text
stringlengths 11
513
|
|---|
பிரவாகத்தின் அந்தப் பாய்ச்சலில் ஒரு துரும்பு போல அங்கே அப்படி அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருந்தவன் அப்போது நான் மட்டும்தான். அறை முழுவதையும் தலைகீழாக மாற்றிப் போட்டிருந்த அந்த மாபெரும் பாடல் அதை இசைத்துக்கொண்டிருந்தவர்களையும் அப்பையாவையும் நம் பெண்ணையும் ஒரு சிறிதும் பாதிக்கவில்லை. வாசித்துக்கொண்டிருந்த இருபது பேரையும் கண்டு நான் ஆச்சரியப்படவில்லை. இணைப்பறை வாசலின் வெளிப்புறமாக இடதுபுறச் சுவற்றில் வரிசையாகவும் இசைக்க வசதியாகவும் சாய்ந்து முதுகைப் பதித்தபடி அவர்கள் தங்கள் கடமையை சரிவரச்
|
செய்துகொண்டிருந்தார்கள். அவர்களே அந்த அற்புதத்தின் சிருஷ்டிகர்த்தாக்கள். வண்ணமயமான இசைக் கோளங்களின் குதூகலமும் பெருக்கமும் சாவும் மறுபிறப்பும் அவர்களின் விரல் நுனியின் அசைவில்தான் நிலைகொண்டிருந்தது. ஆகவே அவர்கள் தாங்களே வண்ணப்பந்துகளாக மாறும் வண்ணம் இசையினுள் தங்களை இழந்து விட முடியாது. அப்பையாவைக் கண்டும் நான் ஆச்சர்யப் படவில்லை. அவர் நம் பெண் மலர்ந்திருந்த சப்பரமஞ்சத்தின் மறுபுற விளிம்பில் கையை ஊன்றியபடி இணைப்பறை வாசலை ஊடுருவிய பார்வையுடன் அசையாமல் நின்று கொண்டிருந்தார். அவரே அந்த மந்திர இசைப்பின் காரண
|
கர்த்தா. அதை விஞ்சும் எண்ணற்ற வினோதங்களைப் பார்த்தவர். சாதிப்பவர். சுழன்று கொண்டிருந்த சூழலுக்குள் விழுந்து விடாமல் அவரால் தன்னை எப்போதும் பிரித்தே நிறுத்திக் கொண்டுவிட முடியுமென்பது எதிர்பார்க்கக்கூடிய ஒன்றுதான். நான் ஆச்சர்யப்பட்டது ராணீ நம் பெண்ணைக் கண்டுதான். அவள் தன் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து படுக்கையின் மீதே சம்மணம் இட்டு அமர்ந்திருந்தாள். அவள் முகத்தில் திணறலின் ரேகைகளோ திடுக்கிடலின் சிதறலோ சிறிதும் காணப்படவில்லை. மாறாக அவள் தன் நயனங்களையும் நாசியையும் நன்கு உயர்த்தி விரித்து நட்சத்திரவாஸிகளின்
|
கலவியொலியையும் அதன் மெல்லிய காட்டுப் பூ மணத்தையும் ஆழ்ந்து சுவாசித்துக் கொண்டிருந்தாள். அவள் முகம் மகிழ்ச்சியில் விகசித்துப் போயிருந்தது ( அவள் மார்பு இசையின் லயத்தோடு இயைந்து விம்மித் தணிந்து கொண்டிருந்தது ). நானோ பாதி இசையின் வினோதத்திலும் பாதி நம் பெண்ணின் இந்த 508 நிலையிலுமாகச் சிக்கித் திணறிக் கொண்டிருந்தேன். அவள் அப்போது என்னையும் அப்பையாவையும் ஒரு பொருட்டாக மதித்து எழுந்து நின்று மரியாதை கொடுக்கவில்லை. எங்கள் பக்கம் முகத்தைத் திருப்பவும் இல்லை. சொல்லப்போனால் நாங்களும் வாத்தியக் குழுவும் அங்கே நின்று
|
கொண்டிருந்த பிரக்ஞையே அவளுக்கு இல்லை. அறையை நிரப்பித் ததும்பிக் கொண்டிருந்த இசைத் துகள்களின் புணர்ச்சியோடும் வண்ணக் கோளங்களின் பிறப்போடும் அவற்றின் அலைவோடும் குதூகலத்தோடும் அவளுடைய விழிகள் மட்டும் நிலை கொள்ளாமல் மோதியும் பிறந்தும் அலைந்தும் துடித்துக் கொண்டிருந்தன. ஒரு சாதாரண மானுடப் பிறவியால் தாள முடியாத ஆனந்தப் பொழிவை வெகு சாதாரணமாக மென்று தின்றுகொண்டிருந்த நம் பெண்ணின் அசாத்தியமான முகப்பொலிவைக் கண்டு பெரும் பீதி என்னைப் பீடித்துக் கொண்டு விட்டது. நகர்வலத்திற்கு அல்லாமல் வேட்டைக்கென்று நான் அவளை ஒரு போதும்
|
கானகத்தின் பக்கம் அழைத்துச் சென்றதே கிடையாது. சிறுபெண் வனவிலங்குகளின் உக்கிரத்தையும் உடல் மணத்தையும் நேரில் பார்த்து அனுபவிக்கும் மனப் பக்குவம் அவளுக்கு இன்னும் கைகூடியிருக்காது என்பது என் எண்ணம். அற்புதமான அந்த இரவுக்குப் பிறகும் இப்போது இதை உனக்குச் சொல்லிக்கொண்டிருக்கும் இந்தக் கணம் வரைக்கும் இந்த எண்ணத்தை என்னால் மாற்றிக் கொள்ள முடியவில்லை. வேட்டையின் போது மட்டுமே இசைக்கப்படும் நட்சத்திரவாஸிகளின் கலவி முதலிய பாடல்களின் தொகுப்பை அவள் அதற்கு முன்பு கேட்டிருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் அவளோ ஒவ்வொரு நாளும் தன்
|
படுக்கையறையில் வேட்டை இசை நிகழ்ச்சி ஒன்றைத் தனக்கென நிகழ்ந்த ஏற்பாடு செய்துகொண்டு அதை எப்போதும் அனுபவித்துக் கொண்டிருப்பவளைப் போன்ற இசைவுடனும் பழக்கச் சாயலுடனும் காணப்பட்டாள். இதன் மர்மத்தை அப்பையாவால் மட்டும் தான் விளக்க முடியும். அவள் உயிருடன்தான் இருக்கிறாளா என்கிற பெருத்த சந்தேகம் என்னுள் சாரைப்பாம்பு போல வழுக்கிக் கொண்டிறங்கி வயிற்றில் சுருண்டு வாலையடித்தது. குழப்பமான இந்த உணர்வுகளிலிருந்து நான் விடுபட்டு நிதானித்துக்கொள்ளும் முன்பே அந்த அதிசய நாடகத்தின் அடுத்த காட்சியும் துவங்கிவிட்டது. இணைப்பறை
|
வாசலில் தொங்கிக் கொண்டிருந்த திரைச் சீலையைப் பிளந்துகொண்டு வெளியே வந்தது ஒரு வரிப்புலி. அது படுக்கையறைச் சுவற்றின் ஓரமாகவே மெதுவாக நடந்து அங்கிருந்த பொருட்களை ஊடுறுவிக் கடந்து சென்று அறையின் சாளரத்தை அடைந்தது. சாளரத்தின் வழியாக அதன் வெளிப்புறமிக்க வேப்பமரத்தின் உச்சிக் கிளைக்குத் தாவி பிற கிளைகளின் வழியாக மரத்திலிருந்து கீழிறங்கி நிலவொளியில் மிதப்பதைப் போல் நந்தவனப் புற்களின் மேலாகப் பாரவி விரைந்து காணாமல் போனது. புலி எங்கள் கண்களில் தென்பட்ட முதல் வினாடியிலிருந்து துவங்கி அறுபது விநாடிகள் அவகாசத்திற்குள்
|
இது நடந்து முடிந்துவிட்டது. அதோடு அந்த இரவின் வினோத நிகழ்ச்சிகளும் முடிவுக்கு வந்து விட்டன. பிறகு இசைப்பவர்கள் இசைப்பதை நிறுத்திக்கொள்ளும்படி அப்பையா கையை உயர்த்திச் சைகையால் அறிவித்தார். பெருகிக் கொண்டிருந்த சங்கீதம் நின்றுபோனதும் அறையினுள் பிரகாசித்துக் கொண்டிருந்த வண்ணக் கோளங்கள் உடைந்து கரைந்தன. அறையும் பிற பொருட்களும் தத்தம் இயல்பான உருவத்திற்கு மிக வேகமாகச் சுருங்கி மீண்டன. இமைக்கும் நேரத்துக்குள் நான் கண்ணெதிரே கண்டு கொண்டிருந்த அற்புதங்களனைத்தும் என்றும் அங்கே நடந்திருக்கவே இல்லை என்பதைப் போல அறையின்
|
சாதாரணத்துவம் திரும்பியிருந்தது. புலி தாவிச் சென்ற சாளரத்தின் வழியாக அப்போது மிகச் சுகந்தமான காற்று அனைத்தும் சுபமாக 509 முடிந்ததை அறிவிக்கும் விதத்தில் உள்ளே நுழைந்தது. நாங்கள் அனைவரும் மயங்கிப் படுக்கையில் துவண்டு விழுந்திருந்த நம் பெண்ணைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டோம். இணைப்பறை வாசலில் புலி வெளிப்பட்ட தருணமானது எனக்களித்த அதிர்ச்சியிலிருந்து நான் அப்போதும் இப்போதும் மீண்டும் வந்து விடவில்லை. உண்மையைச் சொல்லுவதானால் சற்றும் எதிர்பாராத நம்பற்கரிய அதுபோன்ற சூழலிலிருந்து புலி ஒன்று வெளிப்படப் போவதை அங்கே
|
வாசித்துக் கொண்டிருந்த வேட்டைக்காரர்களே எதிர்பார்க்கவில்லை. அது எங்கள் கண் முன்னே தோன்றிய கணத்தில் அதிர்ச்சியால் இசையில் லயப்பிசகு ஏற்பட்டு விடும் அபாயத்தைத் தவிர்க்க அவர்கள் கடும் முயற்சி எடுத்துக்கொண்டிருந்தார்கள். இசையின் கண்ணிகள் இயல்பாகப் பிரிந்து தளர இருக்கும் தருணத்தில் அதன் ஒழுங்கு கலைவது வெளியே வந்து நிற்கும் புலியின் இதயத்துடிப்பை நிறுத்திவிடும் என்று அவர்கள் முன்னிலும் பிரமாதமாக வாசித்ததில் இசை அதன் உச்சக் கட்டத்தை அப்போது எட்டியிருந்தது. அப்பையாவைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. அவர் முகத்தில்
|
எதிர்பாராத எதையும் அங்கே காணும் சலனம் ஒரு சிறிதும் ஏற்பட்டிருக்கவில்லை. புலி அறைவாசலில் தென்பட்ட கணத்தில் அவர் தன் பார்வையை நம் பெண்ணின் மேல் பதிய வைத்திருப்பதைக் கண்டேன் , ஒரு கடும் வனவிலங்கை முன்னெப்போதும் நேருக்குநேர் சந்தித்திராத நம் பெண் புலியைப் பார்த்ததும் வீரிட்டு ஆதரவாகப் பற்றுவதற்காக என் கைகளை அவள் தோள்களுக்கு நகர்த்தினேன். அப்பையா அதைத் தன் கண்ணசைப்பால் தடுத்து நிறுத்திவிட்டார். பிறகு நான் பதற்றமடையத் தேவையில்லை என்று சொல்வதைப் போன்ற பாவனையில் அவர் என்னைப் பார்த்துச் சிரிக்கவும் செய்தார்.
