category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
டால்பின்கள் தந்திரத்தில் சிக்கும் குருவலா மீன்கள்
ராமநாதபுரம்:டால்பின்களின் தந்திரத்தால் மீனவர் வலையில் சிக்கும் குருவலா மீன்களின் வாழ்க்கை பயணம் வித்தியாசமானது.கடல்வாழ் உயிரினங்களில் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது மீன்கள். முதுகெலும்புள்ள வகையை சேர்ந்த மீன் இனங்களில் , மன்னார் வளைகுடாவில் 14 ஆயிரத்து 622 வகை மீன்கள் உள்ளன. ஒவ்வொன்றுக் கும் ஒரு சிறப்பு உண்டு. அந்த வகையில் "குருவலா' மீன்களின் வாழ்க்கை முறை சற்று வித்தியாசமானது. இவற்றின் எலும்பு மற்றும் தோலிலிருந்து எடுக்கப்படும் திரவம் மூலம் "மீன் பசை' தயாரிக்கப்படுகிறது. இவற்றுக்கு கடலின் அடியில் உள்ள பாசிகள், பவளப்பாறையின் இடையே உள்ள சிறிய பூச்சிகள் உணவாகின்றன. பல்வேறு நிறங்களில் குருவலா மீன்கள் தங்களுக்குள் பிரிவுகளை கொண்டுள்ளன. இவற்றில் சில, வண்ணமீன்களை போல தோற்றம் கொண்டிருப்பதால், வலையில் சிக்கும் குருவலா மீன்களை, வளர்ப்பவர்களுக்கு மீனவர்கள் விற்றுவிடுகின்றனர். இதனால் மீனவர் வலையில் சிக்கி உயிர் பிழைக்கும் ராசி, குருவலாவுக்கு உண்டு. இவற்றின் அழிவு பெரும்பாலும் டால்பின்களின் தந்திரத்தாலேயே நிகழ்கிறது. மீனவர்கள் விரிக்கும் வலைகளில் , குருவலா மீன்களை விரட்டி சிக்கவைப்பது டால்பின்களின் பொழுதுபோக்காகும். இச்செயலால் டால்பின்கள் "மீனவர்களின் நண்பன்,' என பெயரெடுத்தாலும், குருவலா மீன்களுக்கு எமனாக மாறிவிடுகின்றன. வழக்கமாக மீன்கள், மனிதர்களுக்கும், பெரிய வகை மீன்களுக்கும் இரையாவது வழக்கம். குருவலா மீன்கள் மட்டுமே , கடல் உயிரினம் ஒன்றின் உதவியால் , மனிதர்களுக்கு உணவாகிறது. இதுதவிர தடை செய்யப்பட்ட வலைகளின் பயன்பாடும் இவற்றை அழித்து வருகிறது.
தமிழகம்
விலையேற்றம், மின் தடையால் பள்ளி நோட்டு விலை உயரும்
தமிழகத்தில் நோட்டுகள் தயாரிப்புக்கான மூலப்பொருட்களின் விலையேற்றம் மற்றும் மின் தடை காரணமாக, உற்பத்தியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. மேலும், எப்போதும் இல்லாத வகையில் விலையும் உயர்ந்துள்ளது.தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் வகுப்புகள் துவங்க இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், பேப்பர் விலையேற்றம், ஆட்கள் பற்றாக்குறை, அச்சகங்களுக்கு மின் தடை ஆகியவற்றால் நோட்டுகளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவியர் பயன்படுத்தக்கூடிய ஒரு குயர், இரண்டு குயர் நோட்டுகள், 40 பக்கம், 80 பக்கம், கட்டுரை, டிராயிங், ரிக்கார்டு நோட்டுகள் அச்சகத் தொழிலுக்கு பெயர் பெற்ற சிவகாசியை அடுத்து, சேலம் மாநகரில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.சேலத்தில் உற்பத்தி செய்யப்படும் நோட்டுகள் தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திண்டுக்கல், திருச்சி, மதுரை, திருப்பூர், ஈரோடு, கோவை உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. நடப்பு ஆண்டு ஜனவரி மாதமே நோட்டு புத்தகங்களின் உற்பத்தி துவக்கப்பட்ட நிலையில், மின் தடை காரணமாக இத்தொழில் கடும் பாதிப்புக்கு உள்ளாகியது. தற்போது உற்பத்தியில் சுறுசுறுப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கூலி ஆட்களுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.முதல் தர பேப்பரின் விலை கிலோவுக்கு எட்டு ரூபாய் முதல் 12 ரூபாய் வரையும், இரண்டாம் ரக பேப்பர் கிலோவுக்கு ஐந்து ரூபாய் முதல் ஏழு ரூபாய் வரையும் அதிகரித்துள்ளது. இதேபோல் அட்டையின் விலையும் உயர்ந்துள்ளது.பக்கம் குறைக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நோட்டுகளின் விலையில் மூன்று ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒரு குயர் நோட்டு 15 ரூபாய்க்கு விற்றது தற்போது 20 ரூபாய்க்கும், இரண்டாம் ரக பேப்பரால் தயார் செய்யப்பட்ட ஒரு குயர் நோட்டு 15 ரூபாய்க்கு விற்றது 18 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.இந்த நோட்டுகளைத் தொடர்ந்து கட்டுரை, டிராயிங்,80பக்கம்,40பக்கம், ரிக்கார்டு நோட்டுகளின் விலையும் உயர்த்தப் பட்டுள் ளது.இதனால், நோட்டுகளின் விலை 15 முதல் 20 சதவீதம் வரை உயர்த்தப்பட் டுள்ளது. இது மறைமுகமாக அச்சங்களுக்கும், பெற்றோருக்கும் பாதிப்பு ஏற்படுத்தும். இத்தொழிலின் மூலப்பொருளான காகிதக் கூழ், உலக மார்க்கெட்டில் 25 சதவீதம் விலை அதிகரித்துள்ளது.அட்டை, களிக்ககம், நூல், பசை ஆகியவற்றின் விலை 30 சதவீதம் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு 30 சதவீதம் வரை மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பேப்பர் உற்பத்தியும் வெகுவாகக் குறைந்து, அதே நேரத்தில் உற்பத்திக்கான செலவும் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. பேப்பர் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், வேறு வழியில்லாமல் இத் தொழிலை செய்து வருகிறோம். எனவே, நோட்டு புத்தகங்கள் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் அச்சகங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதுடன், மூலப்பொருட்கள் தங்குத் தடையின்றி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோட்டு புத்தக தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர். - நமது சிறப்பு நிருபர் -
தமிழகம்
நதி நீர் இணைப்புக்கு முன்னோடியாக தமிழகத்தில் மூன்று முக்கிய திட்டங்கள்
திருநெல்வேலி:நதி நீர் இணைப்புத் திட்டத்தின் முன்னோடியாக, தமிழகத்தில் மூன்று திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக, பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர் ராமசுந்தரம் தெரிவித்தார்.திருநெல்வேலி மாவட்டத்தில் ஆண்டுதோறும் பெய்யும் மழையால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பி, தாமிரபரணி ஆற்றில் 13 டி.எம்.சி., தண்ணீர் வீணாகச் சென்று கடலில் கலக்கிறது. இதை தடுத்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் வறட்சி பகுதிகள் பயன் பெறுவதற்காக, வெள்ள நீர் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பாபநாசம் அணையின் கன்னடியன் கால்வாயில் தாமிரபரணி நதி நீரை வெள்ளங்குழி என்னுமிடத்தில் பிரித்து அனுப்பும் திட்டம் 369 கோடி ரூபாய் செலவில் கடந்த ஆகஸ்டில் துவங்கி பணிகள் நடந்து வருகின்றன.இதை பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர் ராமசுந்தரம் பார்வையிட்டார். இந்த திட்டத்தில் கோரையாறு, எலுமிச்சையாறு, கருமேனியாறு, நம்பியாறு, பச்சையாறு ஆகிய நதிகள் இணைக்கப் படுகின்றன. இந்த பணிகளை பார்வையிட்ட ராமசுந்தரம் கூறியதாவது: இந்திய அளவில் நதி நீர் இணைப்பு திட்டங்கள் குறித்த எண்ணம் ஏற்பட்ட போது, தமிழகத்தில் அதை செயல்படுத்தும் விதமாக நெல்லையில் இந்த திட்டப்பணிகள் துவங்கின. இதேபோல, கரூர் மாவட்டம் மாயனூரில் காவேரி, வைகை இணைப்புத் திட்டமும், வடமாவட்டங்கள் பயன் பெறும் வகையில் திருவண்ணாமலையில் பாலாறு, செய்யாறு, தென்பெண்ணையாறு ஆகியவற்றை இணைக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளன. நெல்லையில் நடந்து வரும் திட்டத்தில் இதுவரையிலும் 20 சதவீத பணிகள் முடிந்துள்ளன; 80 சதவீத நில எடுப்பு பணிகள் முடிந்துள்ளன. 72 பகுதிகளாக பிரிக்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்குள் பணி நிறைவடையும். நடப்பு நிதியாண்டில் இந்த திட்டத்திற்கு 126 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
தமிழகம்
நீல, பச்சை ரோஜா விலை ரூ.10
இடைப்பாடி:சேலம் மாவட்டம் இடைப்பாடியில் விற்பனை செய்யப்படும் பல்வேறு வண்ண ரோஜாக்கள், பெண்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.பூக்களில் மக்களின் மனதை கவர்ந்தது ரோஜா தான். இளம்பெண்கள் விரும்பி தலைக்கு சூடுவது ரோஜா பூக்களைத் தான். காதலர்கள் தங்களின் காதலிக்கு பரிசாக முதலில் கொடுப்பது ரோஜாவையே. மக்கள் மனதை கொள்ளை கொண்ட ரோஜாக்கள் சிவப்பு, மஞ்சள், வெள்ளை, ரோஸ், ஆரஞ்சு ஆகிய வண்ணங்களில் உள்ளன. தொழில்நுட்ப வளர்ச்சியால் பல வண்ணங்களில் ரோஜாக்கள் உற்பத்தி செய்யப் பட்டுள்ளன. இந்த வண்ண மலர்கள் தற்போது இடைப்பாடி பகுதியில் விற்பனைக்கு வந்துள்ளன. வழக்கமான கலர்களில் உள்ள பூக்களின் விலை இரண்டு ரூபாயில் இருந்து ஐந்து ரூபாய் வரை உள்ளது. புதிதாக வந்துள்ள நீல, பச்சை கலர் ரோஜாக்கள் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன.விலை சற்று கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை. தாங்கள் அணியும் புடவை கலருக்கு மேட் சான கலராக உள்ளதே என்று பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்து வாங்கிச் செல்கின்றனர்.
தமிழகம்
தமிழகத்தில் மீண்டும் பன்றி காய்ச்சல் அபாயம் சுகாதாரத்துறை எச்சரிக்கை
தமிழகத்தில் மீண்டும் பன்றிக் காய்ச்சல் பரவும் வாய்ப்புள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பரவிய பன்றிக் காய்ச்சலுக்கு ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். தகுந்த மருந்துகள் மூலம் தமிழக அரசு பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்தியதால், மக்கள் பீதியின்றி இருந்தனர்.இந்நிலையில், சில நாட்களுக்கு முன் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பிரியா என்ற ஏழு மாத கர்ப்பிணிக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அரசு சுகாதாரத்துறைக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.அதன்படி, அரசு, தனியார் மருத்துவமனைகளில் தேவையான ஊசி, மருந்து, மாத்திரைகள் வைத்திருக்க வேண்டும். பல நாள் காய்ச்சல், சளி, இருமலுடன் வரும் நோயாளிகளுக்கு தகுந்த பரிசோதனைகள் செய்து, முடிவுகளை உடனுக்குடன் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என ஆலோசனை தரப்பட்டுள்ளது. அரசு உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "கோவையில் ஜூன் மாதம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்க உள்ள நிலையில், பன்றிக் காய்ச்சல் உறுதியானது, அரசை கவலை கொள்ள செய்துள்ளது. சர்வதேச சுகாதார சட்டப்படி, கோவை செல்வது குறித்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு உலக சுகாதார அமைப்பு தடைவிதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருந்தபோதும் மாநிலம் முழுவதும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது' என்றார். - நமது சிறப்பு நிருபர் -
தமிழகம்
இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இம்முடி அகோர தர்ம சிவாச்சாரியார் மடம்
கோவை:பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை கொண்ட, திருஆலங்காடு இம்முடி அகோர தர்ம சிவாச்சாரியார் ஆயிர வைசியர் மடம், அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி நெருஞ்சிப்பேட்டை அருகேயுள்ளது திருஆலங்காடு. இந்த கிராமத்தில், இம்முடி அகோர தர்ம சிவாச்சாரியார் ஆயிர வைசியர் மடம் உள்ளது. பழம்பெருமை வாய்ந்த இந்த மடம், 1800ம் ஆண்டு துவக்கப்பட்டது. 1978ல் மடத்தின் அறங்காவலர்கள் மற்றும் மடாதிபதிக்குமிடையே ஏற்பட்ட பிரச்னையால், கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, மடாதிபதி மடத்தைவிட்டு வெளியேறினார்.மடத்துக்கு சொந்தமாக 612 ஏக்கர் 10 சென்ட் நன்செய் நிலம் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 482 ஏக்கர் நிலம் உள்ளது. மீதமுள்ள நிலம் மற்ற மாவட்டங்களில் உள்ளது. 21 கடைகள், இரண்டு திருமண மண்டபங்கள், ஏழு குடியிருப்புகள், மூன்று தங்கும் விடுதிகள், ஒரு மேல்நிலைப்பள்ளி, ஒரு கிரானைட் குவாரி, சுண்ணாம்புக்கல் குவாரியும், மடத்துக்கு சொந்தமாக உள்ளன.இப்படி பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பு வகித்த அறங்காவலர் குழு, நீண்ட நாட்களாக தேர்வு செய்யப்படவில்லை. பல்வேறு குளறுபடிகளால், மடத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.மடத்தில் நடக்கும் முறைகேடுகளை களையவும், நிர்வாகத்தை முறைப்படுத்தவும் அறநிலையத்துறை கமிஷனர் சம்பத் கடந்த மாதம் 29ம் தேதி, கோவை மண்டல இணை கமிஷனருக்கு உத்தரவிட்டார். ஈரோடு அறநிலையத்துறை உதவி கமிஷனரை மடத்தின் பொறுப்பாளராக நியமிக்கவும் அறநிலையத்துறை உத்தரவிட்டது. இதையடுத்து, கோவை மண்டல அறநிலையத்துறை இணை கமிஷனர் அசோக் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் (ஆலய நில மீட்பு) சுப்ரமணியன், மருதமலை கோவில் துணை கமிஷனர் லட்சுமணன், கோவை மண்டல கோவில் செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள், நெருஞ்சிப்பேட்டை கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர், மடத்தை அறநிலையத்துறை வசம் கொண்டு வந்தனர். இதற்கான எச்சரிக்கை நோட்டீஸ், மடத்தின் வாயிலில் ஒட்டப்பட்டது.கோவை மண்டல அறநிலையத்துறை இணை கமிஷனர் அசோக் கூறியதாவது: நீண்டகால முயற்சிக்கு பின், நூற்றாண்டு பழமை வாய்ந்த மடம், அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் மடத்துக்கு வரும் வருவாய் சீராகும். அனைத்து வருவாய் இனங்களுக்கும் சரியான கணக்கு எழுதப்படும். ரசீது வழங்கப்படும்.மடத்தின் கட்டுப்பாட்டில் ஏராளமான குத்தகைதாரர்கள், வாடகைதாரர்கள் உள்ளனர். நிலுவை வைத்துள்ள வாடகையை உடனடியாக மட நிர்வாகத்திடம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். இதன் மூலம் வருவாய் இழப்பை தடுக்க முடியும். மடத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு திருத்திய ஊதிய விகிதம் வழங்கப்படும். சம்பள பாக்கியும் வழங்கப்படும்.இவ்வாறு அசோக் கூறினார்.
தமிழகம்
போலி ரேஷன் கார்டுகள் பறிமுதல் செய்யப்படுமா :பாஸ்போர்ட் உட்பட அரசு சலுகைகள் பெற வாய்ப்பு
ராஜபாளையம்: போலி ரேஷன் கார்டுகள் மூலம் பாஸ்போர்ட் மற்றும் அரசின் பிற சலுகைகளை பெறும் வாய்ப்பு உள்ளதால், அவற்றை பறிமுதல் செய்வதே சிறந்தது.தமிழகம் முழுவதும் போலி ரேஷன் கார்டுகள் குறித்து கணக்கெடுக்கும் பணி, கடந்த ஆண்டு இறுதியில் நடந்தது. கணக்கெடுப்பாளர்கள் நேரில் வந்த போது, வீட்டில் இல்லாதவர்கள், வெளியூர் சென்றிருந்தவர்கள் பெயர்களும் சந்தேகப்பட்டியலில் வைக்கப்பட்டன. இதனால், உண்மையான கார்டுதாரர்கள், கணிசமானோர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து மேல்முறையீடு செய்ய அவகாசம் அளிக்கப்பட்டது. முதல் கட்டமாக, அந்தந்த ரேஷன் கடைகள் மூலமாகவும், பின் நேரடியாக தாலுகா அளவிலான வட்ட வழங்கல் அலுவலகம், மாவட்ட வழங்கல் துறை அலுவலகத்தில் முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது, பல கட்டங்களாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, உண்மையான கார்டுகள் கண்டறியப்பட்டன. நீக்கப்பட்ட போலி கார்டுகள் குறித்த இறுதிப் பட்டியல் வரும் 4ம் தேதி வெளியிடப்படும், என அறிவிக்கப்பட்டுள்ளது. போலி கார்டு வைத்திருந்தவர்கள் மீது அரசு எடுக்க உள்ள நடவடிக்கை குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. மேல் முறையீட்டு மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள விலாசத்தை வைத்து போலி ரேஷன் கார்டுகளை கண்டுபிடித்து பறிமுதல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், இலவச "டிவி' உட்பட அரசின் பல நலத்திட்டங்கள், வங்கி கணக்கு, பாஸ்போர்ட் பெறுதல், காஸ் சிலிண்டர் இணைப்பு, மொபைல் போன் சிம் கார்டு பெறுதல், நிலம் விலைக்கு வாங்குதல், கோர்ட் ஜாமீன் பெறுதல் மற்றும் பிற வசதிகளை போலி ரேஷன் கார்டு வைத்திருப்போர் பெற வாய்ப்பு உள்ளது. இது குறித்து வட்ட வழங்கல் துறை வட்டாரத்தில் விசாரித்த போது, "போலி கார்டு வைத்திருந்தவர்களை பிடித்து விசாரிப்பது கடினம். சிலர் தங்களுக்கு இனி தேவையில்லை எனக் கருதி கூட பொருட்களை வாங்காமல், மேல் முறையீடு செய்யாமல் இருந்திருக்கலாம். இந்த கணக்கெடுப்பு பணியின் நோக்கமே, தவறான நபர்களுக்கு மானிய விலையிலான உணவுப் பொருட்கள் போய்ச் சேரக்கூடாது. உணவு கடத்தலுக்கு வழிவகுத்து விடக் கூடாது என்பது தான். அதன்படி, தற்போது கண்டறியப்பட்டுள்ள போலி கார்டுகளுக்கு பொருட்கள் நிறுத்தப்படும், என்றனர்.
இந்தியா
திருமலையில் அலைமோதும் கூட்டம் இரு நாளில் 2.5 லட்சம் பேர் தரிசனம்
நகரி:திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க வரும் பக்தர்களின் கூட்டம் திருமலையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாடெங்கிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை, சனி, ஞாயிறு விடுமுறையையொட்டி வெள்ளியன்று இரவு முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள், திருமலைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.கடந்த வெள்ளியன்று முதல் (ஞாயிறன்று) நேற்று நள்ளிரவு வரை இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், சாமி தரிசனம் செய்தனர். வைகுண்டம் கியூ காம்ப்ளக்சின் வளாகங்கள் அனைத்தும் நிரம்பியுள்ளன. திருமலை கோவிலுக்கு வெளியே ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கும் அதிகமாக பக்தர்களின் கியூ நீண்டுள்ளது.திருப்பதியில் இருந்து பாத யாத்திரையாக திருமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, "திவ்ய தரிசனம்' என்ற டோக்கன் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த டோக்கன் பெற்றுள்ள பக்தர்கள் 300 ரூபாய் தரிசனத்திற்கு இணையாக ஒன்று முதல் இரண்டு மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதனால், பாத யாத்திரையாக திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் கடந்த இரு தினங்களில் அதிகரித்தது. ச னியன்று ஒரே நாளில் 23 ஆயிரம் பாத யாத்திரை பக்தர்கள், திருமலைக்கு வந்தனர். மேலும், தொடர்ந்து திருமலையில் கூட்டம் அதிகரித்து வந்ததால், பாத யாத்திரையாக மலைப்பாதையில் வந்த பக்தர்களுக்கும் இலவச டோக்கன் வழங்குவதை தேவஸ்தான அதிகாரிகள் சில மணி நேரம் நிறுத்தி விட்டனர்.இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் மலைப்பாதையில், "காலி கோபுரம்' அருகே 33வது வளைவு அருகே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், திருப்பதி செல்லும் ஆர்.டி., பஸ் மற்றும் வாகனங்களுக்கு சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டது. பின், கலைந்து சென்ற பக்தர்களுக்கு திருமலை செல்ல டிக்கெட் வழங்கி அனுமதியும் வழங்கப்பட்டது.சாமி தரிசனம் செய்ய அதிக நேரம் நீடிப்பதால், தங்கும் விடுதிகளில் இடம் இல்லை. விடுதிகள் கிடைக்காத நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலை சாலை ஓரங்களில் படுத்து ஓய்வெடுத்து வருகின்றனர். நேற்று (ஞாயிறன்று) மாலை நிலவரப்படி இலவச தரிசனத்திற்கு 10 மணி நேரமும், 300 ரூபாய் துரித தரிசனத்திற்கு 4 மணி நேரமும் பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை உள்ளது. கோவிலில் பக்தர்களின் துரித தரிசன வசதிக்காக தொலைதூர தரிசன முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. பக்தர் கூட்டம் எதிரொலியாக திருமலையின் நான்கு மாடவீதிகளிலும் பக்தர்கள் குவிந்துள்ளனர். திருமலை எங்கும் வாகனங்கள் நிறைந்துள்ளதால் போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பக்தர்களின் துரித தரிசன வசதி, குடிநீர், உணவு வசதி குறித்து நிர்வாக அதிகாரிகள் கிருஷ்ணாராவ், தர்மா ரெட்டி மேற்பார்வையில் தேவஸ்தான அதிகாரிகள் முகாமிட்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இந்தியா
டென்மார்க் தம்பதியினருக்கு இந்து முறைப்படி திருமணம்
புதுச்சேரி:புதுச்சேரி கோவிலில், இந்து முறைப்படி டென்மார்க் தம்பதியினர் திருமணம் செய்து கொண்டனர்.டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவர் கார்ஸ்டன்(57). அங்குள்ள இசைப்பள்ளி ஒன்றில் ஆசிரியர். அதே பள்ளியில் ஆசிரியையாக இருப்பவர் உல்பா(63). இருவரும் ஏற்கனவே அந்நாட்டு கலாசாரப்படி திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையே உல்பா, கார்ஸ்டன் இருவரும் உடல் எடையை குறைக்க முடிவு செய்தனர். இதற்காக சிகிச்சை பெற, கடந்த மார்ச்சில் இந்தியா வந்தனர். இருவரும் கேரளா மற்றும் தமிழக பகுதிகளில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்தனர்.இதோடு பொழுதை கழிக்கும் வகையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சுற்றி பார்த்தனர். அப்போது, இவர்களுக்கு இந்து மத கலாசாரங்கள், பழக்க வழக்கங்கள் மிகவும் பிடித்தன. இதையடுத்து, அவர்கள் இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்காக தனது உறவினர்களையும் வரவழைத்தனர்.கார்ஸ்டன் - உல்பா தம்பதியினர் நேற்று காலை புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலுக்கு வந்தனர். கோவிலில் முறைப்படி மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.இந்து முறைப்படி உல்பா பட்டுச் சேலையும், கார்ஸ்டன் பட்டு வேட்டி, சட்டை அணிந்து கொண்டனர். உல்பாவின் கழுத்தில் கார்ஸ்டன் தாலி கட்டினார். பின், இருவரும் கோவிலை சுற்றி வந்து சாமி தரிசனம் செய்தனர். இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட டென்மார்க் தம்பதியினரை பலரும் வாழ்த்தினர்.
இந்தியா
கதிர்வீச்சு பாதிப்பு அறிகுறிகள் பாபா அணு ஆய்வு மையம் எச்சரிக்கை
மும்பை:கதிர்வீச்சால் உடலில் ஏற்படும் அறிகுறிகள் பட்டியலை, பாபா அணு ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது. பட்டியலில் உள்ள அறிகுறிகள் உடலில் தோன்றினால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்று அது அறிவுறுத்தியுள்ளது. டில்லியில் பழைய இரும்புப் பொருட்கள் சந்தை உள்ள மாயாபுரியில் சமீபத்தில் கோபால்ட்-60 என்ற பொருளால் கதிர்வீச்சு ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட ஏழு பேர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் சமீபத்தில் இறந்து போனார்.கோபால்ட்-60 கண்டுபிடிக்கப்பட்ட கடையின் உரிமையாளர் தீபக் ஜெயினின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. அஜய் ஜெயின் என்பவரின் உடல்நிலை இன்னும் மோசமான நிலையிலேயே இருக்கிறது. மற்றவர்களின் உடல்நிலையில் படிப்படியான முன்னேற்றம் காணப்படுவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.இந்நிலையில், பாபா அணு ஆராய்ச்சி மையம் கதிர்வீச்சு ஏற்படுத்தும் உடல் பாதிப்புகளைப் பற்றி வெளியிட்டுள்ள வழிகாட்டல் நெறிகளில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது: உடலில் எரிச்சல் ஏற்படும்; தலையில் உள்ள முடிகள் கொட்டும்; உணவில் வெறுப்பும், வாந்தியுணர்வும் ஏற்படும்; இவற்றில் உணவு வெறுப்பும் வாந்தியும் மிகவும் கவலைக்குரிய அம்சங்கள்.மக்கள் வதந்தியை நம்ப வேண்டாம்; வதந்தி பீதியைத் தான் ஏற்படுத்தும். யாருக்கு இதுபோன்ற அறிகுறிகள் இருந்தாலும் அவர்கள் உடனடியாக மாயாபுரி போலீசாரிடம் தகவல் கொடுத்து விட்டு, சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்தியா
தீக்காயத்தை குணப்படுத்துகிறது மும்பை மருத்துவமனை
மும்பை:மும்பை மருத்துவமனையில் செயல்படும் தோல் வங்கி, தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பலரது உயிரை கடந்த 10 ஆண்டுகளாக காப்பாற்றி வருகிறது.தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 40 சதவீத காயம் பட்டிருந்தால் அவர்களை காப்பாற்றுவது எளிதல்ல. ஆனால், மும்பை அந்தேரி பகுதியில் உள்ள சியான் மருத்துவமனையில், தோல் மாற்று சிகிச்சை மூலம், 85 சதவீத காயம் ஏற்பட்டவர்கள் கூட உயிர் பிழைக்கின்றனர். இம்மருத்துவமனையில் முதன் முறையாக, 10 ஆண்டுகளுக்கு முன் தோல் வங்கி நிறுவப்பட்டது. இந்த வங்கியில், ஓராண்டில் 70 பேர் மட்டுமே தோலை தானமாக தருகின்றனர். ஆனால், தற்போதைய தேவை 350 தோல்கள். போதிய விழிப்புணர்வு இல்லாததால் பலர் தோல் தானம் செய்ய முன்வருவதில்லை, என்கிறார் இம்மருத்துவமனையின் அதிகாரி மாதுரி கோர்.இந்த மருத்துவமனையில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட ரூபாலி என்ற பெண்ணுக்கு 50 சதவீத தீக்காயம் ஏற்பட்டிருந்தது. தானமாக அளிக்கப்பட்ட தோலை ஒட்ட வைத்து சிகிச்சையளித்ததில் உயிர் பிழைத்துள்ளார். இது குறித்து மாதுரி கோர் குறிப்பிடுகையில், " தானமாக அளிக்கப்படும் தோல், நோயாளிகளின் உடலில் நிரந்தரமாக ஒட்ட வைக்கப்பட மாட்டாது. ரத்த கசிவை தடுக்கவும், புரோட்டீன் இழப்பை தடுக்கவும், வலியை குறைக்கவும் தான் தானமாக அளிக்கப்பட்ட தோல் உதவுகிறது.  நான்கு வாரங்களில் நோயாளியின் உடலில் தோல் தானாக வளர்ந்து தீப்புண்ணை ஆற்றி விடும். தானமாக அளிக்கப்படும் தோல்கள், மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைக்கப்பட்டு ஆறு மாதம் வரை பாதுகாக்கப்படும்' என்றார்.
இந்தியா
109 நாடுகளில் மலேரியா பாதிப்பு உலக சுகாதார நிறுவனம் கவலை
புதுடில்லி:உலகின் 109 நாடுகளில் மலேரியா காய்ச்சல் நோய், பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. இந்தியாவிலும் இந்த நோயின் பாதிப்பு கணிசமாக உள்ளது.உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:கொசுக்களால் பரவும் மலேரியா காய்ச்சல் நோய், உலகின் பெரும்பாலான பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு நிலவரப்படி, உலகம் முழுவதும் உள்ள 109 நாடுகளில் இந்த நோயின் பாதிப்பு உள்ளது. 2.5 கோடி பேர், மலேரியாவின் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளது தெரியவந்துள்ளது.கடந்தாண்டில் மட்டும், எட்டு லட்சத்து 63 ஆயிரம் பேர் மலேரியாவுக்கு பலியாகியுள்ளனர். ஆப்ரிக்க நாடுகளில் தான், இந்த நோயின் தாக்கம் அதிகம் உள்ளது. இந்த நாடுகளில் உள்ள 90 சதவீதம் பேர், மலேரியாவின் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். இவர்களில், பெரும்பாலானோர் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள்.இந்தியாவிலும் மலேரியாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. 2000ம் ஆண்டில் மட்டும் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தியாவில் மலேரியாவால் பாதிக்கப்பட்டனர். 2007ல் இந்த எண்ணிக்கை 10.5 லட்சமாக குறைந்துள்ளது. இருந்தாலும், இந்த எண்ணிக்கை இன்னும் குறைக்கப்பட வேண்டும்.மலேரியா நோயின் பாதிப்பு குறையாமல் இருப்பதற்கு சில முக்கியமான காரணங்கள் உள்ளன. இதில் முக்கியமானது, காய்ச்சல் ஏற்பட்டவுடன் அது குறித்து முறையாக பரிசோதனைகள் செய்து, அதற்கு பின், அந்த நோயின் பாதிப்பை தடுக்கும் வகையிலான பொருத்தமான மருந்தை நோயாளிகளுக்கு கொடுக்க வேண்டும். பல நாடுகளில் இதுபோன்ற நடமுறைகள் மேற்கொள்ளப்படுவது இல்லை.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா
விமானப்படை கல்லூரிக்காக மீனவர் குடும்பங்கள் இடமாற்றம்
பெர்ஹாம்பூர் (ஒரிசா):இந்திய ராணுவத்தின் விமானப்படை கல்லூரி கட்டுவதற்காக, ஒரிசாவின் கடலோர கிராமத்திலிருந்து 1,074 குடும்பங்கள் விரைவில் இடமாற்றம் செய்யப்பட உள்ளன.ஒரிசா மாநிலம், கஞ்சன் மாவட்டம், நுவா கோலாபந்த் என்ற கடலோரக் கிராமத்தில் மீனவர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. அக்கிராமத்தில், இந்திய ராணுவத்தின் விமானப்படை கல்லூரி கட்டுவதற்காக, 30 ஏக்கர் பரப்பளவு நிலம், 20 ஆண்டுகளுக்கு முன், ராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டு விட்டது. இருப்பினும் அக்கிராம மக்கள், தங்கள் வீடுகளைக் காலி செய்ய மறுத்துவிட்டனர். இடையில், கல்லூரி அமைக்கப்பட உள்ள இடங்களில் வேலி போடப்பட்டதால், மீனவர்கள் பல கி.மீ., சுற்றி கடலுக்கு வர வேண்டியிருந்தது. இதற்கு மீனவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால், மாவட்ட நிர்வாகம், கிராமப் பஞ்சாயத்து, ராணுவக் கல்லூரி நிர்வாகத்துக்கு இடையிலான பேச்சு வார்த்தையில் புதிய இடம் தேர்ந்தெடுப்பது என்று முடிவானது.நுவா கோலாபந்திலிருந்து மூன்று கி.மீ., தூரம் உள்ள கிருதிபூருக்கு இடம் மாறுவது குறித்து, கிராம பஞ்சாயத்துத் தலைவர் பிரபுல்லகுமார் பெகாரா கூறுகையில், "இப்போது நாங்கள் இடம் மாற முடிவு செய்து விட்டோம். புதிய இடம், கடலிலிருந்து ஒரு கி.மீ.,க்கும் குறைவான தூரத்தில் இருப்பதால் தான் மாற முடிவு செய்துள்ளோம்' என்று கூறினார்.இதையடுத்து, கோலாபந்தின் 1,074 குடும்பங்கள் விரைவில் கிருதிபூருக்கு மாற உள்ளன. புதிய கிராமத்தில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் செய்து தரப்பட இருப்பதாக, மாநில பஞ்சாயத்துராஜ் அமைச்சர் பிரபுல்ல சமால், அத்தொகுதி எம்.எல்.ஏ.,பிரதீப் குமார், மாவட்ட கலெக்டர் பாண்டியன் ஆகியோர் மக்களிடம் உறுதியளித்துள்ளனர்.
