அவர் போன பின் எனக்கு ஒரு +மயக்கம் உண்டாயிற்று ஒன்றிலும் புத்தி செல்லவில்லை. அவர் கைக்குச் சென்ற +பிரதி மீட்டும் வருமோவென்று எண்ணிக் கலங்கினேன். வெகுநேரம் வரையில் +பலவகையான சிந்தனைகளுடன் ஒரு பெருங்கவலையில் ஆழ்ந்திருந்தேன். +வெளியே போயிருந்த என் தந்தையார் அப்போது வந்தார். என்னைக் +கவனித்து, “என்ன! வழக்கம்போல் இராமல் ஒரு மாதிரியாக இருக்கிறாயே? +என்ன விசேஷம்?” என்று கேட்டார். உடனே நான் முதலில் “ஒன்றுமில்லை” +என்று சொல்லிவிட்டு, தாமோதரம்பிள்ளை வந்திருந்ததையும், சிந்தாமணிப் +பதிப்பு விஷயமாக நடந்த சம்பாஷணையையும், நான என்னிடமிருந்த +கைப்பிரதியைக் கொடுத்ததையும் மற்ற விவரங்களையும் சொன்னேன். அவர், +“அவசரப்பட்டுப் பிரதியைக் கொடுத்திருக்க வேண்டியதில்லை. ஆனாலும் +கவலைப்பட வேண்டாம். சிந்தாமணியை நீயே பதிப்பிப்பதாகப் பலரிடம் +தெரிவித்திருக்கிறாய். இரவும் பகலும் அதே வேலையாக இருந்து வருகிறாய். +நீதான் பதிப்பிக்க வேண்டும். ஒரு கவலையும் இல்லாமல் ஸ்ரீ மீனாட்சி +சுந்தரேசுவரர் காப்பாற்றுவார். நாளைக் காலையில் அவரிடம் போய் நான் +சொன்னதைச் சொல்லிக் கையெழுத்துப் பிரதியை வாங்கி வந்து மேலே +கவனிக்க வேண்டியதைக் கவனி” என்று தைரியமாகச் சொன்னார். “நானே +பதிப்பிப்பதுதான் முறையாகும்’ என்ற முடிவுக்கு வந்தேன். + + + +ஆகாரம் செய்து விட்டுப் படுத்தேன். தூக்கம் வரவில்லை. தாமோதரம் +பிள்ளையிடம் என்ன சமாதானம் சொல்லிப் பிரதியைத் திரும்பி வாங்கி +வருவது என்று யோசித்தேன். ஒன்றும் தோன்றவில்லை. பொழுது எப்போது +விடியுமென்று காத்திருந்தேன். பொழுதுவிடிந்தவுடன் அனுஷ்டானம் +முதலியவற்றை முடித்துக் கொண்டு என் தம்பி சிரஞ்சீவி சுந்தரேசனுடன் +தாமோதரம் பிள்ளையின் வீட்டுக்குச் சென்றேன். அவர் வீட்டுத் திண்ணையில் +நான் இருந்து, அவர் வருவதை எதிர்பார்த்துக் கொண்டேயிருந்தேன். நான் +வந்ததைக் கேட்டு அவர் வெளியே வந்தார். வந்தவர் என் பிரதியை என் +கையிற் கொடுத்துச் சில சந்தேகங்கள் கேட்கத் தொடங்கினார். அப்போது +யாழ்ப்பாணம் அம்பிகை பாக உபாத்தியாயர் என்பவரும் உடன் இருந்தார். +முதற் பாகத்தைப் பார்க்கையில் 20 பக்கங்கள் வரையில் அவர் கோடிட்டு +‘ஸ்பேஸ்’ அடையாளம் செய்திருப்பது தெரிந்தது. அவர், ‘மீனேறுயர்த்த’ +என்னும் செய்யுளின் உரையில் உள்ள ’ஏற்றை மேம்படுத்தின’ என்பது என்ன? +பவர் துரை அச்சிட்டுள்ள புத்தகத்தில் ‘மேம்படுத்தின’ என்று இருக்கிறது. இதை விளங்கச் +செய்ய வேண்டும்” என்று கேட்டார். விளக்கினேன். “வென்றிக் களிற்றை +விரிதாரவன் வென்றவாறும்’ என்பதற்கு, ’பிறரை முன்பு வென்ற +வ���ற்றியையுடைய களிறு’ என்று உரை எழுதியிருக்கிறதே. என்ன விஷயம்?” +என்று கேட்டார்: அதையும் விளக்கமாகச் சொன்னேன். + + + +அப்பால் இவற்றைப் போன்ற வேறு சில ஐயங்களை வினாவினார். +விளக்கமாகச் சொன்னேன். எல்லாவற்றையும் அம்பிகை பாக உபாத்தியாயர் +கவனித்து வந்தார். அப்பால் நான் தாமோதரம் பிள்ளையைப் பார்த்து, “நீங்கள் +இப்போது கேட்ட கேள்விகள் மிகவும் சாதாரணமானவை. கடினமான பாகங்கள் +இந்நூலில் எவ்வளவோ உண்டு. அவை விளங்குவதற்கு ஏற்ற சௌகரியம் +உங்களுக்கில்லை. ஆதலால் இம்முயற்சியை நீங்கள் நிறுத்திவிடுங்கள். நானே +பதிப்பித்தலை மேற்கொள்வேன். பொருள் விளங்காமல் நீங்கள் எங்ஙனம் +பதிப்பிக்க முடியும்?” என்றேன். அவர், “நூல் இறவாமல் +இருக்கவேண்டுமென்பது என் கருத்து. பொருளுதவி கிடைக்கும்போது நூலைப் +பதிப்பித்து விட்டால் படிப்பவர்கள் பொருள் செய்து கொள்வார்கள்” என்று +சொன்னார். “விஷயம் தெரியாமல் வெளியிட்டால் படிப்பவர்கள் எவ்வாறு +தெரிந்து கொள்வார்கள்? நான் ஒரு வகையாக வரையறை செய்து +வைத்திருக்கிறேன். ஆதலால் இந்தக் காரியத்தை நானே செய்வேன். நீங்கள் +பதிப்பித்தாலும் பதிப்பிக்கலாம். ஆனாலும் என் முயற்சியை நான் விடப் +போவதில்லை” என்று சொல்லி, என் கையிலிருந்த என் பிரதி இரண்டு +பாகங்களையும், அவரிடம் தெரிவித்துவிட்டு, என் தம்பி வசம் கொடுத்து, +“இவற்றை ஜாக்கிரதையாக வீட்டிற்கு எடுத்துப்போய் வைத்திரு. அப்பாவிடமும் +சொல்லு. நான் பின்னால் வருகிறேன்” என்று சொல்லி யனுப்பி விட்டு +அவரிடம் சிறிது நேரம் பேசினேன். எங்கள் சம்பாஷணைகளைக் கவனித்த +அம்பிகைபாக உபாத்தியாயர் அவரை நோக்கி, “ஐயா, இந்த ஐயர் பலமுறை +ஆராய்ந்து ஆழ்ந்து படித்தவரென்றும் நீங்கள் ஒரு முறையேனும் இந்நூலைப் +படித்துப் பார்க்கவில்லை யென்றும் நீங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த +சம்பாஷணையிலிருந்து நான் அறிந்தேன். ஆதலால் இந்த நூற்பதிப்பு +வேலையை இவரிடமே விட்டு விடுங்கள். நீங்கள் மேற்கொள்ள வேண்டாம்” +என்று கண்டிப்பாகச் சொன்னார். பிள்ளை ஒன்றும் சொல்லாமல் மௌனமாக +இருந்தார். அப்பால் அவ்விருவரிடமும் விடைபெற்று வீடு வந்து சேர்ந்தேன். +மிக்க கவலையோடிருந்த என் தந்தையார் சிந்தாமணிப் பிரதியைப் பார்த்து +ஆறுதலுற்றார். “வென்றிக் களிற்றை” என்ற தொடரையும், அம்பிகைபாக +உபாத��தியாயரையும் நினைத்துக் கொண்டேயிருக்கிறேன். + +----------- + + + + + +95. சிந்தாமணிப் பதிப்பு ஆரம்பம் + + + +சீவகசிந்தாமணியை விரைவில் அச்சிட ஆரம்பிக்க வேண்டுமென்ற +வேகம் எனக்கு உண்டாயிற்று. நன்றாக ஆராய்ந்து அதனை வெளியிட +வேண்டுமானால் பல வருஷங்கள் செல்லும். ஆனால் ஒவ்வொரு +விஷயத்தையும் சந்தேகமறத் தெளிந்து திருப்தியான பிறகு தான் வெளியிடுவது +என்பது எளிதன்று. என்னுடைய நண்பர்களிற் சிலர், “இப்படி ஆராய்ந்து +கொண்டே இருந்தால் வாழ்வாள் முழுவதும் இதிலேயே செலவாகிவிடும். +நீங்கள் நிதானித்துப் பதிப்பிப்பதற்குள் வேறு யாராவது வெளியிட்டு +விடுவார்கள். இதுவரையில் தெரிந்த விஷயங்களை ஒருவாறு +அமைத்துக்கொண்டு ஆரம்பித்துவிடுங்கள். அடுத்த பதிப்பில் வேண்டிய +திருத்தங்களைச் செய்துகொள்ளலாம். பதிப்புக்கள் வர வர விஷயமும் +திருந்தும்” என்று தைரியம் சொன்னார்கள். அப்போது பதிப்பிக்கலாமென்று +நிச்சயம் செய்து கொண்டேன். + + + +கையொப்பம் வாங்கியது + + + +’பதிப்பிக்கப் பணம் வேண்டுமே; அதற்கு என்ன செய்வது!’ என்ற +கவலை உண்டாயிற்று; சில நண்பர்கள் அதற்கு உபாயம் சொன்னார்கள். +“தமிழன்புடைய தக்க கனவான்களிடத்தில் சென்று சிந்தாமணியைப் +பதிப்பிக்கும் செய்தியைக் கூறிக் கையொப்பம் பெற்று முன்பணம் +வாங்கிக்கொண்டு பதிப்பிக்கத் தொடங்கலாம்” என்றார்கள். அது நல்ல +உபாயமென்றே தோற்றியது. அதன் பொருட்டு ஒரு விளம்பரம் அச்சிட்டு +அன்பர்களுக்கு அனுப்பினேன். + + + +திருவாவடுதுறைக்குச் சென்று பண்டார ஸந்நிதிகளிடம் என் கருத்தைத் +தெரிவித்தபோது அவர் மிக்க மகிழ்ச்சியுடன் முதற் கையொப்பத்தைத் தாமே +இடுவதாகச் சொல்லிச் சில பிரதிகளுக்குக் கையெழுத்திட்டுப் பணமும் +அளித்தார். கும்கோணத்தில் சற்றேறக்குறைய எழுபது அன்பர்களிடம் +கையொப்பம் வாங்கினேன். தஞ்சைக்கும் திருச்சிராப்பள்ளிக்கும் சென்று +அன்பர்கள் பலருடைய உதவியைப் பெற்றேன். திருச்சிராப்பள்ளியில் தியாகராச +செட்டியாருடைய சகாயத்தால் இருபது இருபத்தைந்து பேர்கள் கையொப்பம் +செய்தார்கள். + + + +இராசசுவாமி முதலியார் வார்த்தை + + + +திருச்சிராப்பள்ளியில் இருக்கும்பொழுது உடையார்பாளையம் வழக்கு +ஒன்றுக்காக வக்காலத்து வாங்கிக் கொண்டு சேலம் இராமசுவாமி முதலியார் +அங்கே வந்திருந்தார். அவருடைய வரவை அறிந்து +சென்று ப���ர்த்தேன். சிந்தாமணிப் பதிப்புக்காகக் கையொப்பம் வாங்குவதைத் +தெரிவித்தேன். முன்னெல்லாம் நான் பதிப்பிக்க வேண்டுமென்று சொன்ன +அவர் அப்பொழுது, “நீங்கள் இந்தப் பதிப்பு வேலையைத் தொடங்கினால் +மிக்க சிரமமாக இருக்குமே. அதிகப் பொருளும் உழைப்பும் காலமும் +செலவாகுமே. தாமோரம் பிள்ளை என்பவர் சிந்தாமணியைப் பதிப்பிப்பதில் +ஊக்கமுள்ளவராக இருக்கிறாரென்று கேள்வியுற்றேன். தக்கவர்களுடைய சகாயம் +அவருக்குக் கிடைக்கும். பணமும் செல்வாக்கும் உடையவராக இருக்கிறார். +ஆதலால் இந்த வேலையை அவரே செய்யும்படி விட்டு விட்டு நீங்கள் +கவலையின்றி இருக்கலாமே” என்றார். + + + +அவர் பேச்சைக் கேட்டு நான் திடுக்கிட்டேன். “இந்தச் சிந்தாமணியை +ஆராய்வதற்கும் அச்சிட வேண்டுமென்று துணிவதற்கும் மூலகாரணமாக இருந்த +சேலம் இராமசுவாமி முதலியாரா இப்படிச் சொல்கிறவர்?” என்று நினைந்து +ஆச்சரியமடைந்தேன். அவர் அப்படிச் சொல்வாரென்று நான் கனவிலும் +எண்ணவில்லை. அவருக்கு என்னுடைய ஆராய்ச்சியும் தகுதியும் நான் பட்ட +சிரமமும் நன்றாகத் தெரியும். அப்படியிருந்தும் அவர் என் சங்கற்பத்தை +மாற்றிக்கொள்ள வேண்டுமென்று சொன்னதில் எனக்குச் சிறிது +வருத்தமுண்டாயிற்று. ஆயினும் அவர் கூறியதை நான் ஏற்றுக் +கொள்ளவேயில்லை. + + + +“சில வருஷங்கள் இராப் பகலாக உழைத்து ஆராய்ந்து +வைத்திருக்கிறேன். இம்முயற்சியைக் கைவிட எனக்கு மனமில்லை. தாமோதரம் +பிள்ளை பதிப்பித்தால் பதிப்பிக்கட்டும். அதை நான் தடுக்கவில்லை. அதற்காக +என்னை நிறுத்தச் சொல்லுவது நியாயமாகுமா? நான் எவ்வளவோ ஆவலாக +இந்தக் காரியத்தைத் தொடங்கியிருக்கிறேனே” என்று துணிவு தோற்றச் +சொன்னேன். + + + +அவர் உண்மையில் என்பால் உள்ளன்புடையவராதலின் எனக்குச் +சிந்தாமணிப் பதிப்பிலுள்ள தீவிரமான சிரத்தையை உணர்ந்துகொண்டார். + + + +“உங்களுடைய முயற்சியை மாற்றவேண்டுமென்று நான் சொல்லவில்லை. +அவர் பலசாலியாக இருக்கிறாரே என்ற எண்ணத்தால் சொன்னேன். உங்கள் +தகுதி எனக்குத் தெரியாதா? இதற்குரிய துணிவு உங்களிடத்தில் இருக்கும்போது +இது நன்றாக நிறைவேறுமென்றே நான் நம்புகிறேன். என்னாலான உதவியைச் +செய்ய எப்போதும் காத்திருக்கிறேன்” என்று அவர் கூறியபோது தான் +பழையை இராமசுவாமி முதலியாரே இவரென்று நான் +எப்பொழுதும் சிந்தாமணியின் ஞாப���மாகவே நான் இருந்து வந்தேன். +அப்பதிப்பு நன்கு நிறைவேற வேண்டுமென்று எல்லாத்தெய்வங்களையும் +வேண்டினேன். 1886-ஆம் வருஷம் காலேஜ் கோடை விடுமுறையில் +சென்னைக்குச் சென்று சிந்தாமணிப் பதிப்பை ஆரம்பித்து விடவேண்டுமென்று +நிச்சயம் செய்தேன். ஆதலால் அதற்கேற்றபடி கைப் பிரதியை ஸித்தம் +செய்தேன். + + + +சென்னைப் பிரயாணம் + + + +இறைவன் திருவருளைச் சிந்தித்துக் கொண்டு சென்னைக்குப் +புறப்பட்டேன். இராமசுவாமி முதலியார் அப்பொழுது சென்னையில் +இல்லாமையால் அவருடைய பங்களாவுக்குச் செல்லாமல் சோடசாவதானம் +சுப்பராய செட்டியார் வீட்டிற்குச் சென்று தங்கினேன். நான் கொண்டு சென்ற +கையெழுத்துப் பிரதிகளையும் ஆராய்ச்சிக்கு வேண்டிய கருவிகளையும் +வேறுசாமான்களையும் அங்கே வைத்துக்கொண்டு புரசபாக்கத்திலுள்ள ஒரு +போஜன விடுதியில் ஆகாரம் செய்துவந்தேன். என் பெட்டியில் பூர்த்தியும் +அபூர்த்தியுமான சிந்தாமணி ஏட்டுப் பிரதிகள் 24 இருந்தன. சுப்பராய +செட்டியார் பல காலமாக நூற்பதிப்பு விஷயத்தில் ஈடுபட்டவராதலால் அவர் +மூலமாகவே அச்சுக்கூடத்தைத் திட்டம் செய்து பதிப்பிக்கலாமென்று +கருதினேன். + + + +ராஜகோபாலாச்சாரியர் + + + +நான் சென்னை சென்ற மறுநாட் காலையில் ஸ்ரீவைஷ்ணவரொருவர் +சுப்பராய செட்டியார் வீட்டில் என் வரவை எதிர் பார்த்திருந்தார். என்னைக் +கண்டு அவர் பராமுகமாகவே இருந்தார். செட்டியாரை நோக்கி, “இவர்கள் +யார்?” என்று கேட்டேன். “இவர் எஸ்.பி.ஸி.