|
பிறகுதான் ராணீ நம் பெண் புலியைப் பார்த்து முன்பே அறிமுகமான பாவமும் அளவற்ற துயரமும் நிறைந்த முகத்துடன் நீயா என்று தாழ்ந்த குரலில் கேட்டாள். அப்போது முழங்கிக்கொண்டிருந்த இசைத் துடிப்பின் அத்தனை ஆரவாரத்திற்கிடையிலும் அந்த வார்த்தைகளைத் தெளிவாகக் கேட்க முடிந்தது. என்னால் என் காதுகளை நம்ப முடியவில்லை. ஒரு மனிதனிடம் பேசுவது போல அத்தனை சுவாதீனமாக நம் பெண் என் கண் முன்னே ஒரு மிருகத்திடம் பேசுவதை என்னால் நம்பாமலும் இருக்க முடியவில்லை. இளவரசி அந்தக் கேள்வியைக் கேட்டபிறகு சாளரத்தை நோக்கிப் புலி செல்லுவதையே தொடர்ந்து
|
வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் மேற்கொண்டு புலி நம் பெண்ணிடம் மனிதனின் மொழியில் பேசக் கூடுமென்றும் எதிர் பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். ஆனால் அற்புதங்களின் இருப்பு திரேதாயுகத்தோடு தீர்ந்து போய்விட்டபடியால் அதிர்ஷ்டவசமாகவோ துரதிர்ஷ்டவசமாகவோ நான் எதிர்பார்த்தபடி எதுவும் நடந்து என் இதயத்துடிப்பை நிறுத்தி விடவில்லை. புலி கண்களிலிருந்து மறைந்த பிறகு நம் பெண் தன் கண்களை திருப்தியுடன் மூடிக் கொண்டு மிக அமைதியுடனும் சோர்வுடனும் பூமாலையின் நளினத்தோடு படுக்கையில் சாய்ந்தாள். அப்பையா அவளுக்கு
|
மயக்கத்துக்குரிய சாதாரண சிகிச்சையை அளித்து முடித்த பின் நாங்கள் படுக்கையறையை விட்டு வெளியே வந்தோம் என்று தன் கதையை முடித்தார் ராஜன். இவ்விதமாகவே அந்த இரவின் சம்பவங்கள் மேலும் இருபது வகையான கதைகளாக வேடர்களின் மூலமாகவும் விரிந்து பரவியதால் என் முதிர் முப்பாட்டனார் எழுபத்தைந்தாம் நாள் அரண்மனைக்குத் திரும்பி வந்தபோது 510 தாங்கமுடியாத ஜனக் கூட்டம் அரண்மனை வாயிலை நெருக்கியடித்துக்கொண்டிருந்ததாகக் கூறக் கேட்டிருக்கிறேன். மூன்று நாட்களுக்கு முன்பே அவர் அரண்மனைக்கு வருகை தரப் போகும் நாளைக் கேட்டுத் தெரிந்துகொண்ட
|
அண்டை சமஸ்தானவாசிகள் கட்டுச் சோற்று மூட்டைகளுடன் மாட்டு வண்டிகளில் சாரிசாரியாக வந்து சமஸ்தானத்தின் சாலைகளையும் விடுதிகளையும் தோட்டங்களையும் நிரப்பி விட்டார்களாம். மேலும் ஏழு நாட்களுக்கு முன்பாகவே அயல் தேசங்களிலிருந்து கழைக் கூத்தாடிகளும் வியாபாரிகளும் நடன நாட்டியக் கலை வல்லுனர்களும் வேசிகளும் உள்ளூர் பிச்சைக்காரிகளும் வந்து ராஜதானியை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தார்களாம். எங்கும் எந்த நேரத்திலும் சூரியனின் பிரகாசத்தை விஞ்சும் வண்ண விளக்குகள் பிரகாசித்துக்கொண்டேயிருந்ததால் அந்தக் காலங்களில் எந்த கவிஞனும் நிலவைப்
|
பார்த்து கவிதை எழுத முடியாமல் போய் விட்டதென்றும் அதனால் அவ்வளவு அமளிக்கிடையில் கவியரங்கங்கள் மாத்திரமே வெறிச்சோடிப் போயிருந்தன என்றும் என் பாட்டனார் தான் கேள்விப்பட்டதை மிகையின்றி எங்களுக்குச் சொல்லுவார். தன் மகள் குணமடைந்ததைக் கொண்டாடும் விதத்திலும் பிற தேசத்தின் ராஜகுமாரர்களை அரண்மனைக்கு அழைக்கும் விதத்திலும் வந்து குவிந்த ஜனங்களை கௌரவிக்கும் விதத்திலும் ராஜகுடும்பத்தின் சார்பாக பலவிதமான கேளிக்கை நிகழ்ச்சிகளும் தினசரி அன்னதானமும் பிரத்யேக விடுதியுபசாரங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இத்தனை
|
கேளிக்கைகளிலும் பங்குகொள்ள என் முதிர்முப்பாட்டனாரின் மலையாள தேசத்து மனைவியும் அவர்தம் இரண்டு ஆண் மக்களும் ஒரு பெண்ணும் ஆக நால்வரும் சிறப்பு விருந்தினர்களாக அரண்மனைக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். ( இந்தப் பெண்தான் வருடங்களுக்குப் பிறகு சொந்த தேசத்துக்கு திருப்பியனுப்பட்ட என் முதிர் முப்பாட்டனாரின் மனைவியுடன் கூடவே அனுப்பப்பட்டவள். பிறகு சாகும் வரை அவர் அவர்களிருவரையும் பார்க்கவுமில்லை கேள்விப்படவுமில்லை. ஆண் வாரிசுகள் இருவரும் வம்ச விருத்திக்காகவும் கல்வி கற்றுக் கொள்ளும் பொருட்டாகவும் அவருடனே தங்கி வளர்ந்து
|
வந்தார்கள். ஆனால் அதற்குள் சனியின் நேர் பார்வையில் சிக்கிக் கொண்டுவிட்ட என் முதிர்முப்பாட்டனாரின் வீழ்ச்சி துவங்கி விட அவருடைய வித்தைகள் கற்றுக் கொடுக்கப்படாமல் மறதியால் பாழடைந்து போனதால் அவர்களும் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இவ்விதமாக ஆக்கப்பட்ட அந்த பரிதாபத்துக்குரிய மக்களின் வாரிசுகளாகிய நாங்களும் சூட்சுமங்களை இழந்து வெறுமே மயிரைச் சிரைத்துக்கொண்டிருப்பதென்கிறதாகவே ஆகிப்போன நாவிதத்தைக் காலப்போக்கில் கைவிட்டுவிட்டு கூலிக்குக் கதை சொல்லுபவர்களாக வனத்தினுள் எங்களை மறைத்துக்கொண்டு வாழ விதிக்கப்பட்டு
|
விட்டோம். இத்தனை கோலாகலத்திற்கிடையிலும் அமளிக்கிடையிலும் தன் கணவர் அதே பழைய நடுக்கத்துடன் தன் ஏடுகளைப் புரட்டிப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர வேறெதிலும் பங்கேற்கவில்லை என்று அவர் மனைவி சொல்லி ஆச்சர்யப்பட்டுக் கொண்டேயிருந்தாராம். கரை கடந்த அந்தக் கேளிக்கை நாட்களின் உண்மையான கதாநாயகன் தானே எனும் அகம்பாவத்தூசி அவர் உடையின் நுனியிலும் ஒட்டிக்கொள்ளாததை அவர் மிகப் பெருமையாகச் சொல்லிச் சொல்லி ஆனந்தப்பட்டிருக்கிறார். இவ்வாறாக அனைவரும் இரண்டு நாளிரவுகளின் கதையைக் கேட்க வெகு ஆர்வத்துடன் அரண்மனை மைதானத்தில்
|
வந்து குழுமியிருந்த காலத்தில் ராஜனின் பெண்ணும் தனக்கு என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள மிக ஆர்வமாக இருந்தாள். அவளிடம் ராஜனும் ராஜன் மனைவியும் எவ்வளவு துருவிக் கேட்ட 511 போதிலும் அவளால் எதையும் நினைவுக்குக் கொண்டு வர முடியவில்லை. அழகிய ஆண் மக்களின் உருவம் முன்பு தந்து கொண்டிருந்த அருவருப்பு உணர்வை இப்போது தரவில்லை என்பதை மட்டுமே அவளால் நினைவில் வைத்துக்கொள்ள முடிந்திருந்தது. எனவே நடந்தவற்றைச் சொல்லும் பொருட்டு என் முதிர்முப்பாட்டனார் தன் அறையிலிருந்து வெளிப்பட்டு மீண்டும் அரண்மனை வளாகத்துக்கு விஜயம்
|
செய்து நாளன்று எல்லாருடனும் சேர்ந்து அதைக் கேட்க வசதியாக ராஜனின் பெண்ணுக்கும் தனி இருக்கை போடப்பட்டிருந்தது. அது என் முதிர்முப்பாட்டனாரின் இருக்கைக்கு நான்கடி தாழ்வான உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த பீடத்தில் இருந்தது. ராஜனின் மனைவிக்கும் ராஜனுக்கும் அவர் இருக்கைக்குச் சமமான மட்டத்தில் ஆசனங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அரண்மனை வைத்தியர் உட்பட மற்றவர்களுக்கு மூன்றடி தாழ்ந்த பீடங்களில் இருக்கைகள் வரிசையாக அமைக்கப்பட்டிருந்தன. இவ்வகை மரியாதை வெகு அபூர்வமாகவே ராஜ குடும்பத்தவரால் யாருக்கும் கொடுக்கப்படுவது வழக்கம்.