இந்தியா
கசாப்பால் ஊனமான சிறுமிக்கு போலீஸ் அதிகாரியாக ஆசை
மும்பை:பாகிஸ்தான் பயங்கரவாதி அஜ்மல் கசாப் சுட்டதில் கால் ஊனமுற்ற சிறுமி, போலீஸ் அதிகாரியாக ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளாள்.கடந்த 2008ல் நவம்பர் 26ம் தேதி மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் புகுந்த பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக பயணிகளை சுட்டனர். இந்த துப்பாக்கி ச்சூட்டில் தேவிகா என்ற சிறுமி குண்டடி பட்டு கால் ஊனமானாள். மூன்றாம் வகுப்பு மாணவியானதேவிகா கூறுகையில், பயங்கரவாதிகள் சினிமாவில் சுடுவது போல துப்பாக்கியால் எல்லோரையும் சுட்டனர். இதற்கு பயந்து பலர் ஓடி ஒளிந்தனர். பயங்கரவாதி கசாப் சுட்டதில் என் வலது காலில் குண்டு பாய்ந்தது.""நான் போலீஸ் அதிகாரியாக மாறி பயங்கரவாதிகளை ஒழிக்க ஆசைப்படுகிறேன். மற்ற சிறுமிகளை போல ஓடி ஆட நினைப்பேன். ஆனால், இப் போது கட்டையின் உதவியுடன் தான் நடக்கிறேன். "டிவி'யில் கசாப்பின் படத்தை காட்டும் போதெல்லாம் எனக்கு பயங்கர கோபம் வருகிறது. புனே செல்ல ரயிலுக்காக காத்திருந்த போது தான் இச்சம்பவம் நடந்தது. என் கண் முன்னே பலர் உயிரிழந்தனர்,என்றாள்.தேவிகாவின் தந்தை நட்வர்லால் குறிப்பிடுகையில், " பலரது உயிரை பறித்த கசாப்புக்கு மன்னிப்பு தரக்கூடாது. என் மகளின் வாழ்க்கையை பாழாக்கி விட்டான். இனி அவளை யார் திருமணம் செய்து கொள்வார்கள். கசாப்புக்கு பொது மக்கள் முன்னிலையில் மரண தண்டனை அளிக்க வேண்டும்,'' என்றார்.
தமிழகம்
ஆலத்தம்பாடி கடைகளில் அயோடின் உப்பு சோதனை
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அடுத்த ஆலத்தம்பாடி வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் அயோடின் உப்பு சோதனை நடத்தப்பட்டது. கட்டிமேடு, அபிஷேக கட்டளை, பள்ளங்கோவில், நெடும்பலம், விளக்குடி, ஆலத்தம்பாடி, கச்சனம், திருத்தங்கூர் ஆகிய கிராமங்களில் உள்ள மளிகைக்கடைகளில் உப்பில் அயோடின் கலந்துள்ளதா? என ஆலத்தம்பாடி வட்டார மருத்துவ அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. மருத்துவ அலுவலர்கள் புஷ்பா, தையல்நாயகி, தேவிகா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வராஜ், சுகாதார ஆய்வாளர்கள் மணிவண்ணன், பழனியப்பன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழகம்
ஆலிவலத்தில் தி.மு.க., கொடியேற்று விழா
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகேவுள்ள ஆலிவலத்தில் தி.மு.க., கொடியேற்று விழா, சேகல் கோட்டகத்தில் பூண்டி கலைச்செல்வம் நினைவு கல்வெட்டு திறப்பு விழா, நுணாக்காடு பஞ்சாயத்து தென்காசியில் கொடியேற்று விழா, புதிய உறுப்பினர்கள் இணையும் விழா நடந்தது. ஒன்றிய செயலாளர் அன்பரசு தலைமை வகித்தார். நகர செயலாளர் முன்னிலை வகித்தார். ஆலிவலத்தில் 140 பேர், தென்காசியில் 52 பேரும், சேகல்கோட்டகத்தில் 130 பேரும் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தி.மு.க.,வில் இணைந்தனர். அவர்களுக்கு திருவாரூர் மாவட்ட தி.மு.க., செயலாளர் பூண்டி கலைவாணன் வாழ்த்து தெரிவித்தார். மாவட்ட துணைச் செயலாளர் பக்கிரிசாமி, அரசு வக்கீல் ராஜ்மோகன், சிக்கந்தர், ஆதிரெங்கம் பஞ்சாயத்து தலைவர் முருகதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.
தமிழகம்
மன்னார்குடி அருகே பெண்ணை தாக்கிய ஐந்து பேர் கைது
மன்னார்குடி: மன்னார்குடி அருகேவுள்ள மெ ய்பழத்தோட்டம் கிராமத்தில் முத்தரையர் சங்கத்தினர் வைத்திருந்த பேனர் கிழிந்ததால் ஏற்பட்ட தகராறில் பெண்ணுக்கு மண்டை உடைந்தது. மெய்பழத்தோட்ட கிராமத்தில் வசிப்பவர் முத்துவேல் (30). இவர் முத்தரையர் வகுப்பைச் சேர்ந்தவர். அதேஊர் அதே வகுப்பைச் சேர்ந்த முருகையன் (22), சோமசுந்தரம் (22), மணிமாறன் (20), மோகன் (22), சிவகுமார் (23) ஆகியோர், "சங்கத்துக்கு பேனர் வைப்பதற்காக,' முத்துவேலிடம் பணம் கேட்டனர். அவரும் பணம் கொடுத்தார்.இந்நிலையில், தயார் செய்து வைத்திருந்த பேனர் திடீரென கிழிந்து காணப்பட்டது."முத்துவேல்தான் இதை கிழித்திருக்க வேண்டும்,' எனக்கருதி, முத்துவேல் வீட்டின் முன் நின்று, முருகையன் உட்பட ஐந்து பேரும் கடுமையான வார்த்தைகளால் பேசியுள்ளனர். இவர்கள் கூச்சலிடுவதை கேட்ட முத்துவேலின் தாய் சுசிலா (52) வந்து என்னவென விசாரித்தார். ஐந்து பேரும் சேர்ந்து சுசிலாவை தாக்கினர். இதனால், அவரது மண்டை உடைந்து மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார்.மன்னார்குடி போலீஸ் எஸ்.ஐ., முரளி முருகையன் உட்பட ஐந்து பேரையும் கைது செய்து விசாரிக்கிறார்.
தமிழகம்
நன்னிலம், வேதாரண்யத்தில் சாலை விபத்து 36 பேர் காயம்
நன்னிலம்: நன்னிலம் அருகே அரசு மற்றும் தனியார் பஸ் மோதிக் கொண்டதில் 28 பேர் காயமடைந்தனர்.நன்னிலத்தில் இருந்து தனியார் பஸ் ஒன்று நேற்று காலை கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அச்சுதமங்கலம் அருகே கும்பகோணத்தில் இருந்து நாகை நோக்கி வந்த அரசு பஸ்சும், நன்னிலத்தில் இருந்து சென்ற தனியார் பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் 2 பஸ்களிலும் வந்த 28 பயணிகள் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்த நன்னிலம் போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக நன்னிலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இதில் 2 பேர் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து நன்னிலம் இன்ஸ்பெக்டர் பிரகாஷ்பாபு, சப்–இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே மரத்தில் மோதி வேன் கவிழ்ந்ததில் 8 பேர் காயம் அடைந்தனர். வேதாரண்யம் அருகே தேத்தாக்குடி தெற்கு காத்தான்குத்தகை பகுதியைச்சேர்ந்தவர்கள் முருகன், சரோஜா , ராஜகுமார், தியாகராஜன், வசந்தி, பார்வதி, அஞ்சம்மாள் உட்பட 8 பேர். இவர்கள் மினி வேனில் தென்னம்புலம் கிராமத்திற்கு சென்றனர். அங்கு உறவினர் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். தென்னம்புலம் கலைஞர்காலனி அருகில் வரும் போது எதிரே வந்த லாரிக்கு வழிவிடுவதற்காக வேனை ஓரமாக ஓட்டியுள்ளார். அப்போது எதிர்பாரதவிதமாக மரத்தில் மோதி வேன் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த 8 பேரும் காயம் அடைந்தனர். அனைவரும் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதில் முருகன், சரோஜா, ராஜகுமாரி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக நாகை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தமிழகம்
உணவுப்பொருள் வழங்கல் துறை ஆய்வுக்கூட்டம்; கமிஷனர் பங்கேற்பு
பெரம்பலூர்: பெரம்பலூர் மா வட்ட கலெக்டர் அலுவலக கூட் ட அரங்கில் உணவுப்பொருள் வழங்கல் தொடர்பாக உணவுப்பொருள் வழங்கல் மற்றும்நுகர்வோர் பாதுகாப்புத்துறை கமிஷனர் ராஜாராமன் அரசு அலுவலர்களுடன் ஆய்வு செய்தார். கூட்டத்தில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கமிஷனர் ராஜாராமன் பேசியதாவது: ரேஷன் கடைகளில் பணியாற்றும் சேல்ஸ்மேன், ரேஷன் கார்டுதாரர்களுக்கு தேவையான பொருட்களை சரியான முறையில் வழங்குவதோடு, இருப்பு பதிவேடு, ரேஷன் கார்டுதாரர் விபரங்கள் அடங்கிய பதிவேடுகளை சரியான முறையில் பராமரித்திட வேண்டும்.மக்களுக்கு அரசின் திட்டங்கள் கிடைக்க வேண்டும் என்ற தன்னார்வம் அலுவலர்களிடம் இருக்கவேண்டும். அப்போழுது தான் அரசின் திட்டங்கள் முழுமையாக வெற்றி பெற முடியும். களப்பணியாளர்கள் தனது கடமைகளை சரிவர செய்தால் மக்களுக்கு எந்தவித பிரச்சனையும் இருக்காது. மக்களின் பிரச்சனைகளை மனித நேயத்தோடு நாம் கவனிக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களை வாங்கும் பொதுமக்கள் கூலி வேலை செய்யக்கூடிய ஏழை, எளிய மக்கள் என்பதால் அவர்களைக் காத்திருக்க வைக்காமல் அவர்களுக்கு பொருட்களை உடனடியாக வழங்கவேண்டும். உணவுப்பொருள் வழங்கல் துறை அலுவலர்கள் ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொள்வதோடு மட்டுமல்லாமல், ரேஷன் கார்டுதாரர் வீடுகளுக்கு நேரடியாக சென்று அவர்களுக்கு சரியான முறையில் அத்தியாவசியப்பொருள் வழங்கப்பட்டு வருகிறதா? என்பதை கேட்டறிய வேண்டும்.தமிழக அரசின் திட்டங்கள் அனைத்து மக்களையும் முழுமையாக சென்றடைய அரசு அலுவலர்கள் தங்கள் பணிகளை சிறப்புடன் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையர் ராஜாராமன் திடீர் ஆய்வு செய்தார்.
தமிழகம்
வி.ஏ.ஓ.,விடம் தகராறு இருவர் மீது வழக்கு
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே வி.ஏ.ஓ.,வை பணி செய்யவிடாமல் தடுத்த இரண்டு வாலிபர்கள் மீது பெரம்பலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். பெரம்பலூர் அருகேவுள்ள எளம்பலூர் கிராமத்தில் வி.ஏ.ஓ.,வாக பணியாற்றுபவர் தேவராஜன் (54). இவர் நேற்று முன்தினம் எளம்பலூர் கிராமத்தில் உள்ள நேதாஜி நகரில் அரசின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் குடிசை வீடுகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது அதே பகுதியை சேர்ந்த பெரியதம்பி மகன் இளங்கோவன் (35), பாலுசாமி மகன் சுகுமாறன் (27) ஆகிய இருவரும் சேர்ந்து, வி.ஏ.ஓ., தேவராஜனிடம், "தாங்கள் இருவரும் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள். இருவரது பெயரையும் கணக்கெடுப்பு பட்டியலில் செய்ய வேண்டும்' என தகராறு செய்துள்ளனர். இதற்கு வி.ஏ.ஓ., தேவராஜன் மறுப்பு தெரிவித்தால் வி.ஏ.ஓ.,வை பணி செய்யவிடாமல் இருவரும் தடுத்தனர்.இதுகுறித்து தேவராஜன் பெரம்பலூர் போலீஸில் புகார் செய்தார். புகாரின்பேரில், பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன், இளங்கோவன் மற்றும் சுகுமாறன் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.
தமிழகம்
வேப்பந்தட்டை பஞ்., யூனியன் வளர்ச்சி பணிகள்: பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு
பெரம்பலூர்: வேப்பந்தட்டை பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம், பூலாம்பாடி, பெரியம்மாபாளையம், தழுதாழை, தொண்டமாந்துறை பகுதிகளில் நடக்கும் அரசின் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கலெக்டர் விஜயகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனை முன்பு நடக்கும் பாலம் கட்டும்பணி, மருத்துவமனை காம்பவுண்ட் கட்டும் பணிகளை ஆய்வு செய்தார். பூலாம்பாடி கிராமத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை ஆய்வு செய்த கலெக்டர், மருத்துவமனையில் உள்ள ஸ்கேன், எக்ஸ்ரே, ஆப்ரேஷன் பிரிவு, மருந்து மாத்திரைகள் வழங்குமிடம் ஆகியவற்றை பார்வையிட்டார். பெரியம்மாபாளையம் பஞ்சாயத்து இந்திரா நகர் காலனியில் எம்.பி., மேம்பாட்டு நிதி நான்கு லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூட பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 20 லட்சம் ரூபாய் செலவில் செய்யப்படும் திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின் கலெக்டர் கூறியதாவது: வேப்பந்தட்டை பஞ்சாயத்து யூனியனில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் 51 பணிகள் 322 லட்சம் ரூபாய் மதிப்பிலும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 161 பணிகள் 120 லட்சம் ரூபாய் மதிப்பிலும், எம்.பி., உள்ளூர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 11 பணிகள் 35 லட்சம் ரூபாய் மதிப்பிலும், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 52 பணிகள் 67.67 லட்சம் ரூபாய் மதிப்பிலும், நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ஒரு பணி 11 லட்சம் ரூபாய் மதிப்பிலும் நடக்கிறது. பள்ளி சீரமைப்பு திட்டத்தின்கீழ் 10 பணிகள் 24.92 லட்சம் ரூபாய் மதிப்பிலும், நபார்டு சாலைகள் திட்டத்தின்கீழ் இரண்டு பணிகள் 79.51 லட்சம் ரூபாய் மதிப்பிலும், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின்கீழ் 688 பணிகள் 378.40 லட்சம் ரூபாய் மதிப்பிலும், கச்சா வீடுகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 172 பணிகள் 25.80 லட்சம் ரூபாய் மதிப்பிலும், 12வது நிதிக்குழு மானியம்-சாலைப்பணிகள் இரண்டு பணிகள் 29.62 லட்சம் ரூபாய் மதிப்பில் உட்பட மொத்தம் ஆயிரத்து 150 பணிகள் 10.94 கோடி ரூபாய் மதிப்பில் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். தொண்டமாந்துறை பகுதியில் உள்ள காட்டுக்கொட்கை கிராமத்தில் கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் கணக்கெடுக்கப்பட்ட குடிசைகளை கலெக்டர் மேலாய்வு செய்தார். ஆய்வின் போது, பி.டி.ஓ., ஆறுமுகம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
தமிழகம்
பிரபாகரன் தாயார் தமிழகம் வர தடையில்லை; மத்திய அரசுக்கு பறந்தது பரிந்துரை கடிதம்
சென்னை: புலித்தலைவர் பிரபாகரன் தாயார் தமிழகம் வந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கும் விதமாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தமிழ அரசு சார்பில் பரிந்துரை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக சட்டசபையில் துணை முதல்வர் மு.க., ஸ்டாலின் தெரிவித்தார். திருவேங்கடம் வேலுப்பிள்ளை மனைவி பார்வதி அம்மாள் மலேசியாவில் இருந்து வருகிறார். இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் சிகிச்சை எடுத்து கொள்வதற்காக கோலாலம்பூரில் இருந்து கடந்த 16 ம் தேதி சென்னைக்கு விமானம் மூலம்வந்தார். ஆனால் அவர் விமானத்தில் இருந்து இறங்க விடாமல் அப்படியே மலேசியாவுக்கு குடியேற்ற துறை அதிகாரிளால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.   இந்த சம்பவம் குறித்து ம.தி.மு.க., மற்றும் பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை கண்டித்து வைகோ உண்ணாவிரதப்போராட்டம் இருக்கப்போவதாக அறிவித்தார். இந்த விவகாரம் தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானமாக கொண்டு வரப்பட்டது. இதற்கு பதில் அளித்த முதல்வர் கருணாநிதி இந்த விஷியம் எனக்கு öதிரியாது. மத்திய அரசு அதிகாரிகள் எடுத்துள்ளனர். மேலும் பார்வதி அம்மாள் தமிழகத்திற்கு வருவது குறித்து யாருக்கும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் அவர் கேட்டு கொண்டாலோ, கடிதம் எழுதினாலோ மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து அனுமதி கிடைத்தால் ஆவண செய்வோம் என்றார். இது தொடர்பாக சென்னை கோர்ட்டில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் முதல்வர் கருணாநிதி சட்டசபையில் தெரிவித்த கருத்தை தெரிவிக்கப்பட்டது. பார்வதி அம்மாள் முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் அனுப்பலாம் என்றும் அரசும் பரிசீலிக்கலாம் என்றும் கூறியது.   இதனையடுத்து பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் கடந்த 30 ம் தேதி தமிழக முதல்வர் தனிப்பிரிவு அதிகாரிகளுக்கு தனது பெரு விரல் கைரேகை பதித்து மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பினார். இந்த கடிதத்தில் நான் சிகிச்சை எடுத்துக்கொள் திருச்சி விமானத்தில் வருவதற்கு மலேசியாவில் உள் இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் உதவி செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார். இது தொடர்பாக துணை முதல்வர் மு.க., ஸ்டாலின் சட்டசபையில் விதி 110 ன் கீழ் தானாக முன்வந்து அறிக்கை தாக்கல் செய்தார். அவர் அப்போது கூறியதாவது: பார்வதி அம்மாள் எழுதிய கடிதம் தொடர்பாக பரிசீலித்து . ஆராய்ந்து , மத்திய உள்துறை அமைச்சக செயல் அதிகாரிகளுக்கு பார்வதி அம்மாள் தமிழகம் வரும் விஷயத்தில் பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியுள்ளோம் என்றார்.
இந்தியா
ஜெ., வழக்கு ஒத்திவைப்பு
பெங்களூரு : தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு, வரும் 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பெங்களூரு சிட்டி சிவில் சிறப்பு நீதிமன்றத்தில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா சார்பில் ஆஜரான வக்கீல் நவநீத கிருஷ்ணன், வக்கீல்கள் சுப்பையா, வேலுமணி, அசோகன் ஆகியோர் ஜெயலலிதா, இளவரசி, சசிகலா, தினகரன், சுதாகரன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க, விலக்க கோரும் மனுவை தாக்கல் செய்தனர். வக்கீல் நவநீத கிருஷ்ணன் வாதிடுகையில், ""சொத்து குவிப்பு வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நாளை (இன்று) விசாரணைக்கு வரவுள்ளது. எனவே, இங்கு நடந்து வரும் சொத்து குவிப்பு வழக்கை நிலுவையில் வைக்க, குறைந்த அளவு கால அவகாசம் தேவைப்படுகிறது,'' என்றார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கை வரும் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அரசு சார்பில் வக்கீல் ஆச்சார்யலு ஆஜரானார்.
இந்தியா
நித்யானந்தா மனு மீது விசாரணை தள்ளிவைப்பு
பெங்களூரு : நித்யானந்தா ஜாமீன் மனு விசாரணை, 6ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள நித்யானந்தா, ஜாமீன் கேட்டு ராம்நகர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு ஏற்கனவே இரண்டு முறை விசாரணைக்கு வந்தது. நேற்று விசாரணை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ராம்நகர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில், நீதிபதி ஹுன்குந்த் முன்னிலையில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. நித்யானந்தா மீதான ஜாமீன் மனு விசாரணை வரும் 6ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இந்தியா
தொடர்ந்து மாணவர்களுக்கு ஒதுக்கீடு : இந்த ஆண்டும் சுப்ரீம் கோர்ட் அனுமதி
புதுடில்லி : மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் கல்லூரிகளில் 69 சதவீத ஒதுக்கீட்டால் பாதிக்கப்படும் முற்பட்ட மாணவர்களுக்கு கூடுதல் இடங்களை ஒதுக்க சுப்ரீம் கோர்ட் இந்த ஆண்டும் அனுமதி வழங்கியுள்ளது. நாடு முழுவதும் மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் கல்லூரிகளில் மண்டல் கமிஷன் பரிந்துரை படி பிற் படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காக 50 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழகத்தில் இந்த இடஒதுக்கீட்டு அளவு 69 சதவீதமாக உள்ளது. இதனால், அதிக மதிப்பெண் பெற்ற முற்பட்ட மாணவர்களுக்கு தொழில் கல்லூரிகளில் வாய்ப்பு கிடைக்காத நிலை ஏற்படும் சூழல் உருவானது. இதற்காக 1994ம் ஆண்டு இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் பொது இடங்களுக்கான எண்ணிக்கையை அதிகரிக்க சுப்ரீம் கோர்ட்டில் அனுமதி கோரப்பட்டது. இதற்கு சுப்ரீம் கோர்ட் ஒவ்வொரு ஆண்டும் அனுமதி அளித்து வருகிறது. கடந்த ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் இந்த கூடுதல் ஒதுக்கீட்டுக் கான அனுமதியை வழங் கும் படி வக்கீல் விஜயன், சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் சதாசிவம் மற்றும் எச்.எல். டட்டு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் கோரினார். தமிழக அரசின் சார்பில் கோரப்பட்ட இந்த மனுவுக்கு நீதிபதிகள் அனுமதி கொடுத்தனர்.
தமிழகம்
ஏ.ஐ.சி.டி.இ., உறுப்பினர் செயலராக செயல்பட தடை கோரி வழக்கு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்
சென்னை : ஏ.ஐ.சி.டி.இ., உறுப்பினர் செயலராக தினேஷ்குமார் பாலிவால் செயல்படுவதற்கு தடை விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த பொறியாளர் அருண்குமார் என்பவர் தாக்கல் செய்த மனு: ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக ஏ.ஐ.சி.டி.இ.,யின் உறுப்பினர் செயலர் கைது செய்யப்பட்டார். புதிய உறுப்பினர் செயலரை நியமிப்பதற்காக அவசர அவசரமாக கோப்பு அனுப்பப்பட்டது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் வரும் தொலைதூர கல்வி அமைப்பின் துணை கல்வி ஆலோசகர் தினேஷ்குமார்பாலிவாலை உறுப்பினர் செயலராக கூடுதல் பொறுப்பில் நியமித்துள்ளனர். உறுப்பினர் செயலர் பதவி காலியாகும் போது, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கூடுதல் செயலர் அல்லது இணைச் செயலர் அந்தஸ்தில் உள்ளவர்கள் தான் நியமிக்கப்படுவர். ஆனால், இந்த முறை துணைச் செயலர் அந்தஸ்தில் உள்ளவரை நியமித்துள்ளனர். இதன்மூலம் விதிமுறைகளை பின்பற்றாதது தெரிய வருகிறது. ஏ.ஐ.சி.டி.இ., உறுப்பினர் செயலர் பதவியை நிரப்பக் கோரி அரசுக்கு மனுக்கள் அனுப்பப்பட்டன. இதையடுத்து, ஜனவரி 20ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டது. இதுவரை, தகுதிவாய்ந்த நபரை அந்த பதவியில் நியமிக்கவில்லை. உறுப்பினர் செயலராக பதவி வகிக்க தினேஷ்குமார்பாலிவாலுக்கு தகுதியில்லை. இந்தியா முழுவதும் தொழிற்கல்வியை நிர்வகிக்கும் அமைப்பாக ஏ.ஐ.சி.டி.இ., விளங்குகிறது. தொழிற் கல்வி தகுதி பெறாத நபரை இதில் எப்படி நியமிக்க முடியும்? எனவே, உறுப்பினர் செயலராக தினேஷ்குமார்பாலிவால் செயல்படுவதற்கு தடை விதிக்க வேண்டும். அவரை பதவியில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை நீதிபதிகள் தர்மாராவ், சசிதரன் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. மனுவுக்கு பதிலளிக்கும்படி மத்திய அரசு, ஏ.ஐ.சி.டி.இ.,க்கு நோட்டீஸ் அனுப்ப, "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டது.
தமிழகம்
சத்துணவு அமைப்பாளர் பதவி உயர்வில் பாரபட்சம் : உத்தரவை ரத்து கோரிய மனுவில் அரசுக்கு நோட்டீஸ்
சென்னை : சத்துணவு பணியாளர்களுக்கான பதவி உயர்வில், பாரபட்சம் காட்டும் அரசாணையை ரத்து செய்யக்கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஒருங்கிணைந்த சத்துணவு பணியாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் வரதராஜன் தாக்கல் செய்த மனு: சத்துணவு அமைப்பாளராக, கடந்த 27 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். சத்துணவு பணியாளர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்பு அளிக்க கோரினோம். கடந்த ஜனவரி மாதம், சமூக நலன் மற்றும் மத்திய உணவு திட்டத்துறை சார்பில், ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, அமைப்பாளர்களுக்கு அலுவலக உதவியாளர், ரிக்கார்டு கிளார்க் என நியமனம் கிடைக்கும். இந்த அரசாணையில், சத்துணவு பெண் அமைப்பாளர்கள் மட்டுமே, கிரேடு-2 மேற்பார்வையாளராக நியமிக்கப்படுவர் என கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், பெண்களுக்கு மட்டுமே மேற்பார்வையாளர் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கு இந்த பதவி கிடையாது. எனவே, ஒருவர் பெண்ணாக இருப்பதால், அவருக்கு மேற்பார்வையாளராக பதவி உயர்வு கிடைக்கிறது. அதுவே ஆணுக்கு மறுக்கப்படுகிறது. இந்த அரசாணையை அனுமதித்தால், ஆண்களுக்கு பாதிப்பு ஏற்படும். மேற்பார்வையாளர் பணிக்கு ஆண்களை பரிசீலிக்காதது சரியல்ல. எனவே, பெண்களை போல் ஆண்களையும் பரிசீலிக்க வேண்டும். இந்த அரசாணையை செயல்படுத்த, தடை விதிக்க வேண்டும். அதை ரத்து செய்ய வேண்டும். பெண்களுக்கு இணையாக ஆண்களுக்கும் சமவாய்ப்பு அளிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை நீதிபதி சந்துரு விசாரித்தார். மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, நீதிபதி சந்துரு உத்தரவிட்டார்.
General
இலங்கை திசநாயகத்திற்கு பொதுமன்னிப்பு தர முடிவு
கொழும்பு:இலங்கையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் பத்திரிகையாளர் திசநாயகத்துக்கு பொது மன்னிப்பு அளிக்க, அதிபர் ராஜபக்ஷே முடிவு செய்துள்ளார்.இலங்கையைச் சேர்ந்த பிரபல தமிழ் பத்திரிகையாளர் ஜெயப்பிரகாஷ் சித்தம்பலம் திசநாயகம். இவர், இலங்கை ராணுவத்துக்கு எதிராகவும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் பத்திரிகையில் கட்டுரை எழுதியதாக, கடந்த 2008ல் கைது செய்யப்பட்டார். பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. திசநாயகம் கைது செய்யப்பட்டதற்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, திசநாயகத்தின் உடல் நிலையை கருத்தில் கொண்டு, சமீபத்தில் இவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.இதுகுறித்து இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரிஸ் கூறுகையில்,"பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் திசநாயகத்துக்கு பொது மன்னிப்பு அளிக்க, அதிபர் ராஜபக்ஷே முடிவு செய்துள்ளார். வழக்கில் இருந்து விரைவில் அவர் விடுவிக்கப்படுவார்'என்றார்.
தமிழகம்
மனைவியை 29 முறை கத்தியால் குத்திக்கொன்ற கணவனுக்கு ஆயுள்
திருவள்ளூர்: கள்ளக்காதல் காரணமாக மனைவியை, 29 முறை கத்தியால் குத்திக் கொலை செய்த, லாரி டிரைவருக்கு திருவள்ளூர் விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. திருவள்ளூர் மாவட்டம் மணலி பெரியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பலராமன் மகன் வெங்கடேசன் (35). தனியார் கம்பெனி லாரி டிரைவர். இவரது மனைவி புவனேஸ்வரி (20). இவருக்கும், செங்குன்றம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இருவரும் லாரி டிரைவரான வெங்கடேசன் வேலைக்கு சென்றதும், வீட்டில் உல்லாசமாக இருந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 02.01.2007 அன்று, புவனேஸ்வரி கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்தபோது, அதை வெங்கடேசன் பார்த்துவிட்டார். இதனால் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு கோபித்துக்கொண்டு, புவனேஸ்வரி தனது தாய் வீடான மத்தூர் எம்.எம்.டி.ஏ., காலனிக்கு சென்றுவிட்டார். மனைவி மீது ஆத்திரத்திலிருந்த வெங்கடேசன், 04.01.2007 அன்று மாமியார் வீட்டுக்கு சென்று, அங்கு தனியாக இருந்த மனைவியை 29 முறை கத்தியால் குத்திக் கொலை செய்தார். இதுகுறித்து, புவனேஸ்வரி தம்பி மகேஸ்வரன் கொடுத்த புகாரின்பேரில், மாதவரம் பால்பண்ணை போலீசார் வெங்கடேசனை கைது செய்தனர். இவ்வழக்கு குறித்த விசாரணை, திருவள்ளூர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில், வக்கீல் ஸ்ரீதர் ஆஜராகி வாதாடினார். இவ்வழக்கில் விசாரணை முடிந்து, நேற்று மாஜிஸ்திரேட் ஹேமலதா அளித்த தீர்ப்பில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
General
கொல்லப்பட்டதாக கருதப்பட்ட தலிபான் தலைவர் வீடியோ பேட்டி
வாஷிங்டன்:அமெரிக்காவின் விமான தாக்குதலில் கொல்லப்பட்டதாக கருதப்படும் பாகிஸ்தான் தலிபான் தலைவர் ஹக்கி முல்லா மெஹ்சூத், அமெரிக்காவை பழிவாங்கப்போவதாக பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியை அமெரிக்கா ஒழித்த பின் பெரும்பாலான தலிபான்கள் பாகிஸ்தான் எல்லையில் தஞ்சம் புகுந்தனர். பாகிஸ்தானில், "தெஹ்ரிக் - இ- தலிபான்' என்ற பெயரில் இவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க படைகள், ஆளில்லாத விமானம் மூலம் பாகிஸ்தான் எல்லையில் பதுங்கியுள்ள தலிபான்கள் மீது குண்டுகளை வீசி அழித்து வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தலிபான் தலைவர் பைதுல்லா மெஹ்சூத் கொல்லப்பட்டார். இவரை தொடர்ந்து ஹக்கி முல்லா மெஹ்சூத் தலிபான் தலைவரானார். கடந்த ஜனவரியில் வாசிரிஸ்தான் பகுதியில் அமெரிக்காவின் ஆளில்லாத விமானம் மூலம் போடப்பட்ட குண்டு வெடித்து ஹக்கி முல்லா மெஹ்சூத் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.இதற்கிடையே அமெரிக்காவை பழிவாங்கப் போவதாக பேசும் ஹக்கி முல்லாவின் வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஒன்பது நிமிடம் ஒளிபரப்பாகக் கூடிய இந்த வீடியோவில் மெக்சூத் குறிப்பிடுகையில், "விரைவில் எங்கள் அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப் படையினர் அமெரிக்காவின் முக்கிய நகரங்களை தாக்குவார்கள். நோட்டோ படைகள் அமெரிக்காவுடனான உறவை துண்டித்து கொள்ள வேண்டும்; இல்லாவிட்டால், ஐரோப்பிய நாடுகளும் எங்கள் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும்' என எச்சரித்துள்ளார்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் நேற்று முன்தினம் செயலிழந்த குண்டு ஒன்று காரில் கண்டுபிடிக்கப்பட்டது. "அமெரிக்காவை அழிக்க நாங்கள் வைத்த குண்டு சரியான நேரத்தில் வெடிக்கவில்லை' என, தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.ஆனால், "காரில் இருந்த வெடிகுண்டுக்கும், பயங்கரவாதிகளுக்கும் தொடர்பில்லை' என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்தியா
வேறு ஜாதி நபரை காதலித்த பெண் நிருபர் படுகொலை
ராஞ்சி : வேறு ஒரு ஜாதியை சேர்ந்தவரை காதலித்ததால், ஆங்கில வர்த்தக பத்திரிகையில் பணிபுரிந்த பெண் பத்திரிகையாளர் ஒருவரை, அவரது தாயாரே, கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம், டில்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, அந்த பத்திரிகையாளரின் தாயார் கைது செய்யப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம், கோதர்மா பகுதியை சேர்ந்தவர் நிருபமா (22). இவர், பத்திரிகையாளராக பணியாற்றி வந்தார். கடந்த 29ம் தேதி, ஜார்க்கண்ட்டிலுள்ள தனது வீட்டில், மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு சென்றனர். நிருபமாவின் பெற்றோரிடம் விசாரித்ததில், மின்சாரம் தாக்கி பலியானதாக கூறினர். நிருபமாவின் மரணம், போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் நிருபமா, கழுத்து நெரிபட்ட நிலையில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலியானதாக தெரியவந்தது. இதற்கான காயங்களும், நிருபமாவின் கழுத்தில் இருந்தன. இதனால், நிருபமாவின் தாயார் சுபா, தந்தை ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியானது. வேறு ஒரு ஜாதியை சேர்ந்த இளைஞரை நிருபமா காதலித்ததாகவும், இதனால், ஆத்திரமடைந்த அவரது தாயார், ஜாதி கட்டமைப்பு கவுரவம் கருதி, நிருபமாவை கழுத்தை நெரித்து கொலை செய்ததும் தெரியவந்தது. உடனடியாக, சுபா கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை, முக்கிய தடயங்களை மறைத்தது, சதித்திட்டம் ஆகிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள் ளன. இது தொடர்பாக, போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியா
இரண்டு போலீசை கொன்று தப்பிய ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
லக்னோ : உத்தரபிரதேசத்தில் சிறைக்கு கொண்டு செல்லப்படும் வழியில், இரண்டு போலீசாரை சுட்டு கொன்று விட்டு, தப்பி தலைமறைவாக இருந்த ரவுடியை அதிரடி படை போலீசார் சுட்டு கொன்றனர். உத்தரபிரதேசத்தின் ஜான்பூரை சேர்ந்தவர் நீரஜ்சிங். இவர் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. அலகாபாத்தை சேர்ந்த வக்கீலின் சகோதரரை கொலை செய்தது தொடர்பாக நீரஜ்சிங்கை போலீசார் ஜான்பூரிலிருந்து அலகாபாத்துக்கு ரயிலில் அழைத்து சென்றனர். உக்ரசேனாப்பூர் என்ற இடத்தில் ரயில் சென்று கொண்டிருந்த போது, போலீசாரின் துப்பாக்கியை பறித்து, இரண்டு போலீசாரை சுட்டு கொன்று விட்டு நீரஜ்சிங் தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவத்துக்கு நீரஜ் சிங்குக்கு விவேக் சிங், மனிஷ் யாதவ் ஆகியோர் உதவியுள்ளனர். இந்த மூன்று பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். நீரஜ்சிங்கை பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஆக்ரா மாவட்டம் சிக்கந்த்ரா என்ற பகுதியில் பதுங்கியிருந்த நீரஜ் சிங்கை அதிரடி படை போலீசார் சுற்றி வளைத்தனர். இதை தொடர்ந்து போலீசார் மீது நீரஜ் துப்பாக்கியால் சுட்டார். போலீசார் திருப்பி சுட்டதில் நீரஜ் பலியானார். நீரஜ் கூட்டாளிகள் விவேக்சிங், மனிஷ் யாதவ் ஆகியோரை பற்றி துப்பு கொடுப்போருக்கு 50 ஆயிரம் ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை இவர்கள் பிடிபடவில்லை.