கே. அச்சுக்கூடத்தில் இங்கிலீஷ் +பகுதியில் மேல் விசாரணைக்காரர். தமிழிலும் நல்ல பயிற்சியுள்ளவர். பல +பாஷைகள் இவருக்கு வரும். அச்சிடும் விஷயத்தில் ஆதியோடந்தமாக +எல்லாவற்றையும் நன்றாக அறிந்தவர். உங்களைப் பார்க்கத்தான் +வந்திருக்கிறார்” என்றார். + + + +எனக்கு அளவற்ற மகிழ்ச்சியுண்டாயிற்று. பதிப்பு விஷயத்தில் +அவருடைய துணை கிடைக்குமென்ற நம்பிக்கையினால். “ஸ்வாமி உங்களைத் +தெரிந்து கொண்டது பரம சந்தோஷம். உங்களுடைய பழக்கமும் ஆசீர்வாதமும் +உதவியும் எனக்கு வேண்டும். அச்சிடும் வேலையில் எனக்கு அதிகப் +பழக்கமில்லை. ஆதலால் உடனிருந்து பார்த்துக்கொள்ளவேண்டும்” என்று +கேட்டுக் கொண்டேன். அவர் ஊர் தேரழுந்தூரென்றும் அவருடைய பெயர் +சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியரென்றும் அறிந்தேன். + + + + “நீங்கள் சிந்தாமணி���் பிரதிகள் கொண்டு வந்திருக்கிறீர்களென்று +கேள்வியுற்றேன். அந்தப் புஸ்தகங்களையும் உங்களையும் பார்க்கத்தான் +இப்போது வந்தேன்” என்றார் அவர். + + + +உடனே பெட்டியைத் திறந்து பிரதிகளை எடுத்துக்காட்டினேன். “நீங்கள் +வெகு சிரமப்பட்டு இவற்றைச் சேகரித்து ஆராய்ந்து வைத்திருக்கிறீர்களென்று +தெரிகிறது” என்று அவர் அவற்றைப் பார்த்துவிட்டுச் சொன்னார். + + + +“இந்தப் பிரதிகளையெல்லாம் வைத்துக்கொண்டு ஒப்பிட்டீர்களா?” பாட +பேதங்களைக் குறித்திருக்கிறீர்களா?” என்று அவர் கேட்டார். + + + +“எல்லாம் ஒருவாறு, செய்திருக்கிறேன். சில பிரதிகள் முற்றும் ஒப்பு +நோக்கப்பட்டன. சிலவற்றை, சந்தேகமுள்ள இடங்களில் மட்டும் பார்த்துத் +திருத்தங்களைத் தெரிந்து கொண்டேன்.அப்படிச் செய்வதைத் தவிர வேறு +என்ன செய்ய வேண்டுமென்று தெரியவில்லை. ஏதோ நான் சிரமப்பட்டு +உழைத்துத் தொகுத்து வந்திருக்கிறேன். அதை நல்ல முறையில் அச்சிட்டு +அழகு படுத்தித்தருவது உங்கள் கடமை” என்று பணிவாகச் சொன்னேன். பிறகு +எந்த எந்த வகையில் பதிப்பு அமைய வேண்டுமென்பதைப்பற்றி யோசனை +செய்யலானோம். + + + +“பாட்டு, பொழிப்புரை, விசேடவுரை எல்லாம் ஒன்றாக இருக்கின்றனவே! +நான் என்ன செய்கிறது?” என்று கேட்டேன். அப்படி மூன்றும் +கலந்திருப்பதைத் தெளிவாக வேறு பிரித்து அறிவதும், அறியும்படி செய்வதும் +மிகவும் கடினமான செயல்களென்று அக்காலத்தில் நான் எண்ணியிருந்தேன். +அப்பொழுது அவர் சொன்ன பதில் எனக்கு மிக்க ஆச்சரியத்தை +விளைவித்தது. + + + +“அவற்றை மிகவும் சுலபமாகத் தனித்தனியே அமைத்து விடலாம். +மூலத்தைப் பெரிய எழுத்திலும் உரைகளைச் சிறிய எழுத்திலும் +அச்சிடவேண்டும். மொழிப்புரையையும் விசேட உரையையும் தனித்தனியே +பாரா பாராவாக அமைத்துவிட்டால் அவை வேறு வேறு என்று தெரியவரும். +ஏட்டுப் பிரதியிலுள்ள குழப்பங்களை யெல்லாம் அச்சில் மாற்றி விடலாம். +அதைப்பற்றி நீங்கள் சிறிதும் கவலையடைய வேண்டாம்” என்று அவர் +சொன்னார். + + + +‘இப்படி யார் சொல்லப்போகிறார்கள்! இதுவும் தெய்வத்தின் +திருவருளே!’ என்று எண்ணி நான் பேருவகையுற்றேன். + + + + “எந்த அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கலாம்?” என்று ஆலோசிக்கையில் +அவர், “சூளை அவதானம் பாப்பையர் வீதியில் திராவிட ரத்னாகரம் என்ற +பெயருள்ள அச்சுக்கூடமொன்று இருக்கிறது. அ���ன் சொந்தக்காரராகிய ஸ்ரீ த. +கோவிந்த ஆசாரியார் என்பவர் என் நண்பர். மிகவும் யோக்கியமானவர். +செட்டியாரவர்களுக்கும் தெரிந்தவர்” என்றார். “நீங்கள் சொல்வது எனக்கு +நல்ல சகுனமாகத் தோற்றுகிறது; தமிழ்க் கடல் என்னும் அர்த்தத்தைத் தரும் +திராவிட ரத்னாகர அச்சுக்கூடத்தில் சிந்தாமணியைப் பதிப்பிப்பது மிகவும் +பொருத்தமே. சிந்தாமணி ஒரு கடலில் தானே தோன்றியது? தமிழ்ச் சிந்தாமணி +தமிழ்க் கடலிலிருந்து வெளிவருது நன்மையே” என்று என் சந்தோஷத்தையும் +உடன்பாட்டையும் தெரிவித்துக்கொண்டேன். + + + +நல்ல சகுனம் + + + +சேலம் இராமசுவாமி முதலியாருடைய தந்தையாராகிய கோபாலசாமி +முதலியாரென்பவர் அப்பொழுது சேலத்திலிருந்து சென்னைக்கு வந்திருந்தார். +அவர், நான் சுப்பராய செட்டியார் வீட்டில் தங்கியிருத்தலை அறிந்து +தம்முடைய பங்களாவிலேயே ஜாகை வைத்துக்கொள்ளலாமென்று எனக்குச் +சொல்லியனுப்பினார். அவர் சொன்னபடியே நான் அங்கே சென்று +வெளியறையொன்றில் தங்கியிருந்தேன். + + + +சிந்தாமணியை அச்சுக்குக் கொடுக்க ஒரு நல்ல நாள் பார்த்து நல்ல +வேளையாகிய அன்று பிற்பகல் மூன்று மணிக்கு அச்சுக்குக் கொடுக்கவேண்டிய +பாகத்தைக் கையிலெடுத்துக் கொண்டு நானும் சுப்பராய செட்டியாரும் சேலம் +இராமசுவாமி முதலியார் பங்களாவிலிருந்து புறப்பட்டோம். கோபாலசுவாமி +முதலியார் எங்களை அனுப்பும் பொருட்டு உடன் வந்து பங்களா வாசலில் +நின்றார். அப்போது சிறு தூற்றல் தூறிக்கொண்டிருந்தது. “தூறுகிறது +போலிருக்கிறதே” என்று சுப்பராய செட்டியார் சிறிது தயங்கி நின்றார். நான், +“சிறு தூறல் நல்லதுதான்; குற்றமில்லை; புறப்படலாம்” என்று சொல்லவே +புறப்பட்டோம். + + + +செல்லுகையில் பங்களாவின் புறவாயிலிலிருந்து ஒரு மனிதன் தன் +கையில் வஸ்திரத்தால் மூடிய ஒரு பெரிய வெள்ளித் தாம்பாளத்தை +எடுத்துக்கொண்டு பங்களாவை நோக்கி வந்தான். நாங்கள் நெருங்க நெருங்க, +அவன் அதன் மேலே இருந்த வஸ்திரத்தை எடுத்து விட்டான். அந்தத் +தாம்பாளத்தில் கிச்சிலி முதலிய பழங்கள் இருந்தன. அவற்றின்மேல் என் +பார்வை விழுந்ததோ இல்லையோ எனக்குப் புளகாங்கிதமம் உண்டாயிற்று. +அதே சமயத்தில் பின்னே நின்று எங்களைக் கவனித்த கோபாலசுவாமி முதலியார், +“நல்ல சகுனமாகிறது. உத்தேசித்த காரியம் நன்றாக நிறைவேறும். +பழம் வருகிறது. உ��்கள் முயற்சி பலனைப் பெறும். கவலையின்றிப் போய் +வாருங்கள்” என்று சொல்லிவிட்டு அந்த மனிதனைப் பார்த்து, “அடே, அதில் +இரண்டு பழங்கள் அவர்களிடம் கொடு” என்று உத்தரவு செய்தார். கையில் +பழம் கிடைத்தபோது நான் என்னையே மறந்தேன். ‘கடவுள் திருவருள்’ என்று +எண்ணிச் சென்றோம். + + + +பதிப்பு ஆரம்பம் + + + +அச்சுக்கூடத்திற்குச் சென்று விக்கினேசுவர பூஜை செய்து விட்டுத் +தலைவரிடம் நான் கொண்டு சென்ற கையெழுத்துப் பிரதியைக் கொடுத்தேன். +அதை உடனே அவர் அடுக்குவதற்குக் கொடுத்து விட்டார். ராயல் எட்டுப் +பக்க அளவில் ஐந்நூறு பிரதிகள் அச்சிடுவதென்றும், ஒரு பாரத்துக்கு 3? +ரூபாய் அச்சுக்கூலியென்றும் பேசி ஏற்பாடு செய்து கொண்டோம். + + + +அச்சு வேலை தொடங்கியது. தக்க பழக்கமில்லாத எனக்குச் சுப்பராய +செட்டியாரும், ராஜகோபாலாச்சாரியரும் உதவி புரிந்து வந்தனர். நூற்பெயர், +இலம்பகப் பெயர், தலைப்பு, மூலம், உரை என்பவற்றை வெவ்வேறு +எழுத்துக்களில் அமைக்கும்படி ராஜ கோபாலாச்சாரியர் திட்டம் செய்தார். +முதற் பாட்டிற்குரிய உரையில் மேற்கோள்கள் பல இருந்தன. அவற்றை அடிக் +குறிப்பிலே எவ்வாறு தெரிவிப்பதென்று நான் மயங்கினேன். அவர் உடுக்குறி +முதலிய அடையாளங்களை முறையே போட்டு அவற்றின் பெயரை எனக்குத் +தெரிவித்தார். சில குறியீடுகள் போதாமல் இருந்தமையால் நூதனமாக +வார்ப்பிக்க ஏற்பாடு செய்து உபயோகப்படுத்திக் கொண்டேன். + + + +சென்னைக்கு வந்தது முதல் சிந்தாமணிப் பதிப்புக்கு உரிய +அனுகூலங்கள் கிடைத்து வருவதைச் சுப்பிரமணிய தேசிகருக்கும் என் +தந்தையாருக்கும் தெரிவித்தேன். பதிப்பு வேகமாக நடைபெற்று வந்தது. + +----------- + + + + + +96. சிந்தாமணிப் பதிப்பு நிகழ்ச்சிகள் + + + +சீவகசிந்தாமணி அச்சாதி வந்தபோது நான் சென்னையிலுள்ள +வித்துவான்களை இடையிடையே கண்டு பேசிப் பழகுவேன். புரச +பாக்கத்திலிருந்த அஷ்டாவதானம் சபாபதி முதலியாரிடம் ஒரு நாள் +சென்றேன். முன்பே பார்த்துப் பழகிய வராதலின் திருவாவடுதுறை +மடத்தைப் பற்றியும், கும்பகோணம் காலேஜைப்பற்றியும் அவர் விசாரித்தார். +“சீவகசிந்தாமணியை உரையுடன் பதிப்பிப்பதற்காக வந்திருக்கிறேன்” என்று +நான் சொன்னேன். அதைக் கேட்டு அவர் திடுக்கிட்டார். “என்ன ஐயா? +சிந்தாமணி உரையையாவது, நீங்கள் பதிப்பிக்கிறதாவது? அது சுலபமான +காரியமா? நீங்கள் பால்யர். சிந்தாமணி நூலுக்கும் உரைக்கும் உள்ள பெருமை +என்ன? அதை முடிப்பது மிகவும் கஷ்டமாக இருக்குமே! அந்த முயற்சியை +நிறுத்திக் கொள்ளுதல் மிகவும் நல்லது. ஆழந் தெரியாமல் காலை +விடக்கூடாது” என்று கண்டிப்பாகச் சொன்னார். அப்படி அவர் சொன்னதைக் +கேட்டு நானும் ஆச்சரியமடைந்தேன். + + + +பழைய முயற்சிகள் + + + +“நான் ஏன் பதிப்பிக்கக்கூடாது? அந்த நூலையும் உரையையும் +பலமுறை படித்து ஆராய்ந்திருக்கிறேன். அதற்கு வேண்டிய கருவி +நூல்களையும் படித்திருக்கிறேன். நிறைவேற்றி விடலாமென்ற துணிவு எனக்கு +இருக்கிறது” என்று தைரியமாகச் சொன்னேன். கும்பகோணத்தில் +சீவகசிந்தாமணியை ஆராய்ந்து வந்தபோது இப்படி யாராவது +சொல்லியிருந்தால் நான் சிறிது அச்சமடைந்திருப்பேன். அஷ்டாவதானம் +சபாபதி முதலியாரோடு சம்பாஷித்த அந்தச் சமயத்திலோ நான் சிந்தாமணியின் +ஞாபகமாகவே இருந்தேன். யார் வந்து தடுத்தாலும் என் முயற்சியை நிறுத்திக் +கொள்ளாத உறுதி என்னிடம் இருந்தது. + + + +“நான் ஆரம்பித்திருக்கும் இந்த நல்ல காரியம் நன்றாக நிறை வேற +வேண்டுமென்று வாழ்த்துவதை விட்டு இப்படி அதைரியம் +உண்டாக்குகிறீர்களே!” + + + +“ஆரம்பித்தால் என்ன? இதற்கு முன் இந்த நூலைப் பதிப்பிக்கப் பலர் +ஆரம்பித்து அந்த ஆரம்பத்தோடே அது நின்றுவிட்டது. நானும் என் +ஆசிரியராகிய காஞ்சீபுரம் சபாபதி முதலியாரும் இதைப் பதிப்பிக்க +வேண்டுமென்று எண்ணிப் படிக்கத் தொடங்கினோம்; கஷ்டமென்று +தோற்றினமையால் நிறுத்திவிட்டோம். x பல வருஷங்களுக்குமுன், ட்ரூ +என்னும் பாதிரியார் (The Rev. W. H. Drew) ஒருவர் சிந்தாமணியைப் +பதிப்பிப்பதாக ஒரு திட்டம் +வகுத்து அந்த முறையை விளக்கி ஒரு விளம்பரம் வெளியிட்டார். அவர் அதை +நிறைவேற்ற முடியவில்லை. போப் துரை பிறகு முயன்றார். அவராலும் +இயலவில்லை. யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலருக்குக் கூடச் +சிந்தாமணியைப் பதிப்பிக்கும் எண்ணம் இருந்தது. திருச்சிற்றம்பலக் +கோவையாரின் முதற்பதிப்பில் ‘இனி வெளிவரும் நூல்கள்’ என்ற +விளம்பரத்தில் சிந்தாமணியின் பெயர் காணப்படுகிறது. என்ன காரணத்தாலோ +அவர் பதிப்பிக்க முற்படவில்லை. உங்கள் ஆசிரியராகிய மகாவித்துவான் +மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களும் சோடசாவதானம் சுப்பராய செட்டியாரும் +சேர்ந்து சிந்தாமணியைப் பதிப்பிக்கலாமென்று ஆலோசித்தார்களாம். பிறகு +அது பெரிய தொல்லை என்று நிறுத்தி விட்டார்களாம். இப்படி யார் +தொட்டாலும் நிறைவேறாத இந்த நூலை நீங்கள் பதிப்பிக்கத் +துணிந்தீர்களேயென்று அஞ்சுகிறேன்” என்று அந்தக் கிழவர் சொன்னார். + +-------- + +X The Printing of Chintamani was more than once projected. +About 20 years ago, the late Rev. W. H. Drew published a +prospectus with a specimen of the work; but his premature death +put an end to the great undertaking. -H. Bower in his Preface to +the edition of ‘Namagal Ilambakam’ + + + +ஆனால், அவருடைய வார்த்தைகளால் நான் சிறிதும் அதைரியம் +அடையவில்லை. “முன்பு அவர்கள் நிறைவேற்றவில்லை என்ற காரணத்துக்காக +நாம் நமது முயற்சியை நிறுத்திக்கொள்வதா? அவர்களெல்லாம் +முயன்றார்களென்ற செய்தியினாலே இந்த நூல் எப்படியாவது அச்சு வடிவத்தில் +வெளியாக