|
பொதுஜனங்கள் அரண்மனை மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த திண்டுகளிலும் தரையிலும் மரங்களின் மேலும் சிலைகளின் மேலும் அமர்ந்து கொள்ளச் சுதந்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. அவர்கள் ஆனந்த மிகுதியால் உணர்ச்சிவசப்பட்டு சின்னாபின்னப்படுத்தி வைத்து விட்டுப் போன கலைப் பொருள்களையும் அலங்காரச் செடி வகைகளையும் புற்றரையையும் மறுபடி சீர் செய்ய தொண்ணூற்றாறு நாட்களும் இருநூற்று முப்பது ஆட்களும் தேவைப்பட்டதென்பார்கள். இவ்விதமாக துவங்கும் முன்பே அகிலம் முழுவதையும் தன் வசம் ஈர்த்ததென்கிற பெருமையுடைய அந்த இரவின் கதையை என்
|
முதிர்முப்பாட்டனார் இரண்டு பகுதிகளாகப் பிரித்து இரண்டு இரவுகளில் சொல்லிப் போயிருக்கிறாரென்று கதைகள் குறிப்பிடுகின்றன. அவருடைய வித்தையில் அவருக்கிருந்த மேதமை ஓரிரவிலும் அவருடைய சமயோசிதமும் நுண்ணறிவும் இரண்டாம் இரவிலும் அந்தக் கதைகளின் வழியே வெளிப்படுகின்றன என்கின்றன அவை. வேறு சில கதைகள் அவர் சொல்லத் துவங்கிய நாழிகையின் மேல் காலம் நகராது நின்று போனதால் துவங்கிய நாழிகையிலேயே கதை முடிந்து போய்விட்டதாகச் சொல்லுகின்றன. அவர் சொல்லத் துவங்கும்போது மேற்கு நோக்கிச் சரிந்து கொண்டிருந்த பூரண சந்திரன் அந்த நிலையிலேயே
|
இரண்டு நாட்களும் உறைந்து தொங்கிக்கொண்டிருந்ததைப் பற்றி அவை குறிப்பிடுகின்றன. அவர் சொல்லத் துவங்கிய போது அங்கே நுழைந்து வீசிக்கொண்டிருந்த காற்று மீண்டு வெளியே செல்லாமல் அங்கேயே சிக்கிச் சுழன்று கொண்டிருந்தது. அவர் சொல்லத் துவங்கிய போது அங்கே குழுமியிருந்த ஒவ்வொருவரின் மனத்திலிருந்தும் துரத்தியடிக்கப்பட்ட வேறு சிந்தனைகள் அவர் கதையை முடிக்கும் வரை நுழைய முடியவேயில்லை. எனவே முதல்நாள் இரவின் முதல் ஜாமத்தின் முதல் வினாடியில் துவங்கப்பட்ட அவர் கதை முடிந்தபோது இரவும் முதல் ஜாமத்தின் முதல் வினாடியைத் தாண்டாமல் நின்று
|
கொண்டிருப்பதை அவர்கள் கண்டார்கள். உட்சுவாசத்திற்கும் வெளிச்சுவாசத்திற்கும் இடைப்பட்ட கால அவகாசத்திற்குள் மிகப் பெரிய அசம்பாவிதங்களையும் துர்மரணங்களையும் நிகழ்த்தி முடித்துவிட்ட அந்த மிக நீண்ட அல்லது மிகச் சிறிய கதையை அன்று வர முடியாமல் போன தொலை தூர உறவினர்களுக்கு அன்று வந்திருந்தவர்கள் பின்னாளில் திரும்பச் சொல்லத் துவங்கிய போது முகமனிலேயே இரண்டு இரவுகளைக் கழித்துக்கொண்டிருந்தார்கள் என்கின்றன அந்த வேறு சில கதைகள். 512 என் முதிர்முப்பாட்டனார் சொல்கிறார் : ராஜ குடும்பத்தின் வாரிசை என் என் வித்தையால்
|
காப்பாற்றினேனென்று அனைவரும் எனக்கு நன்றி கூறவும் பாராட்டவும் என்னைத் தேடி வந்த வண்ணம் இருக்கிறார்கள். உண்மையில் உபயோகப்படுத்தாமல் துருப்பிடித்துப் போகவிருந்த என் ஏட்டுக் கல்வியை ஒரு முறை தீட்டிப்பார்க்க வாய்ப்பளித்து அதற்குப் புதிய பொலிவைத் தந்த அனைவருக்கும் நான்தான் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன். பிறர் தூக்கத்தினுள் புகுந்து அவர்களுடைய கனவுகளைப் பார்க்கும் அதிசயமான என் கலை ராஜ குடும்பத்தின் வாரிசை அதன் முடிவிலிருந்து காப்பாற்ற உபயோகப்பட்டது என்று எண்ணும் போது நான் கற்ற வித்தையின் முழுப்பலனை அடைந்ததாக
|
நினைத்துப் பெருமைப்படுகின்றேன். என் பேச்சில் பலருக்கு வெறுப்பும் வைத்திய முறையில் சந்தேகமும் இருந்து வந்தபோதிலும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது என் பிரயோகத்தில் முழு நம்பிக்கை வைத்து எனக்குப் பூரண சுதந்திரம் அளித்து ஒத்துழைத்த ராஜனின் துணைவி யாரையும் இந்தச் சமயத்தில் வாழ்த்தி அவர் ஆக்ஞைப்படி நடந்தவற்றைச் சொல்லத் துவங்குகிறேன். ராஜனின் பெண்ணைப் பீடித்திருந்த வினோதமான நோய் வெறும் துர்கனவுகளின் சேஷ்டைகளால் மாத்திரம் விளைந்தது அல்ல. ஒரு ஆரோக்கியமான மனதையும் தேகத்தையும் கெட்ட கனவுகள் பயமுறுத்த முடியுமே தவிர
|
உருக்குலைத்துவிட முடியாதென்று வைத்திய மாந்திரீக சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. யதார்த்தத்தின் லயப் பிறழ்வால் பாதிக்கப்பட்ட மனதையோ உடலையோ மட்டுமே துர்சொப்பனங்கள் அவற்றின் பலவீனமான நிலையை பயன்படுத்திக் கொண்டு ஆக்கிரமித்துக் கொள்ள முடியும். ராஜனின் பெண் ஒரே சமயத்தில் கெட்ட கனவொன்றாலும் ( அதைக் கெட்ட கனவென்று எப்படி சொல்லுவது. ) அந்தக் கனவோடு அதிசயக்கத்தக்க விதத்தில் இயைந்து போன புற யதார்த்த வினோதமொன்றாலும் பீடிக்கப்பட்டு நோயுற்றுப் போனாள். வினோதத்திற்குக் காரணம் அவள் புறத்தே கண்ட அந்த யதார்த்தம் இன்னொரு உயிரின்
|
கனவாக இருந்தது என்பதுதான். இதை நான் கண்டு பிடிக்க நேர்ந்ததும் ஒரு தற்செயலான சம்பவமே. அதற்காகக் கடவுளுக்கு நன்றி கூற வேண்டும். ஏனென்றால் அதை நான் கண்டுபிடித்திருக்காவிட்டால் கனவுகளுக்குள் ஊடுருவி அதைக் கைபற்றும் பூர்ணத்துவத்தை இன்னும் எட்டிவிட முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் என் குறைப்பட்ட கல்வி ஞானத்தை மட்டும் வைத்துக்கொண்டு ராஜன் மகளை என்னால் குணப்படுத்தியிருக்க முடியாது. உண்மையில் அவளைப் பீடித்திருந்த நோயை நோய் என்று சொல்லுவதே தவறு. அது எதிர்கால நிகழ்வொன்றின் சூசக வெளிப்பாடு. அந்த சமிக்ஞையின் அர்த்தத்தைக்
|
கண்டு கொள்ள என்னால் முடியவில்லை. அது ராஜ குடும்பத்தின் விதியோடு தொடர்புள்ளதாக இருக்கலாம். அதை வேறு யாரும் கூட கண்டு சொல்ல ஆகாது என்றே மனப்பூர்வமாக நான் நம்புகிறேன். இதைப்பற்றி நான் மேற்கொண்டு வேறேதும் தெரிவிக்க விரும்பவில்லை. நாம் நடந்த நிகழ்ச்சிகளுக்குச் செல்லலாம். ( இவ்வாறாக என் முதிர்முப்பாட்டனார் தான் கண்டுகொண்ட தவிர்க்க முடியாத தன்னுடைய தலையெழுத்தையும் தன் நாட்டின் விதியையும் மக்களிடமும் ராஜனிடமும் கொண்டிருந்த வாஞ்சையால் சொல்லாமல் விட்டார் ). 513 ராஜன் பெண்ணின் கனவுகளைக் கண்டுணர நான் சென்ற இரவு என்னுள்
|
இருந்த நடுக்கத்தையும் தயக்கத்தையும் என் மனைவியே நன்கறிவாள். யவ்வனப் பெண்ணொருத்தியின் கனவுகளை வைத்தியன் உள்பட யாருமே பார்ப்பதைப் பற்றி நான் படித்த சாஸ்திரங்கள் எதுவுமே குறிப்பிடவில்லை. பெண்களின் கனவுகள் பற்றி அனைத்துக் கலை சாஸ்திரங்களுமே மௌனம் சாதிக்கின்றன என்பதை நான் திடுக்கிடும் விதத்தில் இந்தச் சந்தர்ப்பத்தில்தான் அறிந்துகொள்ள நேர்ந்தது. அந்த வகையில் வித்தைகள் குறைப்பட்டவையென்று கூறுவதில் எனக்குத் தயக்கம் எதுவும் இல்லை. அந்த அனுபவத்தால் இனி எனக்கு விதிக்கப்படவிருக்கும் நற்பலனோ அன்றி கெட்டபலனோ அந்தக் குறையை
|
நிவர்த்திக்கும் பாடமாக அவற்றில் சேர்க்கப்பட வேண்டியதாயிருக்கும். ரகசியமானவை. அவள் கன்னித்தன்மையைப் போலவே அவளுக்கு மட்டும் சொந்தமானவை. நம்பமுடியாத அளவுக்கு அதிசயத் தன்மையும் வண்ணங்களும் சுகந்தமும் கொண்டவை. அவற்றை இரண்டாம் மனிதர் குறிப்பாக ஒரு ஆண் காண அனுமதி கிடையாதென்ற இன்னமும் நான் நம்புகிறேன். என்றாலும் சந்தர்ப்பவசத்தால் ராஜன் பெண்ணின் கனவை நானும் காணும் வாய்ப்பு எனக்கு விதிக்கப்பட்டது. இப்போது அதே போல மற்றொரு சந்தர்ப்பவசத்தால் அதை வெளியே சொல்ல வேண்டிய கட்டாயமும் நேர்ந்து விட்டது. இந்தப் பெண்ணைப் போன்ற
|
இன்னொரு பெண் இந்த உலகத்தில் எங்கேனும் அதேவித நோயால் துன்புற்றுக்கொண்டிருந்தால் அவளுக்கும் வைத்திய சாஸ்திரத்தில் சில திருத்தங்களுக்கும் இது உபயோகப்படட்டும் என்கிற தூய எண்ணத்துடனேயே இன்று நான் இதை பகிரங்கமாக வெளியே என்னைச் சூழ்ந்துகொள்ள நான் மனப்பூர்வமாகவே அனுமதிக்கிறேன். கடவுள் என்னை மன்னிக்கட்டும். உலகத்திலுள்ள அனைத்து யவ்வன ஸ்திரீகளின் கனவுகளைப் போலவே ராஜன் மகளின் கனவும் அவளுடைய ஆண் துணையைப் பற்றியதாகவே இருந்து வந்தது. உலகத்திலுள்ள அனைத்து யவ்வன ஸ்திரீகளைப் போலவே அவளும் அந்தக் கனவை விரும்பிக் கண்டு வந்தாள்.
|
அவளுடைய இரவுகளுக்குத் துணையாக அவளே தன் கற்பனையில் சிருஷ்டித்துக் கொண்ட ஆண்மகன் அவளுடன் நெடுங்காலமாகப் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டிருந்தான் என்பதைக் கனவில் அவன் அவளுடன் பழகும்போது காட்டிய சுவாதீனத்தையும் சகஜத்தையும் கண்டு நான் அறிந்துகொண்டேன். அவன் அவளுக்குச் சாவைப் போலத் தவிர்க்க முடியாதவனாயிருந்தான். அவனுடைய அவயவங்கள் அறுதியிட்டுச் சொல்ல முடியாதபடி அரூபத் தன்மையும் கலைந்து சேரும் நீர்த் தன்மையும் கொண்டிருந்தன. ஆனால் அவன் பேரழகன். அங்க அங்கமாக பொலிவைப் பிரித்துப் பார்க்க முடியாவிட்டாலும் அவனுடைய இருப்பும்