இந்தியா
காதல் திருமணங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதா? கட்டப் பஞ்சாயத்துக்கு அடி பணியாத கிராமம்
சண்டிகார் : திருமண விஷயத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் கட்டப் பஞ்சாயத்தாரின் அடக்குமுறைக்கு அடிபணியாத அரியானா கிராமம், பல்வேறு தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அரியானாவில் உள்ள சிர்சா, ஹிசார், பதேகாபாத் ஆகிய மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் கட்டப் பஞ்சாயத்தாரின் அடக்கு முறை அதிகம் உள்ளது. ஒரே கிராமத்தை சேர்ந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்வதையும், காதல் திருமணம் செய்வதையும் இவர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இவர்கள் உத்தரவை மீறி, திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளை, கொடூரமாக கொலை செய்யும் வழக்கமும் இன்னும் அங்கு உள்ளது. ஏராளமான காதல் ஜோடிகள், இவர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட ஒரு சில பிரிவைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் கிராமங்களில் இந்த கட்டப்பஞ்சாயத்து அடக்குமுறை உள்ளது. சிர்சா மாவட்டத்தில் உள்ள சவுதாலா கிராமத்திலும், கட்டப் பஞ்சாயத்தாரின் ஆதிக்கம் உள்ளது. ஆனால், இங்குள்ள பெரும்பாலான மக்கள், அவர்களின் அடக்கு முறைக்கு அடிபணிவது இல்லை. குறிப்பாக, திருமணம் முடிக்கும் விஷயங்களில், மிகவும் தைரியமாக அவர்களை எதிர்க்க துவங்கி விட்டனர். இது, அருகில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், சவுதாலா கிராமத்தை சேர்ந்த ராகேஷ் என்பவரும், ரதிவால் என்ற பெண்ணும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதற்கு அங்குள்ள கட்டப் பஞ்சாயத்து ஆசாமிகள், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  ஆனால், அதே கிராமத்தை சேர்ந்த பெரும்பாலான மக்களின் ஆதரவுடன் சமீபத்தில் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இதுகுறித்து ராகேஷ் கூறுகையில்,"சவுதாலா கிராமத்தில் பிறந்ததற்காக பெருமைப்படுகிறோம். இங்குள்ள மக்கள் தைரியமாக எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தனர். அருகில் உள்ள வேறு கிராமத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்பே இல்லை'என்றார். சவுதாலா கிராமத்தை சேர்ந்த ராம்பிரதாப் கூறுகையில்,"கிராமத்தில் உள்ள அடக்குமுறைகளுக்கு நாங்கள் அடிபணிவது இல்லை. தைரியமாக எதிர்ப்பு தெரிவிக்கிறோம். ராகேஷ்-ரதிவால் போல், எங்கள் கிராமத்தில் 200 பேருக்கு திருமணம் செய்து வைத்துள்ளோம்' என்றார்.
தமிழகம்
மதுரையில் விஷமாக மாறிய உணவு : கல்லூரி மாணவர் பலி
மதுரை : மதுரையில் ஓட்டல் ஒன்றில், விஷமாக மாறிய உணவை சாப்பிட்ட பொறியியல் கல்லூரி மாணவர்களில் ஒருவர் நேற்று முன் தினம் இறந்தார். மூன்று பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். புதுச்சேரி மாநிலம் தவளைகுப்பத்தைச் சேர்ந்தவர் இசைஅமுதன்(21). வேலூர் எஸ்.ஐ.ஐ.டி., பொறியியல் கல்லூரியில், தீத்தடுப்பு பாதுகாப்பு பிரிவில் படித்து வந்தார். இவரது சக நண்பர்கள் அருண்(22), அகிலன்(24), முருகவேல்(22). நான்கு பேரும் மதுரையில் பயிற்சி பெற, ஏப்.,29 முதல் பெரியார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கினர். மாணவர் பலி: மே 1 காலையில் ரயில்வே ஸ்டேஷன் கிழக்கு நுழைவுவாயில் எதிரேயுள்ள ஓட்டல் ஒன்றில் டிபன் சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். முன்னேற்றம் ஏற்படாததால், நேற்று முன் தினம் இரவு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி இசை அமுதன் இறந்தார். மற்ற மூன்று பேரும் சிகிச்சையில் உள்ளனர். திடீர்நகர் போலீசார், "எதிர்பாராத மரணம் (இ.பி.கோ. 174)' என்ற பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிரேத பரிசோதனையில், "உணவு விஷமானதால்தான் இறந்தார்' என்று உறுதியானால், "அஜாக்கிரதையால் மரணம் ஏற்படுத்தியது(இ.பி.கோ. 304)' என்ற பிரிவின்கீழ், சம்பந்தப்பட்ட ஓட்டல் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
தமிழகம்
மின்னல் தாக்கி இருவர் பலி
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் முத்தாலங்குறிச்சியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன்(45). இவர், நேற்று மாலை 4 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தார். திடீரென காற்றுடன் மழை பெய்தது. அப்போது, மின்னல் தாக்கியதில் மகேஸ்வரன் இறந்தார். செய்துங்கநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர். குமரி மாவட்டம் குலசேகரம் அருகே நேற்று பலத்த மழை பெய்தது. தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஆறாம் வகுப்பு மாணவன் கிருஷ்ணபிரசாத்(11) மீது மின்னல் தாக்கியதில் இறந்தான்.
தமிழகம்
எம்.எல்.ஏ.,வுடன் சென்ற கார் மோதி முதியவர் பலி
தூத்துக்குடி : திருச்செந்தூர் தி.மு.க., எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் ஒரு நிகழ்ச்சியை முடித்துவிட்டு நேற்று முன்தினம் மதியம் 12.30 மணியளவில் காரில் திருச்செந்தூர் திரும்பிக் கொண்டிருந்தார். வீரபாண்டியன்பட்டணம் பெட்ரோல் பங்க் அருகில், அவரது காருக்கு பின்னால் சென்ற அவரது ஆதரவாளரின், "பொலீரோ' கார், அவ்வழியாக நடந்து சென்ற பிச்சையா(72) என்பவர் மீது மோதியது. படுகாயமடைந்த பிச்சையா, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். கார் டிரைவர் அய்யன்குமாரை(33) போலீசார் தேடிவருகின்றனர்.
தமிழகம்
விருதுநகர் நர்சிங் பள்ளி மாணவியர் போராட்டம்: ஆசிரியை சஸ்பெண்ட்
விருதுநகர் : விருதுநகரில் அரசு நர்சிங் பயிற்சி மாணவியர், தங்களை பெயிலாக்கிவிடுவதாக மிரட்டிய ஆசிரியை ஜெயசுந்தரியை கண்டித்து, வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். இதன் எதிரொலியாக ஜெயசுந்தரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். விருதுநகரில், அரசு நர்சிங் பயிற்சிப்பள்ளி, மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்திற்குள் இயங்கி வருகிறது. இங்கு சில மாதங்களுக்கு முன், முதல்வர் பொறுப்பில் ஜெயசுந்தரி என்பவர் பணியாற்றி வந்தார். இவர் மாணவியரிடம், புத்தகம், சீருடை, உணவுக்கு அதிக கட்டணம் வசூலித்ததாக மாணவியர், மாவட்ட கலெக்டர் சிஜி தாமஸ், மருத்துவக்கல்வி இயக்குனரகம், மருத்துவத்துறை இயக்குனருக்கு புகார் தெரிவித்தனர். மாணவிகள் போராட்டம்: இதையடுத்து அவர், முதல்வர் பொறுப்பிலிருந்து கடந்த பிப்ரவரியில் விடுவிக்கப்பட்டார். அதே பயிற்சிப் பள்ளியில், ஆசிரியராக பணியாற்றி வந்தார். சக ஆசிரியையான செந்தாமரை என்பவர், தற்காலிக முதல்வராக நியமிக்கப்பட்டு, பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஏப்., 30ம் தேதி முதல் தன்னை மீண்டும் முதல்வர் பொறுப்பில் நியமித்து, மருத்துவக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டதாக கூறியுள்ளார். பின் அவர், "என் மீது புகார் செய்தவர்கள் எப்படி தேர்வு எழுத முடியும் என பார்க்கிறேன். அப்படியே தேர்வு எழுதினாலும் தேர்ச்சி பெற முடியாது' என மிரட்டியதாக, மாணவியர் மீண்டும் புகார் தெரிவித்தனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நேற்று காலை 8.30 மணியளவில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவியர், வகுப்பை புறக்கணித்து, மருத்துவமனை வாயிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சஸ்பெண்ட்: தாசில்தார் சங்கர பாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள், மாணவியரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என, மாணவியர் பிடிவாதமாக கூறினர். இதுகுறித்து, மருத்துவக் கல்வி இயக்குனரகத்திற்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். விசாரணை நடத்திய மருத்துவ கல்வி இயக்குனர் விநாயகம், ஜெயசுந்தரியை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்தார். இத்தகவல் அறிந்த மாணவியர், மாலை 4 மணியளவில் போராட்டத்தை கைவிட்டு வகுப்புக்கு திரும்பினர்.
தமிழகம்
தண்ணீர் தேடி கிராமத்தில் புகுந்த மான்
சாத்தூர் : சாத்தூர் அருகே புல்லக்கவுன்டன்பட்டி கிராமத்திற்குள் தண்ணீர் தேடி புகுந்த புள்ளிமான் வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு, ஸ்ரீவி., காட்டில் விடப்பட்டது. சாத்தூர், ஏழாயிரம்பண்ணை, பட்டம் புதூர், கருவேலங்காட்டு பகுதிகளில் புள்ளிமான்கள் அதிக அளவில் உள்ளன. நேற்று அதிகாலை 5 மணியளவில் கொம்பு உடைந்த நிலையில், ஐந்து வயது புள்ளிமான், தண்ணீர் தேடி புல்லக்கவுண்டன் பட்டி கிராமத்திற்குள் புகுந்தது. இதை பார்த்த அப்பகுதியினர் ஏழாயிரம்பண்ணை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார், சிவகாசி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ரேஞ்சர் நவநீதன், மற்றும் ஊழியர்கள் சொக்கன், முத்துசாமி ஆகியோர், புல்லக்கவுன் பட்டிக்கு சென்று மானை பிடித்தனர். பின், அதை ஸ்ரீவில்லிப்புத்தூர் வனப்பகுதியில் விட்டனர்.
தமிழகம்
படக் குழுவினர் எனக்கூறி நூதன முறையில் நான்கு கார்கள் திருட்டு
கும்மிடிப்பூண்டி: படக்குழுவினர் எனக் கூறி, மும்பையை சேர்ந்தவர்கள் வாடகை கார் டிரைவர்களுக்கு மதுவில் மயக்கமருந்து கலந்து கொடுத்து, 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நான்கு கார்களை கடத்திச் சென்றனர். சென்னை திருவொற்றியூர் அடுத்த தாங்கல் பகுதியை சேர்ந்தவர் ஷெரீப்(30). இவரிடம், மும்பை படக்குழுவினர் எனக்கூறி அஜய்குப்தா என்பவர் பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் சினிமா ஷூட்டிங் எடுக்க இருப்பதாக கூறினார். இதற்காக கார்கள் மற்றும் தனியார் லாட்ஜ்களில் "ஏசி' அறைகள் வாடகைக்கு வேண்டும் என, அஜய்குப்தா கேட்டார். உடனே ஷெரீப், சென்னை வடபழனியில் இருந்து மூன்று இன்னோவா, இரண்டு ஸ்கார்பியோ, ஒரு மாருதி ஸ்விப்ட் என ஆறு கார்களை வரவழைத்தார். சோழவரம் அடுத்த ஜனப்பன்சத்திரம் கூட்டுச் சாலையில் தனியார் லாட்ஜில் கடந்த 1ம் தேதி நான்கு "ஏசி' அறைகள் வாடகைக்கு எடுத்து இவர்கள் தங்கினர். பகல் முழுவதும் பழவேற்காடு பகுதியில் லொகேஷன் பார்ப்பது போல் பாவனை செய்து இரவு லாட்ஜுக்கு திரும்பினர். நாளை காலை மும்பையில் இருந்து படக்குழுவினர் வருவதாகவும், கார்களுக்கு டீசல் நிரப்ப வேண்டும் எனவும் கூறி அருகில் உள்ள பெட்ரோல் "பங்க்'கில் கார்களுக்கு டீசல் நிரப்பினர். அங்கே கார்களை நிறுத்த அனுமதி பெற்று டிரைவர்களை மட்டும் லாட்ஜில் தங்கி ஓய்வு எடுத்துக் கொள்ளுமாறு அஜய்குப்தா கூறினார். ஒப்புக்கொண்ட டிரைவர்களுக்கு மதுபான பார்ட்டி வைத்து அதில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார். இதை அருந்திய ஷெரீப் உட்பட எட்டு பேர் மயக்கமடைந்தனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அஜய்குப்தா உட்பட நான்கு பேர் கொண்ட கும்பல் இரண்டு இன்னோவா, ஒரு ஸ்கார்பியோ மற்றும் ஒரு மாருதி ஸ்விப்ட் என நான்கு கார்களை திருடிச் சென்றனர். மயக்க மருந்து கலந்த மதுவை அருந்திய டிரைவர்கள் மறுநாள் மதியம் வரை தூங்கியதைக் கண்ட லாட்ஜ் ஊழியர்கள், சோழவரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் ஷெரீபுக்கு மட்டும் மயக்கம் தெளிந்ததால் அவர் கொடுத்த தகவலின்பேரில் சோழவரம் போலீசார், கார்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
தமிழகம்
புழல் சிறையில் போதை கடத்தல் நபரிடம் மொபைல் போன் பறிமுதல்
செங்குன்றம்: மத்திய சிறையில் உள்ள போதை பொருள் கடத்தல் கைதியிடம் மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. ராமநாதபுரம் திருவாடனையைச் சேர்ந்த காளிமுத்து மகன் கோட்டை காளிமுத்துசாமி(39). இவர் கடந்த 2004ம் ஆண்டு போதை பொருள் கடத்திய குற்றத்திற்காக, சென்னை எழும்பூர் ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு அவர், யாருடனோ மொபைல் போனில் பேசினார். இதை பார்த்த சிறைக் காவலர்கள், முத்துசாமியிடம் இருந்து மொபைல் போன் "சிம் கார்டு' ஆகியவை பறிமுதல் செய்தனர். சிறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும், இதுகுறித்து துணை ஜெயிலர் சண்முகானந்தன் புழல் போலீசில் புகார் செய்தார். கைதிகளிடம் மொபைல் போன் சிக்குவது தொடர்கதையாகி விட்டது. போலீசார், புகார் குறித்து விசாரித்து வருகின்றனர்.
தமிழகம்
கட்டாய மதம் மாற்றம்: கணவர் வீட்டார் மீது புகார்
திண்டுக்கல் : கணவர், அவரது குடும்பத்தார் என்னையும்,எனது குழந்தையையும் வற்புறுத்தி மதமாற்றம் செய்து விட்டனர் என பெண் ஒருவர் திண்டுக்கல் எஸ்.பி., முத்துச்சாமியிடம் புகார் அளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியைச் சேர்ந்தவர் கலாராணி. இவர் திண்டுக்கல் எஸ்.பி., அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவர் ஜோசப் ரெட்சகநாதன். கணவர் குடும்பத்தார் கிறிஸ்தவர்கள். நான் இந்து மதத்தை சேர்ந்தவள். எனது கணவர் 21.09.2000ம்தேதி இந்துவாக மதம்மாறி இடைநிலை ஆசிரியர் பணி பெற்றார். அரசு சலுகை பெறுவதற்காக 2004 பிப்ரவரி 8ம் தேதி ஜம்புளியம்பட்டி நாகம்மாள் கோயிலில், என்னை அவரது குடும்பத்தார் முன்னிலையில் திருமணம் செய்தார். அந்த கோயிலில் திருமண சான்று, ரசீது எதுவும் தராததால், மறுபடியும் வி.எம்.ஆர். பட்டி காளியம்மன் கோயிலில் 26.4.2004ம் தேதி திருமணம் செய்தார். பின்னர் எனது மாமியார் அடைக்கலமேரி, மாமனார் செபஸ்தியான், கொழுந்தனார் சிரில்ராஜ், நாத்தனார் ஜெயந்தி உட்பட பலர் என்னிடம், நாங்கள் பரம்பரை கிறிஸ்தவர்கள், வேலை, அரசு சலுகைக்காகத்தான் இந்து மதத்திற்கு மாறினோம் என்றும் கூறினர். நீ எங்கள் குடும்பத்தில் வாழ வேண்டுமானால் கிறிஸ்தவ மதத்திற்கு மாற வேண்டும். இல்லாவிட்டால் உனது கணவருக்கு வேறு திருமணம் செய்து விடுவோம் என மிரட்டி என்னையும், குழந்தையையும் 22.6.2004ம் தேதி கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றினர். பின்பு மீண்டும் எனது கணவருக்கும்,எனக்கும் 26.6.2006ல் மரியநாதபுரத்திலுள்ள விண்ணேற்பு அன்னை ஆலயத்தில்,அவரது குடும்பத்தார் முன்னிலையில் திருமணம் நடந்தது. என்னையும், குழந்தையையும் வற்புறுத்தி,கட்டாய மதமாற்றம் செய்ததால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் எனது கணவர் ஜோசப் ரெட்சகநாதன், மாமியார், மாமனார் உட்பட அவர்களின் உறவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மனு குறித்து கூடுதல் எஸ்.பி., பொன் சிவானந்தம் விசாரிக்க எஸ்.பி., முத்துச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம்
ஜெ., திடீர் சிறுதாவூர் பயணம்
சென்னை:அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா நேற்று மாலை போயஸ்தோட்டம் இல்லத்திலிருந்து, திடீரென புறப்பட்டு சிறுதாவூர் பங்களாவிற்கு புறப்பட்டு சென்றார். கடந்த ஒரு வாரமாக ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட பல்வலி காரணமாக, போயஸ் தோட்டம் இல்லத்தில் அவர் ஓய்வு எடுத்தார். கட்சி பணிகள் தொடர்பாக யாரையும், அவர் சந்திக்கவில்லை. இந்நிலையில், நேற்று மாலையில் போயஸ் தோட்டம் இல்லத்திலிருந்து, திடீரென சிறுதாவூர் பங்களாவிற்கு காரில் புறப்பட்டு சென்றார்.
இந்தியா
காதல் திருமணங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதா?கட்டப் பஞ்சாயத்துக்கு அடி பணியாத கிராமம்
சண்டிகார் : திருமண விஷயத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் கட்டப் பஞ்சாயத்தாரின் அடக்குமுறைக்கு அடிபணியாத அரியானா கிராமம், பல்வேறு தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.அரியானாவில் உள்ள சிர்சா, ஹிசார், பதேகாபாத் ஆகிய மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் கட்டப் பஞ்சாயத்தாரின் அடக்கு முறை அதிகம் உள்ளது. ஒரே கிராமத்தை சேர்ந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்வதையும், காதல் திருமணம் செய்வதையும் இவர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.இவர்கள் உத்தரவை மீறி, திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளை, கொடூரமாக கொலை செய்யும் வழக்கமும் இன்னும் அங்கு உள்ளது. ஏராளமான காதல் ஜோடிகள், இவர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட ஒரு சில பிரிவைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் கிராமங்களில் இந்த கட்டப்பஞ்சாயத்து அடக்குமுறை உள்ளது.சிர்சா மாவட்டத்தில் உள்ள சவுதாலா கிராமத்திலும், கட்டப் பஞ்சாயத்தாரின் ஆதிக்கம் உள்ளது. ஆனால், இங்குள்ள பெரும்பாலான மக்கள், அவர்களின் அடக்கு முறைக்கு அடிபணிவது இல்லை. குறிப்பாக, திருமணம் முடிக்கும் விஷயங்களில், மிகவும் தைரியமாக அவர்களை எதிர்க்க துவங்கி விட்டனர். இது, அருகில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், சவுதாலா கிராமத்தை சேர்ந்த ராகேஷ் என்பவரும், ரதிவால் என்ற பெண்ணும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதற்கு அங்குள்ள கட்டப் பஞ்சாயத்து ஆசாமிகள், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அதே கிராமத்தை சேர்ந்த பெரும்பாலான மக்களின் ஆதரவுடன் சமீபத்தில் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இதுகுறித்து ராகேஷ் கூறுகையில்,"சவுதாலா கிராமத்தில் பிறந்ததற்காக பெருமைப்படுகிறோம். இங்குள்ள மக்கள் தைரியமாக எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தனர். அருகில் உள்ள வேறு கிராமத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்பே இல்லை'என்றார். சவுதாலா கிராமத்தை சேர்ந்த ராம்பிரதாப் கூறுகையில்,"கிராமத்தில் உள்ள அடக்குமுறைகளுக்கு நாங்கள் அடிபணிவது இல்லை. தைரியமாக எதிர்ப்பு தெரிவிக்கிறோம். ராகேஷ்-ரதிவால் போல், எங்கள் கிராமத்தில் 200 பேருக்கு திருமணம் செய்து வைத்துள்ளோம்'என்றார்.
தமிழகம்
அண்ணா பல்கலை துணைவேந்தர் பதவிகளை பிடிக்க கடும் போட்டி
சென்னை : கோவை, திருச்சி, மதுரை அண்ணா பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர் பதவியை பிடிக்க, கடும் போட்டி நிலவுகிறது. துணைவேந்தர் பதவிக்கு குறிப்பிட்ட நபர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும், உயர்கல்வி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. தமிழகத்தில் கோவை மற்றும் திருச்சி அண்ணா பல்கலை துணைவேந்தர் பதவிகள் தற்போது காலியாக உள்ளன. இந்த இரண்டு அண்ணா பல்கலை.,களுக்கும் புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய, தேர்வுக்குழுவை அரசு அமைத்துள்ளது.மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளை உள்ளடக்கி, மதுரையை தலைமையிடமாகக் கொண்டு, அண்ணா தொழில் நுட்பப் பல்கலை இந்த ஆண்டு தொடங்கப்படும் என உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது, அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.மதுரை அண்ணா பல்கலை புதிதாக உருவாக்கப்படுவதால், முதல் துணைவேந்தரை அரசே நேரடியாக நியமிக்க முடியும். இந்த மூன்று அண்ணா பல்கலைகளின் துணைவேந்தர் பதவியை பிடிக்க பல்வேறு நபர்கள் போட்டியிடுவதாகவும், இதனால் துணைவேந்தர் பதவிக்கு கடும் போட்டி நிலவுவதாகவும் உயர்கல்வித் துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.சென்னை அண்ணா பல்கலை, சென்னைப் பல்கலை துணைவேந்தர் பதவிக்கான தேர்வு நடந்தபோது, திருச்சி இந்திராகாந்தி கல்லூரி முதல்வர் மீனா, தனியார் பல்கலை துணைவேந்தர் தங்கராஜ் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். ஆனால், சென்னை அண்ணா பல்கலைக்கு மன்னர் ஜவகரும், சென்னை பல்கலைக்கு திருவாசகமும் துணைவேந்தராக நியமிக்கப்பட்டனர்.கடந்த முறை வாய்ப்பு கிடைக்காத தங்கராஜ், மீனா இருவரில் ஒருவருக்கு திருச்சி அண்ணா பல்கலை துணைவேந்தர் பதவி வழங்கப்படக் கூடும் என உயர்கல்வித்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. கோவை அண்ணா பல்கலை சிண்டிகேட் உறுப்பினராக இருந்த முருகேசன், கோவை அண்ணா பல்கலை துணைவேந்தராக நியமிக்கப் படலாம் என கூறப்படுகிறது.கோவை அண்ணா பல்கலை துணைவேந்தர் பதவிக்கு, சென்னை அண்ணா பல்கலை நீர்வள மேலாண்மைத் துறை கருணாகரன், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஜெயபாலன் உட்பட மேலும் சில பேராசிரியர்கள் போட்டியிடுவதாக தெரிகிறது.திருச்சி அண்ணா பல்கலை.,யின் துணைவேந்தராக இருந்த ராமச்சந்திரன், புதிதாக தொடங்கப்படவுள்ள மதுரை அண்ணா பல்கலை துணைவேந்தர் பதவிக்கு போட்டியிடுவதாக கூறப்படுகிறது.தமிழகத்தில் அண்ணா பல்கலை துணைவேந்தர் பதவிக்கு நடக்கும் இந்த கடும் போட்டி, கல்வியாளர்கள் மத்தியில் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. இந்த துணைவேந்தர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்கள் விவரம் ஓரிரு நாட்களில் வெளியிடப்படலாம் என்றும் உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியா
மும்பை தாக்குதல் வழக்கின் பின்னணி
உலகமே எதிர்பார்த்த, மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில், முக்கிய குற்றவாளியான கசாப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை உறுதி செய்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுள்ளது.கடந்த 2008 நவ., 26ல் மும்பையை அதிரவைத்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணை, 2009 ஏப்ரல் 15ல் துவங்கியது. சம்பவத்தின் போது பிடிபட்ட ஒரே பயங்கரவாதியான அஜ்மல் கசாப் மீதும், இச்சதி திட்டத்தில் பங்கேற்றதாக குற்றம்சாட்டப்பட்டு, தற்போது விடுவிக்கப்பட்டுள்ள இந்தியர்களான பாகிம் அன்சாரி மற்றும் சகாபுதீன் அகமது ஆகியோர் மீதான விசாரணை துவங்கியது.இவ்வழக்கின் சிறப்பு நீதிபதி எம்.எல். தகிலியானி வழக்கை விசாரிக்க சிறையில் பிரத்யேக நீதிமன்றம் அமைக்கப்பட்டது.கசாப்பின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அவருக்கென பிரத்யேக செல் அமைக்கப்பட்டது. குண்டுவீசி தாக்குதல் நடத்தினாலும், செல்லுக்கு ஏதும் பாதிப்பு வராத வகையில் பல அடுக்கு கான்கிரீட் சுவர்களுடன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.அரசு தரப்பு வக்கீலாக உஜ்வால் நிகாம் நியமிக்கப்பட்டார். இவ்வழக்கில் கசாப் சார்பில் ஆஜராக வக்கீல்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. சட்ட உதவி மையம் வழியாக அவருக்கு சட்ட உதவி அளிக்க கோரப்பட்டது. இதற்கிடையில் அஞ்சலி வாக்மர் எனும் வக்கீல், கசாப்புக்கு ஆதரவாக வாதாட நியமிக்கப்பட்டார். ஆனால், பயங்கரவாத சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர் சார்பிலும் வாதாடியதால், இவ்வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.அவருக்கு பின், அப்பாஸ் காஸ்மி என்பவர் கசாப் வக்கீலானார். இவர் வழக்கை எடுத்த பின், அந்த வழக்கு சூடுபிடித்தது. தாக்குதல் சம்பவம் நடந்த போது, கசாப் மைனராக இருந்தார். ஆகவே சிறார் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று கோரினார். ஆனால், மருத்துவப் பரிசோதனையின் போது, தாக்குதல் சம்பவம் நடந்த போது, கசாப் மேஜர் தான் என்பது நிரூபணம் ஆனது.இவ்வழக்கின் போது ஏற்படும் ஒவ்வொரு கட்டப் பிரச்னையும் சர்வதேச அளவில் செய்திகளாயின. ஒரு முறை கசாப் விசாரணையின் போது, வயிற்று வலியால் மயங்கி விழுந்தார். அப்போது அணிந்து கொள்ள புதிய உடையை கேட்டார். ஜெயிலில் வழங்கப்படும் உணவு பற்றியும் புகார் தெரிவித்தார்.சோப், பெர்பியூம், செய்தித்தாள்கள், தொழுகை நடத்த அனுமதி உள்ளிட்டவற்றுக்கும் அனுமதி வழங்கக் கேட்டார். சில நேரங்களில் மகிழ்ச்சி, சில நேரங்களில் சோகம், சில நேரங்களில் கண்ணீர் என்று கசாப் தன்னுடைய பரிமாணத்தை மாற்றிக் கொண்டே இருந்தார். கடந்த ஜூலையில் குற்றத்தை ஒப்புக் கொண்ட கசாப், தன்னை தூக்கிலிடுமாறு (ஹேங் மி பிளீஸ்) கூறினார். இந்த பூமியில் நான் குற்றம் புரிந்தவன். உலக மக்கள் என்னை தண்டிக்க வேண்டும். கடவுளின் தண்டனை வேண்டாம். அதே சமயம் மரண தண்டனையிலிருந்து தப்புவதற்காகத்தான் நான் குற்றத்தை ஒப்புக் கொண்டு வாக்குமூலம் அளிப்பதாக யாராவது கருதினால் என்னை இப்போதே தூக்கிலிட்டுவிடுங்கள்' என்று கூறினார். அதன் பின், இந்திய கோர்ட் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்றும், சர்வதேச கோர்ட்டில் இவ்வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் கசாப் கூறினார்.முன்னுக்குப்பின் முரணாக நடந்து கொள்ளும் கசாப் "ஒரு நல்ல நடிகர்' என்று அரசு தரப்பு வக்கீல் நிகாம் கூறினார்.விசாரணையின் போக்கை திசை திருப்புவதற்கும், தாமதப்படுத்துவதற்கும்தான் இந்த கோரிக்கை என்று கூறி நீதிபதி நிராகரித்துவிட்டார். கசாப் மீது 312 குற்றச்சாட்டுகள் :   மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் உயிருடன் பிடிபட்ட ஒரே பயங்கரவாதி அஜ்மல் கசாப். இந்த வழக்கு விசாரணை தான் நாட்டிலேயே விரைவாக நடந்து முடிந்துள்ளது.2008, நவ., 26: பயங்கரவாதிகள் தாக்குதல் தொடர்ந்து  அஜ்மல் கசாப், மும்பை கிர்கானில் கைது.2009, ஜன., 13: வழக்கை விசாரிக்கும் நீதிபதியாக தகிலியானி நியமனம்.2009, பிப்., 26: கசாப் மீது 11 ஆயிரம் பக்கம் உடைய குற்றப்பத்திரிகை தாக்கல். கசாப் மீது 312 குற்றங்கள் சுமத்தப்பட்டன. இதுவே, இந்தியாவில் ஒரு குற்றவாளி மீது சுமத்தப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கை.2009, பிப்., 27: உஜ்வால் நிகாம் அரசு வக்கீலாக நியமனம்.2009, மார்ச் 2: மாஜிஸ்திரேட் கோர்ட்டிலிருந்து செஷன்ஸ் கோர்ட்டிற்கு வழக்கு மாற்றம்.2009, மார்ச் 31: கசாப் வக்கீலாக அஞ்சலி வாக்மர் நியமிக்கப் பட்டார். கசாப் "வீடியோ கான்பரன்சிங்' மூலம் வாக்குமூலம்.2009, ஏப்., 15:  கசாப் சார்பில் வாதாடுவதிலிருந்து அஞ்சலி வாக்மர் நீக்கப்பட்டார். விசாரணை தள்ளி வைக்கப் பட்டது.2009, ஏப்., 16:  கசாப்பின் புதிய வக்கீலாக அப்பாஸ் காஸ்மி நியமனம்.2009, ஏப்., 17: ஆர்தர் ரோடு சிறையில் விசாரணை துவங்கியது.2009, ஏப்., 20: கசாப் மீது 166 பேரை கொலை செய்ததாக, குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டது.2009, ஏப்., 28: உருது டைம்ஸ் நாளிதழ் உள்ளிட்ட வசதிகள் வேண்டுமென்று கசாப் தனது வக்கீல் மூலம் மாஜிஸ்திரேட்டிடம் வேண்டுகோள். சிறையில், பக்கத்து வராண்டாவில் நடந்து செல்லவும் அனுமதிக்க கசாப் கோரிக்கை.2009, மே 6: 86 குற்றங்கள் மீது தனக்கு தொடர்பில்லை என்று கசாப் மறுப்பு.2009, மே 8: கோர்ட்டில் கசாப் மீது சாட்சியங்கள் அளிக்கப்பட்டன.2009, மே 15: இரண்டு டாக்டர்கள் கசாப்புக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.2009, மே 19: கசாப் போலி அடையாள அட்டை பயன்படுத்தியதாக, ஐதராபாத் கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.2009, மே 21: மும்பைத் தாக்குதல் வழக்கில், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கம் சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது.2009, மே 27: கசாப்புடன் ஒன்பது பேர் படகு மூலம் வந்தனர் என்று சாட்சிகள் தெரிவித்தனர்.2009, ஜூன் 2: மராத்தி மொழி தனக்கு தெரியும் என்று நீதிபதியிடம் கசாப் தகவல்.2009 ஜூன் 10: சி.எஸ்.டி., ரயில்வே ஸ்டேஷனில் கசாப்பை நேரில் பார்த்தவர்கள் சாட்சியம்.2009 ஜூன் 23: சிறப்பு கோர்ட்டில் , ஜமாத்-உத்-தவா தலைவர் ஹபீஸ் சயித் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தலைவர் ஷகி-உர்-ரஹ்மான் லக்வி உட்பட 22 பேர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றங்கள் சுமத்தப்பட்டன.2009 ஜூன் 25: அல்சரால், வயிற்று வலியால் அவதிப்படுவதாக கசாப் தகவல். கசாப்புக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீசார், அவரை அடித்தனரா என்று சந்தேகம். ஆனால், தான் இந்தியாவுக்கு வரும் முன்னே தனக்கு அல்சர் இருந்தாக கசாப் தகவல்.2010, ஜூலை 16: சி.எஸ்.டி., ரயில்வே ஸ்டேஷனில் கேமராவில் பதிவான, கசாப்பின் நடவடிக்கைகளை கோர்ட் பார்வையிட்டது.2010, ஜூலை 20: கசாப் தன் மீதான குற்றச்சாட்டுகள் (மறுத்த குற்றச்சாட்டுகள் உட்பட) அனைத்துக்கும் ஒப்புதல்.2009, ஆக., 12: இந்திய வரலாற்றில் முதன் முறையாக அமெரிக்க எப்.பி.ஐ., அதிகாரிகள், தொழில்நுட்பம் தொடர்பாக கோர்ட்டில் சாட்சியம் அளித்தனர்.2009 டிச., 18: தான் ஒரு அப்பாவி என்றும், இந்திய போலீசார் தன்னை சித்திரவதை செய்ததாகவும் கசாப் தகவல். தாக்குதலுக்கு 20 நாட்களுக்கு முன், மும்பை வந்ததாகவும், சாதாரணமாக ஜுகு கடற்கரையில் சுற்றித் திரிந்தபோது போலீசார் தன்னை கைது செய்ததாகவும் கசாப் அந்தர்பல்டி வாக்குமூலம்.2010 ஜன., 25: சர்வதேச சிறப்பு கோர்ட்டில் தன்னை விசாரிக்க வேண்டும் என்று கசாப் வேண்டுகோள். இக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.2010 மார்ச் 31: மே 3ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி தகிலியானி அறிவித்தார். கசாப் குற்றவாளி என நிரூபணம் ஆகியுள்ளதால், மரண தண்டனை வாய்ப்பும் உள்ளது என்று சட்ட நிபுணர்கள் கருதுகின்றனர். ஒரு நாளைக்கு  ரூ.8.5 லட்சம் : சிறையில் இருக்கும் பயங்கரவாதி கசாப்பை பராமரிக்க, ஒரு நாளைக்கு ரூ.8.5 லட்சம் செலவழிக்கப்பட்டு வருகிறது.மருத்துவம் மற்றும் சட்டப்பூர்வ பணிகளை மேற்கொள்ள அரசு, கசாப்புக்கு செலவழித்து வருகிறது. மருத்துவ உதவி தேவைப்படும் போது, அவருக்கு உரிய பாதுகாப்பை வழங்க மும்பை ஜே.ஜே.மருத்துவமனையிலும் தனி செல் அமைக்கப்பட்டது.குண்டு துளைக்காத இந்த செல்லை அமைக்க ஒரு கோடி ரூபாய் ஆனது. கசாப்புக்கு பாதுகாப்பு அளிக்கும் மத்தியப் பாதுகாப்பு படைக்கான செலவும் தனி.