வேண்டுமென்ற ஆவல் அவர்களுக்கு இருந்ததென்று +தெரியவில்லையா? அந்த விருப்பத்தை நிறைவேற்ற முயல்வது +மற்றவர்களுடைய கடமைதானே? என் முயற்சி தடைப்படினும் +குறைவொன்றுமில்லை. இறைவன் திருவருளால் இது பலித்தால் +தமிழன்பர்களுக்குச் சந்தோஷமுண்டாகாதா? ஏதோ என் சிற்றறிவுக்கு எட்டிய +வரையில் ஆராய்ந்து பதிப்பித்து வருகிறேன், குறைபாடுகள் இருப்பது இயல்பே. +அறிவுடையவர்கள் நாளடைவில் அவற்றைப் போக்கி விடுவார்கள்” என்று +உத்ஸாகத்தோடு கூறினேன். + + + +“நான் சொல்லுவதைச் சொல்லி விட்டேன். அப்பால் உங்கள் பிரியம்” +என்று அவர் அதிருப்தியோடே சம்பாஷணையை முடித்தார். நானும் விடை +பெற்று வந்தேன். + + + +‘ஏக்கழுத்தம்’ + + + +நாமகளிலம்பகம் 58-ஆம் செய்யுளில், “ஏத்தரு மயிற்குழா மிருந்த +போன்றவே” என்னும் அடிக்கு, ‘மேல் நோக்குதலைத் தருகின்ற மயிற்றிரள் +பொலிந்திருந்தனவற்றை யொத்த வென்க’ என்று நச்சினார்க்கினியர் உரை +யெழுதிவிட்டு, ‘ஏக்கழுத்தம் என்றார் பிறரும்’ என்று மேற்கோள் காட்டுகிறார். +அந்தச் செய்யுளும் உரையும் அச்சாகும்போது ‘ஏக்கழுத்தம்’ என்ற சொல் எங்கே +வந்துள்ளதென்று என் ஞாபகத்துக்கு வரவில்லை. அதை என் கைக் குறிப்புப் +புஸ்தகத்தில் எழுதி வைத்துக் கொண்டேன். திடீரென்று ஒருநாள் சிறுபஞ்ச +மூலத்தில் ஒரு பாடல் ஞாபகத்துக்கு வந்தது. + + + +“கல்லாதான் றான்காணு நுட்பமுங் காதிரண்டும் + +இல்லாதா னெக்கழுத்தஞ் செய்தலும்” + + + +என்பது அதன் முதற்பகுதி. அதில் வரும் எக்கழுத்தமென்ற +சொல்லுக்குத் தெளிவாகப் பொருள் விளங்கவில்லை. சிந்தாமணி உரையில் +வரும் மேற்கோள்கள் அவ்வளவும் என�� ஞாபகத்தில் இருந்தன. இந்தச் சிறு +பஞ்சமூலச் செய்யுட்பகுதி நினைவுக்கு வந்த போது முன்னே குறிப்பித்த +‘ஏக்கழுத்தம்’ என்ற மேற்கோளும் ஞாபகத்துக்கு வந்தது. “காது இரண்டும் +இல்லாதவன் தலை யெடுத்துப் பார்த்தலும்” என்று சிறுபஞ்ச மூலத்துக்குப் +பொருள் செய்யலாமோ வென்ற எண்ணம் உண்டாயிற்று. உடனே சிறுபஞ்ச +மூலத்தை எடுத்து வைத்துக் கொண்டேன். நல்லார்கள் கேட்பின் நகையை +உண்டாக்கும் செய்திகளைத் தொகுத்துக் கூறவந்த சிறுபஞ்ச மூல ஆசிரியர், +முதலில் கல்வியில்லாதவன் ஆராய்ச்சி செய்து காணும் நுட்பத்தைக் கூறிவிட்டு +அடுத்ததாக, “காதிரண்டும் இல்லாதா னேக்கழுத்தஞ் செய்தலும்” என்பதைக் +கூறுகிறார். நச்சினார்க்கினியர், ‘ஏக்கழுத்தம்’ என்னும் தொடரில் ஏ என்பதற்கு +மேல் நோக்குதல் என்று பொருள் செய்திருக்க வேண்டுமென்று தோன்றியது. +ஏக்கழுத்தமென்பதற்குக் கழுத்தை மேலே உயர்த்துதல் என்று பொருள் +செய்தால் சிறுபஞ்சமூலத்துக்குப் பொருள் விளக்கமாகும். + + + +ஒரு சங்கீத வினிகையைக் கேட்பதற்கு ஆடவரும் பெண்டிரும் +போயிருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் ஒருவன் செவிடு. சங்கீத வினிகை +நடைபெறுகையில் அவன் தலையைத் தூக்கி அசைக்கிறான். அவன் +செவிடென்று தெரிந்தவர்கள் சங்கீத இனிமையை மிக நன்றாக அனுபவிப்பதாக +அவன் காட்டிக்கொள்வதைப் பார்த்துச் சிரிக்க மாட்டார்களா? இந்தக் கருத்தை, +“காதிரண்டுமில்லாதா னேக்கழுத்தம் செய்தலும்” என்ற அடி +உணர்த்துகிறதென்று கண்டு கொண்டேன். சிறு பஞ்சமூலப் பதிப்பில் +எக்கழுத்தமென்ற பாடமே காணப்பட்டது. + + + +நீதிநெறி விளக்கத்தில், “ஏக்கழுத்த மிக்குடைய மாகொல், பகை முகத்த +வெள்வேலான் பார்வையில் தீட்டும், நகை முகத்த நன்கு மதிப்பு” (39) என்று +வீரச் சிறப்புடைய ஓர் அரசனது +பார்வையைக் குறிக்கிறார் குமரகுருபரர். அந்தச் செய்யுளிலும் +எக்கழுத்தமென்றே பதிப்பிக்கப் பெற்றிருந்தது. + +---------------- + +இல்லாதாளென்றும் பாடம் + + + +பிறகு சிந்தாமணியில் காந்தருவதத்தையாரிலம்பகத்தை ஆராய்ந்து +வருகையில் நாலாவது பாட்டில் “ஏக்கழுத்தம்” என்ற சொல்லே வந்தது. +அங்கே நச்சினார்க்கினியர் தெளிவாக, ‘ஏக்கழுத்தம்-தலையெடுப்பு’ என்று +உரை எழுதியிருக்கிறார். அதற்கு மேல் வேறு என்ன ஆதாரம் வேண்டும்? +சிறுபஞ்சமூலச் செய்யுளையும் நீதிநெறி விளக்கச் செய்��ுளையும் திருத்திக் +கொண்டேன். அப்போது சந்தோஷத்தால் எனக்குக் கூடச் சிறிது ‘ஏக்கழுத்தம்’ +உண்டாயிற்று. + + + +இந்தச் சந்தோஷம் தாங்க முடியாமல், “இன்றைக்கு ஒரு பதத்தின் +உண்மையான உருவத்தைக் கண்டு பிடித்தேன். நச்சினார்க்கினியர் +மகோபகாரியென்று எனக்கு வரவரத் தெரிகிறது” என்று சக்கரவர்த்தி +ராஜகோபாலாசாரியரிடம் சொன்னேன். + + + +“என்ன, அப்படி ஒரு புதிய தேசத்தைக் கண்டு பிடித்து விட்டீர்கள்?” +என்றார் அவர். + + + +“புதிய தேசத்தைக் கண்டுபிடித்தாற்கூட இவ்வளவு சந்தோஷமிராது” +என்று சொல்லி ஏக்கழுத்தத்தைப் பற்றிய கதையைச் சொன்னேன். அவர் +இந்தத் திருத்தத்தைத் தம் நண்பர்களாகிய சூளை அப்பன் செட்டியார் +முதலியவர்களிடம் தெரிவித்தார். கேட்டவர்கள் யாவரும் மிக மகிழ்ந்து +என்பால் வந்து என்னைப் பாராட்டினார்கள். இப்படியே உரையில் வரும் +செய்திகளை அறிந்து தெளிந்து பதிப்பிக்கும்போதும் மேற்கோள்களினால் +அறிந்த செய்திகளை வெளியிடும்போதும் வித்துவான்களெல்லாம் தங்கள் +தங்கள் சந்தோஷத்தைப் புலப்படுத்துவார்கள். அஷ்டாவதானம் சபாபதி +முதலியார் கூறிய வார்த்தைகளால் அதைரியம் அடையாமல் இருந்த எனக்கு +இந்தப் பாராட்டுக்கள் தைரியத்தை அளித்தன. “சிந்தாமணியைத் தெளிவாக +விளங்கும்படி பதிப்பிக்கப் போகிறோமோ இல்லையோ; பல காலமாக +விளங்காத விஷயங்கள் இம்மாதிரி சில விளங்கினாலும் போதும். அதையே +பெரிய லாபமாக எண்ணுவோமே” என்ற திருப்தியைப் பெற்றேன். + + + +பவர் துரையின் பிரதி + + + +கிறிஸ்டியன் காலேஜ் தமிழ்ப் பண்டிதரும், அஷ்டாவதானம் சபாபதி +முதலியார் மாணாக்கருமாகிய சின்னசாமி பிள்ளையென்பவரிடம் சிந்தாமணி +உரைப் பிரதியொன்று உள்ளதென்றும், இருபது பிரதிகளைப் பார்த்துச் +சோதித்து எழுதப்பட்டதென்றும் அது +சிந்தாமணி நாமகளிலம்பகம் அச்சிட்ட பவர் துரையினுடையதென்றும் சூளை +அப்பன் செட்டியார் என்னிடம் ஒருநாள் தெரிவித்தார். என் அன்பரும் +சின்னசாமி பிள்ளையின் உறவினருமாகிய தில்லைவிடங்கன் வெண்பாப்புலி +வேலுசாமி பிள்ளையுடன் சென்று அந்தத் தமிழ்ப் பண்டிதரைப் பார்த்தேன். +அவரிடமுள்ள சிந்தாமணிப் பிரதியைப் பார்த்து விட்டுத் தருவதாகச் +சொன்னேன். + + + +அவர் உள்ளே சென்று ஒரு பெரிய காகிதப் பிரதியை எடுத்துக் +கொண்டு வந்தார். உருவத்தில் அது மிகப் பெரியதாகவும் அ��காகவும் +இருந்தது. சின்னசாமிபிள்ளை, “இந்தப் பிரதி பவர் துரையால் சோதித்து +எழுதுவிக்கப்பட்டது. அவர் எனக்குப் பழக்கமானவர். ஊருக்குப் போகும்போது +தம்முடைய ஞாபகம் இருப்பதன் பொருட்டு இதை என்னிடம் கொடுத்துவிட்டுப் +போனார்” என்று சொல்லி என் கையில் அதனைக் கொடுத்தார். ‘இருபது +பிரதிகளைப் பார்த்துச் சோதிக்கப்பட்டதானால் எவ்வளவோ திருத்தமாக +இருக்கும். நமக்கு மிகவும் உபகாரமாகும்’ என்ற ஆவலோடு அதை வாங்கிக் +கொண்டு ஜாகைக்கு வந்தேன். + + + +உடனே அதை மிக்க வேகமாகப் புரட்டிப் பார்த்தேன். அதில் +பிழைகளே மிகுதியாக இருந்தன. திருத்தமில்லாத பிரதிகளில் காணப்படும் +பிழைகள் அவ்வளவும் அதில் காணப்பட்டன. திருத்தமில்லாத பிழைகள் +ஆயிரம் கிடைத்தாலும் திருத்தமான பிரதி ஒன்றுக்கு ஈடாகா என்பதை நான் +உணர்ந்தவன். பிழையுள்ள பிரதிகள் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகக் +கிடைக்கின்றனவோ அவ்வளவுக் கவ்வளவு உபயோகமில்லாத பாட பேதங்கள் +அதிகமாகிக் குழப்பமும் மிகுதியாகும். அளவற்ற பாட பேதங்களைக் காட்டி, +‘இவ்வளவு பிரதிகளைப் பார்த்தோம்’ என்பதைப் புலப் படுத்தலாமேயன்றி +விஷயத்தை விளக்கமாகத் தெரிந்து கொள்வது மிகவும் கடினம். அந்தக் கடிதப் +பிரதி எனக்குச் சிறிதும் பயன்படிவில்லை. + + + +தனிமையில் செய்த வேலை + + + +ஒவ்வொரு நாளும் அச்சுக்கூடத்திலிருந்து அச்சுப் பிரதிகளைத் +திருத்திக் கொடுப்பேன். எனக்குத் துணையாக ஒழிவுள்ள நேரங்களில் வந்து +சோடசாவதானம் சுப்பராய செட்டியாரும், ராஜ கோபாலசாரியரும், வேலுசாமி +பிள்ளையும் கையெழுத்துப் பிரதியைப் படிப்பது முதலிய உதவிகளைப் புரிந்து +வருவார்கள். மாலையானவுடன் அச்சுக்கூடத்திலிருந்து ‘புரூப்’களை எடுத்துக் +கொண்டு இராமசுவாமி முதலியார் பங்களாவுக்குச் செல்வேன். + + + + அங்கே எனக்காக விடப்பட்ட அறையில் வேண்டிய சாமான்களை +வைத்திருந்தேன். புறத்தே உள்ள தாழ்வாரத்தில் ஒரு விசுப்பலகை இருக்கும். +அதில்தான் ஒவ்வொரு நாளும் படுத்துக் கொள்வேன். அவ்விடத்திற்கு நேர் +மேலே ஒரு கண்ணாடி விளக்கு போடப் பட்டிருக்கும். இரவு நேரத்தில் அந்த +விளக்கு வெளிச்சத்தில் அச்சுக் கடிதங்களைத் திருத்துவேன் தனியாக இருந்து +கையெழுத்துப் பிரதியையும் ‘காலி புரூப்’ முதலியவற்றையும் நானே ஒப்பு +நோக்குவேன். பிறகு ஒரு முறை கூர்ந்து படி���்துத் திருத்தங்கள் செய்வேன். +பார்க்கிற வரையில் பார்த்து விட்டு அயர்ச்சி ஏற்பட்டால் அப்படியே படுத்துக் +கொள்வேன். இரண்டு மணிக்குத் திடீரென்று விழித்துக் கொண்டு மறுபடியும் +விடியும் வரையில் ‘புரூப்’ பார்ப்பேன். + + + +அந்தத் தனிமையில் எனக்குத் துணை செய்வார் ஒருவரும் இல்லை. +சற்றுத் தூரத்துக்கப்பால் பங்களாவுக்குக் காவலாக ஒரு நாய் +கட்டப்பட்டிருக்கும். இரண்டு கூர்க்கச் சிப்பாய்கள் தூங்காமல் காவல் +புரிவார்கள். அவர்களால் எனக்கு என்ன உதவி செய்ய முடியும்? ‘இந்த +இரவில் இப்படி உட்கார்ந்து கொண்டு பார்க்கிறாரே’ என்று அவர்கள் +ஆச்சரியப்பட்டிருக்கக் கூடும். + + + +பூண்டி அரங்கநாத முதலியார் + + + +இப்படி இருக்கையில் வெளியூர் சென்றிருந்த சேலம் இராமசுவாமி +முதலியார் திரும்பி வந்தார். சிந்தாமணியில் பதிப்பித்திருந்த பகுதிகளைக் +கண்டு அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. அவர் என்னை +அழைத்துச் சென்று சில கனவான்களுடைய பழக்கத்தைச் செய்வித்தார், ஒரு +நாள் காஸ்மொபாலிடன் கிளப்புக்குப் போனோம். அப்போது அங்கே பூண்டி +அரங்கநாத முதலியார் ‘பில்லியர்ட்ஸ்’ விளையாடிக் கொண்டிருந்தார். +விளையாடியபடியே அவர் என்னோடு பேசினார். நான் சொல்லிய தமிழ்ப் +பாடல்களைக் கேட்டு உவந்தார். அவரும் சில பாடல்களைச் சொன்னார். +மற்றொரு நாள் சிந்தாமணிக்கு அவரிடம் கையொப்பம் வாங்கலாமென்ற +எண்ணத்தோடு அவர் வீட்டிற்குச் சென்றேன். அப்போது + + + +கட்டளைக் கலித்துறை + +“நந்தாத வான்பொ ருளைப்புல வோர்க்கு நயந்தளிக்கும் + +சிந்தா மணியைப் பலரு மெளிதுறச் செய்திடுவாய் + +மந்தாரத் தோடெழிற் சந்தானம் போலிரு வான்பொருளை + +வந்தார்க் களித்திடு மால்ரங்க நாத மகிபதியே” + + + +என்ற பாடலைச் சொல்லிக் கையொப்பப் புஸ்தகத்தைக் கொடுத்தேன். +உடனே அவர் நூறு ரூபாய் தருவதாகச் சொல்லிக் கையொப்பம் இட்டார். +பிறகு, “இந்தப் புஸ்தகம் சில நாள் என்னிடத்தில் இருக்கட்டும். வேறு சிலரிடம் +சொல்லிக் கையொப்பமிடச் செய்கிறேன்” என்றார் அப்படியே பம்மல் +விஜயரங்க முதலியார், ராஜா ஸர் சவலை ராமசாமி முதலியார். சூளை சிங்கார +முதலியார் முதலிய கனவான்களின் கையொப்பங்களை அவர் வாங்கித் தந்தார். + + + +கும்பகோணம் வந்தது + + + +1886-ஆம் வருஷம் கோடை விடுமுறை முடிவு பெற்றது. சிந்தாமணியில் +பதினெட்டு பாரங்க��் (144 பக்கங்கள்) அச்சாகியிருந்தன. கும்பகோணம் +புறப்பட வேண்டியவனாதலின் பதிப்பு மேலே தொடர்ச்சியாக நடைபெற்று +வருவதற்குரிய ஏற்பாட்டைச் செய்தேன். “காலி புரூபை இங்கே நீங்களே +பார்த்துவிடலாம்; மேலே பேஜ் புரூபையும் பாரம் புரூபையும் +கும்பகோணத்துக்கு அனுப்புங்கள்” என்று சுப்பராய செட்டியாரிடத்திலும் ராஜ +கோபாலாச்சாரியரிடத்திலும் தெரிவித்துக் கொண்டேன் அவ்விருவர்களுக்கும் +உசிதமாகப் பொருளுதவி செய்ததுண்டு. அவர்கள் என் விருப்பத்தின்படியே +செய்வதாகச் சொல்லவே நான் விடை பெற்றுக் கொண்டேன். +சிந்தாமணிப்பதிப்பு நிறைவேறும் வரையில் உடனிருந்து பூர்த்தி செய்ய +வேண்டுமென்ற விருப்பம் எனக்கு இருப்பினும் காலேஜ் வேலையைப் பார்ப்பது +என் வாழ்வுக்கு ஆதாரமான கடமையாக இருந்தமையின் என் மனம் +முழுவதையும் சென்னையிலே வைத்துவிட்டுப் புகைவண்டியிலேறிக் +கும்பகோணம் வந்து சேர்ந்தேன். + +----------- + + + + + +97. பலவகைக் கவலைகள் + + + + +சென்னையிலிருந்து கும்பகோணத்திற்கு நான் வந்து சேர்ந்தவுடன் +என்னுடைய அன்பர்களெல்லாம் வந்து சீவகசிந்தாமணிப் பதிப்பை ஆரம்பித்த +சந்தோஷம் பற்றி விசாரித்தனர். அச்சிட்ட சில பாரங்களை நான் கையில் +கொண்டு வந்திருந்தேன். அவற்றைப் பார்த்த காலேஜ் உபாத்தியாயர்கள் +நன்றாயிருப்பதாகச் சொன்னார்கள். அப்போது காலேஜ் பிரின்ஸிபாலாக இருந்த +மிஸ்டர் பில்டர் பெக் துரை மூன்று பிரதிகள் வாங்கிக் கொள்வதாகக் +கையொப்பம் செய்தார். அவருக்குத் தமிழ் தெரியாவிட்டாலும் நல்ல காரியத்திற்குத் +தம்மால் இயன்ற உபகாரத்தைச் செய்ய வேண்டுமென்பதே அவர் கருத்து. +அவரிடம் நான் அச்சிட்ட பாரங்களைக் காட்டினேன். பதிப்பு முறை அழகாக +உள்ளதென்று கூறி. “சீக்கிரத்தில் இதை முடித்து விடுங்கள்” என்று +ஆதரவோடு சொன்னார். + + + +தேசிகர் வார்த்தைகள் + + + +அந்த வாரம் சனிக்கிழமை திருவாவடுதுறை சென்று சுப்பிரமணிய +தேசிகரைக் கண்டேன். அவருக்கு எவ்வளவு மகிழ்ச்சி உண்டாயிற்றோ அதை +அளவிட்டுச் சொல்ல முடியாது நான் கையில் கொண்டு சென்ற பாரங்களை +வாங்கித் திருப்பித் திருப்பிப் பார்த்தார். அதன் அமைப்பு முறையை நான் +எடுத்துச் சொன்னேன். அப்போது அருகில் இருந்த சிலரைப் பார்த்துத் +தேசிகர், “சாமிநாதையர் மடத்திலேயே இருந்தால் இந்த மாதிரியான சிறந்த +காரியங்களைச் செய���ய இடமுண்டா? நல்ல வஸ்துக்கள் தக்க இடத்தில் +இருந்தால் நன்றாகப் பிரகாசிக்கும்” என்றார். நான் இடைமறித்து, “இது மட்டும் +தக்க இடமன்றா? பிள்ளையவர்களும் அவர்களுக்கு முன் சிவஞான முனிவர் +முதலியவர்களும் இந்த ஆதீனத்தில் இருந்து தானே மிக்க புகழைப் +பெற்றனர்?” என்று விநயமாகச் சொன்னேன். + + + +“அது வேறு விஷயம்; இந்த ஆதீன சம்பந்தம் உங்களுக்கு விட்டுப் +போகவில்லையே! அதோடு வேறு ஒரு சிறப்பும் உண்டாயிற்று. இப்போது +சென்னைக்குப் போய் உங்கள் காரியத்தைத் திருத்தமாகச் செய்யத் தொடங்கி +விட்டீர்கள்” என்று அவர் சொன்னார். + + + +கும்பகோணத்திற்கு அடிக்கடி ‘புரூப்’ கள் சென்னையிலிருந்து வரும். +நான் காலேஜ் விட்டவுடன் வீட்டில் உட்கார்ந்து படித்துத் திருத்தம் செய்வேன். +கும்பகோணத்திற்கு மெயில் வண்டி பாதிராத்திரி நேரத்தில் வரும். அதற்குள் +திருத்திப் புரூபைக் கட்டி, நானே ரெயில்வே ஸ்டேஷனுக்குச் சென்று தபாலிற் +போட்டு வருவேன். + + + +சகாயம் செய்தோர் + + + +பக்தபுரி அக்கிரகாரத்தில் இருந்த என்னுடைய வீடு மிகவும் +சிறியதானமையால் பிரதிகளை வைத்துக்கொண்டு பலருடன் ஒப்பிடுவதற்கு +விசாலமான ஓர் இடத்தைத் திட்டம் செய்தேன். என் வீட்டிலிருந்து இரண்டு +வீட்டுக்கு அப்பால் இருந்த மாடி அது. மாதம் இரண்டரை ரூபாய் வாடகை. +அங்கே இருந்து பிரதிகளைப் பார்த்து ஒப்பிடுவதும், புரூப் பார்ப்பதுமாகிய காரியங்களைச் செய்து +வந்தேன். காலேஜ் பிள்ளைகளும் வேறு சிலரும் வந்து உதவி புரிந்தனர். +இப்போது பங்களூரில் இருக்கும் ஸ்ரீமான் திவான் பகதூர் ராஜஸபாபூஷண கே. +ஆர். ஸ்ரீநிவாசையங்கார் (நிர்வாக சபையின் முதல் அங்கத்தினராக +விளங்கியவர்) அக்காலத்தில் காலேஜில் படித்து வந்தார். அவர் மிக்க +அன்போடு வந்து சிந்தாமணி புரூபைத் திருத்தும்பொழுது துணை செய்வார். +மிகவும் நன்றாகப் படிப்பார். இப்படி என்பால் அன்பு பூண்டு உதவிய காலேஜ் +மாணாக்கர் பலர். எனக்குச் சகாயம் செய்வதற்கு மடத்திற் படிக்கும் +மாணாக்கர்களிற் சிலரை அனுப்ப வேண்டுமென்று ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரை +வேண்டினேன். அவர் வேம்பத்தூர்ச் சுந்தரேச பாரதியையும் *நல்ல குற்றாலம் +பிள்ளையென்பவரையும் அனுப்பினார். அவர்கள் ஏடு பார்த்து ஒப்பு +நோக்குதல் முதலிய உதவிகளைச் செய்து வந்தார்கள். கும்பகோணத்திற்கு +அருகிலுள்ள கொட்டையூரிலிருந்து ஸ்ரீநிவாசையங்கார் என்பவரும் என்னிடம் +பாடங் கேட்டு வந்ததுடன் பதிப்பிற்கு வேண்டிய உதவியையும் செய்தார். + + + +கோப்பாய் சபாபதிபிள்ளை + + + +ஒரு சமயம் வழக்கம்போல் நான் திருவாவடுதுறை சென்று சிந்தாமணி +புரூபையும் அடித்த பாரங்களையும் சுப்பிரமணிய தேசிகரிடம் காட்டினேன். +அப்போது கோப்பாயென்னும் ஊரினராகிய xசபாபதிபிள்ளையென்பவர் அங்கே +வந்திருந்தார். அவர் தமிழ்நூல்களில் நல்ல பயிற்சியுள்ளவர் நான் சிந்தாமணி +புரூப்களைக் காட்டும்போது அவரும் கவனித்தார். எனக்கு அவர் பழக்கம் +முன்பே உண்டு பிறகு அவர், “நானும் இந்தப் புஸ்தகத்தின் புரூபைப் பார்த்துத் +திருத்தித் தருகிறேன். அனுமதி செய்ய வேண்டும்” என்றார். அப்போது நான் +ஒன்றும் சொல்லாமல் மௌனமாக இருந்து விட்டேன். பிறகு தனியே +இருக்கும்போது சுப்பிரமணிய தேசிகர் என்னை நோக்கி, “கண்டபேரிடம் +இதைக் கொடுக்கக் கூடாது. நீங்கள் மிகவும் சிரமப்பட்டுச் செய்த திருத்தங் +களையெல்லாம் தாமே செய்தனவாகச் சொல்லிக்கொள்வதற்கு இடமேற்படும். +சபாபதிபிள்ளை விருப்பத்திற்கு இணங்க வேண்டாம்” என்று சொன்னார். நான் +அவர் கருத்தின்படியே இருந்தேன். + +-------------------------------------------- + +இவர் வேம்பத்தூர் ஆசு கவி சிலேடைப்புலி பிச்சுவையரின் இளைய +சகோதரர். இவர் காலமடைந்து சில வருஷங்களாயின. * இவர் ஆதி +குமரகுருபர சுவாமிகள் மரபினர் சபாபதி நாவலரென்றும் வழங்கப் பெறுவர். + + + + ஹிந்துவில் வந்த கடிதம் + + + +சுதேசமித்திரன் பத்திரிகையைத் தொடங்கி நடத்தி வந்த ஹிந்து +ஆசிரியர் ஸ்ரீ ஜி. சுப்பிரமணிய ஐயருடைய பழக்கம் சென்னையில் எனக்கு +உண்டாயிற்று. அவர் நான் சிந்தாமணியைப் பதிப்பித்து வருவதை யறிந்து +அந்த நூலைப்பற்றியும் நான் பதிப்பிப்பதைப் பற்றியும் ஒரு குறிப்பெழுதித் +தரச்சொல்லி அதனைத் தம் பத்திரிகையில் வெளியிட்டார். அன்றியும் +அவ்வப்போது இன்ன இன்ன பகுதி வரையில் அச்சாகியுள்ளதென்ற +செய்தியையும் தமிழ்ப் பத்திரிகையில் நான் வெளியிட்டு வந்தேன். ஹிந்து +பத்திரிகையிலும் அந்தச் செய்தி வெளிவரும். அவற்றைக் கண்டு எனக்குக் +கடிதம் எழுதிப் பல அன்பர்கள் பதிப்பைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினர். +தமிழ் நூல்களில் அன்புடையவர்களிடையே இந்தச் செய்தி ஒரு மகிழ்ச்சியை +உண்டாக்கிற்றென்றே தோற்றியது. எனக்குப் ப��க்கமில்லாதவர்கள் பலர் தங்கள் +தங்கள் சந்தோஷத்தைத் தெரிவித்தும் என்னைப் பாராட்டியும் எழுதினார்கள். +சிலர் அந்தப் பதிப்பில் சேர்த்துக் கொள்ளும்படி சிறப்புப் பாயிரங்கூட எழுதி +அனுப்பி விட்டார்கள். + + + +1886-ஆம் வருஷம் ஜூலை மாதத்தில் ஹிந்து பத்திரிகையில் ஒரு +கடிதம் வெளி வந்தது. அதில் ‘சாமிநாதையர் சிந்தாமணியை உரையுடன் +பதிப்பிப்பதாகத் தெரிகிறது. அது நச்சினார்க்கினியரது உரையாக இருந்தால் +தான் தமிழ் நாட்டினரால் ஏற்றுக் கொள்ளப்படும். சாமிநாதையர் உரையாக +இருந்தால் பயன்படாது!’ என்ற கருத்து இருந்தது. எழுதினவர் தம் பெயரை +வெளியிடாமல் புனைபெயர் பூண்டிருந்தார். அது வரையில் பாராட்டுக்களையே +கேட்டு வந்த எனக்கு அக்கடிதம் சிறிது வருத்தத்தை உண்டாக்கிற்று. +‘நச்சினார்க்கினியரது உரையோடு வெளியிடுவதாகத் தனிப் பிரசுரத்தால் +தெரிவித்திருப்பதோடு அவ்வப்போது பத்திரிகைகளிலும் அறிவித்து +வருகிறோம். அப்படியிருக்க ஒன்றும் தெரியாதவர்போல் இப்படி எழுதி +விட்டவர் ஏதோ கெட்ட நோக்கமுடையவராகத் தான் இருக்கவேண்டும்’ என்று +ஊகித்துக் கொண்டேன். என் ஊகம் சரியே என்று பிறகு தெரிய வந்தது. + + + +அந்தக் கடிதத்திற்குப் பதில் எழுதுவது அவசியமென்று நண்பர்கள் +வற்புறுத்தினார்கள். நானே எழுதுவதைவிட வேறு தக்க ஒருவரைக் கொண்டு +எழுதுவித்தல் நலமென்று தோற்றியபடியால் உடனே சென்னையிலிருந்த +இராமசுவாமி முதலியாருக்கு ஒரு கடிதம் எழுதித் தெரிவித்தேன். அவர் சிறிதும் +தாமதமின்றி, “சீவகசிந்தாமணி மிகப் பழைய காவியம். அதைப் பல +பிரதிகளைக் கொண்டு சோதித்து உழைத்து ஆராய்ந்து நச்சினார்க்கினியர் உரையுடனே தான் +சாமிநாதையர் பதிப்பித்து வருகிறார். அந்த நூல் வெளிவந்தால் தமிழ் +நாட்டுக்கு மிக்க உபகாரமாக இருக்கும்” என்னும் கருத்து அமையத் தம் +கையெழுத்திட்டு ஒரு கடிதம் எழுதி அதை ஹிந்து பத்திரிகையில் 5-8-1886 +ஆம் தேதியில் வெளிவரச் செய்தார். + + + +தாமோதரம் பிள்ளை + + + +கும்பகோணத்தில் இருந்து வந்த சி.வை. தாமோதரம் பிள்ளை பிறகு +புதுக்கோட்டையில் ஜட்ஜ் உத்தியோகம் பெற்று அங்கே சென்றார். +அங்கிருந்தபடியே இலக்கண விளக்கம், கலித்தொகை என்னும் இரண்டையும் +பதிப்பித்து வந்தார். சீவகசிந்தாமணிப் பிரதியை நான் வாங்கிக் +கொண்டதிலிருந்து அவருக்கு மனத்துள் சிறிது வர���த்தம் இருந்ததென்று +குறிப்பாகத் தெரிந்தது. தாமும் சிந்தாமணியைப் பதிப்பிக்கப் போவதாகச் +சிலரிடம் அவர் சொல்லிக் கொண்டிருந்தாரென்றும் தெரிந்தது. ‘யார் என்ன +செய்தாலும் சரி; நான் மேற்கொண்ட காரியத்தை இடையில் நிறுத்தப் +போவதில்லை!’ என்ற துணிவோடு சிந்தாமணிப் பதிப்பை நடத்தி வந்தேன். +அதில் ஈடுபட ஈடுபடச் சிலரால் நேரும் இடையூறுகளை அறவே மறந்துவிடும் +நிலை எனக்கு ஏற்பட்டது. + + + +அவ்வப்போது சில அன்பர்கள் இத்தனை பிரதிகள் எடுத்துக் +கொள்கிறோமென்றும், இத்தனை ரூபாய் அனுப்புகிறோமென்றும் தெரிவித்து +ஊக்கமளித்தனர். ஊற்று மலை ஜமீன்தாராகிய ஸ்ரீ ஹிருதயாலய மருதப்பத் +தேவர் தாம் நூறு ரூபாயனுப்புவதாக வாக்களித்தார். + + + +சென்னைப் பிரயாணம் + + + +கோடை விடுமுறைக்குப் பின் கும்பகோணத்திற்கு வந்த நான் +அங்கிருந்தபடியே பதிப்பை நடத்திக் கொண்டிருந்தாலும் எதிர்பார்த்தபடி +வேலை வேகமாக நடைபெறவில்லை. அடிக்கடி இராமசுவாமி முதலியார் கடிதம் +எழுதுவார். “நீங்கள் இங்கே வந்திருந்து நடத்தினால் வேலை துரிதமாக +நடைபெறும்” என்று அவர் ஒருசமயம் எழுதினார். ஆகையால் கிறிஸ்துமஸ் +விடுமுறையில் மீண்டும் சென்னைக்குச் செல்ல ஏற்பாடு செய்தேன். + + + +கேள்வியுற்ற செய்தி + + + +டிசம்பர் மாத இறுதியில் நான் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றேன். +அங்கே போனவுடன் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றில், +யாரோ ஒருவர் சிந்தாமணியைப் பதிப்பித்து +வருகிறாரென்று ஒரு விளம்பரம் வந்ததாகக் கேள்வியுற்றேன். +தங்கசாலைத் தெருவில் உள்ள ஸ்ரீ ஆறுமுக நாவலரது வித்தியாநுபாலன +அச்சியந்திர சாலையில் நாவலர் பதிப்புக்களைக் கவனித்து வந்த யாழ்ப்பாணம் +சதாசிவ பிள்ளை என்பரிடம் போய் விசாரித்தேன். அவர், “நாவலரையாவின் +மருகராகிய பொன்னம்பலம் பிள்ளையும் சீவகசிந்தாமணியைப் பதிப்பித்து +வருகிறாராம். இருபது பாரம் பதிப்பித்தாயினவாம். இதோ பாருங்கள்: இந்தப் +பத்திரிகையில் அறிவிப்பு” என்று அந்தப் பத்திரிகையையும் காட்டி, “ஒரே +நூலை இருவர் பதிப்பிப்பதில் என்ன லாபம்!” என்றும் சொன்னார். “அதனால் +என்ன?” என்று சொல்லி நான் வந்து விட்டேன். அது முதல் சிந்தாமணிப் +பதிப்பைப் பின்னும் செவ்வையாக நடத்த வேண்டுமென்று எண்ணி உழைத்து +வந்தேன். கிறிஸ்டியன் காலேஜில் தமிழ்ப் பண்டிதராக இருந்து வந்த +சுப்பராயலு நாயகரென்பர் புரூப் பார்த்து எனக்கு உதவி செய்து வந்தார். + + + +கும்பகோணம் காலேஜில் இருந்த ஸ்ரீ ஆர்.