|
கனவின் சுகந்தமுமே அவன் பேரழகன் என்பதைத் தெளிவாகப் பறைசாற்றிக் கொண்டிருந்தன. இந்த உலகத்தில் எங்கும் காணப்படவே முடியாத அற்புதமான ஆண்மக்கள் கன்னிப்பெண்களின் கனவுகளுக்குள் எத்தனை சுவாதீனமாக நடமாடிக் களிக்கிறார்கள். உண்மையில் அவ்வளவு வசீகரமான ஆண்கள் பூதவுடலுடன் வசிக்கத் தகுதியற்றதுதான் இந்த யதார்த்தமும். அந்த அழகன் உருவத்தில் புகைத் தன்மையுடன் காணப்பட்டாலும் அவன் அசைவுகளில் தீர்க்கம் இருந்தது. அவன் ராஜன் பெண்ணின் படுக்கையறையின் வலப்புறச் சாளரத்தின் வழியாக மதுரமான தென்றலின் எடையின்மையோடு உள்ளே நுழைந்தான். அவன்
|
உள்ளே நுழைந்தவுடன் படுக்கையறை மட்டுமே நம் ராஜனின் 514 அரண்மனையைப் போலப் பத்து மடங்கு பெரிதான அளவில் பிரம்மாண்டமானதாக விசாலித்து விட்டது. ராஜன் மகளின் சப்பர மஞ்சமோ ஒரு அஸ்வரதம் இரண்டு நாட்கள் ஓடிக் கடக்கும் அளவுக்கு விரிந்து மலர்ந்து கிடந்தது. படுக்கையறையின் விதானத்தின் வழியாக மேகங்களும் நட்சத்திரங்களும் வானத்தின் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடிக்குத் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தன. அறையின் பொருட்களில் செதுக்கப்பட்டிருந்த வேலைப்பாடுகள் ஒவ்வொன்றுமே தனித்தனிப் பொருட்களால் பரிமாணம் பெற்றன. உள்ளே வளர்க்கப்பட்டிருந்த
|
மலர்கள் விரித்த மணம் கனவைத் தாண்டி வெளியேயும் சுழன்று அடித்தது. ஒவ்வொரு நுண்ணியதுகளும் பன்மடங்காக வளர்ந்து போனதால் அவற்றின் இயற்கையான வண்ணங்கள் சூரியனின் பிரகாசத்தைப் போல வெம்மையும் ஜொலிப்பும் பெற்று அறையை வண்ணங்களாலும் அங்கே சுற்றித் திரிந்த இருவரையும் வியர்வையாலும் குளிப்பாட்டின. இத்தகைய அற்புதமான கனவுலகை சிருஷ்டித்துக் கொண்டும் ராஜனின் பெண் அறையெங்கிலும் சிருங்கார ரசம் ததும்பும் பாடல் வரிகளை முணுமுணுத்த வண்ணம் தன் நண்பனுடன் அந்தர வெளியில் பறந்தபடிக்கும் உல்லாசமாக வளைய வந்து கொண்டிருந்தாள். அவனுடைய புகை
|
வடிவம் இந்தப் பெண்ணுக்கு எந்த விதத்திலும் ஒரு குறையாகப் படவில்லை. அவள் அவனை உடலோடும் உதிரத்தோடும் உண்மையான மனிதனை தழுவிக் கொள்வது போலவே தழுவிக்கொண்டாள். அவனை முத்தமிடுவது போலவே உதடுகளிலும் மார்பிலும் நாபியிலும் நாபியின் கீழும் முத்தமிட்டான். அவர்களிருவரும் என் காதுகள் கூசும்படியான கனிந்த அந்தரங்க வார்த்தைகளைத் தங்களுக்குள் பரிமாறிக் களிப்புடன் கொஞ்சிக் கொண்டார்கள். வண்ணங்களும் மணமும் சிரிப்பொலியும் ஒன்றறக் கலந்த ஆடையணிகளின் அலைவும் உலகத்தையே துயிலிலிருந்து எழுப்பி விடும் ஆரவாரத் தன்மையும் அப்பழுக்கற்ற
|
தூய்மையும் கொண்டு இலங்கின. ஆண்டவனே வார்த்தைகளால் அசுத்தப்படுத்தக் கூடாத இந்தப் பரிசுத்தமான காட்சிகளை வெளியே சொல்லும் துர்பாக்கியம் எனக்கு என் வித்தையால் வாய்த்ததே. ஒருவர் ஓட ஒருவர் துரத்தியும் ஒருவர் ஒளிந்துகொள்ள ஒருவர் கண்டுபிடித்தும் ஒருவர் கண்களைக் கட்டிக் கொள்ள ஒருவர் வேடிக்கை காட்டியும் அவர்கள் நெடுநேரம் விளையாடினார்கள். ஒவ்வொரு விளையாட்டின் முடிவிலும் ஒருவர் மற்றவரை வெற்றிகொண்டதற்கு அடையாளமாக எதிரியை இறுக அணைத்துக் கொண்டார்கள். ஒவ்வொரு விளையாட்டின் நோக்கமும் அதுவேயாக இருந்தது. மனிதனின் கைகள் படாத பெரிய
|
வனத்தின் விஸ்தாரத்துடன் திகழ்ந்த அந்தக் கனவு மாளிகையில் அவர்கள் விளையாட இரண்டு நபர்கள் நிற்கச் சிரமப்படும் அளவே இடம் கிடைத்தததைப் போல ஒருவரையொருவர் ஒட்டிக்கொண்டே நின்றுகொண்டிருந்ததைப் பார்த்த போது எனக்கு வேடிக்கையாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. இப்படியே அவர்கள் கனவுலகின் அனாதி காலங்களை விளையாட்டில் கழித்த பிறகு படுக்கைக்கு திரும்பி வந்தார்கள். ராஜனின் பெண் தன் வழக்கமான இடத்தில் தன் வழக்கமான துயில் நிலையில் கழித்த பிறகு படுக்கைக்குத் திரும்பி வந்தார்கள். ராஜனின் பெண் தன் வழக்கமான இடத்தில் தன் வழக்கமான துயில்
|
நிலையில் நிமிர்ந்து படுத்துக் கொண்டாள். அவளுடைய நண்பன் அவள் கட்டிலின் கீழ்புறத்திலிருந்து மெதுவாகச் சுழன்று எழும்பி அவளை கால்களிலிருந்து முத்தமிட்டுக் கவிந்தபடி படிப்படியாக முகத்தை 515 அணுகினாள். ராஜகுமாரியின் கண்கள் அளவு கடந்த அமைதியிலும் ஆனந்தத்திலும் எதிர்பார்ப்பிலும் கசிந்த கண்ணீருடன் மூடியிருந்தன. அப்போதுதான் சபையோரே நெஞ்சைப் பிளக்கும் அந்தக் கொடூரமான சம்பவம் நிகழ்ந்தது. தினமும் ராஜனின் பெண்ணை அவள் ஞாபகமின்றியே வாட்டி வதைத்துக் கொண்டிருந்த துயர சம்பவம் நடந்தே விட்டது. அவள் முகத்தை மிக அருகே நெருங்கி
|
வந்த அவளுடைய நண்பன் திடீரென்று அவள் முகத்தில் காறியுமிழ்ந்தான். ஒரு நொடிக்குள் பின் அவனுடைய புகையுருவம் மிக வேகமாகச் சிதிலமடைந்து கலைந்து மறைந்து போனது. அவனுடைய ரத்தமும் சதையுமற்ற பேரழகு முகத்திலிருந்து வெளியே தெறித்த எச்சில் கெட்ட கனவில் துர்மணத்தை அறை முழுக்க விசிறியடித்தபடி கூழொத்த வெண் திரவமாக ராஜன் பெண்ணின் முகத்திலிருந்து வழிந்துகொண்டிருந்தது. அவள் பீதியிலும் அருவருப்பிலும் துயரத்திலும் அலறியபடி உறக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழித்துக்கொண்டாள். அன்று இரவு மட்டுமல்ல. ஒவ்வொரு இரவிலும் அவள் கனவு
|
இந்தவிதமாகவே முடிந்து போய்க்கொண்டிருக்கிறது என்பதை நான் மறுநாளிரவு சரியாகவே யூகித்தறிந்தேன். அலறியபடி விழித்துக்கொள்ளும் பரிதாபத்திற்குரிய ராஜன் மகளோ விழிப்பின் பலவந்தத்தில் தான் சற்றுமுன் என்ன கனவு கண்டோமென்பதை ஒவ்வொரு நாளிரவும் மறந்து போய்க் கொண்டுமிருந்தாள். இதனால் முதல் நாளிரவு அவள் முகத்தில் துப்பிய அவளுடைய நண்பனும் மறு நாளிரவு வெகு சகஜமாக அவளுடன் விளையாட வருவதும் துவேஷமின்றி அவள் அவனைத் தன்னுடன் விளையாட அனுமதிப்பதும் விளையாட்டின் முடிவில் அவள் முகத்தில் அவன் துப்பிவிட்டுப் போவதும் தொடர்ந்து
|
நடந்துகொண்டே இருந்திருக்கிறது. அவள் கனவு முழுவதும் மறந்து கலைந்து போகும்படியான அசாத்தியமான வேகத்துடனும் ஈட்டியின் முனையைப் போல மிகக் கூர்மையாகத் தாக்கும் படியும் ஒவ்வோர் நாளிரவும் அவன் அவள் முகத்தில் துப்பிக் கொண்டே இருந்திருக்கிறான். இந்த அதிர்ச்சி மட்டும் ஒரு கசடாக ஆழ்மனதில் படிந்து போய் அழகிய ஆண்களைக் காணும் போதெல்லாம் ஏற்படும் பயமாகவும் அருவருப்பாகவும் இந்த அழகிய பெண்ணின் மனதை சின்னாபின்னப்படுத்திவிட்டது. ராஜன் மகளுக்குத் தன் வினோத நடத்தையின் காரணம் இதுதானென்பது தெரியவில்லையென்றால் எனக்கோ மறுநாளிரவுவரை
|
அவளுடைய நண்பன் அப்படி நடந்து கொள்வதன் காரணம் தெரியவில்லை. ஆனால் அதைக் கண்டுபிடித்து விட முடியுமென்கிற நம்பிக்கையைத் தூண்டும் விதமாக அன்று இரவே நான் ஒரு ரகசியத்தை ராஜன் பெண்ணின் படுக்கையறையில் கண்டுபிடித்தேன். உறக்கத்திலிருந்து அதிர்ச்சியுடன் விழிப்புக் கண்டவுடனேயே தான் கண்ட கனவை மறந்துபோய்க் கொண்டிருந்தாளென்று சொன்னேனல்லவா. எனவே அவளை மறுபடி தூங்கச் செய்ய எனக்கு அதிக அவகாசம் தேவைப்படவில்லை. அவள் வெகு சாதாரணமாகவே சற்று நேரம் என்னுடன் பேசிக்கொண்டிருந்து விட்டுத் தூங்கிப்போனாள். பேச்சில் கூட அவள் கண்ட கனவின்
|
சாயல் படிந்திருக்கவில்லை. எனவே நானும் அந்தக் கனவைப் பற்றி வேப்ப மணத்தோடு கூடிய இரவுக் காற்று அறைக்குள் நுழைந்த போதே நான் அந்த அறையின் சாளரம் திறந்திருப்பதை உணர்ந்தேன். எப்போதுமே அந்தச் சாளரம் திறந்த நிலையில்தான் இருக்குமென்று நான் பின்னர் என் சிஷ்யையிடமே கேட்டுத் தெரிந்து கொண்டேன். இருந்தும் சாளரம் அப்படித் திறந்திருக்கிறதென்பது கடவுள் எதையோ சூசகமாக அறிவிக்க முயலுகிறாரென்கிற உணர்வை எனக்குத் தந்தது. நான் அன்று ராஜன் பெண்ணின் படுக்கையறையில் போடப்பட்டிருந்த நீண்ட இருக்கைகளில் ஒன்றிலேயே படுத்து இரவைக் கழிக்க 516
|
முடியுமென்று சொல்லியிருந்தேன். இரவு கலைவதற்கு அப்போது நெடு நேரமிருந்தது. நான் எழுந்து சாளரத்தின் அருகே சென்றேன். சாளரத்தின் மிக அருகே படுக்கையறையை அரண்மனைத் தோட்டத்தில் வளர்ந்திருக்கும் வேப்ப மரத்தின் உச்சிக் கிளை தழைத்து நெருங்கியிருக்கிறது. ஈட்டிகளால் அமைக்கப்பட்ட பன்னிரெண்டடி உயரமான வேலியில் நம்பிக்கை வைத்து காவலர்கள் குறைக்கபட்டிருந்த அந்தப் பகுதியில் அரண்மனைத் தோட்டத்தின் புல் வெளியிலிருந்து புறப்பட்டு இரண்டு காலடிச் சுவடுகள் மரத்தின் மீதேறி உச்சிக் கிளையை அடைந்து சாளரத்தின் வழியே ராஜனின் மகளின்