இந்தியா
பெட்ரோல், டீசல் விலை தலா ரூ. 6 அதிகரிக்கும்
புதுடில்லி :பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு தலா ஆறு ரூபாய் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு நடப்பு பார்லிமென்ட் கூட்டத் தொடர் முடிந்த பின் வெளியாகும். இதன் மூலம் பெட்ரோல், டீசல் விலை மீதான விலை நிர்ணயத்தை பெட்ரோலிய கம்பெனிகள் முடிவெடுக்கும் நிலை உருவாகும். மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்தாலும், மக்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காக, அவற்றின் இழப்பை எண்ணெய் நிறுவனங்களே ஏற்றுக் கொள்கின்றன. இதனால், மானிய விலையில் பொதுமக்களுக்கு பெட்ரோல், டீசல் கிடைக்கிறது.பெட்ரோல், டீசல் விலையை தற்போது மத்திய அரசே நிர்ணயம் செய்கிறது. இதன் காரணமாக, எண்ணெய் நிறுவனங்கள் கடுமையான இழப்பை எதிர்கொண்டு வருகின்றன. அதை ஈடுகட்ட வேண்டியிருக்கிறது அரசு.இதற்கு தீர்வு காணும் வகையில், சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்றபடி, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்ய விரைவில் அதிகாரம் அளிக்கப்பட உள்ளது.நடப்பு பார்லிமென்ட் கூட்டத் தொடர் முடிந்ததும், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார விவகாரங்களை கவனித்து முடிவு எடுக்கும் அதிகாரம் பெற்ற அமைச்சரவை குழு கூடி, இதுகுறித்து விரிவாக ஆலோசிக்க உள்ளது.இதற்கு பின், பெட்ரோல் விலை நிர்ணயம் குறித்தும், விலை உயர்வு குறித்தும் அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இம்முடிவை இக்குழு எடுத்தால், அது மத்திய அமைச்சரவை அனுமதியைப் பெறத் தேவையில்லை.மம்தா போன்ற சிலர் விலை உயர்வை எதிர்க்க வாய்ப்பு இல்லாமல்  ஏற்கப்படும். அரசு இம்முடிவை எடுக்க விரும்பக் காரணம் நடப்பு நிதியாண்டில் எண்ணெய்க் கம்பெனிகள் 90 ஆயிரத்து 150 கோடி ரூபாயை  இழக்கும் என்பதாகும்.இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும்  இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்களும் தற்போது நாள் ஒன்றுக்கு 272 கோடி ரூபாய் இழப்பைச் சந்திப்பதாக அரசு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.அரசு நிர்வாகத்தின்  கீழ் உள்ள விலை நிர்ணயத்தை மாற்றும் பட்சத்தில், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா ஆறு ரூபாய் உயர்த்தப்படும். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியா
ஆயுத வியாபாரியுடன் தொடர்பு: மத்திய அமைச்சர் யார்?
புதுடில்லி : மத்திய அமைச்சர் ஒருவர், வங்கதேசத்தை சேர்ந்த ஆயுத வியாபாரியுடன், சட்டவிரோத ஆயுத பேரம் வைத் திருந்ததாகக் கூறி, ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் நேற்று அமளியில் ஈடுபட்டன. இதனால், சபை இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டது.ராஜ்யசபாவில் நேற்று ஜீரோ நேரத்தின்போது, மார்க்சிஸ்ட் எம்.பி., மொய்னுல் ஹசன் ஒரு பிரச்னையை கிளப்பினார். அவர் கூறுகையில்,"மத்திய அமைச்சர் ஒருவர், வங்கதேசத்தை சேர்ந்த ஆயுத வியாபாரியிடம், சட்டவிரோத ஆயுத பேரம் வைத்திருந்ததாகவும், அமைச்சர் சார்பில் அந்த வியாபாரிக்கு 1.2 லட்ச ரூபாய் கொடுக்கப் பட்டதாகவும் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் சட்டம்  ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கத் தில் இந்த செயல் நடந்துள்ளது. அந்த அமைச்சரின் பெயரை பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும். இதுகுறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும்' என்றார். ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி கூறுகையில், "சம்பந் தப்பட்ட அமைச்சரின் பெயரை பகிரங்கமாக தெரிவிக்காவிட்டால், ஒட்டுமொத்த அமைச்சரவையின் மீதும் சந்தேகம் கொள்ளும் நிலை ஏற்படும்' என்றார். அ.தி.மு.க., - பா.ஜ., - சிவசேனா, இடதுசாரி கட்சிகள், சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், அசாம் கணபரிஷத் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்களும், இந்த பிரச்னையை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். இதனால், பத்து நிமிடங்களுக்கு சபை ஒத்தி வைக்கப்பட்டது. பின், மீண்டும் சபை கூடியதும், இதே பிரச்னை எதிரொலித்தது. இதையடுத்து, மீண்டும் 15 நிமிடங்களுக்கு சபை ஒத்தி வைக்கப்பட்டது.பின், சபை கூடியதும் பார்லிமென்ட் விவகாரத் துறை இணை அமைச்சர் பிரித்விராஜ் சவான் விளக்கம் அளித்தார்.அவர் பேசும்போது,"பத்திரிகையில் வெளியான தகவல் உண்மையா, இல்லையா என்பது குறித்து விசாரிக்கப்படும். உண்மை என தெரியவந்தால், அந்த அமைச்சரின் பெயர் பகிரங்கமாக அறிவிக்கப்படும்' என்றார். அமைச்சர் மறுப்பு : ஆயுத பேர விவகாரம் தொடர்பாக, திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், மத்திய கிராமப்புற மேம்பாடு துறை இணை அமைச்சருமான சிசிர் குமார் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கை:வங்கதேச ஆயுத வியாபாரியுடன், என்னை தொடர்பு படுத்தி பத்திரிகையில் வெளியான செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இந்த விவகாரத்தில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. மேற்கு வங்கத்தில் விரைவில் நகராட்சி தேர்தல் நடக்கவுள்ளது. இந்த நேரத்தில், திரிணமுல் கட்சிக்கு மக்கள் மத்தியில் கெட்டப் பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்ற அவதூறான தகவல்களை எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பரப்புகின்றன.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா
இரு குற்றவாளிகளுக்கு விடுதலையா: அப்பீல் செய்ய பா.ஜ., யோசனை
புதுடில்லி:மும்பைத் தாக்குதலின் போது கைதான ஒரே பயங்கரவாதி, அஜ்மல் கசாப் குற்றவாளி என, அறிவிக்கப்பட்டதை வரவேற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி, கசாப்பிற்கு துணையாக இருந்த மற்ற இருவரும் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மகாராஷ்டிரா அரசு அப்பீல் செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளது. பா.ஜ., கட்சியின் லோக்சபா துணைத் தலைவர் கோபிநாத் முண்டே கூறுகையில், ""அனைத்துக் குற்றச்சாட்டுகளிலும் கசாப் குற்றவாளி என, அறிவிக்கப்பட்டது நல்லதே. போதிய ஆதாரங்கள் இல்லாததால், மற்ற இருவர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, ஐகோர்ட்டில் அப்பீல் செய்து தண்டனை வாங்கித் தர வேண்டும். அவர்களுக்கு எதிரான அரசு ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என, பாரதிய ஜனதாவும், இந்த நாடும் விரும்புகிறது,'' என்றார். அதே சமயம் காங்கிரஸ் தகவல் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி, "இந்த தீர்ப்பு ஜனநாயகத்திற்கும், இந்திய நீதித்துறையின் செயல்பாட்டிற்கும் கிடைத்த வெற்றி. முக்கிய குற்றவாளியான கசாப்பிற்கு மற்றவர்களைப் போல சுதந்திரமான முறையில் வழக்கு விசாரணை நடந்திருக்கிறது' என்றார்.
இந்தியா
மும்பை தாக்குதல் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு : உதவியதாக குற்றம்சாட்டப்பட்ட 2 பேர் விடுதலை
மும்பை :மும்பைத் தாக்குதல் வழக்கில் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. தாக்குதலின் போது கைதான பாகிஸ்தான் பயங்கரவாதி அஜ்மல் அமீர் கசாப் குற்றவாளி என, சிறப்பு கோர்ட் நீதிபதி அறிவித்தார். அதே நேரத்தில், இந்த வழக்கில் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட  இருவர் விடுவிக்கப்பட்டனர். 166 பேர் பலியாக காரணமாக இருந்த இந்த வழக்கில் 1,522 பக்கங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டது. கசாப்பிற்கான தண்டனை குறித்து இன்று வக்கீல்களின் வாதம் நடக்கிறது. பயங்கரவாத தாக்குதல் வழக்குகளில் மிக வேகமாக விசாரணை நடந்து, தீர்ப்பு வழங்கப்பட்டது இந்த வழக்கே ஆகும். கடந்த 2008 நவம்பர் 26ம் தேதி, பாகிஸ்தானிலிருந்து வந்த 10 பயங்கரவாதிகள், மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், காமா மருத்துவமனை, தாஜ் ஓட்டல் உட்பட பல இடங்களில் தாக்குதல் நடத்தினர். இந்தக் கொடூர தாக்குதலில், வெளிநாட்டவர்கள் உட்பட 166 பேர் கொல்லப்பட்டனர்; ஏராளமானோர் காயம் அடைந்தனர். பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் எடுத்த அதிரடி நடவடிக்கையில், ஒன்பது பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் கைதானான். இவன், பாகிஸ்தானின் பரித்கோட் நகரைச் சேர்ந்தவன். பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்டவன்.மேலும், இந்த பயங்கரவாதிகளுக்கு தாக்குதல் நடத்த உதவியதாக, இந்தியாவைச் சேர்ந்த பாஹீம் அன்சாரி மற்றும் சபாபுதீன் அகமது என்ற இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த மூன்று பேருக்கும் எதிரான வழக்கு, மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அமைக்கப்பட்ட சிறப்பு கோர்ட்டில் நடந்தது. நீதிபதி தகிலியானி வழக்கை விசாரித்தார். அரசு தரப்பு வக்கீலாக உஜ்வால்நிகாம் ஆஜரானார்.இந்தியாவில் பயங்கரவாத சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் மிக வேகமாக முடிவுக்கு வந்த வழக்கு இதுவே.  தவிரவும், அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., வந்து ஆஜரான வரலாற்று முக்கியத்துவம் பெற்ற வழக்கும் ஆகும். மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கசாப், குண்டுதுளைக்காத வகையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தான். தீர்ப்பையொட்டி, மும்பை ஆர்தர்ரோடு சிறையைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தீர்ப்பு:  நீதிபதி தகிலியானி தீர்ப்பை வழங்கினார். 1,522 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் அவர் கூறியுள்ளதாவது:இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்ததாக, கசாப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உண்மை என நிரூபணமாகியுள்ளது.  அப்பாவி மக்களை கொன்று குவித்துள்ளான். ஆயுதங்கள் சட்டம், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், வெடிமருந்துகள் சட்டம், ரயில்வே சட்டம் என, 86 சட்டப் பிரிவுகளின் கீழ் கசாப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அனைத்து சட்டப் பிரிவுகளின் கீழும் அவன் குற்றவாளியே.மும்பைத் தாக்குதலை வெறும் படுகொலை என சொல்ல முடியாது. இது இந்தியாவிற்கு எதிராக நடத்தப்பட்ட போரின் ஒரு பகுதி என்றே சொல்ல வேண்டும். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை பாகிஸ்தானில் இருந்து சிலர் இயக்கியுள்ளனர்.மூத்த போலீஸ் அதிகாரிகள்  ஹேமந்த் கர்காரே, அசோக் காம்தே,  விஜய் சலாஸ்கர், உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் துக்காராம் ஓம்பாலே ஆகியோரை கொன்ற வழக்கிலும் கசாப் குற்றவாளியே. அதேநேரத்தில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு இந்தியர்களான பாஹீம் அன்சாரி மற்றும் சபாபுதீன் அகமது ஆகிய இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாததால், அவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்கள் சந்தேகத்திற்கு இடமானதாக இருப்பதால், சந்தேகத்தின் பலனை அவர்களுக்கு சாதகமாக்கி விடுதலை செய்கிறேன்.இந்த வழக்கில், மீடியா போட்டோகிராபர்கள் செபஸ்டியன் டிசவுசா மற்றும் ஸ்ரீராம் வெர்னீகர் (கசாப் சுட்டதை படம் பிடித்தவர்கள்), சத்ரபதி சிவாஜி ரயில் நிலைய அறிவிப்பாளர் விஷ்ணு ஜெண்டே, 11 வயது சிறுமி தேவிகா ரோதவான் ஆகியோர் அளித்த சாட்சியங்கள் கோர்ட்டிற்கு மிகவும் உதவியாக இருந்தன. மேலும், இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில், தலைமறைவு குற்றவாளிகள் என, குறிப்பிடப்பட்டுள்ள 35 பேரில், 20 பேர் குற்றவாளிகள் என்பதையும்  கோர்ட் கண்டறிந்துள்ளது.இவ்வாறு நீதிபதி தகிலியானி கூறினார். குற்றவாளி  கசாப் என்று  நீதிபதி அறிவித்த போது, அவன் ஏதும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவில்லை. ஆனால், மற்ற இருவரும் தண்டனையின்றி  விடுவிக்கப்பட்ட போது, அவர்கள் புன்முறுவல் பூத்து மகிழ்ச்சி தெரிவித்தனர். கசாப் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால், அவனுக்கான தண்டனை குறித்து இன்று வக்கீல்களின் வாதம் நடக்கிறது. மரண தண்டனை வழங்க வேண்டும் என, அரசு தரப்பில் வாதிடப்படும் வாய்ப்பு அதிகம். தீர்ப்பு பற்றி கருத்து தெரிவித்த அரசு சிறப்பு வக்கீல் உஜ்வால் நிகாம், ""பாஹீம் அன்சாரி, சபாபுதீன் அகமது விடுதலையை எதிர்த்து, ஐகோர்ட்டில் அப்பீல் செய்யும்படி அரசுக்கு பரிந்துரை செய்வேன். கசாப்பை குற்றவாளி என, அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார்.
இந்தியா
சட்டவழி ஆட்சியை காட்டும் தீர்ப்பு இது
மும்பை:இந்தியாவில் சட்ட வழி அரசு நடக்கிறது என்பதை, மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் கசாப் குற்றவாளி என்ற தீர்ப்பு நிரூபித்துள்ளது' என்று மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். மும்பைத் தாக்குதல் வழக்கு குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறுகையில்,"இந்த வழக்கு விசாரணையும், கசாப் குற்றவாளி என்ற தீர்ப்பும் இந்தியாவில் சட்ட வழி ஆட்சி இருப்பதை காட்டுகிறது. அதே சமயம், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற இருவர் விடுவிக்கப்பட்டது, கோர்ட்டின் நேர்மை மற்றும் சுதந்திரத்தைக் காட்டுகிறது. இந்தச் சிக்கலான வழக்கில் ஓர் ஆண்டுக்குள், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது குற்றத் தீர்ப்பு வெளியானது குறித்து நான் திருப்தி அடைந்துள்ளேன்' என்று தெரிவித்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் சஜன் புஜ்பால்,"கசாப் மீதான வழக்கு முறையாக நடந்துள்ளது. ஒருவரை பிடித்தவுடன் தூக்கிலிடுவது அல்லது சுட்டுக் கொல்வது போன்று இவ்வழக்கு நடக்கவில்லை. நமது தரப்பில் ஆவணங்கள், போட்டோக்கள், சாட்சிகள் என கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டன. பாகிஸ்தானிலிருந்து ஒரு இளைஞன் இங்கு வந்து பயங்கரவாதத் தாக்குதல் நடத்தினான் என்று, உலகிற்கு நிரூபித்துக் காட்ட இத்தனைக் காலம் நமக்கு தேவைப்பட்டிருக்கிறது' என்று தெரிவித்தார்.
இந்தியா
மருத்துவமனைகளை கண்காணிக்க திட்டம்
புதுடில்லி:சட்டவிரோதமாக உடல் உறுப்புகளை தானம் செய்தலை தடுக்கவும், கருவில் உள்ள குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்று தெரிவிப்பதை தடுக்கவும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் தனியார் மருத்துவமனைகளை முறைபடுத்தும் மசோதா நேற்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு, விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் மருத்துவமனைகளைக் கண்காணிக்க தேசிய அளவிலும், மாநிலஅளவிலும் குழு அமைக்கப்படுகிறது. இதன் மூலம், நடை முறையில் உள்ள விதிகளின் படி மருத்துவமனைகளை முறையாக பதிவு செய்திருக்க வேண்டும்.மேலும், ஒரு தனி நபர் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் பட்சத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிக்சை, மருத்துவ பரிசோதனை, அவசரகால சிகிச்சை போன்ற விவரங்களை மருத்துவமனைகள் தெரிவிக்க வேண்டும். மருத்துவமனைகளின் மீதான புகார்கள் குறித்து மாநிலத்தில் அமைக்கப்படும் குழு விசாரிக்கும். மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகள் பற்றிய விவரங்களை ஒவ்வொரு மாதமும் டிஜிட்டல் முறையில் கணக்கெடுக்கப்பட்டு, தேசிய பதிவேட்டில் பதிவு செய்யப்படும்.மாநில அரசுகளைப் பொறுத்தவரை, மருத்துவமனைகள் பற்றிய விவரங்களை மாவட்ட ரீதியாக கணக்கெடுக்க வேண்டும். இதற்காக அமைக்கப்பட்ட குழுவில் கலெக்டர், சுகாதார அலுவலர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர்.
இந்தியா
பால் தாக்கரே கிண்டல்
மும்பை:மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான், மாநிலத்தின் வளர்ச்சி பற்றிக் கூறிய ஒப்பீட்டைக் கிண்டலடித்துள்ளார், சிவசேனா தலைவர் பால் தாக்கரே.மகாராஷ்டிர மாநில முதல்வர் அசோக் சவான், சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், "மகாராஷ்டிரா வளர்ச்சியில் இந்திய மாநிலங்களோடு போட்டியிடவில்லை. மாறாக அமெரிக்கா மற்றும் சீனாவோடு போட்டியிடுகிறது' என்று கூறியிருந்தார். இதைக் கிண்டலடிக்கும் விதமாக, சிவசேனா கட்சிப் பத்திரிகையான, "சாம்னா'வில் அக்கட்சித் தலைவர் பால் தாக்கரே எழுதியிருப்பதாவது:இங்கு விதர்பா பகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 14 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். அதேபோல் அமெரிக்கா, சீனாவிலும் நடந்துள்ளது என்கிறாரா முதல்வர்? இங்குள்ளது போல அடிக்கடி மின்சாரத் தட்டுப்பாடு, அந்நாடுகளில் இருக்கிறதா என்று எங்களுக்குத் தெரியவில்லை.மும்பை மற்றும் நவி மும்பையில் 55லிருந்து 60 லட்சம் வரை வங்கதேசத்தவர்கள் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ளனர். இதேபோல, அந்நாடுகளிலும் எத்தனை வங்கதேசத்தவர்கள் இருக்கின்றனர் என்பதை முதல்வர் தான் சொல்ல வேண்டும்.இங்குள்ள தொழிற்சாலைகள் சுடுகாடாக மாறி வருகின்றன. ஆனால் அந்நாடுகளில் தொழிற்சாலைகள், "சூப்பர் பவராக' மாறி வருகின்றன. மகாராஷ்டிராவோடு அமெரிக்காவையும் சீனாவையும் ஒப்பிடுவது என்பது சுத்த, "ஹம்பக்!'இவ்வாறு பால் தாக்கரே எழுதியுள்ளார்.
இந்தியா
வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் அனுமதிக்கும் மசோதா தாக்கல்
புதுடில்லி:வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் உயர்கல்வி அளிக்க வகை செய்யும் மசோதா, லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இடதுசாரிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.வெளிநாட்டிலுள்ள கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழு அல்லது வேறொரு ஒழுங்கு வரையறை அமைப்பில் பதிவு செய்து கொண்டு, இந்தியாவில் தங்கள் கல்வி நிறுவனம் ஆரம்பிப்பது குறித்து அரசிடம் அனுமதி பெற வேண்டும். இதற்காக, 50 கோடி ரூபாய் வைப்புநிதியாக அரசுக்குச் செலுத்த வேண்டும். அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அமையும் கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும். இதற்கு அனுமதி அளிக்கும், "வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் (ஒழுங்குமுறை மற்றும் நுழைவு மற்றும் செயல்பாடு)-2010' என்ற மசோதா லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இம்மசோதாவின் ஆரம்பக்கட்ட நிலையில் எதிர்ப்பு தெரிவிப்பது பயனற்றது என்று, மத்திய மனிதவளத்துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார். இருப்பினும், மசோதா தாக்கலின் போது எதிர்க்கட்சிகள், ஸ்பெக்டரம் ஊழல் மீதான நடவடிக்கை குறித்து உரத்த குரலில் கோஷங்கள் எழுப்பினர்.மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய சி.பி.ஐ.,(எம்) கட்சித் தலைவர் வாசுதேவ ஆச்சார்யா, "வெளிநாட்டுக் கல்விக் கடைகள் இங்கு நுழைந்தால் இங்கிருக்கும் கல்வி அமைப்பை சீர்குலைத்து விடுவர். இது மாநிலங்களின் கல்வி நலனைப் பாதிக்கும் மசோதா. கல்வியை மேலும் வணிகமயமாக்கிவிடும்' என்று தெரிவித்தார். இந்தியாவில் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் தங்கள் கிளைகளை அமைக்க இம்மசோதா வழிவகுக்கிறது. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையில் அமையும் கல்வி நிறுவனத்தின் விண்ணப்பத்தை அரசு நிராகரிக்கும் அதிகாரத்தையும் இம்மசோதா வழங்குகிறது.