வி.ஸ்ரீனிவாசையர் சென்னை +ரெவின்யூ போர்டு ஆபீஸில் தக்க உத்தியோகம் பெற்று அப்போது +சென்னையில் இருந்தார். நான் அவர் வீட்டுக்குச் சென்று சில நாள் +தங்குவேன். அவர் என் பதிப்பு முயற்சிகளைக் கேள்வியுற்று மகிழ்ந்து ஊக்க +மூட்டுவார். பூண்டி அரங்கநாத முதலியாரையும் பார்த்து வருவேன். சேலம் +இராமசுவாமி முதலியாரை ஒவ்வொரு நாளும் கண்டு சல்லாபம் செய்து +மகிழ்வேன். + + + +கிராமவாசியின் தமிழன்பு + + + +ஒருநாள் அச்சுக்கூடத்தில் புரூப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒருவரும் +வராமையால் நானே தனியே இருந்து வாய் விட்டுப் படித்து வந்தேன். +கிறிஸ்துமஸ் சமயமாதலால் சென்னைக்கு வெளியூரிலிருந்து பலர் வேடிக்கை +பார்க்க வந்த ஜனங்கள் கூட்டம் கூட்டமாய்த் தெருவில் போய்க் +கொண்டிருந்தனர். நான் தெருவை நோக்கியிருந்த ஜன்னலுக்கருகே உட்கார்ந்து +படித்துக் கொண்டிருந்தேன். அப்போது யாரோ மெல்ல ஜன்னலண்டை வந்து +ஓரமாக நின்றார். நான் அவரைக் கவனிக்கவில்லை. நான் படிக்கப் படிக்க +அவர் நின்று கேட்டுக் கொண்டிருந்தார். அவரை நிமிர்ந்து பார்த்தேன். +அவருடைய சாதாரணமான தோற்றத்திலிருந்து அவரை ஒரு கிராமவாசி என்று +தெரிந்து கொண்டேன். கிறிஸ்துமஸ் வேடிக்கை பார்க்க வந்த அவர் நான் +படித்ததைக் கேட்டார். அந்தத் தமிழ் அவரை இழுத்தது. அதனாலே தான் +அங்கே வந்து நின்று கவனித்தார். அவர் பேசாமல் நின்று கொண்டிருந்ததைப் +பார்த்து நான், “எங்கே வந்தீர்கள்?” என்று கேட்டேன். + + + + “என்னவோ படிக்கிறீர்களே! கேட்க வந்தேன்” என்றார் அவர் +“அங்கே ஏன் நிற்கிறீர்கள்? உள்ளே வாருங்கள்” என்றேன். அவர் +வந்தார். “படிக்க வருமா?” என்று நான் வினவ, அவர் ‘படிப்பேன்” என்று +சொன்னார். + + + +உடனே நான் கையெழுத்துப் பிரதியை அவரிடம் கொடுத்துப் படிக்கச் +சொன்னேன். புரூபை நான் பார்த்துத் திருத்தி வந்தேன். அவர் படிக்கையில் +அதில் மனத்தைச் செலுத்திப் படித்தார். கிராமங்களில் தமிழ் வளம் +நிரம்பியிருப்பதை அவர் மூலமாக அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். + + + +ஒரு சமயம் என் நண்பராகிய தஞ்சை வக்கீல் கே. எஸ், ஸ்ரீனிவாச +பிள்ளை சென்னைக்குக் கிறிஸ்துமஸ் வேடிக்கை பார்க்க வந்த ஒருவர் முகமாக +���னக்கு, “நீங்கள் பதிப்பித்து வருகிற சிந்தாமணி அச்சுப் பாரங்களை +எப்படியாவது முயன்று தமக்கு அனுப்பி வர வேண்டுமென்றும், +அச்சுக்கூடத்தாருக்குப் பெருத்த தொகை கொடுப்பதாகவும், ஒருவர் சூழ்ச்சி +செய்கிறாராம். இதை நாகை நீலலோசனி பத்திராதிபராகிய சதாசிவம் பிள்ளை +தெரிவித்தார். நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” என்று சொல்லி +அனுப்பினார். அதைக் கேட்டவுன் எனக்கு மிக்க கவலை உண்டாயிற்று. +அச்சுக்கூடத் தலைவராகிய கோவிந்தாசாரியாரிடம் சொன்னேன். அவர் மிக்க +நல்லவர். “நீங்கள் இதுபற்றிச் சிறிதும் கவலைப்பட வேண்டாம். யாரோ +வேண்டுமென்று செய்யும் புரளி இது. இங்குள்ள வேலைக்காரர்கள் மிகவும் +நம்பிக்கையானவர்கள். இங்கே அச்சிடும் விஷயங்களை இரகசியமாகவே +வைத்திருப்பார்கள்” என்று அவர் தைரியம் சொன்னார். + + + +‘நல்ல காரியத்திற்கு எத்தனை விக்கினங்கள்?’ என்று எண்ணி இதை +இறைவன் திருவருளைத் துணையாகச் சிந்தித்துக் கொண்டு பதிப்பு வேலையைக் +கவனிக்கலானேன். + + + +பீப்பிள்ஸ் பார்க்கில் தீ + + + +ஒரு நாள் மாலை ஆறரை மணிக்கு அச்சுக்கூடத்தில் நான் புரூப் +பார்த்துக் கொண்டிருந்தபோது கோவிந்தாசாரியார் மிகவும் கலக்கமடைந்த +முகத்தோடு என்னிடம் வந்தார். “என்னாங்க! சமாசாரம் கேள்விப்பட்டீங்களா?“ +என்று கேட்டார். “என்ன?” என்று நான் வேகமாக விசாரித்தேன். + + + +“தீப்பிடித்து விட்டுதுங்களாம்” என்று சொல்லி மேலே பேசாமல் +நிறுத்தினார். எனக்குப் பகீரென்றது. எப்போதும் சிந்தாமணி +யைப் பற்றிய விசாரத்திலே மூழ்கியிருந்த எனக்கு, “சிந்தாமணியில் +அச்சிட்ட பாரங்களுக்குத்தான் அபாயம் வந்து விட்டதோ” என்று பயந்து, +“எங்கே? எங்கே?” என்று பரபரப்போடு விசாரித்தேன். + + + +“ஐயோ! பார்க்கு வேடிக்கைக்குப் போட்டிருந்த பெரிய கொட்டகையில் +தீப் பிடித்துக் கொண்டதாம். பல பேர் சேதம். தீயை அணைக்க முடியவில்லை. +குழந்தைகளும், பெண்களும், சிறுவர்களும், கிழவர்களும் தீயில் அகப்பட்டுத் +தீய்ந்து போய்விட்டார்கள்” என்று சொல்லிக் கண்ணீர் விட்டார். உடனே +புரூப்களை அப்படியே வைத்து விட்டு அவருடன் அங்கே போய்ப் பார்த்தேன். +என்ன பரிதாபமான காட்சி! கண்ணாற் பார்க்கச் சகிக்கவில்லை. உடல் +முழுவதும் வெந்தும் உயிர் போகாமல் துடித்துக் கொண்டும் கை வெந்தும் கால் +தீய்ந்தும் போன பல ஜனங்க���ைப் பார்த்தேன். வெளியூர்களிலிருந்து +ஆயிரக்கணக்கான ஜனங்கள் வந்திருந்தனர். அவர்களிற் பலர் இந்த விபத்திற் +சிக்கி உயிரை இழந்தனர். + + + +என் பெற்றோர்களின் கவலை + + + +இந்தச் செய்தி பத்திரிகை வாயிலாக வெளியூர்களில் எங்கும் பரவவே +அங்கங்கேயுள்ளவர்கள் தங்கள் தங்களைச் சேர்ந்தவர்கள் என்ன ஆயினரோ +என்று திடுக்கிட்டு விசாரிக்கத் தொடங்கினர். தந்திகள் பறந்தன. கடிதங்கள் +குவிந்தன. இந்த விஷயம் தெரிந்தால் என் தாய் தந்தையர்கள் மிகவும் +கவலைப்படுவார்களென்று நான் எண்ணி மறுநாள் காலையிலேயே ஒரு கார்டு +எழுதி என் தகப்பனாருக்கு அனுப்பினேன். அதில் விசேஷ மொன்றுமில்லை. +“. . . . ஊட்டு மறுத்துப்போன பசுமாட்டை ஊருக்கு அனுப்பினது நல்லதுதான். +நான் பார்க் வேடிக்கை பார்க்கப் போகவில்லை. பதிப்பு வேலையைக் +கவனித்துக்கொண்டு சௌக்கியமாக இருந்து வருகிறேன்” என்று எழுதினேன். +என் சௌக்கியத்தைப் பற்றித் தெரிவித்ததுதான் முக்கியம். + + + +அதற்குள் என் பெற்றோர்கள் மிக்க கவலையில் ஆழ்ந்து ஒன்றும் +தெரியாமல் திகைத்திருந்தார்கள். அவர்களுடைய துயரத்தை அறிந்த சாது +சேஷையர் அவர்களைத் தேற்றினார். கும்பகோணத்துக்கு இரவில் வரும் +தபால்களை விடிந்த பிறகுதான் உடைத்துப் பார்த்துப் பிரித்து +எட்டுமணியளவுக்கு எல்லோருக்கும் கொடுப்பார்கள். அதுவரையில் +காத்திருக்கச் சேஷையரால் முடியவில்லை. மெயில் வந்தவுடன் அவர் தபால் +நிலையத்துக்குப் போய்ப் போஸ்டு மாஸ்டரிடம், “உடனே தபால் கட்டைப் +பிரித்துப் பாருங்கள்” என்றார். அவர் வழக்கத்துக்கு விரோதமாகச் +செய்யக் கூடாதென்று சொல்லவே சேஷையருக்கு மிக்க கோபம் வந்து +விட்டது. “என்ன ஐயா வழக்கம்! ஆபத்துக் காலங்களில் விதி விலக்கு +இல்லையா? எல்லோரும் எப்போது தபால் வருமென்று கவலையோடு ராத்திரி +முழுவதும் தூங்காமல் காத்திருக்கிறார்கள். நீர் ரூல் பேசுகிறீரே! நீர் இப்போது +இந்தக் கட்டை உடைத்துக் கடிதங்களை அவரவர்களுக்குக் கொடாவிட்டால் +நான் மேலதிகாரிக்கு எழுதுவேன்” என்று கண்டிப்பாகச் சொன்னார். மிக்க +செல்வாக்குள்ள அவர் சொல்லவே, போஸ்டு மாஸ்டர் தபாற் கட்டைப் +பிரித்தார். என் தகப்பனார் விலாசத்துக்கு வந்த கார்டை வாங்கி உடனிருந்த +என் தகப்பனாருக்குக் காட்டினார். வேறு பலரும் தங்களுக்கு வந்த +கடிதங்களைப் பெற்றுச் சென்றனர். என் கார்டைப் பார்த்த பிறகே என் +தந்தையாருக்கு உயிர் வந்தது. + +------------ + + + + + +98. புதிய ஊக்கம் + + + +கிறிஸ்துமஸ் விடுமுறையில் சென்னைக்குச் சென்று சிந்தாமணிப் +பதிப்பை நடத்தி வந்தபோது ஒருநாள் தனியே ‘புரூப்’ பார்த்து விட்டு +மாலையில் அச்சுக்கூடத்தின் வெளிப்புறத்தில் உள்ள குறட்டில் மிக்க +தளர்ச்சியோடு உலாவிக் கொண்டிருந்தேன். + + + +‘கிருஷ்ண தரிசனம்’ + + + +அப்போது கருடத்வனி கேட்டது. மேலே பார்த்தேன். ஒரு கருடப் +பறவை வட்டமிட்டுக் கொண்டிருந்தது. அதைத் தரிசனம் செய்து என் +பார்வையைக் கீழே செலுத்தினேன். எதிரே திருமானூர் அ.கிருஷ்ணையர் வந்து +நின்றார். நான் ஆச்சரியத்தால் ஒன்றுந் தோன்றாமல் நின்றேன். “ஐயா, +ஆகாயத்திலும் கிருஷ்ணதரிசனம், பூமியிலும் கிருஷ்ண தரிசனம்” என்று +மகிழ்ச்சியுடன் சொல்லிவிட்டு, “என்ன விசேஷம்? விடுமுறை முடியும் காலத்தில் +இங்கே வந்தீர்களே!” என்று வினாவினேன். + + + +“வேலூர் மஹந்து பள்ளிக்கூட வேலையிலிருந்து இப்போது நீங்கி +விட்டேன். தாங்கள் இவ்வூருக்கு வந்திருப்பது தெரிந்தது. அதனால் இங்கு +வந்தேன்: தங்களைக் கண்டு இனி நான் செய்ய வேண்டியது இன்னதென்று +தெரிந்து அந்தப்படி நடக்கலாமென்று வந்திருக்கிறேன்” என்றார். + + + + அந்த வார்த்தைகளைக் கேட்டபோது எதிர்பாராத பெரிய லாபம் +கிடைத்தது போல எனக்குத் தோற்றியது. “வேலையை விட்டதைப் பற்றிக் +கவலை வேண்டாம். இப்போது நடந்து வரும் சிந்தாமணிப் பதிப்பிற்கு +உங்களைப் போன்ற அன்பர் ஒருவருடைய உதவி இன்றியமையாதது. +ஆகையால் நீங்கள் இங்கேயே இருந்து இதைக் கவனித்துக் கொள்ளலாம். +புஸ்தகங்களையும் கையெழுத்துப் பிரதிகளையும் ஜாக்கிரதையாக நீங்கள் +பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று, சொல்லவே அவர் மிக்க மகிழ்ச்சியுடன் +உடன்பட்டார். சிந்தாமணி சம்பந்தமான சில வேலைகளை அவரிடம் +ஒப்பித்துவிட்டுக் கவலை இல்லாமல் நான் கும்பகோணம் வந்து சேர்ந்தேன். + + + +பெற்றோர் அடைந்த ஆறுதல் + + + +என் கடிதத்தால் ஆறுதல் உற்றிருந்தாலும் என்னை நேரே கண்ட +பிறகுதான் என் பெற்றோர் முழு ஆறுதலை அடைந்தார்கள். “சௌக்கியமாக +வந்தாயா?” என்று ஆவலோடு என் தாயார் என்னை எதிர்கொண்டபோது +அவருடைய தொனியாலே எவ்வளவு தூரம் அவர் கவலையுற்றிருக்கக் கூடும் +என்பதை உணர்ந்தேன். “புஸ்தகம் பூர்த்தியாக இன்னும் நாளாகும் +போ��ிருக்கிறது” என்று என் தந்தையாரிடம் சொன்னேன். “எவ்வளவு +நாளானாலும் ஆகட்டும். பாதகமில்லை. நீ ஜாக்கிரதையாகத் திரும்பி வந்தாயே +அதுவே போதும்” என்று சொல்லித் தமக்கிருந்த கவலையைக் குறிப்பால் +தெரிவித்தார். + + + +வேறு பதிப்பு + + + +திருவாவடுதுறையிலிருந்து சுப்பிரமணிய தேசிகர் ஒருநாள் எனக்கு, +“யாழ்ப்பாணத்திலுள்ள பொன்னையா என்பவர் சிந்தாமணியை +நச்சினார்க்கினியருரையோடு பதிப்பித்து வருவதாகவும், அது முடிந்தவுடன் +அனுப்புவதாகவும் தெரிவித்திருக்கிறார். சி.வை.