|
படுக்கையறைக்குள் தாவியிருப்பதைக் கண்டேன். அவை பிறகு அறையின் சுவரோரமாகவே பதுங்கிப் பதுங்கி நடந்து அங்கே நிறுத்தப்பட்டிருந்த பொருட்களை அவை இங்கே இல்லாதனவே போல் ஊடுருவிக் கடந்து ராஜன் பெண்ணின் தோழி படுத்திருக்கும் இணைப்பறைக்குள் நுழைந்து மறைவதையும் கண்டேன். இளவரசியின் கனவு நண்பன் அவள் முகத்தில் காறியுமிழும் காரணத்தை கண்டுபிடித்து விட முடியுமென்கிற நம்பிக்கை என்னுள் உதயமாயிற்று. இந்த அளவோடு என் முதிர் முப்பாட்டனாரின் முதல் நாளிரவுக் கதை ( அல்லது உட்சுவாசத்தின் கதை ) முடிந்தது. கதை கேட்டுக் கொண்டிருந்த ஜனங்களும்
|
அரச குடும்பத்தவரும் அங்கிருந்து கலைந்து செல்ல மனமின்றி கலைந்து சென்றார்கள். அனுமதிக்கப்பட்டவர்கள் அங்கேயே உட்கார்ந்து பேசி மறுநாள் இரவு வரை தங்கள் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவருடைய பேச்சின் மையமும் இளவரசியின் கனவின் மீதும் வேப்பமரத்தின் வழியே அரண்மனைப் படுக்கையறைக்குள் தாவிய மாயக் காலடிச் சுவடுகளின் மீதுமே குவிந்திருந்தது. அவர்கள் அனைவருமே ராஜன் மகள் உறங்கும்போது தானுறங்காமல் அவளுக்குக் காவலிருக்க வேண்டிய அவளின் தோழிதான் அந்தக் காலடிகளுக்குரிய நபரை விருப்பத்துடன் உள்ளே அனுமதித்தாளென்று
|
அவளை வெறுக்கத் தலைப்பட்டார்கள். அவள் உண்ட வீட்டிற்குச் செய்த இரண்டகம் மன்னிக்க முடியாதென்று அனைவருமே ஒத்த குரலில் கூவி ராஜதானியைத் தாண்டிச் செல்லும் பருவக் காற்றின் வழியே தொலைதூரவாசிகளுக்கெல்லாம் இந்த ஒழுக்கக்கேட்டைப் பற்றிச் செய்தி அனுப்பி விட்டார்கள். எனவே தொலைதூரவாசிகளும் ராஜன் பெண்ணின் தோழியைத் தங்கள் மனதார வெறுத்தார்கள். மறுநாளிரவு கதை முடிந்தவுடன் அவளுக்கு ராஜன் என்ன தண்டனை தருவாரென்பது பற்றி நட்சத்திரங்களை விஞ்சும் எண்ணிக்கையில் ஊகங்கள் அவர்களிடையே வெடித்துச் சிதறின. நகரத்திலிருந்து வெகு தொலைவு விலகிய
|
சிறிய கிராமம் ஒன்றிலிருந்து தோழியின் வீடு அன்றிரவே தீக்கிரையாக்கப்பட்டது. அதில் வசித்து வந்த அவளுடைய வயது முதிர்ந்த பெற்றோர்கள் வருந்தி தாங்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்படுவதை முழுச் சம்மதத்தோடு ஏற்றார்கள். இது நடந்து பத்தொன்பது நாட்களுக்குப் பிறகே விஷயம் அரண்மனையை எட்டியது. ராஜதானியே அந்த நிகழ்ச்சிக்காக பத்தொன்பது நாட்கள் கழித்துத் துக்கம் அனுஷ்டித்தது. முதல் நாள் கதை முடிந்த அந்த இரவில் அவளை வெறுத்துக் கொன்று போடத் துடித்த அனைவருமே அடுத்த நாளிரவுக் கதை முடிந்ததும் தங்கள் தவறை உணர்ந்தார்கள். அந்தப்
|
பெண்ணிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டதோடு தவறுகள் சரி செய்யப்பட்டுவிட்டதாகவும் அவர்கள் தங்களைச் சமாதானப் படுத்திக்கொண்டார்கள். ஆனால் 517 தனக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பத்தொன்பது நாட்களுக்குப் பிறகு தன் மனமதிர அந்த அப்பாவிச் சேடிப்பெண் தெரிந்துகொண்டபோது என் முதிர்முப்பாட்டனார் முதல் நாளிரவில் முடிக்கக் கூடாத இடத்தில் கதையை முடித்ததுதான் தன்னை நிர்கதியாக்கியதென்று அவரை மனதாரச் சபித்துவிட்டு ராஜன் பெண்ணின் படுக்கையறைச் சாளரத்திலிருந்து புலி பாய்ந்த அதே வழியாக நந்தவனக் குத்தீட்டி வேலியின் மேல் பாய்ந்து
|
தன் உயிரை இருபதாம் நாள் மாய்த்துக்கொண்டு விட்டாள். இது ஒருபுறமிருக்க முதல் நாளிரவு கதை முடிந்த பிறகு அரண்மனைக்குத் திரும்பி வந்த ராஜன் மனைவியும் ஒரு பெண்ணின் தாப ரசம் ததும்பும் கனவுகளை அவள் பெற்றோர்களின் முன்னிலையில் ஒரு பெரும் ஜனத்திரளே அறிய பகிரங்கமாக வர்ணித்த என் முதிர்முப்பாட்டனாரை வெறுத்து அவரைத் தன் வாயாரச் சபித்துக்கொண்டிருந்தாள். ஆண்களின் உலகில் ஒரு பெண்ணின் மனம் என்பது அவள் தகப்பனாலும் அவளுடைய உடல் என்பது பிற எல்லா ஆண்களாலும் கற்பனையால் சிருஷ்டித்துக்கொள்ளப்படுகிற வஸ்துக்கள் என்னும் வழக்குச் சொல்லை
|
நினைத்து அவள் அன்றிரவு தூங்காமலும் தவித்தாள். தன் பெண்ணின் மூடிய கண்களினுள் பிரவகித்துக் கொண்டிருந்த சிருங்காரக் கனவு அவள் நாசி நுனியில் மலராகவும் உதடுகளின் ஓரங்களில் புன்னகையாகவும் கன்னங்களில் சிவந்த வண்ணமாகவும் முலைக் காம்புகளில் கடினமான முத்தாகவும் பிரதிபலிப்பதையும் அவள் தன் கற்பனையில் கண்டு பீதியடைந்தாள். பார்ப்பவரைப் பரவசப்படுத்தும் அந்த உடல் மாற்றங்களை இருபத்தியிரண்டு ஆண்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்பதை அவளால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. ராஜனை அவள் தன் வெறுப்பிலிருந்து அவன் தன் பெண்ணின்
|
தகப்பன் என்கிற முறையில் ஒதுக்கிவைத்தாள். ராஜனையும் என் முதிர்முப்பாட்டனாரையும் தவிர்த்த பிற இருபது வேடர்களையும் மன்னிப்பதற்கு அவளுக்கு எந்த காரணம் எதுவும் கிடைக்கவில்லையாதலால் படுக்கையறைக்குள் நுழைந்து நட்சத்திரவாஸிகளின் கலவி என்கிற பாடலை இசைத்த அந்த இருபது ஆண்களின் தலைகளை உடனே வாளால் சீவிக் கொய்துவிடும்படி ராஜனுக்குத் தெரிவிக்காமல் ரகசியமாகத் தன் சிப்பாய்களுக்கு ஆணையிட்டாள். அதன்படி அந்த வேடர்கள் அன்றிரவே கொலைக்களத்திற்கு இரண்டாம் பேரறியாமல் வரவழைக்கப்பட்டு வெட்டிக் கொல்லப்பட்டுவிட்டார்கள். ஈடாக வழங்கப்பட்ட
|
பெரும் செல்வத்தினடியிலும் ராஜ விசுவாசத்தின் சுமையிலும் சிக்குண்டு அவர்களுடைய குடும்பத்தினரின் கண்களும் நாவுகளும் நசுங்கிப் போய்விட்டன. இந்தக் கொலைகளுக்குப் பிறகே அரண்மனையில் ராஜன் பெண்ணின் திருமணம் உள்பட பல காரியங்களின் வரிசையும் என் முதிர்முப்பாட்டனாரின் கீர்த்தியும் தலைதெறிக்கும் வேகத்தில் உச்சியை நோக்கிப் பாய்ந்து சென்றன என்று சொல்வார்கள். ஆனால் அப்பழுக்கற்ற ஒரு பெண் அநியாயமாக நிர்கதியாக்கப்பட்டாள் என்கிற விஷயத்தையும் தன் கவலை தீர இசைத்த இருபது வேடர்கள் கொல்லப்பட்ட செய்தியையும் பல நாட்கள் கழித்தே தெரிந்து
|
கொண்ட ராஜன் பிரகாசிக்கும் தன் அதிகாரத்தின் நிழலில் நடந்து போன பிசகுகளுக்குத் தானே பொறுப்பேற்றுக் கொண்டு என்றென்றுமே எழுந்திருக்க முடியாத நோயில் வீழ்ந்து படுத்த படுக்கையாகி விட்டான். என் முதிர்முப்பாட்டனாரைப் பொறுத்தவரையில் அந்த இரவிலேயே இருபது வேடர்களுடன் சேர்த்து அவரையும் அவள் கொன்றுவிடத் துடித்ததாக வருடங்கள் கழித்து அவர் அரண்மனை வளாகத்தை விட்டு வெளியே துரத்தப்பட்ட அன்று எக்காளத்துடன் உரக்கச் சொல்லிச் சிரித்தாளென்கிறது ஒரு கதை. ஆனால் கதையைக் கேட்டு விட்டு வந்த இரவில் அவருடைய 518 ஆளுமையும் ஞானமும் பெருமையும்
|
இவற்றுக்கு மேலாக நன்றியுணர்சிச்யும் அவரைக் கொல்லும் அவாவிலிருந்து ராஜன் மனைவியைப் பிரித்து அப்புறப்படுத்தி வைத்தன. இளம்பெண்ணின் கனவுகளைக் கூச்சமில்லாமல் பார்த்ததோடல்லாமல் அதை வெளியே சொன்னவன் அந்தக் கனவுகளின் நினைவால் தானே சாவான் எனும் மூதுரையை எண்ணி அவள் தன்னைச் சமாதானப்படுத்திக்கொண்டான். அந்த மூதுரை துரதிர்ஷ்டவசமாக உண்மையாகவும் இருந்தது. விதி ராஜன் மகளின் இடை நெகிழ்ந்து ஸ்தனங்கள் சரிந்த துயில் நிலையை என் முதிர்முப்பாட்டனாரின் மனக்கண் முன் திரும்பத் திரும்பக் காட்டி அவரை ரகசியமாகப் பல நாட்கள் அலைக்கழித்து
|
வந்தது. பேதங்களைத் துறந்துவிட்ட தன் மனம் சிருங்கார உணர்வுகளால் கறைப்பட்டுக்கொண்டிருந்த பாவத்திலிருந்து தப்பித்துக்கொள்ளும் வண்ணம் இளமையிலேயே தன்னைச் சாவு அணைத்துக் கொள்வதை அவர் மூன்றாவது பிரயோகத்திற்குப் பிறகு அந்த நாட்களில் எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருந்தார். மாறாக தான் ஒரு சாட்சியாக நின்று கண்ட ராஜன் மகலின் கனவும் அவளின் உறக்கமும் அவர் உள்ளத்தில் விதைத்த விஷ விதையோ அழியாமல் ராஜன் மனைவியின் விருப்பப்படியும் அவர் விருப்பத்திற்கு மாறாகவும் வளர்ந்தபடியே தானிருந்தது. ராஜன் மகள் தன் நோய் தீர்ந்து அழகும்
|
ஆரோக்கியமும் கொண்ட அரசகுமாரனுக்கு மணமுடிக்கப்பட்டு புகுந்த வீடு சென்று பல காலங்களுக்குப் பிறகும் மக்கள் அவளைக் கிட்டத்தட்ட மறந்தே போன பிறகும் அவளுடைய கனவைக் கண்டதன் பாதிப்பால் விரக நோயுற்று அலைந்த என் முதிர் முப்பாட்டனார் ( மூன்றாவது பிரயோகத்திற்குப் பிறகே தெரிந்து கொண்ட ) பெண்களின் கனவுகள் புருஷர்களால் பார்க்கப்படக் கூடாதவை என்று அறிவுறுத்தும் சொப்பன சாஸ்திரத்தின் கடைசி அங்கத்தை மறந்துபோய் அப்படிப் பார்வையின் கறை படாதவையானதினாலேயே அவை மூப்பைத் தவிர்த்து நித்திய சௌந்தர்யத்தைப் பெற்றிருக்க ஆசிர்வதிக்கப்