இந்தியா
இது உங்கள் இடம்
யார் தான் காப்பாற்றுவது? ஆர்.ஹரிஹரன், கோவையிலிருந்து எழுதுகிறார்: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக இந்திய தூதரக அதிகாரி மாதுரி குப்தா கைது செய்யப்பட்டது, ஜீரணிக்க முடியாத விஷயம்.இந்திய மருத்துவக்கவுன்சில் தலைவர் கேதன் தேசாய், தன் வீட்டு வாயில்படியிலிருந்து கழிவறை வரைக் கும், ஆயிரம் ரூபாய் நோட்டுகளாலும், தங்கக்கட்டிகளாலும் வடிவமைத்து, மாளிகை கட்டி லஞ்சத்தின் பாரத ரத்னாவாக சாதனை படைத்துள்ளார்.மகாராஷ்டிராவில் ஒரு போஸ்ட் மாஸ்டர் ஜெனரல், கோடிக்கணக்கான லஞ்ச விவகாரத்தில் கைது செய்யப்பட்டதாக, இரு மாதத்திற்கு முன் ஒரு செய்தி பிரசுரமானது. ஒரு ராணுவ அதிகாரி, நிலமோசடி வழக்கில் சிக்கி பதவியிழந்ததாகவும் செய்தி, கடந்த மாதம் வெளியானது.நல்ல மருந்துகளை காட்டிலும், போலி மருந்துகளின் நடமாட்டமே அதிகம். வரலாறு இதுவரை கண்டிராத விலைவாசி உயர்வு. இனிமேல் நமக்கு மின்சாரம் ஒரு கனவு தான்.  200 மாவட் டங்களில் மாவோயிஸ்டுகளின் ஆட்சி.பார்லியில் அனுதினமும் கூச்சல், குழப்பம். நாடு முழுவதும் தொடர்ந்து மறியல், வேலைநிறுத்தம். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள், மத்திய, மாநில அரசுகளை சரிவர நிர்வாகம் செய்யாததே இதற்கு முக்கிய காரணம். மேலும், தன்னலமற்றவர்கள் அரசு பதவிக்கு வருவது அரிதாகிவிட்டது."உறுதியான நூறு இளைஞர்கள் என்னோடு இருந்தால், இந்தியாவை மாற்றியமைப்பேன்' என்று விவேகானந்தர் அன்று கூறினார். இன்று லட்சக்கணக்கான விவேகானந்தர்கள் உருவானால் தான், இந்தியாவை காப்பாற்ற முடியும். பொறுப்பு எங்கே? எம்.கணேசன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: பத்திரிகையாளர் பாதுகாப்பு குறித்து, இப்பகுதியில் வாசகர் ஒருவர், எழுதியிருந்த கடிதத்தைப் படித்தேன். அதில் கூறப்பட்டிருக்கும் விஷயங்கள் நூற்றுக்கு நூறு உண்மை. பத்திரிகையாளர்களுக்கு துப்பாக்கி லைசென்ஸ் தர வேண்டும் என்ற கோரிக்கையும் நியாயமானதே.பத்திரிகையாளர்களை அடிக்க அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? முறையான அனுமதி பெற்று செய்தி சேகரிக்க, படம் எடுக்க வந்தவர்களைத் தாக்குவது எந்த விதத்தில் நியாயம்? அதுவும் முதல்வர் மற்றும் நீதிபதிகள் முன்னிலையில், இவ்வாறு தாக்குதல் நடத்துவதற்கு அவர்களுக்கு எப்படி தைரியம் வந்தது?அவ்வாறு தாக்கியவர்கள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? எதிர்க்கட்சி பத்திரிகையாளராக இருந்தாலும், வேறு யாராக இருந்தாலும் அரசுக்கென ஒரு தார்மீகப் பொறுப்பு இருக்கிறது அல்லவா? அந்த  தார்மீகப் பொறுப்பை அரசு நிறைவேற்றுமா? இது குறித்து பத்திரிகையாளர்கள் என்ன செய்யப் போகின்றனர்? இந்த நிகழ்ச்சி பத்திரிகையாளர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கிறது.இதற்கு அரசுதான் பதில் சொல்ல வேண்டும்.        அரசியல் சுயலாப விழா! அ.அ.தொ.மாரி, விருதுநகரிலிருந்து எழுதுகிறார்: சமீபத்தில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில், முதல்வர் கருணாநிதிக்கு அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு கொடுத்தமைக்காகவும், தாழ்த்தப்பட் டோர் நலனுக்காக பணியாற்றியதாகவும் கூறி, 50 ஆயிரம் ரூபாய் மற்றும் அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டுள்ளது.கருணாநிதியும் தனக்கு வழங்கப்பட்ட விருது பணத்தை முதல்வரின் நிவாரண நிதியில் சேர்த்துவிட்டார்.  இது வரவேற்க வேண்டிய செய்தி. தி.மு.க., அரசின் அருந்ததியர் உள்ஒதுக்கீடு நடவடிக்கைக்காக, அவருக்கு விருது கொடுக்கும் விடுதலைச் சிறுத்தை திருமா, ஆரம்பத்தில் உள்ஒதுக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்ததை, தமிழக மக்கள், குறிப்பாக, தாழ்த்தப்பட்ட மக்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.ஆனால், கருணாநிதிக்கு அம்பேத்கர் சுடர் விருது கொடுக்கும் அளவுக்கு அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக என்ன சாதித்து விட்டார் என்று எண்ணும் போது, பெரிதாக ஒன்றும் இல்லை என்று தான் தோன்றுகிறது.ஏனெனில், தமிழகத்தின் முதல்வராக கருணாநிதி ஏறத்தாழ 18 ஆண்டுகள் பதவி வகித்து விட்டார்; ஐந்தாவது முறையாகவும் அவர்தான் பதவியில் இருந்து வருகிறார். பல கிராமங்களில் இன்னும் தீண்டாமைக் கொடுமை மறையவில்லை. இரட்டை டம்ளர், இரட்டை சுடுகாடு முறை பல இடங்களில் அமலில் உள்ளது. இதை தடுக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.மாறாக, சமத்துவபுரம், தாழ்த்தப்பட்டவர்களுக்குள் உள்ஒதுக்கீடு, தலித் தலைவர்களுக்கு சிலை போன்ற ஓட்டு வங்கி அரசியலைத்தான், அவர் கையாண்டு வருகிறார். சமீபத்தில், ஓரிரு மாதங்களுக்கு முன், தமிழகம் வந்த தேசிய ஆதிதிராவிட ஆணையத் துணை தலைவர், தமிழக அரசின் அருந்ததியர் உள்ஒதுக்கீடு நடவடிக்கை, அரசியல் சட்டத்திற்கு மாறானது என்பதையும், தாழ்த்தப்பட்டவர்களுக்கான நலத்திட்டங்களுக்கு திருப்பி விடுவதையும், அவர் அம்பலப்படுத்தியிருந்தார்.அப்போது அதற்கு நேரடியாக பதிலளிக்காத கருணாநிதி, "ஆதிதிராவிட துணை ஆணையத் தலைவரைப் பற்றி, பிரதமரிடம் புகார் செய்யப்படும்' என்று மிரட்டினார்; அத்துடன் பிரச்னைகளையும் கை கழுவி விட்டார். இவையெல்லாம தெரிந்தும், கருணாநிதிக்கு திருமா பாராட்டு விழா கொடுக்கிறார் என்றால், அது அவரின் அரசியல் சுயலாபத்துக்குத்தான் என்பதை தாழ்த்தப்பட்ட மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர்.          அவரும் சாதாரணர் தான்!அ.குணா, புவனகிரியிலிருந்து எழுதுகிறார்: ஒரு துறவி எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாக, நித்யானந்தா இருக்கிறார். ஆன்மிகவாதிகள் மற்றவர்களை விட, ஒழுக்கத்தில் சிறந்தவர்களாக இருக்க வேண்டும்.ஆனால், இன்றைய ஆன்மிகவாதிகளில் சிலர், தானே கடவுளின் அவதாரம் என நினைத்து, தங்களுக்கு தாங்களே மகுடம் சூட்டி மகிழ்ந்து கொள்வது, அவர்கள் உண்மையான ஆன்மிகவாதிகள் இல்லை என்பதை உண்மையான பக்தர்கள் அறிவர்.துறவிகள் விவேகானந்தர் காட்டிய வழியில் வாழ வேண்டும்.விவேகானந்தர், அன்று கிளம்பிய போது காவி உடை, கமண்டலம், ஓரிரு புத்தகங்கள், நீண்ட கைத்தடி இவற்றை எடுத்து யாத்திரைக்கு புறப்பட்டார். பல நகரங்கள், கிராமங்கள் வழியாக நடந்து சென்றுள்ளார்; கிடைத்த உணவை உண்டுள்ளார்; மரங்களின் கீழ் படுத்து தூங்கியுள்ளார்; ஏழை குடிசைகளிலும் தங்கியுள்ளார்.ஆனால், இன்றைய ஆன்மிகவாதிகள் குளிரூட்டப்பட்ட கார்களில் பவனி வருவதும், ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் தங்குவதும், பெண் பக்தர்களுடன் சுற்றி வருவதுமாக இருக்கின்றனர்.ஒரு ஆன்மிகவாதி எப்படியெல்லாம் இருக்கக் கூடாதோ அப்படியெல்லாம் நித்யானந்தா இருந்துவிட்டு, இன்று அவர் இருக்க வேண்டிய இடத்திற்கு, இறைவன் கொண்டு சேர்த் துள்ளான். அவரிடம் பக்தி கொண்டிருந்த பலர், அவர்களுக்கு ஏற்பட்ட உடல் உபாதைகளை அவர் நீக்கியதாக கூறியுள்ளனர்.ஆனால், அய்யோ பாவம்... நித்யானந்தா கைது செய்யப்பட்ட சில நாட்களிலேயே அவருக்கு உடல்நிலை சரியில்லையென மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பது, அவர் போலி என்பதையும், அவரும் ஒரு சாதாரண மனிதன் தான் என்பதை படம் பிடித்து காட்டிவிட்டது.
இந்தியா
சொல்கிறார்கள்
ஒரு முன் மாதிரி கிராமம் :  வெளிநாட்டு வேலையை உதறிவிட்டு கிராம வளர்ச்சிக்காகப் பாடு படும் இளைஞர் செந்தில் கோபாலன்: எனக்கு சிறு வயது முதலே நாட்டிற்காக குறிப்பாக கிராமங்களுக்காக எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டு. அதற்காக திட்டமிட்டு துவங்கியது தான், "பயிர்' என்ற அமைப்பு. இதன் முக்கிய நோக்கம், கிராமத் தன்னிறைவு, கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு ஆகியவற்றில் சுய சார்பை ஏற்படுத்த, அரசு உட்பட பல அமைப் புகளுடன் இணைந்து பணியாற்றுகிறோம். தேனூரைச் சுற்றியுள்ள ஆறு கிராம மக்களுக்கு, "பயிர்' அமைப்பைச் சேர்ந்த டாக்டர் மைதிலி தலைமையில், தினமும் உடல் ரீதியான நோய்களுக்கு உரிய மருந்துகளும், உளவியல் பிரச்னைகளுக்கு கவுன்சிலிங்கும் அளிக்கப்படுகின்றன.இங்கு செயல்பட்டு வரும் புறநோயாளிகள் சிகிச்சை மையத் தில், அடிப்படை முதலுதவிகளும், தோல் நோய்களுக்கு வீடியோ கான்பரன்சிங் மூலமும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கிராமத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ் வொரு, "பயிர்' அமைப்பின் பணியாளர்கள் உள்ளனர். அவர்கள், அங்குள்ள ஆசிரியர்களுக்கு உதவியாக இருப்பர். இங்குள்ள கல்வி மையத்தில் தினமும் மாலையிலும், விடுமுறை நாட்களிலும் பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. பத்து குழந்தைகள் இங்கு முழுநேரமாக சிறப்புப் பாடத் திட் டத்தில் படிக்கின்றனர். கிராமக் கலைகளை வளர்க்கும் நோக்கில் சிலம்பாட்டம், ஒயிலாட்டம் போன்ற கலைகளும், யோகா வகுப்புகளும் நடக்கின்றன. இங்கும் வீடியோ கான்பரன்சிங் மூலம் வகுப்புகள் நடக்கின்றன. கிராம மக்களின் வேலை வாய்ப்பிற் காக மண்புழு உரம் தயாரிப்பு, வேப்பம் புண்ணாக்கு தயாரித்தல், தேங்காய் எண்ணெய் தயாரித்தல், பனியன் அலங்கார வேலைகள் போன்ற தொழில்களுடன் பி.பி.ஓ., பணிகளும் நடக்கின்றன. இதில், பெரும்பாலும் கிராமத்தைச் சேர்ந்தவர்களே ஈடுபடுகின்றனர். சுற்றுச்சூழலை மேம்படுத்த, 30 ஏக்கரில் மூன்றாயிரம் இலுப்பை மரக்கன்றுகளை நட்டிருக்கிறோம்.
இந்தியா
சட்டசபையை கூட்ட லாலு கட்சி கோரிக்கை
ராஞ்சி:ஜார்க்கண்ட் சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டி முதல்வர் சிபுசோரனின் பெரும்பான்மையை நிரூபிக்க செய்ய வேண்டும், என ராஷ்டிரிய ஜனதா தள கட்சி கோரியுள்ளது.மன்மோகன் சிங் அரசு மீது கொண்டு வரப்பட்ட வெட்டு தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பில், காங்கிரசுக்கு ஆதரவாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஓட்டு போட்டதால், ஜார்க்கண்ட் முதல்வர் சிபுசோரனுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக பாரதிய ஜனதா தெரிவித்தது. பின்னர் பா.ஜ., பார்லிமென்ட் குழு கூடி சிபுசோரன் அரசுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக தெரிவித்தது. இதற்கிடையே, மாநில ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் கிரிநாத் சிங் குறிப்பிடுகையில், "பாரதிய ஜனதா கட்சியின் முடிவால் ஜார்க்கண்ட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மாநில கவர்னர், சட்டசபை சிறப்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து, சிபுசோரனின் பெரும்பான்மையை நிரூபிக்க செய்ய வேண்டும். பெரும்பான்மையை சிபுசோரன் நிரூபிக்காவிட்டால் அடுத்த கட்சியை ஆட்சி செய்ய அழைக்க வேண்டும். மதசார்பற்ற கட்சி ஆட்சி அமைக்க முன்வந்தால் நாங்கள் ஆதரவளிப்போம்' என்றார். இதனிடையே, சிபுசோரன் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அத்தனை பேரும் பா.ஜ., தலைமைக்கு ஆதரவு தருவதாக முறைப்படி தனித்தனியாக கடிதம் எழுதித் தருமாறு கேட்கப்பட்டிருக்கிறது. சோரன் ஆதரவாளர்கள் சிலர் பா.ஜ., தலைமையை ஏற்க முடியாது என்று கூறியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்தியா
பேச்சு, பேட்டி, அறிக்கை
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேச்சு: நமக்கு அறிமுகம் இல்லாத வெற்றியாளர்களை முன் மாதிரியாக வைத்தால், நாம் அவர்களை வியப்புடன் மட்டுமே பார்க்க முடியும். ஆனால், நம்முடன் இருக்கும் வெற்றியாளர்களை முன் மாதிரியாக வைத்துப் போராடினால், வெற்றியை நாம் எளிதாக பெற்று விடலாம். பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி பேட்டி: மக்கள் பிரச்னைகளை அரசிடம் எடுத்துச் செல்கிறோம். அரசு நல்லது செய்தால், அதை வரவேற்கிறோம்; செய்யாதவற்றைச் சுட்டிக் காட்டுகிறோம். தேவை என்றால் கடிந்து சொல்லவும் நாங்கள் தயங்குவது இல்லை. பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகச் செயலாற்றி வருகிறோம். பா.ஜ., தமிழகத் தலைவர்  பொன்.ராதாகிருஷ்ணன் அறிக்கை :  தமிழக நதிநீர் பிரச்னையில் உண்மையான அக்கறை கருணாநிதிக்கு இருந்திருந்தால், அது எப்போதோ தீர்க்கப்பட்டிருக்கும். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலும், மத்திய அரசிலும் கடந்த ஆறு ஆண்டு காலமாக தொடர்ந்து அங்கம் வகித்து வரும் கட்சியின் தலைவராக இருந்து கொண்டு தம் செல்வாக்கை தமிழக நலனுக்காக பயன்படுத்த கருணாநிதி தவறியிருக்கிறார். மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி பேச்சு: தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுவது ஒன்றும் புதிதல்ல; கடந்த நான்கு ஆண்டுகளாக என் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது என நான் கூறி வருகிறேன். விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி பேச்சு: திறமையான மாணவர்களை உருவாக்குவதில் ஆசிரியர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. ஆனால், இந்தியாவில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களின் திறமை கேள்விக்குறியாக உள்ளது. மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி பேச்சு: நாட்டில் அன்னிய பல்கலைக் கழகங்கள் நுழைவதற்கு வகை செய்யும் விதத்தில், அரசு அன்னியக் கல்வி நிறுவனங்கள் சட்ட முன் வடிவைக் கொண்டுவர இருக்கிறது. இது அனுமதிக்கப்பட்டால் கல்வித் துறையில் கடும் பாதிப்புகள் ஏற்படும். ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் பேச்சு: என் எல்லா போன்களும் ஒட்டுக் கேட்கப்பட்டாலும் கூட, நான் கவலைப்பட மாட்டேன். ஏன் என்றால் நான் தவறு செய்வது இல்லை. மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேச்சு: காங்கிரஸ் கட்சியில் புதிய கொள்கைகள் புகுத்தப்பட்டாலும், அடிப்படை லட்சியம் மாறவில்லை. எழுத்துரிமை, பேச்சுரிமை, மொழி உரிமை, மதசார்பின்மை உள்ளிட்ட அடிப்படை லட்சியங்களில் இருந்து காங்கிரஸ் ஒருபோதும் விலகியது இல்லை.
இந்தியா
தமிழகத்திற்கு ஒதுக்கீடு 20 ஆயிரத்து 68 கோடி ரூபாய்:மத்திய திட்டக்கமிஷன் அனுமதி
தமிழகத்துக்கு நடப்பு நிதியாண்டுக்கான நிதி ஒதுக்கீடாக 20 ஆயிரத்து 68 கோடி ரூபாயை மத்திய திட்டக்கமிஷன் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டில் புதிய மின்உற்பத்தி திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என, முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.நடப்பு 2010-11ம் நிதிஆண்டுக்கான திட்ட ஒதுக்கீடு எவ்வளவு என்பது குறித்து இறுதி செய்வதற்காக தமிழக முதல்வர் கருணாநிதி, திட்டக்கமிஷன் அலுவலகத்திற்கு நேற்று வந்தார். அங்கு திட்டக்கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியாவை சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது மத்திய இணையமைச்சர் நாராயணசாமி, தமிழக அரசின் தலைமைச் செயலர் ஸ்ரீபதி, நிதித்துறை செயலர் ஞானதேசிகன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.இந்த ஆலோசனையின்போது தமிழகம் தரப்பில் சாலைமேம்பாட்டு திட்டங்களுக்கு நிறைய நிதி ஒதுக்கீடு அளிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. மத்திய அரசின் சாலைமேம்பாட்டு திட்டத்தின் வாயிலாக அளிக்கப்படும் நிதியில் தமிழகம் புறக்கணிக்கப்படுகிறதென்றும் எடுத்துக் கூறப்பட்டது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அனைத்தும் உயர்ந்துவிட்ட நிலையில், தமிழகத்தில் பொதுவினியோக திட்டத்தை சரியாக வைத்துக் கொண்டு நிலைமைய சமாளித்து வருகிறோம் என்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்ளப்பட்டதாக தெரிகிறது. சந்திப்புக்கு பிறகு வெளியில் வந்து நிருபர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி கூறியதாவது:தமிழகத்துக்கு இந்த ஆண்டு 20 ஆயிரத்து 68 கோடி ரூபாய் வரை வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 2,600 கோடி ரூபாய் அதிகம். தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் புதிய மின் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். பொதுவாக எந்தவொரு அரசு போடும் திட்டங்களும் அடுத்து வரும் அரசுக்கு தான் மிகவும் கைகொடுத்து உதவி கரமாக இருக்கும். அந்த வகையில் இப்போது போடப்படும் திட்டங்கள் அடுத்து வரும் அரசுக்கு மிகப்பெரிய துணையாக இருக்கும். அடுத்து வரவுள்ள அரசும் எங்களுடையதாகத்தான் இருக்கும்.சென்னை மெட்ரோ ரயில் குறித்து இந்த ஆலோசனையில் எதுவும் பேசப்படவில்லை. இத்திட்டத்திற்கு ஏற்கனவே 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தவிர இப்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீட்டைத் தவிர கூடுதலாக 150 கோடி ரூபாய் கேட்கப்பட்டுள்ளது.இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்.திட்டக்கமிஷன் துணைத்தலைவர் அலுவாலியா கூறும் போது, "சர்வதேச பொருளாதார மந்தநிலை நிலவியதால் கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆட்டோமொபைல், தோல், சாப்ட்வேர் துறைகள் இந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன."இருப்பினும் இந்த பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து புள்ளிவிவரங்கள் தற்போது கைவசம் இல்லை. மேலும் தமிழகம் தரப்பில் நீர்ப்பாசன திட்டங்களை நிறைய அளவில் தமிழகத்தில் மேற்கொள்ள மத்திய நீர்வள கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. சமூக நலத்திட்டங்கள் செயல்படுத்துவதில் தமிழகம் முதன்மையான மாநிலமாக திகழ்வது பாராட்டுக்குரியது' என்றார்.தென்மாநிலங்களான ஆந்திரா இந்த ஆண்டு நிதிஒதுக்கீடாக 36 ஆயிரத்து 800 கோடி ரூபாய் வரை பெற்றுள்ளது. அதேபோல மற்றொரு அண்டை மாநிலமான கர்நாடகாவோ 33 ஆயிரம் கோடி ரூபாய் பெற்றுள்ளது.தமிழகம் வழக்கம்போல இந்த ஆண்டும் திட்ட ஒதுக்கீட்டில் 20 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவிலேயே பெற்றுள்ளது. இத்தனைக்கும் மத்திய அரசு வழங்கும் நிதியை மற்ற மாநிலங்களை காட்டிலும் முழுவதுமாக செலவு செய்யும் மாநிலமாக திகழ்கிறது. - நமது டில்லி நிருபர் -
இந்தியா
சுரேஷ் கல்மாடி போர்க்கொடி
புதுடில்லி : விளையாட்டு அமைப்புகளின், தலைவர் பதவிக்காலம் தொடர்பான வரையறைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் சுரேஷ் கல்மாடி, தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளின் (என்.எஸ்.எப்.,) தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். தேசிய விளையாட்டு அமைப்புகளில் 12 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகிக்க முடியாது என்ற சட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில் நேற்று முன்தினம் அறிவித்தார். ஆனாலும், தற்போது பொறுப்பில் இருப்பவர்கள் பதவியில் தொடரலாம். இவர்களது பதவி காலம் முடிந்த பின் தான், புதிய நடைமுறை அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது. இதன்படி இந்திய ஒலிம்பிக் சங்க (ஐ.ஓ.ஏ.,) தலைவர் சுரேஷ் கல்மாடி, வில்வித்தை சங்கத் தலைவர் வி.கே.மல்கோத்ரா, சுக்தேவ் திண்ட்சா, கேப்டன் சதிஷ் சர்மா உள்ளிட்ட பலர் மீண்டும் பதவிக்கு வரமுடியாது. எம்.எஸ்.கில்லின் இம்முயற்சிக்கு ஐ.ஓ.ஏ., மற்றும் என்.எஸ்.எப்., தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கல்மாடி கூறியது: காமன்வெல்த் போட்டி துவங்க 150 நாட்கள் தான் உள்ளது. நாங்கள் எல்லோரும் போட்டிகளை சிறப்பாக நடத்துவதற்கு தயாராகி கொண்டிருக்கும் நிலையில், எம்.எஸ்.கில் ஏன் இப்படி செயல்படுகிறார் என, எங்களுக்கு வியப்பாக உள்ளது. இது காமன்வெல்த் ஒருங்கிணைப்புக் குழுவுடன் மத்திய விளையாட்டு அமைச்சகம், பகைமை உணர்வுடன் செயல்படுவதை தெளிவாக காட்டுகிறது. அரசின் முடிவு எங்களுக்கு ஆச்சரியம் அளிக்கிறது. இது நாட்டுக்கு நல்லதல்ல. இது ஒரு கொடூரமான உத்தரவு. விளையாட்டு அமைப்புகளின்சுதந்திரமான செயல்பாடுகளுக்கு சவால் விடும் வகையிலான, ஆணவத்துடன் கூடிய சட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம். இதிலிருந்து எங்களை காத்துக்கொள்ள, தேவையான நடவடிக்கை எடுப்போம்.இதிலிருந்து எப்போதும் பின்வாங்கப் போவதில்லை. இவ்வாறு கல்மாடி தெரிவித்தார்.
இந்தியா
சிருங்கேரி பாரதி தீர்த்த சுவாமிகள் காலடிக்கு மே 7ம் தேதி வருகை
காலடி : கேரள மாநிலம் காலடியில் சிருங்கேரி பாரதி தீர்த்த மகாசுவாமிகள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக வரும் 7ம் தேதி அவர் வருகிறார். ஆதிசங்கரர் அத்வைத மதத்தை பரப்ப துவாரகையில் காளிகாபீடம், மேற்கில் பூரியில் கோவர்த்தன பீடம், வடக்கில் பத்ரியில் ஜ்யோதிஷ் பீடம், தெற்கில் சிருங்கேரியில் சாரதா பீடத்தை ஏற்படுத்தினார். காலடி சிருங்கேரி பீடத்தில் 33வது பீடாதிபதி சச்சிதானந்த சிவாபிநவ நரசிம்ம பாரதிசுவாமிகளால் சாரதாம்பாள், சங்கரர் கோவில்களுக்கு 1910ல் கும்பாபிஷேகம் நடந்தது. அதன் நூற்றாண்டு நிகழ்ச்சியை முன்னிட்டு வரும் 14 முதல் 18ம் தேதி வரை சங்கரஜெயந்தி, 19ம் தேதி லட்ச மோதக கணபதி ஹோமம், 20 முதல் 31ம் தேதி வரை அதிருத்ர மகாயாகம், 23ம் தேதி சாரதாம்பாள், சங்கரர் கோவில்களுக்கு கும்பாபிஷேகம், 24 முதல் 28ம் தேதி வரை சத சண்டி மகாயாகம் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இந்நிகழ்ச்சிகள், பாரதி தீர்த்த சுவாமிகள் முன்னிலையில் நடக்கின்றன. சுவாமிகளுக்கு நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில், திருவாங்கூர் மகாராஜா, மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்தியா
திருப்பதி தேவஸ்தான திட்டங்களுக்கு பக்தர்கள் நன்கொடை
நகரி : திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு, மராத்திய மாநிலம் புனே நகரைச் சேர்ந்த, சாப்ட்டெக் புராஜக்ட் நிறுவனம் சார்பில், (1,01,11,111) ஒரு கோடியே ஒரு லட்சத்து பதினோறாயிரத்து நூற்றி பதினோரு ரூபாய்க்கான டிராப்டை நன்கொடையாக வழங்கினர். திருமலையில் நேற்று முன்தினம், (ஞாயிறு) தேவஸ்தான சிறப்பு நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டியை சந்தித்த, இந்நிறுவனத்தின் பிரதிநிதிகள், தேவஸ்தானம் சார்பில் செயல்படுத்தப்பட்டுவரும், உயிர் காக்கும் திட்டத்திற்கு இத்தொகையை டிபாசிட் செய்யும் படி கோரினர். நன்கொடையாளர்களுக்கு, சுவாமி தரிசன ஏற்பாடுகளை, தேவஸ்தான அதிகாரிகள் பாராட்டு தெரிவித்து, கோவில் பிரசாதங்களை வழங்கினர். 1 கிலோ தங்கம் காணிக்கை: டில்லியைச் சேர்ந்த ஜே.பி.இன்டஸ்ட்ரீஸ் சார்பில் அதன் உரிமையாளர் மனோஜி கவுர் திருமலை கோவிலின் ஆனந்த நிலைய விமான கோபுர தங்கமயம் திட்டத்திற்கு, ஒரு கிலோ தங்கத்தை அதிகாரிகளிடம் காணிக்கையாக வழங்கினார். திருமலையில் நேற்று முன்தினம் நடந்த இந்நிகழ்ச்சியில், தேவஸ்தான போர்டின் சேர்மன் ஆதிகேசவலு நாயுடுவும் கலந்துக்கொண்டார். திருப்பதி வெங்கடேச பெருமானை தரிசிக்க, திருமலையில் குவிந்துள்ள பக்தர்களின் துரித தரிசன வசதிக்காக, 22 மணிநேரம் தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம், (ஞாயிறு) அதிகாலை 2 மணி வரை கோவில் மூலஸ்தானம் (சனிக்கிழமை அன்று நள்ளிரவுக்கு பின்) திறக்கப்பட்டிருந்தது. பின், மூலவரான வெங்கடேச பெருமானுக்கு ஏகாந்தசேவை நடத்தப்பட்டது. பின், கோவில் நடை சாத்தப் பட்டப்பின், ஒரு மணி நேரத்திற்குள் மீண்டும் ஐதீக முறைப்படி அதிகாலை சுப்ரபாத சேவை நடத்தப்பட்டது. பின் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நேற்று(திங்கள்) இரவு நிலவரப்படி திருமலையில் பக்தர் கூட்டம் ஓரளவிற்கு குறைந்து காணப்பட்டது. கோவில் உண்டியல் நேற்று முன்தினம் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் ஒரு கோடியே 45 லட்ச ரூபாய் வசூலானதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியா
திருப்பதி தரிசனம் : ரோசய்யா கண்டிப்பு
ஐதராபாத் : பொது தரிசனம் செய்ய வருபவர்களை, அதிக சிரமத்துக்கு உள்ளாகாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என திருப்பதி திருமலை தேவஸ்தான அதிகாரிகளை ஆந்திர முதல்வர் ரோசய்யா கேட்டு கொண்டுள்ளார். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. இதனால், பொது தரிசனத்துக்காக மக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இது குறித்து தகவல் அறிந்த முதல்வர் ரோசய்யா, "வி.ஐ.பி.,க்களுக்கு அதிக முக்கியத்துவம் தராமல் பொது தரிசனம் செய்யும் பக்தர்களின் நலனில் அதிக அக்கறை எடுத்து கொள்ள வேண்டும். பொது தரிசனத்துக்காக, மக்கள் காத்திருக்கும் வைகுண்ட வரிசை வளாகத்தில் சுத்தமான தண்ணீர் 24 மணி நேரமும் சப்ளை செய்யப்பட வேண்டும். குறிப்பாக முதியோர், பெண்கள், குழந்தைகள், ஊனமுற்றோர் விஷயத்தில் அதிகாரிகள் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.பாதுகாப்பு விஷயத்திலும் காவலர்கள் அதிக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
தமிழகம்
பி.இ - பி.டெக்., விண்ணப்ப விற்பனை துவக்கம்
சென்னை : பி.இ., - பி.டெக்., உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விற்பனை நேற்று துவங்கியது. அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகளில் இந்த ஆண்டு, சிவில், மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளில் தமிழ் பயிற்று மொழி வகுப்புகள் துவக்கப்படுவதன் மூலம் 1,800 இடங்கள் கூடுதலாக கிடைக்கும். தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகங்கள் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் 100 சதவீத இடங்களும், அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் 80 சதவீத இடங்கள், சிறுபான்மை தனியார் பொறியியல் கல்லூரிகளில் 50 சதவீத இடங்கள், சிறுபான்மை அல்லாத தனியார் பொறியியல் கல்லூரிகளில் 65 சதவீத இடங்கள் அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்படுகின்றன. இதற்கான கவுன்சிலிங், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடக்கவுள்ளது. தமிழகத்தில் தற்போது 454 பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 250 இடங்கள் உள்ளன. இதில், அண்ணா பல்கலைக் கழகங்களில் 5,920 இடங்கள், அரசு கல்லூரிகளில் 2,825 இடங்கள், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 1,544 இடங்கள், சிறுபான்மை அல்லாத தனியார் கல்லூரிகளில் 75 ஆயிரத்து 608 இடங்கள், சிறுபான்மை தனியார் கல்லூரிகளில் 22 ஆயிரத்து 128 இடங்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 8,025 இடங்கள் அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்படுகின்றன. பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான விண்ணப்பங்கள் விற்பனை நேற்று துவங்கியது. விண்ணப்பங்கள் விற்பனையை துவக்கி வைத்த சென்னை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர், நிருபர்களிடம் கூறியதாவது: பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் 58 மையங்களில் வழங்கப்படுகின்றன. விண்ணப்பத்தை பெற நேற்று காலை 4 மணிக்கே சென்னை அண்ணா பல்கலைக் கழகத்திற்கு மாணவர்கள் வரத் துவங்கி விட்டனர். இம்மாணவர்களுக்கு, நேற்று காலை 6 மணி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகளில், மெக்கானிக்கல் மற்றும் சிவில் பிரிவுகளில் தமிழ் பயிற்று மொழி வகுப்புகள் துவக்கப்படுகின்றன. மெக்கானிக்கல் பிரிவில் 900 இடங்கள், சிவில் பிரிவில் 900 இடங்கள் என மொத்தம் 1,800 இடங்கள் இதன்மூலம் கூடுதலாக கிடைக்கும். தமிழில் பாடப்புத்தகங்கள் இம்மாத இறுதியில் தயாராகிவிடும். ஆசிரியர்களும், மாணவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு சில வார்த்தைகள் ஆங்கிலத்திலும் இடம்பெறும். இந்த ஆண்டு புதிதாக பொறியியல் கல்லூரிகள் துவங்க, 50 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதன்மூலம் 12 ஆயிரம் இடங்கள் கூடுதலாக கிடைக்கலாம். இவ்வாறு மன்னர் ஜவகர் கூறினார் பொறியியல் படிப்பில் சேர, பிளஸ் 2வில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் சராசரியாக குறிப்பிட்ட அளவு மதிப்பெண் பெற வேண்டும். பொதுப்பிரிவு மாணவர்கள் பிளஸ் 2வில் 55 சதவீதம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் 50 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 45 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., - எஸ்.சி., அருந்ததியினர் மற்றும் எஸ்.டி., பிரிவினர் பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். பொதுப்பிரிவினருக்கு 31 சதவீதம், பிற்படுத்தப்பட்டோருக்கு 26.50 சதவீதம், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 3.50 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம், எஸ்.சி., பிரிவினருக்கு 15 சதவீதம், எஸ்.சி., அருந்ததியினருக்கு 3 சதவீதம், எஸ்.டி., பிரிவினருக்கு 1 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு 150 இடங்கள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 10 இடங்கள், விளையாட்டு வீரர்களுக்கு 100 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. உடல் ஊனமுற்றோருக்கு மொத்த இடங்களில் 3 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. பிளஸ் 2வில் தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்கு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 100 இடங்களும், தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 4 சதவீத இடங்களும் ஒதுக்கப்படுகின்றன. இம்மாதம் 29ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மே 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஜூன் 15ம் தேதி, "ரேண்டம்' எண் வழங்கப்பட்டு, ஜூன் 18ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். ஜூன் 28ம் தேதி முதல் ஜூலை 25ம் தேதி வரை பொறியியல் கவுன்சிலிங் நடைபெறும். 57 ஆயிரம் விண்ணப்பம் விற்பனை: பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் விற்பனை துவங்கிய முதல் நாளில், 57 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் விண்ணப்பங்களை பெற்றனர். பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் விற்பனை நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்றே மாணவர்கள் ஆர்வமுடன் வந்து விண்ணப்பங்களை பெற்றுச் சென்றனர். பிளஸ் 2 முடிவு இன்னும் வெளியிடப்படாத நிலையிலேயே விண்ணப்பங்களை பெற மாணவர்கள் ஆர்வம் காட்டினர். தமிழகம் முழுவதும் 58 மையங்களில் பொறியியல் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று மாலை 4 மணி நிலவரப்படி, மொத்தம் 57 ஆயிரத்து 549 விண்ணப்பங்கள் விற்பனையாயின. மூன்று கல்லூரிகளுக்கு "கல்தா!' கடந்த ஆண்டுகளில் பொறியியல் கவுன்சிலிங்கில் இடம்பெற்றிருந்த கல்லூரிகளில், ஜே.ஏ., இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி, பி.எம்.ஆர்., இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஜி.ஜி.ஆர்., காலேஜ் ஆப் இன்ஜினியரிங் ஆகிய மூன்று தனியார் பொறியியல் கல்லூரிகள் இந்த ஆண்டு பொறியியல் கவுன்சிலிங்கில் சேர்க்கப்படவில்லை. இதுகுறித்து துணைவேந்தர் மன்னர் ஜவகரிடம் கேட்டபோது, ""குறிப்பிட்ட மூன்று கல்லூரிகள் இந்த ஆண்டு பொறியியல் கவுன்சிலிங்கில் சேர்க்கப்படவில்லை. இக்கல்லூரிகள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் மறு ஆய்வு நடத்தப்படவுள்ளது. அந்த ஆய்வில் கல்லூரிகள் தகுதி பெற்றால், அக்கல்லூரிகள் கவுன்சிலிங்கில் சேர்க்கப்படலாம்,'' என்றார். இதேபோல, வி.கே.கே.விஜயன் பொறியியல் கல்லூரியிலும், இரண்டு பாடப்பிரிவுகள் மட்டுமே இந்த ஆண்டு பொறியியல் கவுன்சிலிங்கில் சேர்க்கப்பட்டுள்ளன.