தாமோதரம் பிள்ளை +மடத்திலிருக்கும் சிந்தாமணிப் பிரதி வேண்டுமென்று கேட்டுக் +கொண்டமையால் கல்லிடைக் குற்ச்சியிலிருந்த சின்னப் பண்டாரத்தின் பிரதியை +வருவித்து அனுப்பியிருக்கிறோம்” என்று ஒருவர் முகமாகச் சொல்லி +அனுப்பினார். + + + +என் உறுதி + + + +சிந்தாமணிப் பதிப்பில் எனக்கு இருந்த பற்று வரவர வன்மையுற்றது. +எப்படியாது பதிப்பை நிறைவேற்றி விடுவதென்று உறுதி கொண்டேன். நீண்ட +விடுமுறைகளில் சென்னைக்குச் செல்லும் வழக்கத்தை மேற்கொண்டிருந்த நான், அது +முதல் ஒரு வாரம் ஓய்வு கிடைத்தாலும் அப்பொழுது அந்நகருக்குச் சென்று +கவனிக்க வேண்டியவற்றைக் கவனித்து வருவேன். + + + +1887-ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் கோடை விடுமுறைக்குச் சென்னை +சென்றேன். திருமானூர்க் கிருஷ்ணையர் மிகவும் நம்பிக்கையாகவும், +ஒழுங்காகவும் தம் கடமையைச் செய்து வந்தார். அவருக்கு மாதம் பதினைந்து +ரூபாய் வீதமே நான் கொடுத்தேன். அதை வைத்துக்கொண்டு சென்னையில் +அவர் ஜாக்கிரதையாகக் குடும்பத்தோடு இருந்து காலக்ஷேபம் செய்து வந்தார். +சமய சஞ்சீவியாக வந்து என்னுடன் இருந்து அவர் செய்த உதவிகளை நான் +என்றும் மறக்க இயலாது. + + + +‘புதையல்கள்’ + + + +சிந்தாமணியில் ஆறாவது இலம்பகமாகிய கேமசரியாரிலம்பகம் வரையில் +அச்சாகியிருந்தது. மேற்கொண்டு நடக்க வேண்டிய பகுதிகளை என்ன என்ன +விதங்களில் செவ்வைப்படுத்தலாமென்பதையே யோசித்துக் கொண்டிருந்தேன். +நச்சினார்க்கினியர் உரையில் வரும் மேற்கோள்களுக்குரிய ஆகரங்களை +அடிக்குறிப்பில் எடுத்துக் காட்டி வந்தேன். ஆனால் எல்லா +மேற்கோள்களுக்கும் இடம் அகப்படவில்லை. இன்னும் முயன்று பார்த்தால் +பலவற்றின் ஆகரங்களைக் கண்டு பிடிக்கலாமென்ற நினைவினால் என்பாலுள்ள +பழஞ் சுவடிகளைப் பார்க்கத�� தொடங்கினேன். + + + +ஒருநாள் இரவு என்னிடமிருந்த ஏடுகளில் ஒன்றை எடுத்துப் படித்தேன் +முதலும் ஈறும் இல்லாதது அது. பொருநராற்றுப்படை என்ற பெயர் +முதலேட்டிலிருந்தது. பிள்ளையவர்கள் பிரதியாகிய அதைப் படித்து வருகையில் +சிந்தாமணி உரையில் வந்திருந்த மேற்கோள்கள் காணப்பட்டன. “அடடா! +இதை இதுகாறும் ஊன்றிக் கவனிக்கவில்லையே!” என்று வருந்தி மேலும் +படித்து வந்தேன். பொருநராற்றுப் படைக்குப் பின் சிறுபாணாற்றுப்படை +இருந்தது. பிறகு பெரும்பாணாற்றுப் படையும், முல்லைப் பாட்டும், மதுரைக் +காஞ்சியும் இருந்தன. உரையுடன் உள்ள அந்தப் பிரதியைப் படித்து +வருகையில், “முருகு பொருநாறு” என்ற தனிப்பாட்டு ஒன்று நினைவுக்கு +வந்தது. அதுகாறும் அந்தச் சுவடி பத்துப் பாட்டென்று தெரியாது. ஊன்றிக் +கவனியாததால் வந்த குறை அது. அது பத்துப்பாட்டென்பதை அப்போதுதான் +உணர்ந்து கொண்டேன். படிக்கப் படிக்கச் சிந்தாமணி உரையில் +வரும் மேற்கோள்கள் பல அகப்பட்டன. நான் படிக்கும்போது என் +மனம் அந்தப்பாட்டுக்களின் பொருளிலே முற்றும் செல்லவில்லை. சிந்தாமணி +உரையில் வரும் மேற்கோள்கள் அவ்வளவும் என் ஞாபகத்தில் இருந்தன. +ஆதலின் எங்கேயாவது எந்த மேற்கோளாவது கிடைக்குமோவென்று நாடிப் +படித்தேன். என் உழைப்பு வீண் போகவில்லை. அச்சுக்கூடத்தில் தனி +அறையிலிருந்து அந்தப் பழைய ஏட்டுச்சுவடியைப் பார்க்கத் தொடங்கியபோது +இரவு மணி எட்டு இருக்கும். அப்போது என்னுடன் கிருஷ்ணையரும் +இருந்தார். ஒன்பது மணியானவுடன் அவர் படுத்துத் தூங்கி விட்டார். +பொருநராற்றுப் படையையும், சிறுபாணாற்றுப்படையையும், முல்லைப் +பாட்டையும் காணக்காண எனக்குப் புதிய ஊக்கம் உண்டாயிற்று. நேரம் +போனதே தெரியவில்லை. மதுரைக் காஞ்சிவரையில் தான் பிரதியில் இருந்தது. +அதை முடித்துவிட்டுப் பார்த்தேன். விடியற்காலை, மணி ஐந்துக்கு +மேலாகியிருந்தது! பிறகும் எனக்குத் தூக்கம் வரவில்லை. அப்போது நான் +கண்டு பிடித்த விஷயங்களை நினைந்து நினைந்து மகிழ்ந்தேன். + + + +கிருஷ்ணையர் விழித்துக்கொண்டார். “என்ன இது! இராத்திரி முழுவதும் +தூங்கவில்லையா என்ன?” என்று கேட்டார். “தூங்குவதா? இந்த ஓர் இரவில் +எனக்கு எத்தனை புதையல்கள் கிடைத்தன தெரியுமா?” என்று பெருமிதத்தோடு +சொன்னேன். அவருக்கு விஷயம் விளங்கவில்லை. “நான் பத்துப் பாட்டைக் +கண்டு பிடித்தேன். அதற்கு மேல் சிந்தாமணியின் உரையில்வரும் +உதாரணங்கள் பலவற்றைக் கண்டு பிடித்தேன்” என்று சொன்னேன். “எல்லாம் +சிவகிருபை!” என்றார் அவர். + + + +புறநானூறு + + + +அன்று முதல் என்னிடமிருந்த எட்டுத் தொகைச் சுவடிகளையெல்லாம் +ஏடு ஏடாக வரி வரியாக எழுத்தெழுத்தாக ஆராயலானேன். ஆதியும் +அந்தமும் இல்லாத மற்றொரு நூலை எடுத்தேன். பிரித்துப் பார்த்தேன். +“கொற்றுறைக் குற்றில” என்னும் பகுதி கண்ணிற்பட்டது. உடனே +வியப்புற்றேன். அதே தொடரை நச்சினார்க்கினியர் சிந்தாமணி உரையில் +மேற்கோள் காட்டியிருக்கிறார். ஆனால் அவர் தம் வழக்கத்தை விடாமல், +‘என்றார் பிறரும்’ என்றே எழுதியிருக்கிறார். பழைய நூலென்று +தெரிந்ததேயொழிய இன்ன நூலென்று தெளிவாகவில்லை. அந்தப் பிரதி +மூலமும் உரையுமாக இருந்தது. அந்தப் பாடலின் இறுதியில் 95 என்ற எண் +காணப்பட்டது. என் கையில் நற்றிணை முதலியவற்றின் மூலம் மட்டும் +அடங்கிய கையெழுத்துப் பிரதி வேறு இருந்தமையால் அதை 9 +எடுத்து ஒவ்வொரு நூலிலும் 95 என்ற எண்ணுள்ள பாடலை எடுத்துப் +பார்த்தேன். அப்படிப் பார்த்தபோது நான் பார்த்த சுவடி புறநானூற்று உரைப் +பிரதியென்று தெரியவந்தது. ஆகவே அந்தச் சுவடியிலிருந்து +கிடைத்தவற்றையெல்லாம் புறநானூறென்ற தலைப்பிட்டு எழுதிக் கொண்டேன். +மற்ற ஏடுகளையும் படித்தேன். தொடர்ந்து திருக்கோவையாரையும், பதினெண் +கீழ்க் கணக்கையும் அழுத்தமாக வாசித்துப் பல மேற்கோள்களைத் தெரிந்து +கொண்டேன். கேமசரியார் இலம்பகத்துக்கு மேல் பதிப்பித்த பகுதிகளில் அடிக் +குறிப்பில் அந்த மேற்கோள்களைப் புலப்படுத்தினேன். நச்சினார்க்கினியர் +மேற்கோள் காட்டும் பழைய நூற்பகுதிகளை இன்னநூலிலுள்ளன வென்று +காட்டுவதோடு அவர் காட்டிய பகுதிக்கு முன்னும் பின்னும் சில அடிகளையும் +சேர்த்துப் பதிப்பித்தேன். வெறும் நூற் பெயரை மாத்திரம் காட்டுவதைவிட +இப்படிக் காட்டினால் அந்நூல்களின் பெருமையும் அவற்றின் நடையும் நன்றாக +வெளிப்படுமென்பது என் கருத்து. சில இடங்களில் புறநானூற்றுப் பாடல் +முழுவதையுமே அடிக் குறிப்பில் அமைத்தேன். சேர்க்க முடியாத +மேற்கோள்களைப் புஸ்தகத்திற்குப் பின்பு சேர்த்து அச்சிடலாமென்ற +எண்ணத்தோடு தனியே எழுதி வைத்துக் கொண்டேன். + + + +விடுமுறை முடிந்தவுடன் என்றும் இல்லாத ஊக்கத்தோடு கும்பகோணம் +வந்தேன். புதிய விஷயங்களைக் கண்டு பிடித்ததைப் பற்றி +நண்பர்களிடமெல்லாம் சொல்லி என் சந்தோஷத்தைப் புலப்படுத்திக் +கொண்டேன். அப்போது கும்பகோணம் நேடிவ் ஹைஸ்கூலில் தமிழ்ப் +பண்டிதராக இருந்த குடவாயில் ஐ.சண்முகம்பிள்ளை என்பவர் என்னிடம் சில +நூல்களைப் பாடங் கேட்டு வந்தார்; சிறந்த புத்திமான்; அழுத்தமான +ஞானமுள்ளவர். அவர் இந்த விஷயங்களை எல்லாம் கேட்டு மிகவும் +இன்புற்றார். + + + +சிந்தாமணியை விரைவில் முடிக்க வேண்டுமென்று இரவும் பகலுமாக +உழைத்து வந்தேன். அதன் இறுதிப் பகுதியாகிய முத்தியிலம்பகத்தில் ஜைன +மத சம்பந்தமான பல செய்திகள் உள்ளன. அவற்றை அப்பொழுதப்பொழுது +வீடூர் அப்பாசாமி நயினாரிடத்தும் கும்பகோணம் சந்திரநாத செட்டியாரிடத்தும் +கேட்டுத் தெரிந்து குறிப்பெடுத்துக் கொண்டேன். சிந்தாமணிப் பதிப்பில் +அடிக்குறிப்பாக எனக்குத் தெரிந்த அந்த விஷயங்களை விளக்கினேன். + + + +தம்பியின் கலியாணம் + + + +சிந்தாமணி முற்றுப்பெறும் நிலையில் இருந்தது. ஸர்வஜித்து வருஷம் +ஆனி மாதம் என் தம்பியாகிய சிரஞ்சீவி சுந்தரேசையருக் +கும் கும்பகோணம் பக்தபுரி அக்கிரகாரத்தில் வக்கீலாக இருந்த +என்.வேங்கடராமையருடைய குமாரியும், ராவ்பகதூர் கே. வி. கிருஷ்ணசாமி +ஐயருடைய தமக்கையுமான ஸ்ரீ மங்களாம்பிகைக்கும் கல்யாணம் நடைபெற்றது. +எனக்குப் பழக்கமுள்ள ஜைன நண்பர்கள், “சிந்தாமணியை ‘மண நூல்’ என்று +சொல்லுவது வழக்கம். அதனை நீங்கள் பதிப்பித்து வருகிறீர்கள். அதனுடைய +பயனாக உங்கள் குடும்பத்தில் ஒரு திருமணம் நிகழ்ந்தது” என்று சொல்லித் +தம் திருப்தியை வெளியிட்டனர். + +--------------- + + + + + + 99. மகிழ்ச்சியும் வருத்தமும் + + + +சீவகசிந்தாமணி அச்சில் இருந்தாலும் வேறு ஏட்டுச்சுவடிகள் +கிடைத்தால் ஒப்பிட்டுப் பார்க்கலாமென்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஸ்ரீ +சுப்பிரமணிய தேசிகருடைய உதவியால் எனக்குக் கிடைத்த ஏடுகளுள் +திருநெல்வேலிப் பக்கத்துப் பிரதிகள் திருத்தமாக இருந்தன. அவர் +திருநெல்வேலியில் யாத்திரை செய்த காலத்தில் அங்கங்கே உள்ள பரம்பரைத் +தமிழ்ப் புலவர்கள் பலர் அவரைத் தரிசிக்க வந்ததை நான் +கவனித்திருக்கிறேன். அவர்களுடைய பழக்கமும் எனக்கு உண்டாயிற்று. +அவர்களிடம் நூற்றுக்கணக்கான தமிழ் நூற்சுவடிகள் உள்ளனவென்றும் +அவர்க��் அவைகளை நன்றாகப் பாதுகாத்து வைத்துள்ளார்களென்றும் நான் +கேள்வியுற்றிருந்தேன். அவ்விடங்களுக்கு நேரிற் சென்று ஏட்டுச் சுவடிகளைக் +கவனித்துப் பார்த்தால் சீவகசிந்தாமணிப் பிரதிகள் கிடைக்கலாமென்ற +நம்பிக்கை எனக்கு இருந்தது. ஆகவே ஒரு சமயம் ஏடு தேடும் யாத்திரையை +மேற்கொண்டேன். + + + +திருநெல்வேலிப் பிரயாணம் + + + +ஒரு நல்ல நாளிற் புறப்பட்டு நேரே திருநெல்வேலி சென்றேன். அங்கே +சிலரைப் பார்த்து விட்டுத் திருக்குற்றாலத்துக்குப் போகும் வழியிலுள்ள +மேலகரத்துக்குப் போனேன். சுப்பிரமணிய தேசிகர் உதித்தது அவ்வூரே. +அங்கே அவருடைய இளைய சகோதரராகிய திரிகூட ராசப்பக் கவிராயர் +இருந்தார். அவருடைய வீட்டிலுள்ள பழைய ஏடுகளைப் பார்த்ததில் +சிந்தாமணிப் பிரதியொன்றும் கிடைக்கவில்லை. அங்கிருந்து திருக்குற்றாலம் +சென்று திரிகூடா சலபதியைத் தரிசித்துக்கொண்டு செங் +கோட்டைக்குப் போனேன். அவ்வூரில் கவிராச பண்டாரம் என்ற +புலவர் பெருமானுடைய பரம்பரையினர் வாழ்ந்து வந்தனர் அவருடைய +வீட்டுக்குச் சென்று அவரைப் பழக்கம் செய்து கொண்டு, அவ்வீட்டிலுள்ள +ஏடுகளைத் தேடிப் பார்த்தேன் எவ்வளவோ பிரபந்தங்களும் புராணங்களும் +இருந்தன. சிந்தாமணியில் சில பகுதிகள் மட்டும் கிடைத்தன. பிறகு அதன் +அருகிலுள்ள கிருஷ்ணாபுரம், கடையநல்லூர் என்னும் ஊர்களுக்குச் சென்று +அங்கிருந்த கவிராயர்கள் வீடுகளில் ஏடுகளைக் கவனித்தபோது அங்கும் +சிந்தாமணியின் சில பகுதிகளே கிடைத்தன. அச்சமயம் சேற்றூர்ச் +சுப்பிரமணியக் கவிராயர், திருநெல்வேலி கால்ட்வெல் காலேஜில் தமிழ்ப் +பண்டிதராக இருந்த குமாரசாமி பிள்ளையினுடைய சிந்தாமணிக் கையெழுத்துப் +பிரதியை வாங்கிக் கொடுத்தார். முற்றும் இருந்தது அது தூத்துக்குடி +வீரபாண்டிய கவிராயரென்பவரது பிரதியைப் பார்த்து எழுதியது; திருத்தமாக +இருந்தமையால் எனக்கு மிகவும் பயன்பட்டது. + + + +செங்கோட்டைக் கனவான் + + + +செங்கோட்டையில் சிந்தாமணிக்காக முன்னமே கையொப்பம் +செய்திருந்த ஒரு கனவான் இருந்தார். என்னுடன் வந்தவர் கையொப்பப் +பணத்தை அவரிடம் கேட்கப் போன போது அவர், “இவர் பதிப்பு எனக்கு +வேண்டாம். இவர் பிழையாகவல்லவா பதிப்பிக்கிறார்? நான் வேறு ஒருவர் +பதிப்பிக்கும் சுத்தப் பதிப்பையே வாங்கிக் கொள்ளப் போகிறேன்” என்றாராம். +இவ்வி���யம் எனக்குத் தெரிந்தபோது என் பதிப்புக்கு விரோதமான புரளிகள் +செங்கோட்டையிலும் பரவியிருத்தலை உணர்ந்து வருந்தினேன். “ஏடு தேடியது +போதும்; இனி விரைவில் புஸ்தகப் பதிப்பை நிறைவேற்ற வேண்டும்” என்று +உடனே புறப்பட்டுக் கும்பகோணம் வந்து சேர்ந்தேன். + + + +அஷ்டாவதானம் சபாபதி முதலியார் பாராட்டு + + + +அந்த எண்ணத்தால் அது முதல் காலேஜில் இரண்டு நாட்கள் +சேர்ந்தாற்போல் ஓய்வு கிடைத்தாலும் சென்னைக்குச் சென்று சிந்தாமணிப் +பதிப்பு வேலையைக் கவனித்து விட்டுவரும் வழக்கத்தை மேற்கொண்டேன். +அவ்வாறு போயிருக்கையில் ஒரு முறை அஷ்டாவதானம் சபாபதி +முதலியாரிடம் சென்றேன். சிந்தாமணியைப் பதிப்பித்தல் மிகவும் கடினமான +காரியமென்று முன்னமே அவர் அச்சுறுத்தியிருந்தாலும் அவர் நல்ல +அறிவாளியாதலால் அவரைப் பார்த்தலில் எனக்கு விருப்பமுண்டு பல +நூல்களில் அவர் பழக்கமுள்ளவர்; மிகவும் ரசமாகப் பேசுவார். அன்று +அவரோடு நெடு நேரம் பேசிக் கொண்டிருந்தேன். எங்கள் +சம்பாஷணை பல புலவர்களையும், தமிழ் நூல்களைப் பற்றியும் நிகழ்ந்தது. +நான் இடையிடையே பல பழைய பாடல்களை எடுத்தெடுத்துச் சொன்னேன். +பிள்ளையவர்களிடம் பாடங் கேட்ட பிரபந்தங்களிலும் புராணங்களிலுமிருந்து +தங்கு தடையின்றிப் பல செய்யுட்களைச் சொல்லி வந்தேன். திடீரென்று +முதலியார் எதையோ நினைத்துக் கொண்டவர் போல, “ஐயா, நீஙகள் +சிந்தாமணியைப் பதிப்பிக்கத் தகுதியுடையவர்களே” என்று சொன்னார். +நாங்கள் பேசி வந்த விஷயத்துக்கும் அதற்கும் சம்பந்தமேயில்லை. ஆனாலும் +என்னோடு பேசியபோது முதலியார் தமிழ் நூல்களில் எனக்குள்ள பயிற்சியைத் +தனியே நோக்கிக் கவனித்தார் போலும். முன்பு தாம் கூறிய கருத்தை +மாற்றிக்கொள்ள வேண்டுமென்று அப்போது அவருக்குத் தோற்றியிருக்கலாம். +எனக்கு மிக்க வியப்பும் சந்தோஷமும் உண்டாயின. “என்ன, திடீரென்று +இப்போது இப்படிச் சொன்னீர்களே!” என்று அவரைக் கேட்டேன். + + + +“முன்பு ஒரு நாள் சிந்தாமணிப் பதிப்பை நீங்கள் கைவிட்டுவிட +வேண்டுமென்று நான் சொன்னேனல்லவா? அதை ஏன் சொன்னோமென்று +இப்போது தோற்றியது. உங்களுடைய பரந்த தமிழறிவை இப்போதுதான் +நன்றாக அறிந்து கொண்டேன்” என்று சொல்லிப் பின்னும் பாராட்டினார். + + + +அன்று முழுவதும் அந்த மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருந்தேன். +ஆனால் நிலைய���ன மகிழ்ச்சி எனக்கு உண்டாகாதபடி மற்றொரு விஷயம் என் +காதிற் பட்டது. + + + +சில விஷமிகளின் செயல் + + + +மற்றொரு நாள் நான் பூண்டி அரங்கநாத முதலியாரைப் பார்க்கப் +போயிருந்தேன். அவர் சிந்தாமணியில் எதுவரை நிறைவேறியுள்ளதென்று +வழக்கம் போல் அன்புடன் விசாரித்தார். நான் விவரத்தைச் சொன்னேன். +பிறகு அவர், “இராமநாதபுரம் அரசராகிய பாஸ்கர ஸேதுபதி அவர்களை நான் +சந்தித்தேன். அவர் தமிழில் மிக்க அன்புடையவர். தங்கள் சிந்தாமணிப் +பதிப்பைப் பற்றிய பேச்சு வந்தது. தமக்கும் அது முன்னமே தெரியுமென்று +சொன்னதோடு, மிகவும் நல்ல நூலாகிய சிந்தாமணியைப் பதிப்பிக்கத் +தங்களுக்குத் தகுதியில்லையென்று தம்மிடம் யாரோ கூறியதாகவும் சொன்னார், +நல்ல காரியத்துக்கு இடையூறு விளைவிக்க எத்தனையோ விஷமிகள் +காத்திருக்கிறார்கள்” என்று சிறிது வருத்தத்தோடு சொன்னார். அதைக் +கேட்டவுடன் எனக்கு +முன்பு உண்டான மகிழ்ச்சி இருந்த இடம் தெரியாமற் போய் விட்டது. + + + +என் வாட்டத்தை அறிந்த அரங்கநாத முதலியார், “இதைப் போன்ற +விஷயங்களை நீங்கள் காதிலேயே வாங்கிக் கொள்ளக் கூடாது. எடுத்த +காரியத்தைப் பின் வாங்காமல் நிறைவேற்றி விடவேண்டும். உங்கள் திறமை +எனக்குத் தெரியாதா? தைரியமாக இருந்து வேலையைக் கவனியுங்கள். நீங்கள் +கொடுத்த கையொப்பப் புஸ்தகத்தில் என் நண்பர்கள் சிலர் +கையெழுத்திட்டிருக்கிறார்கள். சவலை ராமசுவாமி முதலியார், பம்மல் +விஜயரங்க முதலியார் முதலியவர்கள் மிக்க விருப்பத்தோடு கையொப்பம் +செய்தார்கள்” என்று சொல்லி எனக்கு மிக்க உத்ஸாகத்தை உண்டாக்கினார். + + + +இராசகோபால பிள்ளை + + + +மற்றொரு சமயம் கோமளீசுவரன் பேட்டை இராச கோபால +பிள்ளையைப் பார்த்தேன். அவர் சென்னை இராசதானிக் கல்லூரியில் +தமிழாசிரியராக இருந்தவர். நான் அவரைப் பார்க்கப் போனபோது அவருடன் +காஞ்சீபுரம் இராமசாமி நாயுடு என்னும் வித்துவானும் இருந்தார். பல +நூல்களுக்கு உரை எழுதியவரும் பிற்காலத்தில் இராமானந்த யோகியென +வழங்கப் பெற்றவரும் அந்த நாயுடுவே. + + + +பாகவதம் முழுவதையும் இராசகோபால பிள்ளை அச்சிட்டிருந்தார். +அதிற் சில பகுதிகள் ஒரு வருஷம் பி. ஏ. பரீட்சைக்குப் பாடமாக இருந்தன. +மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் நான் படிக்க வருவதற்கு முன்பிருந்தே +பாகவதத்தில் எனக்குப் பழக்கம் இருந்தது. பாகவ��� ஏட்டுச் சுவடிகள் +பலவற்றை நான் பார்த்திருக்கிறேன். இராசகோபால பிள்ளையின் பதிப்பில் +நூலாசிரியரின் பெயர் “ஆரியப்பப் புலவர்” என்று இருந்தது. “சிந்தகத்துக் +கீழமர்ந்த” என்ற சடகோபர் வணக்கச் செய்யுளொன்றும் இருந்தது. இவ்விரண் +டையும் ஏட்டுப் பிரதிகளில் நான் கண்டதில்லை. அதனால், இராச கோபால +பிள்ளையிடம், “நான் பார்த்த பிரதிகளிளெல்லாம் ஆசிரியர் பெயரே +காணப்படவில்லை. இந்தச் செய்யுளும் இல்லையே இவற்றை நீங்கள் எங்கே +கண்டு பிடித்தீர்கள்?” என்று கேட்டேன். அவர், “அந்த நூலை நான் +பதிப்பிக்கவில்லை. சில பாகம் மாத்திரம் பார்த்த துண்டு. என் பெயரைப் +போட்டு யாரோ அச்சிட்டு விட்டார்கள். ஆதலால் இந்த விஷயத்துக்கு நான் +பொறுப்பாளி யல்ல” என்று சொல்லவே நான் வியந்தேன். பிற்காலத்தில் +பாகவதத்தின் ஆசிரியர் வேம்பத்தூர்ப் புலவர்களுள் ஒருவரான செவ்வைச் +சூடுவா ரென்பதும், “சிந்தகத்து” என்னும் முதலையுடைய செய்யுள் +அச்சிட்டவர்களால் சேர்க்கப்பட்டதென்பதும் எனக்குத் தெரிய வந்தன. + + + +நினைத்ததும் நடந்ததும் + + + +சிந்தாமணிப் பதிப்பு நடக்கையில் எனக்கு எவ்வகையிலேனும் உதவி +செய்ய வேண்டுமென்ற எண்ணத்தினால் பூண்டி அரங்கநாத முதலியார் +முயன்று நாமகளிலம்பகத்தை, பி. ஏ. பரீக்ஷைக்குப் பாடமாக வைக்கச் செய்தார். +அதைத் தனியே நான் அச்சிட்டு வெளியிட்டால் பல பிரதிகள் +செலவாகுமென்றும், அதனால் எனக்கு ஓரளவு பொருள் வருவாய் +ஏற்படுமென்றும் அவர் எண்ணினார். நான் கும்பகோணத்தில் இருந்தமையால் +இந்தச் செய்தி உடனே எனக்குத் தெரியவில்லை காலேஜ் பாட +புத்தகங்களுக்கும் ஹைஸ்கூல் பாட புத்தகங்களுக்கும் உரையெழுதிப் +பதிப்பித்து விற்றுவரும் முயற்சியில் சோடசாவதானம் சுப்பராய செட்டியார் +ஈடுபட்டிருந்தார். அங்கங்கே உள்ள நண்பர்கள் மூலமாகப் பள்ளிக் கூடப் +பிள்ளைகளை வாங்கும்படி செய்து பிரதிகளை விற்று வந்தார். இந்த விஷயமாக +அவர் தியாகராச செட்டியாருக்கும் பிறகு எனக்கும் கடிதங்கள் எழுதுவார். +நானே புத்தகங்களை வருவித்துப் பல பள்ளிக்கூடங்களிற் சொல்லி +மாணாக்கர்களை வாங்கச்செய்வேன். சிந்தாமணிப் பதிப்புக்கு அவர் ‘புரூப்’ +பார்த்து உதவி செய்து வந்தார். அக்காலத்தில் நாமகள் இலம்பகத்தை +யூனிவர்ஸிடியார் பாடமாக வைத்தது தெரிந்ததும் அவர் அதனைத் தனியே +அச்���ிட்டு எனக்குத் தெரிவியாமலே வெளிப்படுத்தி விட்டார் இப்படி அவர் +செய்ததில் எனக்கு மிகுதியான வருத்தம் உண்டாயிற்று. அரங்க நாத +முதலியாருக்கு இது தெரிந்தபோது, “நான் ஒன்று நினைக்க இது வேறு விதமாக +முடிந்ததே” என்று அவர் வருந்தினார். அது முதல் சுப்பராய செட்டியாரைப் +‘புரூப்’ பார்க்க வேண்டாமென்று சொல்லி விட்டேன். + + + +சிந்தாமணிப் பதிப்பைப் பற்றி அவ்வப்போது சுதேசமித்திரனில் என் +நண்பரும் விவேகசிந்தாமணிப் பத்திரிகையின் ஆசிரியருமான சி. வி. +சாமிநாதையரும், யாழ்ப்பாணம் விசுவநாத பிள்ளையென்பவரும் இன்ன இன்ன +பாகங்கள் நடக்கின்றனவென்று எழுதி வருவார்கள். பத்திரிகையின் மூலமாக +உணர்ந்த பல அபிமானிகள் அடிக்கடி எனக்குக் கடிதம் எழுதி விசாரித்து +வந்தனர். முன்னமே கையொப்பம் செய்த ஊற்றுமலை ஜமீன்தாராகிய +ஹிருதயாலய மருதப்பத் தேவர் நூறு ரூபாய் அனுப்பினார். பாலைக் காட்டில் +நகரசபைத் தலைவராக இருந்த ராவ்பகதூர் பா. ஐ. சின்னசாமி பிள்ளை +என்பவர் அடிக்கடி, “இப்போது எது வரையில் ஆகியிருக்கிறது?” என்று +எழுதுவார். + + + +தாமோதரம் பிள்ளையின் கடிதங்கள் + + + +புதுக்கோட்டையிலிருந்த சி. வை. தாமோதரம் பிள்ளையும் பல முறை +கடிதங்கள் எழுதினார். அவர் அப்போது கலித்தொகையை உரையுடன் +பதிப்பித்து வந்தார். அதை முற்றும் ‘புரூப்’ பார்த்துத் தர வேண்டுமென்று +எனக்கு எழுதினார். + + + +“சிந்தாமணிப் பதிப்பு வேலையில் என் கவனம் முற்றும் இருப்பதால் +மற்றவற்றை இப்போது கவனிக்க இயலவில்லை” என்று அவருக்குப் பதில் +எழுதினேன். ஆனாலும் அவர் விடாமல் கடிதம் எழுதிக் கொண்டும் +கலித்தொகையின் புரூப்களை அனுப்பிக் கொண்டும் வந்தார். தளர்ச்சி +யில்லாமல் அவர் செய்த முயற்சிகளால் நான் ஈடுபட்டு அவ்வப்போது சில சில +பகுதிகளை மட்டும் பார்த்து எனக்குத் தோற்றிய திருத்தங்களை +எழுதியனுப்பினேன். அவற்றை அவர் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார் +அந்தக் கலித்தொகைப் பதிப்பிலிருந்து சிந்தாமணியில் வந்துள்ள +மேற்கோள்கள் சிலவற்றைத் தெரிந்து கொண்டேன். அவர் பதிப்பித்து வந்த +இலக்கண விளக்கத்தைப் பற்றியும், தொல்காப்பியத்தைப் பற்றியும் +அவ்வப்போது எழுதுவார். அதனால் பழைய தமிழ் நூல்கள் வெளிவர +வேண்டுமென்பதில் அவருக்கிருந்த பேரூக்கத்தை நான் உணர்ந்து +கொண்டேன். சிந்தாமணியில் இன்ன ��ன்ன பாகம் நடக்கிறதென்றும் நான் என் +விடைக் கடிதங்களில் தெரிவிப்பேன். + + + +கடன் வாங்கியது + + + +சிந்தாமணிப் பதிப்பில் அச்சுக்கூலி, காகித விலை முதலியவற்றிற்கு +எனக்குப் போதிய பணம் கிடைக்கவில்லை. பலர் முன் பணம் கொடுப்பதாகக் +கையொப்பமிட்டிருந்தாலும் சிலரே பணம் அனுப்பினர். இந்த நிலையில் அச்சுக் +கூலிக்கும், காகித விலைக்கும் பணம் அனுப்ப வேண்டுமென்று +சென்னையிலிருந்து கடிதம் வரும் போது அதனைத் தொகுத்து அனுப்புவதில் +மிக்க கஷ்டத்தை அடைந்தேன். நூறும் ஐம்பதுமாக அனுப்பி வருவேன். +கையொப்பமிட்ட கனவான்களுக்கு நான் கடிதம் எழுதினேன். சிலர் உடனே +பணமனுப்பி உதவினார்கள். + + + +ஒரு சமயம் சில பாரங்கள் அச்சிடுவதற்குக் காகிதம் தேவையாக +இருந்தது. அச்சுக்கூடத் தலைவர் காகிதத்துக்குப் பணம் அனுப்ப +வேண்டுமென்று எழுதிவிட்டார். கையிலோ பணமில்லை, இன்னது +செய்வதென்று தெரியவில்லை. நான் சிரமப்படுவதை அறிந்து தாமோதரம் +பிள்ளை தமக்குத் தெரிந்த காகிதக் கடைக்காரர் ஷண்முகஞ் செட்டியார் +என்பவரிடம் காகிதம் வாங்கிக் +கொள்ளலாமென்றும் சில மாதங்கள் பொறுத்துப் பணம் +கொடுக்கலாமென்றும் எனக்கு எழுதியதோடு சென்னையிலிருந்த +அக்கடைக்காரருக்கும் எழுதி எனக்கு வேண்டிய காகிதத்தைக் கொடுக்கும்படி +செய்தார். காகிதத்தின் விலை நூற்றைம்பது ரூபாய். குறிப்பிட்ட காலத்துக்குள் +என்னிடம் பணம் சேராமையால், காலேஜ் ஆசிரியர் சிலரிடம் கடன் வாங்கி +அந்தத் தொகையை அனுப்பிவிட்டேன். அடிக்கடி இந்த மாதிரியான +முட்டுப்பாடுகள் நேரும். அப்போது, “எப்போது இந்தச் சிந்தாமணி முடியும்! +இந்தச் சிரமங்களுக்கெல்லாம் முடிவு காலம் எப்போது வரும்?” என்ற +எண்ணம் எனக்கு உண்டாகும். + +----------- + + + + + +100. சிந்தாமணி வெளியானது + + + +சீவக சிந்தாமணியின் மூலமும் உரையும் பெரும்பாலும் அச்சாகி +விட்டன. அக்காலத்தில் அச்சிடப்பெற்ற தமிழ்ப் புத்தகங்கள் பலவற்றில் +முகவுரை முதலியன காணப்படவில்லை. அவை இருந்தால் படிப்பவர்களுக்கு +மிக்க உபயோகமாக இருக்குமென்பதை உணர்ந்த நான் சிந்தாமணிக்கு +அங்கமாக அவற்றை எழுதிச் சேர்த்துப் பதிப்பிக்கலாமென்று எண்ணினேன். +என்ன என்ன விஷயங்களை முகவுரையில் எழுதவேண்டுமென்பதைப் பற்றி +ஆலோசித்தேன். நூலைப் படிப்பதற்குமுன் அதிலுள்ள முக்கியமான +விஷயங்களையும் நூலி���் பெருமையையும் உரையின் தன்மை +முதலியவற்றையும் படிப்பவர்கள் தெரிந்து கொள்ளுவது நலமென்பது எனது +கருத்து. முதலில் செய்யுட்களின் முதற் குறிப்புக்களை எழுதி ஒருவகையான +அகராதி செய்து வைத்துக் கொண்டேன். + + + +மேற்கோள்கள் + + + +நூலைப் பதிப்பித்து வருகையில் அங்கங்கே உள்ள மேற்கோள்களில் +விளங்கியவற்றிற்குரிய ஆகரங்களை அடிக் குறிப்பிற் புலப்படுத்தியிருந்தேன். +பிறகு விளங்கிய மேற்கோள்களையும் விளங்காத மேற்கோள்களையும் தனித் +தனியே தொகுத்து எழுதி வைத்துக் கொண்டேன். இவற்றையெல்லாம் நூலுக்குப் +பின்பு அமைக்கலாமென்று நிச்சயம் செய்தேன். முகவுரைக்கு அடுத்தபடி +நூலாசிரியர் வரலாறு, உரையாசிரியர் வரலாறு +என்பவற்றை எழுத நிச்சயித்தேன். + + + +சரித்திரச் சுருக்கம் + + + +சீவக சிந்தாமணி தமிழ் நாட்டில் பழக்கமில்லாத நூலாதலால் அதிலுள்ள +கதையை வசன நடையில் எழுதினால் நூலைப் படிப்பவர்களுக்கு உதவியாக +இருக்கும். மூவாயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களையுடைய சிந்தாமணிக்கு வசன +மெழுதத் தொடங்கினால், அது சீக்கிரத்தில் முடியக்கூடிய காரியம் அன்று +என்றெண்ணி, சீவகன் சரித்திரத்தைச் சுருக்கமாக எழுதி அமைத்து +விடலாமென்ற முடிவிற்கு வந்து கதைப்போக்கு விட்டுப் போகாமல் +ஒருவகையாக அதை எழுதி முடித்தேன். அதை என்னுடன் பழகும் காலேஜ் +ஆசிரியர்களிடமும் ஜைன நண்பர்களிடமும் படித்துக் காட்டினேன். அவர்கள் +அதைக் கேட்டு அங்கீகரித்ததோடு சில யோசனைகளையும் சொன்னார்கள். +அவற்றுள் உசிதமானவற்றை ஏற்றுக் கொண்டேன். + + + +நூலாசிரியர் வரலாறு முதலியன + + + +பிறகு நூலாசிரியராகிய திருத்தக்கதேவர் வரலாற்றை எழுத ஒரு +குறிப்பும் கிடைக்கவில்லை. ஜைனர்கள் தமக்குள்ளே கர்ண பரம்பரையாகச் +சொல்லி வந்த செய்திகளை அவர்கள் வாயிலாக அறிந்து அவற்றைக் கோவைப் +படுத்தி அதனையும் ஒரு வகையாக எழுதினேன். + + + +நச்சினார்க்கினியர் வரலாற்றை எழுதுவதற்குத் துணையாக அவர் +உரையைப் பாராட்டும் சிறப்புப் பாயிரப் பாடல்கள் இரண்டு இருந்தன +அவற்றை ஆதாரமாக வைத்துச் கொண்டு அம்மகோபகாரியின் வரலாற்றை +எழுதினேன். அதில் அவர் உரை எழுதிய வேறு நூல்கள் இன்னவென்று +குறிப்பிட்டேன். பத்துப் பாட்டுக்கு அவர் உரை எழுதியதைத் +தெரிவிக்கும்போது, பத்துப் பாட்டுக்களின் பெயர்களும் அவற்றைப் பாடினோர், +பாடப் பெற்��ோர் பெயர்களும் இன்ன வென்பதைச் சேர்த்து எழுதினேன். +தமிழ் நாட்டினருக்கு அது புதிய செய்தியாக இருக்குமென்பதே என் கருத்து. + + + +பிறகு சீவகன் சரித்திரத்தில் வரும் சிறப்புப் பெயர்களைத் தனியே +எடுத்து அகராதியாக அமைத்து அவற்றை விளக்கி எழுதி, “அபிதான +விளக்கம்” என்ற தலைப்பின்கீழ்ப் புலப்படுத்தினேன். + + + +முகவுரை + + + +முகவுரையை எழுதத் தொடங்கி, நூலின் சிறப்பையும் அந்நூலால் +இன்ன செய்திகள் தெரிய வருகின்றன வென்பதையும் முதலில் எழுதலானேன்: + + + +‘செந்தமிழ் மொழியிற் சிறந்து விளங்கும் காப்பியம் ஐந்தனுள் +முந்தியதாகிய இந்தச் சீவகசிந்தாமணி யென்பது திருத்தக்க தேவரென்னும் +ஜைன முனிவரால் இயற்றப்பட்டது. இது பழைய இலக்கிய உரைகளிலும் +இலக்கண உரைகளிலும் உரையாசிரியர்களால் மேற்கோளாக எடுத்துக் +காட்டப்பட்ட பிரமாண நூல்களுள் ஒன்று; முற் காலத்து முதல், இடை, கடை +என்னும் முச்சங்கத்தும் எழுந்தருளியிருந்து தமிழாராய்ந்த தெய்வப் புலவர்கள் +அருளிச் செய்த இலக்கியங்கள் போன்று செந்தமிழ் நடையிற் சிறந்துள்ளது; +வடமொழியில் வான்மீகம் போல், எல்லா வருணனைகளும் தன்பால் அமையப் +பெற்றிருத்தலின் மகா காவியமென்று கூறப்பட்டிருத்தலன்றி, பிற்காலத்து அதி +மதுரமான காப்பியங்கள் இயற்றிய மகா கவிகள் பலர்க்கும் இன்ன இன்னவற்றை +இன்ன இன்னவாறு வருணித்துப் பாடுகவென அவ்வான்மீகம் போல வழி +காட்டியதும் இந்நூலே என்பர்.’ + + + +இவ்வாறு எழுதி விட்டுப் பலமுறை திருப்பித் திருப்பிப் படித்தேன். +முதன் முதலாக இந்தத் துறையிலே புகுந்த எனக்கு, ‘நல்ல பெயர் வாங்க +வேண்டுமே’ என்ற கவலை மிகுதியாக இருந்தது. அதனோடு ‘பிழையென்று +தோற்றும்படி விஷயங்களை எழுதக்கூடாது’ என்ற நினைவும் இருந்தது. +ஆதலின் நான் எழுதியதைப் பலமுறை பார்த்துப் பார்த்து அடித்தும் +திருத்தியும் ஒழுங்கு படுத்திக் கொண்டேன். பழக்க மில்லாமையால் ஒவ்வொரு +வாக்கியத்தையும் எழுதி முடிக்கும்போது சந்தேகமும் பயமும் உண்டாயின. +‘வான்மீகத்தை இதனோடு ஒப்பிடுவது சரியோ? பிழையோ? ஸம்ஸ்கிருத +வித்துவான்கள் ஏதாவது சொன்னால் என்ன செய்வது? என்றும், ‘பிற்கால +நூல்களுக்கு வழிகாட்டி என்று சொல்லுகிறோமே; ஜைன நூலாகிய இதை +அப்படிச் சொல்லு வதால் சைவர்களுக்கும் வைஷ்ணவர்களுக்கும் நம்மேல் +சினம் உண்டாகுமோ?’ என்றும் கலங���கினேன். ‘நம் மனத்திற்குச் சரியென்று +தோற்றியதை எழுதி விடுவோம்; பிறகு தவறென்று தெரிந்தால் மாற்றிக் +கொள்வோம்’ என்று துணிந்து எழுதலானேன். நூலைப் பற்றிய செய்திகளை +எழுதிவிட்டு அதனை ஆராய்ந்து பதிப்பித்தது சம்பந்தமான செய்திகளையும், +எனது அன்பிற் சிறந்த ஸ்ரீ சேலம் இராமசாமி முதலியார் சிந்தாமணி +பதிப்பிக்கும்படி என்னைத் தூண்டியதையும், பிரதி அளித்ததையும், +வேற பல பிரதிகள் கிடைத்ததையும் குறிப்பித்தேன். + + + +பட்ட கஷ்டங்கள் + + + +அப்பிரதிகளை ஆராய்ந்த போது நான் பட்ட கஷ்டங்களைச் +சுருக்கமாக அதில் தெரிவித்தேன்: + + + +எழுத்தும் சொல்லும் மிகுந்தும் குறைந்தும் பிறழ்ந்தும் திரிந்தும் +பலவாறு வேறுபட்டுக் கிலமுற்றிருந்த இந்நூலுரைப் பழைய பிரதிகள் +பலவற்றையும் பலகால் ஒப்புநோக்கி இடையறாது பரிசோதனை செய்து வந்த +பொழுது, கவிகளின் சுத்த வடிவத்தையும் உரையின் சுத்த வடிவத்தையும் கண்டு +பிடித்ததற்கும், உரையினுள் விசேடவுரை இன்னது பொழிப்புரை இன்னது என்று +பிரித்தறிதற்கும், மேற்கோள்களின் முதலிறுதிகளைத் தெரிந்து கோடற்கும், +பொழிப்புரையை மூலத்தோடு இயைத்துப் பார்த்தற்கும், பிழையைப் +பிழையென்று நிச்சயித்துப் பரிகரித்தற்கும், பொருள் கோடற்கும் +எடுத்துக்கொண்ட முயற்சியும், அடைந்த வருத்தமும் பல. அப்படி அடைந்தும் +சில விடத்துள்ள இசைத் தமிழ் நாடகத் தமிழின் பாகுபாடுகளும், மற்றுஞ் சில +பாகமும் நன்றாக விளங்கவில்லை. அதற்குக் காரணம் அவ்விசைத் தமிழ் +நாடகத் தமிழ் நூல் முதலியவைகள் இக் காலத்துக் கிடையாமையே!” + + + +என் கொள்கை + + + +ஏட்டுச் சுவடிகளிற் கண்ட பாடங்களின் வேறுபாட்டைக் கண்டு கண்டு +என் மனம் புண்ணாகியிருந்தது. இன்னபடி இருந்தால் பொருள் சிறக்குமென்று +எனக்குத் தோற்றின இடங்களிலும் பிரதியில் உள்ளதையே பதிப்பித்தேன். +என்னுடைய கருத்தையோ, திருத்தத்தையோ சிந்தாமணியில் ஏற்றாமல் மிகவும் +ஜாக்கிரதையாகக் கவனித்துப் பதிப்பித்தேன். பதிப்பிக்கத் தொடங்கிய நூல் +எனக்கு ஒரு தெய்வ விக்கிரகம்போல இருந்தது. அதன் அழுக்கைத் துலக்கிக் +கவசமிட்டுத் தரிசிக்க வேண்டுமென்பதே என் ஆசை; ‘கை கோணி இருக்கிறது, +வேறுவிதமாக அமைக்கலாம்; நகத்தை மாத்திரம் சிறிது திருத்தலாம்’ என்ற +எண்ணம் எனக்கு உண்டாகவில்லை. அதன் ஒவ்வோரணுவிலும் தெய்விக +அம்சம் இருக்கிறதென்றே நம்பினேன். அழுக்கை நீக்கி விளக்குவதற்கும், +அங்கத்தையே வேறுபடுத்துவதற்கும் உள்ள வித்தியாசத்தை நன்றாக +அறிந்திருந்தேன். இக்கருத்தை, ‘புராதனமான +தமிழ் நூல்களும் உரைகளும் பண்டைவடிவம் குன்றாதிருத்தல் +வேண்டுமென்பதே எனது நோக்கமாதலின் பிரதிகளில் இல்லாதவற்றைக் +கூட்டியும். உள்ளவற்றை மாற்றியும், குறைத்தும் மனம் போனவாறே அஞ்சாது +பதிப்பித்தேனல்லேன். ஒரு வகையாகப் பொருள் கொண்டு பிரதிகளில் +இருந்தவாறே பதிப்பித்தேன். யானாக ஒன்றுஞ் செய்திலேன்’ என்று +புலப்படுத்தினேன். + + + +இந்த விரதத்தை நான் அன்று முதல் இன்றுவரை மறந்தவனல்லன். பல +நூற்றாண்டுகளாகத் தமிழ் நாட்டில் வழங்கி வந்து இடையிலே மறக்கப் பெற்ற +நூல்களில் உள்ள பொருள்களை உள்ளபடியே அறிய வேண்டுமானால் +அந்நூல்கள் இயற்றப் பெற்ற காலத்து நிலையையும், இலக்கிய மரபையும் +நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். அப்படி முற்ற உணர்ந்து கொள்வது +இவ்வளவு காலத்திற்குப் பின் வந்த நம்மால் இயலாதது. ஆதலின் +விளங்காதவை பிறகு விளங்குமென்று காத்திருத்தலும், மாறுபாடாக ஒரு சமயம் +தோற்றுவனவற்றை மாறுபாடென்று உடனே துணியாமல் அவற்றிற்குச் +சமாதானம் இருக்கக் கூடுமென்று எண்ணிப் பொறுத்திருத்தலும் என் +இயல்புகளாயின. இந்தத் தாமதத்தால் என்னோடு பழகினவர்களுக்கு என்பால் +சிறிது வெறுப்பு ஏற்பட்டதும் உண்டு. ஆயினும் நான் என் கொள்கையைக் +கைவிடவில்லை. + + + +உதவி செய்தோர் + + + +ஏட்டுப் பிரதிகளின் அமைப்பைப் பற்றி எழுதிய பின்னர் எனக்குப் +பொருளுதவி செய்தவர்களைப் பற்றியும், பதிப்பிக்குங் காலத்தில் உடனிருந்து +உழைத்தவர்களில் முக்கியமானவர்களைப் பற்றியும் எழுதினேன். அப்பால் +கிடைத்த ஏட்டுப் பிரதிகளின் விவரத்தை எழுதி முகவுரையை முடித்து +விட்டேன். அப்பொழுதே சீவகசிந்தாமணிப் பதிப்பு நிறைவேறியது போன்ற +ஆறுதலும் ஆனந்தமும் உண்டாயின. எல்லாவற்றையும் கைக்கொண்டு +சென்னையை அடைந்தேன். + + + +பத்துப்பாட்டுப் பிரதி + + + +இறுதிப் பகுதிகளை யெல்லாம் முடித்து முகவுரை முதலியவற்றையும் +அச்சிற் கொடுத்து ஒரு முறை புரூப் திருத்தம் செய்து கொடுத்தவுடன் ‘ஈசன் +திருவருளால் காரியம் இனிது நிறைவேறியது’ என்ற மகிழ்ச்சி மீதூர்ந்தது. +உடம்பில் அப்போது ஒரு சோர்வு உண்டாயிற்று. இரவு பகலின்றி உழைத்த +காலங்களிலெல்லாம் வாராத சோர்வு, முடித்துவிட்டோம் என்ற அளவில் +காத்து நின்று பாய்வதுபோல என்னை அமிழ்த்தியது. அச்சுக்கூடத்தில் +ஓரிடத்தில் படுத்து நித்திரை செய்யலானேன்; சுகமாகத் தூக்கம் வந்தது. + + + +தூங்கி விழித்தபோது முன்பே வந்து காத்திருந்த ஒருவர், +“இந்தாருங்கள், பத்துப்பாட்டு” என்று சொல்லி ஓர் ஏட்டுச் சுவடியை என் +கையில் அளித்தார். கொடுத்தவரை நிமிர்ந்து பார்த்தேன். வேலூரிலுள்ள +வீரசைவராகிய குமாரசாமி ஐயரென்பரே அதை அளித்தவரென்று அறிந்தேன். +அவர் இயற்றமிழாசிரியராகிய விசாகப் பெருமாளையருடைய மருகர். அவர் +பழைய வித்துவான்களின் வீடுகளில் ஆதரவற்றுக் கிடக்கும் ஏட்டுச்சுவடிகளை +இலவசமாகவாவது, சிறு பொருள் கொடுத்தாவது அவ்வீட்டுப் பெண்பாலார் +முதலியவர்களிடம் வாங்கி விரும்பியவர்களுக்குக் கொடுத்து ஊதியம் பெற்றுக் +காலக்ஷேபம் செய்பவர். அவரிடம் முன்னமே நான் ‘பத்துப் பாட்டு முதலிய +சங்கச்செய்யுள்கிடைத்தால் கொணர்ந்து கொடுக்க வேண்டும்; தக்க பொருளுதவி +செய்கிறேன்’ என்று சொல்லியிருந்தேன். + + + +அவர் பத்துப் பாட்டுப் பிரதியை அந்தச் சமயத்தில் கொண்டு வந்து +கொடுத்தது எனக்கு நல்ல சகுனமாகத் தோன்றியது. ‘தமிழன்னையே இவர் +மூலம் மேலும் தமிழ்த் தொண்டுபுரிய வேண்டுமென்று கட்டளையிடுகிறாள்’ +என்று கருதினேன். உடனே அவர் விரும்பியபடி அவர் கையில் ஐம்பது +ரூபாயை எடுத்துக் கொடுத்து அனுப்பினேன். + + + +“தாயே, நீ சிந்தாமணியை இந்த ஏழை முகமாக மீட்டும் +அணிந்துகொண்டாய். பிற ஆபரணங்களையும் அடியேன் கைப்படும்படி செய்து +அவற்றைத் துலக்கும் கைங்கரியத்திலே திருவருளைத் துணையாக வைத்துப் +பாதுகாக்க வேண்டும்” என்று மனப்பூர்வமாகத் தமிழ்த்தாயை வேண்டிக் +கொண்டேன். + +-------------------- + + + + + +This file was last updated on 20 November 2016. + +Feel free to send corrections to the webmaster. + + + + +