|
பட்டவை என்று எடுத்தியம்பும் பகுதியை மட்டும் நினைவில் கொண்டவராய் பழைய நகரத்தின் பெருமைமிகு பெண்மணியாக மதிக்கப் பட்டுக்கொண்டிருந்த தன் மனைவியின் இளமை ததும்பும் கனவிற்குள் அவளறியாமல் புகுந்து பார்க்கும் கீழான மனநிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார். சாஸ்திரத்தின் விதிகளோ குருவிற்கு அளித்த வாக்குறுதியோ நினைவிற்கு வராத வண்ணம் விதி அவர் ஞானத்தைக் கட்டிப்போட்டுவிட்டது. மனைவியான அந்தப் பேரிளம்பெண்ணின் கனவில் அவர் எதிர்பார்த்த படியே அவளை இறுக்கமும் மதர்ப்பும் நறுமணமும் ததும்பும் தன் குருவின் மகளாக திருமணத்திற்கு
|
முன்பிருந்த பழைய யவ்வன ஸ்திரீயாகக் கண்டு ஞானவான்கள் உதாசீனப்படுத்தும் சிருங்கார உணர்வால் புளகாங்கிதமடைந்தார். அந்தக் கணத்திலேயே விரோதித்துக்கொள்ளப்பட்ட சாஸ்திரங்களின் கோபமும் வஞ்சிக்கப்பட்ட குருவின் சாபமும் அதே கனவில் அவர் கண்முன் வேறு இரண்டு பைசாசக் காட்சிகளையும் உருவாக்கி விட்டது. ஒன்றில் யவ்வனம் ததும்பி நிற்கும் தன் மனைவியின் முன் அவள் புறங்கையால் அலட்சியப்படுத்தி ஒதுக்கும்படி நடுப்பிராயத்தை முழுவதுமாகத் தாண்டியிராத என் முதிர்முப்பாட்டனார் தானொரு நரைகூடி முதிர்ந்த கிழவனாகத் தள்ளாடியபடி நின்றிருக்கக் கண்டு
|
அதிர்ந்து போனார். இரண்டாவதும் குருதியைச் சில்லிட வைத்ததுமான காட்சியில் பல வருடங்களுக்கு முன் நோயாளியின் துர்கனவால் நிலைகுலைந்து போய் தன்னை இவ்வுலகின் கண்களிலிருந்து காணாமல் போக்கிக்கொண்டு விட்டவரென்று நம்பப்பட்ட அவருடைய பால்யகால நண்பர் தன் ஒளிவிடத்திலிருந்து காளைப் பருவம் சற்றும் தளராத உடற்கட்டோடு குருவின் மகளின் முன் 519 தோன்றினார்கள். சுருட்டி இழுக்கும் சாவின் படிக்கட்டுகளில் ஒருபுறம் தள்ளாடியபடி தான் ஏறிக்கொண்டிருக்க அதே படிக்கட்டுகளைப் படுக்கையாக்கி அவர்களிருவரும் பூரண நிர்வாணிகளாய் அதன் மீது சல்லாபித்து
|
விளையாடுவதைச் சாபத்தால் வலுக்கட்டாயமாகத் திறக்கப்பட்ட கண்களால் பார்த்த என் முதிர்முப்பாட்டனாரின் நினைவிலிருந்து அவர் கற்ற வித்தை முழுவதும் அந்தக் கணத்திலேயே மறந்து போய்விட்டது. அதற்குப் பிறகு அவரும் அதை வெளியில் எங்கும் தேடி மெனக்கெடவில்லை. அவருக்குள் ஜொலித்துக் கொண்டிருந்த கலையின் பிரகாசம் அணைந்து போனதால் அவர் முகம் எரிந்தவிந்த விறகுக்கட்டையைப் போலக் கருத்துப் பொடிந்து போய்விட்டது. அவர் தனக்குத்தானே மழித்துக் கொள்வதை நிறுத்தி தலையிலும் முகவாயிலும் தாறு மாறாக வளர்ந்த மயிர்க்கற்றைகளில் அடை எனப்படும்
|
துர்முடிச்சுகள் உருவாகிப் பெருக அனுமதித்துவிட்டார். அப்படியொரு வீழ்ச்சியை எதிர்பார்த்திருந்த அவருடைய எதிரிகளும் அவர் பசுவைப் புணர்ந்தவர் என்றும் சாஸ்திர விரோதி என்றும் இருபது அப்பாவிகளின் மரணத்திற்குக் காரணமாயிருந்தவர் என்றும் மனைவியைப் பிறந்த வீட்டிற்குத் திரும்ப விரட்டியடித்தவர் என்றும் அஞ்ஞானப் பீடையால் பீடிக்கப்பட்டு விட்டவர் என்றும் பலமாகப் பிரச்சாரங்கள் செய்து அவரைத் தீராத பழிக்குள் தள்ளி அரண்மனையை விட்டு வெளியேற்றிக் காட்டிற்குள் துரத்தி விட்டார்கள். அவருடைய இரண்டு ஆண் வாரிசுகளை ஆதரவற்றவர்களாக்கி
|
அவருடன் கூடவே துரத்தி விட்டார்கள். மறந்து போன தன் வித்தையை அவர்களுக்குக் கடத்த முடியாமல் என் முதிர்முப்பாட்டனார் அவர்களை அஞ்ஞானிகளாக்கினார். ஒரு காலத்தில் பெண்களுக்கான வேதமாயிருந்த அவருடைய போதனைகளடங்கிய ஓலைச் சுவடிகள் முழுவதையும் தேடி எடுத்துத் தடயமில்லாமல் மடாதிபதிகள் அவற்றை அழித்தொழித்தார்கள். பெண்களை மீண்டும் புஜங்களடியிலும் யோனியிலும் மழித்துக்கொள்ளாத காடாக ரோமம் வளர்க்கச் செய்து துர்மணத்தால் அவர்களை எப்போதும் குற்ற உணர்வுக்குள்ளானவர்களாக ஆக்கித் தங்கள் ஆளுமையின் கீழ் அடிமைப் படுத்திக் கொண்டார்கள்
|
துர்கனவுகளால் அவதிப்பட்டவர்கலை ஈவிரக்கமின்றிக் கண்களைப் பறித்துவிட்டுக் கொன்றார்கள். நாவிதர்களைக் கடைச் சாதியினரென்று பிரகடனப்படுத்தி மயானபூமியின் அருகே எப்போதும் பிணங்கள் வேகும் நாற்றத்தைச் சுவாசித்துக்கொண்டிருக்குமாறு நகரத்தின் மையப்பகுதியிலிருந்து பிரித்துக் குடியமர்த்தினார்கள். மகளின் பொருட்டாக இருபது அப்பாவிகளைத் தன் மனைவி கொன்ற பாவத்தை வலிந்து தான் ஏற்றுக் கொண்டு வெகுகாலத்திற்கு முன்பே நோய்ப் படுக்கையில் வீழ்ந்துவிட்ட போதிலும் மனந் தளராது தன் பெண்ணின் உதவியுடன் உத்தமமான முறையில் ராஜ்ஜிய பரிபாலனம்
|
செய்து வந்த ராஜன் என் முதிர்முப்பாட்டனாரின் செய்கையையும் அதன் விளைவுகளையும் கேள்விப்பட்டு நடப்பவற்றைத் தடுக்கும் வகை தெரியாமல் மரணப் படுக்கைக்குத் தன்னுடலை மாற்றிக் கொண்டு நாட்களை எண்ணவாரம்பித்து விட்டு நாட்டின் நிர்வாக இயந்திரத்தை நிறுத்தி விட்டான். மகளை மணந்து அந்நகரத்தின் ராஜவாரிசாக வந்த ராஜனின் மருமகனோ ஏழ்மை உருவாக்கும் மூர்க்கர்களைக் கரை சேர்ப்பதைவிடக் கடினம் தறிகெட்டலையும் அறிவாளிகளைத் திருத்திச் சீர்செய்வதென்று கூறி ராஜன் மகள் எவ்வளவோ மன்றாடியும் கேட்காமல் மெதுமெதுவாக பழைய நகரத்தைக் கைவிட்டுவிட்டான்.
|
வருடங்கள் உருண்டபோது காட்டையழித்து நிர்மாணிக்கப்பட்ட பழைய நகரத்தின் சுவர்களுக்குள் அதுகாறும் தங்களை மறைத்தபடி காத்திருந்த விருட்சங்களும் விலங்குகளும் வெளிப்பட்டு மனிதர்களை 520 வேட்டையாடத் துவங்கின. விரைவிலேயே பிரபஞ்சத்தின் சுழற்சி விதிக்கேற்ப மரங்களுக்குள் சுவர்கள் மறைந்து கொள்ள இந்தப் புதிய நகரம் அப்போது அழித்த அடர்ந்த வனம் அங்கே தன்னை ஸ்தாபித்துக் கொண்டது. புத்திவீனர்களாகி நிர்கதியாக மயான பூமியில் அலைந்து திரிந்த என் முப்பாட்டன்கள் நகரம் காடாகியபோது விலங்குகளோடு விலங்குகளாகத் திரியும் வேடர்களாக மாறித்
|
தங்களைச் சாவிலிருந்து காத்துக்கொண்டனர். வாரிசுகளையும் விலங்குகளாக காட்டிலேயே வளர்த்தெடுத்தனர். இரண்டாம் நாளிரவுக் கதை ( அல்லது வெளிச்சுவாசத்தின் கதை ) / என் முதிர்பாட்டனார் சொல்கிறார் : தலைமுறைகளுக்கு முன் ஒரு வனமிருகத்தின் கனவை இந்த ராஜவம்சம் நிர்மூலமாக்காமலிருந்தால் ஒருவேளை நான் இந்தக் கதையைச் சொல்வதற்கான சந்தர்ப்பம் கூடாமலே போயிருக்கலாம். ராஜன் மகளின் படுக்கையறையென்பது ஒரு கிழட்டுப் புலியின் பிறப்பிடமாக அதன் கனவில் பத்து தலைமுறைக் காலம் நீண்டுகொண்டிருந்த ஒன்றென்பதே இதன் காரணம். ராஜன் மகளுடைய படுக்கையறை
|
மட்டுமல்ல. இந்த நகரமும் நான் இதைச் சொல்லிக்கொண்டிருப்பதும் நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பதும் மிருகங்களின் கனவிலேயே நடந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிய வேண்டும். இந்தப் பிரபஞ்ச யதார்த்தம் முழுவதுமே மிருகங்களின் கனவுதானென்பதை ஏற்கனவே என் குருகுலவாசம் எனக்குக் கற்றுக்கொடுத்திருந்தது. சொல்லப் போனால் அதுவே நான் கற்றுக் கொண்ட வித்தையின் சாரமாகவும் இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் மனிதன் தேடிக் கொண்டிருக்கும் பிரபஞ்ச மர்மத்தின் சாரமாக இருப்பதுவும் இதே. மிருகங்கள் இப்பிரபஞ்சத்தைக் கனவில் தங்களின்
|
பிறப்பிடமாகக் காண்கின்றன. கருப்பையிலிருந்து வெளியே வந்து விழுந்ததுமே இந்த உலகம் ஒரு கருப்பையாக மாறி அவற்றைச் சூழ்ந்து கொண்டு விடுகிறது. பிறகு அது அவற்றின் நிரந்தர வீடாகவும் மாறி விடுகிறது. மனிதனைப் போலவே பட்சியினங்களும் கரையான்களும் கூட தங்கள் உறைவிடத்தைத் தாங்களே கட்டிக்கொள்ள பிரியப்படும். இப்பூவுலகில் மிருகங்கள் மட்டுமே தமக்கென்று ஒரு உறைவிடத்தைக் கட்டிக் கொள்ள விழைவதில்லை. ஏனெனில் உண்பதும் உண்ணப்படுவதும் பருகுவதும் பருகப்படுவதும் உட்சுவாசமும் வெளிச்சுவாசமும் சுவாசிக்கும் நாசியும் பொருள்களைக் கவியும்
|
சீதோஷ்ணமும் தட்பவெப்பங்களைத் தங்கள் மேல் அனுமதிக்கும் பொருள்களும் அமிழ்வதும் வெளிப்படுவதும் அமிழ்தலுக்கும் வெளிப்படுதலுக்குமிடையில் சொற்ப கணம் இல்லாதிருப்பதும் ஆகிய ஒவ்வொன்றுமே அவை காணும் கனவுகளில் அவை உறையும் இடமாகவே தெரிகின்றன. உணவினுள் தன் முகத்தை அமிழ்த்தும் மிருகத்தின்முன் உணவு அதைத் தன்னுள் வாஞ்சையோடு பொதித்து கொள்ளும் இடமாகவே இருக்கிறது. இதைப் போன்றே காற்று அதைத் தன் அகண்ட பரப்பினுள் அடக்கிக் கொள்கிறது. காட்சிகளின் வெளியில் விலங்கு நுழைந்து உள்ளே உறைகிறது. கலவியின் போது ஆண்விலங்கு தன் லிங்கத்தைத்