தமிழகம்
நெல்லையில் கோடை மழை : குற்றால அருவிகளில் தண்ணீர்
திருநெல்வேலி : நெல்லையில் நேற்றும் பலத்த மழை பெய்தது. குற்றால அருவிகளில் தண்ணீர் விழுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகல்நேர வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், அவ்வப்போது கோடைமழையும் பெய்துவருகிறது. நேற்றும் பிற்பகல் 3.30 மணியளவில் இடி, மின்னலுடன் பெய்யத்துவங்கிய மழை ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நீடித்தது. மாவட்டம் முழுவதும் லேசான மழை பதிவாகியது. நேற்று முன்தினம் இரவிலும், நேற்று காலையிலும் நெல்லை மாவட்டத்தின் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்தது. இதனால், வறண்டு கிடந்த குற்றால அருவிகளில் நேற்று தண்ணீர் விழுந்தது. மெயின் அருவியில் குளிக்கும் அளவுக்கு தண்ணீர் விழுந்தது. ஐந்தருவி, பழைய குற்றாலத்திலும் லேசாக தண்ணீர் எட்டிப்பார்த்தது. குற்றாலம் சீசன் ஆண்டுதோறும் ஜூனில்தான் துவங்கும். தற்போது பெய்துள்ளது கோடை மழை என்பதால், குற்றால அருவிகளில் விழும் தண்ணீர் தற்காலிகமானதுதான். இதே போல கோடைமழை நீடித்தால் நெல்லை மாவட்ட மக்கள் நாளை முதல், வாட்டி வதைக்க உள்ள அக்னி நட்சத்திர வெயிலில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும்.
தமிழகம்
சென்னை ஏர்போர்ட்டிற்கு பலத்த பாதுகாப்பு
சென்னை: பயங்கரவாதிகள் தாக்குதல் எச்சரிக்கையை தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பயங்கரவாதிகள் டில்லியில் தாக்குதல் நடத்தலாம் என்று எச்சரிக்கை விடப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. பஸ், ரயில் நிலையங்கள், விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பயணிகள், பார்வையாளர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். பேக்கேஜ்கள் இரண்டு அடுக்கு முறையில் சோதனையிடப்படுகின்றன. கேட்பாரற்ற பொருட்கள் குறித்து, அதிக கவனம் செலுத்தப்படுகிறது. வாகனங்கள் பலத்த சோதனைக்கு பின்னரே, விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன. துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படை வீரர்கள் விமான நிலையத்தின் பல இடங்களிலும், தொடர்ந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகம்
நூல் விலை: எதிர்பார்த்தது 10; குறைந்தது 2 : தொழில்துறை கடும் அதிருப்தி
திருப்பூர் : மத்திய அரசு பரிந்துரைப்படி, காட்டன் ஒசைரி நூல் விலையில் ஐந்து ரூபாய் குறைந்துள்ளது. அதிகம் பயன்படுத்தப்படும் 30ம் நம்பர் நூலுக்கு இரண்டு ரூபாய் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. "டியூட்டி டிராபேக்' ரத்தான பிறகும், நூல் விலையில் ஆரோக்கியமான மாற்றம் ஏற்படாதது தொழில் துறையினரை மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பனியன் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் காட்டன் ஒசைரி நூல் விலை கடந்த சில மாதங்களில் கிலோவுக்கு 40 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் மாத நிலவரப்படி, ஒருகேண்டி (356 கிலோ) பஞ்சு 28 ஆயிரம் ரூபாயாக இருந்தது. நூல் விலை 165 ரூபாயாக இருந்தது. இனியும் நூல் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்ற நம்பிக்கையில், உற்பத்தி கட்டணம் மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டது. நம்பிக்கையோடு இருந்த உற்பத்தியாளர்களை, ஏப்.,1ம் தேதி வெளியான நூல் விலை பட்டியல் படாதபாடு படுத்திவிட்டது. ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு விலை உயர்வு ஏற்பட்டிருக்கும் தருணத்தில், மீண்டும் கிலோவுக்கு 17 ரூபாய் உயர்ந்தது பனியன் தொழிலுக்கு முட்டுக்கட்டையாக அமைந்துவிட்டது. இதனால், கடந்த மாதத்தில் மட்டும், உள்நாட்டு வர்த்தக உற்பத்தியில் (25 சதவீதம்) 125 கோடி ரூபாய் அளவிற்கு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசு, நூல் ஏற்றுமதிக்கான ஊக்கத்தொகை 7.67 சதவீதத்தை ரத்துசெய்தது. பருத்தி ஏற்றுமதிக்கு வரி விதித்ததோடு, பதிவு பெற்ற பருத்தியை ஏற்றுமதி செய்யவும் தடை விதித்தது. நூல் ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் நடவடிக்கை எதுவும் இல்லை. மாறாக, நூல் விலையை குறைக்க வேண்டும் என, மத்திய அரசு நூற்பாலைகளை வலியுறுத்தியது. அதன்படி, மே மாதத்தில் இருந்து கிலோவுக்கு ஐந்து ரூபாய் விலை குறைப்பதாக நூற்பாலைகள் ஒப்புக்கொண்டன. அதற்கு பிறகு, உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த மாதம் 30ம் தேதி, நூல் ஏற்றுமதிக்கான 4 சதவீத "டியூட்டி டிராபேக்' ரத்து செய்யப்பட்டது. ஜவுளித்தொழிலின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதால், தொழில்துறையினர் மட்டுமல்லாது, அரசு அதிகாரிகளும் நூல்விலை பட்டியலுக்காக காத்திருந்தனர். நேற்றைய அறிவிப்பில், நூற்பாலைகளின் இறுதி அறிவிப்பு கூட 100 சதவீதம் நிறைவேற்றப்படாததால், உற்பத்தியாளர்கள், "ஜாப்ஒர்க்' நிறுவனங்களின் எதிர்பார்ப்பு புஷ்வானமானது. நேற்றைய அறிவிப்பில், கிலோ 156 ரூபாயாக இருந்த 20ம் நம்பர் நூல், ஐந்து ரூபாய் குறைந்து 151 ரூபாயாக குறைந்துள்ளது. 162 ரூபாயாக இருந்த நூல்விலை, 157 ரூபாயாகவும், 176 ரூபாயாக இருந்த 34ம் நம்பர் நூல் 171 ரூபாயாகவும் குறைந்துள்ளது. கடந்த மாதம் 181 ரூபாயாக இருந்த 40ம் நம்பர் நூல், 176 ரூபாயாகவும் குறைந்துள்ளது. ஆனால், அதிகமாக பயன்படுத்தப்படும் 30ம் நம்பர் நூல் கிலோ 166க்கு விற்கப்பட்டது, 164 ரூபாயாக குறைந்துள்ளது. இரண்டு ரூபாய் மட்டுமே குறைந்துள்ளது. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம்,"காட்டன் ஒசைரி நூலுக்கு கிலோவுக்கு 10 ரூபாய் வரையில் விலையை குறைக்க வேண்டும்' என கேட்டிருந்தது. ஆனால், அனைத்து "கவுன்ட்'களுக்கும் ஐந்து ரூபாய் கூட குறைக்கவில்லை. ஏற்றுமதியாளர்கள் அதிகம் பயன்படுத்தும் 30ம் நம்பர் நூலுக்கு இரண்டு ரூபாய் மட்டுமே விலை குறைந்துள்ளது ஏமாற்றம் அளிப்பதாக தொழில் துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து "சைமா' தலைவர் ஈஸ்வரன் கூறுகையில்,"" கோரிக்கையை ஏற்று, விலையை குறைத்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். அரசு அறிவிப்பால், உடனடியாக பலன் ஏற்பட வாய்ப்பில்லை. ஒருசில நாட்களில் உண்மையான விலை நிலவரம் தெரியவரும். மேலும், விலை குறையும் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறோம்'' என்றார். பின்னலாடை துணி உற்பத்தியாளர் சங்க(நிட்மா) தலைவர் ரத்தினசாமி கூறியது: கடந்த ஏப்., 1ம் தேதி கிலோவுக்கு 17 ரூபாய் உயர்ந்தது. அதில், ஏழு ரூபாயை மட்டுமாவது குறைத்திருக்கலாம். ஆனால், மத்திய அரசுக்கு உறுதியளித்தபடி, அனைத்து "கவுன்ட்'களுக்கும் ஐந்து ரூபாய் கூட குறைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. மத்திய அரசு நூல் ஏற்றுமதியை தடைசெய்யும் வரை, பாதிப்புகளுக்கு நிவாரணம் பெறமுடியாது. நூல் ஏற்றுமதியை தடை செய்தால், அரசிடம் வேறு கோரிக்கை வைக்க வேண்டிய தேவையில்லை. தானகாவே, நூல் நிலை நியாயமான அளவுக்கு வந்துவிடும், என்றார். திருப்பூர் தொழில் கூட்டமைப்பு (டிப்) தலைவர் மணி கூறுகையில்,""இந்த விலை குறைப்பு பெயரளவிற்கு மட்டுமே நடந்துள்ளது. முழுமையாக நூல் விலை குறையாதது அனைருக்கும் ஏமாற்றம் அளிக்கிறது. தற்போதுள்ள நெருக்கடி நிலையை சமாளிக்கும் வகையில், நூல் ஏற்றுமதிக்கு தடைவிதித்தால் மட்டுமே, பனியன் தொழிலை காப்பாற்ற முடியும்'' என்றார்.
தமிழகம்
டி.ஜி.பி., இன்று சாத்தூர் வருகை
மதுரை : விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஓ.மேட்டுப்பட்டியில், பணியில் இருந்த போலீஸ் ஏட்டு நாகரத்தினத்தை(38), ஏப்.,27ல் ரவுடி குமார் வெட்டி கொலை செய்தார். இரு நாட்களுக்கு பின், குமார் போலீஸ் "என்கவுன்டரில்' சுட்டுக் கொல்லப்பட்டார். நாகரத்தினம் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்குவதற்காக, இன்று மதியம் டி.ஜி.பி., லத்திகாசரண் சாத்தூர் வருகிறார்.
தமிழகம்
பாம்பன் பாலத்தை கடந்து சென்ற கப்பல்கள்
ராமேஸ்வரம் : கோவா மாநிலம் பானாஜி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட ஷோகோமி-3, எம்.வி.ஜூபிலி-5, எம்.வி.ஜூபிலி-6 என மூன்று சரக்கு ஏற்றும் மிதவைக்கப்பல்கள், ஒரு இழுவைக்கப்பல் என நான்கு கப்பல்கள் நேற்று முன்தினம் பாம்பன் கடல் பகுதிக்கு வந்தன. பாம்பன் துறைமுக அதிகாரிகளின் அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, நேற்று காலை 11 மணிக்கு கப்பல்கள் பாம்பன் பாலத்தை கடந்து, கோல்கட்டா நோக்கி சென்றன. இதற்காக தூக்குபாலம் திறக்கப்பட்டு, கப்பல்கள் ஒன்றன் பின் ஒன்றாக பாக்ஜலசந்தி கடல் வழியாக சென்றதை, ரோடு பாலத்தில் நின்ற ஏராளமான சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.
தமிழகம்
காஞ்சியில் சிறப்பு ஹோமம் : மாஜி பிரதமர் பங்கேற்பு
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு ஹோமத்தில் மாஜி பிரதமர் தேவகவுடா கலந்து கொண்டார். மாஜி பிரதமரான கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தேவகவுடா நேற்றுமுன்தினம் மாலை காஞ்சிபுரம் வந்தார். காமாட்சியம்மன் கோவில் மற்றும் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சென்று சுவாமியை வழிபட்டார். நேற்று காலை வரதராஜப் பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள சக்கரத்தாழ்வார் சன்னதியில் ஸ்ரீசுதர்சன ஹோமம் நடந்தது. இதில் தேவகவுடா கலந்து கொண்டார். ஆயுள் விருத்திக்காகவும், நினைத்த காரியம் வெற்றி பெறவும் சுதர்சன ஹோமம் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஹோமத்தை புகைப்படம் எடுக்க தேவகவுடா மற்றும் அவருடன் வந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஹோமம் முடிந்த பின் தேவகவுடா புறப்பட்டு சென்றார்.
தமிழகம்
கொலை செய்யப்பட்ட போலீஸ்காரரின் குடும்பத்துக்கு இன்று டி.ஜி.பி., நிதி உதவி
விருதுநகர் : சாத்தூர் அருகே கொலை செய்யப்பட்ட போலீஸ்காரர் நாகரத்தினத்தின் குடும்பத்துக்கு டி.ஜி.பி. லத்திகா சரண் இன்று நிதி உதவி வழங்குகிறார். சிவகாசி பாரதி காலனியைச் சார்ந்தவர் நாகரத்தினம்(38). சாத்தூர் தாலுகா போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவர் ஓ. மேட்டுப்பட்டியில் நடந்த காளியம்மன் கோயில் பொங்கல் திருவிழா பாதுகாப்பு பணிக்கு ஏப்., 27ம் தேதி சென்றிருந்தார். உள்ளூரில் ஒருவருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அதே ஊரைச் சேர்ந்த ரவுடி குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த குமார், நாகரத்தினத்தை வெட்டிக் கொலை செய்தார். நிதி உதவி: அரசின் சார்பில் 7 லட்ச ரூபாய், விருதுநகர் மற்றும் மதுரை மாவட்ட போலீசார் சார்பில் 11 லட்ச ரூபாயை டி.ஜி.பி., லத்திகா சரண், நாகரத்தினத்தின் குடும்பத்துக்கு இன்று மாலை வழங்குகிறார்.
தமிழகம்
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிய பின் கவுன்சிலிங் நிபந்தனை
திண்டுக்கல் : அனைவருக்கும் கல்வி திட்டத்தில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை வழங்கிய பின்பே கவுன்சிலிங்கை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இக்கூட்டமைப்பு செயற் குழு கூட்டம் மாவட்ட செயலாளர் ஜோசப் சேவியர் தலைமையில் நடந்தது. மாநில பொது செயலாளர் பேட்ரிக்ரெய்மாண்ட், துணைத்தலைவர் பாபு உட்பட பலர் பங்கேற்றனர். அனைவருக்கும் கல்வி திட்டத்தில் உள்ள நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை வழங்கிய பின்பே கவுன்சிலிங் நடத்த வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியத்தில் அதிக மார்க் பெற்று முதலில் தேர்வானவர்கள் தொடக்க கல்வித்துறையிலும், குறைந்த மார்க் பெற்று இரண்டாவது பட்டியலில் தேர்வானவர்கள் ஆசிரியர் பயிற்றுநர்களாக பள்ளிக் கல்வித்துறையிலும் பணியாற்றுகின்றனர். எனவே ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு சிறப்பு அரசாணை மூலம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படுவது போல் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழகம்
நித்யானந்தாவை வைத்து ஒட்டுமொத்த சன்னியாசிகளை குறை கூற முடியாது
நாகர்கோவில் : நித்யானந்தாவை வைத்து ஒட்டுமொத்த சன்னியாசிகளையும் குறை கூறக்கூடாது என்று ராஷ்டிரிய சேவிகா தலைவி பிரமிளாமேடே கூறினார். நாகர்கோவிலில் பெண் களுக்கான பண்பாட்டு பயிற்சி முகாமை துவக்கி வைத்த பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பெண்களுக்கான பண் பாட்டு பயிற்சி முகாம் 1971 முதல் இந்தியா முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நாட்டின் பண்பாடு, கலாசாரம், புராணங்களின் வரும் பெண்களின் கதைகள், சாதனைகள் எடுத்து சொல்லப்படும். சென்னையில் நாளை இந்த முகாம் நடைபெறுகிறது. நித்யானந்தா விவகாரத்தை பொறுத்தவரை அந்த சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. சன்னியாசம் என்பது புனிதமானது. இது போன்ற சம்பவங்களுக்காக ஒட்டு மொத்த சன்னியாசிகளையும் குறை கூற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியா
வாழ நினைத்தால் வாழலாம் : வழிகாட்டும் ராதாகிருஷ்ணன்
திருவனந்தபுரம் : சாதாரண தலைவலி வந்தாலே அலுத்து சலித் துப் போகிறோம் நாம். நம்மால் நடமாடவே முடியாமல் போனால்...? நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு  நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர், "தடைக்கல்லும் எனக்கொரு படிக்கல்தான்' என்று நிரூபித்திருக்கிறார்.மத்திய கப்பல் துறையில் பணியாற்றிய போது, ராதாகிருஷ்ணனுக்கு(57) வயது 25. அப்போதுதான் அவர் கை நிறைய சம்பாதிக்க ஆரம்பித்தார். இள மையின் கனவுகளில் ஊஞ்சலாட வேண்டிய அவரது  வாழ்க்கையில் விதி வேறு விதமாக குறுக்கிட்டது. தசைகளைக் கட்டுப்படுத்த வேண்டிய மூளையிலுள்ள நரம்புகள் செயலிழந்து போயின. "மோட்டார் நியூரான்' என்ற நரம்புகள், நம் உடலிலுள்ள தசைகளின் இயக் கத்தைக் கட்டுப்படுத்துகின்றன. இவை செயலிழந்தால் தசைகள் சுருங்க ஆரம்பித்துவிடும். நம் இயக்கம் தடைப்பட்டு விடும். பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்தான்."ஹாக்கிங் ஒரு வகையில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர் என்று கூறலாம். எனது அதிர் ஷ்டம், தசைச் சுருக்கம், ஐந்து - ஆறு ஆண்டுகளுக்கு மட்டுமே இருந்தது. அதன் பின் நின்று விட்டது' என்கிறார் ராதாகிருஷ்ணன்.இவரை சோதித்த டாக்டர்கள், இன்னும் ஐந்து ஆண்டுகள் உயிருடன் இருந்தால் அதிசயம் என்று கூறியது 1977ல். அதன் பின், 1983ல் பிரபல ஆயுர்வேத மருத்துவமனையில் சேர்ந்து ஓரளவு குணமடைந்தார்.நோயின் காரணமாக வேலையை விட்டவர், கேரளா பல்கலைக்கழகத் தில் கிளார்க்காக சேர்ந்தார். அங்கு கணித்துறைப் பேராசிரியர் நம்பூதிரி, கணித்துறை மற்றும் அறிவியல் துறையில் ஆவணங்களை தட்டச்சு செய்யும், "டெக்' என்ற முறையை இவருக்குக் கற்றுக் கொடுத்தார். அதில் தேறிய பின், பல்வேறு பத்திரிகைகளுக்கு அதைச் செய்து கொடுத்தார்.  வங்கியில் கடன் வாங்கி சொந்தமாக வீடு கட்டினார். கடனுக்கான வட்டி கட்டுவதற்கு வாங்கிய சம்பளம் போதாததால், "டெக்'கை வியாபார ரீதியில் வளமாக்கத் துணிந்தார். இவரது சகோதரர்களின் உதவியுடன் 1994ல் "ரிவர் வேலி டெக்னாலஜிஸ்' என்ற நிறுவனத்தைத் துவக்கினார். ஈரானைச் சேர்ந்த கவேஹ் பஜர்கன் என்பவர் இவரது பங்குதாரர் ஆனார்.அதன்பின், சர்வதேச அளவில் அறிவியல் பத்திரிகைகளைத் தயாரிக்கும் பணி இவருக்குக் கிடைத் தது. இன்று ஆண்டுக்கு ஏழு கோடி ரூபாய் வருமானம் தரும் நிறுவனத்தின் சொந்தக்காரர் ராதாகிருஷ்ணன். 130 ஊழியர்கள் அந்நிறுவனத்தில் வேலை பார்க்கின்றனர். காலை 10 மணிக்கு முன்பாக எந்நேரத்திலும் வரலாம். எட்டு மணி நேரம் வேலை முடித்துப் போகலாம். சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே அலுவலகத்தில் வலம் வருவார். தனக்கு என்று தனியாக அறை அமைத்துக் கொள்ளாமல் ஊழியர்களுடன் இருப்பது இவரது எளிமைக் குணம்."என்நோயை மறைத்து திருமணம் செய்து கொள்ள நான் விரும்பவில்லை' என்ற இவர், இவரது நிறுவனத்தில் வேலை பார்க்கும் வித்யா என்பவரை ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.இவரது நிறுவனம் வெற்றி பெற மற்றொரு காரணம், மென்பொருளை இவர் இலவசமாக வழங்குவதுதான். திருவனந்தபுரத்திலிருந்து 10 கி.மீ., தொலைவில் உள்ள மலையின்கீழ் என்ற இடத்தில் இவரது "ரிவர் வேலி டெக்' நிறுவனம் இவரைப் போலவே கம்பீரமாக எழுந்து நிற்கிறது.
தமிழகம்
எங்கே போயிற்று மனிதாபிமானம் : நடுத்தெருவில் திக்கற்ற முதியவர்
மதுரை : ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என பாராட்டி, சீராட்டி வளர்த்த மகனும் கைவிட, முதியோர் இல்லமும் வெளியே துரத்த, மதுரையில் வானமே கூரையாக பிளாட்பாரத்தில் வாழ்நாளை எண்ணிக் கொண்டிருக்கிறார் கந்தசாமி (84). ""வீடுவரை உறவு, வீதிவரை மனைவி, காடுவரை பிள்ளை, கடைசிவரை யாரோ...?'' என்ற பழைய பாடல் குடும்ப வாழ்க்கையில் உறவுகளின் நிலையை பிரதிபலிக்கிறது. இப்பாடல் ஒலிக்கத் துவங்கி 40 ஆண்டுகளுக்கு மேலானாலும், இன்றைய நவநாகரீக அவசர உலகிற்கு இன்னமும் பொருந்துகிறது. இதற்கு ஒரு உதாரணம், மதுரை தெற்கு வாசலை சேர்ந்த கந்தசாமி. நகை தயாரிப்பு தொழிலாளியாக இருந்தவர். இவரது ஒரே மகன் மாரியப்பன் (33); திருமணமானவர். நகை தயாரிப்பு தொழிலாளியாக திருப்பதியில் வேலை பார்க்கிறார்.நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில் நனைந்தபடி, இரவு விடிய, விடிய குட்ஷெட் தெரு அருகே நடுங்கியவாறு, கேட்பாரற்று முனங்கியவாறு கிடந்தார் கந்தசாமி. வெயில், மழைக்கு பாதுகாப்பாக இருக்கும் எனக்கருதி, நேற்று காலை குட்ஷெட் தெருவை சேர்ந்த சிலர் மதுரா கோட்ஸ் மேம்பாலத்தின் கீழ் எம்.எல்.டபிள்யூ.ஏ., மேல்நிலைப்பள்ளி வாசல் முன் அமர வைத்தனர். கந்தசாமி கூறியதாவது: எனது மனைவி சரஸ்வதி, நான்கு மாதங்களுக்கு முன் இறந்தார். என்னை பராமரிக்க யாரும் இல்லாததால், மதுரை பைகாராவிலுள்ள ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில், மாரியப்பன் சேர்த்து விட்டார். மாதம் 1200 ரூபாய் பராமரிப்புக் கட்டணம் வசூலித்தனர். மூன்று மாதங்களுக்கு முன் எனக்கு இருமல் ஏற்பட்டது. நோயை குணமாக்கிவிட்டு வாருங்கள் எனக்கூறி வெளியேற்றினர். நான் சிகிச்சைக்குப்பின், மீண்டும் முதியோர் இல்லத்திற்கு சென்றேன். என்னை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். அன்று இரவு, "கேட்' முன் தூங்கினேன். மறுநாள் அங்கிருந்து டவுன் பஸ்சில், மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் வந்தேன். பிளாட்பாரங்களில் நாட்களை நகர்த்தி வந்தேன். எனது மகனின் முகவரி, மொபைல்போன் எண் தெரியாது.இவ்வாறு கந்தசாமி கூறினார். உறவினர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மனது வைத்தால் கந்தசாமிக்கு விடிவு பிறக்கும். முன்வருவார்களா?
தமிழகம்
டில்லி தமிழர்கள் வீடுகள் இடிப்பு : முதல்வர் தலையிட கோரிக்கை
டில்லியில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்த வீடுகள் மற்றும் உடைமைகள் இடிக்கப்பட்டுள்ள பிரச்னையில் தலையிட்டு உரிய நடவடிக்கை மற்றும் நிவாரண உதவிகளை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.தெற்கு டில்லியில் அமைந்துள்ள ஜன்ங்புரா என்ற இடத்தில் மதராஸி கேம்ப் என்ற பகுதி உள்ளது. 1978ம் ஆண்டு முதல் இங்கு 350க்கும் மேற்பட்ட தமிழர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. குடிசைவீடு, காரைவீடு மற்றும் ஓட்டு வீடு என அமைத்து மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு என பெற்று வசித்துவந்தனர்.மிகவும் பரிதாபகரமான நிலையில் இவர்கள் வாழ்க்கை இருந்து வரும் நிலையில், குடியிருக்கும் வீட்டைத் தவிர வேறு எந்த சொத்துக்களும் இவர்களுக்கு இல்லை. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 15ம் தேதி, டில்லி நகரை அழகுபடுத்தும் நடவடிக்கையாகக் கூறி, வேறு எந்த மாற்று ஏற்பாடுகளும் செய்திடாமல், அனைத்து குடியிருப்புகளும் இடித்து தள்ளப்பட்டுவிட்டன.வேறு மாற்று இடம் இல்லாத நிலையில், வெயில், மழை என்று பாராமல் அங்கேயே வெட்டவெளி பொட்டலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இருந்து வருகின்றனர். இது குறித்த செய்திகள் உள்ளூர் தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளில் வெளிவந்தன.இந்நிலையில், இப்பிரச்னையில் தலையிட்டு உதவிடும்படி தமிழக முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. டில்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்தபோது முதல்வரை தென்காசி லோக்சபா தொகுதி எம்.பி., லிங்கம் நேரில் சந்தித்து இதுகுறித்த பிரச்னையை விளக்கி, மனுவையும் அளித்தார்.அதில், "தமிழர்கள் வீடுகள் இடிக்கப்பட்ட சம்பவத்தை மத்திய அரசு மற்றும் டில்லி மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். "பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கி அதே இடத்தில் அவர்களை குடியமர்த்திடவும், இல்லையெனில் மாநகராட்சி எல்லைக்குள் மாற்று ஏற்பாடுகள் செய்து தந்திட டில்லி மாநில அரசை வலியுறுத்த வேண்டும்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. - நமது டில்லி நிருபர்
தமிழகம்
உள்நாட்டு நீர் வழி போக்குவரத்து திட்டங்களுக்கு திட்ட கமிஷன் கைவிரிப்பு:
ஆறு புதிய தேசிய உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்து திட்டங்களுக்கு  திட்டக் கமிஷன் அங்கீகாரம் அளிக்காததால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு பெரும் நன்மை விளைவிக்கும் காக்கிநாடா-புதுச்சேரி நீர் வழிப் போக்குவரத்து திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக சாலை மற்றும் ரயில் போக்குவரத்தை மேம்படுத்தும் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், அதிகமான ஆறுகளை கொண்ட இந்த நாட்டில் இதுவரை நீர் வழிப்போக்குவரத்து பயன்படுத்தாமல் இருக்கிறது. இன்றைய நிலையில், இந்தியாவில் 5 ஆயிரத்து 200 கி.மீ., தூரத்திற்கு ஆறுகளிலும், 4 ஆயிரம் கி.மீ., தூரத்திற்கு கால்வாய்களிலும் என மொத்தம் 14 ஆயிரத்து 500 கி.மீ., நீளத்திற்கு கப்பல்கள், படகுகள் உள்ளிட்டவைகளை கொண்டு நீர்வழி பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது, இது மிகவும் குறைவு. தற்போது அமெரிக்காவில் 21 சதவீத சரக்குகள் நீர்வழியாக அனுப்பப்படுகிறது. ஆனால், இந்தியாவில்  0.1 சதவீத சரக்குகள் மட்டுமே நீர் வழிப் போக்குவரத்து மூலம் கொண்டு செல்லப்படுகிறது.இதை கருத்தில் கொண்டு, உள்நாட்டு நீர் வழிப் போக்குவரத்தை மேம்படுத்த இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையம் என்ற அமைப்பு கடந்த 1986ம் ஆண்டு, உத்தரபிரதேசத்தில் உள்ள நொய்டாவை தலைமையகமாக கொண்டு துவக்கப்பட்டது. இந்தியாவில் நீர்வழி போக்குவரத்திற்கென சட்டப்படி அமைக்கப்பட்ட வாரியம் இது. இதன் மண்டல அலுவலகங்கள் பாட்னா, கோல்கட்டா, கவுஹாத்தி, கொச்சி ஆகிய இடங்களிலும், துணை அலுவலகங்கள் அலகாபாத், வாரணாசி, பகல்பூர், பராக்கா மற்றும் கொல்லம் ஆகிய இடங்களில்  உள்ளன.இந்திய உள்நாட்டு நீர் வழி ஆணையம், நாட்டில் உள்ள ஆறுகள், கால்வாய்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, ஆறு புதிய நீர் வழி போக்குவரத்து திட்டங்களை வடிவமைத்தது. நாட்டில் உள்ள ஆறுகள், கால்வாய்கள், உப்பங்கழிகள், நீரோடைகள் ஆகியவற்றை பயன்படுத்தி இந்த  உள்நாட்டு நீர்வழிகளை போக்குவரத்து திட்டங்கள் உருவாக்கப்பட்டன. தேசிய நீர்வழிப்பாதை-1: இது அலகாபாத்-ஹால்டா இடையே கங்கை, பாகீரதி, ஹூக்ளி ஆகிய ஆறுகளிடையேயான ஆயிரத்து 620 கி.மீ., நீளத்திற்கான திட்டம். தேசிய நீர்வழிப்பாதை-2: இது சாடியா-துப்ரி இடையே பிரம்மபுத்திரா நதியில் 891 கி.மீ., நீளத்திற்கான திட்டம். தேசிய நீர்வழிப்பாதை-3: இது கோட்டபுரம் - கொல்லம் இடையே மேற்கு கடற்கரை கால்வாய், சாம்பகரா கால்வாய் மற்றும் உத்யோக்மண்டல் கால்வாய் ஆகியவை கொண்ட 205 கி.மீட்டர் திட்டம். தேசிய நீர்வழிப்பாதை-4: காகிநாடா - புதுச்சேரி இடையேயான கால்வாய், கழுவேலி குளம், பத்ராசலம் - ராஜமுந்திரி இடையே கோதாவரி ஆறு, வாசிராபாத் - விஜயவாடா இடையே கிருஷ்ணா ஆறு ஆகியவற்றை இந்த திட்டம் இணைக்கிறது. இதன் மொத்த நீளம் ஆயிரத்து 95 கி.மீ. தேசிய நீர்வழிப்பாதை-5:  தலைச்சேரி - தாம்ரா இடையே பிராமானி ஆறு, கிழக்கு கடற்கரை ஓரம் ஜியோன்காலி - சார்பாடியா இடையேயான கால்வாய், சார்பாடியா - தாம்ரா இடையே மாடை ஆறு, மான்கால்காடி - பாரதீப் இடையே மகாநதி டெல்டா ஆகியவற்றை இணைக்கிறது. இதன் மொத்த நீளம் 623 கி.மீ.  தேசிய நீர்வழிப்பாதை-6: லாகிபூர் - பாங்கா இடையே பராக் ஆற்றில்  121 கி.மீ., நீளத்திற்கு அமைக்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்த வரையில், தேசிய நீர்வழிப்பாதை-4ன் கீழ் தீட்டப்பட்டுள்ள காகிநாடா-புதுச்சேரி நீர் வழிப் போக்குவரத்து திட்டம் முக்கியமானதாகும். இந்த திட்டத்தின் கீழ், ஆந்திராவில் ஓடும் கோதாவரி, கிருஷ்ணா ஆறுகள், காகிநாடாவில் இருந்து புதுச்சேரி வரை கால்வாய் மூலமும் இணைக்கப்படும். இதன் மொத்த நீளம் ஆயிரத்து 27 கி.மீ. இதில், ஆற்று பகுதி 328 கி.மீ.,; கால்வாய் பாசனப்பகுதி 302 கி.மீ.,; உப்புநீர் கால்வாய் பகுதி 397 கி.மீட்டர் . இத்திட்டத்தின் மொத்த மதிப்பு ஆயிரத்து 515 கோடி. முதல்நிலைக்கு 609 கோடி ரூபாயும், இரண்டாம் நிலைக்கு 906 கோடி ரூபாயும் செலவிடப்பட உள்ளது.வடக்கு மற்றும் தெற்கு பக்கிங்காம் கால்வாய், கம்மாமூர் கால்வாய் மற்றும் கழுவேலி குளம் ஆகியவற்றில் கால்வாய் அமைக்க 906 கோடி ரூபாய் செலவாகும். இத்திட்டம் நிறைவடைய  ஏழு ஆண்டுகளாகும். இத்திட்டத்திற்காக, தமிழகத்தில் 300 எக்டேரும், ஆந்திராவில் ஆயிரத்து 380 எக்டேரும், புதுச்சேரியில் 27 எக்டேரும் நிலம் கையகப்படுத்த வேண்டும். இதற்கு 391 கோடியும், கால்வாய் அமைக்க 333 கோடி ரூபாயும் செலவாகும்.இந்த கால்வாய் அமைக்கப்பட்டால்  கோதாவரி ஆறு வழியாக நிலக்கரியும், கிருஷ்ணா ஆறு வழியாக சிமென்ட்டும், கிருஷ்ணா மற்றும் கோதாவரி ஆறு வழியாக அரிசியும் என ஆண்டிற்கு ஒரு கோடியே 10 லட்சம் டன்கள் சரக்குகளை கையாள முடியும். மேலும், பக்கிங்காம் கால்வாய் வழியாக ஆந்திரா-தமிழகம்-புதுச்சேரி இடையே சிறப்பான நீர் வழி போக்குவரத்து ஏற்பட்டு, இந்த மாநிலங்களுக்கு இடையே சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து சிறப்பாக நடக்கும். மேலும், உள்நாட்டு நீர் வழிப் போக்குவரத்தை ஏற்படுத்தினால் பல்வேறு நன்மைகளையும் நாடு பெற முடியும். கப்பல் போக்குவரத்து:  உள்நாட்டு நீர் வழியில் கப்பல் போக்குவரத்தினை அமல்படுத்துவதன் மூலம் உள்நாட்டில் லாரிகளின் மூலம் எடுத்து செல்லப்படும் பொருட்களை கப்பல் மூலமே கொண்டு செல்லலாம். இதன் மூலம்  90 சதவீத எரிபொருளை சேமிக்க முடியும். மின்சாரம் தயாரிப்பதற்கு நிலக்கரி மற்றும் எரி எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. தேசிய நீர்வழி அமைக்கப்பட்டால் நீர்வழி மின்சாரம் தயாரிக்கப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு 65 ஆயிரம் கோடி ரூபாய் எண்ணெய் செலவு குறையும். மேலும், அன்னிய செலாவணி மிச்சமாகும். ஆண்டு முழுவதும் கப்பல் போக்குவரத்து நடைபெறும். வெள்ளத்தடுப்பு: மழைக்காலங்களில் ஏற்படும் கட்டுப்படுத்த முடியாத வெள்ளத்தை இந்த நீர்வழி திட்டத்தின் மூலம் கட்டுப்படுத்தலாம். நீர் குறைவாக உள்ள பகுதியை நோக்கி வெள்ளத்தை திருப்பி விடலாம். வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்பு குறைந்து வெள்ள நிவாரண பணிக்காக ஒதுக்கப்படும் தொகையும் வெகுவாக குறையும். குடிநீர்: உள்நாட்டு நீர் வழித் திட்டம் செயல்படுத்தப்படும் தடங்களில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் தங்கு தடையற்ற குடிநீர் வசதியை வழங்க முடியும். விவசாயம்: 15 கோடி ஏக்கர் நிலம் கூடுதலாக பாசன வசதி பெறும். இதனால் ஆண்டுக்கு 50 கோடி டன் உணவு உற்பத்தியை பெற முடியும். ஏற்றுமதி பெருகி அன்னிய செலாவணி ஈட்ட முடியும். மின்சாரம்: நீர் வழிகளில் நீர் மின்சார உற்பத்தி நிலையம் அமைப்பதன் மூலம் 60 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கலாம். இதன் மூலம் ஆண்டுக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டலாம்.இவ்வாறு, பல்வேறு பெரும் பயன்களை தரும் உள்நாட்டு நீர் வழி போக்குவரத்து திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை ஏற்கனவே  "கிரீன் சிக்னல்' காட்டிவிட்டது. 11ம் ஐந்தாண்டு திட்டத்தில் ஆறு புதிய தேசிய உள்நாட்டு நீர்வழி போக்குவரத்தை மேம்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக ஐந்து வழிகளுக்கான எல்லைகளை மத்திய அரசு அளித்திருந்த போதிலும், திட்டக்கமிஷன் இதற்கு இதுவரை அனுமதி வழங்காத காரணத்தால் இந்த திட்டங்களை கப்பல் போக்குவரத்து துறையால்  துவக்க முடியவில்லை.திட்டக்கமிஷனின் அனுமதியை பெறுவதில் தாமதமாவதால், புதிய ஆறு நீர்வழிப் போக்குவரத்து  திட்டம் தொடங்குவது முடங்கிப்போய் உள்ளது. ஆயிரத்து 700 கி.மீட்டருக்கும் அதிக நீளமான 4 மற்றும் 5 ஆகிய இரண்டு நீர்வழி போக்கு வரத்து திட்டங்களுக்கும் மத்திய அமைச்சரவை கடந்த 2008ம் ஆண்டு நவம்பரிலேயே அனுமதி அளித்திருந்தது. அந்த நேரத்தில் இந்த திட்டத்தை துவக்கி இருந்தால், 11வது ஐந்தாண்டு திட்டமுடிவில் முடிந்திருக்கும். ஆனால், இந்த திட்டப்பணிகளை சரியான நேரத்தில் துவக்காத காரணத்தால், அதற்குள் முடிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.காகிநாடா-புதுச்சேரி நீர் வழி போக்குவரத்து உள்ளிட்ட உள்நாட்டு நீர் வழி போக்குவரத்து திட்டங்களுக்கு திட்டக்கமிஷன் நிதி ஒதுக்கீடு செய்யாமல் கைவிரித்துவிட்டதால், கடும் நீர் பற்றாக்குறையில் சிக்கி தவிக்கும் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியையும், தமிழக முன்னேற்றத்தையும் அடிப்படையாக கொண்டுள்ள உள்நாட்டு நீர் வழி திட்டங்களுக்கு திட்டக் கமிஷன் உடனடியாக அனுமதி வழங்க தமிழக அரசும், தமிழக எம்.பி.,க்களும் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ள வேண்டியது அவசியம். பக்கிங்காம் கால்வாய் மீண்டும் பயன்படும்!ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் கவர்னராக இருந்த பக்கிங்காம் என்பவர், நீர் வழிப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காகவும், அப்போது நிலவிய பஞ்சம் காரணமாக வறுமையில் வாடியவர்களுக்கு வேலை கொடுப்பதற்காகவும், ஆந்திராவில் இருந்து தமிழகத்தின் மரக்காணம் வரை கால்வாய் வெட்டினார். கடந்த 1876ம் ஆண்டு தொடங்கிய இப்பணி, அடுத்த இரண்டு ஆண்டுகளில் முடிவடைந்தது. இந்த கால்வாய் அமைக்க 30 லட்சம் ரூபாய் செலவானது. மொத்தம் 420 கிலோ மீட்டர் நீளத்திற்கு கால்வாய் அமைக்கப்பட்டது. இது, ஆந்திராவில் 250 கிலோ மீட்டர் நீளமும், தமிழகத்தில் 170 கிலோ மீட்டர் நீளமும் கொண்டது. இக்கால்வாய், மாமல்லபுரம், திருப்போரூர், திருவான்மியூர், சென்னை, பழவேற்காடு, நெல்லூர், ஓங்கோல், மசூலிப்பட்டினம், விஜயவாடா, காகிநாடா, போலவரம், வாசிராபாத் ஆகிய பகுதிகளை இணைக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது, ராணுவ பணிகளுக்கு ரயில்கள் பயன்படுத்தப்பட்டன. இதனால், கிராமங்களில் இருந்து அரிசி, காய்கறிகள், உப்பு, பால், தேங்காய், மீன், கருவாடு, இறைச்சி, ஆடு, கோழி, விறகு, வைக்கோல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் படகுகள் மூலம் நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இக்கால்வாயில் படகு போக்குவரத்து 1950ம் ஆண்டு வரை நடந்தது. சுதந்திரம் அடைந்த பின் பிரசித்தி பெற்ற இந்த பக்கிங்காம் கால்வாயை ஆட்சிக்கு வந்த அரசியல்வாதிகளும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் சரிவர பராமரிக்கவில்லை. இதனால், நாளடைவில் ஆங்காங்கே கால்வாய் தூர்ந்து போனது. அதுவரை நடந்து வந்த படகு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, பக்கிங்காம் கால்வாய் ஓரங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன.  தொழிற்சாலைகள், ஓட்டல்கள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாயில் கலக்கப்பட்டது. இதனால், ஒரு காலத்தில் படகு போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்ட பக்கிங்காம் கால்வாய், கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டது. காகிநாடா-புதுச்சேரி புதிய நீர் வழி போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்பட்டால், பக்கிங்காம் கால்வாயில் மீண்டும் படகு போக்குவரத்து துவங்கும். மேலும், தொடர்ந்து நீரோட்டம் இருக்கும் என்பதால், தற்போது கழிவுநீரால் நாறிக் கொண்டிருக்கும் கால்வாய், சுத்தமான கால்வாயாக மாறும். -நமது சிறப்பு நிருபர்-
தமிழகம்
உயர் அதிகாரிகள் சிக்குகின்றனர்?மோசடி மருந்து விவகாரம்
காலாவதி மருந்து விவகாரத்தில், மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் இரண்டு நாட்களாக கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய, சில உயர் அதிகாரிகள் சிக்குவார்கள் எனவும் கூறப்படுகிறது.பொதுமக்களின் உயிர் காக்கும் மருந்துகளில், போலி மற்றும் காலாவதி மருந்துகளை விற்பனைக்கு உலவ விட்ட விவகாரம் தமிழகத்தை உலுக்கி வருகிறது. இது தொடர்பான வழக்கில், மருந்து மோசடி மன்னன் மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டவர்கள் இதுவரையில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.மீனாட்சி சுந்தரம், பிரதீப் சோர்டியா, சஞ்சய்குமார் ஆகியோரது மருந்து குடோன்களில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள காலாவதி மற்றும் போலி மருந்துகள் கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கை தன் வசம் வைத்துள்ள சி.பி.சி.ஐ.டி., போலீசார், அவர்களில் முக்கியமானவர்களை கோர்ட் அனுமதி பெற்று காவலில் எடுத்து விசாரித்தனர். இதில், போலி லேபிள்கள் தயாரித்து அளித்தவர்கள் உள்ளிட்ட சிலர் சிக்கினர். மேலும், மீனாட்சி சுந்தரத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளின் தொடர்பு குறித்த தகவல்களை போலீசார் பெற்றனர். இதன் அடிப்படையில், மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் பாலகிருஷ்ணன், மருந்து ஆய்வாளர் விஜயகுமார் ஆகியோர் மீது போலீசாரின் பார்வை திரும்பியது. தொடர்ந்து முதல்கட்டமாக, ராமாபுரத்தில் உள்ள  மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர்  பாலகிருஷ்ணன், கோடம்பாக்கத்தில் உள்ள மருந்து ஆய்வாளர் விஜயகுமார் ஆகியோரது வீடுகளில் கடந்த வாரம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.அதில், பணம், நகை மற்றும் பல ஆவணங்கள் சிக்கின. அங்கிருந்த ஆவணங்கள் குறித்து விளக்கம் அளிக்க இருவரையும் அழைத்திருந்தனர். இதில், உதவி இயக்குனர் பாலகிருஷ்ணன், நேற்று முன்தினம் ஆஜரானார். இவரிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி., பரணிக்குமார்  விசாரணை நடத்தினார்.மேலும் சில தகவல்களை பெற வேண்டியுள்ளதால், மீண்டும் அவரை வரும் 7ம் தேதி வெள்ளிக்கிழமையன்று ஆஜராக வேண்டும் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.  இவரை தொடர்ந்து நேற்று மருந்து ஆய்வாளர் விஜயகுமார் சி.பி.சி.ஐ.டி., போலீசார் முன்பு ஆஜரானார்.இவர், மீனாட்சி சுந்தரத்திற்கும், மருந்து கட்டுப்பாட்டு உயர் அதிகாரிகளுக்கும் இடையில் ஏஜன்டாக செயல்பட்டவர் என்று கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில், மீனாட்சி சுந்தரத்தின் செயல்பாடுகள், அதிகாரிகள் தொடர்பு குறித்த தகவல்கள் பெறப்பட்டுள்ளன.இவர்கள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில், மருந்து கட்டுப்பாட்டுத்துறை உயர் அதிகாரிகள் சிலரும் விரைவில் சிக்குவார்கள் என தெரிகிறது. பொதுமக்களை பெரிதும் பாதித்த இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் போலீசாரும் உறுதியுடன் உள்ளனர். - நமது சிறப்பு நிருபர் -
தமிழகம்
ஐதராபாத் நகரை தாக்க பயங்கரவாதிகள் திட்டம் :போலீஸ் உஷார்
ஐதராபாத்: ஐதராபாத்தில்  தகவல் தொடர்பு அலுவலகங்கள் மற்றும் சர்வதேச ஆடிட்டிங் அலுவலகங்களை  குறிவைத்து தகர்க்கும்  சதியில் ஈடுபட்ட அல்-குவைதா  தொடர்புள்ள பயங்கரவாதி கைது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இந்தியாவின் பல நகரங்களை பயங்கரவாதிகள் தாக்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் தொடர்ந்து உஷார்படுத்தி வந்தன. இந்த எச்சரிக்கையை தொடர்ந்து கனடா மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளும் தங்கள் நாட்டு மக்கள் இந்திய பயணம் மேற்கொள்வதை தவிர்க்கும் படி எச்சரித்தன. இந்தியாவுக்கு போக வேண்டிய அவசியம் ஏற்பட்டால் சந்தை பகுதிகளில் எச்சரிக்கையோடு இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டது.அமெரிக்காவின் எச்சரிக்கை காரணமாக டில்லியில் பாதுகாப்பு கெடுபிடிகள் உள்ளன. பெங்களூரு கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கடந்த மாதம் குண்டு வைத்த பயங்கரவாதிகள் அண்டை மாநிலங்களில் ஊடுருவியுள்ளதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.குறிப்பாக ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்புகள் எச்சரித்திருந்தன. இதையடுத்து, போலீசார் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். ஐதராபாத்தில் 151 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்ப அலுவலகங்கள் நிறைந்த, "ஹைடெக் சிட்டி'யை தகர்க்க பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் என்ற ஆதாரப்பூர்வ தகவலையடுத்து ஆந்திர அரசு உஷார் படுத்தப்பட்டது.இதையடுத்து, ஹைடெக் அலுவலகங்களும், "டிலாய்டி டச் தோமாட்சு' என்ற  சர்வதேச ஆடிட்டிங் நிறுவனம் அமைந்துள்ள பகுதியில் ரகசிய கேமராக்கள் மூலம் 24 மணி நேர கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன.இந்நிலையில் நேற்று முன்தினம், டிலாய்டி டச் தோமாட்சு நிறுவனத்தில் டாக்சி டிரைவராக வேலை பார்த்த முகமது ஜியா உல் ஹக் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். இவனிடம் விசாரணை நடத்தியதில் இவன் பெயர் ஜியா உல் ஹக் என்றும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பிடம் பயங்கரவாத பயிற்சி பெற்றவன் என்பதும் தெரிந்தது.கடந்த 1995ம் ஆண்டு சவுதி அரேபியாவில், அல்-குவைதா அமைப்பில் சேர்ந்த ஹக், பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியிலும்  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்  உள்ள முசாபராபாத்திலும் ஆயுத பயிற்சி பெற்றுள்ளான். அதுமட்டுமல்லாது வெடிகுண்டுகளை வெடிக்க செய்வதிலும் கைதேர்ந்தவன் என்பது தெரியவந்துள்ளது.கடந்த 2006ல் ஐதராபாத் ஓடியன் தியேட்டரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திலும் இவனுக்கு பங்கு உண்டு.ஐதராபாத்தில் சில நிறுவனங்களில் இவன் ஏற்கனவே டிரைவர் வேலை பார்த்து பல பகுதிகளை நோட்டமிட்டு வந்துள்ளான். டிலாய்டி டச் தோமாட்சு நிறுவனத்தை தகர்க்கும் நோக்குடன் இந்நிறுவனத்தில் அவன் டாக்சி டிரைவராக வேலைக்கு சேர்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இவனிடம் வரைபடங்கள் உள்ளனவா, இவனது பின்னணி என்ன என்ற விசாரணை தீவிரமாகியிருக்கிறது. இவன் திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால்,  உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் அதிகம் ஏற்படும் வகையில் குண்டுவெடிப்பு  அரங்கேறியிருக்கும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழகம்
சொல்கிறார்கள்
நீங்களும் கணக்குப் பிள்ளை ஆகலாம் : கணக்குப் பிள்ளை லதா: பண்ணையார் காலங்களில் கணக் குப் பிள்ளை என்ற வார்த்தை மந்திரிக்குச் சமமான முக்கியத்துவம் பெற்றிருந்தது. காலப்போக்கில், பண்ணையார்கள் அருகிவிட, கணக்குப் பிள்ளைகளும் காணாமல் போய்விட்டனர்.இன்னும் கணக்குப் பிள்ளை பதவிக்கு மவுசு குறையாத முக்கியத்துவத்தை வழங்கும் துறையாக வணிக வரித்துறை உள்ளது. பி.காம்., அல்லது பிளஸ் 2 முடித்த யார் வேண்டுமானாலும் வணிக வரித்துறைக்கு இப்படி கணக்குப் பிள்ளையாகப் பணியாற்றலாம். பார்க்கும் கணக்கு வழக்குகளுக்கேற்ப ஊதியம் கிடைக்கும்.சிறிய கடை, பெரிய கடை எதுவாயினும் வணிகர்களைப் பொறுத்தவரை, விற்பனையைக் கவனிக்கவே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கும். அதனால், விற்பனைக் கணக்கு நோட்டுகளை கணக்குப் பிள்ளைகளிடம் மாதம் தோறும் ஒப்படைத்து விடுவர்.அவற்றில் வரி உள்ளவை, வரி அற்ற வை என்ற ரீதியில் தரம் பிரித்து, செலுத்த வேண்டிய வரியைக் கணக்கிட்டு பணம் பெற்று 20ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.கடைகளின் விற் பனை, நாம் கணக்கு எழுதும் கடைகளின் எண்ணிக்கையைப் பொருத்து மாதம் ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரை சம்பாதிக்கலாம். மேல் நிலைப் பாடத்தில் வணிகவியல் பாடத் தைப் படித்தவர்களுக்கு இந்த வேலை மிகவும் சுலபம்."வாட்' சட்டம் அமலுக்குப் பின், அனைத்து கடைகளும் மாதம் 20ம் தேதிக்குள் வரி செலுத்துவதுடன், ஆன்-லைனில் வரவு - செலவு விவரத்தை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும். இந்த வேலையையும் கணக்குப் பிள்ளைகளே செய்கின்றனர்.கணினியில், "டேலி கோர்ஸ்' முடித்தவர்களுக்கு இந்த வேலை சுலபம். பெண்கள் தனியாகவோ, கூட்டாகவோ இந்த வேலைகளைச் செய்து கொடுத்து சுயவேலை வாய்ப்பைப் பெறலாம்.
இந்தியா
இது உங்கள் இடம்
ஐயம் எழுகிறதே!அ.ஜெ.பாலன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: சென்னை ஐகோர்ட் வளாகத்தில் அமைக்கப்பட்ட, சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் முழு உருவச்சிலை திறப்பு விழாவில், கூட்டத்திலிருந்த வழக்கறிஞர்கள் ஆறு பேர், தாங்கள் மறைத்து வைத்திருந்த, கறுப்பு கொடிகளை எடுத்து காட்டி, முதல்வருக்கு எதிராக கோஷமிட்டதன் விளைவாக மோதல் நடந்துள்ளது.இந்த சம்பவங்கள் அனைத்தும், சிலையை திறந்து வைத்த, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பால கிருஷ்ணன் மற்றும் விழாவில் பங்கு பெற்ற ஐகோர்ட் நீதிபதிகள், மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, தமிழக சட்டத்துறை அமைச்சர் துரை முருகன் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.கறுப்பு கொடி நிகழ்வை பார்த்த தமிழக முதல்வரும், கறுப்பு கொடியை தான் நேரில் சந்தித்த வரலாற்று பெருமைகளை பறைசாற்றி உரை நிகழ்த்தியது, விழாவின் முக்கியத்துவத்தை குலைத்து விட்டது.கறுப்பு கொடி காட்டிய வழக்கறிஞர்களையும், அந்த நிகழ்வுகளை பதிவு செய்த பத்திரிகையாளர் களை தாக்கியவர்களையும் கைது செய்யாமல் கோட்டை விட்ட காவல் துறை, அடையாளம் தெரியாதவர்கள் என்று வழக்கு பதிவு செய்துள்ளது.தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய போது, சட்ட அமைச்சர் துரை முருகன், "உங்கள் கட்சி தலைவன் முன்னால் இப்படி நடந்தால், தொண்டர்கள் சும்மா இருப்பரா? தி.மு.க.,காரனுக்கு ரோஷம் கிடையாதா, அவனுக்கு உணர்வு இருக்காதா? தி.மு.க.,வில் மானமுள்ளவன் கிடையாதா?' என்று பதிலளித்து, தனது கருத்தை பதிவு செய்துள்ளதன் மூலம், பத்திரிகையாளர்களை தாக்கியது ஆளுங்கட்சியை சார்ந்தவர்களோ என்ற ஐயத்தை ஏற்படுத்திவிட்டது.பத்திரிகையாளர்களை தாக்கியவர்களை அடையாளம் கண்டு, உண்மையான குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து, தண்டிக்கும் வகையில் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பத்திரிகையாளர்கள் யாரும் அஞ்சாமல், எந்த சூழலிலும் தங்கள் பணிகளை செவ்வனே செய்வதற்கு, முன் மாதிரியாக தங்கள் கட்சியின் வாயிலாக முதலில் வழிகாட்ட முதல்வர் முன்வர வேண்டும். ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு உண்டு. இஸ்லாமிய நாடுகளில் நடக்குமா?எம்.சுரேஷ்குமார், நங்கநல்லூர், சென்னையிலிருந்து எழுதுகிறார்: கட்டாய கிறிஸ்தவ மதமாற்ற செய்கையில் ஈடுபடுவதாக  கூறி, சமீபத்தில் துணை தாசில்தார் பொறுப்பில் உள்ளவரை பொது மக்கள், ஈரோட்டில் சிறைபிடித்த செய்தியைப் படித்தேன்.சமீபகாலமாகவே அரசு ஊழியர்களில் பெரும்பான்மையாக உள்ள கிறிஸ்தவர்கள் பலர், பணி நாட்களில் தம் அலுவலக, பிற மத ஊழியர்களையும், பொது மக்களையும் குறிவைத்து, மதமாற்ற செய்கையில் ஈடுபடுவது, ஒரு தொடர் நிகழ்வாக உள்ளது.இச்செயலைக் கண்டிக்க, எந்த உயர் அதிகாரிக்கும், காவலருக்கும் தைரியம் இல்லை என்பது கண்கூடு!இஸ்லாமிய நாடுகளில் ஏன் கிறிஸ்தவ மதப்பிரசாரம் செய்வதில்லை? அந்நாடுகளில் உள்ள கடுமையான சட்டங்களே காரணமின்றி வேறென்ன?மனசாட்சி என்று ஒன்று இருப்பின், இந்துக்களை மதமாற்றும் கிறிஸ்தவ மதபோதகர்கள், இஸ்லாமிய நாடுகளில் அவர்கள் துன்புறுத்தப் படுவதையும், இந்தியாவில் இந்துக் கள் காட்டிவரும் அன்பை ஒப்பிட்டுப் பார்த்து, தங்கள் மதமாற்றச் செய்கையை நிறுத்துவரா? இந்துக்களின் அன்பிற்கு கிடைத்துவரும் பரிசா மதமாற்றம் எனும் மோடிமஸ்தான் வேலை!இத்தகையோருக்கு தேவையான உடனடி நிவாரணம் - "மன' மாற்றமே! ஒருபோதும் திருந்த மாட்டார்கள்! பி.சரவணன், இடைக் காட் டூர், சிவகங்கை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: சில ஆண்டுகளுக்கு முன், பிரேமானந்தா எனும் சாமியார், பெண்களிடம் சல்லாபத்தில் ஈடுபட்டதால், போலீசாரால் கைது செய்யப்பட்டு, தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகிறார். அடுத்து காஞ்சிபுரம் கோவில் அர்ச்சகர் தேவநாதன், கோவில் கருவறையிலேயே காம லீலைகளில் ஈடுபட்டு, அவரையும் காவல் துறையினர் கைது செய்து, விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இது போதாதென்று தற்போது, மக்களால் மிகவும் நம்பப்பட்ட நித்யானந்தா எனும் சாமியாரும் மாட்டியுள்ளார். 50 நாட்களுக்குப் பின் தான் காவல் துறை இவரை கண்டுபிடித்துள்ளது. இவரையும் விசாரணை, விசாரணை என்று இழுத்துக் கொண்டே சென்று, பிறகு அவரின் கேஸ் ஒன்றுமே இல்லாமல் போய்விடப் போவதை நாம் கண்ணால் காணத்தான் போகிறோம்! இதற்கு ஒரு முடிவுதான் எப்போது?சில நாடுகளில் இருப்பது போல், திருட்டு, கொலை, கற்பழிப்பு போன்றவற்றில் ஈடுபடுவோரை நடு ரோட்டில் வைத்து, தூக்கில் ஏற்றுவது,  கல் லால் அடித்துக் கொல்வது, கடுமையாக தண்டித்தல் போன்றவைகளால் தான், இதுபோன்ற போலி சாமியார்களும், போலிகளும் திருந்துவர். இல்லையெனில், இது தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.ஜனநாயக நாடு என்று ஈவு, இரக்கம் காண்பித் தால், இவர்கள் ஒரு போதும் திருந்த மாட் டார்கள். தனித்தனியே நிற்கட்டும்! வி.பாலு, சென்னையிலிருந்து எழுதுகிறார்: விலைவாசி உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை முன்னிறுத்தி, 13 கட்சிகள் நடத்திய "பந்த்' பிசுபிசுத்து விட்டது; இது எதிர்பார்த்தது தான். அதே நேரத்தில் வெட்டுத் தீர்மானம் கொண்டு வந்த, இந்தக் கட்சிகளின் நிலை தான் பரிதாபம். நம்பகத்தன்மை இல்லாத லாலு, முலாயம் சிங் யாதவ் ஆகியோரின் திடீர் பல்டி எதிர்பாராதது.ஆனால், மத்திய அரசு, தனது துருப்பு சீட்டான சி.பி.ஐ.,யை சரியாக பயன்படுத்தி கொண்டது. மாயாவதி மீது ஊழல் வழக்கு, லாலு மீது வழக்கு, முலாயம் மீது வழக்கு, சிபுசோரன் மீது வழக்கு என்றால் இவர்கள் எப்படி அரசை எதிர்க்க முடியும்.அரசனை நம்பி புருசனை கை விட்டதாக ஒரு பழமொழி உண்டு. அதுபோல இவர்களை நம்பி, அ.தி.மு.க.,வும் களத்தில் இறங்கி, முகத்தில் கரியை பூசிக் கொண்டு, காங்கிரசையும் பகைத்து கொண்டது. இனியாவது இவர்கள், தனித்தனியே நின்று மக்களை சந்திக்கட்டும். கம்பன் எக்ஸ்பிரஸ் எதிர்பார்ப்பு அதிகம்!பால.பத்மாவதி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: சென்னை எழும்பூர் - நாகூர் இடையே, விழுப்புரம் - மயிலாடுதுறை வழியாக, கம்பன் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டுள்ளது கண்டு பெருமகிழ்ச்சியடைகிறேன். இதனால் மக்கள் பெரும் பயனடைவர் என்பது திண்ணம். இதை போலவே, பெரும் எதிர்பார்ப்புடன் உள்ள, மயிலாடுதுறை - கும்பகோணம் - தஞ்சாவூர் வழியாக, தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் வண்டிகளும் தேவை.சென்னை எழும்பூரிலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் ராமேஸ்வரம் செல்லும் வண்டிகளும், ஏற்கனவே நடைமுறையில் இருந்தது போலவே, மயிலாடுதுறை - கும்பகோணம் - தஞ்சாவூர் வழித்தடத்தில் இயக்கப்பட வேண்டும் என்பது, மக்களின் நீண்ட கால அவாவாகும்.
இந்தியா
ஜெயலலிதா மனு : 7ம் தேதி விசாரணை
புதுடில்லி : ஜெயலலிதா மீது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கை விசாரிக்கும் பெங்களூரு சிறப்பு கோர்ட் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்ற சிறப்பு அனுமதி கோரும் மனு மீதான விசாரணையை வரும் 7ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டு, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. தன்னை மன ரீதியாக துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கில் வேண்டுமென்றே இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டது, இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என, ஜெயலலிதா சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை சிறப்பு கோர்ட் நிராகரித்து விட்டது. இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா சிறப்பு அனுமதி கோரும் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் சுதர்சன் ரெட்டி மற்றும் நிஜ்ஜார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையை வரும் 7ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் கூறினர்.
தமிழகம்
திறந்த நிலை பல்கலையில் எம்.ஏ., படித்தவர் எஸ்.ஐ., தேர்வு எழுதலாமா : அரசிடம் விளக்கம் கேட்கிறது ஐகோர்ட
மதுரை : திறந்தநிலை பல்கலை மூலம் நேரடியாக எம்.ஏ., படித்தவர்கள் போலீஸ் எஸ்.ஐ., தேர்வில் கலந்து கொள்ளலாமா என்பது குறித்து பதிலளிக்கும்படி, சீருடைப்பணியாளர் தேர்வாணையத் தலைவருக்கு, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. தேனி மாவட்டம் ஆயுதப்படை போலீஸ்காரர் ராஜா. இவர் மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த ரிட்: பிளஸ் 2 முடித்த பின் 1997ல் போலீஸ் வேலைக்கு சேர்ந்தேன். 2003ல் திறந்தநிலை கல்வி திட்டத்தில் நேரடியாக எம்.ஏ., பட்டம் பெற்றேன். இதன் மூலம், ஏற்கனவே 2006ல் எஸ்.ஐ., தேர்வு மற்றும் தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வுகள் எழுதியுள்ளேன். தற்போது சீருடைப்பணியாளர் தேர்வாணையம் மூலம் காலியாக இருக்கும் 1,095 எஸ்.ஐ., பதவியிடத்தை தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஏப்.,1ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் போலீஸ் பணியில் உள்ளவர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு உள்ளது. இதன்படி, எஸ்.ஐ., பதவிக்கான தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தேன். "திறந்தநிலை கல்வி திட்டம் மூலம் எம்.ஏ., பட்டம் பெற்றதால் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது,' என சீருடைப்பணியாளர் தேர்வாணையத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, எனது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. கடந்தாண்டு நடந்த எஸ்.ஐ., தேர்வில் இதுபோன்ற விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. எனக்கு எஸ்.ஐ., தேர்வு எழுத அனுமதிக்க சீருடைப்பணியாளர் தேர்வாணையத் தலைவருக்கு உத்தரவிட வேண்டும், என கோரியிருந்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் தாளைமுத்தரசு ஆஜரானார். இம்மனு நீதிபதி ஜோதிமணி முன் விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து சீருடைப்பணியாளர் தேர்வாணையத் தலைவர் பதிலளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
தமிழகம்
கோகலே ஹால் இடிப்பு விவகாரம் : ஐகோர்ட்டில் அரசு உத்தரவாதம்
சென்னை : சென்னையில் கோகலே ஹால் இடிப்பு விவகாரத்தில், கோர்ட் உத்தரவின்றி நடவடிக்கை எடுக்க மாட்டோம் என, ஐகோர்ட்டில் உறுதியளிக்கப்பட்டது. சென்னை பிராட்வேயில் கோகலே ஹால் உள்ளது. இதை இடித்து விட்டு புதிதாக கட்டடம் எழுப்ப ஒய்.எம்.ஐ.ஏ., அமைப்பு நடவடிக்கை எடுத்தது. அதன்படி கட்டடத்தை இடிப்பதற்கான பணிகள் துவங்கின. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஜெயகுமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "90 ஆண்டுகளுக்கும் மேலானது இந்தக் கட்டடம். சுதந்திரப் போராட்ட வீரர்கள் இங்கு கூடி பேசியுள்ளனர். எனவே, இதற்கு விடுதலைப் போராட்ட முக்கியத்துவம் உள்ளது. இந்தக் கட்டடத்தை இடிக்கக் கூடாது. தடை விதிக்க வேண்டும்' என கோரினார். இதையடுத்து, இந்தக் கட்டடத்தை இடிக்க சென்னை ஐகோர்ட் தடை விதித்தது. இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதிகள் பிரபாஸ்ரீதேவன், ஜனார்த்தனராஜா அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. ஒய்.எம்.ஐ.ஏ., சார்பில் ஆஜரான வக்கீல், "தற்போது புதிய தலைவர் பொறுப்பேற்றுள்ளார். கட்டடத்தை ஆய்வு செய்த பின் முடிவெடுக்கப்படும். புராதன பாதுகாப்புக் குழு ஒன்றை மாநில அரசு அமைத்துள்ளது. குழுவின் பரிந்துரைகள் அவசியம். கோர்ட் உத்தரவின்றி எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம்' என்றார். பின், விசாரணையை ஜூன் 11ம் தேதிக்கு "டிவிஷன் பெஞ்ச்' தள்ளிவைத்தது.