|
தானாகப் பாவித்துப் பெண் விலங்கின் புழையை இடமாக்கி அதனுள் நுழைத்து தஞ்சமடைகிறது. அதே சமயம் பெண் விலங்கும் தன்னுடலை ஆண் மிருகத்தின் கால்களுக்கிடையில் நுழைத்து தன்னைத் தஞ்சமளிக்கிறது. 521 நுழைவதும் வெளியேறுவதும் மற்றும் உருவாவதும் மறைவதுமான காட்சிகளைத் தவிர யதார்த்த உலகின் மேல்கீழ் மற்றும் பக்கவாட்டு இயக்கங்கள் விலங்குகளின் கனவுகளில் தட்டுப்படுவதில்லை. மேலும் தன் பார்வையால் இப்பிரபஞ்சத்தைத் தன் பிறப்புக்கு முந்தைய ஞாபகங்களோடும் இனைத்துவிடும் ஒரு மிருகம் கருப்பையின் நிணக்கசடோடும் வாசனையோடும் உதிர்ந்து முதலில்
|
விழுந்த இடத்தைத் தன் சாவிற்குப் பிறகும் மறந்து போவதில்லை. விலங்குகளின் இந்த கனவுலகம்தான் சாஸ்திரங்களில் தேவர்களின் உலகமாக விவரிக்கப்படுகிறது. ஏன் அங்கே கடவுளர்கள் இமைப்பதில்லை. ஏன் தேவர்களுக்கு பசியும் தாகமும் கிடையாது. ஏன் அங்கு போய்ச் சேர்ந்த பிதுர்க்கள் உறங்குவதில்லை. ஏனெனில் இருக்கிறோம் என்பதை ஸ்தூலமாகக் காட்டும் யதார்த்தத்திலிருந்து விலகி அரூப உலகை நோக்கிப் போய் விட்ட தேவர்களுக்கு அவர்கள் இருப்பின் மீது அவர்களுக்கே சந்தேகம் வந்து விடாதிருக்கும் பொருட்டாக பரந்தாமனால் சிருஷ்டிக்கப் பட்ட தேவருலகம் என்னும்
|
இடமே அவர்களின் உணவாகவும் நீராகவும் உறக்கமாகவும் பார்வையாகவும் காலமாகவும் சுவாசமாகவும் ஆகி விடுகிறது. உலகின் எந்த மூலையிலும் பயிலப்படும் எந்த வித்தையின் சாரமாகவும் இருக்கும் இந்த ரகசியத்தை அனுபவித்துத் தெரிந்துகொள்ள நான் எடுத்துக்கொண்ட பிரயத்தனங்கள் வலியும் வினோதமும் நிறைந்தவை. ராஜன் மகளின் படுக்கையறையில் பத்து தலைமுறைக் காலம் தேங்கிக் கிடந்த அந்தக் கிழட்டுப்புலியின் சோகத்தை இந்தப் பிரபஞ்ச விதியைப் புரிந்து கொண்டவர்களால்தான் அது ஒரு அற்புதமோ அன்றி ஒரு மர்மமோ அல்ல மாறாக யதார்த்தம்தான் என்றும் நம்ப
|
முடியுமாதலால் ராஜன் மகளின் கனவின் கதையை மேலே தொடரும் முன் மிருகங்களின் கனவுகளைப் பற்றி உங்களுக்கு நான் சொல்லியாக வேண்டியிருக்கிறது. என் குருகுல வாசத்தின் சவால் நிறைந்த ஒரு பகுதிக் கதையை உங்களுக்குச் சொல்லவும் இந்தச் சந்தர்ப்பத்தை நான் பயன்படுத்திக் கொள்கிறேன். இந்தக் கதை நான் பிறர் தூக்கத்தினுள் ஊடுருவி அவர்கள் கனவுகளைப் பார்க்கும் வித்தையில் பாண்டித்யம் பெற்றவனென்று என் குருவால் ஆசீர்வதிக்கப்பட்ட கதை. உங்களுடன் சேர்ந்து இந்தக் கதையை கேட்டுக் கொண்டிருக்கும் இந்த மங்கையை வெற்றியின் பரிசாக நான் மணம் புரிந்து
|
கொண்ட கதை. என்னைப் பண்டிதனாக்கிய என் பெருமைமிகு ஆசானின் அளவிட முடியாத பெருமைகளைப் பற்றிச் சொல்லும் கதையும் கூட. கேளுங்கள். அறியப்படாத பொருள்கள் கனவுகளின் உலகில் பார்க்கப் படுகின்றன என்பது விதி. மனிதன் பிரபஞ்சத்தைப் பார்க்கப் பிரியப்படுவதில்லை. மாறாக அதை அறியவே பிரியப்படுகிறான். அறிதல் யதார்த்தத்தை உண்டு பண்ணுகிறது. அறிவதன் பொருட்டே மனிதன் சப்த தாதுக்களை ஒழுங்குபடுத்தி பாஷையை உண்டாக்கினான். மிருகங்களோ பாஷையை அறியாதவை. எனவே அவை தங்களைச் சுற்றியுள்ள பிரபஞ்சத்தை அறியப் பிரயாசைப்படுவதுமில்லை. பிரயாசையற்ற இடத்தில்
|
பார்வை பூரணமாக விளங்குகிறது. பார்த்தல் அறிதல் என்னும் இரண்டு அப்பியாசங்களால் முறையே இவ்வுலகைக் கனவுலகென்றும் யதார்த்த உலகென்றும் மனிதன் பிரித்துக் கொள்வதைப் போல மிருகங்கள் பிரித்துக்கொள்வதில்லை. பார்த்தல் என்பது கனவின் லட்சணமாதலால் மனிதன் அறிய முனையும் யதார்த்தம் என்பது மிருகங்கள் காணும் கனவாக இருக்கிறது. பிறரது கனவுகளுக்குள் ஊடுருவும் வித்தையில் தன் 522 எல்லையைப் பரீட்சித்துக்கொள்ள விரும்பும் யாரும் இதனாலேயே மிருகங்களின் கனவுகளுக்குள் புகுந்து அவற்றின் பார்வை வழியே பிரபஞ்ச யதார்தத்தைக் கண்டு வர
|
வேண்டுமென்கிற விதியை கனவறியும் சாஸ்திரம் வற்புறுத்தும். அது மிகவும் கடினமான பரீட்சையாகவும் இருக்கும். இந்தப் பரீட்சைக்குள் பிரவேசிக்க விரும்புபவன் மூன்று நிலைகளில் அதைக் கடந்து வர வேண்டியிருக்கும். முதல் நிலையில் அவன் மிருகங்கள் தங்கள் கனவுகளில் என்ன காண்கின்றன என்பதை அறிந்து வர வேண்டும். இரண்டாம் நிலையில் அந்தக் கனவுகளில் தோன்றும் காட்சிகளின் அசைவுகளின் இயல்பை அவன் அவதானிப்பான். மூன்றாவதும் இறுதியானதும் மிகக் கடினமானதுமான நிலையென்பது மிருகங்கள் தங்கள் கனவுகளில் இந்தப் பிரபஞ்சத்தை என்னவாகப் பார்க்கின்றன
|
என்பதை அறிந்து தேர்வது. சோதனைக்காக என்வசம் ஒப்படைக்கப்பட்ட ஒரு பசுமாட்டின் கனவுகளுக்குள் புகுந்து அதை அறியும் பரீட்சையில் என் குருவின் ஆக்ஞைப்படி நான் பிரவேசித்தபோது பாஷையாலான யதார்த்தத்தை அந்த விலங்கு மீண்டும் எப்படி பாஷையற்ற தூய பொருளாக மாற்றித் தன் கனவில் காண்கிறது எனும் அறிதலின் ஆரம்பக் கட்டத்தைத் தாண்டவே எனக்கு நூற்றெண்பது நாட்கள் பிடித்தன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பொருளின் மீது சுமத்தப் பட்டிருக்கும் வார்த்தைகள் கழன்று கொள்ளும் தருணங்களில் அப்பொருளிலிருந்து முன்பு பிரிக்கப்பட்டு ஞாபகமாக மாற்றப்
|
பட்டிருக்கும். ஒளியும் மணமும் மீண்டும் அப்பொருளை வந்து சேர்ந்து கொள்கின்றன. பசுமாட்டின் கனவுகளூடே அந்தக் கனவுகளின் சுழலுக்குள்ளும் அடர்த்திக்குள்ளும் சிக்கிக் கொண்டு மூச்சடைத்து இறந்து போய் விடாமல் ஒரு குளிர் பருவம் முழுவதும் மிகக் கடினமான பிரயாணத்தை மேற்கொண்ட பிறகு அந்தக் கனவுகள் தூயதென்று உணரும்படியான ஆனால் குழப்பமான நிறங்களையும் மணங்களையும் கொண்டிருப்பதாக என் குருவிடம் வந்து கூறியபோது நான் பரீட்சையின் முதல் நிலையை வெற்றிகரமாகக் கடந்து வந்து விட்டதாகக் கூறி அவர் வைத்திய சாலைக் கட்டிடத்தின் நான்காம்
|
அடுக்கிலிருந்து முன்பு குதித்துத் தன்னை மாய்த்துக்கொண்ட முதல் சீடனின் நினைவில் துயரக் கண்ணீர் பெருக்கியபடி என்னை அணைத்துக் கொண்டார். பிறகு அவர் தன் பெண்ணை நோக்கித் திரும்பி இனி அவள் என்முன் வரும் வேளைகளில் தன் ஸ்தனங்களைத் துணியால் மறைத்துக்கொள்ள வேண்டுமெனவும் ஆணையிட்டார். இறுதிப் பரீட்சையின் முதல் கட்டத்தை நான் பூர்த்தி செய்தபோது பௌர்ணமி நிலவு தன் முழு ஆகிருதியுடன் கிழக்குத் திசையில் வெளிப்பட ஏழு நாட்கள் மீதமிருந்தன. எனக்கு இரண்டு நாட்கள் ஓய்வளிக்கப்பட்டது. இதையடுத்த ஐந்து நாட்கள் முழு உபவாச விரதமொன்றை என்
|
குருவின் ஆக்ஞைப்படி நான் மேற்கொண்டேன். பிறகு என் பரீட்சையில் இரண்டாம் நிலையில் தேர்ச்சியுறும் பொருட்டாக பௌர்ணமியன்று மீண்டும் பசுமாட்டின் கனவுகளுக்குள் என்னைப் புகுத்திக் கொண்டேன். கலவையான உலகம் வார்த்தைகளற்ற ஒரு பிரம்மாண்டமான ஓயாத கனவாகவே பரம்பொருளால் ஆதியில் படைக்கப்பட்டது. யதார்த்த உலகின் அடியில் இன்று மறைக்கப்பட்டு விட்ட கடவுளின் இந்தக் கனவுலகை மனிதன் இறந்த பின்னே சென்றடைகிறான். மனிதனுக்குக் கீழ்பட்ட அறிவைக் கொண்டிருக்க ஆசீர்வதிக்கப் பட்ட விலங்குகளோ அதிகப்படியான அறிவின் சுமையால் கூனடைந்து போகாது உயிர்
|
வாழும் போதே கடவுளின் உலகைக் கண்டு அனுபவிக்கின்றன. அந்த உலகம் 523 மிகவும் ஆச்சர்யகரமான சாயைகளைக் கொண்டது. கனவுலகின் காலக்கிரமும் இடக்கிரமும் யதார்த்த உலகின் காலக்கிரமத்திலிருந்து இடக்கிரமத்திலிருந்தும் மிகவும் வித்தியாசப் பட்டிருக்கின்றன. ஏனெனின் அங்கே பொருள்கள் யதார்த்த உலகில் மனிதன் வார்த்தைகளால் அர்த்தங்களை உருவாக்குகின்றான். அர்த்தங்கள் காரணங்களை உருவாக்குகின்றன. காரணங்கள் ஸ்தூலப் பொருள்களை உண்டாக்குகின்றன. விளைவுகள் மீண்டும் காரணங்களை உருவாக்கும் அர்த்தங்களை உருவாக்கும் வார்த்தைகளைப் பிறப்பிக்கின்றன. ஒரு
|
பொருள் இவ்வாறாக இன்னொரு பொருளோடு அதன் பக்கவாட்டிலும் மேலுங்கீழும் காரணத்தாலும் விளைவாலும் சங்கிலி போல இணைக்கப்பட்டிருப்பதால் இவ்வுலகக் காட்சிகள் கிடைக்கோட்டிலும் மற்றும் மேலும் கீழுமாக நகர்ந்து கொண்டிருப்பதாக மனிதர்களாகிய நம் பார்வைக்குப் படுகிறது. பிரபஞ்சத்தைக் கனவாகக் கண்டுகொண்டிருக்கும் மிருகங்களின் பார்வையிலோ இவ்வுலகம் வலமிருந்து இடமாகவோ இடமிருந்து வலமாகவோ அல்லது மேலிருந்து கீழாகவோ கீழிருந்து மேலாகவோ நகர்வதாக இருப்பதில்லை. மனித முகத்தைப் போலத் தட்டையாகவன்றி முன்னோக்கிக் குவிந்து கீழ்நோக்கி இறங்கும்
|
கூம்பு வடிவினதாக மிருகங்களின் முகத்தை வடிவமைத்த கடவுளின் கருணையும் முன்போசனையும் இதைச் சொல்லும்போது என் நினைவிற்கு வந்து கண்களில் நீர் கசியச் செய்கிறது. ஏனெனில் ஒரு காட்சியை ஒரே சமயத்தில் இரு கண்களாலும் ஒரு சேரப் பார்க்க வாய்ப்பாக தட்டையான முகவமைப்பைக் கொண்ட மனிதனுக்கு அறிதலைக் குழப்பும் இருவேறு காட்சிகளை ஒரே சமயத்தில் பார்த்தாக வேண்டிய சிரமம் கிடையாது. ஏனெனில் ஒரு சமயத்தில் ஒரு காட்சியென்பதே அறிதலின் அடிப்படையாக இருக்கிறது. ஆனால் முகத்தின் இருபுறமும் சரிந்த விழிகளால் தனித்தனியாக இருவேறு காட்சிகளை ஒரே
|
சமயத்தில் பார்க்கும் மிருகங்களால் அவற்றை இணைத்துப் புரிந்துகொள்வதென்பது முடியாததாக இருக்கிறது. இதனால் அவற்றால் பாஷையை உருவாக்க முடிவதுமில்லை. ஏனெனில் ஒரு சமயத்தில் பல காட்சிகள் என்பதே வார்த்தைகளற்ற பார்த்தலின் அடிப்படையாக இருக்கிறது. முகத்தின் வலப்புறம் தோன்றிய ஒரு காட்சி சோதனைக்காக என் வசம் ஒப்படைக்கப்பட்ட பசுமாட்டின் இடதுபுறத்திற்கு நகர்ந்த போது வலப்புறம் அந்தக் காட்சி விட்டுச் சென்ற வெளியில் இன்னொரு காட்சி தோன்றியதையும் அதேசமயத்தில் முகத்தின் இடப்புறம் ஏற்கனவே பசு பார்த்துக்கொண்டிருந்த காட்சியின் மேல்
|
வலப்பக்கத்தில் மறைந்த காட்சி வந்து அமர்ந்து கொண்டதையும் நான் என் பரீட்சையின் இரண்டாம் நிலையில் கண்டு கொண்டேன். குழப்பமான நிறங்களாகவும் வாசனைகளாகவும் உருவாகும் மிருகங்களின் கனவுகளில் காட்சிகள் யதார்த்த உலகில் போலன்றி உள்ளிருந்து மேலெழும்பித் தோன்றுவதும் வெளியிலிருந்து உள்ளே பதுங்கி மறைவதுமாகவே அசைகின்றன என்பதையும் அதன் காரணங்களை நான் இப்போது உங்களுக்குச் சொன்ன விதமாகப் புரிந்துகொண்டதையும் அறுபது நாட்கள் கடும் பிரயாசைக்குப் பிறகு பசுவின் கனவிலிருந்து வெளியேறி குருகுலத்தை அடைந்த அன்று என் ஆசானிடம் சொன்ன போது
|
நான் என் தேர்வின் இரண்டாம் நிலையையும் வெற்றிகரமாகக் கடந்து வந்துவிட்டதாகக் காசியின் அடர்ந்த வனங்களை நோக்கி ஓடிப் போய்விட்ட தன் இரண்டாம் சீடனின் நினைவு கண்களில் கண்ணீரைப் பெருக்க அவர் கூறினார். ஆடைகளால் மறைக்கப்படாத அங்கங்களை ஆபரணங்களால் மறைத்த பின்பே இனி என் முன்னே தோன்ற வேண்டுமென அப்போதே தன் மகளுக்கு அன்புக் கட்டளையிட்டார். 524 முடிவானதும் மிகக் கடினமானதுமான பரீட்சையின் மூன்றாம் நிலைக்கு என்னைத் தயார் செய்து கொள்வதற்காக பிறகு அவர் எனக்கு மேலும் பத்து தினங்கள் ஓய்வளித்தார். என் குருகுல வாசத்தில் அதுவரை
|
அனுபவித்தே அறியாத பலவகை பதார்த்தங்களை நான் அந்தக் காலகட்டத்தில் உண்டு மகிழ்ந்தேன். நறுமணமிக்க மூலிகைகளைக் கலந்து தயாரிக்கப்பட்ட பானகங்களை தொடர்ந்து எனக்கு அளிக்க என் குரு ஏற்பாடு செய்திருந்தார். அவை என் உடலை குளிர்ந்ததாகவும் நாட்கணக்காகத் தொடர்ந்த உறக்கத்தில் ஆழ்ந்து போகுமளவிற்கு அலுப்புள்ளதாகவும் உறங்கும்போது உடைகள் அலங்கோலமாகக் கலைந்து விலகிக் கிடக்கும்படி மண் தரையில் புரண்டு கொண்டிராத வண்ணம் அதை மரக்கட்டை போல உணர்வற்றதாகவும் ஆக்கின. இவற்றையெல்லாம் அன்று என் குருவின் மகளாக இருந்த இதோ இங்கே என் அருகே
|
அமர்ந்திருக்கும் என் மனைவியின் கையால் என் பெற்றுக்கொண்டதானது கிளர்ச்சியூட்டும் கனவுகள் என்னுள்ளிருந்து விழித்தெழும் வண்ணம் என்னை இன்னும் நீண்ட விச்ராந்தியான உறக்கத்தில் ஆழ்த்தி வைத்திருந்தது. பரீட்சையின் இரண்டாம் நிலையில் நான் பிசகின்றி வெற்றி பெற்றதன் நிமித்தமாகவே இத்தகைய உபசாரங்கள் எனக்களிக்கப் படுவதாக அப்போது நான் எண்ணி இறுமாந்திருந்தேன். ஆனால் அவை யாவும் பலியாட்டின் மீது போர்த்தப் படும் புதிய வஸ்திரங்களையும் வாசனைத் திரவியங்களையும் பூமாலைகளையும் போல தந்திரத்தின் மணத்தைத் தம்முள் புதைத்துக் கொண்டிருந்தன
|
என்பதைப் பின்னால்தான் தெரிந்துகொண்டேன். அதற்கு கட்டியங்கூறும் வகையில் பரீட்சையின் மூன்றாம் நிலைக்கு நான் தயாரான அன்று என் குரு எனக்குச் சொன்ன அறிவுரைகளையும் பரீட்சையின் வழிமுறைகளையும் கேட்ட என் உதிரம் அச்சத்தால் உறைந்துபோய்விட்டது. பெரும் பீதி என்னை ஆட்கொண்டது. பரீட்சையின் முதல் இரண்டு நிலைகளையும் போல இந்த மூன்றாம் நிலை பரீட்சைக்கு உட்படுத்தப்படும் மிருகத்தின் வயிற்றில் அதன் இரை ஜீரணமாகிக் கொண்டிருக்கும் மந்தமான உறக்க நிலையில் பிரயோகித்தறிவது அல்ல என்று என் குரு என்னிடம் சொன்னார். மேலும் என் பிரியத்திற்குரிய
|
மாணவனே மிருகங்கள் தங்கள் கனவில் என்ன காண்கின்றன என்பதையும் காட்சிகள் அந்தக் கனவில் எப்படிப் பிறந்து மறைகின்றன என்பதையும் கசடறக் கண்டுகொண்ட நீ இப்போது அக்கனவுகளின் அர்த்தத்தை மனிதனின் மொழியில் அறிந்துகொள்ள இருக்கிறாய். வார்த்தைகளற்ற மிருகங்களின் கனவுலகை வார்த்தைகளாக மாற்றி அவற்றை சாஸ்திரங்களாக்கி நம் முன்னோர் நமக்குத் தந்ததைப் போல இனி வரும் சந்ததிகளுக்கு நீ தர வேண்டிய பொறுப்பு இப்போது உன் தலை மீது சுமத்தப்பட்டிருக்கிறது என்பதை அறிந்துகொள். மிருகங்கள் நாம் காண்பது போல உறக்கத்தில் மட்டுமே கனவுகளை உருவாக்கிக்
|
கொள்வதில்லை. அவை தம் அன்றாட வாழ்வின் பிரத்யேக கணங்கள் ஒவ்வொன்றிலும் சிறுசிறு தற்காலிக உறக்கங்களை அவ்வப்போது மேற்கொண்டு அந்தந்தக் கணங்களுக்குரிய உலகை கனவாகக் கண்டு மகிழும் வல்லமை படைத்தவை. எனவே ஐந்தறிவு மிருகத்தின் கனவுகளை அறியும் விதமாக இனி நீயும் உனது ஆறாவது அறிவை அவ்வப்போது இழக்கக் கடவாய். அவ்வுயிர் புழங்கும் இடங்களினூடும் பார்க்கும் காட்சிகளினூடும் செல்லும் பிரதேசங்களினூடும் உண்ணும் உணவினூடும் தரிக்கும் கலவியினூடும் நீயும் கலந்து போகக் கடவாய். கணத்திற்குக் கணம் கனவுகளை உருவாக்கி அவற்றை இப்பிரபஞ்சமாக உலாவ
|
விடும் மிருகங்களின் பார்வையில் இப்பிரபஞ்சம் என்னவாக இருக்கிறது என்பதை அப்போது நீ 525 தெரிந்துகொள்வாய். தேர்வின் முதல் நிலையில் நீ கண்ட குழப்பமான நிறங்களை வார்த்தைகளாகவும் வாசனாதிகளை உச்சாடனங்களாகவும் மாற்றிக்கொண்டுவிட்டதாகத் திருப்தியடையும் நாளில் நீ என்னை மீண்டும் வந்து சந்திப்பாய். என் ஆசான் நான் இரண்டு நிலைகளில் பரீட்சைக்கு உட்படுத்திய அந்தப் பசுவையே பிறகு அதன் சொந்தக்காரரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி அதன் மூக்கணாங்கயிற்றையும் கொம்புப் பூண்களையும் முகப்பட்டையையும் மேல் வஸ்திரத்தையும் எடுத்து விட்டு
|
நெற்றித் திலகத்தையும் உடல் மேல் இடப்பட்டிருந்த அலங்கார வண்ணக் கோலங்களையும் அழித்துவிட்டு அதைப் பூரண நிர்வாணியாக்கி எனக்கு முன்னே நடந்து செல்லும்படி அனுப்பி வைத்தார். பிறகு என்னையும் என் உடைகளனைத்தையும் களைந்து விட்டுப் புறப்படும்படி அவர் கட்டளையிட்டபோது நான் திடுக்கிட்டு கௌபீனத்தை மட்டுமாவது தரித்துக்கொள்ள என்னை அனுமதிக்கும்படி அவரை மன்றாடினேன். முதலில் பிடிவாதமாக அதை மறுத்து விட்ட அந்தத் திரிகால ஞானி பிறகு வேதனையுடன் சில வார்த்தைகளை முனகிக் கொண்டே கௌபீனத்துடன் செல்ல என்ன அனுமதித்தார். அன்றுமுதல் நான்
|
பசுவின் பின்னால் அதன் நிழலைப் போல் அலையத் துவங்கினேன். ஒரு கிழமையல்ல ஒரு பருவமல்ல சபையோரே கோடையின் இரண்டு முழுச் சுழற்சிகள் என்னைத் தன்னிச்சையாக வனாந்திரங்களுக்குள்ளும் நகர்புறங்களுக்குள் நீர்நிலைகளின் ஆழங்களினூடாகவும் வயல் வரப்புகளினூடாகவும் விசேஷ காலங்களில் தங்களது இல்லங்களுக்குள் அதை அனுமதித்து வெல்லமும் அரிசியும் தேங்காய்க் கீற்றுகளும் தின்னக் கொடுத்துத் தங்களது சுபிட்சத்தைப் பெருக்கிக் கொண்ட மனிதர்களின் தந்திரங்களினூடாகவும் அலைக்கழித்த அந்த வெண்பசுவின் பின்னே நான் அதைத் தவிர வேறு யாதொரு பந்தமும்
|
அற்றவனாகச் சுற்றித் திரிந்தேன். அது தன் உணவை அசை போடும் போது அதன் கனவுகளுக்குள் புகுந்து பருவச் சுழற்றிகள் வெட்டிக்கொள்ளும் காலத்தே தெறிக்கும் சீதளப் பொறிகளின் உக்கிரத்திலிருந்து என்னைக் காத்துக் கொண்டேன். அந்தக் காலம் முழுவதும் நான் உண்ணவும் உறங்கவும் இல்லை. என்னுடைய ஓய்வுக் காலங்கள் என நான் மகிழ்ந்து அனுபவித்துக்கொண்டிருந்த பரீட்சைக்கு முந்தின காலகட்டத்தில் என் குருவின் மகளும் இன்று என் மனைவியுமான இந்தப் பெண் எனக்களித்த நறுமணம் கமழும் மூலிகைப் பானங்களால் என்னைக் கவிந்துகொண்டிருந்த தூக்கமும் பசியும்
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.