தமிழகம்
நில மோசடி வழக்கில் தி.மு.க., பிரமுகருக்கு இடைக்கால முன்ஜாமீன் : சென்னை புறநகர் போலீசில் தினசரி ஆஜராக
சென்னை : நில மோசடி வழக்கில் தி.மு.க., பிரமுகருக்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால முன்ஜாமீன் வழங்கியது. சென்னை புறநகர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் தினசரி ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணாநகரில் வசிப்பவர் நரம்பியல் நிபுணர் டாக்டர் ஜெகநாதன்(82); சென்னை அரசு பொது மருத்துவமனையில் நரம்பியல் துறையின் தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா தனக்கர்குளம் கிராமத்தில் 63 ஏக்கர் நிலம் உள்ளது. கோடிக்கணக்கான மதிப்புள்ள இந்த நிலங்களை, போலி ஆவணங்கள் தயாரித்து சிலர் விற்று விட்டதாக சென்னை புறநகர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். சதி, மோசடி உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் சென்னை புறநகர் குற்றப்பிரிவு போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, முன்ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் கிரகாம்பெல் (திருநெல்வேலி மாவட்ட தி.மு.க., அவைத் தலைவர் மற்றும் ஊராட்சித் தலைவர்), மற்றும் அரவிந்த், பாலசுப்ரமணியம் மனு தாக்கல் செய்தனர். முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து டாக்டர் ஜெகநாதன் தாக்கல் செய்த மனு: எனது சொத்துக்கள் மீது போலியாக பவர் ஆப் அட்டர்னியை தயாரித்து, அம்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தனர். கையெழுத்தையும் போலியாக இட்டனர். போலி பவர் ஆப் அட்டர்னியை வைத்து இடத்தை விற்றனர். சொத்துக்களின் மதிப்பு கோடிக்கணக்கானவை. இந்த விவரம் தெரிந்த உடன் சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுத்தேன். அம்பத்தூர் போலீசில் புகார் கொடுத்தேன். வழக்கு பதிவு செய்யக் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தேன். பின், புறநகரில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக ரவி என்பவரை போலீசார் கைது செய்தனர். ஒரு தனியார் காற்றாலை நிறுவனம் உள்ளிட்ட சிலருக்கு இடத்தை விற்று 10 கோடி ரூபாய்க்கும் மேல் பெற்றுள்ளனர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிரகாம்பெல், பலமிக்க அரசியல்வாதியாகவும், ஊராட்சித் தலைவராகவும் உள்ளார். இவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. முன்ஜாமீன் மனுவை நீதிபதி நாகமுத்து விசாரித்தார். மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், போலி ஆவணங்கள் மூலம் மனுதாரர்கள் எந்த உரிமையும் கோரவில்லை என்றார். டாக்டர் ஜெகநாதன் சார்பில் வக்கீல் எஸ்.கோமதிநாயகம் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி நாகமுத்து, "மனுதாரர்களுக்கு ஜூன் 10ம் தேதி வரை இடைக்கால முன்ஜாமீன் வழங்கப்படுகிறது. அதுவரை சென்னை புறநகர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் தினசரி ஆஜராக வேண்டும்' என உத்தரவிட்டார். இதே வழக்கில், தனக்கர்குளம் கிராமத்தைச் சேர்ந்த சுவாமி, வேலாண்டி உள்ளிட்ட மூவர் முன்ஜாமீன் கோரினர். இவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "பிரச்னைக்குரிய சொத்துக்களின் மீது உரிமை கோர மாட்டோம். டாக்டர் ஜெகநாதன் பெயரில் ஆவணங்களை வழங்க தயாராக இருக்கிறோம்' என கூறப்பட்டுள்ளது. இதையடுத்து நீதிபதி நாகமுத்து பிறப்பித்த உத்தரவில், "மூன்று பேருக்கும் ஜூன் 10ம் தேதி வரை இடைக்கால முன்ஜாமீன் வழங்கப்படுகிறது. சென்னை புறநகர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் தினசரி இவர்கள் ஆஜராக வேண்டும். இவர்கள் கோரிய உரிமையை கைவிட வேண்டும்' என கூறியுள்ளார்.
தமிழகம்
கோவை கட்டட விவகாரம்:சபையில் அ.தி.மு.க., அமளி
சென்னை:கோவை திராவிட பஞ்சாலை தொழிலாளர் சங்க கட்டட விவகாரம் தொடர்பாக பேச அனுமதி கோரி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் அமளியில் ஈடுபட்டனர்.சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து கோவை திராவிட பஞ்சாலை தொழிலாளர் சங்க கட்டட விவகாரம் தொடர்பாக பேச முயன்றார். அப்போது, "இது தொடர்பாக நீங்கள் கொடுத்த கோரிக்கை எனது ஆய்வில் உள்ளது. எனவே, இது குறித்து நாளை பேசலாம்' என, சபாநாயகர் ஆவுடையப்பன் தெரிவித்தார். இதற்கு, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், செ.ம.வேலுச்சாமி, வேலுமணி போன்றவர்கள் இப்போதே விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என குரல் எழுப்பினர்.சபாநாயகர் பேசும்போது, "இப்பிரச்னையில், கோர்ட் தீர்ப்பு நகல் இன்னும் கிடைக்கவில்லை. கிடைத்ததும் தருவதாக ம.தி.மு.க., எம்.எல்.ஏ., சதன் திருமலைக்குமார் என்னிடம் தெரிவித்துள்ளார். கோர்ட் தீர்ப்பு நகலை என்னிடம் அளியுங்கள். அதைப் படித்து விட்டு, நாளை இந்த கோரிக்கையை எடுத்துக் கொள்கிறேன்' என்றார். அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அமராமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அப்போது நிதியமைச்சர் அன்பழகன் எழுந்து பேசும்போது, "இப்பிரச்னை தொடர்பாக விளக்கமளிக்க முதல்வர், சட்டத்துறை அமைச்சர் அவையில் இல்லை. எனவே, நாளை(இன்று) இது குறித்து விவாதிக்கலாம்' என்றார். இதையடுத்து அமளி முடிவுக்கு வந்தது.
இந்தியா
சாலையில் சென்ற பாம்பால் பெரும் விபத்து : ஏழு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதின
மும்பை : மும்பையில் சாலையில் ஊர்ந்து சென்ற பாம்பின் மீது ஏற்றி விடக் கூடாது என்பதற்காக காரை திடீரென நிறுத்தியதை அடுத்து, பின்னால் வந்த ஏழு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. மும்பை, பாம் பீச் சாலையில் சமீபத்தில் போக்குவரத்து படு "பிசி'யாக இருந்தது. ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. நல்ல வெயிலும் அடித்துக் கொண்டிருந்தது. அப்போது அந்த சாலையில் சென்ற பொலிரோ காரின் டிரைவர், மூன்று அடி நீளமுள்ள பாம்பு ஒன்று சாலையில் மெதுவாக ஊர்ந்து செல்வதை பார்த்து, அதிர்ச்சி அடைந்தார்.  இதே வேகத்தில் சென்றால், பாம்பு மீது கார் ஏறி விடும் என்பதை உணர்ந்த டிரைவர், உடனடியாக "பிரேக்'அடித்து காரை நிறுத்தினார். திடீரென அந்த கார், சாலையின் மையப் பகுதியில் நிறுத்தப்பட்டதால், அதன் பின்னால் வந்த வாகனங்கள் ஒன்றன் மீது, ஒன்றாக வரிசையாக மோதின. ஏழு கார்கள் இதில் சேதமடைந்தன. கார்கள் தொடர்ச்சியாக மோதியதால், பெரும் சத்தம் கேட்டது. உடனடியாக, போக்குவரத்து போலீஸ்காரர் அங்கு ஓடி வந்தார். இதற்குள் அந்த பாம்பு சாலையின் ஓரத்துக்கு சென்று முடங்கி கிடந்தது. அனைவரும் அருகில் சென்று பார்த்தபோது, அந்த பாம்பு இறந்திருந்தது தெரியவந்தது. வெயில் கொடுமை தாங்கமுடியாமல் அந்த பாம்பு இறந்து விட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, சாலையில் போக்குவரத்து சரி செய்யப்பட்டு, இயல்பு நிலைக்கு திரும்பியது. இதுகுறித்து பாம்புகளை ஆராய்ச்சி செய்யும் ஜகதீஷ் என்பவர் கூறுகையில்,"ஒரு சில பாம்புகளால், வெப்பத்தை அதிகம் தாங்க முடியாது. கோடை காலங்களில் அவை குளிர்ச்சியான பகுதிகளை நோக்கி செல்லும். சாலையில் வந்த பாம்பும் வெயிலை தாங்க முடியாமல் தான் வெளியேறி வந்துள்ளது. கடுமையான வெப்பத்தை தாங்க முடியாத அந்த பாம்பு இறந்து விட்டது' என்றார்.
இந்தியா
கற்பழித்த ஒவ்வொருவரையும் அடையாளம் காட்டிய 16 வயது சிறுமி
புதுடில்லி : மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தன்னைக் கடத்தி வந்தவர்கள், முகம் தெரியாத மாநிலத்தில், ஒவ்வொரு இடத்திலும் அடைத்து வைத்துக் கற்பழித்தவர்கள் என, அனைவரையும் அடையாளம் காட்டியிருக்கிறார், 16 வயது சிறுமி. மேற்கு வங்க மாநிலம், 24 பர்கானா மாவட்டத்தின், ஹப்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் மிது தாஸ்(16). பாரம்பரிய நடனம் ஆடுவதில் வல்லவர். இவர் குடும்பம் வறுமையில் இருந்ததால், பக்கத்து வீட்டுக்காரர், "குஜராத்தில் மிது நடனம் ஆடினால் நிறைய வருமானம் வரும். மாதா மாதம் ஆறாயிரம் ரூபாய் உங்கள் வீட்டுக்குத் தருகிறோம்' என்று கூறி, மிதுவை அழைத்துச் சென்றார். அப்போது மிதுவின் வயது 13. அதன் பின், மிதுவின் வாழ்க்கையில் இருண்ட காலம் தொடங்கியது. குஜராத்துக்கு அவரைக் கூட்டிச் சென்றவர்கள், அங்கு ஓர் அறையில் அடைத்து வைத்து, ஆபாசப் படங்களைக் காட்டி அதன்படி செய்யச் சொல்லி வற்புறுத்தினர். இந்தச் சித்ரவதை, நாள் கணக்காக, மாதக்கணக்காக, ஆண்டுக்கணக்காக நீடித்திருக்கிறது. அவரை, மெஹ்சனா, பரோடா, விராட்நகர், ஆமதாபாத், கான்பூர் என்று ஊர் ஊராக அழைத்துச் சென்று "வாடிக்கையாளர்'களுக்குத் தாரை வார்த்தனர். இறுதியில், இரண்டு மாதங்களுக்கு முன்பு, "அன்ஹத்' என்ற தனியார் தொண்டு நிறுவனம் மூலம் அவர் மீட்கப்பட்டார். அப்போது நடந்த மருத்துவப் பரிசோதனையின் போதுதான் அவருக்கு எச்.ஐ.வி., இருப்பதும் தெரிய வந்திருக்கிறது. ஆனால், மனம் தளரவில்லை மிது. தன்னைக் கடத்தியவர்கள், ஒவ்வொரு ஊரிலும் கற்பழித்தவர்கள் என எல்லாரையும், போலீசாரிடம் அடையாளம் காட்டியிருக்கிறார். இதுகுறித்து பிரட்சிதா ரத்தோர் என்ற பெண் போலீஸ் கூறியதாவது: அவர் உண்மையிலேயே நுட்பமான புத்திசாலிதான். அவரால் எங்கள் விசாரணை மிக எளிதில் முடிந்திருக்கிறது. குஜராத்துக்கு இதற்கு முன்பு அவர் வந்ததில்லை. ஆனால் முன்பு, தான் கொண்டு செல்லப் பட்ட ஒவ்வொரு இடத்தையும் மிகத் தெளிவாக நினைவில் வைத்து, போலீசாரை அழைத்துச் சென்றிருக்கிறார். சந்துகளுக்குள்ளும், குறுக்குத் தெருக்களுக்குள்ளும் தங்கியிருந்த இடங்களை நினைவுபடுத்தி அடையாளம் காட்டியுள்ளார். அவரால் அடையாளம் காட்டப்பட்ட, "தொழிலில்' ஈடுபட்டிருந்த பெண்கள்,"நாங்கள் வயதானவர்கள். எங்களால் எப்படி இதைச் செய்திருக்க முடியும்?' என்று கேட்ட போது, அவர்கள் ஒவ்வொருவரும் தன்னை எப்படிக் கொடுமைப்படுத்தினர் என்பதைத் தெளிவாகக் கூறினார் மிது. இவ்வாறு பிரட்சிதா தெரிவித்தார். நடந்த சம்பவங்கள் குறித்து மிது கூறுகையில், "எனக்கு அவ்வளவாக ஞாபக சக்தி கிடையாது. ஆனால் இவ்வழக்கில் நான் போராட விரும்பினேன். அதனால் ஒவ்வொரு வீட்டையும் நினைவுபடுத்தி, அடையாளம் காட்டினேன். எனக்கு நடந்த கொடுமைகள் எதுவும், என் தாய்க்குத் தெரியாது. அவருக்கு மாதாமாதம் பணம் போயிருக்கும். நடந்த அனைத் தையும் மறந்து விட நினைக்கிறேன். புதிய வாழ்வை சந்தோஷமாக ஆரம்பிக்க ஆசைப்படுகிறேன்' என்கிறார். மிதுவால் அடையாளம் காட்டப்பட்டவர்களில், "தொழில்' பெண்களும் உண்டு. "வாடிக்கையாளர்'களில் தொழிலதிபர், நடுத்தர குடும்ப ஆண்கள், ஓட்டல் உரிமையாளர்களும் உண்டு. மிது மீட்கப்பட்ட பின், குஜராத்தில் இதுபோன்று மேற்கு வங்கத்திலிருந்து பெண்கள், குழந்தைகளைக் கடத்தி வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தும் பெரிய கும்பல், போலீஸ் பிடியில் சிக்கியுள்ளது. இந்தியாவில் மேற்கு வங்கத்தில் தான், அதிகளவில் பெண்கள், குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். அம்மாநிலத்திலுள்ள 265 கிராமங்களில், நகர்ப்புறங்களில் வேலைபார்க்கச் செல்லும் 3,429 குழந்தைகளில் 271 பேர், ஒரு கிராமத்துக்கு ஒருவர் வீதம், மீண்டும் வீடு திரும்புவதில்லை என்று மாநில அரசின் அறிக்கை கூறுகிறது.
இந்தியா
ஊழல் ஐ.ஏ.எஸ்., அதிகாரி கைது
ஐதராபாத் : வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஆந்திராவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் இணை கலெக்டராக பணியாற்றி வருபவர் ஜெகன் மோகன். இவர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி, நேற்று அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அவர், வருமானத்துக்கு அதிகமாக 4.60 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து சேர்ந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. லஞ்ச ஒழிப்பு துறை இணை இயக்குனர் சம்பத்குமார் கூறியதாவது: ஜெகன்மோகனிடமிருந்து கணக்கில் வராத பணம் 15 லட்ச ரூபாய், வங்கி பாஸ் புத்தகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஐதராபாத்தில் அசையா சொத்தாக 1.30 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு, நகரின் பல்வேறு பகுதிகளில் 1.07 கோடி ரூபாய் மதிப்பிலான ஆறு பிளாட்டுகள், ஐதராபாத் புறநகர் பகுதிகளில் 1.40 கோடி ரூபாய் மதிப்பிலான எட்டு வீடுகள் ஜெகன்மோகன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் உள்ளன. இது குறித்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு சம்பத்குமார் கூறினார்.
இந்தியா
பெண்ணை கடத்தி விற்ற ஆறு பேர் கைது
ஹர்டா : ஓர் இளம் பெண்ணைக் கடத்தி, 50 ஆயிரம் ரூபாய்க்கு மற்றொருவரிடம் விற்ற ஆறு பேர் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று பெண்கள் உள்ளிட்ட இன்னும் ஆறு பேரை போலீசார் தேடி வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலம், அமராவதி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயா(23). இவர், நாக்பூரிலிருந்து ஜான்சியிலுள்ள தனது சகோதரி வீட்டுக்கு ரயிலில் சென்ற போது, இவர் அருகில் இருந்த பயணிகள், இனிப்புகளை வழங்கியுள்ளனர். அதைச் சாப்பிட்ட ஜெயா மயக்கமடைந்தார். அவருக்கு நினைவு திரும்பிய போது, மத்தியபிரதேச மாநிலம், ஹர்டா மாவட்டத்தில் தாஜ்புரா கிராமத்தில் உள்ள ராம்தீன் என்பவரின் வீட்டில் இருப்பதை உணர்ந்தார். அவரைக் கடத்தியவர்கள், சஞ்சய் மற்றும் ஹரி ஓம் பிரஜாபதி ஆகிய இருவரிடம் 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுவிட்டனர். சஞ்சயை மணந்துகொள்ளுமாறு அங்கிருந்தவர்கள் ஜெயாவைக் கட்டாயப்படுத்தியுள்ளனர். இதற்கிடையில், நடந்த சம்பவத்தை, ஜெயா தன் சகோதரர் சுமித்துக்குத் தெரியப்படுத்தினார். அவர் போலீசில் தெரிவித்தார். இச்சம்பவத்தில் ஆறு பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். மூன்று பெண்கள் உள்ளிட்ட இன்னும் ஆறு பேரைத் தேடி போலீசார், நாக்பூர் விரைந்துள்ளனர்.
தமிழகம்
நெல்லை தாமிரபரணியில் மூழ்கி பள்ளி மாணவர்கள் இருவர் பலி
திருநெல்வேலி : நெல்லை அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி, பள்ளி மாணவர்கள் இருவர் இறந்தனர். திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி அருகே தாமிரபரணி கரையில் உள்ள பாலாமடையை சேர்ந்தவர் நாராயணன். இவரது வீட்டு நிகழ்ச்சிக்காக, வெளியூர்களில் இருந்து உறவினர்கள் வந்திருந்தனர். நேற்று காலையில் நாராயணன் மகன் செல்வரங்கன்(15), அவரது தம்பி சுரேந்தர், நெல்லை ரயில்வே ஊழியர் முருகன் மகன் ரெங்கராஜன்(13), ரெங்கா ஆகியோர் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச்சென்றனர். ஆற்றில் மணல் அள்ளிய இடத்தில் இருந்த ஆழமான பகுதியில், செல்வரங்கனும், ரெங்கராஜனும் சிக்கினர். உடன் குளித்தவர்கள் அவர்ளை மீட்க முயன்றும் முடியாமல், நீரில் மூழ்கி பலியாகினர். சீவலப்பேரி போலீசார், தீயணைப்பு படையினர் இருவரது உடல்களையும் மீட்டனர். செல்வரங்கன், 9ம் வகுப்பும், ரெங்கராஜன் 8ம் வகுப்பும் தேர்ச்சி பெற்றிருந்தனர். நெல்லை மாவட்டத்தில் அண்மையில் அம்பாசமுத்திரத்தில் ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலியாகினர். ஆற்றில் அரசின் விதிமுறைகளை மீறி சிலர், பொக்லைன் மூலம் மணல் அள்ளுவதால்,பாதாள பள்ளங்கள் ஏற்பட்டுவிடுகின்றன. இதனால் வழக்கமாக குளிக்கும் இடங்களில் கூட உயிர்ப்பலிகள் ஏற்படுவது சகஜமாகிவருகிறது.
தமிழகம்
கோவில் நிலம் பிளாட் போட்டு விற்பனை : மீட்டது அறநிலையத்துறை
கோவை : வீட்டு மனையாக பிரித்து விற்கப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பு கோவில் நிலத்தை, அதிரடியாக மீட்டனர் அறநிலையத்துறை அதிகாரிகள். கோவில் நிலத்தை வீட்டு மனையாக மாற்றி விற்ற, பனியன் ஏற்றுமதியாளர் மீது குற்ற நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. திருப்பூரைச் சேர்ந்தவர் விஸ்வநாதன்; பனியன் ஏற்றுமதி செய்து வருகிறார். இவர், திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட காங்கயம் வட்டம், ஊதியூர் கிராமத்திலுள்ள உத்தண்ட வேலாயுதசாமி கோவிலுக்கு சொந்தமான, 26 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்திருந்தார். அதில், 16 ஏக்கரை வீட்டு மனையாக பிரித்து விற்பனை செய்து வந்தார். மீதமுள்ள 10 ஏக்கரில் முருங்கை, தென்னை சாகுபடி செய்து வந்தார். வீட்டு மனையாக்கிய 16 ஏக்கரை, இரண்டே முக்கால் சென்ட் அளவு கொண்ட சிறிய சைட்டுகளாக பிரித்தார். அதற்குரிய லே அவுட் அமைத்து, தார் ரோடு போட்டார். அங்கு சிறு மரக்கன்றுகளை நட்டு "வெற்றி மாநகர்' என்ற பெயரில் பெரிய அலங்கார வளைவையும் ஏற்படுத்தினார். அதோடு அருகே ஒரு ஷெட் அமைத்து, அங்கு அலுவலகத்தை ஏற்படுத்தி இரண்டு பணியாளர்களை நியமித்தார். ஒரு சைட்டின் விலை 25 ஆயிரம் ரூபாய் என்று கூறி விற்பனை செய்தார். இத்தகவலை நோட்டீஸ் அச்சடித்து குடியிருப்பு பகுதிகளில் வினியோகம் செய்து, விற்பனையை பலப்படுத்தினார். இதுவரை 100 சைட்டுகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது. இடத்திற்கு தேவையான குடிநீர் மற்றும் வடிகால் வசதி ஏற்படுத்திக் கொடுப்பதாக சைட் வாங்கியவர்களிடம் உறுதியளித்துள்ளார். இது குறித்த தகவல், அறநிலையத்துறை கமிஷனர் சம்பத்திற்கு தெரிய வந்தது. அவரது உத்தரவுப்படி கோவை மண்டல அறநிலையத்துறை இணை கமிஷனர் அசோக், டி.ஆர்.ஓ.,(கோவில் நில மீட்பு) சுப்ரமணியன், நிலஅளவையர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், செயல் அலுவலர்கள், அறநிலையத்துறை ஆய்வாளர்கள் உள்ளிட்ட குழுவினர், சரியான ஆவணங்களோடு சென்று கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்தவர்களை விரட்டியடித்து, தங்கள் வசம் நிலத்தை கொண்டுவந்தனர். கோவை மண்டல அறநிலையத்துறை இணை கமிஷனர் அசோக் கூறியதாவது: கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தது, பிளாட் போட்டு விற்பனை செய்தது, பொதுமக்களை ஏமாற்றியது போன்ற குற்றங்களுக்காக அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் நிலம் அல்லது வீட்டு மனை வாங்கும் முன், கோவிலிற்கு சொந்தமான நிலமா என்று சம்பந்தப்பட்ட வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலரிடமுள்ள பதிவேடுகளில் சரிபார்த்து அதன் பின் வாங்கலாம். கோவில் நிலத்தை மீட்பதற்கு சட்டப்பூர்வமான காலவரையறை இல்லை. அதனால், எப்போது வேண்டுமானாலும் மீட்கலாம். மீட்கப்பட்ட கோவில் நிலம் பல கோடி ரூபாய் மதிப்பு பெறும். இவ்வாறு அசோக் கூறினார்.
தமிழகம்
தாயின் தலையில் கல்லைப்போட்ட மகன்
தூத்துக்குடி : விளாத்திகுளம் அருகே தாயின் தலையில் கல்லை தூக்கிப்போட்டார் மகன். விளாத்திகுளம் அருகேயுள்ள வாலம்பட்டி, அந்தோணிசாமி மனைவி பொன்மாரி(50). நேற்று காலை இவர், மனநிலை பாதிக்கப்பட்ட மகன் பன்னீர்செல்வத்துடன்(30), வேடபட்டி உறவினர் வீட்டில் இருந்து வாலம்பட்டிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வைப்பாறு ஆற்றுப்பகுதியில் நடந்துவந்தபோது பன்னீர் செல்வம், திடீரென அங்கிருந்த கல்லை எடுத்து பொன்மாரி தலையில் போட்டார். அதில் படுகாயமடைந்த பொன்மாரி, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்றுவருகிறார். விளாத்திகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகம்
போலி சான்றிதழ்: பாஸ்போர்ட் பெற முயன்றவர் கைது
தூத்துக்குடி : விளாத்திகுளம் அருகே போலியாக பள்ளி சான்றிதழ் தயாரித்து கொடுத்து, பாஸ்போர்ட் பெற முயன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், ஏ.சொக்கலிங்கபுரம் மரம் வெட்டும் தொழிலாளி பரமசிவம்(31). இவர், வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் வேண்டி, கடந்த 25.6.2009க்கு முன்னர் விண்ணப்பித்தார். இவர் சமர்ப்பித்த சான்றிதழ் குறித்து சந்தேகமடைந்த பாஸ்போர்ட் அதிகாரிகள், அதுகுறித்து விசாரித்தனர். அங்குள்ள வேடபட்டி பள்ளியில் 2ம் வகுப்பு மட்டுமே படித்த பரமசிவம், ஓ.துரைச்சாமிபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 5ம் வகுப்பு படித்ததாக போலிச் சான்றிதழ் தயாரித்து கொடுத்தது தெரியவந்தது.மதுரை பாஸ்போர்ட் துணை அதிகாரி சுந்தர்ராமன் புகாரில், பரமசிவத்தை விளாத்திகுளம் போலீசார் கைது செய்தனர். அவர் போலி சான்றிதழ் தயாரிக்க உதவிய, ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
தமிழகம்
இளம் பெண்ணிடம் வம்பு : மிரட்டிய டிரைவர் கைது
சென்னை : இளம்பெண்ணிடம் வம்பு செய்ததால், தட்டிக் கேட்ட கணவரை மிரட்டிய வேன் டிரைவர் கைது செய்யப்பட்டார். செங்குன்றம் அடுத்த வடகரை மேட்டுத்தெருவை சேர்ந்தவர் லோகு என்கிற லோகநாதன் (27). மணலியிலுள்ள தொழிற்சாலை ஒன்றின் வேன் டிரைவர். வடகரை மேட்டுத் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி கல்யாணி (23). வங்கி பணியாளர். இவர் தினமும் அலுவலகம் செல்ல, வடகரையில் பஸ்சுக்காக காத்திருக்கும் போது, லோகநாதன் அவரிடம் தவறான "சைகை' மூலம் வம்பு செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த ராஜசேகர், லோகநாதனை தட்டிக்கேட்டார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி லோகநாதன், ராஜசேகரை மிரட்டினர். இதுகுறித்து விசாரித்த, செங்குன்றம் போலீசார் லோகநாதனை கைது செய்தனர்.
தமிழகம்
சிறைக்குள் கைதிகள் மோதல்
மதுரை : மதுரை சிறைக்குள் கஞ்சா புகைப்பதில் கைதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது. மதுரை கீரைத்துறையை சேர்ந்தவர் ரவிசண்முகம், ராமநாதபுரம் கணேஷ்பாபு, நிலக்கோட்டை பாபுராஜ். இவர்கள் வெவ்வேறு வழக்குகளில் கைதாகி, மதுரை மத்திய சிறை தண்டனை கைதிகளுக்கான பிரிவில் அடைக்கப் பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு அங்கு ரவி சண்முகம் கஞ்சா புகைத்துக்கொண்டிருந்தார். கணேஷ்பாபு தனக்கும் வேண்டும் எனக் கூறவே, தகராறு ஏற்பட்டது. இதை தடுக்க முயன்ற பாபுராஜ் காயமடைந்தார். கரிமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழகம்
பெண் தற்கொலை
தூத்துக்குடி : தூத்துக்குடி, ராஜபாண்டிநகரைச் சேர்ந்தவர் சரஸ்வதி(44). உப்பள கூலித்தொழிலாளியான இவரது வீட்டில், கடந்த மாதம் 20ம் தேதி 3.5 பவுன் தங்க நகை, 3,000 ரொக்கம் திருட்டு போனது. இதுகுறித்து, அவர் தென்பாகம் போலீசில் புகார் செய்தார். அதுதொடர்பாக, அவரது மகன் சக்திவேல், மருமகன் மாரியப்பனிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதனால், குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது. நகையும் கிடைத்தபாடில்லை. இதனால், மனமுடைந்த சரஸ்வதி, நேற்று காலை வீட்டு முன், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தென்பாகம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழகம்
மின்சாரம் தாக்கி மாணவர் பலி
திருநெல்வேலி : மின்சாரம் தாக்கி பாலிடெக்னிக் மாணவர் பலியானார். திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலை அடுத்துள்ள உடையாம் புளியை சேர்ந்த சுகுமாரன் மகன் கோபால்(22). இவர் தென்காசியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று பிற்பகல் வீட்டில், பழுதாகியிருந்த "விசிடி' பிளேயரை சரிபார்த்தார். அப்போது மின்சாரம் தாக்கியதில் மயக்கமடைந்தார். சிகிச்சைக்காக தென்காசி ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லும் வழியில் இறந்தார். முக்கூடல் போலீசார் விசாரித்தனர்.
தமிழகம்
நிலக்கரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து டிராபிக் ஜாம்
செஞ்சி : சென்னை துறைமுகத்திலிருந்து, கரும்பு ஆலைக்கு நிலக்கரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததால், செஞ்சி-திருவண்ணாமலை ரோட்டில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. சென்னை துறைமுகத்திலிருந்து, திருவண்ணாமலை தாலுகா தண்டராம்பட்டிலுள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு, நிலக்கரி ஏற்றி வந்த லாரி, நேற்று காலை 10.30 மணிக்கு செஞ்சி வழியே சென்றது. ஆலம்பூண்டி கிராமத்தை கடந்து சென்றபோது, குறுக்கே வந்த ஆட்டோ மீது மோதாமலிருக்க, லாரி டிரைவர் மணிகண்டன், "பிரேக்' போட்டார். அப்போது லாரி நடுரோட்டில் கவிழ்ந்து, நிலக்கரி முழுவதும் கீழே கொட்டியது. இந்த விபத்தில் டிரைவர் மணிகண்டன், கிளீனர் மகாலிங்கம், காயமின்றி தப்பினர். சத்தியமங்கலம் போலீசார், போக்குவரத்தை நயம்பாடி வழியாக திருப்பி விட்டனர். இரண்டு மணி நேரத்திற்கு பிறகு, நிலக்கரி லாரியை அப்புறப்படுத்தினர். இதன் பிறகு போக்குவரத்து சீரானது.
தமிழகம்
ரோட்டோர முள் புதரில் புத்தர் சிலை
முதுகுளத்தூர் : ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கடலாடி செல்லும் ரோட்டில், ரோட்டோர முள் புதரில், 100 ஆண்டுகளுக்கு முந்தைய புத்தர் சிலை ஒன்று, சாக்கு பையில் கிடந்தது. அவ்வழியாக 100 நாள் வேலைக்கு சென்று வந்த சிலர், சாக்குப் பையினை திறந்து பார்த்துள்ளனர். அதில் புத்தர் சிலை இருந்ததால், அங்கேயே விட்டுச் சென்றனர். புகாரின்படி, முதுகுளத்தூர் தாசில்தார் செல்வராஜ் தலைமையில் சென்ற அதிகாரிகள் சிலையை கைப்பற்றினர். தாசில்தார் கூறுகையில்,""மாவட்ட நிர்வாகத்தின் மூலம், ராமநாதபுரம் அரண்மனையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் சிலை ஒப்படைக்கப்படும்,'' என்றார்.
தமிழகம்
போலி டாக்டர் கைது
கும்மிடிப்பூண்டி: பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு, கிளினிக் வைத்து மருத்துவம் பார்த்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். எண்ணூர் காட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (38). இவர், கும்மிடிப்பூண்டி அடுத்த, கவரைப்பேட்டை ராஜா தெருவில் சுகம் மருத்துவமனை என்ற பெயரில் கிளினிக் நடத்தி வந்தார். இவர் மீது சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், கவரைப்பேட்டை போலீசில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் மாவட்ட சுகாதார துறையினரை தொடர்பு கொண்டு, ஜெயக்குமார் மீது பொதுமக்கள் கூறிய புகாரை தெரிவித்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு, திருவள்ளூர் மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் அண்ணாமலை, துணை இயக்குனர் சம்பத் ஆகியோர் தலைமையிலான தனிப்படை, கவரைப்பேட்டையிலுள்ள ஜெயக்குமார் கிளீனிக்கில் அதிரடி சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் போலி டாக்டர் என்பதும், பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார் என்பதும் தெரியவந்தது. அவர் மருத்துவமனையில் வைத்திருந்த மருந்துகளையும், ஊசிகளையும் சுகாதார துறையினர் பறிமுதல் செய்தனர். கவரைப்பேட்டை போலீசார், போலி டாக்டர் ஜெயக்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.